அமெரிக்க கன்சர்வேடிவ் சிந்தனைக் குழுவான தி ஹெரிடேஜ் ஃபவுண்டேஷனில் (Heritage Foundation) சமீபத்தில் நடந்த குழு விவாதத்தில் ஒரு கேள்விக்கு பதிலளித்த தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான முதன்மை துணை உதவி அமெரிக்க செயலாளர் ஆலிஸ் வெல்ஸ் பின்வருமாறு கூறினார்.
“சீனாவின் பட்டுப்பாதை (Belt and Road Initiative) திட்டமாக இருக்கலாம், சீன-பாகிஸ்தான் பொருளாதார கொரிடோர் (China–Pakistan Economic Corridor) திட்டமாக இருக்கலாம் எதுவாக இருந்தாலும் எங்களுடைய செய்தி ஒன்றே ஒன்றுதான். இதிலே தஜிகிஸ்தானுடனும், பாகிஸ்தானுடனும், இலங்கையுடனும் எமது நிலைப்பாடு ஒன்றுதான்.
உள்கட்டமைப்புக்கான முதலீடு முக்கியமானது. நாடுகளுக்கு இது தேவை என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம்.
இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் 27 டிரில்லியன் டாலர் உள்கட்டமைப்பு முதலீடு (Infrastructure Development) தேவை என்று மதிப்பிடுவதால் எந்த ஒரு நாடும் தனித்து நின்று அதனை முகம்கொடுக்க முடியாது. எனவே அமெரிக்க நிறுவனங்கள் பொருளாதார வளர்ச்சி மற்றும் நவீனமயமாக்கலின் மிகப்பெரிய இயக்கிகளாக இருப்பதால், மேற்கத்திய மூலதன மற்றும் தனியார் துறை முதலீட்டை (Western capital and private sector investment) ஈர்க்கும் மற்றும் திறந்துதரும் ஒழுங்குமுறையுள்ள சூழலை (Regulatory environment) இந்த நாடுகள் உருவாக்கினால், அவை அதனால் அதிகளவில் பலனைப் பெற்றுக் கொள்ளும் என நாங்கள் கருதுகின்றோம்.
இப்போதுதான் நான் கஜகஸ்தானில் இருந்து வருகிறேன். அந்த நாடு செவ்ரான்(Chevron), ஷெல்(Shell), எக்ஸான்மொபில் (ExxonMobil) ஆகியவற்றுடன் பங்குதாரர் ஆகியதால் பெரிய அளவில் பயன் அடைந்த நாட்டுக்கு உதாரணமாகும். அது கஜகஸ்தானி நாட்டவர்களுக்கு 90 சதவீதத்திற்கும் அதிகமான வேலைவாய்ப்பை வழங்கியுள்ளது. அது பொருளாதாரத்திற்கு எரி சக்தியைக் கொடுத்து நவீனமயமாக்கலின் உந்தும் இயந்திரமாக மாறியிருக்கிறது. இவ்வாறுதான் எமது பங்குதாரர்கள் பயன் அடைய வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.
எனவே கடன் நிலைத்தன்மை (debt sustainability) குறித்த சிக்கல்களை பற்றி விவாதிக்கும்போது இந்த செய்தி ஒரு தண்டனைச் செய்தி அல்ல. மிகவும் நிலையான உயர் தரமான உள்கட்டமைப்பு முதலீடுகளை (most sustainable high standard infrastructure investment) பெற்றுக் கொடுத்து நாடுகளுக்கும் பங்குதாரர்களுக்கும் ஈவுத்தொகையை (dividends) வழங்கும் நிலையை ஏற்படுத்துவதற்கான உதவிகளைச் செய்யவே நாங்கள் விரும்புகிறோம்.”