1) மறுமையின் விடயங்களை கற்பதன் அடிப்படை அம்சமாக அகீதாவின் ஆன்மீகம் தொடர்பான பகுதி அமைகின்றது. அதேபோல லௌகீக விடயங்களைகற்பதன் அடிப்படையாக அகீதாவின் அரசியல் பரிமாணம் அமைகின்றது. ஒவ்வொரு விடயம் தொடர்பான சிந்தனையும் அடிப்படை அகீதாவிலிருந்தே தோற்றம் பெறுகின்றது. அந்த சிந்தனையிலிருந்து மேலும் பல உப சிந்தனைகள் தோற்றம் பெருகின்றன. அந்த சிந்தனை மறுமை தொடர்பாக அமையுமானால் அது அகீதாவின் ஆன்மீகப்பகுதியிலிருந்தே எழுகின்றது. மாறாக அந்த சிந்தனை இவ்வுலக வாழ்க்கை தொடர்பாக அமையுமானால் அது அகீதாவின் அரசியற்பகுதியிலிருந்து எழுகின்றது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
இறுதிதீர்ப்புநாள் விவகாரங்கள், நற்கூலி வழங்குதல், தண்டனை வழங்குதல், வணக்க வழிபாடுகள்;; அல்லது இவற்றுடன் சம்பந்தப்பட்ட விடயங்களான மறுமை நாளின் விபரீதங்கள், அல்லாஹ்வின் தண்டனை குறித்த எச்சரிக்கைகள், அல்லாஹ்வின் வெகுமதியை பற்றிய சுபசோபனங்கள் போன்ற விடயங்கள் அகீதா எமக்கு எடுத்தியம்பும் ஆன்மீகம் தொடர்பான பகுதியாகும்.
அதே நேரத்தில்; மனிதனின் இவ்வுலக விவகாரங்களுடன் தொடர்புடையதாக ஒரு சிந்தனையோ, சட்டமோ அமையுமானால் அது அகீதாவின் அரசியல் தொடர்பான வழிகாட்டலாகும். அதாவது இறை சட்டங்கள், நன்மை, தீமை என்ற வழிகாட்டல்கள், வியாபரம், பங்குடமை, வாடகை, திருமணம், வாரிசுரிமை, உம்மத்திற்காக அமீர் ஒருவரை நியமித்தல், அவருக்கு கட்டுப்படுதல், அவர் நேர்வழியில் ஆட்சி செய்ய உதவுதல், நீதி தொடர்பான சட்டங்கள், ஜிஹாத் போன்ற அனைத்து விடயங்களும் இஸ்லாமிய அகீதாவின் அரசியல் பரிமாணத்திலிருந்து தோற்றம் பெற்றுள்ளதை இலகுவாக விளங்கிக்கொள்ளலாம்.
2) கிருஸ்தவ மதமானது வெறுமனவே ஆன்மீக அகீதாவிலிருந்தே தோற்றம் பெற்றுள்ளது. ஏனெனில் அது எடுத்தியம்பும் சிந்தனையும், சட்டங்களும் மறுமை விவகாரங்களுடன் மட்டுமே சம்பந்தப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் இன்று உலகில் மேலோங்கியுள்ள முதலாளித்துவ தத்துவத்தின் அடிப்படை அகீதா அரசியல் பரிமாணத்தை மட்டும் கொண்ட அகீதாவாகவே விளங்குகிறது. ஏனெனில் அதிலிருந்து உருவாகும் சிந்தனையும், சட்டவிதிகளும் உலக விவகாரங்களுடன் மாத்திரமே சம்பந்தப்படுகிறது. உதாரணமாக முதலாளித்துவக்கொள்கையிலிருந்து தோன்றியிருக்கும் சுதந்திரம், விடுதலை, ஜனநாயம், திறந்த பொருளாதாரக்கொள்கை போன்ற கொள்கைகளை நாம் காணலாம்.
சோஷலிசம், கம்யூனிசம் என்பனவும் அரசியல் அகீதாவாகவே விளங்குகிறது. ஏனெனில் இக்கொள்கைகளிலிருந்து உருவாகும் சிந்தனையும், விதிகளும் உலகியல் விவகாரங்களுடன் மாத்திரமே சம்பந்தப்படுகிறது. உதாரணமாக தனியுரிமையை கட்டுப்படுத்தல் அல்லது அதை முற்றாக கட்டுப்படுத்தல், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம், அரசற்ற வாழ்வியலை ஏற்படுத்தல் போன்றவற்றை நாம் நோக்கலாம்.
எனினும் இஸ்லாமிய அகீதா மாத்திரமே ஒரே சமயத்தில் ஆன்மீக அகீதாவாகவும் அரசியல் அகீதாவாகவும் விளங்குகின்றது. ஏனெனில் இஸ்லாம் எடுத்தியம்பும் சிந்தனைகளும், விதிகளும் மறுமை பற்றியும் இவ்வுலக வாழ்க்கை பற்றியும் தெளிவுபடுத்துகின்றது.
3) ஆன்மீகத்தை மாத்திரம் கொண்டுள்ள அகீதா இவ்வுலக விவகாரங்கள் தொடர்பான எத்தகைய எண்ணக்கருக்களையும் தோற்றுவிப்பதில்லை. ஏனெனில் அது இந்த வாழ்வுக்கு முன்னிருந்த விடயங்கள் பற்றியும்;, இந்த வாழ்வுக்கு பிறகு வரவிருக்கும் விடயங்கள் பற்றியுமே பேசுகிறது. அது இந்த உலகியல் விடயங்களுடன் எவ்வித தொடர்பும் இல்லாது இருப்பதால் எத்தகைய அரசியல் அகீதாவையும் (கொள்கையையும்) ஆன்மீக அகீதாவை மாத்திரம் கொண்ட சமுதாயத்தின் மீது பிரயோகிக்க முடிகிறது.
எனினும் அரசியலை மாத்திரம் விளக்கும் அகீதாவை பொருத்த வரையில் அது இவ்வுலக வாழ்க்கை தொடர்பான நோக்கையும், அதிலிருந்து உருவாகியுள்ள எண்ணக்கருக்களையும் கொண்டுள்ளது. அது இவ்வுலக வாழ்க்கையின் அனைத்து விவகாரங்கள் தொடர்பான எண்ணக்கருக்களையும் விதிகளையும் உருவாக்குகிறது. எனவே மனிதனுடைய வாழ்க்கையை அதனது விதி முறைகளுக்கு ஏற்ப வடிவமைகிறது. அது தனது அகீதாவிலிருந்து எழுகின்ற சிந்தனையை அடிப்படையாக் கொண்டு இந்த வரையரைகளை ஏற்படுத்துகிறது. எனவே இந்த அரசியல் அகீதாவினை வேறொரு அரசியல் அகீதாவினை கொண்டிருக்கும் சமூகத்தில் அமுல்படுத்துவது முற்றிலும் சிரமமான காரியமாகும்.
அவ்வாறு அமுல்படுத்த வேண்டுமானால் அந்த சமூகம் பின்பற்றும் அகீதாவிலிருக்கும் குறைபாடுகளை சுட்டிகாட்டி இந்த அகீதாவிலுள்ள நிறைகளை விளங்கப்படுத்தி அதனை அந்த சமூகம் முற்றுமுழுதாக ஏற்றுக்கொள்வதன் மூலமோ, அல்லது பாரிய பலப்பிரயோகத்தினூடாகவோதான் சாதிக்க முடியும்.
இதனாலேயே மேற்குலகிற்கு எளிதாக கொங்கோவினை காலனித்துவம் செய்ய முடிந்த போதிலும் அல்ஜீரியாவினை பலப்பிரயோகத்தை பிரயோகித்தும் கூட காலனித்துவம் செய்து தொடர்ந்தும் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள முடியாமல் போனது.
4) முதலாளித்துவத்தை எடுத்துக் கொண்டால் அது இவ்வுலக வாழ்க்கை தொடர்பான ஒரு முழுமையான பார்வையை கொண்டுள்ளது. அத்துடன் அதனது முக்கிய இலக்காக இவ்வுலகில் மனிதன் அதியுச்ச இன்பமடைவதையும், அதனை அடைவதற்கான அடிப்படை அடிச்சுவடாக சுதந்திரம் என்ற தனது எண்;ணக்கருவையும் கொண்டுள்ளது. அதாவது கொள்கைத்தேர்விற்கான சுதந்திரம், பொருளுடமைக்கான சுதந்திரம், தனிமனித சுதந்திரம், கருத்து சுதந்திரம் என பல்வேறு சுதந்திரங்களை மனிதனுக்கு பெற்றுத்தர வேண்டும் என இக்கொள்கை கருதுகிறது. அதே போன்று ஷோசலிசம் சமூகத்தின் பரிணாம மாற்றத்தினை சமூக முன்னேற்றத்தின் அடிப்படை அம்சமாக நோக்குகிறது. அதாவது ஒரு குறித்த காலகட்டத்தில் நிலவும் சமூக முரண்பாடுகள் வளர்ச்சி கண்டு அந்த முரண்பாட்டிற்கான தீர்வாக புதியதொரு சமூக நிலை தோற்றுவிக்கப்படுகின்றது. இவ்வாறு மனித வாழ்வை முரண்பாடுகளுக்கிடையிலான பரிணாம வளர்ச்சியாக ஷோசலிசம் நோக்குகிறது.
எனவே சமூகத்தில் பரிணாம வளர்ச்சி ஏற்படுவதற்கு நடைமுறையில் நிலவும் முரண்பாடுகளில் முன்னேற்றம் ஏற்படுவதை வரவேற்க வேண்டும். தற்சமயம் முரண்பாடுகள் காணப்படாதிருந்தால் சமூகத்தில் பரிணாம வளர்ச்சி ஏற்படுவதற்காக முரண்பாடுகள் தோற்றுவிக்கப்பட வேண்டும் எனவும் ஷோசலிசம் கருதுகிறது.
அதேவேளை இஸ்லாமும் இவ்வாழ்க்கை தொடர்பான முழுமையான பார்வையைக்கொண்டுள்ளதுடன், ஹலாலையும், ஹராமையும் மக்களது செயற்பாடுகளின் அளவுகோள்களாக நியமித்துள்ளது. மனிதன் ஷரிஆவிற்கு முழுமையாகக் கட்டுப்பட்டு வாழ்வது இந்த அளவுகோள்களை நடைமுறைப்படுத்தும் வழிமுறையாக இஸ்லாம் வகுத்துள்ளது. எனவே எவையெல்லாம் தடை செய்யப்பட்டுள்ளதோ அதிலிருந்து முற்றாக விலகியும், எவையெல்லாம் செய்யும் படி ஏவப்பட்டுள்ளதோ அதனை அமுல் செய்யும் படியும் இஸ்லாம் பணிக்கிறது.
5) மேற்குலகு முஸ்லிம் பூமிகளில் கலாச்சார ரீதியான ஆக்கிரமிப்பினை முன்னேடுத்த போது இவ்வாழ்க்கை தொடர்பாக இஸ்லாம் கொண்டுள்ள பார்வையை விமர்சிப்பதை அவர்கள் இலக்கு வைத்தார்கள்;. அவர்கள் கழா கத்ர் தொடர்பில் கேள்வி எழுப்பினார்கள். நபித்துவத்தின் மீதும், ஸஹாபாக்கள் மீதும் கேள்வி எழுப்பினார்கள். தற்கால நடைமுறையில் உள்ள பிரச்சினைகளை தீர்ப்பதில் ஷரிஆவிற்கு ஆளுமை உள்ளதா என்பதில் நம்பிக்கையீனத்தை ஏற்படுத்த முயற்சித்தார்கள்.
இதன் அடிப்படையில் ஜிஹாத் தொடர்பான சட்டங்களை சுட்டிக்காட்டி இஸ்லாம் வன்முறையின் அடிப்படையில் அமைந்தது என இனங்காட்டி அது இந்த நாகரீகமடைந்த உலகிற்கு பொருத்தமானது அல்ல என நிரூபிக்க முற்பட்டனர். பலதாரமணம், விவாகரத்து தொடர்பாகவும் பல சந்தேகமான கேள்விகளை எழுப்பினார்கள்.
ஷரிஆவினை அதே வடிவில் எல்லாக்காலங்களிலும் அமுல்படுத்த முடியாது என்பது தொடர்பான பலகீனமான கருத்துக்களை சில இஸ்லாமிய மார்க்க அறிஞர்களைக் கொண்டே தோற்றுவித்தார்கள். பொதுநலன்(அல் மஸாலிஹ் அல் முர்ஸலா), நலனடைதல் (ரியாஅத் அல் மஸ்லஹா), வழக்காறுகளை அமுல் செய்தல் (தஹ்கீம் அல் உர்ஃப்), காலத்துக்கேட்ப விதிகளை மாற்றுதல் போன்ற புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தி முஸ்லிம்கள் தமது செயல்களுக்கான அளவு கோலாக ஷரிஆவினை முழுமையாக பயன்படுத்துவதற்கு பதிலாக இலாபநோக்கை பயன்படுத்துவதற்கு தூண்டினார்கள். இதன் விளைவாக முஸ்லிம்கள் தமது அளவுகோலாக ஹலால், ஹராம் கொள்வதை தவிர்த்து படிப்படியாக வேறு அளவுகோள்களை உள்வாங்க ஆரம்பித்தனர். சில அறிஞர்கள் எங்கெல்லாம் பலன் தெரிகிறதோ, அல்லாஹ்வின் சட்டமும் அதிலிருக்கிறது என்ற கொள்கைகளை முன்வைக்கத் தொடங்கினார்கள்.
மேற்குலகு இஸ்லாமிய பூமியை தமது நாசகார வேலைகளைக் கொண்டு ஆக்கிரமித்த வேளையில் அவர்கள் தமது அகீதாவை அங்கு அமுல்படுத்த முயற்சித்தனர். அதாவது மதத்தையும், வாழ்க்கையையும் வெவ்வேறாக பிரிக்கின்ற தமது அகீதாவினை முஸ்லிம் உலகில் நிறுவி, வாழ்வை ஹராம், ஹலால் அடிப்படையில் நோக்குவதற்கு பதிலாக இலாப நோக்கை அடிப்படையாக் கொண்டு நோக்கும் போக்கை அறிமுகப்படுத்தினார்கள்.
இதன் விளைவாக இலாபநோக்கை பல முஸ்லிம்கள் தமது வாழ்வின் அடிப்படையாக எடுத்துக்கொண்டனர். இதன் விளைவாக முஸ்லிம்களிடையே ஒருசில விடயங்களில் மாத்திரமே ஹராம், ஹலால் என்ற அளவுகோள் பயன்படுத்தப்பட்டது.
6) 1954ம் ஆண்டுகளில் இஸ்லாமிய உலகில் புதியதொரு வாழ்வியல் முறையை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் வளர்ச்சியடைந்தது. இந்த சிந்தனை தேசியவாதத்தையும், சோஷலிசத்தையும் பற்றி முஸ்லிம்கள் சிந்திப்பதற்கு வழிவகுத்தது. முதலாளித்துவத்தின் இலாபநோக்கையும், சோஷலிசத்தின் பரிணாம கோட்பாடு, சரித்திர வளர்ச்சியும் முன்னேற்றமும் போன்ற எண்ணக்கருக்களை பரிசீலிக்க முஸ்லிம் உலகு தயாரானது. உண்மையில் முதலாளித்துவத்தையும், சோஷலிசத்தையும் ஒன்றாக கலந்த ஒரு கலவை பற்றி சிந்திக்கப்பட்டது. ஆரம்பத்தில் இது ஒரு பிரபலமான சிந்தனையாக மட்டும் இருந்ததேயொழிய இதனை யாரும் அமுல்படுத்தவில்லை. எனினும் காலப்போக்கில் உருவான புதிய சூழலில் முதலாளித்துவத்தின் பயன் என்ற எண்ணக்கரு இந்த இடத்தை நிரப்பியது. மேற்குலகின் திட்டமிட்ட முயற்சியினாலும், பரிதொரு வழிமுறையைக்கொண்டு முற்றுமுழுதாக சமூதத்தை மாற்றவேண்டும் என்ற சிந்தனை இஸ்லாமிய உலகில் மேலோங்கியிருந்ததாலும், மேற்குலகின் முன்னேற்றத்துடன் இணைந்து தாமும் முன்னேற வேண்டும் என்ற எண்ணம் வலுப்பபெற்றிருந்ததாலும் இஸ்லாமிய உலகு வேறொரு வாழ்வியல் முறைக்குள் தள்ளப்பட்டது. இவ்வாறாக, இந்நிலை தொடர்ந்து 1964ம் ஆண்டுகளில் பெரும்பாலான புத்திஜீவிகளும், தலைவர்களும் முதலாளித்துவச்சிந்தனையை அமுல்படுத்த முன்வந்ததுடன், பொதுமக்களும் வழமைக்கு மாறாக இதனால் பாதிப்படைந்தனர்.
7) இதே வேளை இஸ்லாமிய அகீதாவோ வெறுமனே தனிமனிதனால் காவிச் செல்லப்படுகின்ற ஆன்மீக அகீதாவாக மாத்திரம் இருந்து வந்ததுடன் அது வாழ்வியல் ஒழுங்கில் தலையிடும் சக்தியை இழந்திருந்தது. எனவே வாழ்க்கை தொடர்பாகவும், வாழ்வின் வடிவமைப்பு தொடர்பாகவும் விளக்குகின்ற இஸ்லாமிய அகீதாவின் அரசியல் பரிமாணம் முஸ்லிம் உலகில் நடைமுறைப்படுத்தப்படாது செயலிழந்து போனதால் வாழ்வியல் விவகாரங்களுக்கான முஸ்லிம்களின் அளவுகோளாக ஹராம், ஹலால் கொள்ளப்படாது, இலாப நோக்கே முஸ்லிம்களின் வாழ்வின் இலட்சியமாக மாறியது.
8) எனவே முஸ்லிம்களின் உள்ளத்திலே, குறிப்பாக இஸ்லாமிய உலகிலே ஏற்பட்டுள்ள இந்நோயினை குணப்படுத்துவதற்கு இஸ்லாமிய அகீதாவின் அரசியல் பரிமாணத்தை காத்திரமான முறையில் முஸ்லிம்களுக்கு விளக்குவதுடன் அதனது ஆன்மீக பகுதியினை அதனுடன் இணைக்க வேண்டும்.
இதனை மேற்கொள்வதற்கு இஸ்லாமிய அகீதாவினை இந்த லௌகீக வாழ்க்கையுடன் இணைந்து சிந்திப்பதற்கு மக்களை தூண்டவேண்டும். மேலும் அல்லாஹ்வின் மீதான ஈமானுடனும், குர்ஆனை ஏற்றுக்கொள்வதுடனும் முஹம்மது(ஸல்) அவர்களை ஏற்றுக்கொள்வதுடனும், அவரது வழிமுறைகளை பின்பற்றுவதுடனும், அவர் கொண்டு வந்த ஷரிஆவின்படி முஸ்லிம்கள் வாழ்வதுடனும் இதனை நாம் சம்பந்தப்படுத்தி தெளிவு படுத்த வேண்டும். அவ்வாறு செய்யும்போது முஸ்லிம்கள் தமது வாழ்வுக்கான அளவுகோள் என்ன என்பதை இனம்கண்டு கொள்ள உதவும். ஓரு முஸ்லிமின் வாழ்வின் அளவுகோள் தற்போது நடைமுறையிலுள்ள இலாபநோக்கோ, பரிணாம கோட்பாடோ அல்ல, மாறாக அல்லாஹ்வால் தீர்மானிக்கப்பட்ட ஹராம், ஹலால் மாத்திரம்தான் அவர்களின் அளவுகோளாகும் என்பதை அவர்கள் புரிந்து கொள்வார்கள்.
உண்மையில் அகீதா என்பது மிக துல்லியமான, மிக உறுதியான நம்பிக்கையாகும் (அல் தஸ்தீகுள் ஜாஸீம்) உறுதிபாடு இல்லாவிடின் அது அகீதாக கொள்ளப்படாது. எனவே தயக்கமற்ற, மயக்கமற்ற இந்த நம்பிக்கைக்கான அடிப்படைகளை உறுதி செய்வதில் சிறிதளவேனும் மயக்கமுள்ள தரவுகளை, ஆதாரங்களை அடிப்படையாக ஏற்றுக்கொள்ள முடியாது. அவற்றைக்கொண்டு அகீதாவை வரையறுக்கவும் முடியாது. இந்த விடயத்தை பொருத்தவரை மாற்று தீர்வுக்கள் எதுவுமில்லை. உதாரணமாக, சில அறிவிப்புக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டாலும், அதிலே சிறிதளவில் மயக்கம் காணப்பட்டாலும் அது அகீதாவின் பகுதியாக கொள்ளப்படுவதில்லை. இஸ்லாத்தில் குறித்த ஒரு விடயம் அனுமதிக்கப்பட்டது என கூறப்பட்டால் உடனே அது அகீதாவாகக் கொள்ளப்படாது. மாறாக அது ஒரு சாதாரண நம்பிக்கையாகவே கொள்ளப்படும். உறுதியாக நம்பிக்கை கொள்வது எனும்போது அது குர்ஆனை நாம் நம்பிக்கை கொள்வதற்கு ஒத்தது. குர்ஆன் உறுதியாக நம்புவது என்பது அது அல்லாஹ்வின் வேதமாகும் என உறுதியாக நம்புவதாகும். ஆகவே அது மாத்திரம்தான் ஏற்றுக்கொள்ளத்தக்கது ஏனெனில் அது அல்லாஹ்வின் வேதமாகும். இந்த விடயத்தை பொருத்தவரையில் குர்ஆன் ஏற்றுக்கொள்ளத்தக்கது, ஏனையவை ஏற்றுக்கொள்ளத்தக்கவை அல்ல என கூறினால் அது உறுதியான நம்பிக்கையாக கொள்ளப்படாது. மாறாக அது சாதாரண நம்பிக்கையாகவே கொள்ளப்படும். அதேபோல ஹதீஸ்களை உறுதியாக நம்பிக்கை கொள்ளுவது என்பது, (தரமான அறிவிப்புக்களையுடைய ஹதீஸ்களாக அவை இருந்தால்) ரஸ}ல் (ஸல்) அவர்களின் ஹதீஸ்கள் (சொல், செயல், அங்கீகாரம்) மாத்திரமே ஏற்றுக்கொள்ளக்கூடியது என நம்புவதாகும். ஏனெனில் அவையும் அல்லாஹ்வின் தூதாகும்.
மாறாக ஹதீஸ்கள் ஏற்றுக்கொள்ளத்தக்கவை, ஏனையவை ஏற்றுக்கொள்ளத்தக்கவையல்ல எனக்கூறினால் அது உறுதியான நம்பிக்கையாக கருத முடியாது. சாதாரண நம்பிக்கையாகவே கொள்ளப்படும். எனவே அகீதா என்பது உறுதிப்பாடுடன் தொடர்ப்புபட்டது. உறுதிப்பாடு குறைவாக இருந்தால் அது உறுதியான நம்பிக்கையாக கொள்ளப்படாது.
ஷரிஆவினை அகீதாவுடன் தொடர்புபடுத்தும்போது, ஓருவர் ஷரிஆ இலாபநோக்கு கருதியே வந்துள்ளது எனக்கருதுவாரானால் அவர் இலாபநோக்கு என்ற அடிப்படையைக்கொண்டு ஷரிஆவினை நோக்க முற்படுவதால் அவரது கருத்து இலாபநோக்கு என்ற எண்ணக்கருவினால் பாதிப்படைந்துள்ளது. எனவே ஷரிஆவினை அகீதாவுடன் அவர் தொடர்புபடுத்தும் விதத்தில் தவறு ஏற்பட்டு விடுகின்றது. ஷரிஆவின் சட்டங்களானது, ஷரிஆவின் ஆதாரங்களைக்கொண்டே தீர்மானிக்கப்படுகிறது என்ற கருத்தை முன்வைப்பதன் மூலம் இந்தத்தவறான கருத்திலிருந்து அத்தகையோரை பாதுகாக்கலாம். அதாவது ஷரிஆவிற்கு ஆதாரம் அல்லாஹ்விடமிருந்து வஹியாக வந்தவையே ஒழிய இலாபநோக்கு அல்ல.
உதாரணமாக இந்தக்காலத்திற்கு ஷரிஆ சட்டங்கள் பொருத்தமானவையாக தெரியவில்லை, இன்றைய வளர்ச்சிபெற்ற உலகிற்கு இலாபநோக்கை அடிப்படையாக்கொண்ட விதிகள், அல்லது நடைமுறையிலுள்ள சட்டங்களே பொருத்தமானது என ஒரு முஸ்லிம் நம்புவாரானால் அவரது அகீதாவில் தவறிருப்பதுடன் அவரது பார்வையிலும் கோளாறு இருக்கின்றது. அல்லாஹ்வையும், ரஸ}லையும் நம்பிக்கை கொள்ளும் விடயத்துடன் அவரது சிந்தனை முரண்படுகிறது என்பதை தெளிவுபடுத்துவதைக்கொண்டு அவரை நேர்வழிப்படுத்த வேண்டும். அல்லாஹ்வின் வேதம் எல்லாக்காலங்களுக்கும் பொருத்தமானது என அல்லாஹ்வின் வஹியில் அறிவிக்கப்பட்டுள்ளமையை அவருக்கு தெளிவுபடுத்த வேண்டும். இதனை அவர் ஏற்றுக்கொண்டால் இலாபநோக்கு என்ற சிந்தனையுடன் ஷரிஆவை இணைப்பதிலுள்ள தவறினை உணர்த்த நாம் முற்பட முடியும். அதாவது அல்லாஹ் கூறியுள்ள ஹராம், ஹலாலைக்கொண்டு மக்களின் வாழ்வை ஒழுங்குபடுத்துவதிலும், இலாபநோக்கு என்ற எண்ணக்கருவை கொண்டு வாழ்வை ஒழுங்குபடுத்துவதிலும் முரண்பாடு எதுவுமில்லை என அவர் கூறினால், அதற்கு விடையாக ஹராம், ஹலால் என்ற அளவுகோளுக்கு ஷரிஆ ஆதாரங்களே அடிப்படையாக உள்ளன, மாறாக பயன் அல்ல என்ற விடயத்தை விளக்குவதன் மூலம் அந்தச்சிந்தனையை நாம் திருத்த முடியும்.