ஞானசார தேரர் மேலே உள்ள ஊடகச் சந்திப்பில் இலங்கையில் ஜாமியா நளீமியா என்னும் இஸ்லாமிய கலாபீடமும், ஜமாத்தே இஸ்லாமி அமைப்பினரும் ‘Islamic Brotherhood’ எனும் எகிப்தின் இஃக்வான் அல் முஸ்லிமீன்களின் சிந்தனையின் அடிப்படையில் இலங்கையில் சிந்தனை ஜிஹாத் செய்து வருவதாக குற்றம் சாட்டுகின்றார். உஸ்தாத் மன்சூர் மற்றும் அஷ்ஷெய்ஃக் அகார் முஹம்மத் அவர்களையும் கடுமையாக சாடிய அவர் தீவிரவாதி சஹ்ரானை உருவாக்கியவர்கள் இவர்களே என்றும், இன்னும் பல சஹ்ரான்களை எதிர்காலத்தில் இவர்கள் உருவாக்குவார்கள் என்றும் தான் எதிர்வு கூறுவதாகவும் கூறுகின்றார். மேலும் இவர்கள் தொடர்பாக தற்போதைய அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றார்.
உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்புக்களைத் தொடர்ந்து வஹாபிஸத்தையும், தௌஹீத் ஜமாத்துக்களையும் வைத்து தமது நிகழ்ச்சி நிரலை முன் நகர்த்திய இவர்கள் தற்போது இஃக்வான் அல் முஸ்லிமீன் சிந்தனைப்பள்ளியை முன் நிறுத்தி அரசியல் இலாபம் தேடப் பார்க்கின்றனர். இதிலே வேடிக்கையான விடயம் என்வென்றால் ஏப்ரல் தாக்குதல்களைத் தொடர்ந்து இஸ்லாத்துக்கும், தீவிரவாதத்துக்கும் இடையே எவ்வித தொடர்பும் இல்லை என்பதை நிறுவுவதற்காக ஞானசார தேரர் சுட்டிக்காட்டிய உஸ்தாத் மன்சூர் என்பவரே ‘அல்குர்ஆன் வன்முறையைத் தூண்டுகிறதா?’ என்ற ஒரு நூலை எழுதி, ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி உள்ளடங்களாக பல அரச தரப்பு உறுப்பினர்களின் முன்னிலையில் BMICH இல் 2019-09-03 அன்று வெளியிட்டு வைத்தார் என்பதாகும். அது இடம்பெற்று வெறும் ஒரு ஆண்டு கழிவதற்கு முன்னரே அவருக்கே தீவிரவாதிப்பட்டம் சூட்டுவதற்கு துணிகிறார்கள் இந்த பௌத்தத் தீவிரவாதிகள் என்றால் வெறுப்பு எதை நோக்கியது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இதிலிருந்து உஸ்தாத் மன்சூர் உட்பட அனைவரும் பாடம் கற்றுக்கொள்ள கடமைப்பட்டிருக்கின்றார்கள்.
வரப்போகின்ற தேர்தலில் நளீமிகளையும், ஜமாத்தே இஸ்லாமி அமைப்பினரையும் ஆளுங்கட்சியின் காலடியில் மண்டியிடுவதற்காகவும், ஆளும் கட்சிக்காக தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொள்வதற்கான எச்சரிக்கையாகவும், இந்தத் தருணத்தில் இந்த ஊடகவியலாளர் சந்திப்பை இவர்கள் நடத்தியிருக்கக்கூடும். இத்தகைய கருத்துகளின் ஊடாக இனவாதிகள் இஸ்லாமிய தீவிரவாதத்தை பெரும் பேயாக உருவகப்படுத்தி, பெரும்பான்மை பௌத்த மக்களை பயமுறுத்தி பீதி அரசியல் செய்து, வாக்குகளை பெற்றுக் கொள்ளல், பௌத்த தேசியவாதத்தை மேலோங்கச் செய்து பௌத்த தேசிய தலைவனுக்கு வாக்களித்தல் போன்ற அடைவுகளை அடைந்து கொள்ள இவர்கள் முனைவார்கள். எனவே அவர்களைப் பொருத்தமட்டில் குறித்த முஸ்லிம் தரப்புகள் மண்டியிட்ட போதும், மண்டியிடாத போதும் பெரும்பான்மை வாக்குகளை பெற வேண்டும் எனும் விதத்தில் குறியாக இருக்கிறார்கள். இலங்கையில் கணிசமான முஸ்லிம்களின் சிந்தனைப்போக்கைத் தீர்மானிக்கும் இந்த முஸ்லிம் தரப்புகள் அரசுடன் சமரசம் செய்து கொண்டால் முஸ்லிம்களை தன்பக்கம் அடிமைப்படுத்திய பௌத்த அரசு என்றும், குறித்த முஸ்லிம் தரப்பினர் எதிர்பார்த்த அளவில் சமரசம் செய்து கொள்ளவில்லையானால் முஸ்லிம்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கிய அரசு என்றும் நினைத்து, பெரும்பான்மையினர் நிச்சயமாக தம் பக்கம் நிற்பார்கள் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
குறித்த முஸ்லிம் அமைப்பினருக்கு முன்னால் ஹக்கில் நிலைத்திருத்தல் அல்லது Bபாதிலுடன் சமரசம் செய்தல் அல்லது கைகோர்த்தல் எனும் இரண்டு பாதைகளை தவிர வேறு எதுவும் இல்லை. மேலும் பௌத்த இனவாதிகளின் எச்சரிக்கையை அவர்கள் சாதாரணமாக தட்டி நழுவிச் சென்று விடமுடியாது. இத்தகைய பௌத்த இனவாத அமைப்புக்கள் இதற்கு முன்னும் பல தடவைகள் எச்சரிக்கை விடுவதுடன் மாத்திரம் நின்றுவிடாமால் அதைத் தாமே முன்னின்று நடத்திக் காட்டியும் இருக்கிறார்கள். எனவே எதிர்வரும் தேர்தலில் பௌத்த இனவாத மொட்டு கட்சிக்கு முஸ்லிம்களின் வாக்குகளை தாமாகவே கொண்டு சேர்க்கின்ற பணியை பலவந்தமாக இந்த முஸ்லிம் தரப்பினருக்கு இனவாத அரசும், இனவாதிகளும் இதனூடாக திணித்து உள்ளனர். முதலாளித்துவ குஃப்ரிய ஜனநாயாகச் சாக்கடையில் எவர் எம்மை ஆண்டாலும் விமோசனம் இல்லை என்றாலும் இந்த இடத்தில் நளீமிகள் உட்பட அனைவரும் நிதானத்துடன் நடந்துகொள்ள கடமைப்பட்டுள்ளார்கள். அத்துடன் மிதவாதம், நடுநிலை என்ற பெயரில் தூய இஸ்லாமிய சிந்தனைகளுக்கும், நேர்மையான முஸ்லிம் சமூகத்தின் அரசியல் உரிமைப் போராட்டங்களுக்கும் குந்தகம் ஏற்பட்டு விடாமல் அவர்கள் எதிர்வினையாற்ற வேண்டும்.
இன்று உலகில் பொதுவாக இறை நிராகரிப்பாளர்களும், குறிப்பாக தீவிர வலது சாரி பேரினவாதிகளும் முஸ்லிம்களின் மீதும் இஸ்லாத்தின் மீதும் கடுமையான பழிகளை சுமத்திக் கொண்டே இருக்கிறார்கள். ஹக்கில் நிலைத்திருத்தல் என்பது கூர்மையான வாளின் மீது வெறுங்காலுடன் நடப்பதைப் போன்றே இருக்கிறது. எமது நாட்டில் மட்டும் நாம் விதி விதிவிலக்கைத் தேட முடியாது.
“உணவு உண்பவர்கள் தங்களது தட்டின் பக்கம் (மற்றவர்களை) அழைப்பது போல் ஒவ்வொரு திசையிலிருந்தும் பிற சமுதாயங்கள் உங்களை கொன்றிட (மற்றவர்களுக்கு) அழைப்பு விடுக்கும் கட்டம் வரும் என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அதற்கு ”அன்றைய தினம் நாங்கள் சிறு கூட்டமாக இருப்போம் என்பதாலா?” என்று ஒருவர் கேட்டார். அதற்கு அந்நாளில் நீங்கள் பெரும்பான்மையாகவே இருப்பீர்கள்; எனினும் வெள்ளத்தில் மிதந்து செல்லும் நுரையைப் போன்று (மதிப்பிழந்தவர்களாக) ஆகிவிடுவீர்கள். என்று நபி(ஸல்) அவர்கள் கூறிவிட்டு பின்னர், உங்கள் எதிரிகளின் உள்ளங்களிலிருந்து (உங்களைப் பற்றிய) பயம் இல்லாமல் போகும். உங்களுடைய உள்ளங்களில் அல்லாஹ் ‘வஹ்னை’ ஏற் படுத்திவிடுவான் என்று பதிலளித்தார்கள். ”அல்லாஹ்வின் தூதரே! வஹ்ன் என்றால் என்ன?” என்று நாங்கள் கேட்டோம். அதற்கு ”உலகத்தை நேசிப்பது, மரணத்தை வெறுப்பது” என்று அவர்கள் பதிலளித்தார்கள்.” (அறிவிப்பாளர் : ஸவ்பான் (ரழி) – நூல்: அஹ்மத்/ 21363)