செய்தி:
சில வாரங்களுக்கு முன்பு வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் 4 மில்லியனுக்கும் அதிகமான மக்களின் அரசியல் விருப்பங்களை ஆய்வு செய்தனர். இதற்காக 1995 மற்றும் 2020 க்கு இடையில் 154 நாடுகளை உள்ளடக்கிய கருத்துக் கணிப்பு தரவினை அவர்கள் பயன்படுத்தினார்கள். அதன்படி 2019 ஆம் ஆண்டில் ஜனநாயகம் குறித்து தாம் ஏமாற்றமடைந்ததாகக் கூறும் மக்களின் சதவீதம் 57.5% ஐ தாண்டியிருக்கிறது. 2019 ஆம் ஆண்டில் பெறப்பட்ட இந்த முடிவு ‘ஜனநாயகத்தின் மீதான அதிருப்தியின்’ மிக உயர்ந்த விழுக்காடாகும் என அந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கருத்து:
அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற பல மேற்கத்திய ஜனநாயக நாடுகள் இப்போது ஜனநாயகம் மீதான அதிருப்தியின் உச்சத்தில் உள்ளன. இந்த அறிக்கையின்படி, குறிப்பாக அமெரிக்கா ஜனநாயகத்தின் மீதான திருப்தியில் ‘வியத்தகு மற்றும் எதிர்பாராத’ சரிவைக் கண்டிருக்கிறது. இந்த அறிக்கை அமெரிக்கர்களின் ஜனநாயகம் மீதான நம்பிக்கையீனத்தை பின்வருமாறு கூறுகிறது “அமெரிக்கர்களைப் பொருத்தவரை இது விதிவிலக்குவாதத்தின் (Exceptionalism) முடிவை பதிவு செய்கிறது. அமெரிக்கா தன்னைப்பற்றி கருதி வந்த பார்வையில் இதுவொரு தீர்க்கமான திருப்பமாகும். அதனால் அது உலகில் வகிக்கும் இடம் குறித்த பார்வையிலும் இதுவொரு தீர்க்கமான திருப்பமாகும்.”
ஜனநாயகத்தின் மீதான இந்த அதிருப்த்தி ஏற்படுவதற்கான காரணங்கள் எவை?
முதலாவது, மேற்குலக மக்களுக்கு ஜனநாயகம் என்பது ஏதோ நேரடியான மக்கள் பிரதிநிதித்துவம் என்பதுபோல் காட்டப்படுகின்றது. அல்லது அது எதென்ஸிய பாரம்பரியத்தைத் தழுவி மக்கள் தமது இறைமையை இடைத்தரகர்கள் யாருமின்றி பயன்படுத்தி தம்மைத்தாமே ஆண்டு கொள்ளும் வாய்ப்பை வழங்குவதாக அவர்களுக்கு சொல்லப்படுகிறது. எனினும் நடைமுறையில் பார்த்தால் நேரடி ஜனநாயம் (Direct Democracy) என்ற ஒன்று அங்கே கிடையவே கிடையாது. ஆனால் உண்மையில் என்ன நடக்கிறதென்றால் மக்கள் தங்கள் சார்பாக ஆட்சி செய்வார்கள் என்று கூறப்படும் பிரதிநிதிகளை தேர்வு செய்ய நிர்பந்திக்கப்படுகிறார்கள். ஆனால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் எப்போதுமே மிகவும் சக்திவாய்ந்த தன்னலக்குழுக்களின் (Powerful Interest Groups) விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக தம்மைத் தேர்ந்தெடுத்த மக்களின் நலனை தாரைவார்த்து விடுவதுதான் வழக்கமாகும். பெரும் செல்வந்தர்களின் நலன்களை பாதுகாப்பதை தமது தார்மீகக் கடமையாகக் கருதும் இவர்கள் அரச அதிகாரிகளுக்கும், காப்பரேட் அதிகாரிகளுக்கும் இடையே சுழலும் கதவாக செயற்பட்டு நாட்டின் சட்டவாக்க பொறிமுறையை மேட்டுக்குடியினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விடுகின்றனர். இந்த வழியில், இயற்றப்பட்ட பெரும்பான்மையான சட்டங்கள் மேட்டுக்குடியினரின் சுதந்திரங்களையும், நன்மைகளையும் பிரத்தியேகமாகப் பாதுகாக்கின்றன. மேலும் இது ஜனநாயக செயல்பாட்டில் வாக்காளர்களின் நிலையை மேலும் ஓரங்கட்டுகிறது.
இரண்டாவதாக, கொண்டு வர எதிர்பார்க்கும் புதிய சட்டங்கள் தொடர்பாக நிறைவேற்று அதிகாரிக்கும் (ஜனாதிபதி, பிரதமர் போன்ற), சட்ட மன்றத்துக்கும் இடையில் ஏற்படும் சூதாட்டம் முன்மொழியப்பட்ட சட்டத்தின் விளைவை அதிக சமரசங்களின் மூலம் இழந்து விடச் செய்கின்றது. அதற்கும் மேலாக நிர்வாகமானது பல கட்சிகளின் கூட்டணியைக் கொண்டிருக்கும்போது சமரசங்கள் அதிகமாகி, புதிய சட்டத்தை கொண்டு வந்த நோக்கம் திசைமாறி மக்களின் சிக்கலைத் தீர்ப்பதில் அது பயனற்றதாக மாறி விடுகின்றது. இது ஜனநாயகத்தால் அவர்களின் பிரச்சினைகளை தீர்க்க முடியாது, ஜனநாயக செயல்பாட்டில் பங்கேற்பதில் எந்த அர்த்தமும் இல்லை என்ற நிலைப்பாட்டுக்கு மக்கள் வருவதற்கு வழியமைத்து விடுகின்றது.
மூன்றாவதாக, நிர்வாகத்திற்கும் சட்டமன்றத்திற்கும் இடையிலான முரண்பாடுகளும், இழுபறிகளும் சட்டமன்ற செயல்முறையை முடக்கி விடுகின்றது. அதிகாரத்தில் ஒட்டிக்கொள்ளும் ஆசை சரியானதை செய்வதில் உள்ள ஆர்வத்தை மங்கச் செய்து விடுகின்றது. இந்த நிலை அரசியல் வர்க்கத்தினர் தமது பதவிகளையும், சுகபோகங்களையும் பாதுகாத்துக் கொள்வதற்கு எதனையும் தாரை வார்ப்பார்கள் என்ற உறுதியான நம்பிக்கையை மக்களிடத்தில் ஏற்படுத்தி விடுகின்றது. டிரம்பின் மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணை இந்த விஷயத்தை தெளிவாக அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
எல்லாவற்றிற்கும் மேலாக, ஜனநாயகத்தின் தோல்வியின் ஆணிவேர், மனிதர்கள் ஒரு சிலரின் நலனுக்காக அங்கே சட்டங்கள் இயற்றப்படுகின்றன என்பதில்தான் பொதிந்துள்ளது. மனிதர்கள் பலவீனங்களுக்கும், பக்கச்சார்புக்கும், வரையறுக்கப்பட்ட அறிவுக்கும் உட்பட்டவர்கள் என்பதால் இயற்றப்பட்ட சட்டங்கள் பெரும்பான்மையான மக்களுக்கு பாரபட்சமானதாகவும், அவர்களை அந்நியப்படுத்தும் வகையிலுமே அமைகின்றன.
ஜனநாயகத்திற்கு மாற்றமாக இஸ்லாத்தைப் பொருத்த வரையில் சர்வ வல்லமையுள்ள அல்லாஹ்(சுபு) மாத்திரம்தான் சட்டமியற்றுபவன், மனிதர்களுக்கு சட்டமியற்றும் அதிகாரத்தை அது முற்றாக மறுத்து விடுகின்றது. ஆனால் அல்லாஹ்(சுபு) வின் சட்டத்தைக் கொண்டு ஆட்சி செய்யும் ஓர் கலீஃபாவை தேர்ந்தெடுக்கும் அதிகாரத்தை இஸ்லாம் மக்களிடம் வழங்குகிறது. அல்லாஹ்(சுபு)வின் தெய்வீக ஆதாரங்களில் இருந்து சட்டத்தை பிரித்தெடுத்து அதை செயல்படுத்தும் பொறுப்பு கிலாஃபா மீது மட்டுமே உள்ளது. இஸ்லாமிய அரசமைப்பில் மக்கள் அவையை சமாதானப்படுத்த சூதாட்டமோ, சமரசமோ இடம்பெறுவதில்லை. எனவே இந்த செயல்முறை மக்களின் சிக்கல்களைத் நேர்பட தீர்ப்பது மட்டுமல்லாமல், மேற்கத்திய ஜனநாயக நாடுகளைப் போலன்றி, நாட்டின் நிகழ்வுகளுக்கு பதிலளிக்க கிலாஃபாவுக்கு ஸ்திரத்தன்மையையும் சுறுசுறுப்பையும் வழங்குகிறது.
أَفَمَن يَمْشِي مُكِبًّا عَلَىٰ وَجْهِهِ أَهْدَىٰ أَمَّن يَمْشِي سَوِيًّا عَلَىٰ صِرَاطٍ مُّسْتَقِيمٍ
“முகம் குப்புற விழுந்து செல்பவன் மிக நேர்வழி அடைந்தவனா? அல்லது நேரான பாதையில் செவ்வையாக நடப்பவ(ன் மிக நேர்வழி அடைந்தவ)னா.” (அல் முல்க்: 22)