கொவிட்-19 என்ற கொரோனா தொற்று நோய் உலகெங்கும் ஏற்படுத்தியுள்ள பேரவலம் இன்றைய உலக ஒழுங்கின் அச்சாணிகளான சக்தி வாய்ந்த நாடுகளின் அடிப்படை பலகீனங்களைத் தோலுரித்துக் காட்டியுள்ளது.
அதில் அதிமுக்கியமானதும் வெளிப்படையானதும் நடைமுறையிலுள்ள முதலாளித்துவ பொருளாதார ஒழுங்கின் பலகீனமாக இருந்தாலும், மதஒதுக்கல் கொள்கையை அடிப்படையாகக் கொண்ட ஆட்சி முறை, சமூகக் கட்டமைப்புக்கள், உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் தனிநபர் விழுமியங்கள் போன்ற அனைத்தினதும் இயலாமையையும் ஓன்று சேர்ந்து அது கேள்விக்குட்படுத்தியுள்ளது.
முதலாளித்துவம் என்ற வாழ்வியல் ஒழுங்கு மனித சமூகத்தை தலைமை தாங்கும் தகுதியற்றது என்பது இதனூடாக மீண்டுமொருமுறை தெளிவாகியுள்ளது. இல்லையென்றால் கொரோனா தொடர்ந்து பரவலடைந்தால் மீண்டுமொரு உலகம் தழுவிய பொருளாதார மந்த நிலை (Recession) தோன்றும் என்ற கவலையில் இந்நாடுகள் மூழ்கிப்போகும் தேவை இருந்திருக்காது. மக்கள் அண்மைக்கால பொருளாதார தேக்க நிலையிலிருந்து விடுபட்டு, குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் காண்பதற்கு முன்னரே சுழற்சி முறையில் மீண்டுமொரு பொருளாதார வீழ்ச்சியை சந்திக்கத் தயாராகி வருகின்றனர். ஆனால் இம்முறையும் முதலாளித்துவத்தின் அடிப்படை பலகீனத்தை மக்கள் உணர்வதற்கு முன்னரே இந்த வைரஸ் பற்றிய அதீத அவதானம் அவர்களை திசை திருப்பிவிடலாம் அச்சம் என் மனதை நெருடுகிறது.
இந்தத் தொற்றுக்கு உலகம் சாதகமாக எதிர்வினை ஆற்றிய சில உதாரணங்களை முன்வைத்து விட்டு இன்றைய அமைப்பிலுள்ள அடிப்படை பலகீனங்கள் பற்றி பேசலாம் என்று நினைக்கிறேன்.
சீனாவில் வைரஸ் தொற்று முதலாவது இனம்காணப்பட்டு அது மனிதருக்கிடையில் பரஸ்பரம் பரவக்கூடியது என்ற ஆய்வு முடிவுகள் பெறப்பட்டதுடன், சீன அரசு அதனை ஒரு உள்நாட்டு தொற்று என அறிவித்து அதனைக் கட்டப்படுத்தும் ஏற்பாடுகளை மேற்கொண்டமை ஒரு சாதகமான எதிர்வினையாற்றல் என்று சொல்லலாம். தொற்றின் ஊற்றாக இருந்த நகரம் மற்றும் வூஹான் மாகாணத்தை முற்றாக மூடித் தனிமைப்படுத்தியமை, தொற்றைக் கட்டுப்படுத்தி மக்களைக் குணப்படுத்த, இரண்டு புதிய மருத்துவமனைகளை துரித கதியில் நிர்மாணித்தமை பற்றியும் குறிப்பிடலாம். மேலும் சிங்கப்பூர் போன்ற தமது அரசாங்கத்துடன் ஒத்துழைத்து பழக்கப்பட்ட மிகவும் கட்டுப்பாடுடைய சமூகத்தைக் கொண்ட நாடுகள், தொற்று பரவுவதை தமது பொதுச் சுகாதார நடவடிக்கைகள் ஊடாக, கணிசமான அளவில் கட்டுப்படுத்தியமை பற்றியும் குறிப்பிடலாம். இத்தகைய சில நடைமுறைச் செயற்பாடுகளை நாம் மெச்சினாலும், அது இன்றைய உலக ஒழுங்கின் அடிப்படை பலகீனங்களை புரக்கணிக்கப் போதுமானவை அல்ல.
அவ்வாறென்றால், இன்று உலகில் ஆதிக்கம் செலுத்தும் ஒழுங்குகளின் பிரச்சனைதான் என்ன?
பொருளாதாரம்
உலகில் இந்த அவசர அனர்த்த நிலை தோன்றுவதற்கான அடிப்படைக் காரணமாக சீனாவின் பலகீனம் பங்களிப்புச் செய்துள்ளமை பற்றி நாம் மறந்துவிடலாகாது. உதாரணத்திற்கு இந்தத்தொற்றின் ஊற்றுவாய் என ஊகிக்கப்படும் காரணத்தை நாம் எடுத்துப்பார்ப்போம். அதன்படி மனிதகுலத்துக்கு எவ்வகையிலும் ஒவ்வாத ஒரு நோயுற்ற உணவுச் சங்கிலியில் இருந்தே இந்தத் தொற்று தோன்றியிருக்கிறது. இந்தத் தொற்றுக்கு தமது அரசின் எதிர்வினையாற்றல் பற்றி பெருமைப்பட்டுக்கொள்ளும் சீன அரசுக்கு தனது மக்களுக்கான ஆரோக்கியமான உணவுச் சங்கிலியை வரையறுக்க தெரிந்திருக்கவில்லை என்பதை நாம் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்.
மேலும் சீனா உலகளாவிய முதலாளித்துவத்தை தழுவிக்கொண்டதைத் தொடர்ந்து உலகப் பொருளாதாரத்தை இயக்கும் சக்தி மூலமாகக் அது பார்க்கப்படுகிறது. சீனாவுக்கு தும்மல் வந்தால் உலகுக்கு காய்ச்சல் தொற்றும் என்ற நகச்சுவைக் கூற்று முன்னெப்போதும் இல்லாத வகையில் தற்போது உண்மைப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத்தொற்று சீனாவெங்கும் நிலைகொள்ளுமானால் அது உலகமெங்கும் ஏற்கனவே பலகீனமான பொருளாதார வளர்ச்சியை பாரியளவில் பாதிக்கும் என நிபுணர்கள் பயபப்படுகிறார்கள். இந்த முதலாளித்துவ மாதிரியின் இன்னுமொரு உதாரணமாக சிங்கபூர் காணப்படுகிறது. அது நிதிச் சந்தைகளை முழுமையாக நம்பியிருக்கும் ஒரு அரசு. குறிப்பிட்டுக் கூறுவதற்கு தகுதியான தொழிற்துறையோ, விவசாயமோ அங்கே இல்லை. மனிதர்களுக்கு ஏற்பட்டுள்ள தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதில் அது ஓரளவுக்கு வெற்றி பெற்றாலும் கூட, நிதிச் சந்தை எனும் மர்மமான நிறுவனத்தின் மீதான மக்களின் ‘நம்பிக்கையை – Confidence’ நம்பியே அதனது மொத்தப் பொருளாதாரமும் வாழ்ந்து வருவதால் முதலாளித்துவ நோயின் பிடியிலிருந்து அதனால் மீளவே முடியாது.
மேற்கு நாடுகளில் வைரஸ் மீதான பயம் வைரஸை விட வேகமாக பரவியுள்ளது. நான் இதனை எழுதுகையில் இத்தாலியின் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சோகமான இறப்புக்களை தவிர ஏனைய மேற்கு நாடுகளில் இறப்பின் எண்ணிக்கை ஒன்றை அல்லது இரட்டை இலக்கங்களிலேயே இன்னும் உள்ளன. தற்போது அமெரிக்காவில் இறப்புக்களின் எண்ணிக்கை 50 ஆகவும், இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் ஏறத்தாழ 15க்கும் குறைவாகவே இறப்புக்கள் ஏற்பட்டுள்ளன. எனினும் இந்த நாடுகளில் முகக்கவசங்கள், கையுறைகள், சானிடைசர்கள், டொய்லட் டிசுக்கள் கொள்வனவு செய்வதில் மக்கள் காட்டிய பீதி, ஒரு டொய்லட் டிசுப் பொதிக்காக அவர்கள் மோதிக் கொண்ட விதம், கேள்வியைக் கூட்டுவதற்காக கடைக்காரர்களால் செய்யப்படும் பதுக்கல்கள், “ஒரு வேளை எங்களிடம் வைரஸ் இருந்துவிட்டால்” என பயந்து தேசிய சுகாதார சேவைக்கு மக்கள் கொடுத்த அதிகப்படியான அழுத்தங்கள், சீனர்கள் போன்ற தூர கிழக்கு வம்சாவளியைச் சேர்ந்த மக்களை நோக்கி ஏனைய மக்கள் இனத்துவேசத்துடன் நடந்து கொண்ட சில சம்பவங்கள் போன்றன மேற்குலக சமூகங்களின் விழுமியம் பற்றிய பலத்த கேள்விகளை எழுப்பி உள்ளன.
அரசியல்
மேற்குலக நாடுகளில் அரசியல் மீதான நம்பிக்கை எப்போதும் இல்லாத அளவுக்கு வீழ்ச்சியடைந்து வருகிறது. எனவே இத்தகைய அனர்த்தங்களின்போது “பீதி அடைய வேண்டாம்” என அரசியல் வாதிகள் கோரிக்கை விடுக்கும்போது மக்கள் அவர்களை நம்புவதற்கு தயாராக இல்லை. இதே அரசியல்வாதிகள்தான் தமது தேர்தல் வெற்றிக்காகவும், பதவிக்கால மோசடிகளையும், இயலாமைகளையும் மறைப்பதற்காகவும் புளுகு மூட்டைகளுடன் வருபவர்கள் என்பதை மக்கள் நன்கு அறிந்து வைத்துள்ளமையே இதற்கான அடிப்படைக் காரணமாகும். மேலும் இந்த அரசியல் தலைமைகள் மக்களை இந்தத் தொற்றிலிருந்து உடனடியாக பாதுகாப்பதற்கு எது அத்தியவசியமானது என்பது குறித்து சிந்தித்து அதனை முதன்மைப்படுத்தாமல், வெறும் பொருளாதார நலன்களை முன்னிலைப்படுத்தி ‘இன்னும் காத்திருந்து பார்ப்பதா?’ அல்லது ‘துரித முறையில் முகாமை செய்வதா?’ என்பது பற்றி கொள்கையளவில் வாதம் நடத்தவதில் காலத்தை வீணடித்து வருகின்றனர்.
முன்வைக்கப்படும் தீர்வுகள் சில நேரங்களில் இருக்கின்ற சிக்கல்களை மேலும் மோசமாக்கக் கூடியவை…
இந்தத் தொற்றை கட்டுப்படுத்துவற்காக சீனாவிலும், இப்போது வடக்கு இத்தாலியிலும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை தேவைப்பட்டால் ஏனைய இடங்களிலும் மேற்கொள்ளவேண்டிய நிலை ஏற்பட்டால் அது உலகப் பொருளாதாரத்திற்கு பேரழிவை ஏற்படுத்தும் பல பொருளாதார நிபுணர்கள் அச்சம் தெரிவித்து வருகின்றனர். முதலாளித்துவ உலப் பொருளாதாரத்தின் ஸ்திரநிலை நிதிச் சந்தைகளின் நம்பிக்கையின் மீதும், பொழுதுபோக்கு தொழிற்துறைகளின் மூலமான இலாபங்களின் மீதும், பொதுச் சுகாதாரத்தின் தரத்தை ‘இழந்த வேலை நாட்கள் – Working-days-lost’ இல் அளவிடுவதிலும் தங்கியுள்ளதால் முதலாளித்துவ உலகு திக்குமுக்காட ஆரம்பித்திருக்கிறது.
தற்போது முதலீட்டார்களின் நம்பிக்கை பாரிய அளவில் வீழ்ச்சியடைந்து நிதிச் சந்தைகளில் மிகப்பெரிய வீழ்ச்சியைக் கhண்கிறோம், அமெரிக்க பங்குச் சந்தையில் வர்த்தகம் தற்காலிகமாக நிறுத்தப்படடிருக்கிறது. பொழுதுபோக்குத் துறை அச்சுறுத்தலை எதிர்கொள்கிறது. யூரோ 2020 மற்றும் ஒலிம்பிக்கிற்கு பயன்படுத்தப்படும் அரங்கங்கள், திரை மற்றும் கச்சேரி அரங்குகள் இந்த வைரஸ் இனப்பெருக்கம் செய்யும் இடங்களாகக் நோக்கப்படுகின்றன. மறுபக்கத்தில், கோடை கால விடுமுறை என்பது ஏறத்தாழ ஒரு அடிப்படை மனித உரிமை போன்று நோக்கப்படும் மேற்குலக நாடுகளில் உலகளாவிய விமானப் பயணங்கள் மட்டுப்படுத்தப்பட்டிருப்பதன் மூலம் சுற்றுலாத் துறை பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறது.
இந்தத் தொற்றை கட்டுப்படுத்தும் திட்டமிடலின் ஓர் அம்சமாக பாடசாலைகள் மூடப்படுமானால் பாட்டன் பாட்டிமார்கள் பேரப்பிள்ளைகளை பார்த்துக்கொள்ள வேண்டும் என்று அரசியல்வாதிகள் பரிந்துரைக்க ஆரம்பித்திருக்கின்றனர். எனினும் பல நாடுகளில் பாட்டன் பாட்டிகள் கூட 65 வயதுக்கு முன்னர் ஓய்வு பெற முடியாத நிலையை இந்த முதலாளித்துவ உலகு ஏற்படுத்தியிருக்கிறது என்பதை அவர்கள் கவனிக்கத் தவறி விட்டனர். மேலும் இந்த தாராளமய முதலாளித்துவ சமூக ஒழுங்கு குடும்பங்களை துண்டு துண்டாக சிதைத்திருக்கின்ற நிலையில் பல பெற்றோர்கள் பாடசாலை பின்னேர வகுப்புகளையும்;, கழகங்களையும் நம்பியே தமது பிள்ளைப் பராமரிப்பை மேற்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளனர். எனவே பாட்டன் பாட்டிகளின் உதவியை தொடர்ந்து நாடுவதும் அவர்களுக்கு சாத்தியமற்றதாக இருக்கிறது.
எனினும் இஸ்லாமிய வாழ்க்கை நெறி இத்தகைய சவால்களை எவ்வாறு சந்திக்கிறது?
கொரோனா வைரஸை முகம் கொடுப்பதில் தனி மனிதர்களைப் பொருத்தமட்டில் இஸ்லாம் எவ்வாறு வழிகாட்டுகிறது என்பது பற்றி பலர் பேசியிருந்தனர். ஆனால் இஸ்லாம் ஒரு வாழ்க்கை ஒழுங்காக இத்தகைய பிரச்சனைகளை எவ்வாறு கையாள்கிறது, தேவையற்ற சிக்கல்களை தன்னைச் சுற்றி ஏற்படுத்திக் கொள்வதிலிருந்து மனிதனை அது எவ்வாறு பாதுகாக்கிறது, பாரிய சவால்களை எதிர்நோக்குகின்றபோது அதனை எவ்வாறு முகம்கொடுக்க வழிகாட்டுகிறது என்பது பற்றி பேசுவது முக்கியமானது. பொதுவாக இஸ்லாம் வழங்குகின்ற வழிகாட்டல்கள் அவனது அடிப்படை நம்பிக்கையிலிருந்து அவனதும், அவன் சார்ந்த சமூகத்தினதும் விழுமியங்களையும், அரசியல், சமூக, பொருளாதார முறைமைகளையும் ஒட்டுமொத்தமாக அணுகுகிறது.
இஸ்லாமிய ஆட்சி முறையைப் பொருத்தவரையில்…
கலீஃபாவும், அவரது ஆளுநர்களும், உதவியாளர்களும் மக்களின் அனைத்து விவகாரங்களையும் மேற்பார்வை செய்து இஸ்லாம் வழங்கியுள்ள சட்டங்களை அமூலாக்கம் செய்வதன் ஊடாக தமது கடமையை நிறைவேற்றுகிறார்கள். இந்த சட்டங்களில் சில இன்று நாம் எதிர்நோக்கும் கொரோனாவின் சவாலையும் எதிர்கொள்ளக்கூடியது.
அல்லாஹ்(சுபு)வின் தூதர் (ஸல்) சொன்னார்கள், “நீங்கள் ஒவ்வொருவதும் பொறுப்புதாரிகளே. உங்களுக்கு பொறுப்புச் சாட்டப்பட்டவர்கள் குறித்து நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள். ஓர் இமாமானவர் மக்களின் மீது பொறுப்புச்சாட்டப்பட்டுள்ளார். அந்தப்பொறுப்புக்குறித்து அவர் விசாரிக்கப்படுவார்.” (புகாரி, முஸ்லிம்)
இதன்படி மக்களின் சுகாதாரம் மற்றும் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்தக்கூடிய அனைத்தையும் செய்வது ஓர் இமாமின் கடமையாகும். வூஹானிலே மருத்துவமனை வசதிகளை ஏற்படுத்தியதை ஒத்த, தொற்றுக்கான சிகிச்சைகளையும், அதனை முற்றாக தடுப்பதற்கான தடுப்பூசியை கண்டுபிடிக்கும் ஆராய்சிகளில் ஈடுபடுத்துவதை ஒத்த விடயங்களை அவர் மேற்கொள்வது மார்க்கக் கடமையாகும்.
மேலும் அவரது கடமை இவற்றுடன் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டதல்ல…
குறிப்பாக தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக தொற்று ஏற்பட்ட பகுதிகளையும், மக்களையும் தனிப்படுத்துதல் போன்ற இஸ்லாம் வழிகாட்டிய விசேடமான சட்டங்களை அவர் மிக உறுதியாக நடைமுறைப்படுத்த வேண்டியிருக்கும்.
நபி(ஸல்) கூறியதாக அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரழி) பின்வரும் செய்தியை அறிவிக்கிறார்கள்.
நபி ﷺ கூறினார்கள் “நீங்கள் இருக்கும் ஒரு தேசத்தில் தொற்று நோய் பற்றி நீங்கள் அறிந்து கொண்டால்இ அதிலிருந்து ஓடாதீர்கள்; அது ஒரு குறிப்பிட்ட தேசத்தில் பரவுவதாக நீங்கள் கேள்விப்பட்டால், அந் நிலத்திற்குள் நுழைய வேண்டாம்”. (புகாரி)
இரண்டாவது கலீஃபாவான உமர் இப்னு அல் கத்தாப்(ரழி) அவர்களின் ஆட்சிக்காலத்தில் ஏற்பட்ட தீவிரமான கொள்ளைநோயின் (Plague) போது அவர்கள் இந்த சட்டத்தை வினைத்திறனுடன் அமூல்படுத்திய முன்மாதிரி இஸ்லாமிய வரலாற்றில் மிகவுமே பிரசித்தமானது.
இஸ்லாமிய உணவின் சுகாதார தரங்களை நடைமுறைப்படுத்துவதையும் இது குறிக்கும்…
இஸ்லாத்தின் விதிமுறைகள் மக்கள் உட்கொள்ளும் உணவு வகைகள் ஹலாலாகவும் மற்றும் தய்யிப் (நல்லது, சுத்தமானது) ஆகவும் இருக்க வேண்டும் என்று கோருகின்றன. மனித உணவுச் சங்கிலியில் பயன்படுத்தப்படும் விலங்குகள் ஆரோக்கியமானவைகளாகவும், சுகாதாரமிக்கவையாகவும் இருக்க வேண்டும். எனவே ஒரு இஸ்லாமிய அரசாங்கம் உணவுத்தரம் தொடர்பான கட்டுப்பாட்டை உறுதிப்படுத்துவதற்கான ஒழுங்குகளை முறையாக நடைமுறைப்படுத்தும். அநேகமாக காதி ஹிஸ்பா எனப்படும் நீதித்துறையின் ஒரு கிளையால் இது செயல்படுத்தப்படும். அந்தக் கிளை உணவு வழங்குநர்களை தான் தீர்மானித்த இஸ்லாமிய தரத்திற்கு பேணுவதன் ஊடாக மக்களுக்கு சிறந்த ஆரோக்கியமான உணவு கிடைப்பதை உறுதிப்படுத்துவதுடன் அழுங்கான ஆரோக்கியமற்ற உணவு சென்றடைவதை முற்றாகத் தடை செய்யும்.
விழுமியங்களைப் பொறுத்தவரை…
இந்த தொற்று பற்றி பேசும்போது எம்மில் பல முஸ்லிம்கள் இந்த விஷயத்தை தனிநபர் கண்ணோட்டத்தில் பேசினோம். அதில், வாழ்க்கையும் மரணமும் அல்லாஹ்வின் கையிலேயே உள்ளன, நோயைத் தருபவனும் அவனே, நோயிலிருந்து விடுதலை செய்பவனும் அவனே, அவனது நாட்டத்தைத் தடுக்க யாராலும் முடியாது போன்ற இஸ்லாத்தின் அடிப்படை நம்பிக்கைகள் முஸ்லிம் சமூகத்தின் உளவியலை இவ்வாறான நெருக்கடிகளை துணிச்சலுடனும், பொறுமையுடனும் சந்திக்க வழி வகுக்கின்றன என்பன பற்றி ஞாபகப்படுத்தினோம். இவை அனைத்தும் முஸ்லிம்களின் பயத்தையும், பீதியையும் கணிசமான அளவில் கட்டுப்படுத்துவதில் பங்களிப்புச் செய்தன.
அதேபோல், ரிஸ்க் அல்லாஹ்விடமிருந்துள்ள விடயம் என்ற ரிஸ்க் பற்றிய சரியான பார்வை உறுதியாக இருக்கும்போதும் இன்று நாம் காண்பதைப்போன்ற பதுக்கல் மனோபாவமும், அளவுக்கு மீறிய களஞ்சியப்படுத்தலிலுள்ள பதற்றமும் கணிசமான அளவில் குறைந்து விடுகின்றன. இந்நிலை சந்தை மற்றும் விலைகளில் ஏற்படும் அசாதாரண குழப்பத்தை தவிர்க்க பெரிதும் பங்களிப்புச் செய்கிறது.
ஆனால் நாம் இங்கே கவனிக்க வேண்டிய விடயம் என்னவென்றால், இத்தகைய இஸ்லாத்தின் ஞாபகமூட்டல்கள் சாதாரணமான மக்களால் முன்வைக்கப்படுவதிலும் பார்க்க முஸ்லிம் சமூகத்தின் தலைமையான கலீஃபாவால் உத்தியோகபூர்வமாக முன்வைக்கப்படும்போது அது சமூகத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தவல்லன. எமது சக்திக்குட்பட்டவை எவை, நாம் பொறுப்புக்கூறவேண்டியவை எவை, மனிதனின் சக்திக்கு அப்பாற்பட்டவை எவை என்பது பற்றிய ஒரு கலீஃபாவின் நினைவூட்டல் எத்தகைய சவால்களையும் முறியடிக்கக்கூடிய வகையில் மக்களை அணிதிரட்டக்கூடிய வல்லமையை வழங்குகின்றது.
பொருளாதாரத்தைப் பொருத்தவரையில்…
இஸ்லாம் கூறும் பொருளாதாரம் முதலாளித்துவத்தைப்போன்று உலக நெருக்கடிகளுக்கு தாக்குப்பிடிக்க முடியாத கற்பனைத் தயாரிப்புக்களின் எண்ணற்ற பரிவர்த்தனைகளை வளர்க்கும் போலியான பொருளாதாரமல்ல. மாறாக பொருட்களையும், சேவைகளையும் மையப்படுத்திய உண்மையான பொருளாதாரமாகும். இஸ்லாமிய பொருளாதாரமும் சவால்களையும், சிக்கல்களையும் சந்திக்கக் கூடியதுதான் என்றாலும் ஓர் சிலந்தியின் வலைக்கு ஒப்பான பலகீனமான நிலைக்கு அது ஒருபோதும் செல்வது கிடையாது.
மேலும் இஸ்லாமிய சமூகம் சடுதியான ஏற்ற இறக்கங்களுக்கு உட்படாத பொருளாதாரத்தை கொண்டுள்ளதைப்போலவே குழந்தைப் பராமரிப்பு (Childcare) மற்றும் அரச நலன்புரி உதவிகள்(Government benefits) தொடர்பாக மேற்குலகில் இன்று உருவாகியிருக்கும் சிக்கலான வாதங்களையும் அது மிக இலகுவாக கடந்து செல்லக்கூடியது. இஸ்லாத்தைப் பொருத்தவரையில் நோய்வாய்ப்பட்டிருக்கும் அனைத்து குடிமக்களுக்கும் பணச் சலுகைகளை வழங்க வேண்டும் என்ற பொறுப்பு அதன் அரசுக்கு கிடையாது. அவரவர் தன்னைத்தான் பராமரித்துக் கொள்ள வேண்டும். அல்லது அவரின் உறவினர்கள அவருக்கு உதவிகளைச் செய்ய வேண்டும். அதற்கும் வழியில்லாத சூழலில் வாழ்கின்ற மக்களுக்கு மாத்திரம் உணவுஇ தங்குமிடம் மற்றும் ஆடை இருப்பதை அது உறுதி செய்யும். மேலும் குடும்பம்இ சமூகம் மற்றும் அண்டை வீட்டார்களின் பராமரிப்பு தொடர்பாக இஸ்லாம் ஒவ்வொரு முஸ்லிமுக்கும் பணித்துள்ள கடமைகளையும், அவற்றிற்கு இஸ்லாம் வழங்கியுள்ள வலுவான அர்ப்பணிப்பையும் கொண்டு இஸ்லாமிய அரசு தன்மீதுள்ள பாரிய சுமையை இயல்பாகவே சமாளித்து விடுகிறது. எனினும் தனிநபர் சிந்தையுள்ள மதச்சார்பற்ற சமூகங்களpல் இத்தகைய இயல்பான வசதிகள் இருப்பது அரிதிலும் அரிதாகும். அதனால்தான் குடும்பம் மற்றும் சமூகக் கட்டமைப்புக்கள் சிதைவடைந்துள்ள அந்த சமூகங்களில் இத்தகைய அனர்த்தங்களை சந்திப்பதில் அரசுகளும் மக்களும் பாரிய நெருக்கடிகளைச் சந்திக்கின்றனர்.
நிறைவாக நான் என்ன சொல்ல விரும்புகிறேன் என்றால், கொரோனா வைரஸ் தொற்று போன்ற உலகளாவிய நெருக்கடி பற்றி நாம் சிந்திக்கும்போது, அதனை தனிநபர் மட்டத்தில் மாத்திரம் முன்வைத்து கடந்து செல்லாது, இஸ்லாம் ஓர் நடைமுறைச் சித்தாந்தமாக எவ்வாறு அதனை எதிர்நோக்கும் என்பது பற்றி நாம் சிந்திக்க வேண்டும். மேலும் இத்தகைய நெருக்கடிகள் முழு உம்மத்தையும் உள்ளடக்கிய ஒன்றாகையால் அது உம்மத்தின் தலைமையான கலீஃபா மட்டத்தில் கையாளப்படும் பிரச்சனையாகும் என்பதையும், ஷரீஆவின் சட்டங்களினதும், அதன் அடிப்படையிலான அரச கொள்கைகளினதும் துணை கொண்டு அவர் இத்தகைய நெருக்கடிகளைத் தீர்ப்பதில் எவ்வாறு தலைமை தாங்குவார் என்பதையும் நாம் மக்கள் மன்றத்தில் முன்வைக்க வேண்டும். உண்மையில் இந்த நெருக்கடியின் போது, இஸ்லாமிய தலைமைத்துவத்தின் மாற்றீட்டை உலகம் எதிர்கொண்டிருந்தால், இன்றைய நோயுற்ற உலகிற்கு தலைமை தாங்கும் முதலாளித்துவ ஒழுங்கில் சிக்கிக்கொண்டு பரிதவிக்கும் நிலை மனிதகுலத்திற்கு ஏற்பட்டிருக்காது என்பதே வேதனைக்குரிய விடயமாகும்.
“நாம் உங்களை ஒரு நடு நிலையுள்ள(நீதமுள்ள) உம்மத்தாக (சமுதாயமாக) ஆக்கியுள்ளோம்; (அப்படி ஆக்கியது) நீங்கள் மற்ற மனிதர்களின் சாட்சியாளர்களாக இருப்பதற்காகவும், ரஸூல் (நம் தூதர்) உங்கள் சாட்சியாளராக இருப்பதற்காகவுமேயாகும்” (பகரா:143)