அழிவின் விளிம்பில் உலகம்…
ஆப்கானிலிருந்து சிரியா வரை, கொலம்பியாவிலிருந்து உக்ரைன் வரை, லிபியாவிலிருந்து தென் சூடான் வரை முரண்பாடுகளும், இயற்கை அனர்த்தங்களும், பஞ்சமும், பசியும், நோயும், பயங்கரவாதமும் முழு உலகையும் ஆட்கொண்டிருக்கின்றன. உலகில் மில்லியன் கணக்கான மக்கள் அவசரகால நிவாரணத்திலேயே நிரந்தரமாக தஞ்சம் புகுந்து காலத்தை கடத்துகின்றனர். சிவிலியன்களுக்கு எதிரான வன்முறைகள் குறிப்பாக பெண்களுக்கும், சிறார்களுக்கும் எதிரான கொடூரங்கள் கோலோட்சியுள்ளன. பொருளாதார நெருக்கடிகள், பொருளாதார தடைகள், சமூக சீரழிவுகள், குடும்பச் சிதைவுகள் என எத்திசையில் திரும்பினாலும் வேதனைகள் வரம்புடைத்து வளர்த்து விட்டன.
பிற தேசங்களில் முஸ்லிம்களுக்கு நிலை…
சீனாவிலே கன்சென்ட்ரேசன் முகாம்கள் எனும் வதை முகாம்களில் அவர்கள் அடைக்கப்படுகிறார்கள். மியன்மாரிலே இனப்படுகொலை செய்யப்பட்டு அகதிகளாக்கப்படுகிறார்கள். இந்தியாவிலே திட்டமிட்ட இனச்சுத்திகரிப்புக்கும், இன அழிப்புக்கும் ஆயத்தப்படுத்தப்படுகிறார்கள். பலஸ்தீனின் அவலமும், காஷ்மீரும் கண்ணீர்க்கதையும் ஒரு நூற்றாண்டை எட்டித் தொட்டுவிடும் நிலை. அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் இஸ்லாமோஃபோபியாவின் துன்புறுத்தல்கள் என பட்டியல் நீழ்கிறது.
தங்கள் சொந்த தாயகத்தில் முஸ்லிம்களின் தலைவிதி…
முஸ்லீம் உலகின் ஒரு முனையிலிருந்து அடுத்த முனை வரை திரும்பிப்பாருங்கள்; ஈரான் சிரியா, எகிப்து, சவூதி என அனைத்து நிலங்களிலும் கொடுங்கோலர்களினதும், இரக்கமற்ற சர்வாதிகாரிகளினதும், கொலைகார இராணுவ தலைமைகளினதும் கால்களில் மிதிபட்டு அடிப்படை சிவில் உரிமைகள் கூட மறுக்கப்பட்டு வாழ்கின்ற வாழ்க்கை. இந்நிலைக்கு எதிராக ஒரு பத்திரிகையாளர் குரல் எழுப்பத் துணிந்தால், அவர் தனது சொந்த நாட்டின் தூதரகத்தில் துண்டு துண்டாக வெட்டிப் பொதி செய்யப்படும் கொடூரம். யேமனிலே சவூதியால் உருவாக்கப்பட்ட செயற்கைப் பஞ்சத்துக்கு உள்ளாகி பல இலட்சம் மக்கள் பட்டினிச் சாவின் விழிம்பில். பாகிஸ்தானிலும், வங்காளதேசத்திலும் மாற்றானுக்கு நாட்டை விற்று, ஊழலாலும். வறுமையாலும் வாடுகின்ற பல கோடி மக்கள்…
இன்று உலகுக்கு பிடித்திருக்கும் முதலாளித்துவம் எனும் சிந்தாந்த நோய் வரவழைத்த கொடிய விளைவுகள் இவை. இதற்கு முழுமையான நிவாரணம் தேவை. எனினும் நிவாரணம் இருக்கிறதா? இல்லையா? என்று செய்வதறியாது திகைக்கின்ற சமூகம் உலகில் அதிகரித்து வருகின்றது. முஸ்லிம்கள் மத்தியில் அல்லாஹ்(சுபு)வின் ஆட்சிதான் இதற்கான தீர்வாக அமையும் என்று நம்புகின்ற கணிசமான மக்கள் இருந்தாலும் கூட, அது மிகத் தொலைவில் தெரிகின்ற தீர்வாக எண்ணிச் சோர்ந்து போகின்ற மக்கள்தான் அதற்குள்ளும் அதிகம். இந்த ஸ்தம்பித நிலையிலிருந்து அகன்று மக்கள் முன்னேறிச் செல்ல வேண்டும். அதற்கு உலகைப்படைத்து அதற்கு பௌதீக விதிகளை நிர்ணயித்து அங்கே மனிதனை அனுப்பி அவனுக்குண்டான வாழ்க்கை நெறியையும் அனுப்பி வைத்த இறைவனின் பாதைக்கு மக்கள் திரும்ப வேண்டும். அவன் அருளிய விதிகளை நிலைநாட்டி இந்த உலகில் அவர்கள் வாழ வேண்டும். அதற்கு இறைவிதிப்படி ஆள ஓர் ஆட்சி வேண்டும். அந்த ஆட்சியின் பெயர் தமிழில் இஸ்லாமிய ஆட்சி. ஷரிஆவின் பரிபாஷையில் அதனை கிலாஃபா என்று அழைப்பார்கள். அதுதான் இந்த முதலாளித்துவ நோய்க்கும், இனி வரக்கூடிய எந்த கொடிய நோய்க்கும் ஒரே மருந்தாக இருக்கும்.
எனவே உலகில் இறுதியாக இருந்த உதுமானிய கிலாஃபா அழிக்கப்பட்டு 99 வருடங்களை தொடும் இன்றைய தினத்தில் அதன் மீள் வருகைக்கான சாத்தியப்பாடுகளை ஆராய்வது சாலச் சிறந்தது என்று கருதுகின்றேன. (கிலாஃபா நிர்மூலமாக்கப்பட்டு இந்த ரஜப் மாதம் பிறை 28 உடன் ஹிஜ்ரி நாட்காட்டியின்படி 99 வருடங்களும், 2020ஆம் ஆண்டு மார்ச் 3ஆம் திகதியுடன் கிரிகோரியன் நாட்காட்டியின்படி சுமார் 96 வருடங்களும் தாண்டி விட்டன.)
புதியதொரு கிலாஃபாவைச் சந்திக்க உலகம் தயாராக இருக்கின்றதா?
முஸ்லிம்களின் பார்வையில்…
“தொண்ணூறுகளின் பிற்பகுதியிலிருந்து முஸ்லீம் உலகைப் பற்றி சிந்திப்பதிலும் எழுதுவதிலும் நான் மும்முரமாக ஈடுபட்டிருந்தாலும் கூட, முஸ்லிம் உலகில் கடந்த சில ஆண்டுகளாக கிலாஃபத்தின் மீது உருவாகியுள்ள தெளிவான ஆர்வத்தை எனது வாழ்நாளில் நான் இதற்கு முன்னர் கண்டதே கிடையாது” என்கிறார் டோலிடோ பல்கலைக்கழகத்தின் தத்துவவியல் துறை பேராசியர் கலாநிதி. ஓவாமிர் அன்ஜூம் – (இவர் இஸ்லாமிய கற்கைக்கான இமாம் கத்தாப் நிலையத்தின் தலைவராகவும் பணியாற்றுகிறார்) இன்றைய இஸ்லாமிய உலகை நேரடியாக எதிர்கொண்டு பார்ப்பவர்களுக்கு இந்தப் பேராசியரின் கருத்து ஒரு முக்கிய உண்மையைச் சொல்கிறது. அதுதான் காலனித்துவம் உருவாக்கிய மனோபாவத்திலிருந்து முஸ்லிம் உலகு தற்போது விடுதலை பெற்று வருகின்றது என்ற உண்மையாகும். முஸ்லிம் உலகின் முக்கிய பலம் பொருந்திய நாடுகளில் மேற்குலக பல்கலைக்கழகங்களாலும், ஆய்வு நிருவனங்களாலும் நிகழ்த்தப்பட்ட கருத்துக் கணிப்புகளும் இந்த உண்மைக்கு சான்று பகர்கின்றன.
கருத்துக் கணிப்புக்ளின் படி…
2006 இல் எகிப்து, மொராக்கோ, பாக்கிஸ்தான் மற்றும் இந்தோனேசியா போன்ற முஸ்லிம் நாடுகளில் கல்லோப் நிலையம் (Gallup Institute) நடத்திய மிக முக்கியமான கருத்தக்கணிப்பு, கணக்கெடுக்கப்பட்டவர்களில் 65ம% பேர் அனைத்து முஸ்லிம்களையும் ஒரு கலிஃபாவின் கீழ் ஒன்றிணைக்க விரும்புவதாகக் கண்டறிந்தது. முஸ்லிம்கள் மத்தியில் உருவாகிவரும் இந்த மனநிலை மாற்றம் முஸ்லிம் உலகுடன் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டதல்ல. மாறாக முஸ்லிம் அல்லாத மேற்குலக நாடுகளில் வாழும் முஸ்லிம்களுக்கு மத்தியிலும் இந்த மனோநிலையை காண முடிகிறது. 2008 ஆம் ஆண்டில் டெய்லி டெலிகிராப் (Daily Telegraph) பிரிட்டிஷ் முஸ்லீம் மாணவர்களுக்கு மத்தியில் நடத்திய கருத்துக் கணிப்பு பதிலளித்தவர்களில் 33% பேர் கிலாஃபாவை விரும்புவதாக கண்டறிந்தது. இன்னுமொரு எடுத்துக்காட்டாக, 2011 இல் வெளியிடப்பட்ட மெக்டொனால்ட் லாரியர் நிறுவனம் (MacDonald Laurier Institute) நடத்திய கருத்துக் கணிப்பு 62% கனேடிய முஸ்லிம்கள் கனடாவில் ஷரிஆவை விரும்புவதாகக் கண்டறிந்தது.
எதிரிகளின் எதிர்வுகூறல்…
கடந்த சில தசாப்த்தங்களாக உலகளாவிய முஸ்லிம் உம்மத்துக்குள் நிகழ்ந்து வந்த மாற்றத்தை இஸ்லாத்தின் எதிரிகள் தெளிவாக புரிந்து வைத்திருந்தனர். எனவே அந்த மாற்றத்தை எதிர்கொள்வதற்கான தயாரிப்புகளை ஏற்கனவே திட்டமிடுவதற்கான ஆய்வுகளை அவர்கள் முடுக்கி விட்டிருந்தனர்.
டிசம்பர் 2004 இல், சிஐஏவின்(CIA) தேசிய புலனாய்வு கவுன்சில் ‘உலகின் எதிர்காலத்தை படமெடுத்தல் – Mapping the Global Future’ என்ற தலைப்பில் 123 பக்க அறிக்கையை வெளியிட்டது. அந்த அறிக்கையில் 2020 ஆம் ஆண்டில் உலக அரங்கில் புதியதொரு கிலாஃபா உருவாகும் என்று அது கணித்தது. அமெரிக்க நலனுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் உலகின் போக்குகளை முன் கூட்டியே முன்வைப்பதன் மூலம் அடுத்த புஷ் நிர்வாகத்தை அவற்றின் சவால்களுக்கு தயார்படுத்துவதே அந்த அறிக்கையின் நோக்கமாக இருந்தது. அந்த அறிக்கை அமெரிக்க ஜனாதிபதி, காங்கிரஸ் உறுப்பினர்கள், அமைச்சரவை உறுப்பினர்கள் மற்றும் கொள்கை வகுப்பில் ஈடுபட்ட முக்கிய அதிகாரிகளுக்கும் வழங்கப்பட்டது.
அந்த அறிக்கை வெளியிடப்பட்டு 16 வருடங்களுக்கு பின்னர் தற்போது 2020 ஆண்டுக்குள் நாம் நுழைந்திருக்கிறோம். சிஐஏ எதிர்வு கூறியபடியே கிலாஃபா மீதான ஆர்வமும் அதன் சாத்தியம் பற்றிய நம்பிக்கையும், முஸ்லிம்கள் மத்தியில் அனுதினமும் அதிகரித்து வருகின்றது. மேலும் முஸ்லிம் அல்லாத ஏனைய உலக மக்களும் கிலாஃபா என்றதொரு ஆட்சி முறை பற்றி அடிக்கடி கேள்விப்படுகிறார்கள். ஊடகங்கள் விரும்பியோ வெறுத்தோ கிலாஃபா பற்றிய கருத்தாடலை தினமும் உயிர்ப்புடன் வைத்திருக்கின்றன. பல்கலைக்கழகங்களிலே கிலாஃபா பற்றிய காத்திரமான ஆய்வுகளும், கருத்தாடல்களும் இடம்பெற ஆரம்பித்துள்ளன. எனவே கிலாஃபா என்பது இன்று உலகளாவிய பேசுபொருள் என்பதை விழிப்புணர்வுமிக்க மக்கள் நிராகரிக்க மாட்டார்கள்.
அதிகரித்துவரும் உலக ஒழுங்கின் மீதான அவநம்பிக்கை…
முஸ்லிம் உலகில்…
இன்றைய உலகில் தேசிய அரசுகள் கடுமையான சிக்கல்களை எதிர்நோக்கி வருவதைப் போலவே முஸ்லிம் உலகிலும் அதன் மீதான நம்பிக்கை வலுவிழந்து வருகின்றது. தேசிய அரசுகளின் கீழ் வாழும் மக்கள் தமது அரசுகளை ஒரு சுமையாகவும், மேட்டுக்குடிக்காக சுரண்டி வரும் இராட்சத கருவியாகவும் காண்கின்றனர். தேசியவாதத்தையும், தேசிய அரசுகளையும்(Nation State) 19 ஆம் நூற்றாண்டின் காலாவதியான எண்ணக்கருக்களாக முஸ்லிம்கள் பார்க்க தொடங்கி விட்டனர். கடந்த சில தசாப்தங்களாக, உலகமயமாக்கலும் நவீன தகவல் தொடர்புகளும் உலகளாவிய முஸ்லிம்களைப் பற்றிய முஸ்லிம்களின் விழிப்புணர்வையும், உலகெங்கிலும் உள்ள சூழ்நிலைகளின் யதார்த்த நிலையையும் அவர்கள் கண் முன்னால் கொண்டு வந்து விட்டன. மேலும் முதலாளித்துவத்தின் கொடுங்கோண்மையும், நவீன தாராளமய உலக ஒழுங்கின் (Neo-liberal World Order) சீர்கேடுகளும்; முஸ்லிம்கள் மத்தியில் மாற்றம் குறித்த தீவிர சிந்தனையை உருவாக்கியுள்ளன. இந்த மாற்றம் குறித்த தேடல் முஸ்லிம்கள் என்ற அடிப்படையில் அவர்களை இயல்பாகவே கிலாஃபா என்ற மாற்றீடின்பால் ஒன்றிணைத்து வருகின்றது. இஸ்லாத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்தலாம் என்ற தீய நோக்குடன் ஐ.எஸ்.ஐ.எஸ்ஸினால் உருவாக்கப்பட்ட போலி கிலாஃபாவின் தோற்றமும், வீழ்ச்சியும் உண்மையான கிலாஃபா பற்றிய விழிப்புணர்வை அவர்கள் மத்தியில் மென்மேலும் கிளறி விட்டுள்ளது.
முழு உலகிலும்…
இருபத்தியோராம் நூற்றாண்டின் இரண்டு தசாப்தங்களுக்கும் குறைவான காலப்பகுதிக்குள், ஒரு சமூக அமைப்பாகவும், உலக ஒழுங்கின் தலைமையாகவும் முதலாளித்துவம் தோல்வியுற்று வருகின்றமையை நாம் காண்கிறோம். பொருளாதார தேக்கநிலை, மனித வரலாறு காணாத மிகப்பாரிய ஏற்றத்தாழ்வுகள் என்பவற்றால் உலகம் அநீதியில் மூழ்கியுள்ளது. விலைவாசி உயர்வும், வேலையில்லாத் திண்டாட்டங்களும், வெகுஜன போராட்டங்களும் ஆபத்தான விரக்தியையும், வறுமையையும் உலகெங்கிலும் உருவாக்கியுள்ளன. மனித வாழ்வுக்கு ஒவ்வாத தாராளமய ஜனநாயக நிறுவனங்கள் சரிவின் பாதையில் நிற்க, முதலாளித்துவ அமைப்பின் பின்புற காவலரான பாசிசம், ஏகாதிபத்தியம், போர், இனவாதம் என்பற்றுடன் சேர்ந்து மீண்டும் அணிவகுப்பில் வந்து முன்னே நிற்கிறது. எனவே இந்தக்கொடிய முதலாளித்தவக் கும்பலின் அலைக்களிப்பால் களைத்துப்போன மக்களும், அவர்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் சிந்னையாளர்களும் மாற்றீடுகள் பற்றி அதிகம் சிந்திக்கின்றனர். கம்யூனிசத்தின் விபரீதத்தையும், அது உருவாக்கிய அழிவுகளையும் நேரடியாக கண்டுணர்ந்த பலருக்கு இப்போது கிலாஃபா என்ற ஒற்றைத் தீர்வு மாத்திரமே கையில் இருக்கின்றது. இந்நிலையில் இருபத்தியோராம் நூற்றாண்டில் கிலாஃபா ஓர் அரசியல் யதார்த்தம், அதனை எதிர்கொள்வது எப்படி என்பது பற்றிய வாதங்களும், ஆய்வுகளும் திரை மறைவில் அதிகம் நடக்கின்றன.
கிலாஃபத்தின் வழியில் உம்மத் எதிர்கொள்ளும் பிரதான தடைகள்…
நடைமுறையில், புதியதொரு கிலாஃபாவின் உதயம் முஸ்லிம் உலகிலேயே தோன்றும் என்பதால் அங்கிருக்கும் பிரதான தடைகளையே நாம் துல்லியமாக இனம்காண வேண்டும். கடந்த தசாப்தத்தில் முஸ்லிம் நாடுகளில் மக்கள் அனுபவித்த ஒடுக்குமுறைகளை எதிர்த்து மக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டார்கள். அரபு வசந்தம் பல சர்வாதிகாரிகளை வரலாற்றின் குப்பைத் தொட்டிகளுக்குள் தள்ளியது. எனினும் இந்தப் புரட்சிகளின் பலனை மக்கள் அனுபவிப்பதற்கு முன்னர்; அங்கே ஆழமாக வேரூண்றியிருந்த ஏகாதிபத்தியத்தின் கரங்களினால் மக்கள் திசை திருப்பப்பட்டார்கள். மிகத்தெளிவான அரசியல் விழிப்புணர்வும், இஸ்லாமிய அரசியற்கோணம் பற்றிய புரிதலின் குறைபாடும் அவர்களின் தியாகங்களுக்கான பலனை முழுமையாக அளிக்கவில்லை. அதனால் சில தோற்றங்களும், அமைப்புக்களும் மாறியதேயொழிய மக்களின் வாழ்விலோ, யதார்தத்திலோ பாரிய மாற்றங்கள் ஏற்படவில்லை. ஐரோப்பிய வல்லரசுகளும், அதன் கங்காணிகளும், அவர்களின் கூலிப்படைகளும் தலைகீழ் மாற்றத்திற்கு தடையாக இருந்தாலும் அவை அனைத்தையும் விட பிரதானமாக தடையாக நாம் இனம்காண வேண்டியது, இன்றுவரை முஸ்லிம் சமூகத்தின் சிந்தையை ஆக்கிரமித்திருக்கும் மதச்சார்பற்ற அல்லது மதஒதுக்கல் சிந்தனை(Secularism) என்ற கொடிய எண்ணக்கருவாகும். அதன் பிடியிலிருந்து மக்கள் இன்னும் முழுமையாக வெளியில் வரவில்லை. அதற்கு பிரதானமான சூத்திரதாரிகளாக இஸ்லாம் சார்ந்த அரசியற்கட்சிகளும், சில செல்வாக்குள்ள இஸ்லாமிய அறிஞர்களும் தொழிற்படுகின்றனர். தோற்கடிக்கப்பட்ட மனோபாவத்தால் பாதிக்கப்பட்டுள்ள இவர்கள் கிலாஃபத்தை மாற்றீடாக முன்வைப்பதற்கு பதிலாக சிவில் அரசுகளையும்(Civil State), மதச்சார்பற்ற அரசியல் அமைப்புக்களையும்(Secular Constitution) முன்வைத்து செயற்படுகின்றார்கள். இந்த தவறான நிலைப்பாட்டின் விளைவால் எப்போதெல்லாம் அதிகாரம் அவர்களின் கைகளில் வழங்கப்படுகிறதோ அந்த அனைத்து சந்தர்ப்பங்களிலும் மக்களின் அபிலாசைகளை குழிதோண்டிப் புதைத்து அவர்களின் தியாகங்களை வீணாக்கி விடுகின்றார்கள். தம்மை பெரும் சீர்திருத்தவாதிகளாகவும், யதார்த்தவாதிகளாகவும் நினைத்துக்கொள்ளும் இவர்கள் இன்றைய உலக ஒழுங்கின் முன்னால் வலுவிழந்து காட்சி தருகிறார்கள். அதனை எதிர்ப்பது சாத்தியமில்லை என்று நினைத்து அதனுடன் சமரசம் செய்ய ஆரம்பித்து விடுகின்றார்கள். இந்த நோய் முஸ்லிம் உம்மாவை பல முறை ஏமாற்றியிருந்தாலும் இன்று முஸ்லிம்கள் நேரடி அனுபவத்தால் சத்தியத்திற்கும், அசத்தியத்திற்கும் இடையிலுள்ள வேறுபாட்டை காண ஆரம்பித்துள்ளார்கள். எனவே மதஒதுக்கல் சிந்தனை(Secularism) என்ற அகீதாவுக்கு முரண்பட்ட எண்ணக்கருவையும், தேசிய அரசுகள்(Nation State) என்ற உம்மத்தின் பிரிவினைக்கு அச்சாணியாக இருக்கின்ற சிந்தனையையும் முஸ்லிம்கள் கைவிட வேண்டும். இவைதான் இன்றிருக்கின்ற பிரதான தடைகளாகும்.
வாய்ப்புகளுக்கும், தடைகளுக்கும் இடையே தீர்வு நோக்கிய பயணத்தில்…
முதலாளித்துவ உலக ஒழுங்கு உருக்குலைந்து வரும் தருணத்தில், உலக மக்கள் மாற்றத்திற்காக தவம் இருக்கின்ற சூழலில், முஸ்லிம் உம்மாஹ் விடுதலை உணர்வுடன் போராடி வருகின்ற வேளையில் நாம் எமது தூதர்(ஸல்) அவர்களை மாத்திரம் எமது அரசியல் ஆசானாக் கொள்ள வேண்டும். வெற்றி நிச்சயம் என்பது அவருக்கு(ஸல்) அல்லாஹ்(சுபு) வழங்கிய வாக்கு. அதனால் அவர் பின்னடைவுகளைப் பற்றி அலட்டிக் கொள்ளவில்லை. குரைஷிகளின் எதிர்ப்புகளும், யூதர்களின் சதிகளும், ரோமர்களினதும், பாரசீகர்களினதும் படைகளும் அவர்களை அச்சம் கொள்ளச் செய்யவில்லை. இஸ்லாத்தை இந்தப்பாரிலே நிலைநாட்டும் பணியில் அவருக்கு முன்னால் எந்தத்தடையும் தடம் தெரியாது மறைந்து போனது. அந்த உயர்ந்த ஆசானிடம் இருந்து நாம் உண்மையில் படிப்பினை பெற்றிருந்தால் இன்றைய உலக ஒழுங்கும் அதன் தலைமைகளும் எங்களை அச்சம் கொள்ளச் செய்யாது. நாம் ஜனநாயகத்தின் பின்னாலும், மதச்சார்பின்மையின் பின்னாலும் குளிர்காய எத்தனிக்க மாட்டோம். மாறாக கிலாஃபா ராஷிதாவை உலகில் நிலைநாட்டி முழு மனிதகுலத்துக்கும் அமைதியையும், சுபீட்சத்தையும் உருவாக்க முயற்சிப்போம். அதற்கு எல்லாம் வல்ல அல்லாஹ்(சுபு)வின் துணையை வேண்டி நிற்போம்.!