வெளியிலிருந்து முஸ்லிம் உம்மாஹ்வுக்குள் நுழைந்து அதன் எல்லா மட்டத்திலும் ஊடுருவியிருக்கும் ஒரு எண்ணக்கருதான் ‘Gradualism’ அல்லது ‘ததர்ருஜ்’ என அழைக்கப்படும் படிமுறைவாதமாகும். இந்த படிமுறைவாதத்தை பின்பற்றுகினற் படிமுறைவாதிகள் இஸ்லாம் ஒரு பாரிய தீன்@ அதனை உடனடியாக அமூல்படுத்துவது சாத்தியமில்லை. எனவே இஸ்லாத்தை முழுமையாக முஸ்லிம்களின் வாழ்வில் கொண்டுவர வேண்டுமென்றால் ஷரீஆ சட்டங்களை படிப்படியாக அமூல்படுத்துவதே சரியான வழியாகும்@ நீண்டதொரு காலத்தின் பின் அது தனது இலக்கை அடைந்து கொள்ளும்@ இன்றயை காலத்தில் இந்த செயற்பாடு பொதுவாக நடைமுறையிலுள்ள அரசாங்கத்துடன் அதிகாரத்தை பகிர்ந்து கொள்வதன் ஊடாக மற்றும் இன்றிருக்கும் வாழ்வொழுங்குக்குள்(முறைமைக்குள்) பணியாற்றுவதன் ஊடாகவே மேற்கொள்ளப்படலாம் என்ற கருத்தை முன்வைக்கின்றனர். அதன்படி செயலாற்றுகின்றனர்.
அவர்கள் இந்த வாதத்திற்கு வஹியிலிருந்து சில நியாயங்களையும் முன்வைக்கின்றார்கள். அதாவது அல்குர்ஆனை, அல்லாஹ்(சுபு), காலத்திற்கு காலம் தோன்றிய பிரச்சனைகளுக்கு பதிலளிக்கும் வகையில் பகுதி பகுதியாகவே அருளினான் என்ற வாதத்தையும், மதுபானத்தை அல்லாஹ்(சுபு) மூன்று கட்டங்களாக படிப்படியாகவே தடை செய்தான் என்பதையும் இவர்கள் அடிக்கடி ஆதாரமாகக் காட்டுகிறார்கள். மேலும் சில இஸ்லாமிய சட்ட அடிப்படைகளையும் அவர்கள் ஆதாரங்களாக கொண்டு வருகிறார்கள். உதாரணமாக ‘முழுமையாக ஒன்றை அடைய முடியாதுள்ளது என்பதற்காக அதனை முற்றாகவே தவிர்த்து விடக்கூடாது’ என்ற அடிப்படையைக்கூறி முற்றாக இஸ்லாம் இல்லாது இருப்பதை விட இஸ்லாத்தில் சிலதாகினும் இருப்பது சிறந்ததாகும் என வாதாடி படிமுறைவாதத்திற்கு வலுச் சேர்க்க முயற்சிக்கிறார்கள்.
இஸ்லாத்தின் பார்வையில் இந்த வாதங்கள்; எதுவும் ஏற்புடுடையதல்ல. படிமுறைவாதம் என்ற எண்ணக்கரு செல்லுபடியற்றது மாத்திரமல்லாது, மிகத் தெளிவான வஹியின் ஆதாரங்களுக்கு முரண்பட்டதாகும். இஸ்லாம் உடனடியாக அமூல்படுத்தக் கூடியதல்ல என்ற கருத்து, அல்லாஹ்(சுபு) நடைமுறைக்கொவ்வாத தீனையே அருளியுள்ளான் என வாதிடுவதற்கு சமமாகும். இந்த வாதம் நடைமுறைக்கேற்ற ஒரேயொரு தீன் இஸ்லாம் தான் என்ற கருத்தையும், அந்த இஸ்லாத்தை அண்ட சராசரங்கள் அனைத்தையும் படைத்துப் பரிபாலிக்கும் அல்லாஹ்(சுபு) பரிபூரணப்படுத்தி அருளியிருக்கிறான் என்ற நம்பிக்கையையும் கேள்விக்குட்படுத்துகிறது. அல்லாஹ்(சுபு) தனது திருமறையிலே,
“அல்லாஹ் எந்த ஓர் ஆத்மாவுக்கும் அது தாங்கிக் கொள்ள முடியாத அளவு கஷ்டத்தை கொடுப்பதில்லை; அது சம்பாதித்ததின் நன்மை அதற்கே; அது சம்பாதித்த தீமையும் அதற்கே! (முஃமின்களே! பிரார்த்தனை செய்யுங்கள்:) “எங்கள் இறைவா! நாங்கள் மறந்து போயிருப்பினும், அல்லது நாங்கள் தவறு செய்திருப்பினும் எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்களுக்கு முன் சென்றோர் மீது சுமத்திய சுமையை போன்று எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்கள் சக்திக்கப்பாற்பட்ட (எங்களால் தாங்க முடியாத) சுமையை எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக! எங்களை மன்னித்தருள் செய்வாயாக! எங்கள் மீது கருணை புரிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலன்; காஃபிரான கூட்டத்தாரின் மீது (நாங்கள் வெற்றியடைய) எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக!” (அல் பகரா:282) எனக் குறிப்பிடுவதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
மேற்குறிப்பிட்ட திருமறை வசனம் உம்மத்தால் பூர்த்தி செய்ய இயலாத ஒரு கடமையை அல்லாஹ்(சுபு) ஒரு போதும் விதியாக்க மாட்டான் என்ற கருத்தை ஆணித்தரமாக முன்வைக்கிறது. எனவே இஸ்லாத்தை பரிபூரணமாக நிலைநாட்டி அதற்குள் உம்மத் முழுமையாகவும், உடனடியாகவும் நுழைவது என்பது சாத்தியமானதும், கடமையானதுமாகும்.
எனினும் இன்று இஸ்லாத்தை உடனடியாக (Radically) நிலைநாட்டுவது சாத்தியமானதல்ல என்ற கண்ணோட்டம் பகுத்தறிவு பூர்வமானதாகவும், நடைமுறை ரீதியானதாகவும் முன்வைக்கப்பட்டு வருகிறது. இந்தக் கண்ணோட்டம் இஸ்லாத்தின் பார்வையில் முற்றிலும் தவறானது மாத்திரமல்லாமல் எந்தவொரு அரசியல் மாற்றத்தின் யதார்த்ததிற்கும் முரண்பட்டதாகும். முஹம்மத்(ஸல்) அவர்கள் 1400 வருடங்களுக்கு முன்னர் அரேபிய தீபகற்பத்திலே தோற்றுவித்த அரசியல் மாற்றம் உடனடி மாற்றமாகவே (Radical Change) நிகழ்ந்தது. மோசடியான கம்யூனிச சிந்தாந்தம் அதிகாரத்திற்கு வந்ததும், தொண்ணூறுகளிலே சோவியத் யூனியனிலே அதனை வீழ்த்தி மற்றுமொரு மோசடியான சித்தாந்தமான முதலாளித்துவம் ஆட்சியில் அமர்ந்ததும் உடனடி மாற்றத்தின் ஊடாகவே இடம்பெற்றன. முற்றிலும் தவறான அகீதாக்களைக் கொண்ட சித்தாந்தங்களே உடனடி மாற்றத்தை தோற்றுவித்தன என்றால் முற்றிலும் தூய்மையான வாய்மையான அகீதாவாகிய இஸ்லாத்திற்கு அது முடியாது? எனவே இஸ்லாமிய சித்தாந்தத்தைக் கொண்டு உடனடி மாற்றத்தை ஏற்படுத்துவது சாத்திமில்லை என்ற கருத்தை கொண்டிருப்பது தோல்வி மனோபாவத்தின் விளைவேயன்றி வேறல்ல என்ற முடிவுக்கே நாம் வர வேண்டியுள்ளது.
அல்குர்ஆன் படிப்படியாகவே அருளப்பட்டது, ஆகவே அது படிப்படியாகவே அமூல் செய்யப்படலாம் என்ற கூற்று அல்குர்ஆனுக்கும், அது அருளப்பட்ட முறைக்கும் முரண்பட்ட கருத்தாகும். மக்கள் அவ்வப்போது சந்தித்த பிரச்சனைகளுக்கு தீர்வாக, எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலாக, தோன்றிய வாதங்களுக்கு விளக்கமாக, நிழவிய அரசியல் சூழல்களுக்கு வழிகாட்டல்களாக காலத்துக்கு காலம் அருளப்பட்டதே அல்குர்ஆனாகும். உலூமுல் குர்ஆனின்(அல்குர்ஆன் பற்றிய கற்கையின்) ஒரு முக்கிய பகுதியான அஸ்பாபுல் நுஸுல்(வசனம் அருளப்பட்டதற்கான காரணம்) இவ்விடயம் குறித்தே ஆராய்கிறது.
அஸ்பாபுல் நுஸுல் பற்றி புரிந்து கொள்ள இந்த உதாரணத்தை கவனியுங்கள். ஸஹீஹுல் புகாரியில் (பாகம் 6, எண்.109) பதியப்பட்டுள்ள உர்வா(ரழி) அறிவிக்கின்ற கீழ்வரும் சம்பவத்தை நோக்குங்கள்,
“சுபைர்(ரழி) அவர்கள் அல் ஹர்ராவில் அமைந்திருந்த இயற்கை (நீர்ச்சுனை) குறித்து ஒரு அன்சாரித் தோழருடன் சச்சரவில் ஈடுபட்டார்கள். அதன்போது முஹம்மத்(ஸல்) அவர்கள் சுபைரைப் பார்த்து “சுபைரே! நீர் (உமது நிலத்திற்கு) நீர் பாய்ச்சிக் கொண்டதன் பின்னால் அந்த நீர் உமது அயலவருக்கு செல்வதற்கு விட்டுவிடும்” என்றார்கள். அதற்கு அந்த அன்சாரி தூதர்(ஸல்) அவர்களைப் பார்த்து “அல்லாஹ்(சுபு)வின் தூதரே!, அவர்(சுபைர்) உங்கள் ஒன்றுவிட்ட சகோதரர் ஆயிற்றே(என்பதாலா அவ்வாறு சொல்கிறீர்கள்?)” எனக் சுட்டிக்காட்டினார். அந்த சந்தர்ப்பத்தில் முஹம்மத்(ஸல்) அவர்களின் முகம் (கோபத்தால்) சிவந்து விடுகிறது. அதனையடுத்து அவர்(ஸல்) சுபைரைப்பார்த்து “சுபைரே! (உமது நிலத்திற்கு) நீர் பாய்ச்சும். பின்னர் அந்த நீர் உமது மதிலை தொடும் வரையில் தடுத்து வைத்துக் கொள்ளும். அதன் பின்னரே உமது அயலவருக்குச் அதைச் செல்ல விடும்” என்றார்கள். அந்த அன்சாரி முஹம்மத்(ஸல்) அவர்களைக் கோபப்படுத்தியன் விளைவாக முன்னர் இருவருக்கும் சாதகமான தீர்ப்பை வழங்கிய அவர்கள்(ஸல்), பின்னர் சுபைர்(ரழி) அவர்கள் தனது முழுமையான உரிமையை அனுபவித்த பின்னரே நீரை அயலவருக்கு வழங்கும் படி சொன்னார்கள். இந்த சம்பவத்துடன் தொடர்புபடுத்தியே கீழ்வரும் வசனம் அருளப்பட்டது என தான் நினைப்பதாக சுபைர்(ரழி) அறிவிக்கின்றார்கள்.
“உம் இறைவன் மேல் சத்தியமாக, அவர்கள் தங்களிடையே எழுந்த சச்சரவுகளில் உம்மை நீதிபதியாக, ஏற்றுப் பின்னர் நீர் தீர்ப்பு செய்தது பற்றி எத்தகைய அதிருப்தியையும் தம் மனங்களில் கொள்ளாது (அத்தீர்ப்பை) முற்றிலும் ஏற்றுக் கொள்ளாத வரையில், அவர்கள் நம்பிக்கை கொண்டவர்கள் ஆகமாட்டார்கள்.” (அந்நிஸா:65)
எனவே எப்போதெல்லாம் ஒரு சட்டத்தை கோரக்கூடிய ஒரு சட்டப்பிரச்சனை எழுந்ததோ அப்போதெல்லாம் அல்குர்ஆன் அது குறித்து தனது நிலைப்பாட்டை அறிவித்தது. ஸஹாபாக்கள் சில கேள்விகளுடன் (ஸல்) அவர்களை அணுகியபோது (ஸல்) அவர்கள் அந்தக் கேள்விகளுக்கான தனது நிலைப்பாட்டை அல்லாஹ்(சுபு), அஹ்காம்களாக அருளும் வரையில் பதிலளிக்காது மௌனமாக இருந்தார்கள் என பல அறிவிப்புகள் தெரிவிக்கின்றன. இவ்வாறான ஒரு சந்தர்ப்பம் பற்றி அல்புஹாரியின் ஒரு சம்பவம் வருகின்றது.
ஜாபிர்(ரழி) அறிவிக்கின்றார்கள், “நான் பனு ஸலமாவின் குடியிருப்பில் நோய்வாய்ப்பட்டிருந்தபோது முஹம்மத்(ஸல்) அவர்களும், அபுபக்ர்(ரழி) அவர்களும் நடைப்பயணமாக என்னை வந்து சந்தித்தார்கள். நான் சுயநினைவிழந்திருந்ததைக் கண்ட நபி(ஸல்) அவர்கள் தண்ணீரை வரவழைத்து அதிலே வுழூ செய்து கொண்டு அந்தத் தண்ணீரை என் மீது தெளித்தார்கள். அதன்போது நினைவு தெளிந்த நான், நபி(ஸல்) அவர்களை நோக்கி, “அல்லாஹ்வின் தூதரே! எனது சொத்துக்கள் குறித்து என்ன கட்டளையிடுகிறீர்கள்” எனக் கேட்டேன். அதன்போது தூதர்(ஸல்) சொத்துப்பங்கீடு தொடர்பான அல்குர்ஆன் வசனங்கள் அருளப்படும் வரை மௌமாக இருந்தார்கள் என இந்த அறிவிப்பில் குறிப்பிடப்படுகிறது. (அல்புஹாரி பாகம் 6, எண்.101)
எனவே மக்களின் அனைத்து விவகாரங்கள் தொடர்பாகவும், செயற்பாடுகள் தொடர்பாகவும் தீர்மானங்களும், தீர்ப்புக்களும் இஸ்லாத்தால் வழங்கப்பட்டன. எப்போது அவற்றிற்கான அஹ்காம்கள் அருளப்பட்டு விட்டனவோ அப்போதே எத்தகைய தாமதமுமின்றி அந்த அஹ்காம்கள் அமூல்படுத்தப்பட்டன. அஹ்காம்கள் அருளப்பட்டதன் பின்னால் அவை படிப்படியாக அமூல்செய்யப்பட்டதற்கான ஒரு சந்தர்ப்பத்தையேனும் நாம் காண முடியாது. முஹம்மத்(ஸல்) அவர்கள் அல்லாஹ் அஹ்காம்களை அருளியதன் பின்னால் சில காலத்திற்கு அந்த அஹ்காம்களை நடைமுறைப்படுத்தாது தாமதப்படுத்தினார்கள் அல்லது தடுத்து வைத்திருந்தார்கள் என்று கூறக்கூடிய ஒரு சம்பவத்தைக்கூட யாராலும் முன்வைக்க முடியாது. அவ்வாறு சொல்வது முஹம்மத்(ஸல்) அவர்கள் அல்லாஹ்(சுபு) அருளியதற்கு மாற்றமாக நடந்து கொண்டார்கள் அல்லது வேறொன்றைக் கொண்டு தீர்ப்பளித்தார்கள் என்று பொருள்படும். நபி(ஸல்) அவர்கள் மீது சுமத்தப்படும் ஆகப்பெரிய அவதூறு இதுவாகும். அல்லாஹ்(சுபு) அதிலிருந்து எம் அனைவரையும் பாதுகாப்பானாக!
இஸ்லாத்தைக் கொண்டு மாத்திரம் தீர்ப்பளிப்பது, ஆட்சி செய்வது என்பன பர்த் என்பதும், அதுவல்லாத வேறு எதனைக் கொண்டும் ஆட்சி செய்வதும், தீர்ப்பளிப்பதும் ஹராம் என்பதும் இஸ்லாத்தில் திட்டவட்டமான விடயமாகும். இவ்விடயம் தொடர்பாக முறையான வேறு எவ்வித விளக்கங்களையும், விரிவுரைகளையும் நீங்கள் காண மாட்டீர்கள். எனவே இஸ்லாத்தின் அதிகாரத்தை படிப்படியாக அமூல்படுத்துதலும், அல்லது தாஹுதிய அதிகாரங்களுடன் அதிகாரத்தை பகிர்ந்து கொள்ளுதலும் எந்த சூழ்நிலையிலும் அனுமதிக்கப்பட்டதல்ல.
அல்லாஹ்(சுபு) தனது திருமறையில் சொல்கிறான்,
“முஃமின்களே!) நீங்கள் மனிதர்களுக்கு அஞ்சாதீர்கள்; எனக்கே அஞ்சுங்கள். என்னுடைய வசனங்களை அற்பக் கிரயத்திற்கு விற்று விடாதீர்கள்; எவர்கள் அல்லாஹ் இறக்கி வைத்ததைக் கொண்டு தீர்ப்பளிக்கவில்லையோ, அவர்கள் நிச்சயமாக காஃபிர்கள்தாம்.” (அல்மாயிதா:44)
மேற்குறிப்பிட்ட அல்குர்ஆன் வசனத்திற்கு இமாம் இப்னு கதீர்(ரஹ்) தனது தப்ஸீரிலே அல்குர்ஆனுக்கு விளக்கம் அளிப்பவர்களில் முதல் தரத்தில் இருக்கும் இப்னு அப்பாஸ்(ரழி) அவர்களினதும், ஏனைய முஃபஸ்ஸிரீன்களினதும் விளக்கங்களை பின்வருமாறு வரையறுத்துக் குறிப்பிடுகின்றார்கள்.
“எவரேனும் ஒட்டுமொத்த ஷரீஆவின் ஏற்புடமையை நம்பாது, அல்லது இஸ்லாத்தால் நன்கு அறியப்பட்ட ஷரீஆவின் ஒரு சட்டத்தையாகினும் நம்பாது விடுவாரேயானால் அவர் காஃபிராவார். அத்துடன் ஒரு ஆட்சியாளர் இஸ்லாம் அல்லாத ஒன்றைக் கொண்டு ஆட்சி செய்து அது ஏற்றுக்கொள்ளத்தக்கதுதான் என நம்புவாரேயானால் அவரும் காஃபிராவார். எனினும் ஆட்சியாளர் ஒருவர் குஃப்ரைக் கொண்டு ஆட்சி செய்து தான் செய்வது குஃப்ரான காரியம்தான் என ஏற்றுக்கொள்வாரேயானால். அச்செயல் குஃப்ர் துன் குஃப்ர் எனப்படும். குஃப்ரிலும் குறைந்த குஃப்ராகும். அதாவது பெரும் பாவமாகும். (இப்னு கதீர் ‘தப்ஸீரு குர்ஆன் அல்அழீம்’ – பாகம் 2. பக்கம் 60-66). எனவே படிமுறைவாதத்தின் வழிமுறையும், குஃப்ருடன் அதிகார பகிர்வு செய்வதும் மிகத்தெளிவான ஹராம்களாகும். மேலும் அவை அரசியல் மாற்றத்தை தோற்றுவிப்பதற்கான சரியான வழிமுறையுமல்ல.
எனவே தற்போது பரவலாக நடைமுறையில் இருக்கும் ஜனநாயக அரசியல் கட்டமைப்புக்களுக்குள் பங்கேற்பதும், அதிலே பாராளுமன்ற உறுப்பினராக அல்லது மத்திரியாக செயற்பட்டு குஃபரைக் கொண்டு ஆட்சி செலுத்தும் அரசுகளினூடாக சமூகத்திற்காக உழைக்க நினைப்பதும் ஹராமானதாகும். இஸ்லாமிய தேசங்களில் குஃப்ர் முறைமைகளை அமூல்படுத்துவதற்காக குஃப்ர் அரசியற் கட்சிகளில் இணைந்து அதனூடாக அரசியல் தீர்மானம் எடுக்கும் பொறிமுறையில் செல்வாக்குச் செலுத்த நினைப்பதும் ஹராமானதாகும். அதேபோல இஸ்லாமிய ஷரீஆவின் சில பகுதிகளை மாத்திரம் நடைமுறைப்படுத்துவதற்கான மனுவை தாக்கல் செய்து அதற்காக வாக்கெடுப்பை நடத்தக்கோருவதும், அதில் பங்கெடுப்பதும் மிகத்தெளிவான ஹராம்களாகும். ஏனெனில் அச்செயல்கள் அல்லாஹ்(சுபு)வின் ஹுக்மை விட மனிதனின் இறைமை உயர்வானது என பறைசாட்டுவதாகும். அது இஸ்லாமிய அகீதாவுக்கு முற்றிலும் முரண்பாடான நிலைப்பாடாகும்.
எனவே ‘Gradualism’ அல்லது ‘ததர்ருஜ்’ என அழைக்கப்படும் ‘படிமுறைவாதம்’ என்ற எண்ணக்கரு முற்றாக நிராகரிக்கப்பட வேண்டியது. குப்பைத்தொட்டியில் தூக்கி வீசப்பட வேண்டியது. இந்த வழிமுறை உண்மையான இஸ்லாமிய மாற்றத்தினதும், எழுச்சியினதும் பாதையில் மிகப்பெரிய தடைக்கல்லாக நிறுவப்பட்டுள்ளது. அத்துடன் மறுமலர்ச்சியின் அடிப்படையான கிலாஃபத்தின் மீளுருவாக்கத்தை தாமதப்படுத்துவதில் அதன் பங்கு பாரியது என்பதனால் முஸ்லிம் உம்மாஹ் அந்த தீமையிலிருந்து தன்னை தூய்மைப்படுத்திக் கொள்வது காலத்தின் கட்டாயமாகும்.