தேசிய குடிமக்கள் பதிவேட்டை (என்ஆர்சி) நாடு முழுவதும் அமல்படுத்தும் திட்டம் இப்போது இல்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம் அளித்துள்ளார்.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கும், தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கும் (என்ஆர்சி) பல்வேறு மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. டெல்லி, வடகிழக்கு மாநிலங்கள், உத்தரப் பிரதேசம், கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. அதில் வன்முறையும் நடந்தன. இதில் ஏறக்குறைய 20 பேர் வரை பலியானார்கள்.
குடியுரிமைத் திருத்தச் சட்டமும், என்ஆர்சியும் முஸ்லிம்களுக்கு எதிரானது என்று காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டிய நிலையில், அது இந்திய முஸ்லிம்ளுக்கு எதிரானது இல்லை என்று பாஜக தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இருப்பினும் என்ஆர்சிக்கும், குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கும் எதிராக தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வந்தன.
கடந்த ஞாயிறன்று டெல்லியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “தேசிய குடிமக்கள் பதிவேடு குறித்து முஸ்லிம்கள் அச்சப்படுகிறார்கள். ஆனால், கடந்த 2014-ம் ஆண்டு நாங்கள் ஆட்சிக்கு வந்ததில் இருந்து அதுகுறித்து விவாதிக்கவே இல்லை. மத்திய அமைச்சரவையிலோ அல்லது நாடாளுமன்றத்திலோ விவாதிக்கவில்லை” என்று தெரிவித்தார்.
ஆனால், பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, மேற்கு வங்கம், ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்களுக்குச் சென்ற போது என்ஆர்சி நாடு முழுவதும் கொண்டுவரப்படும் என்று பேசினார். நாடாளுமனறத்தில் பேசுகையில் கூட என்ஆர்சி நாடு முழுவதும் கொண்டுவரப்படும் என்று அமித் ஷா பேசினார்
உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், பிரதமர் மோடியும் இருவேறு கருத்துகளைக் கூறுவதாக காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் கட்சிகள் விமர்சிக்கத்தொடங்கின.
இதையடுத்து, உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று செய்தி நிறுவனம் ஒன்றுக்கு என்ஆர்சி குறித்து விளக்கம் அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
”தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கும் (என்ஆர்சி) தேசிய மக்கள்தொகை பதிவேட்டுக்கும் (என்பிஆர்) எந்தவிதமான தொடர்பும் இல்லை என்று இன்று தெரிவித்துக் கொள்கிறேன்.
பிரதமர் மோடி கூறியது முற்றிலும் சரியானது. என்ஆர்சியை நாடு முழுவதும் நடைமுறைப்படுத்துவது குறித்து நாடாளுமன்றத்திலோ அல்லது மத்திய அமைச்சரவையிலோ எந்தவிதமான விவாதங்களும் நடத்தப்படவில்லை.
என்பிஆர் ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுவதாகும். ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் இது தொடங்கப்பட்டு, இதை நாங்களும் தொடர்ந்து வருகிறோம். என்பிஆர் என்பது மக்கள் தொகை பதிவேடு. ஆனால் என்சிஆர் என்பது, மக்கள் தங்களைப் பதிவு செய்வதாகும். என்பிஆர் மூலம் பெறப்படும் தகவல்களை என்ஆர்சி செயல்படுத்தப் பயன்படுத்தமுடியாது. இரு பணிகளும் தனித்தனியாகவை.
தேசிய மக்கள் தொகை பதிவேடு நடத்துவதற்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும், கேரள முதல்வர் பினராயி விஜயனும் மறுப்பு தெரிவித்துள்ளார்கள். நான் இரு முதல்வர்களிடமும் பணிவுடன் கேட்டுக்கொள்வது என்னவென்றால், அதுபோன்ற எந்த நடவடிக்கையும் எடுக்காதீர்கள். அவர்கள் இருவரும் முடிவுகளை மறு ஆய்வு செய்ய வேண்டும். இருவரின் அரசியல் காரணங்களுக்காக, ஏழைகளுக்கு வளர்ச்சித் திட்டங்கள், உதவிகள் கிடைக்காமல் போய்விடும்.
எங்கள் நிலைப்பாட்டை எப்போதும் ஒவைசி எம்.பி.எதிர்கொண்டுதான் இருக்கிறார். நாங்கள் சூரியன் கிழக்கே உதிக்கும் என்றால், அவர் மேற்கே என்றுதான் கூறுவார். ஆனால் அவருக்கு உறுதியளிப்பது என்னவென்றால், குடியுரிமைச் சட்டத்தாலும், என்ஆர்சியும் எந்தவிதமான தொந்தரவும் தராது”.
இவ்வாறு அமித் ஷா தெரிவித்தார்