இன்றைய நவீன காலத்தில் இஸ்லாத்தால் மிகத்தெளிவாக தடுக்கப்பட்ட விடயங்களை அனுமதிப்பதற்காக சில பிக்ஹின் அடிப்படைகள் (உசூல்கள்) துஷ்பிரயோகம் செய்யப்படும் துரதிஷ்டமான நிலை உருவாகியிருக்கிறது. இவற்றுள் அதிகளவில் துஷ்பிரயோகம் செய்யப்படும் ஒரு முக்கிய அடிப்படைதான் தரூரா. வட்டிக்கடன்களைப் பெறுவது, ஹராமான விடயங்களும் கலந்த தொழில்களில் ஈடுபடுவது, இலஞ்சத்தில் ஈடுபடுவது, இஸ்லாமல்லாத ஜனநாயம் போன்ற குப்ர் அரசியலில் ஈடுபடுவது போன்ற பல ஹராமான செயல்களை நியாயப்படுத்துவதற்காக தரூரா என்ற இந்த அடிப்படை அடிக்கடி பயன்படுத்தப்படுவதை நாம் காண்கிறோம்.
சதாரணமாக இதனை விளக்குவதாக இருந்தால் ஒருவரின் உயிர் கடுமையான பட்டினியின் காரணமாக பிரிந்துவிடும் என்ற ஆபாயம் நிலவினால் அவர் ஹாராமான உணவான பன்றியின் மாமிசத்தை உட்கொண்டாவது தன்னைப் பாதுகாத்துக்கொள்ள முடியும். அதன்போது பன்றியின் மாமிசம் அவருக்கு ஹலாகிவிடும் என்ற இந்த உதாரணத்தை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். இவ்வாறான ஒரு உதாரணத்தைக் கூறிவிட்டு நிர்ப்பந்தம் என்று தாம் கருதுகின்ற எல்லாத்தருணங்களிலும் ஹராமான விடயங்கள் சடுதியாக ஹலாலாகிவிடும் என்று பலர் தப்புக்கணக்கு போடுகின்றனர். உசூலுல் பிக்ஹிலே பல நிபந்தனைகளுடன் வரையறுக்கப்பட்ட அடிப்படையில் மாத்திரம் பயன்படுததுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ள ‘தரூரா’ என்ற அடிப்படையை இவர்கள் சர்வசதாரணமாக பயன்படுத்த முற்பட்டு விடுகின்றனர்.
தானாகவே செத்ததும், இரத்தமும், பன்றியின் மாமிசமும், அல்லாஹ் அல்லாத பெயர் சொல்லப்பட்டதும் ஆகியவைகளைத்தான் உங்கள் மீது ஹராமாக ஆக்கியிருக்கிறான்; ஆனால் எவரேனும் பாவம் செய்யாத நிலையில் – வரம்பு மீறாமல் (இவற்றை உண்ண) நிர்ப்பந்திக்கப்பட்டால் அவர் மீது குற்றமில்லை; நிச்சயமாக அல்லாஹ் கருணைமிக்கோனும், மன்னிப்பவனுமாக இருக்கின்றான். (அல் பகறா:173)
இந்த திருமறை வசனம் ஒருவர் மிகவும் நிர்பந்தமான ஒரு நிலையை அடைந்துவிடும்போது அவர் தன்னை மரணத்திலிருந்து காத்துக்கொள்ளக்கூடிய அளவிற்கு மாத்திரம்; ஹராமான உணவை உட்கொள்வதை அனுமதிக்கிறது. எனினும் இந்த அடிப்படை விதிவிலக்கானதாகும். இந்த சட்டங்கள் விசேடமான சந்தர்ப்பங்களுக்காக விசேடமான ஆதாரங்களின் அடிப்படையில் பயன்படுத்தப்படுபவைகளாகும். அவற்றை எப்போதெல்லாம் நாம் ஒரு கடினமான நிலையை சந்திக்கிறோமோ அப்போதெல்லாம் ஷரீஆவின் சட்டங்களை எமக்கு ஏற்றாற்போல் வளைத்துக்கொள்வதற்காக நாம் பயன்படுத்த முடியாது. அது ஷரீஆவுக்கு எதிரான மிகத் தெளிவான அத்துமீறலாகும்.
இதேபோல பலாத்காரப்படுத்தும்போது குப்ரினுடைய வார்த்தைகளை கூறுவதை இஸ்லாம் அனுமதித்திருக்கிறது. கடுமையான சித்திரவதைகளை நிறுத்துவதற்கும், மரணம் சம்பவிப்பதை தடுப்பதற்காகவும் இவ்வாறான ஒரு செயலில் ஈடுபடுவதை இஸ்லாம் ருக்ஸா(சட்ட அனுமதியாக)வாகக் கருதுகிறது.
இந்த இடத்தில் தரூரா என்று அழைக்கப்படும் தேவை அல்லது நிர்ப்பந்தம் என்ற அம்சம் எது என்பதை சரியாகப் புரிந்து கொள்ள நாம் கடமைப்பட்டுள்ளோம். இந்த அடிப்படை குறித்து பாராம்பரிய உலமாக்கள் என்ன கருத்தில் உள்ளார்கள் என்பதை இங்கே சற்று நோக்குவோம்.
இமாம் அர் ராஷி அல் ஜஸ்ஸாஸ் அல் ஹனஃபி தனது அஹ்காம் அல் குர்ஆனிலே (பாகம்1/159) குறிப்பிடும்போது, “இங்கே தேவை என்பது, ஒருவர் அவ்வுணவை(அடிப்படையில் தடுப்பப்பட்டவை) தவிர்த்துக்கொண்டால் அவரின் உயிருக்கோ, உறுப்புக்களுக்கோ மிகுந்த ஆபத்து ஏற்பட்டுவிடும் என்ற நிலையையே குறிப்பிடுகிறது.” என்கிறார்.
இப்னு குதாமா அல் மக்தஸி அல் ஹன்பலி அவரது அல் முஹ்னியில்(9/331) குறிப்பிடும்போது, “ தேவை என்பது நிறுவப்படுமானால், அந்தத் தேவை அந்த உணவை தவிர்த்துவிட்டால் அது பட்டினிக்கு வழிவகுக்கும் என்ற வகையைச்சாரும்…” என்கிறார். அவர் தொடர்ந்து குறிப்பிடும்போது, “இந்த சலுகைக்கான காரணம் அழிவிலிருந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்வது என்ற மஸ்லஹா(நற்பலன்) என்பது தூய்மையற்றதை(நஜீஸானதை, ஹராமானதை) தவிர்ப்பதை விடச் சிறந்ததாகும் என்பதனாலாகும்…”
இமாம் அபு ஹாமித் அல் கஸ்ஸாலி அல் ஷாஃபி அவரது வாசித் என்ற நூலிலே (7/168) குறிப்பிடும்போது, “தேவை என்பதன் ஊடாக நாம் குறிப்பிடுவது என்னவேன்றால், உதாரணமாக ஒருவர் அதனை உண்ணாது தவிர்த்தால் அது தனது அழிவுக்கு வழிவகுக்கும் என்றோ அல்லது மரணத்தை நோக்கி இட்டுச்செல்லக்கூடிய ஒரு நோயினை உருவாக்கும் என்றோ பயப்படும் நிலையையே குறிக்கிறோம்…”
இமாம் இப்னு ஜௌஷி அல் மாலிகி தனது அல் கவானின் அல் பிக்ஹிய்யாவில்(பக்கம்116இல்) குறிப்பிடும்போது, “ தேவை என்பது மரணபயம் என்பதாகும். மேலும் ஒருவர் தனது மரணத்தை தானே சான்றுபகரும் அளவுக்கு பொறுமையைக் கடைப்பிடிக்குமாறு (ஷரீயத்தில்) ஒரு நிர்ப்பந்தமுமல்ல…” என்கிறார்.
மிகக்கடுமையான சூழ்நிலைகள் என்று வரும்போது அது தொடர்பாக ஷரீஆ நோக்கும் கோணம் வித்தியாசமானது. விதிவிலக்கானது. அத்தகைய சூழ்நிலைகளில் கூட தரூரா போன்ற அடிப்படைகளை பயன்படுத்துவதில் இமாம்கள் நிபந்தனைகள் விதிக்கிறார்கள்.
1) இதற்குமேல் தாங்கிக்கொள்ளவே முடியாத ஒரு சூழ்நிலையில் அந்த அழிவை தடுத்து நிறுத்த அல்லது குறைத்துக்கொள்வதற்கு இதனை விட வேறொரு வழியும் இல்லாத நிலையில் அடிப்படையில் (அசலில்) தடுக்கப்பட்ட ஒரு காரியத்தில் ஈடுபடலாம்…
2) அவ்வாறு அதனைப் பயன்படுத்தும்போதும் அது எம்மை அழிவிலிருந்து பாதுகாத்துக்கொள்வதற்கு தேவையான அளவில் மாத்திரம் மட்டும் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் பயன்படுத்தப்பட வேண்டும். ஒரு மடக்கு மதுபானம் எமது உயிரைப்பாதுகாக்குமாக இருந்தால் அல்லது ஒரு துண்டு பன்றியின் மாமிசம் அதனைச் செய்யுமாக இருந்தால் முழு போத்தலையும் குடிப்பதையோ, அல்லது ஹராமான மாமிசத்தை அலாதியாக உண்பதையோ இஸ்லாம் அனுமதிக்கவில்லை.
3) மேலும் செய்யப்படும் அச்செயனினால் நாம் ஆபத்திலிருந்து பாதுகாக்கப்படுவோம் என்பதை உறுதிப்படுத்திக் கொள்வதிலும் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும். உதாரணமாக கடுமையான தாகத்தின் காரணமாக ஒருவர் மரணிக்கும் சூழலில் மதுபானத்தை அருந்துவது கூட ஆகுமானது என்பதில் அறிஞர்கள் அடிப்படையில் உடன்பட்டாலும் மதுபானம் தாகத்தைத் தணிக்குமா அல்லது மென்மேலும் அதிகரிக்குமா என்ற யதார்த்தத்தை அடிப்படையாக வைத்து அதனை அனுமதிப்பதா இல்லையா என முரண்படுகிறார்கள். உதாரணமாக இமாம் ஷாபிஃ மதுபானம் தாகத்தை அதிகரிக்கும் என்கிறார்கள். அதேபோல மருந்துகளில் தடைசெய்யப்பட்ட பதார்த்தங்களும் அடங்கியிருந்தால் அதனை உட்கொள்ளலாமா இல்லையா என்பது தொடர்பிலும் கருத்து வேறுபடுகிறார்கள். இறுதியாக மேலும் சில அறிஞர்கள் தடுக்கப்பட்ட எதனையும் பயன்படுத்த மாட்டேன் என்று ஒருவர் மறுத்துவிட்டாலும் அதனை தவறில்லை என்று கூறுகிறார்கள். (மஜ்முஅத் அல் புஉத் அல் பிக்ஹி – கலாநிதி அப்துல் கரீம் ஷைதான் பக்கம் 141-214)
4) அவ்வாறு நாம் பயன்படுத்தினாலும் நாம் கைக்கொள்ளும் அந்த வழிமுறை பிறரின் உரிமையைப் பறிக்காதிருக்க வேண்டும். இன்னொரு விதத்தில் சொன்னால் பிறரின் உரிமையைப்பறிக்காத ஒரு வழியை மாத்தி;ரம்தான் நாம் தேர்ந்தெடுக்க வேண்டும். உதாரணமாக கடுமையான பட்டினியின்போது கூட இறந்த ஒரு மனிதரின் மாமிசத்தை உண்பதற்கு அறிஞர்கள் தடை விதிக்கிறார்கள். ஏனெனில் அவ்வாறு செய்வது இறந்த மனிதரின் உரிமையைப் பறிப்பதாகும். அடுத்த ஒரு சிறந்த எடுத்துக்காட்டுத்தான் கடலிலே மூழ்கின்ற படகின் உதாரணமாகும். படகு மூழ்கின்ற நிலையில் அதன் பாரத்தை குறைப்பதற்காக படகிலிருக்கும் சிலரை கடலிலே தூக்கி எறிந்துவிட்டு உள்ளேயிருக்கும் பெரும்பான்மையானவர்களை பாதுகாக்கலாம் என்ற நிலை தோன்றும்போது அதனைச் செய்வதனையும் பெரும்பாலான அறிஞர்கள் தடைவிதிக்கிறார்கள். அவ்வாறு செய்வது தரூராவை பக்கச்சார்பாக பயன்படுத்துவதாகும்.
இமாம் சுயூதி தனது அஸ்பாஹ் வல் நத்ஹைர் பக்கம் 63இல் “நிர்ப்பந்தமான ஒரு சூழலில் இறந்தவொன்றின் மாமிசத்தை உண்பது பிறரின் பணத்தை(உணவு வாங்குவதற்காக) திருடுவதைவிட முதன்மைப்படுத்தப்படும்.“ என்று பிறரின் உரிமைகளை பறிக்காதிருத்தலைப் பற்றி குறிப்பிடுகிறார்.
எனினும் இந்த நிபந்தனைக்கு ஒரு சில விதிவிலக்குகள் இருக்கின்றன. அதனை சுருக்கமாக கூறுவது பூரணத்தெளிவுக்கு உதவலாம் என்பதால் இங்கே குறிப்பிடுகின்றேன்.
உதாரணமாக முஸ்லிம்களின் எதிரிப்படையொன்று தம்மை பாதுகாப்பதற்காக தம்மிடமுள்ள முஸ்லிம் கைதிகளை தமது முன்னரங்குகளில் மனிதக்கவசங்களாக நிறுத்துவார்களாக இருந்தால், எதிரியை வீழ்த்துவதற்கு வேறுவழியே இல்லையென்ற நிலையில் இஸ்லாமிய அரச மட்டத்தில் அது ஒரு தரூராவாக கருதப்பட்டு அந்த முஸ்லிம் மனிதக்கவசங்களையும் சேர்த்து தாக்குதல்களுக்கு உள்ளாக்குவது அனுமதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக யுத்தகளங்களில் இலக்கு வைக்கப்படாத சேதங்கள் தவிர்க்கமுடியாமல் ஏற்படுவதை இஸ்லாம் சில சைக்கினைகளினூடாக அனுமதித்திருக்கிறது. இத்தகைய சூழலை அறிஞர்கள் தரூரா குல்லியா அதாவது அனைத்து முஸ்லிம்களுக்குமான தரூராவாக(இறந்த முஸ்லிம்களுக்கும் அந்த சூழலில் அது தரூராதான்) கருதுகிறார்களேயொழிய சிலருக்கு பாதிப்பை ஏற்படுத்தி ஏனையோரை பாதுகாக்கும் நடவடிக்கையாக அதனைக் கருதவில்லை. ஏனெனில் முஸ்லிம் அரசொன்று அதனையும், அதன் மக்களையும் அவை பிரதிநிதித்துவப்படுத்தும் இஸ்லாத்தையும் எதிரிகளிடமிருந்து பாதுகாப்பது அதிமுக்கிய விடயமாகும்.
எனவே மேலே குறிப்பிட்ட நிபந்தனைகளை கருத்திற்கொண்டே தரூராவை பயன்படுத்துவதை இஸ்லாம் அனுமதிக்கிறது என்பதை நாம் அவதானத்தில் கொள்ள வேண்டும்.
நான்கு முக்கிய மத்ஹப்களும், சொல்லப்போனால் ஏறத்தாழ அனைத்து முக்கிய உலமாக்களும் தரூராவை இஸ்லாமிய சட்டக்கலையின் அடிப்படையில் மிகக்கடுமையான சூழல்களில் பயன்படுத்துவதை அனுமதிக்கிறார்கள். இந்த அனுமதி பொதுவான அனுமதியல்ல. அது மிக விசேடமான சந்தர்ப்பங்களுக்கு மாத்திரம் மட்டுப்பட்டது. அது ஒரு அசல் சட்டமல்ல. அதனை பொதுவாக அனைத்து முஸ்லிம்களுக்கான சட்டமாக்க நிச்சயமாக முடியாது.
எனவே ஒருவர் காலங்காலமாக நாங்கள் வாடகை வீட்டில் இருக்க முடியாத நிலையில் வட்டி அடிப்படையிலான அடமான வீட்டை வாங்க நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளேன். அது எனது தரூரா என வாதாட முடியாது. அல்லது அவ்வாறு எவரும் பத்வா வழங்கி அவருக்கு வழியைத்திறந்து விட இயலாது. அதேபோல ஒருவர் எனது நாட்டில் எந்தவொரு விடயத்தையும் இலகுவாக செய்து கொள்ள முடியாது. அதனால் இலஞ்சத்தைச் செலுத்தி அதனை அடைந்து கொள்ள முயற்சித்தேன்; என சொல்ல முடியாது. அல்லது ஒருவர் ஒரு உணவகத்திலே வேலை செய்துகொண்டு அங்கே மதுபானத்தையும் சேர்த்துப் பரிமாற நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளேன். என்ன செய்வது? அதுதான் எனது வேலை நிர்ப்பந்தத்தின் அடிப்படையில் அதனை செய்து வருகிறேன் என்று குறிப்பிட முடியாது. அல்லது ஒரு வங்கியில் காசாளராக வேலை செய்யும் ஒருவர் வட்டியுடன் தான் சம்பந்தப்படுவதை நிர்ப்பந்தம் என நியாயப்படுத்த முடியாது. வாக்களிக்காவிட்டால் எம்மை கொலை செய்து விடுவார்கள் அல்லது நாட்டை விட்டு துரத்தி விடுவார்கள் அல்லது சிறையில் அடைத்து விடுவார்கள் என்ற யதார்த்தம் இருந்தாலேயொழிய இஸ்லாம் அமூல்படுத்தப்படாத ஆட்சிக்கோ, ஆட்சித் தலைமைக்கோ வாக்களிப்பதும் இந்த வகையிலேயே சாரும்.
எமது வாழ்வில் சில இலகுவான தீர்வுகளை பெற்றுக்கொள்வதற்காக தரூரா என்ற உயிர்போகும் அல்லது அதையொத்த கடுமையான சூழல்களில் மாத்திரம் பயன்படுத்தப்படும் உசூலி அடைப்படையை எல்லா இடத்திலும் பயன்படுத்தி அல்லாஹ்(சுபு) வரம்புகளாக விதித்ததை தாண்டுவதற்கு யாரேனும் முற்பட்டால் அது மிகவும் கடுமையான தண்டனைக்குரியதாகும். இன்று தரூரா என்ற இந்த விசேடமான அடிப்படையை நடைமுறைக்கேற்ற தீர்வுகளை முன்வைக்கிறோம் என்ற பெயரில் பல அறிஞர்கள் தெரிந்தோ, தெரியாமலோ தவறாக பயன்படுத்தி விடுகின்றார்கள். மக்கள் அவர்களால் தவறான தீர்வுகளை நோக்கிச் சென்று விடுகிறார்கள். இந்நிலை மிகவும் கவலகை;குரிய விடயமாகும்.
அல்லாஹ(சுபு) எமது செயற்பாடுகள் எதுவாக இருந்தாலும் அதனை தான் விதித்த ஏவல் விலக்கல்களை அடிப்படையாகக் கொண்டு மாத்திரமே மேற்கொள்ள வேண்டும் என்று கண்டிப்பாகக் கட்டளையிட்டுள்ளான். அந்த விதிமுறைகளின் அடிப்படையிலேயே எமது வாழ்வை நாம் முழுமையாக வடிவமைக்க வேண்டும். எனவே சில சோதனைகளையும், கஷ்டங்களையும் அவன் எம்மை சோதித்துப்பார்ப்பதற்காக ஏற்படுத்தும்போது உடனடியாக நிர்ப்பந்தம், தேவை என்று கூறிக்கொண்டு தரூராவின் கீழ் அடைக்களம் புகும் மனோபாவம் உடனடியாக மாற்றப்பட வேண்டும்.
நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம்; ஆனால் பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக! (பொறுமை உடையோராகிய) அவர்களுக்குத் துன்பம் ஏற்படும் போது, “நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்” என்று கூறுவார்கள். இத்தகையோர் மீது தான் அவர்களுடைய இறைவனின் நல்லாசியும், நற்கிருபையும் உண்டாகின்றன, இன்னும் இவர்கள் தாம் நேர் வழியை அடைந்தவர்கள். (2:155-157)
ரஸுல்(ஸல்) அவர்களின் இந்த எச்சரிக்கையில் எமது கவனத்தைச் செலுத்த வேண்டும்.
அவர்கள் சொன்னார்கள்,” நெருக்கடியான சூழல் உங்களை சூழ்ந்து கொள்ள முன் நன்மையான காரியங்களைச் செய்வதில் முந்திக்கொள்ளுங்கள். அது ஒரு இரவின் பகுதிபோன்றிருக்கும். அந்த மந்தமான காலத்தில் ஒரு மனிதன் காலையில் முஸ்லிமாய் இருப்பான் மாலையாகும்போது காஃபிராகிவிடுவான். அல்லது அவன் மாலையில் முஸ்லிமாக இருப்பான், காலையாகும்போழுது காஃபிராகிவிடுவான். அவனது தீனை(மார்க்கத்தை) சொற்பக்கிரயத்திற்காக விற்று விடுவான்” (முஸ்லிம், கிதாபுல் ஈமான்,213)
“மேலும், அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒரு காரியத்தைப்பற்றிக் கட்டளையிட்டு விட்டால், அவர்களுடைய அக்காரியத்தில் வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு ஈமான் கொண்டுள்ள எந்த ஆணுக்கோ பெண்ணுக்கோ உரிமையில்லை ஆகவே, அல்லாஹ்வுக்கும் அவனுடைய ரஸூலுக்கும் எவரேனும் மாறு செய்தால் நிச்சயமாக அவர்கள் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருக்கிறார்கள். ” (அல் அஹ்ஷாப்:36 )