ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ, கிழக்கு மாகாணத்தில் உள்ள பழங்கால பாரம்பரிய இடங்களை முறையாக ஆய்வு செய்து பாதுகாக்கும் நடவடிக்கைக்காக பாதுகாப்பு செயலாளர் தலைமையிலான ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமித்துள்ளார். புராதன இடங்களை அழிக்கக் கூடிய பல்வேறு விடயங்களைப் பற்றி பல்வேறு கட்சிகள் புகார் எழுப்பியுள்ளன. அவை அனைத்தையும் கருத்தில் கொண்டு வரலாற்றுத் தொன்மை பொருந்திய இடங்களை பாதுகாப்பதற்கும், அவற்றைப் பராமரிப்பதற்கும் ஒரு விரிவான திட்டத்தை தொல்பொருளியல் துறையின் உதவியுடன் செயல்படுத்த ஆவன செய்யப்படும் என்று ஜனாதிபதி கூறினார்.
ஒவ்வொரு மாதமும் மூன்றாவது வெள்ளிக்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் கூடும் பெளத்த ஆலோசனைக் குழு இரண்டாவது முறையாக கடந்த 22ஆம் திகதி கூடியது. இதன்போது பெளத்தத்திற்கும் திரிபிடத்திற்கும் முரணான பௌத்த துறவிகளின் சிலரின் நடவடிக்கைகள் காரணமாக பௌத்த சாசனத்தின் சரியான நிலைப்பாடு மற்றும் அதன் சொற்பொழிவின் அவசியம் குறித்து மகா சங்கத்தினர் ஜனாதிபதிக்கு விரிவாக விளக்கினார்கள். அதற்கு பதிலளிக்கும் முகமாக தேவையான ஆலோசனைகளும் முறையான நடைமுறைத் திட்டங்களும் முன்மொழியப்பட்டால் நிலைமையை சரிசெய்ய தனது ஆட்சிக் காலத்தில் உரிய நடவடிக்கைகளை எடுக்க முடியும் என்று ஜனாதிபதி தெரிவித்தார்.
பெளத்த ஆலோசனைக் குழுவால் பெளத்த மதக்கல்வி மற்றும் ஏனைய பள்ளிக்கல்விகளின் நிலை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. சில சமயங்களில் இலக்கியம் மற்றும் வரலாறு குறித்த பாடங்களை கல்வி திட்டத்தில் இருந்து அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மகா சங்கத்தினர் சுட்டிக்காட்டியது. இதற்கு தனது அறிக்கையில் கல்விக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளதாகவும்இ தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதற்கான பூர்வாங்கப் பணிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
போதைப்பொருள் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த ஒரு விரிவான திட்டத்தை செயல்படுத்த வேண்டியதன் அவசியத்தை மகா சங்கத்தினர் வலியுறுத்தினர். இதற்கு அரசுக்கும் மகா சங்கத்தினருக்கும் நிறைய பொறுப்புக்கள் இருக்கிறது என்று தேரர்கள் கூறினார்கள். “கடந்த சில ஆண்டுகளில் நாட்டிற்குள் கடத்தப்பட்ட பெரிய அளவிலான போதைப்பொருட்களை எங்களால் கைது செய்ய முடிந்தது” என்றும் மேலும் நிலைமையை முழுமையாகக் கட்டுப்படுத்தவும், போதைப்பொருள் பாவனையை ஒழிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி ராஜபக்ஷ குறிப்பிட்டார்.
தேசிய பாதுகாப்புக்கு தேவையான பொறுப்புகளை தன்னால் இயன்றளவு நிறைவேற்றுதாகவும் இந்த நோக்கத்திற்காக திறமையான மற்றும் பொறுப்பான அதிகாரிகளை நியமித்துள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். புலனாய்வு அமைப்புகள் பலப்படுத்தப்பட்டு தேவையான முழு அதிகாரங்களும் வழங்கப்பட்டுள்ளன. அனைத்து தீவிரவாத மற்றும் பயங்கரவாத குழுக்களை விசாரிக்க பாதுகாப்பு படையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
இராணுவ வீரர்களின் நினைவு விழாவில் ஜனாதிபதி ஆற்றிய உரையை பாராட்டுவதற்கு வார்த்தைகள் அகராதியில் இல்லை என்றும் தாம் ஜனாதிபதியை ஆசிர்வதிப்பதாகவும் மகா சங்கத்தினர் இதன்போது தெரிவித்தனர். குழப்பமான சமுதாயத்தை அதிலிருந்து மீட்டெடுக்க மகா சங்கத்தினருக்கு பெரும் பொறுப்பு உள்ளது என்று தெரிவித்த தேரர்கள், தேரர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் இடையே மோதல்களைத் தூண்டும் வகையில் ஊடகங்கள் செயல்படுவதாக விமர்சனத்தையும் முன்வைத்தார்கள்.
மேலும் கொவிட்-19 ஐ தோற்கடிக்க அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகளை உலக நாடுகள் பாராட்டுகையில், எதிர்க்கட்சிகள் அந்நடவடிக்கைகள் அனைத்தையும் கண்டனம் செய்வது விசனத்துக்குரியது என்று தெரிவித்த அவர்கள், கோவிட் தொற்றுநோயால் குழப்பமடைந்துள்ள சமூகத்தை மீட்டெடுக்க மகாநாயக்க தேரருக்கு பெரும் பொறுப்பு உள்ளது; அதனை தாம் முறையான வேலைத்திட்டத்தின் ஊடாக மேற்கொள்வோம் என்று அவர்கள் தெரிவித்தனர். இக்கூட்டத்திற்கு இலங்கையிலுள்ள அனைத்து முக்கிய பௌத்த தேரர்களும் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.