நிராயுதபாணியான ஆபிரிக்க-அமெரிக்கர் ஜோர்ஜ் ஃபிலாய்ட் கொல்லப்பட்டதிலிருந்து மினியாபோலிஸ் மற்றும் பிற அமெரிக்க நகரங்களில் ஆர்ப்பாட்டங்களும், கலவரங்களும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. அவர் ஒரு வெள்ளை இன காவல்துறை அதிகாரி தனது முழங்காலை கழுத்தில் வைத்து நசுக்கிக் கொண்டிருந்ததனால் மூச்சுத் திணறி இறந்தார். அவர் பல முறை என்னால் மூச்சு எடுக்க முடியவில்லை என்று அதிகாரிகளிடம் கூறிய போதும் அவற்றை புறக்கணித்த அதிகாரிகள் சுமார் 8 நிமிடங்களும் 46 வினாடிகளும் அவரது அழுத்தப்பட கழுத்திலிருந்து காலை எடுக்கவில்லை.
கையடக்க தொலைபேசிக் கேமராக்களில் படமாக்கப்பட்ட இந்த கொடூரமான குற்றம், காவல்துறை மற்றும் பிற அரசு நிறுவனங்களின் கைகளில் கறுப்பின அமெரிக்கர்கள் எதிர்கொள்ளும் இனவெறியின் வற்றாத பிரச்சினையை மீண்டும் வெடிக்கும் வகையில் வெளிக்கொண்டு வந்துள்ளது.
ஒரு புதிய கருத்துக் கணிப்பின் படி ஆபத்தான மற்றும் கடினமான சூழ்நிலைகளில், பொலிஸ் அதிகாரிகள் வெள்ளையர்களை விட கறுப்பின மக்களுக்கு எதிராக அதிக சக்தியைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று நினைக்கும் அமெரிக்கர்களின் கருத்தில் பாரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. மோன்மவுத் பல்கலைக்கழக (Monmouth University Survey) கணக்கெடுப்பில், 57 சதவீத அமெரிக்கர்கள், கறுப்பர்களுக்கு எதிராக காவல்துறையினர் அதிக சக்தியைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக நம்புகின்றனர் என்று வாசிங்டன் போஸ்ட் பத்திரிகை தெரிவித்துள்ளது.
வாஷிங்டன் போஸ்ட் ஃபேட்டல் ஃபோர்ஸ் (Fatal Force) தரவுத்தளத்தின்படி, கடந்த ஆண்டில் 1000 க்கும் மேற்பட்டோர் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதிலே சிறுபான்மையினராக உள்ள கறுப்பின அமெரிக்கர்களே விகிதாசார ரீதியில் அதிகம். ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் வெள்ளையர்களை விட கிட்டத்தட்ட ஆறு மடங்கு அதிகமாக சிறையில் அடைக்கப்படுகிறார்கள் என்றும் தண்டனைத் திட்ட கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது.
பிரிவினைவாத சட்டங்கள் பல ஆண்டுகளுக்கு முன்பு ஒழிக்கப்பட்டிருந்தாலும் அமெரிக்காவில் பாகுபாடு பரவலாக உள்ளது. அதற்கான சான்றுகள் எல்லா இடங்களிலும் உள்ளன. கறுப்பின அமெரிக்கர்கள் பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளனர். இவர்கள் வெள்ளை இனத்தவர்களுடன் ஒப்பிடுகையில் குறைவான ஆயுட்காலத்தை கொண்டிருப்பதுடன், சிறையில் அடைக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் பெற்றவர்களாகவும் (ஒரு சில குறிப்பிடத்தக்க விதிவிலக்குகள் இருந்தபோதிலும்), அரசாங்கத்திலும் தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவனங்களிலும் மிகக் குறைவாக பிரதி நிதித்துவப் படுத்தப்படுபவர்களாகவும் இருக்கின்றனர்.
டொனால்ட் டிரம்ப், வெள்ளை இனவாதிகள் கொண்டுள்ள தவறான அபிப்ராயங்களை தூண்டியதன் மூலமாகவும் அவர்களின் நிகழ்ச்சி நிரலை ஏற்றுக்கொள்வதாக வாக்குறுதி அளித்ததன் மூலமாகவும் வெள்ளை மாளிகைக்கு வந்தது எல்லோருக்கும் தெரியும். அவர் தொடர்ந்து பராக் ஒபாமாவை இன ரீதியாக தொடர்ந்து இழிவுபடுத்தி வந்ததுடன் அவரது அமெரிக்க பிறப்புச் சான்றிதழைத் கேள்விக்குட்படுத்தி, அவரது தந்தையின் பிறப்பிடமான கென்யாவுக்கு “திரும்பிச் செல்லலாமே” எனக் கோரி வந்ததையும் நாம் அறிவோம்.
புலம்பெயர்ந்தோர் மற்றும் வெளிநாட்டினரை, குறிப்பாக முஸ்லிம்களை ஏளனம் செய்தவாரே தொடர்ந்து பதவியில் செயல்பட்டு வருகின்ற ட்ரம்ப், சுதந்திர உலகின் முன்மாதிரி என்று மார்பு தட்டிக்கொள்ளும் நாட்டில் மிகவும் கேவலமான நடத்தைகளையும் அணுகு முறைகளையும் தூண்டும் வகையில் செயற்பட்டு வருகிறார்.
இணையத்தில் வைரலாகிய மரணித்த ஜார்ஜ் ஃபிலாய்ட் இன் இறுதிக்கட்ட சம்பவத்தின் காட்சிகளால் வேதனைப்படாத அல்லது கோபப்படாத மனச்சாட்சி உள்ளவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். ஆயினும் இச் சம்பவத்திற்கான ட்ரம்பின் ஆரம்ப எதிர்வினையானது நடந்த குற்றத்தை ஆதரிப்பதாகவே இருந்தது. மினியாபோலிஸில் ஏற்பட்ட அமைதியின்மைக்கு பதிலளிக்கும் விதமாக “கொள்ளை தொடங்கும் போது, தோட்டாக்களுக்கான வேலைகளும் தொடங்குகிறது” என்று ட்வீட் செய்வதன் மூலம், போராட்டக்காரர்களை கொல்ல காவல்துறை மற்றும் ஆயுதமேந்திய பொதுமக்களை ஊக்குவிக்கும் விதத்தில் அவரது ட்வீட் அமைந்திருந்தது.
ட்ரம்ப் சிந்தனையற்ற, வெறுப்பு நிறைந்த அவரது கொள்கைகள் மூலம் அமெரிக்காவின் சிதைவுக்கான விதைகளை அவரை ஆட்சியில் அமர்த்திய இனவெறி வெள்ளையர்களிடம் விதைக்கிறார் என்று சொன்னால் அது மிகையாகாது. வெள்ளை மாளிகையில் இதுவரை வசித்தவர்களில் தொடர்ச்சியான பொய்களை உரைப்பதில் இவர் ஒன்றும் முதலாவது நபர் அல்ல. ஆனால் அங்கே அமர்ந்து கொண்டு நாட்டை சரியான பாதையில் வழிநடாத்துவதற்கு பதிலாக (கொடிய கொரோனா வைரஸை எதிர்த்துப் போராட உத்தரவிடப்பட்ட பூட்டுதல்களுக்கு எதிராக) ஜனநாயகக் கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள மாநிலங்களில் உள்ளூர் கிளர்ச்சிகளை அதிகரிக்க தனது ஆதரவாளர்களைத் தூண்டியது நிச்சயமாக அவர் தான்.
வரலாறு மீண்டும் பின்நோக்கிச் சுழல்கிறது போலும். 1950 களில் ரோசா பார்க்ஸ் (Rosa Parks) சம்பவம் சிவில் உரிமைகள் இயக்கத்தை உற்சாகப்படுத்தியது. பின்னர், பல வருடகாலப் போராட்டங்களுக்குப் பிறகு, பிரிவினைச் சட்டங்கள் ஒழிக்கப்படுவதற்கும் அது வழி கோலியது. ஜார்ஜ் ஃபிலாய்டின் சம்பவமும் கூட டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான இன, மத வெறியாட்டம் மீண்டும் பெரிதாக தலை தூக்கியதற்கு எதிரான மற்றொரு இனவெறி எதிர்ப்பு கிளர்ச்சியைத் தூண்டக்கூடும். அவற்றை அடக்குவதற்கு தன்னை ஒரு சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் ஜனாதிபதியாக அவர் சித்தரிப்பாரானால் இரண்டாவது முறையாக ஜனாதிபதி பதவியில் அமர்வதற்கான வாக்கு வங்கியை இது நிறப்புதற்கு உதவலாம்.
இதற்கிடையில், உலகின் ஆக்கிரமிப்பு மற்றும் இனவெறி போன்ற அடக்குமுறைகளால் வெறுப்பில் கொந்தளித்துக்கொண்டிருக்கும் மக்களிடையேயும் அமெரிக்காவில் இடம்பெறும் இந்தக் கிளர்ச்சிகள் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தலாம்.