சட்ட மற்றும் அரசியல் பார்வையாளர்களைப் பொருத்தமட்டில், ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ ஜூன் 2, 2020 அன்று “பாதுகாப்பான நாடு, நல்லொழுக்கமுள்ள மற்றும் சட்டபூர்வமான சமுதாயத்தை கட்டியெழுப்புவதற்கான” ஜனாதிபதி பணிக்குழுவை நியமிக்க எடுத்த முடிவு, நாடு சர்வாதிகார தலைமைக்கான பெரியதொரு மாற்றத்தை நோக்கி நகர்ந்து செல்வதாகக் காண்கிறார்கள். அரசியலமைப்புக்கமைய பாராளுமன்றத்தை கூட்டுவதற்கான உச்ச காலக்கெடு முடிவுற்ற நாளிலேயே இது நடை பெற்றிருப்பதாதானது அவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
2020 ஜூன் 2ஆம் திகதி உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பானது, கட்டுப்பாடற்ற நிறைவேற்று அதிகார ஆட்சிக்கு வழி வகுத்துள்ளதாகவும், ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ தனது அமைச்சரவையை கூட ஓரங்கட்டிவிட்டு, தனது ஜெனரல்களுடன் நாட்டின் இயந்திரங்களின் மீது முழுமையான கட்டுப்பாட்டை நிலைநாட்ட எத்தனிப்பதாகவும் தெரிகிறது என்று சட்ட வல்லுநர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.
இப் பணிக்குழுவில் பிரிகேடியர் சுரேஷ் சால்லி உட்பட பிரத்தியேகமான இராணுவ வீரர்கள் உள்ளனர். இவர் ஒரு காலத்தில் எல்லோரும் அச்சம் கொள்ளும் அளவுக்கு நாட்டின் இராணுவ உளவுத்துறை இயக்குநராக இருந்தவர். இந்த பணிக்குழு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தலைமையிலானது. 13 உறுப்பினர்களைக் கொண்ட ‘இக்கனவுக் குழுவில்’ 1990 ஆம் ஆண்டில் லியோனல் பாலகல்லேவை முன்னோடியாகக் கொண்ட, புதிய ராணுவ புலனாய்வுப் படையில் தன்னை புடம்போட்டுக் கொண்ட அதிகாரி மேஜர் ஜெனரல் ஜகத் அல்விஸ் என்பவரும் அடங்குவார். அல்விஸ் ஜனாதிபதி ராஜபக்ஷ மற்றும் அவரது பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன போன்ற கஜாபா ரெஜிமென்டின் சிப்பாயியும் ஆவார். அல்விஸ் மற்றும் குணரத்ன ஆகிய இருவரும் 1987 இல் ஒன்றாக பணியாற்றியவர்கள். அல்விஸ் தற்போது கோட்டாபய நிர்வாகத்தில் தேசிய புலனாய்வுத் தலைவராக பணியாற்றுகிறார். மேலும் இப் பணிக்குழுவில் இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை புலனாய்வு பிரிவுகளின் இயக்குநர்களும் உள்ளடங்குவார்கள்.
ஒரு ஒழுக்கமான, நல்லொழுக்கமுள்ள மற்றும் சட்டபூர்வமான சமுதாயத்தை கட்டியெழுப்புவதற்கான சிறப்பு பணிக்குழுவை நிறுவுவதற்கான ஜனாதிபதியின் பிரகடனம் அனைத்து பொதுச் சேவை அதிகாரிகளும், தங்களது பொறுப்புகள் பற்றி 13 உறுப்பினர்களைக்கொண்ட இந்த பணிக்குழுவிற்கே பதிலளிக்க வைக்கிறது – இவர்கள் அனைவரும் இராணுவச் சீருடையில் உள்ளவர்கள் என்பதே இங்கே கவனத்திற்குரியது. இலங்கையின் ஜனநாயகம் பலவீனமானதாக இருந்தாலும், இராணுவம் சிவில் அதிகாரத்திற்கு உட்பட்டது என்ற கொள்கையையே அது இதுவரை பின்பற்றி வருகிறது. அமைச்சின் செயலாளர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு, இராணுவத் தலைவர்கள் கட்டுப்பட்டவர்கள் என்பதை உறுதி செய்வதற்காக அரசாங்க நெறிமுறைகள் எப்போதும் உறுதியாக நிலை நிறுத்தப்பட்டு வந்தது. எனினும் தற்போது இலங்கையின் குடியரசு வரலாற்றில் முதன் முறையாக, நாட்டின் ஜனாதிபதி சிவில் அதிகாரத்தையும், பொது சேவையையும் இராணுவ அதிகாரிகளுக்கு அடிபணியச் செய்துள்ளார்.
கோதபய ராஜபக்ஷவின் பிரகடனம் அனைத்து அரசு அதிகாரிகளுக்கும், மற்றவர்களுக்கும் பணிக்குழுவின் அறிவுறுத்தல்களுக்கு இணங்க வேண்டும் என்று உத்தரவிடுகிறது. இந்த அறிவுறுத்தல்களை நிறைவேற்றுவதில் பொது அதிகாரி, அமைச்சு, அரச துறை அல்லது அரச கோப்பரசன்களின் அலுவலர்களின் தரப்பில் தாமதம் அல்லது தவறு ஏற்படின் அது தொடர்பான அனைத்து முறைப்பாடுகளையும் அவரிடம் தெரிவிக்கும்படி ஜனாதிபதி இந்தப் பணிக்குழுவிற்கு உத்தரவிட்டிருக்கிறார். இந்த விதிமுறைகளின் படி பணிக்குழுவே அதிகாரத்தில் இருந்து ஆட்சி செய்யும் என்றும் அதன் அதிகாரத்தை சவால் செய்யும் எந்தவொரு பொது அதிகாரியும் ஜனாதிபதியின் கோபத்தை சம்பாதித்துக் கொள்வார்கள் என்றும் பொருள் படுகிறது.
பணிக்குழுவில் ஒரு விசித்திரமான மற்றும் அச்சுறுத்தும் சுருக்கமும் உள்ளது.
ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ இராணுவ அதிகாரிகளை கீழ் குறிப்பிடப்படுகின்றவற்றை நிறைவேற்றுவதற்காக பொறுப்பில் அமர்த்தியிருக்கிறார்.
1. நாட்டின் சில இடங்களில் தற்போது சமூகத்தின் சுதந்திரமான மற்றும் அமைதியான இருப்புக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் உருவாகி வரும் சட்டத்தை மீறும் “சமூகக் குழுக்களின்” சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுக்க தேவையான உடனடி நடவடிக்கைகளை எடுப்பது.
2. போதைப்பொருள் அச்சுறுத்தலில் இருந்து தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும், துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்கள் வழியாக வெளிநாடுகளில் இருந்து போதைப்பொருள் வருவதைத் தடுக்கவும், நாட்டில் போதைப்பொருள் கடத்தலை முற்றிலுமாக ஒழிக்கவும் மற்றும் போதைப்பொருள் காரணமாக ஏற்படும் பிற சமூக நோய்களைத் தடுக்கவும் நடவடிக்கைகளை எடுப்பது.
3. வெளிநாடுகளில் அமர்ந்து கொண்டு இலங்கையில் சட்டவிரோத மற்றும் சமூக விரோத நடவடிக்கைகளுக்கு சூத்திரதாரிகளாக இருக்கும் நபர்கள் மீது, சட்ட நடவடிக்கை எடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுப்பது.
4. சிறைச்சாலைகளிலும், அதனைச் சூழவும் இடம்பெறுகின்ற எந்தவொரு சட்டவிரோத மற்றும் சமூக விரோத நடவடிக்கைகளை விசாரித்துத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பது
இந்த அறிவுறுத்தல் “சமூக குழுக்கள்” என்பது எவை பற்றி வரையறுக்கவோ, வரைவிலக்கணப்படுத்தவோ இல்லை. இது பற்றி சட்ட வல்லுநர்கள் கூறுகையில், சிவில் சமூக ஆர்வலர்கள், மத குழுக்கள், ஊடகவியலாளர்கள் அல்லது வெளியீட்டு நிறுவனங்கள் போன்றவற்றின் மீதான ஒடுக்குமுறை துஷ்பிரயோகத்திற்கு வசதியாக அவை வரையறுக்கப்படாது விடப்பட்டுள்ளது என்கிறார்கள்.
“இதற்கு வேறு அர்த்தம் இருக்க முடியாது. ஒரு முழு இராணுவமயமாக்கப்பட்ட அரசுக்குள் ஜனாதிபதி இயக்குகின்ற ‘பணிக்குழுக்களின் ஆட்சி’ பெருகப்போவதை நாம் காணப்போகிறோம். வறுமைக் கல்வி முதல் உயர் கல்வி வரை அனைத்தும் பணிக்குழுக்களால் இயக்கப்படப்பபோகிறது…” என்று சட்ட வழக்கறிஞர், யாழ்ப்பாண பல்கலைக்கழக விரிவுரையாளர் கலாநிதி. கே. குருபரன் ட்விட்டரில் தெரிவித்தார்.
மேலும் சில அரசியலமைப்பு வல்லுநர்கள் நாடாளுமன்றத்தை கலைத்து ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ வெளியிட்டுள்ள வர்த்தமானியை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட 8 மனுக்களையும் இலங்கை உச்ச நீதிமன்றம் கடந்த செவ்வாய்க்கிழமை நிராகரித்ததைத் தொடர்ந்து, இலங்கையின் அரசிலமைப்பு ஜனநாயம் பாரிய சிக்கலுக்குள் அகப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
சிக்கலான அரசியலமைப்பு கேள்வியில் இருந்து விலகி, ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பாராளுமன்றம் இல்லாமல் ஜனாதிபதி ஆட்சியை அனுமதிப்பதற்கான உச்ச நீதிமன்றத்தின் முடிவு குறித்து ஆர்வலர்கள் கவலை கொண்டுள்ளனர். இந்த ஆபத்தான முடிவு ஜனாதிபதியின் அதிகாரத்தை பலப்படுத்தவும், ‘ஜெனரல்களில் ஆட்சியை’ ஏற்படுத்தவும் அனுமதிக்கிறது – தோன்றிவரும் இந்த புதிய மாற்றங்களால் அரவது பிரதமர் மற்றும் அமச்சரவை கூட செய்வதறியாது இருக்கின்றனர்.
மிக சமீபத்தில் தனது அரசியல் வாழ்க்கையின் 50 ஆண்டுகளை பூர்த்தி செய்திருக்கும் இன்றைய பிரதமரும், முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷக்கு இதுவொரு மிகப்பெரிய சவாலாகும். இராணுவமயமாக்கலுக்கான ஜனாதிபதியின் நோக்கத்திற்கும் அவரது மூத்த சகோதரரின் தலைமையிலான அரசியல் கட்சிக்கும் இடையே பெரும் பதட்டங்கள் உருவாகி வருவதை அரசியல் அவதானிகளின் ட்விட்டர் பதிவுகள் சுட்டிக்காட்டுகின்றன.
ஜூன் 2 ஆம் தேதி ஜனாதிபதி “கிழக்கு மாகாணத்தில் தொல்பொருள் இடங்களை நிர்வகிப்பதற்காக” பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன தலைமையிலான இரண்டாவது பணிக்குழுவையும் நியமித்திருப்பதும் இங்கே கவனத்தில் கொள்ளத்தக்கது. இனவாதத்தைக் கக்வி வரும் தெரண ஊடகத்தின் தலைவர் திலித் ஜெயவீராவும் தனது திறனுக்கு உட்பட்ட வகையில் இந்த பணிக்குழுவில் உறுப்பினராக உள்ளடக்கப்பட்டுள்ளார். இன ரீதியாக வேறுபட்ட மாகாணத்தில் கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் நிலம் கையகப்படுத்துதல் ஆகியவற்றின் முக்கியமான சிக்கல்களைக் கையாள்வதற்காக, 11 சிங்கள உறுப்பினர்களைக் கொண்ட குழுவை ஜனாதிபதி கோதபய பிரத்தியேகமாக தேர்ந்தெடுத்திருப்பது பலரையும் சிந்திக்கத் தூண்டியுள்ளது.