நல்லாட்சி அரசாங்கத்தின் செயற்பாடுகள் நாட்டின் நீதிமன்ற கட்டமைப்பு குறித்து சந்தேகங்களை தோற்றுவித்துள்ளது என இராஜாங்க அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ரஞ்சன் ராமநாயக்கவின் தொலைபேசி உரையாடல் குரல் பதிவுகள் ஊடாக சட்டம் எவ்வாறு கையாளப்பட்டுள்ளதும் வெளிப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தியுள்ள அரசாங்கம் , குரல் பதிவுகளுடன் தொடர்புப்பட்ட வழக்கு தீர்ப்புகள் குறித்து பிரதம நீதியரசர் தீர்மானிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளது.
கடந்த அரசாங்கம் ‘ நல்லாட்சி அரசாங்கம் ‘ என்று கூறியே ஆட்சி பொறுப்பை ஆரம்பித்தது. 19 ஆவது அரசியலமைப்பு திருத்தம் மூலம் மக்களிடம் சுயாதீன ஆணைக்குழுக்களை அமைத்ததோடு, நீதித்துறையையும் சுயாதீனப்படுத்தியதாகக் கூறினார்கள்.
கடந்த அரசாங்கத்தின் பிரதமர் உள்ளிட்டவர்கள் இதனையே ஆட்சி காலம் முழுவதும் கூறிக் கொண்டிருந்தனர். நல்லாட்சி அரசாங்கம் நாட்டில் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுக்காவிட்டாலும் பொலிஸ் , நீதித்துறை போன்றவற்றை சுயாதீனப்படுத்தியதாகவும், ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்தியதாகவும் கூறியது.
இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் கோதாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் நாம் எந்த சந்தர்ப்பத்திலும் அரசியல் பழிவாங்கல் என்ற சொல்லை பயன்படுத்தவில்லை. அவ்வாறு நாம் செயற்படப் போவதுமில்லை. எனினும் கடந்த அரசாங்கத்திலுள்ள அமைச்சர்களும், எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களும் நாம் அரசியல் பழிவாங்கலை ஆரம்பித்துள்ளதாகக் கூறுகின்றனர்.
ஆனால் ரஞ்சன் ராமநாயக்கவின் தொலைபேசி உரையாடல் குரல் பதிவுகள் மூலம் நீதித்துறை எவ்வாறு சுயாதீனமாக செயற்பட்டிருக்கிறது என்றும், சட்டத்தை அரசாங்கம் தனது தேவைக்கேற்ப எவ்வாறு வளைத்திருக்கிறது என்பதும் தெளிவாக வெளிப்பட்டுள்ளது. இவ்வாறான தமது குறைபாடுகளை மறைப்பதற்காகவே தற்போதைய அரசாங்கம் அரசியல் பழிவாங்கலில் ஈடுபடுவதாக போலி பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. எனினும் அவர்களின் குறைபாடுகள் சாட்சியுடன் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் சாதாரண பிரஜைகளுக்கும் நீதித்துறையின் நடவடிக்கைகள் மீது சந்தேகம் எழுந்துள்ளது. இதற்கான முழு பொறுப்பையும் கடந்த அரசாங்கமே ஏற்க வேண்டும். ஆனால் ரஞ்சன் ராமநாயக்கவை மாத்திரமே இதில் இணைத்து விட முயற்சிக்கின்றனர்.
ஆனால் இந்த சம்பவத்துடன் முன்னாள் பிரதமர், சில அமைச்சர்கள், நீதிமன்றம், சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் அனைத்து துறைகளும் நேரடியாக தொடர்புபட்டிருக்கிறது. எனவே ஒரு நபர் மீது மாத்திரம் குற்றங்சுமத்துவது அசாதாரணமானதாகும்.
எனவே நாட்டின் பிரதம நீதியரசர் இது தொடர்பில் தீர்க்கமான ஆராய்ந்து உரிய நடவடிக்கைகளை துரிதமாக எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றோம். நீதித்துறை மீது மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை முற்றுமுழுதாக வீழ்ச்சியடைவதற்கு முன்னர் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
இவ்விடயம் தொடர்பில் பக்கசார்பின்றி விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு நீதி நிலைநாட்டப்படவேண்டும். இலங்கை வரலாற்றில் இதற்கு முன்னர் இல்லாதவாறு நீதி உள்ளிட்ட அனைத்து துறைகளும் கடந்த அரசாங்கத்தின் சில செயற்பாடுகளால் வீழ்ச்சியடைந்ததில்லை. இதற்கு பிரதான காரணம் 19 ஆம் அரசியலமைப்பு திருத்தம் ஆகும்.
மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் சாதாரண மக்கள் நினைத்து கூட பார்க்க முடியாதளவுக்கு இவ்வாறு செயற்பட்டிருப்பார்களாயின் அது மிகவும் பாரதூரமானதாகும். எனவே வெகு விரைவில் இதற்கான தீர்வு கிடைக்கப் பெறாவிட்டால் சட்ட கட்டமைப்பு சிதைவடையும் என்பது ஸ்திரமாகும் என அவர் தெரிவித்தார்.