ரமதான் எனும் இப்புனித மாதத்தில் அல்லாஹ்(சுபு) தனது அடியார்களை சோதனைக்கு ஆட்படுத்தி மாபெரும் அருட்கொடைகளை வழங்க விரும்புகிறான். இந்த அற்புதமான புனித மாதம் அல்லாஹ்(சுபு)வின் பாதையில் அதிகளவான இபாதாக்களைச் செய்யவும், தர்மங்களை வாரி வாரி வழங்கவும் எவ்வாறு முஃமீன்களுக்கு வழிகாட்டியதோ, அதற்கு எவ்விதத்திலும் குறைவில்லாமல் அல்லாஹ்(சுபு) பாதையில் ஜிஹாது செய்யவும், அவனது பூமிகளை குஃப்ரிலிருந்தும், ஷிர்க்கிலிருந்தும் மீட்டு இஸ்லாத்தின் ஆளுகைக்குள் கொண்டு வரவும் உற்சாகமூட்டுகிறது. ரமதான் பிறை இருபதான இன்று பதஹ் மக்கா என்றழைக்கபடும் மாபெரும் மக்கா வெற்றி இடம்பெற்றமை கூட இதற்கோர் சிறந்த எடுத்துக் காட்டாகும்.
நபிகளார்(ஸல்) அவர்களும் சஹாபாப் பெருமக்களும் கூட்டாக ஒன்பது ரமதான்களை கடந்து வந்தர்கள். இந்த அனைத்து ரமதான் மாதங்களிலும் குறிப்பிட்டுச் சொல்லத்தக்க பல முக்கிய வரலாற்று நிகழ்வுகள் இடம்பெற்று இருக்கின்றன.
ரமதானில் இடம்பெற்ற முதலாவது இத்தகைய சம்பவமாக மஸ்ஜித் அல் திரார் அழிக்கப்பட்ட சம்பவம் கருதப்படுகிறது. மதீனாவிலிருந்த முனாஃபிக்குகள் முஸ்லிம்களின் ஒற்றுமையை குலைப்பதற்கு எண்ணி, மஸ்ஜித் அல் நபபிக்கு போட்டியாக ‘அல்திரார்’ எனும் ஒரு மஸ்ஜிதைக் கட்டினார்கள். எனினும் அதன் விபரீதத்தை உணர்ந்த நபிகளார்(ஸல்) அதனை உடனடியாக இடித்துவிடுமாறு இந்தப் புனித ரமதான் மாதத்தில்தான் உத்தரவிட்டார்கள்.
அதன் பிறகு இஸ்லாமிய வரலாற்றில் ‘யவ்மல் ஃபுர்கான்’ என்று வர்ணிக்கப்படும் சத்தியவாதிகளையும், அசத்தியவாதிகளையும் வேறு பிரித்துக் காட்டிய புனித பத்ருப் போர் இடம்பெற்றது. ஹிஜிரி 2, ரமதான் 17ம்நாள் நிகழ்ந்த இந்தப் போர் அரேபிய தீபகற்பத்தில் அப்போதிருந்த அரசியல் சமநிலையை அப்படியே புரட்டிப்போட்டது. இஸ்லாமிய வரலாற்றின் முக்கிய மைற்கல்லான இந்நிகழ்வு நபிகளார்(ஸல்) அவர்கள் நிறுவிய இஸ்லாமிய அரசின் ஆளுமையை அனைவருக்கும் பட்டவர்த்தனமாக்கியது. உளத்தூய்மையுடன் அல்லாஹ்(சுபு)க்கு தாம் அளித்த வாக்குறுதியை எவ்வித குறைவும் இன்றி நிரூபித்த முஸ்லிம்களுக்கு, அல்லாஹ்(சுபு), பத்ர் போரின் போது மிகச்சிறந்த வெற்றியை அளித்தான்.
“பத்ர் போரில் நீங்கள் மிகவும் சக்தி குறைந்தவர்களாக இருந்த போது, அல்லாஹ் உங்களுக்கு உதவி புரிந்தான். ஆகவே நீங்கள் நன்றி செலுத்துவதற்காக அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள். 2உங்கள் ரப்பு (வானிலிருந்து) இறக்கப்பட்ட மூவாயிரம் வானவர்களைக் கொண்டு உங்களுக்கு உதவி செய்வது போதாதா?” என்று (நபியே!) முஃமின்களிடம் நீர் கேட்டீர்.” (ஆல் இம்ரான் 3:123, 124)
இஸ்லாமிய வரலாற்றில் இது முதல் போரும், முதல் வெற்றியுமாகும். 313 படைவீரர்கள் 2 குதிரைகள் 70 ஒட்டகங்களுடன் நபிகளார் தலைமையில் மதீனாவிலிருந்து சென்ற இஸ்லாமிய படையானது 1000 வீரர்கள் 100 குதிரைகள் 700 ஒட்டகங்களுடன் மக்காவிலிருந்து புறப்பட்ட அபு ஜஹல் தலைமையில் வந்த படையை வீழ்த்தியது. பத்ர் போரின் வெற்றி முஸ்லிம்களின் இறைநம்பிக்கையை மேலும் வலுப்படுத்தி மதினாவில் ஒரு வலுவான அரசினை நிலைநாட்டி அதனை வலுமிக்க அரசியல், ஆன்மீக, ராணுவ மையமாக ஆக்கியது.
பத்ர் யுத்தத்தைத் தொடர்நது ஹிஜ்ரி 6இல் இதுபோன்றதொரு ரமதான் மாதத்தில்தான் வாதி அல் குரா எனுமிடத்தின் அரசியாய் திகழ்ந்த ஃபாத்திமா பின் ராபியாவை எதிர்கொள்ள சயித் இப்ன் ஹாரிதா(ரழி) அனுப்பப்பட்டார். ஃபாத்திமா பின் ராபியா அரேபியாவிலே பலத்த பாதுகாப்புடன் திகழ்ந்த அரசியாகக் கருதப்பட்டதுடன், வெளிப்படையாக இஸ்லாத்தை எதிர்ப்பவராகவும் அறியப்பட்டார். அவரும் ரமதான் மாதத்தில் நடைபெற்ற முஸ்லிம்கட்கு எதிரான போரொன்றில் கொல்லப்பட்டார்.
குறைஷிகளால் ஹுதைபியா ஒப்பந்தம் மீறப்பட்டதைத் தொடர்ந்து அரேபிய தீபகற்பத்தில் இறைமறுப்பை அடியோடு அழிக்க எண்ணிய நபிகளார்(ஸல்), ஹிஜ்ரி எட்டாம் ஆண்டு இன்னுமொரு ரமதான் மாதத்தில் மக்கா நகரை வெற்றி கொண்டார். இந்த நிகழ்வு முழு அரேபிய தீபகற்பத்தையும் ஓரிரைக்கொள்கைக்கு கீழும், முற்று முழுதான இஸ்லாத்தின் ஆதிக்கத்துக்குள்ளும் கொண்டு வந்தது. சிலை வணக்கமும், அதனை அடிப்படையாகக் கொண்ட கலாசாரமும், சமூகக் கட்டமைப்பும் முற்று முழுதாக துடைத்தெரியபட்டு அல்லாஹ்வின் தீன் நிலைநாட்டப்பட்டது.
இவ்வாறாக ரமதான் மாதம் நபிகளார்(ஸல்) அவர்களின் காலத்தில் பல வெற்றிகளைக் முஸ்லிம்களுக்கு பெற்றுக்கொடுத்தது. நபிகளாரின்(ஸல்) மறைவிற்குப்பிறகும் முஸ்லிம்களின் வரலாறு ரமதான் மாதங்களில் வெற்றிகளாலும், வரலாற்று புகழ் மிக்க நிகழ்வுகளாலும் நிரம்பி இருப்பதை எம்மால் நோக்க முடியும்.
ஹிஜ்ரி 92, ரமதான் மாதத்தில் வடஆப்பிரிக்காவின் உமையத் ஆளுநரான மூசா இப்ன் நுசைர் என்பவர் தன் வீரமிக்க தளபதியான தாரிக் இப்ன் ஸியாதின் படையெடுப்பைக் கொண்டு முழு அந்தலூசியாவையும் வெற்றி கொண்டார். இவ்வாறு இன்றைய ஸ்பெயின், சிசிலி மற்றும் ஃபிரான்சின் ஒரு பகுதி இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்துடன் இணைக்கப்பட்டது. முழு ஐரோப்பாவும் இருண்ட யுகத்தில் இருந்தபொழுது இந்த அந்தலூசிய இஸ்லாமிய நாகரீகத்தில் உருவான அறிவெழுச்சிதான் பிற்கால ஐரோப்பிய மறுமலர்ச்சிக்கு அத்திரவாரமாக அமைந்தது. முஸ்லிம்கள் சுமார் 700 ஆண்டுகட்கும் மேலாக இப்பகுதியை ஆட்சி செய்தனர்.
ஹிஜ்ரி 682ம் ஆண்டு சலாஹுதீன் அல் அய்யூபி சிலுவை யுத்தக்காரர்களை ஹித்தீன் யுத்தத்தில் முற்றாக படுதோல்வி அடையச் செய்து, அஷ்ஷாம் பிராந்தியத்திலிருந்து விரட்டியடித்து 90 ஆண்டுகளாக ஆக்கிரமிக்கப்பட்டிருந்த முஸ்லிம் நிலங்களையும், மஸ்ஜித் அல் அக்ஸாவையும் மீட்டெடுத்ததும் இந்த ரமதான் மாதத்தில்தான்.
ஹிஜ்ரி ஏழாம் நூற்றாண்டில் மங்கோலியர்கள் ஆசியா முழுவதும் தமது ஆதிக்கத்தை பரப்பினார்கள். ஜெங்கிஸ்கான் தன்னை ‘மனிதகுலம் இழைத்த பாவத்திற்கு தண்டனை கொடுக்கும் கடவுளின் சாட்டை’ எனக் கருதிக் கொண்டு மனிதகுலம் என்றுமே காணாத அளவில் அட்டூழியம் புரிந்தான். ஹிஜ்ரி 617 இல் சமர்க்கண்ட், ரே, ஹம்தான் போன்ற பகுதிகளில் அவனின் வாள் வீச்சிற்கு ஏழுபதாயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் இரையானார்கள். ஹிஜ்ரி 656 ஆகும்போது ஜெங்கிஸ்கானின் பேரனான ஹுலுகு அப்பேரழிவினைத் தொடர்ந்தான். இஸ்லாமிய அரசின் தலைநகரான பாக்தாதும் இதிலிருந்து தப்பவில்லை. இப்படையெடுப்பில் 1,800,000 முஸ்லிம்கள் கொல்லப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களும் சொல்லொணாத் துயரங்கட்கு ஆட்படுத்தப்பட்டனர். மஸ்ஜித்களில் மதுபானங்கள் நிரம்பி ஓடியது. தொழுகைக்காக அதான் சொல்வதும் முற்றாகத் தடைசெய்யப்பட்டது.
இத்தகைய கொடுமைகட்கு மத்தியில் இஸ்லாமிய பகுதிகள் அனைத்துமே அதே நிலைக்கு ஆளாகிவிடலாம் என்ற நிலையில் எகிப்து, மம்லூக்கிய சுல்தானான ஸைபுதீன் குத்ஸ் முஸ்லிம் படையை ஒருங்கிணைத்து ‘ஐன் ஜலுத்’ எனுமிடத்தில் 26ம் ரமதான் 658ல் மங்கோலியப் படையை வீழ்த்தினார். இறைவனது உதவியால் கிட்டிய இவ்வெற்றியினால் முஸ்லிம்கள் மாத்திரமல்லாது முழு உலகுமே நிம்மதிப்பெருமூச்சுவிட்டது.
மேற்குறிப்பிட்ட வரலாற்றுப் பிரசித்தமான நிகழ்வுகள் ரமதான் மாதத்தை எமது முன்னோர்கள் எவ்வாறு கழித்தார்கள் என்பதை மிகத் தெளிவாக காட்டுகிறதல்லவா? ரமதான் தரும் ஊக்கத்தின் காரணமாக நமது முன்னோர்கள் சவாலாகத் தோன்றிய பெரும் செயல்களை எல்லாம் துணிச்சலுடன் வென்று முடித்தார்கள். அவர்கள் பகலை போர்க்களங்களிலும், இரவை இறைவனிடம் தம்மை அர்ப்பணிப்பதிலும் கழித்தார்கள்.
நாம் கடந்துவரும் இக்காலகட்டமும் இஸ்லாமிய உலகமானது அந்நிய ஆக்கிரமிப்புகளாலும், தாக்குதல்களாலும், ஊழல் மிக்க கொடுங்கோல் ஆட்சியார்களாலும் உருக்குலைந்து போயுள்ள காலகட்டமாகும். இன்று உலெகெங்கும் முஸ்லிம்களுக்கும், இஸ்லாத்துக்கும் எதிரான நேரடி மற்றும் சிந்தனா ரீதியான போரானது முழு வீச்சில் நடைபெற்று வரும் அவலநிலை.
எனவே எமது ரமதான் மாதங்கள் எம்மை ஆன்மீக ரீதியாக வலுப்படுத்த வேண்டியதுடன் உலகம் எதிர்நோக்குகின்ற சவால்களை எதிர்கொள்ளக்கூடிய மனத்திடத்தையும் உற்சாகத்தையும் வழங்க வேண்டும் என்பது எமது எதிர்பார்ப்பாக இருக்க வேண்டும். ரமதான் மாதம் கொடுங்கோண்மையை ஒழிக்கின்ற வெற்றி மாதம் ஆகையால் நாமும் செயல் வீரர்களாக களத்தில் நிற்பதற்கு அது எம்மை வழி நடாத்த வேண்டும். எல்லாம் வல்ல இறைவன் எமது முன்னோர்களின் வீரத்தையும், தியாயத்தையும், திடசங்கற்பத்தையும் எமக்கும் வழங்குவானாக!