செய்தி:
நாட்டில் வன்முறையை எதிர்த்துப் போராடுவதற்காக ஆயிரக்கணக்கான இராணுவ வீரர்கள் மற்றும் பாதுகாப்புப் படைகளை நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். ஆபிரிக்க-அமெரிக்கர், ஜார்ஜ் ஃபிலாய்டை பொலிசார் கொன்றது தொடர்பாக போராட்டங்கள் தீவிரமடைந்ததை அடுத்து, அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் டி.சி.யில் இரண்டு நாள் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது. ஜார்ஜ் ஃபிலாய்டின் இறுதிச் சடங்குகள் வியாழக்கிழமை நடைபெறும் என்று மினசோட்டா மாநில ஆளுநர் டிம் வால்ஸ் அறிவித்தார். அதிகரித்து வரும் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் வன்முறைகள் காரணமாக நாடு முழுவதும் இராணுவமும் தேசிய காவலர் படைகளும் பாதுகாப்பிற்காக நிறுத்தப்படும் என்று டிரம்ப் கூறினார்.
https://www.milliyet.com.tr/galeri/son-dakika-haberi-ve-abdde-kiyamet-koptu-trump-askerlere-emir-verdi-6224711
கருத்து:
அமெரிக்கா சமீப காலத்தில் எதிர் நோக்காத பாரிய எதிர்ப்பு அலைகளை எதிர்கொள்ளப் போராடுகிறது. எல்லா நகரங்களிலும் போராட்டங்களும் வன்முறைகளும் வெடித்து, தெருக்கள் தீப்பிடித்து எரிகிறன; நாடு முழுவதிலும் கொள்ளையடிக்கும் காட்சிகள்; நகரங்களில் இராணுவத்தின் தலையீடுகள் என ரணகளமாகி நிலைமை உருவெடுக்கிறது. அமெரிக்காவின் அண்மிய வரலாற்றில் இவை ஒரு வகையில் பழக்கமில்லாதவை.
உண்மையில் சொல்லப்போனால், குறிப்பாக அமெரிக்க மக்களின் இனவெறி தாக்குதல்களும் கறுப்பர்களுக்கு எதிரான பொலிஸ் வன்முறைகளும் நன்கு அறியப்பட்டவைதான். ஜார்ஜ் ஃபிலாய்ட்டின் சம்பவத்தைப் போலவே நாட்டில் பல சம்பவங்கள் இதற்கு முன்னரும் நடந்துள்ளன. ஆனால் அவை எதுவும் இத்தகைய பாரிய ஆர்ப்பாட்டங்களை ஏற்படுத்தவில்லை. அப்படியாயின் ஃபிலாய்ட் சம்பவத்திற்காக அமெரிக்க மக்கள் ஏன் இவ்வளவு கொந்ததளித்துப் போயுள்ளார்கள். ஏன் இத்தகைய வன்முறைகளில் ஈடு படுகிறார்கள்?
பொதுவாக மக்கள் என்பவர்கள் மதம், இனம் அல்லது சித்தாந்தத்தால் ஒன்றிணைக்கப்படுபவர்கள். அமெரிக்காவை பொருத்தமட்டில் முதலாளித்துவ சித்தாந்தத்தின் விளைவான ‘சுயநலன் – Self Interest’ என்கின்ற பிணைப்பே அனைத்து அமெரிக்க பிரஜைகளையும் ஒருங்கிணைக்கிறது. மக்கள் ஒருவருக்கொருவரும், மக்களும் அரசும் தமக்கு இடையிலும் இந்தப் பிணைப்பைக் கொண்டே இணைக்கப்பட்டுள்ளார்கள். சுருங்கக்கூறின் அமெரிக்க குடியுரிமை என்பது இந்த ‘சுய நலன்’ அடிப்படையில் செய்யப்பட்ட ஒரு ஒப்பந்தம் என்று கூறினால் அது மிகையாகாது.
கொரோனா வைரஸ் வெடிப்பு அமெரிக்காவிற்கு பரவியதால், முதலாளித்துவத்தின் மிகவும் அசிங்கமான கருப்புப் பக்கம் மீண்டும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. லட்சக்கணக்கான மக்கள் பண வசதி இல்லாத காரணத்தினால் தங்களுக்கான சுகாதார சேவையை அடைய முடியவில்லை. மேலும் அமெரிக்காவில் வேலையில்லாமல் இருப்பது என்பது தெருவில் வாழ்வதற்கு வழிகோல்வது. இவ்வாறு அடுக்கடுக்கான சவால்களை எதிர்நோக்கிவரும் அமெரிக்கர்கள் முதலாளித்துவ அமைப்பு தங்களுக்கு எந்த விதமான நலனையும் பயக்கவில்லை என்பதைக் கண்டிருக்கிறார்கள். அத்துடன் ஒரு உபயோகமில்லாத ஒரு பொருளை தூக்கி எறிவது போல தாங்களும் தூக்கி எறியப்பட்டிருப்பதாக உணர்கிறார்கள். அரசை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு வில்லன் ஃபிலாய்ட்டின் கழுத்தை நெரிக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் பார்த்த அமெரிக்க குடிமக்களின் பலர், தமது கழுத்து அவனின் கால்களுக்கு இருப்பதைப் போன்று உணர்ந்தார்கள். ஏற்கனவே தமது வாழ்வாதாரத்திற்காக ஜீவ மரணப்போராட்டத்தில் இருந்த மக்களுக்கு இந்த காட்சி அனைத்தையும் இழந்த வெறுமையை ஏற்படுத்தி இருக்கிறது. இங்கு குடியுரிமை ஒப்பந்தம் (social contract or Contract of Citizenship) முறிக்கப்பட்டு விட்டதாக பலர் கருதுகின்றனர். ஆர்ப்பாட்டங்கள் கொள்ளையடிப்புடன் சேர்ந்து இடம்பெறுகின்றன. கிட்டத்தட்ட எல்லா வர்த்தக மையங்களும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
எதிர்ப்பாளர்களை வழிநடத்திய ஒரு இளம் பெண் கேமராக்களுக்கு முன்னால் “கொள்ளையடிப்பது பற்றி எங்களுடன் பேச வேண்டாம். யார் கொள்ளையர்கள்? அமெரிக்கா கறுப்பின மக்களை கொள்ளையடித்தது! அமெரிக்கா பூர்வீக அமெரிக்கர்களை சூறையாடியது! கொள்ளையடிப்பதைத்தானே நீங்களும் செய்கிறீர்கள்! நாங்கள் அதை உங்களிடமிருந்துதான் கற்றுக்கொண்டோம்!” என்று கூச்சலிட்டது அமெரிக்க எஜமானர்களின் முகத்தில் கரியைப் பூசுவதாக இருந்தது.
கிட்டத்தட்ட அமெரிக்காவின் அனைத்து நகரங்களிலும் எதிர்ப்புப் போராட்டங்கள் மற்றும் கொள்ளையடிக்கும் காட்சிகள் இடம் பெறுவது உலகெங்கிலும் அமெரிக்க மேலாதிக்கத்தை கேள்விக்குள்ளாக்கியுள்ளது. தனது சொந்த நாட்டில் ஆதிக்கம் செலுத்த முடியாத ஒரு அரசு முழு உலகத்தையும் எப்படி நேர்த்தியாகச் வழி நடத்த முடியும்? தன்னை தனது சொந்த மக்களுக்கே செவிசாய்க்க வைக்க முடியாத ஒரு நாட்டிற்கு பிறருக்கு அறிவுரை கூற என்ன அருகதை இருக்கிறது? என்று பலர் கேள்வி எழுப்ப ஆரம்பித்து விட்டார்கள்.
இந்த உண்மையை முழு உலகும் கண்ணால் கண்டுவரும் இன்றைய நாட்களிலும்கூட முஸ்லீம் ஆட்சியாளர்கள் தங்களை அமெரிக்காவின் அடிமைகளாக நினைத்துக் கொண்டிருப்பதுதான் ஆச்சரியத்துக்குரியது. தமது சொந்த மக்களின் ஆற்றல் பற்றி அறியாத இந்த ஆட்சியாளர்கள், மேற்கு நாடுகளின் பக்கம் சாய்ந்தால் தான் (தங்கள் சிம்மாசனத்தை) பாதுகாத்துக் கொள்ள முடியும் என்று உணர்கிறார்கள். குறிப்பாக அமெரிக்காவுடன் அணிசேர்ந்தால் தான் மக்களின் இயல்பான மறுமலர்ச்சியை மழுங்கடிக்க முடியும் என்று அவர்கள் நம்புகிறார்கள. இந்த ஆட்சியாளர்கள் தங்களை உம்மத்திலிருந்து முற்றாகத் துண்டித்துக் கொண்ட உம்மத்தின் இயல்பை பிரதிபலிக்காத துரோகிகள். முஸ்லிம் உம்மத் ஆட்பலத்திலோ அல்லது பொருளாதார பலத்திலோ தனது மாட்சிமையை பொருத்தி வைத்திருக்கவில்லை. அவ்வாறு இருந்திருந்தால் மதீனாவிலே கிலாஃபத்தை நிறுவிய மிகக்குறுகிய காலத்திலேயே அக்காலத்திய உலக வல்லரசில் ஒன்றான பாரசீக வல்லரசின் கோட்டையை அது சென்று தட்டியிருக்காது.
எமது கண்களுக்கு முதலாளித்துவம் எத்தகைய படை பட்டாளங்களுடன் புலப்பட்டாலும் அது நாளுக்கு நாள் ஆட்டங்கண்டு கொண்டே வருகின்றது. சமுதாயங்கள் அதிலிருந்து தம்மை தூரப்படுத்த ஆரம்பித்து விட்டன. அதன் முடிவு காலம் நெருங்கி விட்டது என்பதுதான் உண்மை. இன்று மனித குலத்தின் முன் இரண்டு தேர்வுகளே உள்ளன. ஒன்று முதலாளித்தும் தனது அடிப்படை விழுமியங்களில் சமரசம் செய்து கொண்டு சமூகத்துக்காக தன்னை புதுப்பித்துக் கொள்ள வேண்டும். அல்லது முதலாளித்துவத்தை இன்னுமொரு முறைமை பிரதியீடு செய்ய வேண்டும்.
ஆனால் முதலாளித்துவத்தின் மனநிலை ஒரு பேராசை மனப்பாங்கை கொண்டது என்ற உண்மையை நாம் கருத்தில் கொள்ளும்போது, முதற் தேர்வு சாத்தியமற்றது என்பதே யதார்த்தமாகும். அது சமூக நலனை முற்படுத்தி தன்னை புதுப்பித்து ஒரு புதிய நிலைக்கு வருவது என்பது சாத்தியமற்றது. எனவே ஒரு புதிய ஒழுங்கை நோக்கி உலகம் நகர்வதே சாத்தியமானது என்பதை பலரும் காண ஆரம்பித்திருக்கின்றனர்.
இதுவரையில் அறியப்பட்ட மூன்று சித்தாந்தங்களைத் தவிர உலகில் வேறெந்த சித்தாந்தமும் இல்லை. முதலாளித்துவம் அதன் முடிவை அடைய ஆரம்பித்து விட்டது. சோசலிசம் முயற்சிக்கப்பட்டு ஏற்கனவே தோல்வியடைந்து விட்டது. மீதமாக இஸ்லாமிய சித்தாந்தமும் அதன் முறைமையும் மாத்திரமே எஞ்சியுள்ளன. மனிதகுலத்தை வழி நடாத்த இதுவே சிறந்த சித்தாந்தமாகும் என்பதை யாரும் மறுக்க இயலாது.
அது மனிதனைப் படைத்துப் பரிபாலிக்கும் உண்மையான எஜமானனான அல்லாஹ்(சுபு)விடம் இருந்து வந்த முறைமை. அந்த முறைமையில் பொருளாதாரச் சுரண்டலோ, அரசின் அடக்குமுறையோ கிடையாது. செல்வக்குவிப்புக்கும் பொருளாதாரப் போட்டிக்கும் முண்டியடிக்கும் நிலை அங்கு இருக்காது. வளப்பகிர்வும், முறையான விநியோகமும் அதன் பொருளாதார அத்திரவாரமாக இருக்கும். அதில் நிற, குல, இன பேதங்கள் கிடையாது. சுருக்கமானச் சொன்னால் அங்கே அரச அதிகாரத்தின் முழங்கால்கள் மக்களின் குரல்வளையை நெரிக்காது
எனவே அமைதியையும், மகிழ்ச்சியையும் தேடும் மனிதகுலம் தட்டக்கூடிய ஒரே கதவு இஸ்லாமிய சித்தாந்தம் மட்டுமேயாகும். நாம் ஒரு முக்கிய திருப்பத்தைக் கடந்து கொண்டிருக்கிறோம். விரைவில் யாரும் கட்டுப்படுத்த முடியாத வகையில் புதிய ஒழுங்கை நோக்கி உலகம் நகரும்.