கொரோனா வைரஸ் நெருக்கடியின் பின்னால் ஒழிந்திருக்கும் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ அரசாங்கம் இறந்த முஸ்லிம்களின் உடல்களை வலுக்கட்டாயமாக பறிமுதல் செய்வதற்கும், இறப்புக்கு கோவிட் -19 உடன் எந்த சம்பந்தமும் இல்லாதபோது கூட அவர்களது குடும்பங்களின் விருப்பத்திற்கு எதிராக தகனம் செய்வதற்கும் முயல்கின்ற ஒரு வெளிப்படையான இனவெறி நடைமுறையை பின்பற்றுகிறது.
மே 5ம் திகதி மாதம்பிட்டியவில் தனது வீட்டில் இறந்து போன 67 வயதான முஸ்லீம் ஒருவரின் உடல் பாதுகாப்புப் படையினரால் வலுக்கட்டாயமாக பரித்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டதாக 2020, மே 15 ஆம் தேதி தகவல்கள் வெளிவந்து இருப்பதாக CT சொல்கிறது. இதன்போது ஆயுதமேந்திய பாதுகாப்புப் படையினரால் தகனம் செய்வதற்கு குடும்பத்தவர்கள் நிர்பந்திக்கப்பட்டு ஒப்புதல் படிவங்களில் கையெழுத்திட கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர்.
இறந்த நபருக்கு கொவிட் 19 இன் அறிகுறிகள் எதுவும் இருந்திருக்கவில்லை; மேலும் இறந்தவரின் குடும்பம் வழமையான நடைமுறைக்கு மாற்றமாக தனிமைப்படுத்தலில் வைக்கப்படவுமில்லை; உடல் தகனம் செய்யப்பட்ட போதிலும் மரணம் கொரோனா வைரஸ் மரணம் என பதிவு செய்யப்படவுமில்லை.
இந்த விவகாரம் தொடர்பாக இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் அலி ஜாஹிர் மௌலானா தனது ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார். உலக சுகாதார அமைப்பின் தெளிவான வழிகாட்டுதல்கள் இருந்தபோதிலும், இறந்தவர்களின் மத நம்பிக்கைக்கு ஏற்ப இறுதி சடங்குகளை மேற்கொள்வதற்கு பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களைத் தடுப்பதற்காக அரசாங்கம் மேற்கொள்ளும் செயல் கொடூரமானது என்று குறிப்பிட்டு இத்தகைய செயல்களுக்கு பின்னால் உள்ள “அடிப்படை நோக்கம் என்ன?” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் அவர் “துக்கப்படுகிற குடும்பங்களுக்கு எதிராக மிருகத்தனமான சக்தியையும் அச்சுறுத்தலையும்” அரசாங்கம் பயன்படுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
“இலங்கையில் கொவிட் 19 இனால் நிகழ்ந்த இறப்புகளின் உண்மையான எண்ணிக்கை என்ன? இன்னும் எத்தனை பேர்களது தவறாக தகனம் செய்யப்பட்டு அவர்களது குடும்பங்கள் மௌனமாக்கப்பட்டுள்ளனர்? ஜனாதிபதி கோதபய அவர்களே! நீங்கள் இவை அனைத்துக்கும், அனைவருக்கும் பதில் சொல்ல கடமைப்பட்டுள்ளீர்கள்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முஸ்லிம்களை வலுக்கட்டாயமாக தகனம் செய்வதற்கான அரசாங்கத்தின் கொள்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இலங்கை முஸ்லீம் கவுன்சிலின் துணைத் தலைவர் ஹில்மி அகமட் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்ரஸ் கட்சியின் ரிசாட் பதியுதீன் உட்பட மூன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் கோவிட் 19 இனால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களை தகனம் செய்ய கட்டாயப்படுத்திய வர்த்தமானியை எதிர்த்து நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
“2018 டிசம்பரில் அரசியலமைப்பு சதி அரசியல் கையாளுதலுக்கு அடிபணியாது செயற்பட்டு நாட்டின் புகழைப் பெற்ற உச்ச நீதிமன்றம் அரசியல் சூழ்ச்சிகளுக்கு அடிபணியக்கூடாது. அடக்கம் செய்யும் உரிமையை மறுத்ததற்காக உலகத்தின் கவனம் நம்மீது உள்ளது” என்று வழக்கு பதிவு செய்யப்பட்ட பின்னர் ஹில்மி அகமட் தனது ட்வீட்டரில் தெரிவித்திருக்கிறார்.
எவ்வாறாயினும் அரசாங்கம் வர்த்தமானியின் எல்லைக்கு அப்பால் ஒரு படி தாண்டிச் சென்று வைரசுடன் தொடர்பில்லாத நிலையில் இறக்கும் முஸ்லிம்களையும் வலுக்கட்டாயமாக தகனம் செய்யும் போக்குக் குறித்து செயற்பாட்டாளர்கள் எச்சரிக்கை தெரிவித்துள்ளனர்.
இந்த நிகழ்வு தொடர்பாக தகவல் திரட்டும் செயல்பாட்டாளர்களின் கூற்றுப்படி, அதிகாலை 1.15 மணிக்கு மரணம் நிகழ்ந்திருக்கிறது. மரணத்தை உறுதிப்படுத்த அவசர மருத்துவர் சுமார் ஒரு மணி நேரம் கழித்து அந்த இல்லத்திற்குச் சென்றிருக்கிறார். அதே நேரத்தில் மரணம் குறித்து போலீசாருக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. சுமார் 12 மணி நேரம் கழித்து பொலிசார் வீட்டிற்கு சென்று உடலை எடுத்து தேசிய மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கின்றனர். பின்னர் இறந்தவரின் சடலம் எவ்வித பாதுகாப்பு மறைப்பும் இல்லாமல் பிண அறையில் வைக்கப்பட்டிருக்கிறது. மறுநாள் சடலம் பொரெல்ல சுடலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டிருக்கிறது. கொரோனா வைரஸ் குறித்த சந்தேகம் உள்ளதாக குடும்பத்தினர் ஒரு காகிதத்தில் கையெழுத்திட கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர். இறந்தவரின் முழு குடும்பமும் பகிரங்கமாக என்ன நடந்தது என்ற விவரங்களை வெளியே வெளியிட வேண்டாம் என்று மிரட்டப்பட்டுள்ளனர்.