இலங்கையில் கொரோனாவால் பாதிக்கபட்டு இறந்த முதலாவது முஸ்லிமின் உடல் அவரின் இறுதி விருப்பத்துக்கும், அவரது குடும்பத்தாரின் வேண்டுகோளுக்கும் மாற்றமாக பலவந்தமாக தகனம் செய்யப்பட்டுள்ளது. நான் அறிய இலங்கை வரலாற்றில் அரச அதிகாரிகளால் முஸ்லிம் ஒருவரின் இறந்த உடல் இவ்வாறு கையாளப்பட்டுள்ளது இதுவே முதற் தடவையாகும்.
ஒரு முஸ்லிமின் உடல் அவரது மத அடிப்படையில் அடக்கபடாது தகனம் செய்யப்பட்டு விட்டது என்பது பற்றிய விசனமாகவோ அல்லது இந்த சம்பவத்துக்கு பின்னால் உள்ள காரண, காரியங்கள் பற்றிய ஆய்வாகவோ இந்தக் கட்டுரை அமையவில்லை. மாறாக இத்தகைய ஒரு வீம்பான முடிவை அரச சுகாதார அதிகாரிகள் ஒருதலைப்பட்சமாக எடுப்பதற்குரிய துணிவை அவர்களுக்கு எது வழங்கியது? அதுவும் குறிப்பாக ஒரு பேரிடர் காலத்தில் எவ்வித அனுதாபமும், அக்கறையுமற்று இத்தகைய தீர்மானத்தை எடுப்பதற்குரிய உளவியலை அவர்களுக்குள் எது ஏற்படுத்தியது? என்பது பற்றிய சில கருத்துக்களை மக்கள் முன் வைப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
முஸ்லிம்களுக்கு எதிரான ஓர் இனவாத அலை நாட்டில் உருவாகி வளர்ந்து வந்தமை எம் எல்லோருக்கும் தெரியும். எனினும் கொரோனா போன்றதொரு பேரிடரினால் முழு உலகமே ஸ்தம்பிதமடைந்து இருக்கின்ற இந்த சூழலில் கூட இறந்த ஒரு முஸ்லிமின் உடலை வைத்து ஓர் இனவாத அரசியல் செய்யப்பட்டிருக்கின்றதா என்ற கேள்வியை நாம் எழுப்ப வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம். ஏனெனில் அடுத்தடுத்து நடக்கின்ற விடயங்களை சீர்தூக்கிப் பார்க்கின்ற போது இந்த சந்தேகங்கள் எம்முள் ஏற்படுவதை தவிர்க்க முடியாதுள்ளது.
அரசாங்கம் கொரோனாவால் இறப்பு ஏய்தியவர்களின் உடல்களை கையாள்வது தொடர்பாக தீர்மானிக்கும்போது அடக்கம் மற்றும் தகனம் செய்வது தொடர்பான முடிவினை ஆரம்பத்திலேயே ஏன் சரியாக எடுக்கவில்லை? இலங்கையில் பல சமயங்களைச் சேர்ந்த மக்கள் வாழ்கின்றனர்; அவர்கள் இவ்விடயத்தில் வேறுபட்ட நம்பிக்கைகளையும், பழக்கங்களைக் கொண்டவர்கள் என்ற உணர்திறன் அற்றவர்களா அவர்கள்? அவ்வாறு இருக்கையில் ஏன் அனைவரது உடல்களும் தகனம் செய்யப்பட வேண்டும் என்ற முடிவினை அரசாங்கம் முதலில் அறிவித்தது? இவ்வகையான அனர்த்த சூழலில் கூட முஸ்லிம்கள் தம்மில் இறப்பேய்தியவர்களை அடக்கம் செய்வதற்காக தலையைப்போட்டு உடைக்க வேண்டிய ஒரு நிலையை அது ஏன் ஏற்படுத்தியது? அதனைத் தொடர்ந்து முஸ்லிம்களின் கடுமையான முயற்சிக்கு பின்னர் கொரோனாவால் இறந்தவர்களை புதைப்பதற்கும் அனுமதி உண்டு என அரசாங்கம் தீர்மானித்தாலும் கூட முஸ்லிம் சமூகத்தில் ஏற்பட்ட முதலாவது கொரோனா மரணத்திலேயே அந்த அனுமதியை நடைமுறைப்படுத்துவதில் அது ஏன் தவறிழைத்தது? என்ற கேள்விகள் இங்கு நியாயமாகவே எழுகின்றன.
மேலும் அரசாங்க சுற்றுநிருபத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தம் அனைத்து மருத்துவமனைகளுக்கும் போய்ச்சேரவில்லை என்ற வாதமும் நொண்டிச்சாட்டாகவே தெரிகிறது. சுற்றுநிருபம் போய்ச்சேர்ந்ததா இல்லையா என்பது ஒருபுறமிருக்க நாட்டில் பொதுவெளியில், இது குறித்த விவாதம் அண்மை வரை நடந்தது பற்றிய விழிப்புணர்வு கூடவா நீர்கொழும்பு அதிகாரிகளுக்கு இல்லாமல் போனது? இறப்பு ஏற்பட்ட பின் ஏன் அது குறித்து அவர்கள் மேலிடங்களில் முறையாக விசாரிக்கவில்லை? மேலும் முஸ்லிம்கள் சார்பில் ஒரு சில பாராளுமன்ற உறுப்பினர்களும், இறந்தவரின் குடும்பத்தினர்களும் அந்த திருத்தம் குறித்து சுட்டிக்காட்டியிருந்தும் கூட அதற்கு ஏன் அரசின் சுகாதார அதிகாரிகள் முக்கியத்துவம் வழங்கவில்லை? இறந்தவரின் மகன் வெளியிட்ட வாக்குமூலத்தின்படி, அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்வதற்கான அவகாசமாக காவல்துறையினரால் குடும்பத்தினருக்கு குறைந்தது 24 மணிநேரம் கூட வழங்கப்பட்டிருக்கவில்லை. அப்படியென்ன அவசரம் அவர்களுக்கு? மேலும் சுற்று நிருபத்தை வெளியிட்டதுடன் மாத்திரம் அரசாங்கத்தின் பொறுப்பு முடிந்துவிட்டதா? அதனை முறைப்படி நடைமுறைப்படுத்துவதற்கு அது ஆவன செய்ய வேண்டுமல்லவா? அதுவும் குறிப்பாக தன்னால்தான் இந்த குழப்பநிலை ஆரம்பத்தில் ஏற்பட்டது என்று தெரிந்த நிலையில் அரசு அதற்கு விசேட முக்கியத்துவம் வழங்கிருக்க வேண்டும் அல்லவா? எனவே உயர் மட்டங்களின் கரங்கள் இந்த தீர்மானத்தின் பின்னால் இருக்கின்றதா என்ற கேள்வி எழுப்பப்படுவதில் தவறு இல்லை என்று நினைக்கின்றேன். ஒரு பேச்சுக்கு இறந்த சகோதரர் ஜமாலுக்கு ஏற்பட்ட நிலை ரவூப் ஹக்கீமுக்கோ, அலி சப்ரிக்கோ, ரிஷ்வி முஃப்திக்கோ ஏற்பட்டிருந்தால்கூட நாலுபேருக்குத் தெரியாமல் நல்லிரவில் கொண்டுசென்று எரித்திருப்பார்களா இவர்கள்? அல்லது பலகீனமான ஒரு முஸ்லிம் சகோதரரின் பூதஉடலை வைத்து இவர்கள் அரசியல் பரபரப்பு செய்ய நினைக்கின்றனரா? இவ்வாறு கேள்விகளை அடுக்கிக்கொண்டு போனால் இறுதியில் சிங்களப் பேரினவாதத்தின் அல்லது முஸ்லிம்கள் மீதான வெறுப்புணர்வின் வெளிப்பாடே இந்தச் சம்பவத்தின் பின்னால் இருக்கிறது என்பது மிகத் தெளிவாகத் தெரிகின்றது.
கொரோனாவுக்காக நாட்டை தயார்படுத்திய ஆரம்ப கட்டத்திலிருந்தே அரசாங்கத்தின் போக்கு முஸ்லிம்களைச் சீண்டிப்பார்ப்பதாகவே இருந்தது. உதாரணமாக முன்னாள் அமைச்சர் ஹிஸ்புல்லாஹின் கிழக்குப் பல்கலைக்கழகத்தை கொரண்டீன் நிலையமாக பயன்படுத்துவதற்காக இலங்கை இராணுவம் அத்துமீறி அபகரித்தக்கொண்ட சம்பவம் அதற்கு நல்ல எடுத்துக் காட்டாகும். கொரண்டீன் போன்ற ஒரு அவசர உதவிக்காக முஸ்லிம்களின் வளங்கள் பயன்படுத்தப்படுவது வரவேற்கத்தக்கதே. எனினும் அதனை அத்துமீறிச் செய்வதின் ஊடாக அவர்கள் யாரை திருப்த்திப்படுத்த நினைத்தார்கள்? சிங்கள மக்கள் மத்தியில் ஷரீஆ பல்கலைக்கழகமாக அதிகம் அறிமுகப்படுத்தப்பட்டு சர்ச்சைக்குள்ளாக்கப்பட்ட அந்த தனியார் பல்கலைக்கழகத்தை இவ்வாறு முறைகேடாக கைப்பற்றி யாருக்கு வீராப்புக்காட்ட அவர்கள் நினைத்தார்கள்?
மேலும் சென்ற கிழமை இடம்பெற்ற ஓர் சம்பவத்தை எடுத்துப் பாருங்கள். பொலன்நறுவை மாவட்டத்திலுள்ள ஒரு மஸ்ஜிதில் தொழுகைக்காக கூடிய முஸ்லிம்களின் ஒரு செயலை பெரிதுபடுத்தி அரச தரப்பு தெரண மற்றும் ஹிரு தொலைக்காட்சிகள் தலைப்புச் செய்திகளைப்போன்று அடிக்கடி காட்டிக்கொண்டிருந்தனவே. அதன் ஊடாக அவர்கள் எதனை நிறுவ முற்பட்டார்கள்? முஸ்லிம்கள் நாட்டுச் சட்டங்களுக்கு மதிப்பளிக்காதவர்கள் என்று ஓர் தோற்றப்பாட்டை சிங்கள மக்களின் பொதுப்புத்தியில் ஏற்றவா அவர்கள் பாடுபட்டார்கள்? அரசாங்கம் வேண்டுகோள் விடுப்பதற்கு முன்னரே அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா முழு நாட்டிலுமுள்ள பள்ளிவாசல்களில் ஐவேளைத் தொழுகையைக்கூட நடத்த வேண்டாம் என அறிவித்து, அளவுக்கு மீறி நாட்டுப்பற்றை வெளிப்படுத்தியதை ஏன் தலைப்புச் செய்தியாக இந்த ஊடகங்கள் வெளிக்கொண்டு வரவில்லை? தெரண தொலைக்காட்சியின் ‘வாத பிடிய’ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே கொரோனா தொற்றை இந்த நாட்டில் பரப்புபவர்கள் முஸ்லிம்கள் தான் என்று நிறுவும் முயற்சியில் புள்ளிவிபரங்களை அப்பாவித்தனமாக வெளியிடுவதைப்போன்று நாடகமாடிய சம்பவம் உங்களுக்கு என்ன உணர்த்துகிறது?
நான் மேலே சுட்டிக்காட்டிய கேள்விகளுக்கெல்லாம் ஒரே பதில் இன்று இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான குரோதமும், பௌத்த தேசிய இனவாதமும் நிறுவனமயப்படுத்தப்பட்டு விட்டது என்பதேயாகும். அரச உயர் பீடம் முதல், மத பீடங்கள், இராணுவம், காவல்துறை ஊடகத்துறை மற்றும் ஏனைய அனைத்து மட்டங்களிலும் அது வேரூண்றியிருக்கிறது. சிங்கள பௌத்தர்கள் எல்லோரும் பௌத்த தீவிரவாதிகளோ, இனவாதிகளோ அல்லது வலது சாரி தேசியவாதிகளோ அல்லாது இருக்கலாம். ஆனால் நாட்டிலுள்ள பெரும்பாலான சிங்கள மக்கள் அது குறித்து மௌனம் காக்க பழகிப்போனார்கள் என்பதே கவலைக்கிடமான விடயம். எனவே அதன் தாக்கம் எம்மை எல்லா வடிவங்களிலும் தாக்கலாம் என்பதையே மரணித்த சகோதரர் ஜமாலின் நிகழ்வும் எமக்கு உணர்த்துகிறது. எனவே வீதிகளில் நிற்கும் காடையர் கூட்டங்களால் மாத்திரம், அல்லது குறிப்பிட்ட ஒரு சில பௌத்த தீவிரவாதிகளால் மாத்திரம்தான் இந்த இனவாதம் கக்கப்படும் என்றில்லை. மாறாக படித்தவர்களாலும், தகுதியான துறைகளில் பணியாற்றுபவர்காளாலும் இந்த இனவாதத்தீ எம்மீது பரப்பப்படும் என்பதில் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மேலும் ஆங்காங்கே நடைபெறுகின்ற சம்பவங்களில் பெரும்பாலானவை தற்செயலாக இடம்பெறுபவை அல்ல. அவற்றிற்கு பின்னால் இஸ்லாமிய வெறுப்பு மனோபாவமும், திட்டமிட்ட ஒடுக்குமுறையும் இலையோடி இருக்கின்றன என்பதை நாம் அவதானிக்க பழகிக் கொள்ள வேண்டும்.
ஓரிரு தினங்களாக இந்தியாவில் பரப்பரப்பான பேசுபொருளாக இருக்கின்ற ‘கொரோனா ஜிஹாத்’ பற்றிய செய்தி இத்தகைய கொடிய மனோபாவத்தின் வன்மத்தை உணர்வதற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும். டில்லியிலுள்ள நிசாமுத்தீன் மர்கஸில் தப்லீக் ஜமாத் நடாத்திய இஜ்திமா ஒன்றில் நாடெங்கிலும் இருந்து கலந்துகொண்ட முஸ்லிம்களின் ஊடாகவே இந்தியா முழுதும் கொரோனா பரவுவதாக ஒரு புரளியை தற்போது முஸ்லிம்களுக்கு எதிராக கிளப்பி விட்டிருக்கிறார்கள் இந்து தேசியவாதிகள். சில வருடங்களுக்கு முன்னர் ‘லவ் ஜிஹாத்’ என்ற அடிப்படையில் இந்துப் பெண்களை காதலித்து மயக்கி முஸ்லிம்களாக மதம் மாற்றம் செய்கின்ற ஓர் வியூகத்தில் முஸ்லிம்கள் ஜிஹாது செய்வதாக விசமப் பிரச்சாரம் செய்து வந்த சங் பரிவார் கோஷ்டிகள் இன்று இந்த கொரோனா பேரிடர் காலத்தில் கூட அதையொத்த ஓர் கீழ்தரமான வீயூகத்தில் இயங்க நினைக்கிறார்கள் என்றால், இலங்கையில் இத்தகைய சிந்தனைப்போக்கின் வளர்ச்சி எவ்வளவு ஆபத்தானது என்பதை நீங்கள் சிந்தித்துப் பார்த்துக் கொள்ளுங்கள்.
எனவே கொரோனா வைரஸ் தொற்று பற்றிய விழிப்புடன் இருக்கும் நாம் முற்றாக நிறுவனமயப்பட்டுவரும் சிங்கள பௌத்த தேசியவாத வைரஸ் பற்றிய விழிப்புணர்வை எம்மில் வளர்த்துக் கொள்ள வேண்டும். அது எத்தகைய முறைகளில் எந்தெந்த தோற்றங்களை எடுக்கிறது என்ற அவதானத்துடன் நாம் செயற்பட வேண்டும். ஒரு நாட்டில் ஒரு மக்கள் தொகுதி இரண்டாம் தர பிறஜைகளாக்கப்படுவது உடனடியாக நடந்து முடிவதில்லை. அது திட்டமிட்ட பல நகர்வுகளின் முடிவாகவே ஏற்படுகின்றது. எப்போது அந்த மக்கள் தொகுதி இரண்டாம் தர பிறஜைகள் என்ற நிலையிலிருந்து தேசத்தின் பொது எதிரிகள் என்று அடையாளப்படுத்தப்படுமோ அப்போது அதன் இருப்பு பேரினம் ஒன்றின் பிச்சைப்பொருளாக மாற்றப்பட்டு விடும். அந்த நிலையை நோக்கி நாம் சென்று கொண்டிருக்கிறோமா என்ற அச்சம் என்னுள் எழுகின்றது.
எனவே இப்போதே எமக்கு எதிராக திட்டமிட்ட ரீதியில் இடம்பெறுகின்ற அநீதிகளை கேள்விக்குட்படுத்தாமல் நாம் விட்டுவிடுவோமானால், சம்பந்தப்பட்டவர்களை பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்தாது விட்டுவிடுவோமானால், அநீதிக்கெதிராக சட்ட ரீதியாக எடுக்கக்கூடிய நடவடிக்கைகளை துணிச்சலுடன் மேற்கொள்ளாது விட்டுவிடுவோமானால் நாட்டின் பொதுப்புத்தியும், அதிகார வர்க்கமும் எம்மீதான அத்துமீறலுக்கு இயைவாக்கம் அடைந்துவிடும். அதன் பின்னால் நிலைமை எமது கைகளை மீறிச் சென்று விடலாம் என்பதே தவிர்க்க முடியாத உண்மை.
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَتَّخِذُوْا بِطَانَةً مِّنْ دُوْنِكُمْ لَا يَاْلُوْنَكُمْ خَبَالًا ؕ وَدُّوْا مَا عَنِتُّمْۚ قَدْ بَدَتِ الْبَغْضَآءُ مِنْ اَفْوَاهِهِمْ ۖۚ وَمَا تُخْفِىْ صُدُوْرُهُمْ
اَكْبَرُؕ قَدْ بَيَّنَّا لَـكُمُ الْاٰيٰتِ اِنْ كُنْتُمْ تَعْقِلُوْنَ
“நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் உங்(கள் மார்க்கத்தைச் சார்ந்தோர்)களைத் தவிர (வேறெவரையும்) உங்களின் அந்தரங்கக் கூட்டாளிகளாக ஆக்கிக் கொள்ளாதீர்கள்; ஏனெனில் (பிறர்) உங்களுக்குத் தீமை செய்வதில் சிறிதும் குறைவு செய்ய மாட்டார்கள்; நீங்கள் வருந்துவதை அவர்கள் விரும்புவார்கள்; அவர்கள் உங்கள் மேல் கொண்டுள்ள கடுமையான வெறுப்பு அவர்கள் வாய்களிலிருந்தே வெளியாகிவிட்டது; அவர்கள் நெஞ்சங்கள் மறைத்து வைத்திருப்பதோ இன்னும் அதிகமாகும்; நிச்சயமாக நாம் (இது பற்றிய) ஆயத்களைத் தெளிவு படுத்திவிட்டோம்; நீங்கள் உணர்வுடையோரானால் (இதை அறிந்து கொள்வீர்கள்).” (ஆல இம்ரான்:118)