அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நூற்றாண்டுக்கான பேரம் (Deal of the Century) முஸ்லிம்கள் பலஸ்தீனுக்கான உரிமைகோரலை நிறுத்திவிட்டு¸ இன்றிருக்கும் நிலையை அப்படியே ஏற்றுக் கொள்ளும்படி வேண்டி நிற்கிறது. இதற்கு முன்னர் இடம்பெற்ற பேச்சுகள்¸ மாநாடுகள்¸ ரோட் பெப்புகள் (Road Maps) அனைத்திலும் செய்த அதே அயோக்கியத்தனத்தை , இந்த பேரம் வில்லன் பாணியில் நேரடியாக முன்வைக்கிறது. ட்ரம்ப்புக்கு ஒரு நம்பிக்கையில்லா பிரேரணை(Impeachment)¸ நெதன்யாகுவுக்கு ஊழல் மோசடி குற்றச்சாட்டு (Fraud and Corruption)¸ இருவருக்கும் வர இருக்கின்ற தேர்தல்கள் என பல நெருக்கடிகள் இருக்கின்ற நிலையில் அவர்களின் இந்த நடவடிக்கை வியப்புக்குரியதல்ல.
டொனால்ட் ட்ரம்ப்¸ நீண்ட காலமாக பந்தா காட்டி வந்த தனது பலஸ்தீனத்துக்கான Deal of the Century இன் விபரங்களை கடந்த ஜனவரி 29ஆம் திகதி அறிவித்தார். இதில் வேடிக்கை என்னவென்றால் அதனை தன்னிச்சையாக ட்ரம்ப் பிரேரிக்க¸ நெதன்யாகு ஆமோதிக்க¸ பலஸ்தீனத்துக்கான தீர்வில் பலஸ்தீனத் தரப்பில் யாரும் இருக்கவில்லை. ட்ரம்பின் கற்பனையில் உதித்த எதிர்கால பலஸ்தீன அரசு எவ்வாறு இருக்கும் என்பதை சியோனிச அலகுக்கு (Zionists Entity ie Israel) காட்டும் கருத்தியல் வரைபடங்களை உள்ளடக்கிய ‘சுபீட்சத்திற்கான சமாதானம் – Peace to Prosperity’ என்ற தனது மூலோபாய ஆவணத்தை ஐக்கிய அமெரிக்கா வெளியிட்டது. பலஸ்தீனர்களின் எந்தவொரு பங்களிப்பும் இல்லாமல் தயாரிக்கப்பட்டுள்ள இந்த ஆவணம் தொடர்பாகவும்¸ இந்த இரு தலைவர்களினதும் பேரம் (Deal) தொடர்பாகவும் பலஸ்தீனக் குழுக்கள்¸ தலைமைகள்¸ சியோனிச அலகின் பாதுகாப்பு ஸ்தாபனம் (Zionist entity’s security establishment) போன்றன தமது அதிருப்த்தியை வெளியிட்டுள்ளன.
நூற்றாண்டுக்கான பேரம் (Deal of the Century) என்றால் என்ன?
இந்தப் பேரத்தில் முன்மொழியப்பட்டுள்ள தீர்வு, இதுவரை காலமும் இருந்த வெறும் சியோனிச நிலைப்பாட்டின் நெறிப்படுத்தப்பட்ட கோப்பு. அதைத்தவிர இந்த பேரம் நேர்மையான பேச்சுக்களினூடாக சமாதானத்தை எட்டுவதற்காக முன்வைக்கப்பட்டுள்ள திட்டம் அல்ல. பலஸ்தீன் – சியோனிச முரண்பாட்டின் முக்கிய விவாதப்பொருள்களான பாதுகாப்பு¸ ஆட்புல எல்லை¸ அகதிகள் பிரச்சனை¸ ஜெருசலெம் தொடர்பான நிலைப்பாடுகளில் பலஸ்தீனர்கள் தமது நீண்ட கால கோரிக்கைகளை கைவிட வேண்டும்¸ தமது தோல்வியை ஏற்றுக்கொள்ள வேண்டும்; இன்றைய யதார்த்தத்தைப் புரிந்து கொண்டு இந்த பேரத்துக்கு இணங்க வேண்டும் என்று ட்ரம்பின் நிர்வாகம் எதிர்பார்க்கிறது.
இந்தப் பேரம் பாலஸ்தீன முஸ்லிம்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட மேற்குக் கரை மற்றும் ஜோர்டான் பள்ளத்தாக்கின் பெரும் பகுதிகளை சியோனிச அலகுக்கு முற்றாக தாரைவார்க்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறது. மேலும் பாலஸ்தீன அகதிகள் தங்கள் வீடுகளுக்கு ஒரு குறியீடாகதிரும்புவதை (Symbolic Return) கூட கைவிட வேண்டும் என்று ஆணவமாக சொல்கிறது. அதேவேளை இந்த பேரம் ஜெருசலேமின் தொலைதூர புறநகரில் (Remote Outskirts) அமைக்கப்படும் ஒரு தூதரகத்தை மட்டுமே பலஸ்தீனர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்¸ ஆனால் ஜெருசலெத்தை சியோனிச அலகு ஒரு ‘பிரிக்கப்படாத – undivided’ நகரமாக தொடர்ந்து கட்டுப்படுத்த இருப்பதால் சியோனிஸ்டுகளுக்கு எப்போதாவது பாலஸ்தீனியர்களால் அச்சுறுத்தல் ஏற்படலாம் எனக் கருதப்படுமானால்¸ அந்த புறநகர் பகுதியையும் அது தன்னகப்படுத்திக் கொள்ளும் உரிமையைப் பெறும் என்று கூறுகிறது.
நூற்றாண்டுக்கான பேரம் (Deal of the Century) வழங்கும் புதிய பலஸ்தீன அரசு
நூற்றாண்டுக்கான பேரம் அரபுகளுக்கும்¸ யூதர்களுக்கும் இடையிலான முரண்பாட்டுக்கு நிரந்தரத்தீர்வை காண்பதை புரக்கணித்துவிட்டு, எதிர்ப்புப் போராட்டங்களை முடிவுக்கு கொண்டு வரலாம் என கருதுகிறது. மேலும் அது முற்றிலும் சட்ட விரோதமான சியோனிச அலகை மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிரந்தரமாக நிறுவவும், அதனை அங்கே இயல்பாக்கம் (Normalize) செய்யவும் பொருளாதார பேரங்களையும்¸ பண முதலீடுகளையும் இலஞ்சமாக தர முயற்சிக்கிறது. எனினும் பலஸ்தீனர்களின் நியாயமாக அரசியல் போராட்டத்தை¸ காசையும்¸ பொருளாதார அபிவிருத்தியையும் ஆசை காட்டி விலைக்கு வாங்க நினைக்கும் இந்த முயற்சியை பலஸ்தீனர்கள் முற்றிலுமான நிராகரித்து விடுவார்கள் என்பதே இதுவரை காலமுள்ள பலஸ்தீன விடுதலை வரலாற்றை அறிந்தோர் நன்கு உணர்வார்கள்.
அமெரிக்காவில் அமைந்துள்ள Think Tank கான வெளிநாட்டு உறவுகளுக்கான சபை (Council of Foreign Relations) குறிப்பிடும்போது
“இந்தத் திட்டத்தை பலஸ்தீனத் தலைவர் மஹ்மூத் அப்பாஸ் உடனடியாக நிராகரித்தமை வியப்புக்குரியதல்ல. ஜெருசலெத்தை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்த ட்ரம்பின் தீர்மானம்¸ கோலன் ஹைட்ஸை இஸ்ரேலுடன் இணைத்தமை¸ ஜெருசலெத்தில் இருந்த பலஸ்தீனுக்கான அமெரிக்க இராஜதந்திர மிஷனை மூடியமை¸ அமெரிக்காவின் பலஸ்தீனுக்கான மனிதநேய உதவிகளை சடுதியாகக் குறைத்தமை போன்றன போன்ற செயல்களின் பின்னணியில்¸ இந்த திட்டத்திற்கு பலஸ்தீனர்கள் சார்பாக இருப்பார்கள் என்று நினைப்பது கடினமான விடயமாகும். அதுவும் பலஸ்தீனர்களை முற்றாக புரக்கணித்து விட்டு¸ இஸ்ரேலிய நிலைப்பாட்டுக்கு பக்கச்சார்பாக¸ ட்ரம்பினால்¸ நெதன்யாகுவை பக்கத்தில் வைத்துக்கொண்டு அமெரிக்காவிலிருந்து வழங்கப்பட்ட திட்டத்தை அவர்கள் ஆதரிப்பார்கள் நினைப்பது கடினமாகும்.” குறிப்பிட்டது.
இதில் இன்னுமொரு வேடிக்கையான சம்பவத்தையும் நாம் கூறித்தான் ஆக வேண்டும். இந்த திட்டம் ஒரு பக்கச் சார்பானது என்ற பல கண்டனங்கள் அதிகளவாக வெளிவந்து கொண்டிருக்கின்ற நிலையில் சவூதி அரேபியா¸ ஐக்கிய அரபு இராஜ்ஜியம்¸ எகிப்து¸ பஹ்ரைன்¸ கடார் மற்றும் மொரோக்கோ போன்ற முஸ்லிம் நாடுகள் இந்த திட்டத்தை அறிவிப்பதற்கு முன்னரே தமது முழுமையான ஆதரவை தெரிவித்து சாஸ்டாங்கம் செய்து விட்டனர். இந்தத் திட்டத்தில் அவர்கள் உள்ளடக்கப்படாத நிலையிலும்¸ அதன் உள்ளடக்கத்தில் ஒரு பங்காளர்களாக இல்லாத நிலையிலும் வழமைபோல இந்த வெட்கங்கெட்ட செயலில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
பயங்கரவாத அச்சுறுத்தல்கள் (Terrorist Threats) மற்றும் ஈரானிய பினாமிகள் (Iranian Proxies) குறித்த மட்டுப்படுத்தப்பட்ட முறைசாரா உளவுத்துறை பகிர்வு¸ மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு (Informal Intelligence-sharing and limited Security Cooperation) ஊடாக வளைகுடா நாடுகளுக்கும் (Gulf Countries)¸ சியோனிச அலகுக்கும்(Zionist entity) இடையிலான கூட்டணி கடந்த இரண்டு தசாப்த்தங்களாக வளர்ந்து வருகின்றது. சவூதி அரேபியாவுடன் இணைந்து ஏனைய வளைகுடா நாடுகளும் தற்பொழுது தமது பிராந்தியத்தில் சியோனிச அலகு நிரந்தரமாய் இருப்பதை ஏற்றுக்கொண்டுள்ளதுடன்¸ அதற்கெதிராக பெயரளவிலான வாய்ச்சாடல்களைக்கூட தற்போது முற்றாக நிறுத்தி விட்டன.
இந்த சூழலில் இந்த அயோக்கியத்தனமான பேரத்திற்கு எதிரான ஒரேயொரு தரப்பு சாதாரண முஸ்லிம் பொது மக்களேயாகும். ஆட்சியாளர்கள் அவர்களை முழுமையான புரக்கணித்த நிலையிலும்¸ சியோனிச அலகுடன் அறுவறுப்பான உறவை வளர்த்துக் கொண்டுள்ள நிலையிலும் கூட, அவர்கள் வழமை போலவே இந்த பேரத்தையும் முற்று முழுதாக நிராகரித்து விட்டனர்.
பிராந்தியத்தில் தனது நலனை தொடர்ந்து பேணுவதற்கு¸ அமெரிக்கா வழமையாக சியோனிச அலகுக்கு ஆதரவினை வழங்கி வருவது யாவரும் அறிந்த ஒன்றாக இருந்தாலும்¸ இம்முறை அமெரிக்க நிர்வாகம் இந்த முன்மொழிவை இந்த சந்தர்ப்பத்தில் அவசர அவசரமாக முன்வைத்திருப்பது இரு நாடுகளினதும் உள் நாட்டு அரசியலை மையப்படுத்திய நகர்வு என்றே தெரிகிறது. மாறாக இந்த பேரத்தை பேசி முடித்து அமூல் செய்வதற்கான காலம் கனிந்து விட்டது என்று அவர்கள் கருதியதால் அல்ல.
கடந்த இரண்டு வருடங்களாக சிரேஷ்ட அமெரிக்க நிர்வாக அதிகாரிகள் இந்த திட்டம் ஏறத்தாழ நிறைவடைந்திருப்பதாக அறிவித்து வந்தனர். எனினும் சியோனிச பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மோசடி மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளில் குற்றம் சாட்டப்பட்ட அதே நாளில்¸ ட்ரம்ப்புக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை விசாரணை சூடு பிடித்துள்ள அதே சந்தர்ப்பத்தில்¸ இருவரும் தேர்தல் பிரச்சாரத்தை எதிர்நோக்கியுள்ள நிலையில் இது வெளியிடப்பட்டது தற்செயலானது அல்ல. நெத்தன்யாகு, இந்த திட்டத்தின் வெளியீட்டின் மூலம் தான் எதிர்கொள்ளும் ஊழல் குற்றச்சாட்டுகளிலிருந்து திசை திருப்பி பாதுகாப்பு குறித்த பிரச்சனையின் பக்கம் மக்களின் அவதானத்தை குவிப்பதற்கு முயல்கிறார். அதேவேளை ட்ரம்ப் தன் மீதான நம்பிக்கையில்லா பிரேரணை விசாரணையில் இருந்து கவனத்தை திசைதிருப்ப தன்னால் முடிந்த அனைத்தையும் செய்கிறார்.
இவ்வாறு மீண்டும் ஒரு முறை எமது புனித பூமி வெளிநாட்டு எதிரிகளின் குறுகிய நிகழ்ச்சி நிரலுக்காக பந்தாடப்படுகின்றது. பிராந்தியத்தில் அவர்களின் அடிமைகளும் அதற்கு பச்சைக் கொடி காட்டி விட்டார்கள். ட்ரம்பின் மருமகன் ஜாரெட் குஷ்னர் முஸ்லிம் ஆட்சியாளர்களை முன்பே சந்தித்து “இம்முறை பேச்சுகளில் நீங்கள் யாரும் பங்காளர்களாக இருக்க மாட்டீர்கள்¸ ஆனால் முடிவுகளை நீங்கள் ஏற்றுக்கொளள வேண்டியிருக்கும்;” என்று தெரிவித்ததற்கு அவர்களும் ஆமாம் சாமி போட்டு விட்டார்கள்.
ஆனால் இறுதியில் இதற்கு முன்புள்ள அனைத்து பேரங்களும் அல்லாஹ்(சுபு)வின் துணை கொண்டு தோல்வியைத் தழுவியது போல இந்த பேரமும் தோற்கடிக்கப்படும் என்பதே உண்மையாகும்.