தற்போதைய கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் எல்லா இடங்களிலும் தலைப்புச் செய்திகளாக மாறியுள்ளது. இஸ்லாம் மனித வாழ்வின் எல்லா வகையான பிரச்சினைகளுக்கும் தீர்வை கொண்டுள்ளது. ஒரு முஸ்லீம் தான் எதிர்நோக்கக் கூடிய எல்லா பிரச்சினைகளுக்கும் இஸ்லாத்தை அடிப்படையாகக் கொண்டே தீர்வு தேட வேண்டும். இந்நிலையில் இவ்வகையான நோய்களைப் பற்றிய இஸ்லாத்தின் பார்வையையும் அதற்குறிய வழிகாட்டுதலையும் சுருக்கமாக ஆராயலாம் என நினைக்கிறேன்.
وَنَزَّلْنَا عَلَيْكَ ٱلْكِتَٰبَ تِبْيَٰنًا لِّكُلِّ شَىْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَىٰ لِلْمُسْلِمِينَ
மேலும்இ இவ்வேதத்தை ஒவ்வொரு பொருளையும் தெளிவாக்குகிறதாகவும், நேர்வழி காட்டியதாகவும், ரஹ்மத்தாகவும், முஸ்லிம்களுக்கு நன்மாராயமாகவும், உம்மீது நாம் இறக்கி வைத்திருக்கிறோம். (அன்-நஹ்ல் 89)
1. நோய் பரவுவதைக் கட்டுப்படுத்துதல்
பூட்டப்பட்ட நகரங்கள், வெறுச்சோடிய வீதிகள், விமான மற்றும் போக்குவருத்து நிலையங்களில் உள்ள பரிசோதனைகள் என்பன பார்பதற்கு பயங்கரமாக இருக்கலாம். ஆனால் தொற்று நோய்களுக்கு முகம்கொடுப்பது என்பது முஸ்லிம்களுக்கு புதியதல்ல. மிகவும் தீவிரமான தொற்று நோய்கள் வரும்போது, அதனை எவ்வாறு முகம்கொடுப்பது என்பது பற்றிய வழிகாட்டுதல்களை இஸ்லாம் ஏற்கனவே வழங்கியுள்ளது. நபி ﷺ அவர்களின் காலத்தில் கொரோனா வைரஸ் இல்லை என்றாலும், அவர்களுடைய காலத்திலும் தொற்று நோய்கள் இருக்கத்தான் செய்தன.
நபி ﷺ கூறினார்கள், “நீங்கள் இருக்கும் ஒரு தேசத்தில் தொற்று நோய் பற்றி நீங்கள் அறிந்து கொண்டால், அதிலிருந்து ஓடாதீர்கள்; அது ஒரு குறிப்பிட்ட தேசத்தில் பரவுவதாக நீங்கள் கேள்விப்பட்டால், அந் நிலத்திற்குள் நுழைய வேண்டாம்”. (புகாரி)
இந்த ஹதீஸின் இரண்டாம் பகுதி மிகவும் வெளிப்படையானது. ஆனால் முதல் பகுதியை உணர்வது மிகவும் கடினமானது. மிகவும் கொடிய தொற்று நோயை எதிர்கொள்ளும் ஒரு நபரின் இயல்பான மன நிலை அதை விட்டும் தூர ஓடுவதாகும். இருப்பினும் ஓடக்கூடாது என்பதற்கு ஹதீஸ் தெளிவாக உள்ளது. இதை விட்டும் ஒரு நபர் ஓடாமல் இருக்க எது அவரை ஊக்குவிக்கக்கூடும்?
நபி ﷺ அவர்கள் யாராலும் ஒப்பிட முடியாத அளவிற்கு ஒரு ஊக்கத்தை அளித்தார்கள். அவர் கூறினார்கள், “தொற்று நோய் தான் நாடியவர்களின் மீது அல்லாஹ் அனுப்புகிற வேதனையாக இருந்தது. பிறகு அதை இறை நம்பிக்கையாளர்களுக்கு அல்லாஹ் கருணையாக ஆக்கிவிட்டான். எனவே, அந்த நோய் (பரவி) உள்ள ஓர் ஊரில் ஓர் அடியார், தமக்கு அல்லாஹ் எழுதிய விதிப்படியே தவிர எந்த நோயும் தம்மைத் தீண்டாது என உறுதி கொண்டவராக பொறுமையோடும் நன்மையை எதிர்பார்த்தும் அந்த ஊரிலிருந்து வெளியேறாமல் அங்கேயே தங்கியிருந்தால் உயிர்த் தியாகிக்குக் (ஷஹீத்) கிடைக்கும் நன்மையைப் போன்று அவருக்கும் கிடைக்கும் ” (புகாரி )
இஸ்லாத்திலிருக்கும் நன்மைகளிள் உயர்ந்த அந்தஸ்தைக் கொண்ட நன்மை ஷுஹாதாவின் நன்மை. அதற்கு ஒப்பான நன்மையை தொற்று நோய் பீடிக்கப்பட்ட அப்பகுதியை விட்டு வெளியேறாது பொறுமையாக இருப்பவருக்கு வழங்கப்படுகிறது. இது அல்லாஹ்வின் மீதுள்ள பொறுப்புச்சாட்டுதலுடன் (தவக்குலுடன்) தொடர்புடையது. தனது வாழ்க்கையும் மரணமும் அவனுடைய கைகளில் மட்டுமே உள்ளது என்பதை உணர்வதினூடாக மாத்திரமே இதை அடைய முடியும்.
இஸ்லாம் தனிமைப்படுத்துதலை மாத்திரம் ஊக்குவிக்க வில்லை. மாறாக நோய் பரவுவதைத் தடுக்கும் அடிப்படை சுகாதாரம் பற்றியும் நுணுக்கமாகவும், விரிவாகவும் வழிகாட்டுகிறது.
“அல்லாஹ்வின் தூதர் ﷺ தும்மும்போதெல்லாம், தனது கையால் அல்லது ஒரு துணியால் வாயை மூடிக்கொள்வார் …” (திர்மிதி)
வுழு, குளிப்பு, கைகளை கழுவுதல் மற்றும் தனிப்பட்ட சுகாதாரம் அனைத்தும் இஸ்லாத்தின் வலுவான அம்சங்கள். “சுத்தம் ஈமானின் பாதி” ஆகவே நோய் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கான அடிப்படையை இஸ்லாம் முன் வைக்கிறது.
2. வரமுன் காப்பது குணப்படுத்துவதை விட சிறந்தது.
நாம் எதிர் நோக்கும் சிக்கல்கல் அனைத்தும் மனிதனால் உருவாக்கப்பட்டவை.
இஸ்லாத்தில் ஹலால் மற்றும் தய்யிப் (தூய்மை) பற்றிய புரிதல் மிகவும் தெளிவாக உள்ளது. இஸ்லாம் நாம் எதை சாப்பிடுகிறோம், எப்படி விவசாயம் செய்கிறோம், கால்நடைகளை எவ்வாறு பராமறிக்கிறோம், மற்ற இடங்களுக்கு எவ்வாறு கொண்டு செல்கிறோம் போன்ற அனைத்தையும் உள்ளடக்கியது. நிச்சயமாக இதில் தெய்வீக ஞானம் உள்ளது.
ஆனால் இக்கால கட்டத்தில் உள்ள பல நடைமுறைகள் இயல்பான மனித நடவடிக்கையை விட மிகவும் துரமானவை. 90களில் பைத்திய மாட்டு நோய் (Mad Cow disease) தொற்று உருவானது. இது இறைச்சியை மிகவும் மலிவு விலையில் சந்தைப்படுத்த வேண்டும் என உற்பத்தியாளர்களின் மீது பிரயோகிக்கப்பட்ட அழுத்தத்தின் காரணமாக உருவானது. அதற்காக உற்பத்தியாளர்கள் தானியங்களில் தங்கள் பணத்தை மிச்சப்படுத்துவதற்காக இறந்த கால்நடைகளின் எச்சங்களை அரைத்து, மந்தைகளுக்கு கொடுத்ததன் விளைவால் இந்த புதிய வகை நோய் தோற்றம் பெற்றது. தாவர வகைகளை நரமாமிசங்களாக மாற்றுவது ஒரு மோசமான விளைவை கொண்டு வரும் என்று அவர்கள் எதிர்பார்த்திருக்கவில்லை. எனவே மனிதனின் பேராசையே பாரிய விளைவுகளை அவன் முகம் கொடுப்பதற்கு அடிப்படைக் காரணமாக அமைந்துள்ளது.
3. அல்லாஹ்வின் தண்டனை, சோதனை அல்லது நினைவூட்டல்
ஏன் இவ்வாறான தோற்றுக்களை அல்லாஹ்(சுபு) தோற்றுவிக்கிறான்? என்பது எப்போதும் எழக்கூடிய தவிர்க்க முடியாத ஒரு கேள்வி
மக்களின் அகம்பாவம், கீழ்ப்படியாமை, பிறருக்கு எதிரான ஒடுக்குமுறை என்பவற்றிற்கான அல்லாஹ்வின் தண்டனையா இது? குறிப்பாக சீன அரசாங்கம் உய்குர் முஸ்லிம்களுக்கு செய்து கொண்டிருக்கும் கொடுமைக்கான மறுமொழியா இது? அல்லது அல்லாஹ் சீன மக்களை அவனின் நினைவின் பால் திரும்ப வேண்டும் என்பதற்காக சோதிக்கிறானா? அல்லது அல்லாஹ் தனது சக்தியை முஸ்லிம்களுக்கு நினைவூட்டுகிறானா? அல்லது ஒடுக்கப்பட்டவர்களின் துஆவுக்கு பதிலளிப்பதா? அல்லது உண்மையிலே முஸ்லீம் ஆட்சியாளர்கள் உய்குர்களை கைவிட்டதை சுட்டிக் காட்டவா?, இவ் ஆட்சியாளர்கள் கையாலாகாதவர்கள் என்பதை எடுத்துக்காட்டவா? அல்லது சோதனைகள் நமக்கு வருவதற்கு முன்பு நாம் அனைவரும் கவனமாக இருக்க வேண்டும் என்பதற்காகவா? இதில் ஏதேனும் அல்லது அனைத்துமே காரணமாக இருக்கலாம்.
ஒரு முஸ்லீம் எப்போதும் அல்லாஹ்வின் தண்டனை பற்றிய அச்சத்துடனும், தன்னுடைய இயலாமை பற்றிய தெளிவுடனும் வாழ வேண்டும். அவன் தனக்கு அருளியிருக்கும் திறன்களுக்கு ஏற்ப பொறுப்புகளை ஏற்பது பற்றியும், தன்னுடைய ஒவ்வொரு செயலுக்கும் நாளை மறுமையில் கேள்வி கேட்கப்படும் என்ற பொறுப்புணர்வு பற்றியும் தெளிவுடன் செயற்பட வேண்டும்.
4. சிகிச்சைக்கான ஆய்வுகள்
நபி ﷺ கூறினார்கள், “அல்லாஹ் எந்த நோயையும் அதற்குரிய நிவாரணியை அருளாமல் இறக்குவதில்லை. ” (புகாரி)
துரதிர்ஷ்டவசமாக, தற்போது முஸ்லிம்களை மருத்துவத்தின் முன்னணியில் காண முடியவில்லை. ஆனால் இந்த உம்மத் மருத்துவத்திலும், மருத்துவமனைகளையும், பயிற்சி பெற்ற மருத்துவர்களையும் உருவாக்குவதிலும், முன்னணி வகித்த ஒரு காலம் இருந்தது. அரசும் ஆட்சியாளர்களும் தங்கள் குடிமக்களைப் பாதுகாப்பதை தங்கள் அடிப்படைக் கடமையாகக் கருதினர்.
கலீஃபா உமர் அல் கத்தாப் (ரழி), ”என் பராமரிப்பில் உள்ள காணாமல் போன ஒரு ஆடு யூப்ரடீஸ் கரையில் இறந்துவிட்டால், அதைப் பற்றி மறுமை நாளில் அல்லாஹ் என்னிடம் கேள்வி கேட்பான் என்று எதிர்பார்க்கிறேன்”. (ஹில்யத் அல்-அவ்லியா 137) என்று ஒரு முறை அச்சத்துடன் கூறினார்கள்.
தனது ஆட்சிக்குள் வசிக்கின்ற மிருகங்களைப் பற்றிய அவரது பார்வைவே இவ்வாறாக இருந்தால், மனிதர்கள் மீதான அவரது அக்கறை என்னவென்று நீங்கள் நினைக்கிறீர்கள்? ஒரு ஆட்சியாளராக உமர்(ரழி)க்கு இருந்த அக்கறைதான் இஸ்லாமிய நாகரீகத்திற்குள் தோற்றம் பெற்ற மருத்துவ ஆராய்ச்சியாளர்களுக்கும் இருந்தது. எமது விஞ்ஞானிகள் உலகாயித இலாபங்களைக் கடந்து அல்லாஹ்(சுபு) வெகுமதியால் தூண்டப்பட்டு தமது ஆராய்ச்சிகளை மேற்கொண்டார்கள்.
أَحْيَاهَا فَكَأَنَّمَآ أَحْيَا ٱلنَّاسَ جَمِيعًا
மேலும், எவரொருவர் ஓர் ஆத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்” (அல் மைதா 32)
போன்ற வசனங்கள் அவர்களை தமது பணியிலே தூய்மையாக ஈடுபடுத்தியது.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக, இன்று இஸ்லாம் அதிகாரத்தில் இல்லாத நிலையில், அனைத்து விடயங்களும் பணத்தை அடிப்படையாகக் கொண்டே அளவீடு செய்யப்படுகின்றன. இன்றைய உலக ஒழுங்கில் மூன்றாம் உலக நாடுகளுக்கோ, ஏழைகளின் நோய்களுக்கோ பணத்தை செலவழிப்பது என்பது பெறுமதியான ஒரு விடயமாக முதலாலித்துவ சித்தாந்தம் கருதுவதில்லை. புதிது புதிதாக உருவாகும் இவ்வகையான தொற்றுக்களால் ஒவ்வொரு முறையும் பல்லாயிரக்கணக்கான மனிதர்கள் குறிப்பாக வறிய மக்கள் மரணித்துக் கொண்டிருக்கிறார்கள்.
உதாரணமாக, எபோலா (Epola Virus) நோய் சுமார் 40 ஆண்டுகளாக நீடித்து இருக்கிறது. உலகம் முயற்சித்திருந்தால் அதற்கான தடுப்பூசிகளை உருவாக்கியிருக்கலாம். ஆனால் அது ஆப்பிரிக்க பிரச்சினையாகக் கருதப்படுவதால் அதற்குறிய கவனம் செலுத்தப்படுவதில்லை.
இங்கு மனித உயிர், ஆரோக்கியம் என்பன மிகவும் மலிவானதாகவும் பாரிய ஏற்றத்தாழ்வு மிக்கதாக இருப்பது ஆச்சரியமான விடயமல்ல. அரசு தனது பொறுப்பில் அலட்கியமாக இருக்க தனியார் மருந்து நிறுவனங்கள் லாபம் ஈட்டக்கூடியவற்றில் மட்டுமே முதலீடு செய்கின்றன. இங்கு “பணக்காரர்களுக்கு சிறந்த சிகிச்சையும், ஏழைகளுக்கு மரணமும்” என்ற நியதியிலே உலகம் ஓடிக்கொண்டிருக்கிறது என்பதே கவலைக்கிடமான விடயம்.
قُل لَّن يُصِيبَنَآ إِلَّا مَا كَتَبَ ٱللَّهُ لَنَا هُوَ مَوْلَىٰنَا وَعَلَى ٱللَّهِ فَلْيَتَوَكَّلِ ٱلْمُؤْمِنُونَ
“ஒருபோதும் அல்லாஹ் விதித்ததைத் தவிர (வேறு ஒன்றும்) எங்களை அணுகாது; அவன் தான் எங்களுடைய பாதுகாவலன்” என்று (நபியே!) நீர் கூறும் முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே பூரண நம்பிக்கை வைப்பார்களாக! (தவ்பா 51)