ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியை சந்தித்த சீன வெளியுறவு மந்திரி வாங் யி, இலங்கையின் மூலோபாய பங்காளராக இலங்கையின் நலன்களை சீனா தொடர்ந்து பாதுகாக்கும் என்று வலியுறுத்தினார்.
“இலங்கையில் குறைவான நிலப்பரப்பு இருக்கலாம், ஆனால் விரைவில் பொருளாதார ரீதியாக வலுவுடையதாக அது மாறும். இந்த இலக்கை அடைய சீனா இலங்கையுடன் இருக்கும் ” என்று அமைச்சர் யி மேலும் கூறினார்.
இந்த சந்திப்பு தொடர்பாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு வெளியிட்ட அறிக்கையில்,
“அதிர்ஷ்டவசமாகவோ, துரதிஷ்டவசமாகவோ இலங்கை ஒரு சிறிய நாடாக இருந்தபோதிலும் புவியியல் ரீதியாக மிகவும் மூலோபாய இடத்தில் அமைந்துள்ளது. இதன் விளைவாக, நாடு பல அரசியல் சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. அவற்றைக் கடப்பதற்கான ஒரே வழி அது பொருளாதார ரீதியாக வலுவாக இருக்க வேண்டும். அதற்கு, பொருளாதார சுதந்திரம்¸ அரசியல் சுதந்திரத்தை உறுதி செய்யும் ” என்று ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ ஜனாதிபதி செயலகத்தில் அவரை சந்தித்த சீன மக்கள் குடியரசின் வெளியுறவு மந்திரி வாங் யியிடம் தெரிவித்தார்.
அமைச்சர் யி தனது பதிலில், கடந்த காலங்களைப் போலவே இலங்கையின் செழிப்பு மற்றும் வளர்ச்சியில் நீண்டகால பங்காளியாக சீனா இருக்கும் என்று கூறினார். இலங்கை குறித்த சீனாவின் கொள்கை எப்போதும் நிலையானது என்றும் சீனா இலங்கையின் நம்பகமான நண்பராக தொடரும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
சீன வெளியுறவு அமைச்சர், இலங்கையை பொருளாதார ரீதியாக சுயாதீனமாக்குவதற்கான ஜனாதிபதி ராஜபக்ஷாவின் உறுதிப்பாட்டைக் குறிப்பிடுகையில், அடுத்த மாதம் ஜனாதிபதி வருகையின் போது தொழில்நுட்பம், சுற்றுலா, உள்கட்டமைப்பு மற்றும் பிற துறைகளில் இலங்கைக்கு உதவக்கூடிய தேவையான தரப்புக்களை சந்திக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும் என்று கூறினார். இந்த விஜயம், மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் அவர் உறுதியளித்தார்.