ரமதான் பல்வேறுபட்ட வணக்கங்களால் அலங்கரிக்கப்டும் ஓர் மாதம். சாதாரண காலங்களில் வணக்க வழிபாடுகளில் கவனக்குறைவாக இருப்பவர்கள் கூட அதிக அக்கறையுடன் வணக்கங்களில் ஈடுபடும் விளைச்சல் காலம் என்று இதனைக் கூறினால் அது மிகையாகாது. எனினும் அல்லாஹ்(சுபு)க்காக வணக்கங்களில் ஈடுபடும் பலருக்கு தீனுல் இஸ்லாம் விபரிக்கின்ற இபாதாஹ் (வணக்கங்கள்) பற்றி பரந்த பார்வை இருப்பதில்லை. அதனால் அவர்களது இபாதாஹ்கள் ஒரு சில காலங்களுடனோ, அல்லது ஒரு சில கிரிகைகளுடனனோ முடிந்து விடுகின்றன. எனினும் அது பற்றி சரியான புரிதலை எம்மில் ஏற்படுத்துவதற்கு முயற்சிக்க வேண்டியது உண்மையான அல்லாஹ்(சுபு) அடியானாக வாழ்வதற்கு இன்றியமையாததாகும்.
அல்லாஹ்(சுபு) தனது திருமறையிலே “நான் ஜின்களையும், மனிதர்களையும் என்னை வணங்குவதற்காகவன்றி படைக்கவில்லை” என்று கூறுகின்ற வசனத்தை நாம் எல்லோரும் ஓதி வருகிறோம். எனினும் எம்மில் பலர் வணக்கம் என்பதை ஒரு சில கிரிகைகள், சடங்குகள், தனிப்பட்ட வாழ்வின் சில அம்சங்கள் என்பவற்றுடன் மாத்திரம் குறுக்கிக் கொள்கின்றோம். தொழுகை, நோன்பு, ஷக்காத், ஹஜ், துஆ, நிக்காஹ், அகீகா, ஜனாஸா என்ற வட்டத்துக்குள் அதனை வரையறுத்து விடுகிறோம். இவ்வாறு சிந்திப்பவர்கள் அரசியல், பொருளாதாரம், ஆட்சி, அதிகாரம், நீதி, நிர்வாகம் என்ற எந்தத்துறையும் இபாதத்துடன் தொடர்பற்றவை என்று கருதுகிறார்கள். இந்தப் பார்வை இபாதாஹ் என்ற பரந்த பரப்புக்குறித்த மிகவும் குறுகியதும், மேலோட்டமானதுமான பார்வையாகும். அல்லாஹ்(சுபு) இபாதாஹ்வை வெளிப்படுத்தும் விதமும், எமது முன்னைய அறிஞர்கள் அதனை புரிந்திருந்த விதமும் இந்த குறும்பார்வையிலிருந்து மிகவும் விசாலமானதாகும்.
அல் பைரூஷ் அபாதி தனது அகராதியான அல் கமூஸ் அல் முஹீத்தில் அல் இபாதாஹ் என்பதற்கு ‘கீழ்ப்படிதல்’ என்று பொருள் தருகிறார். சூரத்துல் பாத்திஹாவில் வருகின்ற “இய்யாக்க நஃபுதூ” – “உன்னை மாத்திரமே வணங்குகிறோம்” என்பதற்கு இமாம் தபரி தப்ஸீர் செய்யும்போது, “அல்லாஹ்வே! உன்னில் மாத்திரமே எமக்கு ஹுஸு(எந்நேரமும் அவன் பிரசன்னத்தில் நாம் இருக்கிறோம் என்ற உணர்வு) இருக்கிறது; உனக்கு மாத்திரமே எமது கட்டுப்படுதல், தங்கியிருத்தல் இருக்கிறது; எங்கள் மீது முழுமையான (எஜமானிய) அதிகாரம் உனக்கு மாத்திரமே இருக்கின்றது, அது உன்னைத்தவிர வேறு யாருக்கும் இல்லை.” என்று விளக்குகிறார்.
இபாதா என்பதற்கு தொன்றுதொட்டு அனைத்து அரபுக்களும் அடிபணிதல் அல்லது கீழ்படிதல் என்ற அர்த்தத்தையே ஏற்றிருந்தார்கள். “கால்த்தடங்கள் பட்டதால் பாதை பணிந்திருந்தது”, அல்லது “பிரயாணிகள் பாதையை பணித்திருக்கிறார்கள்” என்ற வசனங்களில் இபாதா இந்த அர்த்தத்தையே பெறுகிறது. அதனால்தான், பயணிப்பதற்காக பணிக்கப்பட்ட கோவேறு கழுதையை ‘முஅப்பத்’ என்றும் அடிமைப்படுத்தப்பட்ட ஒருவர் எனது எஜமானனுக்கு முன்னால் அடிபணிவதால் ‘அப்த்’ என்றும் அழைக்கப்பட்டார்.
அல் ஷஜாஜ், அல் இபாதாவின் அர்த்தம் என்பது, தன்னை சமர்ப்பித்தலுடனான கீழ்படிதல் என்கிறார். அல் ஷமர்ஹ்ஸரி, அதியுயர் ரீதியிலான சமர்ப்பிப்பும், அடிபணிதலுமாகும் என்கிறார். அல் பக்ஹாவி தன்னை சிறுமைப்படுத்தி கீழ்ப்படிதலும், அடிபணிதலுமாகும்; மேலும் அடிமை – அப்த் என்று அழைக்கப்படுவதே அவர் கீழ்ப்படிவதாலும், அடிபணிவதாலுமாகும் என்கிறார். மொத்தத்தில் ஒரு எஜமானனுக்கு விசுவாசத்துடனும், ஆர்வத்துடனும் சமர்ப்பணமாகி தனது கீழ்படிதலை நிலைநாட்டுவது என்ற அர்த்தத்தையே மேலே குறிப்பிட்ட அனைத்தும் சொல்கின்றன. மேற்சொன்னவற்றிலிருந்து இஸ்லாத்தைப் பொருத்தவரையில் எஜமானான அல்லாஹ்(சுபு)வின் ஸ்தானத்தை உணர்ந்து ஏற்று, அவனைத் தனது விவகாரங்கள் அனைத்தினதும் தீர்மானகர்த்தாவாக ஏற்றுக்கொண்டு, அவனுக்கு மனமகிழ்வுடன் கீழ்படிதலும், அடிபணிதலும் தான் இபாதாஹ் என்ற பதத்தின் ஆழ்ந்த, பரந்த அர்த்தமாகும் என்பது புலனாகிறது.
இபாதாஹ் பற்றிய இந்த ஆழமானதும், அகலமானதுமான பார்வையை ரஸுல்(ஸல்) அவர்கள், உதை இப்னு ஹாத்திம்(ரழி) அவர்களை சந்தித்த வேளையில் அவருக்கு ஆரம்பத்திலேயே மனதில் பதித்த ஒரு சம்பவத்தை அஹ்மத், திர்மிதி மற்றும் இப்னு ஜரீரில் காண்கிறோம். ரஸுல்(ஸல்) அவர்களின் அழைப்பு பற்றி கேள்விப்பட்ட உடனே உதை(ரழி) அவர்கள் ஒரு கிருஸ்தவராக இருந்த காரணத்தினால் தனது இடத்திலிருந்து அஷ்ஷாமை நோக்கி விரைந்தார்கள். போகும் வழியில் அவரது சகோதரி உட்பட அவரது கோத்திரத்தைச் சேர்ந்த சிலர் முஸ்லிம்களால் சிறைப்பிடிக்கப்படுகிறார்கள். பின்னர் அவரது சகோதரி மீது கருணைப்பட்டு முஹம்மத்(ஸல்) அவர்கள் அவரை விடுதலை செய்து விடுகிறார்கள். விடுதலையின் பின்னர் தனது சகோதரரான உதை(ரழி)யை சந்தித்த அவர் இஸ்லாம் குறித்து கரிசனை காட்டுமாறும், ரஸுல்(ஸல்) அவர்களைச் சென்று சந்திக்குமாறும் ஆர்வமூட்டினார்கள். உதை(ரழி) அவரது கோத்திரத்தலைவர்களில் ஒருவராகவும், அவரது தகப்பன் ஹாத்திம் மிகச்சிறந்த வள்ளலாகவும் இருந்தார்கள். பின்னர் உதை(ரழி) மதீனா நோக்கிப் பயணமானார்.
அவரது வருகை பற்றி மதீனாவில் மக்கள் பேசிக்கொண்டார்கள். பின்னர் உதை(ரழி), ரஸுல்(ஸல்) அவர்களை சந்தித்த போது தனது கழுத்தில் வெள்ளியிலான ஒரு சிலுவையை அணிந்திருந்தார்கள். அதன்போது ரஸுல்(ஸல்) “அவர்கள் அல்லாஹ்வை விடுத்து, தமது ரப்பிகளையும், பாதிரிமார்களையும் தமது ரப்பாக எடுத்துக்கொண்டார்கள்…” என்ற ஆயத்தை ஓதியதை செவியுற்ற உதை(ரழி) “அவர்கள் ரப்பிகளையும், பாதிரிமார்களையும் வணங்கவில்லையே…” எனக் கூறினார்கள். அதற்கு ரஸுல்(ஸல்) ”இல்லை, அவர்கள் வணங்கினார்கள்தான்” என்று கூறிவிட்டு, அவர்கள் “(ரப்பிகளும், மாதிரிமார்களும்) எவை அவர்களுக்கு(மக்களுக்கு) ஹலாலாக இருந்ததோ அவற்றை ஹராமாக்கிக் கொடுத்தார்கள். எவை அவர்களுக்கு ஹராமாக இருந்ததோ அவற்றை ஹலாலாக்கிக் கொடுத்தார்கள். மக்களும் அவற்றை பின்பற்றினார்கள். அதுதான் அவர்களுக்குச் செய்யும் வணக்கமாகும்“ என்றார்கள்.
உதை இப்னு ஹாத்தீம்(ரழி) அவர்கள் இஸ்லாத்திற்கு வருவதற்கு முன்னர் இபாதாஹ் பற்றி எவ்வாறு புரிந்து வைத்திருந்தார்களோ, அதற்கு எந்தவிதத்திலும் வேறுபடாத வடிவிலேயே இன்றும் முஸ்லிம்களில் பலர் இபாதாஹ் பற்றி புரிந்து வைத்திருக்கிறார்கள். அதாவது இபாதாஹ் என்பது வெறும் வணக்க வழிபாடுகளும், கிரிகைகளும் என்றே அவர்கள் கருதி வருகின்றார்கள். அவ்வாறு கருதுவது எதுபோன்றதென்றால் உதை இப்னு ஹாத்தீம்(ரழி) இக்காலத்தில் வாழ்ந்திருந்தால் அவர்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் “ரஸுல்(ஸல்) அவர்களே! அல்லாஹ் மீது ஆணையாக, நாங்கள் எங்கள் தலைவர்களுக்கும், அறிஞர்களுக்கும் தொழுகையை நிறைவேற்றவில்லை. அவர்களுக்காக எமது மிருகங்களை பலியிடவுமில்லை, அவர்களை எங்கள் கடவுள்களாக்கி நெருங்கவோ அல்லது அல்லாஹ்வுக்கு பகரமாக அவர்களை நேரடியாக வணங்கவோ இல்லை.” என்று கூறுவதை ஒத்ததாகும்.
ஆனால் ரஸுல்(ஸல்), உதை(ரழி) அவர்களுக்கும், எமக்கும் இபாதாஹ் என்பதற்கான உண்மையான விளக்கம் என்ன என்பதை கற்றுத்தருவதற்காகவே “அல்லாஹ் ஹராமாக்கியதை அவர்கள் ஹலாலாக்கினார்கள், அல்லாஹ் ஹலாலாக்கியதை அவர்கள் ஹராமாக்கினார்கள், மக்களும் அவர்களைப் பின்பற்றி அவர்களுக்கு வணக்கம் செய்து விட்டார்கள்” என்று கூறுவதன் ஊடாக எவ்வாறு யூதர்களினதும், கிருஸ்தவர்களினதும் அறிஞர்கள் வாழ்க்கையின் அனைத்துத் துறைகளிலும் வஹிக்கு கட்டுப்பட வேண்டும் என்ற விதியை மீறினார்கள் என்பதை சுட்டிக்காட்டி இபாதாஹ் என்பதன் பரந்த விதானத்தை உணர்த்துகிறார்கள்.
எனவே முஸ்லிம்கள் இபாதாஹ் என்பதை வாழ்வின் ஒரு சிறிய பகுதியான வணக்க வழிபாடுகளுடன் மாத்திரம் வரையறுத்து விட முடியாது. அவர்கள் அல்லாஹ்வுக்கு செய்யும் இபாதாஹ் என்பது பரிபூரணமானது. அதாவது அவர்கள் வாழ்வு முழுவதிலும், வாழ்வின் அனைத்து துறைகளிலும், அனைத்துக் கட்டங்களிலும் அல்லாஹ்(சுபு) விதிகளைப் பேணுவதன் ஊடாகவும், அவனது ஷரீஆவை அமூல்படுத்துவதன் ஊடாகவுமே அல்லாஹ்(சுபு)வை வழிபட முடியும்; இபாதாஹ் செய்ய முடியும். வாழ்வின் ஒரு சிறிய அம்சத்திலாவது அவர் அல்லாஹ்(சுபு)வின் முடிவினை தவிர்த்து விட்டு, தனது மனோ இச்சையை பேணுவதற்கு அவருக்கு அனுமதி கிடையாது.
எவ்வாறு தொழுகையும், நோன்பும் இபாதாவோ, அதுபோலவே ஜிஹாத்தும், அல்லாஹ் இறக்கியருளியதைக் கொண்டு ஆள்வதும் இபாதாவாகும். எவ்வாறு ஹஜ்ஜும், ஷக்காத்தும் இபாதாவோ அதுபோலதான் பொருளாதாரத் துறையில் ஷரீஆவைப் பின்பற்றுவதும், ஹுதூத் தண்டனைகளை நிறைவேற்றுவதும் இபாதாவாகும். எவ்வாறு தஸ்பீஹ், தஹ்லீல், தக்பீரை உச்சரிப்பது இபாதாவோ அதுபோலவேதான் நபிவழியைப் பின்பற்றி கிலாஃபத்தை மீள நிறுவப் போராடுவதும் இபாதா ஆகும் என்பதை நாம் மிகத்தீர்க்கமாக உணர வேண்டும்.
எந்த அல்லாஹ்(சுபு) தனக்கு மாத்திரம்தான் சாஷ்டாங்கம் செய்ய வேண்டும் என கட்டளையிடுகிறானோ, அதற்கு மாறுசெய்வதை ஒரு நொடிப்பொழுதும் அனுமதிக்க மாட்டானோ, அதற்கு எவ்விதத்திலும் வித்தியாசம் இல்லாமல் தனது தீனுல் இஸ்லாத்திற்குள்ளும், ஷரீஆவுக்குள்ளும் வாழ்வதை மாத்திரம் தான் அவன் எமக்கு கட்டளையிட்டு இருக்கிறான். அதற்கு மாற்றமாக ஒரு நொடி கழிவதையும் அவன் எம்மிடம் அனுமதிப்பதில்லை. அவ்வாறு செய்பவர்களையும், முற்றாகவே அவனது தீனை மறுப்பவர்களையும் அவன் வேறுபடுத்திப்பார்ப்பதில்லை என்பதை தனது திருமறையிலே அவன் திட்டவட்டமாக குறிப்பிட்டு விடுகிறான்.
எனவே அல்லாஹ்(சுபு)வுக்கு இணைவைத்தலை நாம் எவ்வாறு பாரதூரமாகக் கருதுவோமோ, அதற்கு சற்றேனும் குறைவில்லாது அவனது ஷரீஆவைப் வாழ்வின் அனைத்துப் பகுதியிலும் பின்பற்றுவதிலே நாம் கரிசனை காட்ட வேண்டும். அவனை எவ்வாறு இலாஹ்வாக ஏற்று நாம் சுஜுது செய்கிறோமோ, அதுபோலவே அவனை எம்மைப் படைத்துப், பரிபாலித்து, போசித்து, பாதுகாக்கும் ரப்பாகவும் – அதாவது எஜமானாகவும் ஏற்றுக்கொண்டு, அவனது ஷரீயத்திற்கு மாத்திரம் முற்றிலும் கட்டுப்பட்டு வாழ்வதற்கு நாம் முயற்சிக்க வேண்டும். இபாதாஹ் என்பதன் பரந்த புரிதல் எமக்கு இருக்கும் பட்சத்தில் எவ்வாறு நாம் ஷரீஆ இல்லாத ஒரு உலகில் சாவகாசமாக வாழ்ந்து கொண்டிருப்போம்? அவனுக்கு வழிபடுதலுக்கும் ஷரீயத்தை நிலைநாட்டுதலுக்கு இடையேயிருக்கும் இணைபிரியாத தொடர்பை எவ்வாறு நாம் உணராதிருப்போம்?
இந்த முக்கிய கேள்விகளுக்கு உம்மத் நேர்மையாக பதிலளிக்குமானால் இஸ்லாத்தில் இபாதாஹ் என்ற கோட்பாட்டை அது சரியாகப் புரிந்திருக்கிறது என்று அர்த்தமாகும்!