இந்த வார தொடக்கத்தில் விபத்துக்குள்ளான உக்ரேனிய பயணிகள் விமானத்தை தனது இராணுவம் “தவறுதலாக” சுட்டுக் கொன்றதாக ஈரான் தற்போது ஒப்புக் கொண்டுள்ளது. ஈரான்தான் இந்த தாக்குதலுக்கு காரணம் என்ற மேற்கத்தியரின் குற்றச்சாட்டுகளை ஈரான் பலமுறை மறுத்திருந்த நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது.
பாக்தாத்தில் அமெரிக்கா உத்தரவிட்ட வான்வழித் தாக்குதலில் ஈரானிய ஜெனரல் காஸ்ஸெம் சுலைமணி கொல்லப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈராக்கில் அமெரிக்க துருப்புக்களை வைத்திருக்கும் இரண்டு இராணுவத் தளங்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதலை நடத்திய சில மணி நேரங்களுக்குப் பின்னர் இந்த விமானம் சுடப்பட்டது. அமெரிக்கத் தளங்கள் மீதான தாக்குதலில் யாரும் காயமடையவில்லை.
விமானம் புரட்சிகர காவல்படையின் “முக்கியமான இராணுவ மையத்தை” நோக்கி திரும்பிய நிலையில் “விரோத இலக்கு” என்று தவறாக கருதப்பட்டு சுடப்பட்டதாக அரச ஊடகங்கள் வெளியிட்ட ஒரு இராணுவ அறிக்கை கூறியது.
அமெரிக்காவுடனான பதட்டங்களுக்கு மத்தியில் இராணுவம் அதன் “மிக உயர்ந்த தயார்நிலையில்” இருந்தது. “அத்தகைய நிலையில், மனித பிழையின்(Human Error) காரணமாகவும், தற்செயலாகவும் விமானம் தாக்கப்பட்டது” என்று இராணுவம் கூறியது. அதற்கான மன்னிப்பையும் கோரியதுடன் எதிர்காலத்தில் இத்தகைய விபரீதங்கள் ஏற்படுவதைத் தடுக்க அதன் செயலமைப்புகளை மேம்படுத்தும் என்றும் கூறியது. விமானத் தாக்குதலுக்குக் காரணமானவர்கள் மீது வழக்குத் தொடரப்படும் என்றும் அது கூறியுள்ளது.
விபத்துக்கான பொறுப்பை ஈரான் ஒப்புக்கொண்டதால் காசிம் சுலைமானியின் மரணத்தை சுற்றி அணி திரட்டிருந்த மக்களின் உணர்வுகள் அரச அதிகாரிகளுக்கு எதிரான அதிருப்தியாக மாறக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. விமான விபத்தில் பலியானவர்களில் பெரும்பாலோர் ஈரானியர்கள் அல்லது ஈரானிய-கனடியர்கள் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. மேலும் பெட்ரோல் விலை உயர்வால் நாடு தழுவிய ரீதியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களை அதிகாரிகள் பலப்பிரயோகத்தைக் கொண்டு முடக்கியிருந்த சில வாரங்களிலேயே இந்த விபத்து ஏற்பட்டிருக்கிறது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இடம்பெற்ற இந்த விபரீதத்திற்கு அமெரிக்காவினால் சுலைமணி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட பதட்ட நிலைதான் காரணம் என ஈரானின் ஜனாதிபதி ஹசன் ரூஹானி குற்றம் சாட்டினார். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இரங்கலைத் தெரிவித்த அவர் இந்தச் செயல் குறித்து “முழு விசாரணை” செய்யப்பட வேண்டும் என்றும், பொறுப்பானவர்கள் மீது வழக்குத் தொடர வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.
மேலும் “இது ஒரு சோகமான நாள்” என்று ஈரானின் வெளியுறவு மந்திரி முகமது ஜவாத் ஸரீஃப் ட்வீட் செய்துள்ளார். அதிலே “அமெரிக்காவுடனான நெருக்கடியின் போது ஏற்பட்ட மனித பிழை பேரழிவிற்கு வழிவகுத்தது. எங்கள் மக்களுக்கும், பாதிக்கப்பட்ட அனைவரின் குடும்பங்களுக்கும், பாதிக்கப்பட்ட பிற நாடுகளுக்கும் எங்கள் ஆழ்ந்த வருத்தத்தையும், இரங்கலையும் தெரிவித்துக் கொள்வததுடன் மன்னிப்பும் கேட்டுக்கொள்கிறோம்… ” என்றும் குறிப்பிட்டுள்ளார்.