சுமார் மூன்று தசாப்தங்களாக தனது அரசியல் வாழ்வுக்கு பக்க துணையாக நின்று தன்னைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்த மாத்தறை மக்களுக்கு தான் பாராளுமன்ற அரசியலிருந்து ஓய்வு பெறுவதாக மங்கள சமரவீர நேற்று, அதாவது ஜுன் 9ஆம் திகதி அறிவித்திருக்கிறார்.
அதன்படி வரவிருக்கும் 2020 நாடாளுமன்றத் தேர்தலில் அவர் போட்டியிட மாட்டார். தனது பெயர் சமகி ஜன பலவேகாயவின் வேட்பாளர் தேர்தல் பட்டியலில் பொறிக்கப்பட்டிருந்தாலும், தான் போட்டியிடுவதிலிருந்து ஒதுங்கிக் கொள்வதால் தங்களுடைய முன்னுரிமை வாக்குகளை தனக்கு வழங்குவதைத் தவிர்க்குமாறு மாத்தறை மக்களிடம் அவர் மேலும் கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும் அவர் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரனில் விக்கிரமசிங்கவுக்கும், சமகி ஜன பலவேகய கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும், எழுதிய கடிதங்களில் பாராளுமன்றத் தேர்தல் போட்டியிலிருந்து ஒதுங்கிக் கொள்ளும் தனது முடிவைப் பற்றி தெரிவித்திருக்கிறார்.
நேற்று மாத்தரையில் உள்ள தனது இல்லத்தில் உள்ளூர் அரசாங்க பிரதிநிதிகளை சந்தித்த மங்கள சமரவீர அவரது முடிவு குறித்து அவர்களுக்கு விளக்கினார். இந்த கூட்டத்தில் தனது கருத்துக்களை வெளிப்படுத்திய சமரவீர, ஜனாதிபதி கோதபாய ராஜபக்ஷவின் தலைமை திறமையற்றது என்றும் அவர் குறுகிய பார்வை கொண்டவர் என்றும் இது அவரது ஆறு மாத ஆட்சிக் காலத்திற்குள் நிரூபிக்கப்பட்டுள்ளது என்றும் சுட்டிக் காட்டினார். ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவின் கீழ், அரசு இராணுவமயமாக்கப்படுவதாகவும் நாட்டு மக்களிடையே இன மற்றும் மதப் பிளவுகள் விரிவடைந்து வருவதாகவும் அவர் தனது விசனத்தைத் தெரிவித்தார். மேலும் இதுபோன்ற கடுமையான சவால்களை நாடு எதிர்கொள்ளும் நேரத்தில் எதிர்க்கட்சிக்கு அதன் பங்கு மற்றும் கடமை என்ன என்பது பற்றிய தெளிவான புரிதல் இருப்பதாகத் தெரியவில்லை என்றும் தனது கவலையை வெளிப்படுத்தினார்.
மேலும் கூறுகையில் இந்த நாட்டிற்கு முற்போக்கான அரசியல் நோக்கத்தை கொண்ட பாதையின் அவசியத்தையும், இதை ஜனநாயகத்தை மதிக்கும் மக்களுடனும், நாட்டில் உள்ள பல்வேறு சமூக அடையாளங்கள் மற்றும் கலாச்சார மரபுகளை மதிக்கும் மக்களுடனும் ஒருவருக்கொருவர் வெறுப்புணர்வை வெளிப்படுத்தாத மக்களுடனும் இணைந்து தொடங்க வேண்டியதன் அவசியம் பற்றி வலியுறுத்தினார். இந்த நாட்டில் உள்ள மக்கள் தங்கள் பிறப்பால் இன, சாதி, மத மற்றும் பாலின அடையாளங்களால் மாத்திரம் வழிநடத்தப்படக் கூடாது. அதற்கு அரசியல், கலாச்சார மற்றும் சமூக பாசாங்குத்தனம் இல்லாதவர்கள் ஒன்று கூடி உழைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.