உடனடியாக புர்கா போன்ற ஆடையை தடை செய்யவும், இன, மத அடிப்படையில் அரசியல் கட்சிகள் பதிவு செய்வதை தடை செய்யவும் கோரி தேசிய பாதுகாப்பு தொடர்பான மேற்பார்வைக் குழு பாராளுமன்றத்திற்கு பரிந்துரைத்துள்ளது.
ஈஸ்டர் தாக்குதலைத் தொடர்ந்து சமூகத்தில் சர்ச்சைக்குரிய 14 பிரச்சினைகளை தீர்க்கும் அடிப்படைபையில் கடந்த புதன்கிழமை (19) நாடாளுமன்றத்தில் வழங்கப்பட்ட சிறப்பு அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மலித் ஜெயதிலகா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். ஏற்கனவே பல நாடுகள் புர்காவை தடை செய்துள்ளதாகவும், 2019 செப்டம்பர் 5 சிரியாவிலுள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் தலைமையகமும் கூட புர்காவை தடை செய்துள்ளதாகவும் இந்த அறிக்கை கூறுகிறது.
பொது இடங்களில் ஒரு நபரின் அடையாளத்தை நிலை நிறுத்துவதற்காக முகத்திறையை அகற்றிப் பார்ப்பதற்கு போலிஸ் அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்றும் அத்தகைய வேண்டுகோளுக்கு இணங்கவில்லை என்றால், வாரண்ட் இல்லாமல் அந்த நபரை கைது செய்ய போலீஸாருக்கு அதிகாரம் வழங்க வேண்டும் என்றும் அறிக்கை பரிந்துரைத்துள்ளது.
மேலும் தேர்தல் ஆணையத்திற்கு, இன, மத அடிப்படையில் அரசியல் கட்சிகள் பதிவு செய்வதை தடுப்பதற்கு சட்டம் இயற்றுமாறு இந்த அறிக்கை மேலும் பரிந்துரை செய்துள்ளது. இதன் அடிப்படையில் கட்சியின் பெயரில் அல்லது யாப்பில் இன, மத முறண்பாடுகள் கொண்ட அரசியல் கட்சிகளை பதிவு செய்வது தடை செய்யப்பட்டும். அத்தகைய கட்சிகள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் (2-3 ஆண்டுகள்) அரசியல் அல்லது மத சார்பற்ற அரசியல் கட்சியாக மாற்ற வேண்டும் என்றும் முன்மொழியப்பட்டுள்ளது.
மதரஸா பள்ளிகளில் கற்கும் அனைத்து மாணவர்களும் மூன்று ஆண்டுகளுக்குள் கல்வி அமைச்சின் கீழ் உள்ள சாதாரண பள்ளி முறைக்குள் உள்வாங்கப்பட வேண்டும். இதன் படி, மதரஸா பள்ளிகளை கல்வி அமைச்சின் கீழ் கொண்டுவருவதற்கான முந்தைய திட்டத்தை இக் குழு நிராகரித்திருக்கிறது. மாணவர்கள் க.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர் தரம் பயின்ற பிற்பாடே மெளலவிக்கான கற்கை நெறியை கற்பிப்பாதற்காக இந்த மதரஸா பள்ளிகள் இயங்க வேண்டும். முஸ்லீம் மத, கலாச்சார விவகார திணைக்களத்தின் கீழ் உள்ள மதரஸா பள்ளிகளை ஒழுங்குபடுத்துவதற்காக, ஒரு சிறப்புக் குழுவை அமைக்கவும் இந்த அறிக்கை முன்மொழிகிறது.
14 துறைகளை உள்ளடக்கியுள்ள தேசிய பாதுகாப்பு கொள்கை, புதிய முன்னேற்றங்களுக்கு ஏற்ப தேசிய, சர்வதேச குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தை திருத்துதல், முஸ்லீம் திருமணம் மற்றும் விவாகரத்து சட்டத்தை திருத்துவதற்கான சட்டம், வக்ஃப் சட்டத்தை திருத்துவதற்கான தேவை, ஹலால் சான்றிதழ் என்பவற்றுடன் அனைத்து மதங்களுக்குமான மத விவகார அமைச்சு ஒன்றை நிறுவுதல் போன்றனவற்றை இந்த அறிக்கையில் முன்மொழிந்துள்ளது.