பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது இரண்டு நாள் பயணத்தை ஆரம்பித்த நாளில் இந்திய தலைநகர் புது டெல்லியில் வெடித்த வன்முறையில் குறைந்தது மூன்று பொதுமக்களும் மற்றும் ஒரு போலீஸ் அதிகாரியும் கொல்லப்பட்டுள்ளனர்.
பாரதீய ஜனதா கட்சியின் (பிஜேபி) உள்ளூர் தலைவரான கபில் மிஸ்ராவின் ஆத்திரமூட்டல் பேச்சுக்கு பின்னர் டெல்லியின் வடகிழக்கு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்தச் சட்டத்தின் (சிஏஏ) ஆதரவாளர்களும் எதிர்ப்பாளர்களும் மோதியதால் நகரம் ஒரு புதிய வன்முறையைக் கண்டது. வன்முறை தொடர்ந்து, 37 பொலிஸ் அதிகாரிகள் உட்பட கிட்டத்தட்ட 50 பேர் காயமடைந்தனர்.
போராட்டக்காரர்களை கலைக்க பொலிசார் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசியதைத் தொடர்ந்து தலைநகரின் வடகிழக்கு பகுதிகளில் உள்ள ஜாஃப்ராபாத் மற்றும் மாஜ்பூரில் பல வாகனங்களும் ஒரு தீயணைப்பு வண்டியும் எரிக்கப்பட்டன.
சிஏஏ சட்ட எதிர்ப்;பு ஆர்ப்பாட்டக்காரர்களை கலைப்பதற்கு பொலிசாருக்கு இரண்டு நாள் அவகாசத்தை வழங்கிய தனது மிரட்டல் பேச்சை ட்விட்டரில் மிஸ்ரா வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், அமெரிக்க ஜனாதிபதி நாட்டில் இருக்கும்போது சிஏஏ எதிர்ப்;பு ஆர்ப்பாட்டக்காரர்கள் அமைதியாக இருப்பார்கள் என்று எதிர்பார்ப்பதாக கூறினார்.
“ஜாஃப்ராபாத் மற்றும் சந்த் பாக் சாலைகளிலிருந்து எதிர்ப்பாளர்களை அகற்றுவதற்கு டெல்லி போலீசாருக்கு இன்னும் மூன்று நாட்கள் அவகாசத்தை இறுதி எச்சரிக்கையாக அளிக்கிறேன். அதற்குப் பிறகு உங்களை எங்களுக்கு நியாயப்படுத்த முயற்சிக்காதீர்கள்” என்று மிஸ்ரா இந்தியில் சொல்வதை வீடியோவில் கேட்கலாம். சாலைகளிலிந்து அவர்ககள் அகற்றப்படாவிட்டால் “நாங்கள் தெருக்களுக்குள் இறங்க வேண்டியிருக்கும்” என்று அவர் மேலும் கூறினார்.
“சனிக்கிழமை இரவு முதல் ஜாஃப்ராபாத் மெட்ரோ நிலையம் அருகே நூற்றுக்கணக்கான பெண்கள் அமைதியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் ஞாயிற்றுக்கிழமை, மிஸ்ரா பேரணிக்கு தலைமை தாங்கிய பின்னர், அவரது ஆதரவாளர்கள் எங்களை நோக்கி கற்களால் எறிந்து மோதல்களுக்கு வழி வகுத்தனர்” என்று ஜாஃப்ராபாத் குடியிருப்பாளர் ஜோஹ்ரான் அல் ஜசீராவிடம் தெரிவித்தார்.
இந்த ஆர்ப்பாட்டங்களுடன் எந்த தொடர்பும் இல்லாத ஒரு சமயக் கூட்டத்திலிருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது அவரது மாமாவும் இந்த வன்முறைக் கும்பலால் தாக்கப்பட்டார் என்றும் அவர் கூறினார்.
“இன்று நாம் பார்த்தது மிஸ்ராவின் கருத்துகளின் விளைவாகும்”
“பாஜக தலைவர்கள் இந்த சிஏஏ எதிர்ப்பு போராட்டங்களுக்கு இந்து-முஸ்லீம் மதவாத நிறத்தை பூச முயற்சிக்கின்றனர். அவர்கள் மதத்தின் பெயரில் மக்களைத் தூண்டுகிறார்கள், இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது.” என்று ஜோஹ்ரான் மேலும் கூறினார்.
வன்முறை மற்றும் தீ விபத்து சம்பவங்கள் சில பதிவாகியுள்ளதாகவும், டெல்லி மக்களிடமும் குறிப்பாக வடகிழக்கு மாவட்டத்திலும் அமைதியையும் நல்லிணக்கத்தையும் பேணுமாறு வேண்டிக்கொண்டுள்ளதாகவும் டெல்லி போலீசார் தெரிவித்தனர்.
இதற்கிடையே இந்தியாவின் உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஜாஃப்ராபாத்தில் வன்முறை தொடர்பாக டெல்லியின் உயர் அதிகாரிகளின் அவசர கூட்டத்திற்கு அழைத்திருக்கிறார்.
– அல்-ஜஸீரா