பிரிட்டனின் பொதுத் தேர்தலுக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், ஆளும் கன்சவேட்டிவ் கட்சி மற்றும் பிரதான எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி ஆகியன வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கைகளில் இலங்கை தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள விடயங்கள் தற்போது சர்ச்சையை தோற்றுவித்துள்ளன.
வெளிநாட்டு தேர்தல் ஒன்று என்ற போதிலும், அதனுடன் தொடர்பில்லாத மக்கள் மத்தியில்கூட இதனால் பிரச்சனை எழுந்துள்ளதாக இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவிக்கின்றார்.
இலங்கையில் இனங்களுக்கு இடையில் காணப்படும் பிரச்சினைக்கு ‘இரண்டு நாடுகளுக்கிடையிலான தீர்வு” (two-state solution) என பிரிட்டனை ஆளும் கன்சவேட்டிவ் கட்சி தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறியுள்ளதாக அவர் ஊடக சந்திப்பொன்றின் ஊடாக சுட்டிக்காட்டினார்.
”பிரிட்டனின் நாடாளுமன்றத் தேர்தல் 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 12ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்காக கன்சவேட்டிவ் கட்சி தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை நவம்பர் மாதம் 25ஆம் தேதி வெளியிட்டது. இந்த தேர்தல் விஞ்ஞாபனத்திலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தேர்தல் விஞ்ஞாபனத்தின் 53ஆவது பக்கத்தில் இலங்கையில் காணப்படுகின்ற பிரச்சினைக்கு தீர்வாக, இலங்கைக்குள் இரண்டு நாடுகள் உருவாக்கப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது” என அவர் கூறினார்.
இந்த விடயத்தை தெரிவித்த உதய கம்மன்பில, தேர்தல் விஞ்ஞாபனத்தின் 53ஆவது பக்கத்திலுள்ள விடயங்களை சிங்கள மொழியில் விளக்கி தெளிவூட்டினார்.
”உலகம் முழுவதும் நல்லிணக்கம், உறுதிப்பாடு மற்றும் நியாயம் ஆகியவற்றை ஏற்படுத்துவதற்கு சர்வதேசத்தின் ஆரம்ப அரசாங்கம் என்ற ரீதியில் நாம் ஒத்துழைப்புக்களை வழங்கவுள்ளோம். சைப்ரஸ், இலங்கை மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் தற்போது அல்லது இதற்கு முன்னர் காணப்பட்ட பிரச்சனைகளுக்கு இரண்டு நாடுகளின் ஊடாக தீர்வு என நாம் ஒத்துழைப்புக்களை வழங்கவுள்ளோம்.” என தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறப்பட்ட விடயத்தை உதய கம்மன்பில வாசித்து தெளிவூட்டினார்.
நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவின் இந்த கருத்தை தொடர்ந்து, இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டது.
கன்சவேட்டிவ் கட்சியின் இந்த அறிவிப்பை தொடர்ந்து, இலங்கை வெளிவிவகார அமைச்சின் ஆலோசனையுடன் லண்டனிலுள்ள பிரிட்டனின் இலங்கை தூதரகத்தின் ஊடாக தமது எதிர்ப்பை வெளியிட்டதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிடுகின்றது.
கன்சவேட்டிவ் கட்சியின் தலைவர் ஜேம்ஸ் கிலேவர்லியிற்கு தமது எதிர்ப்பை வெளியிட்டு கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு கூறுகின்றது.
இலங்கைக்கு இரண்டு நாடுகளின் தேவை கிடையாது என்பதை வெளிப்படுத்தும் வகையிலேயே தமது கருத்துக்கள் அடங்கிய கடிதத்தை லண்டனிலுள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.
பிரிட்டனை ஆட்சி செய்த எந்தவொரு கட்சியும் இந்த நிலைப்பாட்டில் இதுவரை இருக்கவில்லை எனவும், முறையாக ஆட்சி பீடம் ஏறிய அரசாங்கங்கள் ஒருமித்த இலங்கைக்குள் சமாதானம், நல்லிணக்கத்திற்காக தொடர்ந்தும் ஒத்துழைப்புக்களை வழங்கி வந்ததாகவும் இலங்கை வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பிரிட்டனிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயம், கன்சவேட்டிவ் கட்சியின் சிரேஷ்ட தலைவர் ஒருவரை தொடர்புக் கொள்ள முயற்சித்துள்ள நிலையில், அந்த கட்சியின் பிரதித் தலைவர் போல் ஸ்கலி கடந்த 27ஆம் தேதி மின்னஞ்சல் மூலம் பதில் வழங்கியுள்ளார்.
”இலங்கை தொடர்பில் கன்சவேட்டிவ் கட்சி கொண்டுள்ள நிலைப்பாட்டில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை. இரண்டு நாடுகளுக்கு இடையிலான தீர்வு என்ற விடயமானது, மத்திய கிழக்கு நாடுகளான இஸ்ரேல் – பாலஸ்தீனம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது. இலங்கை மற்றும் சைப்ரஸ் ஆகிய நாடுகளில் பிரிந்துள்ள சமூகங்களுக்கு இடையில் நல்லிணக்கம், சமாதானம் ஆகியவற்றை கட்டியெழுப்புவதற்கான முயற்சிகளை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும்” என போல் ஸ்கலி கூறியுள்ளார்.
பிரிட்டனின் சுற்றாடல், உணவு மற்றும் கிராமிய விவகாரத்திற்கு பொறுப்பான செயலாளர் தெரேசா வில்லியர்ஸினால், கன்சவேட்டிவ் கட்சியின் நிலைப்பாட்டு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு குறிப்பிடுகின்றது.
தெரேசா வில்லியர்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட கருத்தை இலங்கை வெளிவிவகார அமைச்சு மேற்கோள்காட்டியுள்ளது.
”இரண்டு நாடுகள் என்ற தீர்வுத்திட்டமானது, மத்திய கிழக்கு நாடுகளுக்கே உரித்தானது. இலங்கை மற்றும் சைப்ரஸ் ஆகிய நாடுகளுக்கு அது பொருத்தமற்றது. நான் இந்த விடயம் தொடர்பில் வெளிவிவகார செயலாளரிடம் கேட்டறிந்துக் கொண்டேன். அவர் உறுதியான நிலைப்பாட்டிலேயே உள்ளார்” என பிரிட்டனின் சுற்றாடல், உணவு மற்றும் கிராமிய விவகாரத்திற்கு பொறுப்பான செயலாளர் தெரேசா வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், பிரிட்டன் கன்சவேட்டிவ் கட்சியின் பிரதித் தலைவர் போல் ஸ்கலி டிசம்பர் 3ஆம் தேதி ட்விட்டர் ஊடாக இந்த விடயத்தை தெளிவூட்டியுள்ளார்.
”கன்சவேட்டிவ் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தின் இலங்கை அரசு அமைப்பது தொடர்பில் எந்தவித கருத்தும் கூறப்படவில்லை. இரண்டு நாடுகளின் தீர்வு என்பது மத்திய கிழக்கு நாடுகளுக்கு மாத்திரமே” என அவர் கூறியுள்ளார்.
எனினும், கன்சவேட்டிவ் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தின் 53ஆவது பக்கத்தில் கூறப்பட்டுள்ள விடயங்களை அடிப்படையாகக் கொண்டு இலங்கையுடன் தொடர்புடைய சமூகங்களுக்கு இடையில் தற்போது விவாதங்கள் எழுந்துள்ளதாக அறிய முடிகின்றது.
இதேவேளை, லேபர் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் இலங்கை தொடர்பில் சில விடயங்கள் கூறப்பட்டுள்ளன.
”இலங்கையில் தமிழ் மற்றும் முஸ்லிம் ஆகிய சிறுபான்மை சமூகங்களின் மனித உரிமைகளை பாதுகாப்பதற்காக நாம் ஐக்கிய நாடுகள் அமைப்புடன் இணைந்து செயற்படுவோம்” என அதில் கூறப்பட்டுள்ளது.