“வரவிருக்கும் சில நாட்களில் அமைதியாகவோ அல்லது போரிலோ இட்லிப் நெருக்கடியைத் தீர்க்க வேண்டும் என்பது தீர்க்கமானதாகத் தெரிகிறது“ – எழுத்தாளர் அப்தெல் பாரி அத்வான்.
ஒரு பெரும் புயல் உருவாகிக் கொண்டிருக்கிறது – துருக்கிய ஜனாதிபதி ரஜப் தயிப் எர்துகானின் சிரிய துருப்புக்கள் இட்லிப் மாகாணத்தின் பகுதிகளிலிருந்து விலகுவதற்கான இறுதி எச்சரிக்கை சனிக்கிழமையுடன் காலாவதியாகவிருக்கிறது. சிரியாவில் அதிக எண்ணிக்கையிலான துருக்கிய வீரர்கள் கொல்லப்படுகிறார்கள்; அங்காராவில் மூன்றாவது சுற்றிலும் ரஷ்ய-துருக்கிய பேச்சுவார்த்தை இதுவரையிலும் எந்த விதமான ஒரு உடன்பாட்டையும் எட்டவில்லை.
ரஷ்யா எர்துகானின் இறுதி எச்சரிக்கையை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. சிரிய இராணுவ நிலைகளை வலுக்கட்டாயமாக திரும்பப் பெறுவதற்கு எந்தவொரு துருக்கிய முயற்சியையும் எதிர்கொள்ள ரஷ்யா தயாராகி வருகிறது – இருதரப்பு, முத்தரப்பு (ஈரான் உட்பட) அல்லது நான்கு வழி கொண்ட (ஜெர்மனி, பிரான்ஸ் சம்பந்தப்பட்ட) உச்சிமாநாட்டை நடத்துமாறு கேட்டுக்கொண்ட எர்துகானின் வேண்டுகோளை ஜனாதிபதி விளாடிமிர் புடின் மறுத்தது இதற்கு சான்றாக உள்ளது.
எர்துகானின் நடத்தை பல பார்வையாளர்களை குழப்பமடைய வைத்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும். அவர் ஏன் ரஷ்யாவுக்கும் தனக்கும் இடையிலான உறவை முறிக்கக் கூடிய வகையில் வெளிப்படையாகவே முரண்பாடக்கூடிய பொறுப்பற்ற நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்? மேலும் கிட்டத்தட்ட யாருடைய உதவியும் இல்லாமல் தனது இராணுவம் பலவீனப்படும் வகையில் சிரிய போரில் ஏன் குதிக்க வேண்டும்? அவரை அரபு, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நட்பு நாடுகள் கைவிட்டுவிட்டனவா? என்ற பல குழப்பமான கேள்விகள் அவர்களுக்குள் எழுகின்றன.
இதற்கு முக்கிய நான்கு காரணங்கள் உள்ளன:
முதலாவது காரணம், எர்துகானின் பெருமையும், பிடிவாதக்குணமும்: அவர் தோற்கடிக்கப்பட்டதாகவோ அல்லது சமரசம் செய்ததாகவோ அல்லது தனது பரம எதிரிகளுக்கு சலுகைகளை வழங்கியதாகவோ தோற்றமளிப்பதை தாங்கிக் கொள்ள முடியாதவராக இருக்கிறார். குறிப்பாக அவர் கடந்த ஒன்பது ஆண்டுகளாக சிரிய ஜனாதிபதி பஷர் அல்-ஆசாத்தை ஆட்சியிலிருந்து கவிழ்க்க முயற்சி செய்து கொண்டிருக்கிறார்.
இரண்டாவது காரணம், தற்போதுள்ள சிரிய ஆட்சியைக் கவிழ்ப்பது எர்துகானின் முன்னுரிமை அல்ல. இந்த இலக்கை அடைவது தற்போது மிகவும் கடினமாகிவிட்டது என்பது அவருக்கு நன்றாகவே தெரியும். தற்போதுள்ள முக்கிய குறிக்கோள்களில் ஒன்று சிரிய அகதிகள் துருக்கிற்கு மேலும் வருவதைத் தடுப்பதே: ஒன்று இட்லிப்பில் “இஸ்லாமிய நிலப்பரப்பு (‘Islamic Emirate’) ஒன்றை நிறுவுவதன் மூலம் அவர்களை அங்கேயே குடியேற வைப்பது அல்லது கடந்த சில வாரங்களாக சிரிய இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட அனைத்து பகுதிகளையும் மீண்டும் கைப்பற்றி, துருக்கிய எல்லைக்கு பெருமளவில் வந்துள்ள அகதிகளை அங்கு திருப்பி அனுப்புவது.
மூன்றாவது காரணம், தற்போது எர்துகான் இட்லிப் விடயத்தில் பாரிய சங்கடத்தை எதிர்கொள்கிறார். துருக்கிய அல்லது இனரீதியான துருக்கிய போராளிகளைக் கொண்டு இவரின் அனுசரனையுடன் உருவான சுல்தான் முராத் படைப்பிரிவுகள், சுல்தான் மெஹ்மத் fபாத்தி பிரிகேட், தியாகி ஜாக்கி துர்கோமானி பட்டாலியன், சமர்கண்ட் படைப்பிரிவு மற்றும் முக்கியமாக செச்சென் அஜ்னாத் அல் கவ்காஸ் (அவற்றில் சில சுல்தான் முராத் அமைப்பில் அல்லது ஹேயாத் தஹ்ரிர் ஆஷ்-ஷாமில் உள்ள – முன்னாள் நுஸ்ரா முன்னணியுடன் இணைந்தவை) போன்ற ‘இஸ்லாமிய’ ஆயுதக் குழுக்களை எவ்வாறு எதிர்கொள்வது என்ற பிரச்சனை.
துருக்கிக்குள் இவர்களை அனுமதிக்க அவர் விரும்பவில்லை. ஏனென்றால் இட்லிப்பைக் கைவிட்டு, அசாத்தின் ஆட்சியை அழித்து சிரியாவில் ஒரு இஸ்லாமிய அரசை ஸ்தாபிப்பதன் மூலம் அதை புதிய ஒட்டோமான் பேரரசின் ஒரு பகுதியாக ஆக்கலாம் என்ற அவர்களின் லட்சியத்தை வீணடித்ததற்காக இவருக்கு எதிராக அவர்கள் திரும்பலாம்.
ஆனால் ரஷ்ய ஆதரவுடன் சிரிய இராணுவத்தால் இவர்கள் அழிக்கப்படுவதையும் அவர் விரும்பவில்லை. சிரிய ஆயுதக் குழுக்களிடமும் இதே பிரச்சினையை அவர் எதிர் கொண்டிருந்தார். இவர்களுக்கு ஆதரவளிப்பதாகவும் ஆட்சியை கவிழ்க்க உதவுவதாகவும் உறுதியளித்திருந்தார். ஆனால் இப்போது இவரை அவர்கள் கடுமையாக விமர்சிக்கின்றார்கள்.
நான்காவதும், இறுதியானதுமான காரணம் என்னவென்றால் மீண்டும் துருக்கியிலேயே எர்துகான் எதிர்ப்பை எதிர்கொள்கிறார். இராணுவத்தின் சில பிரிவுகளுக்குள் அதிருப்தி அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. சிரியாவிற்குள் இராணுவத் தலையீடானது பாரிய உயிரிழப்புக்களை ஏற்படுத்தக்கூடும் என்ற கவலையினால் எதிர்ப்புக் குரல்கள் அதிகரித்து வருகின்றன. அசாத்தை ஆட்சியில் நீடிப்பதற்கும், அங்காராவுக்கும் டமாஸ்கஸுக்குமான உறவை மீட்டெடுப்பதற்கும் அதிகலவிலான கூச்சல்கள் எழும்பிக் கொண்டிருக்கின்றன.
போரா, அமைதியா அல்லது இரண்டுமில்லையா?
அடுத்த சில நாட்களில் என்ன நடக்கும் என்பது பற்றி மட்டுமே நம்மால் ஊகிக்க முடியும். சிரிய அரசாங்கப் படைகளை இட்லிப் கிராமப்புறங்களில் அவர்கள் கைப்பற்றிய பகுதிகளிலிருந்து வெளியேற்றுவதற்கான எந்தவொரு பாரிய துருக்கிய இராணுவத் தாக்குதலும் அதிக செலவை உண்டு பண்ணும் என்பதை உறுதியாகக் கூற முடியும்.
சிரிய இராணுவம் மட்டுமல்ல. செப்டம்பர் 2018 சோச்சி (Sochi Accords) உடன்படிக்கைகளின் கீழ் இட்லிப் மாகாணத்தில் அமைக்கப்பட்ட பன்னிரண்டு துருக்கிய இராணுவ கண்காணிப்பு போஸ்டுகள் (அவற்றில் பல இப்போது சிரிய இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் உள்ளன) முற்றிலுமாக அழிக்கப்படலாம்.
ரஷ்யா, இன்னும் சிரியாவின் இட்லிப்பிற்கு மேலே உள்ள வான்வெளியை கட்டுப்படுத்துகிறது. துருக்கிய விமானப்படை அதில் இயங்குவதற்கான அனுமதியை தொடர்ந்து மறுத்து வருகிறது. அதாவது துருக்கிய இராணுவம் சிரிய இராணுவ நிலைகள் மீது தாக்குதலைத் தொடங்கினால் துருக்கிய இராணுவத்திற்கு வான்வெளிப் பாதுகாப்பு இருக்காது. பதில் தாக்குதல்களான ரஷ்ய மற்றும் சிரிய வான்வழித் தாக்குதல்களும் தரை அடிப்படையிலான ஏவுகணை மற்றும் பீரங்கித் தாக்குதல்களும் அதிக பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும்.
எர்துகான் உண்மையாகவே ஒரு இக்கட்டான சூழ் நிலையில் தான் இருக்கிறார். அவர் சிரியாவில் ஒரு முழுமையான தாக்குதலுக்கு உத்தரவிடலாம். அமெரிக்கர்கள் உட்பட அவரது அனைத்து கூட்டாளிகளாலும் கைவிடப்பட்ட நிலையில் தனியாக போராட வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம் என்பதை நான் அறிவேன் என்று – உத்தியோகபூர்வமான அஜர்பைஜைன் விஜயத்திலிருந்து நாடு திரும்பும் போது தன்னுடன் விமானத்தில் வந்த பத்திரிகையாளர்களிடம் கடுமையாகவே இதை குறிப்பிட்டார் எர்துகான்.
உண்மையில் அவருக்கு சரணடைய எண்ணம் இல்லை என்பது தெளிவாகத் தெரிகின்ற அதே நேரம் ரஷ்யர்களும் அவருக்கு உயிர்நாடியை வழங்க எண்ணவில்லை. எனவே தாக்குதலுடன் முன்னேற நினைத்தால் ரஸ்யர்களை எதிர்த்தே போராட நேரிடும்.
இந்த நெருக்கடிகள் எவ்வாறு விரிவடையும் என்பதில் பல ஊகங்கள் உள்ளன. இராணுவ மோதலைத் தவிர்ப்பதற்கு கடைசி நிமிட ஒப்பந்தத்தை சிலர் எதிர்பார்க்கிறார்கள். மற்றவர்கள் இட்லிப் கிராமப்புற எல்லைகளையும் தாண்டிய ஒரு துருக்கிய தாக்குதலை எதிர்பார்க்கிறார்கள்.
தனிப்பட்ட முறையில், சிரியாவைப் பற்றி உன்னிப்பாகக் கண்காணிக்கும் ஒரு மேற்கத்திய நிபுணர் செய்த முன்கணிப்பை இங்கே பகிர்ந்து இந்தக் கட்டுரையை நிறைவு செய்யலாம்: இந்த முரண்பாட்டின் முடிவில்
“அசாத் அதிக பிரதேசங்களுடனும், எர்துகான் அதிக அகதிகளுடனும் இறுதியில் வெளிப்படுவார்கள்.”