சி.ஏ.சந்திரபிரேமா எண்பதுகளின் பிற்பகுதியில் மனித உரிமை வழக்கறிஞர்கள், ஊடகவியலாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், பாடசாலை மாணவர்கள் என நூற்றுக்கணக்கான மக்களின் படுகொலைகளுக்குக் காரணமான ஒரு கொலைக்கார குழுவில் உறுப்பினராக இருந்தவர். இவருக்கு இலங்கைக்கான மனித உரிமைகள் பேரவைக்கான தூதர் என்ற அங்கீகாரம் வழங்கப்படுவதை சுவிட்சர்லாந்து மறுக்க வேண்டும்.
அக்கால கட்டத்தில் ‘தாதா பிரியந்தா’ என்று அழைக்கப்பட்ட சி.எ. சந்திரபிரமா, மக்களின் புரட்சிகரமான செம்படையின் (People’s Revolutionary Red Army or PRRA) முக்கிய உறுப்பினராக திகழ்ந்தார். சுமார் 40இ000 பேர் கொல்லப்பட்ட சிங்கள இளைஞர் எழுச்சியின் போது, சந்தேக நபர்களை குறிவைக்க இராணுவத்துடன் இணைந்து பணியாற்றிய பல நிழல் ஆயுதக் குழுக்களில் இதுவும் ஒன்று. பத்திரிகையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், அம்னஸ்டி இன்டர்நேஷனல் என்பன PRRA மீது கொலை, ஆட்கடத்தல் போன்ற குற்றச்சாட்டுகளை உள்ளடக்கிய அறிக்கைகளை வெளியிட்டுக் கொண்டிருந்ததால், தொடர்ந்து PRRA இவர்களுக்கு மரண அச்சுறுத்தல்களை விடுத்தது.
1989 இல் சரிதா லங்காபுரா, காஞ்சனா அபயபாலா ஆகிய இரு மனித உரிமை வழக்கறிஞர்களின் படுகொலை தொடர்பாக 2000 ஆம் ஆண்டில் சந்திரபிரேமா இலங்கையில் கைது செய்யப்பட்டார். தடுப்புக்காவலில் இருந்த ஒரு மூத்த முன்னாள் போலீஸ் அதிகாரி சந்திரபிரேமா ஒரு படுகொலையாளி என்று எழுத்து மூலமாக வழங்கிய சத்திய வாக்கு மூலம் இன்றும் பகிரங்கமாக இணையத்தில் கிடைக்கக்கூடியதாக உள்ளது. எவ்வாறாயினும், சட்டப்பூர்வ ஆதாரங்கள் எதுவும் இல்லை என்று சட்டமா அதிபர் முடிவு செய்ததையடுத்து சந்திரபிரேமா விடுவிக்கப்பட்டார். அப்போதிருந்து இவர் இலங்கையின் அனைத்து முக்கிய அரசியற் கட்சிகளாளும் பாதுகாக்கப்பட்டு வருகிறார்.
மனித உரிமைகள் பேரவையில் கலந்து கொள்ளும் ஆர்வலர்களை அச்சுறுத்துவது இலங்கையின் கடந்த கால பதிவாக உள்ளது. துணிச்சல் மிக்க மனித உரிமை வழக்கறிஞர்களை கொலை செய்ததில் பங்கெடுத்ததாக குற்றம் சாட்டப்பட்ட, ஒருபோதும் முறையாக விசாரிக்கப்படாத ஒரு மனிதர், மனித உரிமைகள் பேரவையில் அமர்வது என்பது வேடிக்கையாக உள்ளது என்று பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கம் கொண்ட அமைப்பான ஐ.டி.ஜே.பியின் (ITJP) நிர்வாக இயக்குநர் யாஸ்மின் சூகா தெரிவித்தார். இது போன்ற ஒரு மனிதர் ஜெனீவாவில் இராஜதந்திர பணிக்கு தலைமை தாங்குவது பாதுகாப்பானது அல்ல.
சமீபத்திய ஆண்டுகளில் சந்திரபிரேமா ஒரு செய்தித்தாள் கட்டுரையாளரானார். இவர் 2012 ஆம் ஆண்டில் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷாவின் ஒரு சுயசரிதையை எழுதினார். இந்த நூல் ஐக்கிய நாடுகளின் விசாரணைகளில் உன்னிப்பாக ஆவணப்படுத்தப்பட்ட 2009 ஆம் ஆண்டில் இலங்கை இராணுவம் தமிழர்களுக்கு எதிராக செய்த போர்க்குற்றங்கள் தொடர்பான அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுக்கிறது.
” இலங்கையின் புகழ்பெற்ற ஜனநாயகத்தின் ஆபாசமான அடிப்பகுதிதான் தண்டிக்கப்படாத அரச குற்றம் ஆகும்.” என்று இலங்கையின் ஜனநாயகத்திற்கான பத்திரிகையாளர்களின் ஒருங்கிணைப்பாளர் பஷனா அபேவர்தன கூறினார். “ஒரு கொலைக் கும்பலின் முன்னாள் உறுப்பினர் ஐக்கிய நாடுகள் சபைக்கு நாட்டின் பிரதிநிதியாக முன்மொழியப்படக்கூடிய அளவிற்கு உண்மை புதைக்கப்பட்டுள்ளது; இதற்கு எதிராக இதுவரை யாரும் எந்த விதமான எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை என்பதே அவலநிலை.” (ITJP)
நல்ல கட்டுரை