குஃப்பார்களின் ஒன்றுபட்ட முயற்சியாலும் தொடர் சூழ்ச்சிகளாலும் கிலாஃபா அரசானது 1924 இல் உலக ஒழுங்கிலிருந்து அகற்றப்பட்டது. முஸ்லிம் நிலமானது பல நாடுகளாக துண்டாடப்பட்டது. இஸ்லாத்தின் அதிகாரத்திலிருந்த முஸ்லிம் உம்மாஹ் அடக்குமுறையாளர்களின் அதிகாரத்திற்குள் திணிக்கப்பட்டது. மனிதனின் பழுதுபட்ட சிந்தனையால் உருவாக்கப்பட்ட ஊழல் நிறைந்த இவ்வடக்குமுறை ஆட்சியின் கங்காணிகளாகவும், பாதுகாவலர்களாகவும் கிழக்கிலும், மேற்கிலும் அரசுகள் மற்றும் நாடுகள் தோற்றுவிக்கப்பட்டு இன்றுவரை மக்கள் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டுக் கொண்டு வருகின்றனர். வாழ்வியலில் இருந்து மதத்தைப் பிரிக்கும் (Secularism) சிந்தனையினினாலான அரசியல் முறையைக் கொண்டு (Ruling System) ஆட்சிசெய்யும் மேற்கத்தேய சிந்தனையாளர்களின் இவ்வாட்சி முறைக்கூடாக அன்றிலிருந்து இஸ்லாமிய உம்மாஹ் இழந்துள்ள கௌரவத்தைப்பெற முடியாதுள்ளது. அன்றாடம் முஸ்லிம்களது வளங்கள் சூறையாடப்படுகின்றன. அவர்களது தனித்துவம் சிதைக்கப் படுகின்றது. இஸ்லாம் தனது இறையாண்மை, தனித்துவம் மற்றும் தலைமைத்துவத்தை இழந்து தொடர் வீழ்ச்சிக்கு உட்படுத்தப் படுகின்றது.
“நபியே உம்மீது இறக்கப்பட்ட (இவ்வேதத்தை)யும், உமக்கு முன்னர் இறக்கி வைக்கப்பட்டுள்ள (வேதங்கள்யா)வற்றையும் மெய்யாகவே தாங்கள் விசுவாசிப்பதாக எண்ணிக் கொண்டிருப்போர் பால் நீர் பார்க்கவில்லையா? அவர்கள் தாகூத்தை (ஷைத்தானை) தீர்ப்புக் கூறுபவனாக ஆக்க நாடுகிறார்கள். (ஆனால்) அவர்களோ அவனை நிராகரித்து விட வேண்டுமெனத் திட்டமாகக் கட்டளையிடப்பட்டுள்ளார்கள். அந்த ஷைத்தானோ, அவர்களை வெகு தூரமான வழிகேட்டில் வழிகெடுத்துவிடவே நாடுகின்றான்” (அந்நிஸா 4: 60)
இவ்வாறு தொடர் வீழ்ச்சிக்கு உட்படும் மக்களது வாழ்க்கையை சீர்செய்ய ஒட்டுவேலைகளில் (Patch Works) முதலாளித்துவ சித்தார்ந்தம் முயன்று வருகின்றது. மதத்திலிருந்து அரசியலைப் பிரித்து நோக்கும் அச்சித்தார்ந்தம் வாழ்வியலில் இருந்து மதம், விழுமியங்கள், பெறுமானங்களைப் பிரித்து நோக்குகின்றது. முதலாளித்துவ எண்ணக்கருக்கள், பெறுமானங்கள் மனித வாழ்க்கைக்கு பௌதிக ரீதியான பெறுமானத்தை மட்டுமே வழங்குகின்றது. இத்தகைய முதலாளித்துவ அரசின் நிழலில் மனித உலகு தனது பாதுகாப்பையும், நிலைபேன் தன்மையையும் இழந்துள்ளது. சமூக, பொருளாதார, அரசியல் ரீதியான மனித சமூகத்தின் பாதுகாப்பையும், நிலைபேன் தன்மையையும் பேணுவதற்குப் பதிலீடாக முதலாளித்துவம் பிழையான பிரதியீட்டைச் செய்துள்ளது.
முதலாளித்துவ உலக ஒழுங்கின் தோல்வியைப் பறைசாற்றும் 03 நடைமுறை உதாரணங்களை நோக்கின்…
01) பொருளாதார சீர்கேடு:
அத்தியவசியப் பொருட்களின் விலை உயர்வு, உள்நாட்டு ரீதியான பணப்பெறுமதி கீழிறங்கிச் செல்லல், பணத்தின் திரவியத்தன்மை இழப்பீடு, உழைக்கும் மக்களின் முதுகில் பாரிய வரிச்சுமைகளைச் சுமத்தல், வேலைவாய்ப்பின்மை, உச்சத்தைத்தாண்டிய பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் போன்றன முதலாளித்துவ பொருளாதார ஒழுங்கின் நேரடி விளைவுகள். மறு பக்கத்தில் இஸ்லாமிய கிலாஃபா அரசின் நிழலின் கீழ் ஓநாயும், ஆடும் ஒரே நீரோடையில் அருகருகேயிருந்து நீர் அருந்தும் வகையில் பொதுவாக அனைத்துத் துறைகளிலும், குறிப்பாக பொருளாதாரச் சமநிலையிலும் நீதம் தலைத்தோங்கியது. பறவைகள் தமது பசியைப் போக்கிக் கொள்வதற்காக கோதுமை மூட்டை மூட்டைகளாகக் மலையுச்சிகளில் கொட்டப்பட்ட வரலாற்றைப் பார்த்து நாம் வியந்து நிற்கிறோம். கலீஃபா உமர் (ரலி) அவர்கள் மேகத்தை நோக்கி “நீ எங்கு வேண்டுமானாலும் சென்று மழையைப் பொழி; ஆனால் உனது வரியை நான் சேகரிப்பேன்.” (விளைச்சல் அறுவடைகளைப் பெற்றுக் கொள்வேன்) என்று சூழுரைத்து மக்கள் நலன் பேணப் பாடுபட்டதை நாம் பார்க்கிறோம்.
2) பாதுகாப்பு :
இன்றைய உலகில் மனிதனது அத்தியவசியத் தேவைகளான உணவு, சுகாதாரம், மருத்துவம், உறைவிடம் மற்றும் அவனது உயிர் என்பன கேள்விக்குறியாக மாற்றப்பட்டுள்ளது. காரணம் இன்றைய உலகு மனித உயிரை பணத்தைக் கொண்டே மதிப்பீடு செய்கின்றது. அண்மையில் அமெரிக்காவை இயல்பு நிலைக்கு திருப்புதற்காக ட்ரம்ப் நிர்வாகம் எடுக்கின்ற முடிவுகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக டெக்ஸாஸின் ஆளுநர் “கொரோனா தொற்றால் தன்னைப் போன்ற வயோதிப வயதை அடைந்தவர்கள் உயிரை விட எமது நாட்டின் பொருளாதாரமே முக்கியத்துவம் மிக்கது” என்று கூறிய கருத்து இந்த உண்மையை தெளிவாக உணர்த்துகின்றது. அமெரிக்காவில் பெண்கள், சிறுவர்கள், முதியவர்களது உயிர்கள் அன்றாடம் காவு கொள்ளப்படுகின்றன. இவ்வாறு முதலாளித்துவம் மனிதனது கண்ணியம் மற்றும் பெறுமானங்களைக் காப்பதில் தோல்வி கண்டுள்ளது.
ரசூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள் “யார் உங்களில் ஆரோக்கியமாக எழுந்திருக்கிறாரோ, தான் பாதுகாப்பாக இருப்பதாக உணர்கின்றாரோ, அன்றைய நாளிற்கான உணவைக் கொண்டிருக்கின்றாரோ அவர் முழு உலகத்தையும் பெற்றவர்போல் ஆகி விடுகின்றார்.”
இஸ்லாமிய அரசு மக்களில் பொருளாதார தரத்தில் மிகவும் தாழ்ந்த நிலையில் இருப்பவர்களுக்கு கூட மேற்கூறிய அடிப்படைத் தேவைகளை முழுமையாகப் பெற்றுக் கொடுப்பதற்கு தன்னை அர்ப்பணித்திருக்கிறது.
03) மக்கள் சுகாதார நலன் பேணலில் தோல்வி :
உலகில் கொவிட் – 19 தொற்றுக்கு உள்ளானோர் 03 மில்லியனைத் தாண்டியுள்ளது. உயிழப்புக்கள் 02 இலட்சத்தையும் கடந்துள்ளது. தாமே உலகின் வல்லரசென மார்தட்டிக் கொள்ளும் அமெரிக்கா மற்றும் மேற்கத்தேய நாடுகள் வானிலை அவதான நிலையங்கள் போன்று மக்களின் இறப்புக்களை கணக்கிட்டு எதிர்வு கூறிக் கொண்டிருக்கின்றனர்.
சாதாரண நிலைமை மற்றும் பாரிய இடர்கால நிலைமைகளின் போதும் இவர்கள் மேற்கொள்ளும் அளவீடுகள், அளவுகோல்கள், தீர்மானங்கள் மனிதனது அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்வதிலும் மனிதர்களது இருப்பை உறுதிப் படுத்துவதிலும் தோல்வியைத் தழுவியுள்ளன.
இஸ்லாம் மனிதனது சுகாதாரத்தை ஒரு அடிப்படைத் தேவையாகக் கருதுகின்றது. இஸ்லாமிய அரசு தனக்குக் கீழுள்ள மக்களின் சுகாதாரத்தைப் பேணுவது தனது கடமையெனக் கருதுகின்றது. ரசூல் (ஸல்) “ஆட்சியாளர் ஒரு பொறுப்பாளர் ஆவார். அவரது பொறுப்புக் குறித்து அவர் விசாரிக்கப் படுவார்.” எனக் கூறிய அவர் “தீங்கிளைத்தலும் கிடையாது. தீங்கிளைக்கப்படவும் முடியாது.” என்றார்கள். எனவே மக்களிற்கான மருத்துவ வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதை அரசின் பிரதான கடமையெனவும் அதனை தவறவிடுவது ஹராம் எனவும் இஸ்லாமிய வழிகாட்டல் மிகத் திட்டவட்டமாக வரையறுக்கின்றது.
ஹிஜ்ரி 18 இல் கலீஃபா உமர் (ரலி) ஆட்சிக்காலத்தில் மதீனாவில் கடுமையான வரட்சியும் பஞ்சமும் ஏற்பட்டது. மதீனா மக்களிற்கு தானியங்களை அனுப்பி வைக்குமாறு மாநில ஆளுனர்களிற்கு கலீஃபா உமர் (ரலி) அவர்கள் வேண்டுகோள் விடுத்தபோது எகிப்து, சிரியாப் பகுதிகளிலிருந்து தானியங்கள் வந்துசேர காலதாமதம் ஆகியது. இது சம்பந்தமான காரணத்தை தேடிப்பார்த்த போது அப்பிரதேசத்திலிருந்து மதீனாவிற்கான தரைவழிப் பாதை நீண்டதாகக் காணப்பட்டது. புவியியல் நிலைமைகளை ஆராய்ந்த உமர் (ரலி) அவர்கள் நைல் நதி – செங்கடலை இணைப்பதற்கான கால்வாயை வெட்டுமாறு எகிப்து ஆளுனரைப் பணித்தார்கள். 69 மைல் நீளமான அக்கால்வாய் அமைக்கும் பணியானது 06 மாதங்களில் பூர்த்தியாக்கப்பட்டு முதல் வருடத்தில் அப்பகுதியில் இருந்து 20 கப்பல்களில் தானியம் நிறைந்த கலன்கள் மதீனாவை வந்தடைந்தன.
அப்பஞ்ச காலத்தில் உமர் (ரலி) அவர்கள் இறைச்சி மற்றும் வெண்ணெய் போன்றவற்றைத் தவிர்த்து றொட்டி, எண்ணெய் போன்றவற்றையே உண்டு வந்தார்கள். அவர்களது ஆரோக்கியம் குன்றிச் செல்வதை அவதானித்த மக்கள் அவர்களது உடல்நிலை பற்றிக் கவனம் செலுத்துமாறு கேட்டபோது “நான் துன்பங்களை அனுபவிக்காத போது எவ்வாறு மக்கள்படும் இன்னல்களை உணர்ந்து கொள்ள முடியும்” எனப் பதிலளித்தார்கள். இக் கொடிய பஞ்சத்தை மக்களை விட்டும் அல்லாஹ் நீக்கும் வரை நெய்வகைகளை உண்ணமாட்டேன் என தனக்குத் தானே சத்தியம் செய்து கொண்டார்கள். மக்கள் விடயங்களை உடனிருந்து கவனிப்பதற்காக வேண்டி மக்களிடையே கூடாரமிட்டுத் தங்கி அவர்களிற்கான உணவு விநியோகத்தை தனது கைப்படவே செய்தார்கள்.
ஒரு தடவை உமர் (ரலி) அவர்கள் கிழிந்த ஆடையை அணிந்தவராக மக்களிடையே பிரசங்கம் செய்வதற்கு எழுந்துநின்ற போது பசியின் காரணமாக அவர்களது வயிற்றில் இருந்து ஒலி எழும்பியது. அதன்போது உமர் (ரலி) அவர்கள் தனது வயிற்றை நோக்கி “நீ சத்தமிடு, அல்லது சத்தமிடாமல் இரு; முஸ்லிம் சமூகத்தில் உள்ள சிறுபிள்ளைகளின் வயிறுகள் நிரம்பும் வரை நிற்சயமாக நீ நிரம்ப மாட்டாய்” எனக் கூறினார்கள்.
ஆகவே அரசானது மக்களின் நோயைப் போக்குவதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதும், நோயை இனங்காண்பதற்கான பரிசோதனைகள், மருத்துவ வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதும், பசித்திருக்கும் மக்களின் உணவுத் தேவையை நிறைவு செய்வதும் அதனை உறுதிப் படுத்துவதும் அதற்கான நடவடிக்கைகளை மேறுகொள்வதும், அவற்றை மேற்பார்வை செய்வதும் அரசின் கடமையாகும்.
எனவே நிலைப்பேரான சௌகரியமான வாழ்க்கை அல்லாஹ் (சுபு)வின் வழிகாட்டலான இஸ்லாமிய செயலாக்க அமைப்பினை நடைமுறைப் படுத்துவதினூடாக மாத்திரமே உலக மக்களால் அனுபவிக்க முடியும். இஸ்லாமிய முறைமை (Islamic System) மாத்திரமே மனிதனுடைய பொருளாதார, சமூக, அரசியல், சுகாதாரப் பிரச்சினை மற்றும் பஞ்சம் போன்ற பிரச்சினைகளிற்கு தீர்வினை வழங்கும்.
எனவே இதனை நபித்துவத்தின் வழியினாலான கிலாஃபா அரசை நடைமுறைப் படுத்துவதினூடாக நிறுவனமயமான நுட்பங்களைக் கொண்ட முறைமைகளையுடைய அரசியல் யாப்பினை அடிப்படையாக் கொண்டு, முஸ்லிம் நிலங்களில் ஷரீஆவை நடைமுறைப் படுத்துவதினூடாக, முஸ்லிம் உம்மாவின் கீர்த்தியை மேலெழச் செய்ய முடியும்.
“அவனையன்றி நீங்கள் வணங்குபவை வெறும் (கற்பனைப்) பெயர்களைத் தவிர(வேறொன்றும்) இல்லை; நீங்களும் உங்கள் மூதாதையர்களும் அவற்றைப் பெயர்களாக வைத்துக் கொண்டீர்கள்; அல்லாஹ் இதற்கு யாதோர் ஆதாரத்தையும் இறக்கி வைக்கவில்லை; அல்லாஹ் அவனுக்கேயன்றி (மற்றெவருக்கும்) அதிகாரம் இல்லை; அவனைத் தவிர (மற்றெவரையும்) நீங்கள் வணங்கக் கூடாதென்று அவனே கட்டளையிட்டிருக்கின்றான்; இதுதான் நிலையான மார்க்கமாகும்; எனினும் மனிதர்களில் பெரும்பிலோர் (இதனை) அறிந்து கொள்ள மாட்டார்கள்.” ( யூசுஃப் 12: 40 )
Well done
Keep it up
Good article for the society