எமது நாடு, தனது வரலாற்றின் ஓர் முக்கிய சந்தியில் வந்து நிற்கிறது. அது தனது எதிர்கால பயணத் திசை அறியாது திகைத்து நிற்பது தெளிவாகத் தெரிகிறது. செம்டெம்பர் 11 தாக்குதல் எவ்வாறு உலக அரசியலை திருப்பிப்போட்டதோ அதற்கு ஒப்பாக ஏப்ரல் 21 தாக்குதல் இலங்கையின் எதிர்காலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஏகாதிபத்திய வெளிநாட்டு சக்திகளினதும், உயர்மட்ட உள்நாட்டுத் துரோகிகளினதும் திட்டமிட்ட காய் நகர்த்தல்கள் அதற்கு பின்னணியாக இருந்திருப்பது தற்போது பட்டவர்த்தனமாகியிருக்கிறது. இந்நிலையில் இன, மத வேறுபாடுகளை ஒரு புறம் வைத்துவிட்டு முழு நாட்டையும் இந்த முதலாளித்துவக் காட்டேறிகளிடமிருந்து பாதுகாப்பது எப்படி என்பது பற்றி சிந்திக்க வேண்டிய காலகட்டத்தில், இன்று இலங்கையில் முஸ்லிம் தனியார் சட்டம் தொடர்பான வாதங்கள் தேசிய மட்டத்தில் சர்ச்சைப் பொருளாகி இருப்பது மக்களின் கவனத்தை தவறான திசையில் செலுத்துவதற்காக எடுக்கப்படும் இன்னுமொரு முயற்சி என்பதை ஆழ்ந்து சிந்திக்கும் எவரும் மறுக்க மாட்டார்கள்.
ஏறத்தாழ மூன்று தசாப்த்த கால யுத்தத்தின் முடிவுக்கு பின், புலிகளுக்கு பதிலாக நாட்டின் புதிய பொது எதிரியாக தேர்ந்தெடுக்கப்பட்ட முஸ்லிம் சமூகம் ஏப்ரல் 21 தாக்குதலைத் தொடர்ந்து, பலத்த தாக்குதல் வேட்டைக்கு இரையாகியுள்ளது. முஸ்லிம்கள் அவசரகாலச்சட்டம் மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான சட்டம் போன்ற கொடிய சட்டங்களின் பிடியில் அகப்பட்டு சொல்லொண்ணா துயரங்களை அனுபவித்து வருகின்றார்கள். ஒரு சில தினங்களுக்கு முன்னர் அவசரகால நிலை தளர்த்தப்பட்டிருந்தாலும் கூட கைதுகளும், கெடுபிடிகளும் முற்றாக நின்றபாடில்லை. இத்தகைய கெடுபிடியான நிலையிலிருந்து எமது சமூகத்தை மீட்டெடுப்பதற்கு அயராது உழைக்க வேண்டிய தருணத்தில், முறையான விசாரணைகளின்றி தொடர்ந்து சிறைகளில் வாடிவரும் முஸ்லிம்களின் விடுதலைக்காக பாடுபட வேண்டிய கால கட்டத்தில் முஸ்லிம் சமூகத்துக்குள்ளும் இந்தச் சட்டத்திருத்தம் தொடர்பாக தேவையற்ற அளவில் வாதப்பிரதிவாதங்கள் வளர்ந்து வருகின்றமை ஆரோக்கியமானதல்ல. நாட்டில் சிங்கள தேசியவாதமும், பௌத்தத் தீவிரவாதமும் அதியுச்ச கொதிநிலையை அடைந்துள்ள நிலையில் அவற்றை பலத்;த கேள்விக்குட்படுத்தி, ஆரோக்கியமான சமூகக் கருத்தாடல்களை மும்முரமாக முடுக்கிவிடவேண்டிய இந்த தருணங்களில் சந்தேகத்தையும், பிரிவினையையும் வளர்க்கக்கூடிய தலைப்புக்களை நாம் கையிலெடுத்திருக்கின்றோம் என்பது கவலையளிக்கிறது.
முஸ்லிம் சமூகத்துக்குள்ளே 1950 களின் பிற்காலத்திலிருந்தே முஸ்லிம் தனியார் சட்டத்தில் திருமணம் மற்றும் விவாகரத்து தொடர்பான சட்ட ஏற்பாடுகளில் திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்ற கருத்தாடல்கள் இருந்து வந்திருந்தன. ஆனாலும் அண்மிய காலங்களில் இந்தச் சட்டத்திருத்தத்தை சுற்றி நடந்துவரும் காய் நகர்த்தல்கள் அதன் இயல்பிலிருந்து வேறுபட்டு தீய சக்திகளின் நிகழ்ச்சி நிரல்களுக்குள் சிக்குண்டு இருக்கிறது என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தல், வெளிநாட்டுத்தலையீடுகளை கட்டுப்படுத்தி நாட்டின் இறைமையை பாதுகாத்தல், நாட்டின் கடன் சுமையை குறைத்து பொருளாதார ஸ்திரத்தன்மைக்கான வியூகங்களைத் தீட்டுதல், நாட்டின் சட்டமொழுங்கை இன, மத பாரபட்சமின்றி அமூல்படுத்த ஆவன செய்தல், இனப் பிரச்சனை தீர்வுக்கான ஒழுங்குகளை நியாயமான முறையில் முன்னெடுத்தல் என அதிமுக்கியமான விடயங்கள் பட்டியல்களாக இருக்க ஆறுதலான ஒரு சூழலில் முஸ்லிம் சமூகத்துக்குள் பேசித் தீர்வு காணக்கூடிய முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்துச் சட்ட விவகாரத்தை இந்தளவுக்கு பூதாகரமாக மாற்றி விவாதிக்க வேண்டிய எந்தவொரு நியாயமும் இருப்பதாகத் தெரியவில்லை.
நீதியரசர் சலீம் மர்சூப், ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா போன்றோர்களின் தலைமையிலான இரு வேறு குழுக்கள் சமர்ப்பித்த அறிக்கைகளின் முரண்பாடுகளாக இருந்த விடயம் தற்போது பௌத்த தீவிரவாதிகளும், சந்தர்ப்பாத முஸ்லிம் அரசியல் தலைமைத்துவங்களும், பெண்ணியல்வாதிகளும், சில மிதவாத அறிஞர்களும் குதித்துக் குழப்புகின்ற குட்டையாக மாறியிருக்கிறது.
முஸ்லிம் தனியார் சட்டத்தின் கீழ் முஸ்லிம் தனியார் திருமண மற்றும் விவாகரத்து தொடர்பான ஏற்பாடு இலங்கை முஸ்லிம் சமூகத்திற்கென சிறப்புரிமையாக நீண்ட காலமாக வழங்கப்பட்டு வந்தமை எமக்குத் தெரியும். இத்தகைய சிறப்புரிமை இலங்கை முஸ்லிம் சமூகத்திற்கு மாத்திரம் வழங்கப்பட்ட ஒன்றல்ல. தேசவழமைச் சட்டம், கண்டியச் சட்டம் என வேறுசில தனியார் சட்ட ஏற்பாடுகளும் ஏனைய சமூகங்களுக்கும் வழங்கப்பட்டு இன்றுவரை பாதுகாக்கப்பட்டு வருகின்றன. எனவே இலங்கையில் முஸ்லிம்களுக்கென தனியான சில சிவில் சட்ட ஏற்பாடுகள் இருப்பதை வைத்துக்கொண்டு தனியான ஷரீஆ சட்டங்களை முஸ்லிம்கள் மாத்திரம் அநுபவிக்கின்றார்கள், இறுதியில் ஷரீஆ சட்டத்தை நாட்டில் நிறுவுவதே இவர்களின் நோக்கம், ஒரே நாட்டுக்குள் முஸ்லிம்களுக்கு மாத்திரம் தனியான சட்ட ஏற்பாடு எதற்கு? என்ற கேள்விகள் பரவலாக எழுந்துள்ளன. ஒரே நாடு, ஒரே சட்டம் போன்ற கோஷங்களை கூவியபடி எவ்வித அடிப்படையும் அற்ற போலிப் பீதிகளை பரப்பிக் கொண்டு நாட்டில் பலர் சுற்றித் திரிகின்றார்கள். முஸ்லிம்களுக்கும், இஸ்லாத்திற்கும் எதிரான பாரியதொரு விசமப்பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வரும் இக்காலகட்டத்தில் இதனையும் அதற்கு எரிபொருளாக மாற்றும் கைங்கரியத்தில் பலர் முயன்று வருகிறார்கள். பல்வேறுபட்ட மதங்களையும், பாரம்பரியங்களையும், கலாசாரங்களையும் அடிப்படையாகக் கொண்ட ஏராளமான நாடுகளில் இவ்வகையான தனியார் சட்ட ஏற்பாடுகள் விசேட உரிமைகளாக வழங்கப்பட்டுள்ளமை புதினமான விடயமல்ல. இன்னும் சொல்லப்போனால் இலங்கையில் கூட இத்தகைய தனியார் சட்ட ஏற்பாடுகள் பிரித்தானியர்கள் ஆட்சிக் காலகட்டத்தில் தான் நாட்டின் பொதுச்சட்டத்துடன் இணைத்து அறிமுகப்படுத்தப்பட்டன. எனவே இத்தகைய ஏற்பாடுகள் உலக அரங்கில் நீண்டகாலமாகவே வழக்கிலுள்ள பொது நிலைப்பாடு என்பதை வரலாறு தெரிந்தோர் மறுக்க மாட்டார்கள்.
திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும் என்ற கோரிக்கையின் யதார்த்தம் என்ன?
முஸ்லிம் தனியார் சட்டத்தில் திருத்தங்களை கொண்டு வரவேண்டும் என்ற வாதம் ஒன்றும் தவறானது அல்ல. ஏற்கனவே நடைமுறையிலுள்ள தனியார் சட்டம் நடைமுறையில் சிக்கல்களை ஏற்படுத்துகின்ற போதும், அதனால் பல குடும்பங்கள் பாரபட்சத்திற்கும், பாதிப்புகளுக்கும் உள்ளாகின்றபோதும் அத்தகைய மாற்றங்களுக்காக முயற்சிப்பது தவறானது அல்ல. அதேபோல இஸ்லாமிய ஷரீஆவுக்கு மென்மேலும் ஒத்திசைவை ஏற்படுத்தும் வண்ணம் ஏற்கனவே இருக்கின்ற பிக்ஹிலே திருத்தங்களை கொண்டு வர முயற்சிப்பதும் வரவேற்கதக்கதே. எனினும் இந்த கோரிக்கை முஸ்லிம் சமூகத்துக்குள்ளிருந்து நேர்மையாகவும், இயல்பாகவும் வரவேண்டும். ஆரம்ப காலங்களில் இத்தகைய நியாயமான கோரிக்கைகள் எமது சமூகத்துக்குள்ளிருந்து வெளிவந்திருந்த வரலாற்றை நாம் காண்கிறோம். அவர்களின் நோக்கங்கள் தெளிவாக இருந்தன. எனினும் தற்போது முஸ்லிம் தனியார் சட்ட திருத்தம் என்ற விவகாரம் சட்டத்திருத்தம் என்ற நிலையிலிருந்து மாறி அரசியல் நிகழ்ச்சி நிரலுக்குள் அகப்பட்டுள்ளது. ஒரு பக்கம் முஸ்லிம்கள் நடந்தாலும் குற்றம், இருந்தாலும் குற்றம் என்று கங்கணம் கட்டிக்கொண்டு முஸ்லிம் விரோதப்பிரச்சாரம் செய்து வரும் தீவிரவாத பௌத்த துறவிகளும் அவர்களது பரிவாரங்களும், மறுபுறம் பெண் சமத்துவம், மனித உரிமை போன்ற மேற்குலக எண்ணக்கருக்களால் பாதிக்கப்பட்ட பெண்ணியில்வாதம் பேசும் பெண்கள் அமைப்புக்களும், இன்னொரு புறம் உருவாகின்ற அனைத்து சந்தர்ப்பங்களையும் காய் நகர்த்தி எப்படி அரசியல் செய்யலாம் என்று முயற்றுவரும் அரசியல்வாதிகளும் இந்த சட்டத்திருத்தம் தொடர்பாக முந்தியடித்துக் கொண்டு களத்தில் இறங்கியிருக்கிறார்கள்.
இவர்கள் எல்லோருக்கும் மேலாக உலகம் முழுவதிலும் இஸ்லாத்திற்கும், முஸ்லிம்களுக்கும் எதிராக பாரியதொரு சிந்தனை யுத்தத்தை தீவிரமாக முடிக்கி விட்டுள்ள அமெரிக்கா தலைமையிலான மேற்குலகு இதன் பின்னணியில் இருக்கிறது என்பது மிகவும் ஆபத்தானது. முஸ்லிம்களை இஸ்லாத்திலிருந்து தூரப்படுத்தி மதச்சார்பற்ற சமூகமாக மாற்றும் உலளாவிய நிகழ்ச்சி நிரலில் இலங்கை முஸ்லிம் சமூகத்தையும் உள்ளடக்கும் ஒரு முக்கிய யுக்தியாக இந்த சட்டத்திருத்த விவகாரத்தை சில காலமாகமே அவர்கள் பயன்படுத்தி வருகிறார்கள். 2016 இலே ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு ஜிஎஸ்பி பிளஸ் (GSP+) வரிச்சலுகையை வழங்குவதற்கு முஸ்லிம் பெண்களின் திருமணத்திற்கான குறைந்த வயதெல்லையில் மாற்றத்தை கொண்டுவரவேண்டும் என்று நிபந்தனை முன்வைத்த சம்பவமும் அதனால் நாட்டில் உருவான பதட்ட நிலையும் இதற்கொரு நல்ல எடுத்துக்காட்டாகும்.
வளர்ந்துவரும் உலகளாவிய போக்கு
குறிப்பாக முஸ்லிம்கள் சிறுபான்மையாக அல்லது பலகீனமாக வாழ்கின்ற நாடுகளில் அண்மை காலங்களாக முஸ்லிம்கள் இதுவரை காலமும் அனுபவித்து வந்த பல உரிமைகளையும், சலுகைகளையும் குறைக்கின்ற அல்லது பலவந்தமாக பறித்தெடுக்கின்ற நிர்ப்பந்த நிலைகள் பரவலாக உருவாகி வருகின்றன. இதற்கொரு சிறந்த உதாரணமாக இந்தியாவிலே 2017 இல் நாடு முழுவதும் பேசுபொருளாக மாறிய சர்ச்சைக்குரிய ஸயாரா பானு வழக்கைக் குறிப்பிடலாம். மூன்று முறை ஒரே தடவையில் தலாக் சொல்வதன் (முத்தலாக்) ஊடாக விவாகரத்து செய்யும் முறை நீக்கப்பட வேண்டும் என்று அவர் தொடுத்த வழக்கை வைத்து இஸ்லாமிய ஷரீஆவுக்கும், முஸ்லிம்களுக்கும் இந்தியாவின் முக்கிய அரசியல்வாதிகளும், பிரபலங்களும், முக்கிய ஊடகங்களும் சேறுபூச எடுத்த முயற்சி அபாரமானது. கடந்த இரண்டு வருடங்களாக நீடித்து வந்த வழக்கு அண்மையில் இஸ்லாமிய எதிர்ப்பு சக்திகளுக்கு ஆதரவாக முடிவுற்றுள்ளது.
ஜூலை 26ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட முஸ்லிம் பெண்கள் (திருமண உரிமை மீதான பாதுகாப்பு) சட்டம் – 2019 இன் வருகையுடன் முத்தலாக் அனுமதி தொடர்பான கட்டளைச் சட்டம் ரத்துச் செய்யப்பட்டு ஆகஸ்ட் 1ஆம் திகதியிலிருந்து ஒரே நேரத்தில் மூன்று தலாக் கூறும் நடைமுறை சிறைத்தண்டனைக்குரிய குற்றமாக நாடெங்கும் அமூலுக்கு வந்துள்ளது. இந்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பு இஸ்லாமிய விரோத சக்திகளுக்கு பெரிய ஊக்கத்தை அளித்துள்ளது. அண்மையில் இந்த தீர்ப்பு குறித்து நரேந்திர மோடி தனது டிவிட்டர் செய்தியிலே இவ்வாறு இறுமாப்பாக தெரிவித்திருந்தார்…
“இறுதியில் இந்த காட்டுமிராண்டிக்கால நடைமுறை வரலாற்றின் குப்பைத் தொட்டிக்குள் அடக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றம் முத்தலாக் செய்வதை இல்லாதொழித்து முஸ்லிம் பெண்களுக்கு எதிராக நிகழ்ந்த வரலாற்றுத் தவறை தற்போது திருத்தியிருக்கிறது. இது பாலின நீதிக்கு கிடைத்த வெற்றியாகும். இது சமூகத்தில் மென்மேலும் சமத்துவத்தை வளர்க்கும். இதனால் இன்று இந்தியா மகிழ்ச்சியில் திளைக்கிறது.”
முத்தலாக்கா கூடுமா? கூடாதா? என்பது முஸ்லிம் சமூகத்துக்குள் காணப்படும், இன்னும் சொல்லப்போனால் இஸ்லாமிய சட்ட அறிஞர்களான முஜ்தஹித்களுக்கு இடையிலான இஜ்திஹாத் தொடர்பான விடயம். இதற்குள் முஸ்லிம் அல்லாதவர்கள் நுழைந்து கருத்துச் சொல்வதும், இஸ்லாமிய சட்டமொன்றை இஸ்லாம் அல்லாத அளவுகோள்களை வைத்து மதிப்பீடு செய்வதும் அடிப்படையில் தவறானதும், அத்துமீறுவதாகும். இது முஸ்லிம் சமூகத்தை சீண்டிப்பார்த்து சர்வதேச மற்றும் தேசிய நியமங்களுடன் அவர்கள் ஒத்துப்போகிறார்களா? அல்லது தமது மார்க்க நிலைப்பாட்டுக்குள் கட்டுண்டு இருப்பதைத்தான் விரும்புகிறார்களா? என அளந்து பார்க்கும் கைங்கரியமாகும். பலமான அழுத்தங்களுக்கு மத்தியில் முஸ்லிம்கள் மார்க்கத்தில் சில விட்டுக்கொடுப்புகளை செய்வதற்கு துணிகிறார்களா என சோதித்துப்பார்க்கும் பரீட்சைகளாக இந்த விவகாரங்களை அவர்கள் கைகளில் எடுக்கின்றார்கள். இதே போன்றதொரு பரீட்சையைத்தான் இன்று இலங்கை முஸ்லிம் சமூகத்தின் மீதும் இவர்கள் பிரயோகித்து வருகின்றார்கள். இதனூடாக முஸ்லிம் சமூகத்தையும், இஸ்லாமிய அறிஞர்களையும் தர்மசங்கடப்படுத்தி அவர்கள் மீது சேறுபூசுவதற்கு இவர்கள் ஆசைப்படுகிறார்கள்.
மறுபக்கத்தில் திருமண வாழ்க்கையிலும், பின்னர் காதி நீதி மன்றங்களிலும் எதிர்மறையான அனுபவங்களைப் பெற்ற முஸ்லிம் பெண்கள் தாம் எதிர்நோக்கிய பிரச்சனைகளுக்கு தற்போது நடைமுறையில் இருக்கின்ற இஸ்லாமிய தனியார் சட்ட ஏற்பாடுகளும் காதி நீதிமன்றங்களும்தான் முழுமையான காரணங்கள் என்பதாக பிறரால் நம்பச் செய்யப்படுகிறார்கள். இந்த அபலைப் பெண்களுக்கு ஆதரவாக முஸ்லிம் பெண்ணியல்வாதிகளும், மனித உரிமைச் செயற்பாட்டாளர்களும் மும்முரமாக களத்தில் இறங்கிச் செயற்படுகிறார்கள். இவ்வாறு உதவிக்கு வரும் பலர் இன்று முஸ்லிம் சமூகத்தைச் சூழ சூழ்ந்துவரும் தீய நிகழ்ச்சி நிரல்களுக்கு அறிந்தோ அறியாமலோ பழிபோய் விடுகின்றனர். பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை தனியார் சட்டம் மீதும், காதி நீதிமன்றங்கள் மீதும் சுமத்தப்படும் குற்றச்சாட்டுடன் மாத்திரம் மட்டுப்படுத்தி ஆராயாமல் நடுநிலையாக நின்று ஆராய்ந்து பார்ப்பதற்கு இவர்கள் தவறி விடுகின்றனர். உண்மையில் இலங்கையில் நிலவுகின்ற பல சமூக பொருளாதார காரணங்கள் இந்த அவல நிலைக்கு அடிப்படையாக இருக்கின்றன என்பதை புரிந்து கொள்ள இவர்களால் ஏனோ முடியவில்லை என்பது எமக்கு வியப்பாக இருக்கின்றது. இலங்கையில் முஸ்லிம் பெண்கள் மாத்திரம்தான் திருமண பந்தம், பால்ய திருமணம், விவாகரத்து, குழந்தைகளினது பராமரிப்பு, சொத்துப்பகிர்வு போன்ற பிரச்சனைகளை சந்திக்கிறார்களா? ஆண் ஆதிக்க மனோபாவத்தின் விளைவால் முஸ்லிம் பெண்கள் மாத்திரம்தான் பிரச்சனைகளுக்கு முகம்கொடுத்துள்ளார்களா? என்ற வினாக்களை நாம் எல்லோரும் நேர்மையான தொடுத்துப்பார்க்க வேண்டும். அப்போது MMDA இல் திருத்தப்பட வேண்டும் என கோருகின்ற திருத்தங்களில் முக்கிய கோரிக்கைகளான காதி நீதிமன்றங்களில் பெண்களும் நீதிபதிகளாக நியமிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையோ, திருமணத்திற்கான குறைந்த வயதெல்லையை 18 ஆக உயர்ந்த வேண்டும் என்பதோ, திருமணப் பதிவுப் பத்திரத்தில் பதிவாகாத திருமணங்கள் சட்டவிரோதமானதாகக் கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கையோ இலங்கையில் பெண்கள் ஒடுக்கப்படுவதற்கோ, அவர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சனைகளை குறைப்பதற்கோ வழிகோலாது என்பதை நாம் புரிந்து கொள்வோம்.
முஸ்லிம் பெண்களின் உரிமைகள் பற்றி கரிசனை காட்டும் அரசியல்வாதிகளும், அமைப்புக்களும் ஒட்டுமொத்த இலங்கை சமூகத்துக்குள்ளும் வேரூண்றியிருக்கின்ற உண்மையான பிரச்சனைகளை முதலில் இனம் காண வேண்டும். மேற்குலக கலாசாரத்தின் ஆக்கிரமிப்பால் எமது சமூகத்தில் புதிது புதிதாக உருவாகிவரும் தீய விளைவுகள் எவ்வாறு எம் எல்லோரது குடும்பங்களையும் சிதைத்து வருகின்றன என்பது பற்றி அவர்கள் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
மேற்குலக நாகரீகம், தாராளவாதம்(Liberalism), சுதந்திரம்(Freedom), சமத்துவம்(Equality) போன்ற அடிப்படைகளைக் கொண்டு மனிதகுலத்தின் ஈடேற்றத்தையும், பின்னடைவையும் மதிப்பீடு செய்கின்றது. எங்கு பூரண தாராளமயமும், சுதந்திரமும், சமத்துவமும் காணப்படுகிறதோ அது நாகரீகமடைந்த சமூகமாகவும், எங்கே அவை மட்டுப்படுத்தப்பட்டிருக்கின்றதோ அது பிற்போக்கான சமூகமாகவும் அது பிரஸ்தாபிக்கின்றது. எனவே அந்த சமூகத்தில் மனிதன் கட்டுக்கடங்காதவனாக வளர்வதையே அது வரவேற்கிறது. ஆணோ, பெண்ணோ அவர்கள் தங்கள் இயல்புகளால் வேறுபட்டிருந்தாலும் கூட அவர்களுக்கிடையே சமத்துவம் என்ற ஒன்றைத் திணிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் அது இருக்கின்றது.
மேற்குலக நாகரீகம் தனிநபர் சுதந்திரம் என்ற எண்ணக்கருவை வாழ்வுக்கான முற்போக்கான அடிப்படையாக முன்வைக்கிறது. இந்த தனிநபர் சுதந்திரத்தின் மூலம் ஒவ்வொரு ஆணும், பெண்ணும் தமது வாழ்வை எவ்வாறு நடாத்துவது என்பதில் எவ்வித காட்டுப்பாடும் இன்றி பூரண சுதந்திரத்துடன் விடப்பட்டுள்ளார்கள். தமது பாலியல் உணர்வுகளையும், தேவைகளையும் கூட இந்த பூரண சுதந்திரத்தினூடாகவே அவர்கள் பூர்த்தி செய்கின்றனர். விரசத்தைத் தூண்டும் பாலியல் விடயங்கள் விளப்பரப்பலகைகள், சினிமாக்கள், தொலைக்காட்சி விளம்பரங்கள் என அனைத்திலும் ஊக்குவிக்கப்படுகின்றன. தனிப்பட்ட ரீதியில், ஒவ்வொருவரின் படுக்கை அறைக்குள் மாத்திரம் இருக்க வேண்டிய விடயங்களை முழு சமூகத்துக்கும் வெளிச்சம் போட்டு காட்டுவதை அவர்கள் பிரபலமாக்கி வருகின்றார்கள். இவ்வாறு மேற்குலக நாகரீகமானது அடிப்படையில் பெண்ணை ஒரு காமப் பொருளாகவே பார்க்கிறது. பெண்ணை அவளது புறத்தோற்றத்தைக் கொண்டே அது மதிப்பீடு செய்கின்றது. அதன் அடிப்படையில் பெண்கள் தமது புறத்தோற்றத்தை மெருகூட்டுவதிலும், ஆண்கள் தம்மை எவ்வாறு நோக்குகிறார்கள் என்பது பற்றி அளவு கடந்து அக்கறை எடுத்துக் கொள்ளவதிலுமே அதிக நேரத்தை செலவழிக்கிறார்கள். இந்த பிரச்சனை மேற்குலகுடன் மட்டுப்படுத்தப்பட்டதல்ல. மாறாக மேற்குலக காலாசார ஆக்கிரமிப்பின் ஊடாக அவை எமது நாடுகளுக்கும் வந்து சேர்கின்றன. மேலும் மேற்குலகை அச்சரம் பிசகாமல் பின்பற்றுவதை பெருமையாகக் கருதும் எம்மவர்களும் இத்தகைய அசிங்கங்களைக்கூட வரங்களைப்போல் வரவேற்று நிற்கின்றார்கள். ஹொலிவூட், பொலிவூட் கலாசாரமும், படுமோசமான கேளிக்கை நிகழ்ச்சிகளும், விரசத்தைத்தூண்டும் விளம்பரங்களும், போனோகிரபிஃயும் இன்றைய சடவாத தராண்மைவாத கலாசாரத்தால் ஊக்குவிக்கப்பட்டு வருகின்றன. இலங்கையும், பூகோளமயமாக்கலுக்குள்ளும், தராண்மைவாத கலாசாரத்துக்குள்ளும் ஏறத்தாழ முழுமையாக உள்வாங்கப்பட்டுள்ள நிலையில் எமது நாட்டிலும் பெண்கள் ஆண்களின் இச்சையைத் தணிக்கும் மோகப் பொருளாகவே நோக்கப்படுகிறார்கள்.
எனவே இவ்வாறு காமமயப்பட்ட ஒரு சமூகமாக மாறி வருகின்ற ஓர் சமூகம், தனது மக்களை தங்கள் சுயநல சரீர ஆசைகளைத் கட்டுப்பாடற்று பின்தொடர்வதற்கு ஊக்குவிக்கிறது. திருமணத்திற்கு புறம்பான பாலியல் உறவுகளை கட்டுப்படுத்துவதில் அது அக்கறை கொள்வதில்லை. அது பெண்களுக்கும், ஆண்களுக்கும் இடையிலான உறவுகளை இழிவுபடுத்தி ஓர் ஒழுக்கமற்ற கலாசாரத்தை தோற்றுவிக்கிறது. இவை அனைத்தும் பெண்களின் கண்ணியத்தை ஆண்களின் மனதில் தாழ்ந்த மட்டத்திற்கு எடுத்துச் சென்று பெண்களுக்கு எதிரான அத்துமீறல்களையும், வன்முறைகளையும் இலகுவாக செய்துவிடுவதற்கான துணிவை வழங்கி விடுகின்றன. அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் நிமிடத்திற்கு இத்தனை பலாத்காரங்கள், செக்கனுக்கு இத்தனை வீட்டு வன்முறைகள் என புள்ளிவிபரங்கள் பெறுகுவதற்கு இதுதான் காரணமாகும்.
தற்போது இலங்கையும் அந்த வழிதடத்தில்தான் பயணிக்கிறது. இலங்கையின் சட்ட உதவி கொமிஷன்(Srilanka Legal Aid Commission) தெற்காசியாவிலே அதிகூடிய பாலியல் தொந்தரவு இடம்பெறும் நாடாக இலங்கையை இனம்கண்டுள்ளது. 2013 ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஐ.நா கற்கை (UN Study) இலங்கையிலுள்ள ஆண்களில் மூன்றில் ஒரு பங்கினர் அதாவது 33 சதவீதமானவர்கள் தமது வாழ்நாளில் குறைந்தது ஒரு தடவையாகினும் பௌதீக ரீதியாக அல்லது பாலியல் ரீதியாக பெண்களுக்கு எதிரான வன்முறையில் ஈடுபட்டுள்ளதாக ஒப்புக்கொண்டுள்ளனர். இலங்கையிலுள்ள மொத்தப் பெண்களில் நால்வரில் ஒருவர் 18 வயதை அடைவதற்கு முன்பாகவே பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள் என UNFA தெரிவிக்கின்றது.
இலங்கை காவல் துறையினரின் புள்ளிவிபரப்படி 2005 ஆம் ஆண்டுக்கும் 2013 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் 33,000 க்கும் அதிகமான வன்முறைகள் பெண்களுக்கும், சிறுவர்களுக்கும் எதிரான நிகழ்ந்துள்ளன. பாலியல் வன்புணர்வுகளும், நெருக்கமான இரத்த உறவுகளுக்கு(Incest) இடையிலான தகாத பாலியல் நிகழ்வுகளும் 2006க்கும் 2016க்கும் இடைப்பட்ட பத்து வருடங்களுக்குள் 1463 என்ற எண்ணிக்கையிலிருந்து, 2036 வரை அதிகரித்துள்ளன. இது சுமார் 40 சதவீத அதிகரிப்பாகும். இவை யாவும் காவல்துறைக்கு முறைப்பாடு செய்யப்பட்ட தகவலின் அடிப்படையில் திரட்டப்பட்டவை என்றால் உண்மையான எண்ணிக்கை எவ்வாறு இருக்கும் என்று ஊகித்துப் பாருங்கள்.
மேற்குலக நாகரீகம் கடவுளாகக் கருதும் சுதந்திரம் என்ற மாயையின் பலன்களே இவை. ஒழுக்கமற்ற உறவுகளை ஊக்குவிக்கும் நாகரீகத்தை பொருத்தமட்டில் இவை ஒன்றும் ஆச்சரியமான முடிவுகள் அல்ல. மனிதனின் மட்டுப்படுத்தப்பட்ட புத்தியை மாத்திரம் கொண்டு மனிதகுலத்தை வழிநடாத்த முற்பட்டால் இத்தகைய விபரீதங்களை சந்திப்பதை எம்மால் தவிர்க்கவே முடியாது என்பதையே இவை சுட்டிக்காட்டுகின்றன.
எனவே இஸ்லாமிய சட்டங்களின் தாற்பரியம் பற்றி விளங்காது அதன் மூலைமுடுக்குகளுக்குச் சென்று சில அம்சங்களை பொறுக்கி எடுத்து அவை பற்றி விமர்சிக்க துணிபவர்கள் முதலில் தாங்கள் வரவேற்று பாதுகாத்து வருகின்ற வாழ்க்கை முறை உருவாக்கிய சிக்கல்களை கண்திறந்து பார்க்க வேண்டும். முதலில் தாம் வழங்கி வரும் தீர்வுகளால் சமூகத்தில் ஆழமாக வேரூன்றிப் பரவி வரும் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு முயற்சிக்க வேண்டும்.
இந்த விவகாரத்தை இஸ்லாமிய அடிப்படையில் அணுகுவது எவ்வாறு என்பது பற்றி சிந்திப்பதற்கு முன் கீழ்வரும் இரு அடிப்படைகளை உணர்ந்திருக்க வேண்டும்.
முதலாவது, இஸ்லாம் என்பது இந்து, பௌத்த, கிருஸ்தவ மதங்களைப்போன்று சில வழிபாடுகளையும், கிரிகைகளையும் மாத்திரம் கொண்ட ஒரு சாதாரண மதம் அல்ல. மாறாக அது ஓர் சம்பூரணமான வாழ்க்கைத்திட்டமாகும். அது தனிநபர் விவகாரம் தொடக்கம் சமூகம், அரசு என்ற எல்லைகளுக்கும் பரந்து விரிந்து நிற்கும் சித்தாந்தமாகும். எனவே அதற்கென தனித்துவமான சமூக வாழ்க்கை, குடும்ப வாழ்க்கை தொடர்பான மிகத் துல்லியமான நிலைப்பாடுகளும், சட்டங்களும் இருக்கின்றன என்ற விடயத்தை ஒருவர் புரிந்து கொள்ள வேண்டும்.
இரண்டாவது, முஸ்லிம்களைப் பொருத்தமட்டில் மனிதகுலத்திற்கு ஒன்றை ஆகுமாக்குவதையும், தடை செய்வதையும் தீர்மானிக்கின்ற அதியுயர் அதிகாரம் யாரிடம் இருக்கின்றது என்ற கேள்வி அதாவது மனித வாழ்வுக்கான சட்டங்களை வகுப்பவன் யார்? என்ற கேள்வி அடிப்படையானதாகும். அது அவர்களின் அடிப்படைக் கொள்கையான அகீதாவுடன் தொடர்புபட்ட விடயமாகும். இன்று உலகெங்கிலும் நடைமுறையிலுள்ள மனிதன் தனக்குத்தானே சட்டங்களை இயற்றிக்கொள்வது என்ற நிலைப்பாடு சடவாத நாகரீகமான மேற்குலக சமூகத்தின் நிலைப்பாடாகும். அவர்கள் சில நூறு வருடங்களுக்கு முன்பு தமது தெய்வங்களை கிறிஸ்தவ தேவாலயங்களுக்குள் முடக்கிக்கொண்டு உலகியல் வாழ்வுக்கான சட்டங்களை இயற்றும் பொறுப்பை தமது கையில் எடுத்துக் கொண்டார்கள்.
இந்த முடிவு சரியானதுதானா? மனிதன் தனது புத்தியைக் கொண்டு மாத்திரம் எந்த செயல் நல்லது? எந்த செயல் கெட்டது? என்று தீர்மானிக்க முடியுமா? எந்த செயல்கள் பாராட்டப்பட வேண்டும்? எந்த செயல்கள் கண்டிக்கப்பட வேண்டும்? என்று மனிதன் தனித்தே நின்று முடிவெடுத்து விட இயலுமா? அல்லது மனிதனைப் படைத்த இறைவனான அல்லாஹ்(சுபு)வின் வழிகாட்டலில் மனிதகுலம் தங்கியுள்ளதா? போன்ற முக்கிய கேள்விகளுக்கு நாம் முதலில் பதிலளித்தாக வேண்டும்.
மனிதன் தன் முன்னால் இருக்கின்ற யதார்த்த நிலைகளை தனது புலன்களைக் கொண்டு உணர்ந்து கொள்வதற்கும், அதன்படி சில முடிவுகளுக்கு வருவதற்கும் ஆற்றலுடயவனாகவே இருக்கின்றான் என்பதில் கருத்து பேதம் இல்லை. ஆனால் மனிதனின் புத்தி தனித்து நின்று, நல்லது கெட்டது குறித்து தீர்க்கமான முடிவுக்கு வந்து சட்டங்களை இயற்றுவதற்கோ, அவன் எதிர்நோக்குகின்ற அரசியல், சமூக, பொருளாதார சிக்கல்களை ஒழுங்கு படுத்துவதற்கான முறைமைகளை தீர்மானிப்பதற்கோ சக்தி படைத்ததா என்று கேட்டால் இல்லை என்பதே உண்மை. மனிதனின் ஆளுமைக்கு அப்பாற்பட்ட அவ்வாறான ஓர் முயற்சியில் ஈடுபடுவது முரண்பாட்டிலும், பக்கச்சார்பிலும், மோசடியிலும், இறுதியில் தோல்வியிலுமே முடிவடையும் என்பதே வரலாறு எமக்கு சுட்டிக்காட்டும் உண்மையாகும்.
“நீங்கள் ஒரு பொருளை வெறுக்கலாம்; ஆனால் அது உங்களுக்கு நன்மை பயப்பதாக இருக்கும்; ஒரு பொருளை நீங்கள் விரும்பலாம், ஆனால் அது உங்களுக்குத் தீமை பயப்பதாக இருக்கும். (இவற்றையெல்லாம்) அல்லாஹ் அறிவான், நீங்கள் அறியமாட்டீர்கள்.” (2:216)
எனவே ஒரு முஸ்லிமைப் பொருத்தவரையில் அவன் மனிதன் உருவாக்கிய எந்தவொரு நீதிமன்றத்தையோ, எந்தவொரு சட்டக்கோப்பையோ அல்லாஹ்(சுபு) வின் சட்டங்களை மதிப்பீடு செய்வதற்கான அளவுகோள்களாக எடுத்துக் கொள்வது அடிப்படையில் தவறானதாகும். மேற்சொன்ன இரண்டு அடிப்படைகளையும் முழுமையாக ஏற்றுக்கொண்ட நிலையில்
இஸ்லாம் ஆண் – பெண் இருபாலாரினதும் கண்ணியத்தை எவ்வாறு பாதுகாக்கின்றது? என்பது பற்றி இனி சுருக்கமாக ஆராய்வோம்.
முதலாவது, இஸ்லாம் ஆண் பெண் உறவை கண்ணியமான முறையில் ஒழுங்குபடுத்தியிருக்கிறதேயல்லாமல் ஒருபோதும் அதனை இழிவு படுத்தப்படுவதில்லை. அவ்வுறவுகளின் மூலம் பெண்களின் மதிப்பு ஒருபோதும் குறைக்கப்படுவதில்லை. அதனைச் சாதிப்பதற்காக இஸ்லாம் முழுமையான சமூக முறைமையொன்றினூடாக ஆண் பெண் உறவினை ஒழுங்குபடுத்துகின்றது. கண்ணியமான ஆடை ஒழுங்கு, அனாவசியமான ஆண் – பெண் கலப்பை ஊக்குவிக்காத சமூகம், திருமணத்திற்கு புறம்பான பாலியல் உறவுகளுக்கு எவ்வித வழிகளையும் திறந்து விடாத சமூகம் போன்ற மிகத் தீர்க்கமான ஒழுங்குகளை கடைப்பிடித்தும், பாலியல் தேவைகளை திருமணம் என்ற ஓர் தூய பந்தத்துடன் மாத்திரம் மட்டுப்படுத்தியும் முழு சமூகத்தினதும், குறிப்பாக பெண்களினதும் கண்ணியத்தை இஸ்லாம் பாதுகாக்கிறது.
இரண்டாவது, பெண்களின் கண்ணியத்தை பாதுகாக்கின்ற பொறுப்பை இஸ்லாத்தின் அதிகாரத்தினூடாக, அதாவது கிலாஃபத்தின் ஊடாக உறுதிப்படுத்துகிறது. அல்லாஹ(சுபு)வின் ஷரீஆவை அரசியல், சமூக, பொருளாதார அனைத்துத்துறைகளிலும் பிரயோகிப்பதன் ஊடாகவும், அவற்றை பேணி நடக்கின்ற மனோநிலையை, இறையச்சத்தை (தக்வாவை) சமூகத்தில் பரப்புதன் ஊடாகவும், மீறி நடப்போரை இஸ்லாமிய குற்றவியல் சட்டங்களைக் கொண்டு கட்டுப்படுத்துவதன் ஊடாகவும் முழுச் சமூகத்தினது, குறிப்பாக பெண்களினது கண்ணியத்தையும், நல்வாழ்வையும் கிலாஃபா ஆட்சி உறுதிப்படுத்துகிறது. சுமார் 1300 ஆண்டுகளுக்கும் மேலாக முஸ்லிம் உலகில் நடைமுறையில் இருந்த கிலாஃபா ஆட்சியில் பெண்களின் கண்ணியம் காக்கப்பட்ட பாங்கை வரலாறு இன்றும் சான்று பகர்கின்றது.
பெண்களின் சுதந்திரம் மற்றும் விடுதலை பற்றிய கருத்துக்களை இஸ்லாம் நம்பவில்லை. பாலின சமத்துவத்தின் அடிப்படையில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் இடையிலான உறவு பற்றி அது விவாதிக்கவில்லை. ஏனெனில் அது ஆணோ, பெண்ணோ அவர்கள் தமது சொந்த மனோவிச்சைப்படி வாழ்வதற்கு வழியமைத்துவிடவில்லை. ஒவ்வொருவரும் தமக்குச்சார்பாக சட்டமியற்றுவதற்கும், தமது வாழ்வியல் ஒழுங்குகளை தமது அறியாமை, சார்புநிலை, பேராசை, வரையறுக்கப்பட்ட புரிதல் போன்றவற்றின் தாக்கத்தில் நின்று வரையறுப்பதற்கும் அனுமதிக்கவில்லை. இஸ்லாமிய வாழ்வியல் வழிகாட்டலும், வாழ்வியல் ஒழுங்குகளும் முற்று முழுதாக எம் எல்லோரையும் படைத்த படைப்பாளனிடமிருந்து வருகின்றன. அவை குடும்ப வாழ்க்கை தொடக்கம், சமூக, பொருளாதார, அரசியல் ஒழுங்கள் அனைத்துக்கும் வழிகாட்டலை உள்ளடக்கியுள்ளன. அவை ஆணையும், பெண்ணையும் ஒருவருக்கொருவர் முரண்பட்டுக்கொள்ளாத பங்குதாரர்களாக, உதவியாளர்களாக ஒரு ஆரோக்கியமான சமூகத்துக்குள் வாழச் செய்கின்றன.
சூரா அல் அஹ்ஸாப்பில் இது குறித்து ஒரு வசனம் பின்வருமாறு கூறுகிறது,
“அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் ஏதேனும் ஒரு விவகாரத்தில் தீர்ப்பளித்துவிட்டால், பிறகு அந்த விவகாரத்தில் சுயமாகத் தீர்ப்பளிக்கும் அதிகாரம் இறைநம்பிக்கை கொண்டுள்ள எந்த ஆணுக்கும், இறை நம்பிக்கை கொண்டுள்ள எந்தப் பெண்ணுக்கும் கிடையாது. மேலும், எவன் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்கின்றானோ, அவன் வெளிப்படையான வழிகேட்டில் வீழ்ந்துவிட்டான்.” (33:36)
இஸ்லாமிய சமூக அமைப்புக்குள் முஸ்லிம் பெண் தனது வாழ்க்கையில் மனநிறைவுடன் வாழ்கிறாள். ஏனென்றால் அவளது வாழ்க்கையில் அவள் தனது படைப்பாளனான இறைவனைத் திருப்த்திப்படுத்துவதற்காகவே வாழ்கிறாள். மாறாக தனது கணவன், குடும்பம், சமூகம் அல்லது சமுதாயத்தில் தொடர்ச்சியாக மாறிவரும் எதிர்பார்ப்புக்கள் அனைத்தையும் திருப்த்திப்படுத்துவதற்காக அவள் வாழவில்லை. இஸ்லாம் ஆணுக்கும், பெண்ணுக்கும் அவர்களின் இயல்பில் ஒத்த குணங்களை அடிப்படையாகக் கொண்டு பொதுவான கடமைகளை பரிந்துரைக்கிறது. தொழுகை, நோன்பு, ஷகாத், ஹஜ் போன்ற கடமைகள் அவர்கள் இருபாலாருக்கும் பொதுவாகவே கடமையாக்கப்பட்டுள்ளன. வேறு சில கடமைகள் அவர்களின் யதார்த்த நிலையில் உள்ள வேறுபாடுகளை அடிப்படையாகக் கொண்டு வெவ்வேறாக அவர்களுக்கு கடமையாக்கப்பட்டுள்ளன. இஸ்லாத்தைப் பொருத்தமட்டில் ஆணுக்கு பரிந்துரைத்த கடமை பெண்ணுக்கு பரிந்துரைத்த கடமையை விட சிறந்ததாக அது ஒருபோதும் கருதுவதில்லை. மாறாக பொதுவாக மனிதன் பூர்த்தி செய்யவேண்டிய கடமைகளாகவே அவை கருதப்படுகின்றன. அந்தக்கடமைகள் தொடர்பாக அவர்கள் தங்கள் இறைவனிடம் பொறுப்புக்கூறக்கடமைப்பட்டுள்ளார்கள். ஆண் தனக்கு வழங்கப்பட்ட கடமையை தான் நேர்த்தியாக செய்தேனா? என்பது பற்றியே கவலை கொள்கிறான். அதேபோல ஒரு பெண் தனது கடமையை தான் எவ்வளவு தூரம் முறையாகப் பூர்த்தி செய்தேன் என்பது பற்றியே அக்கறை கொள்கிறாள். இவ்வாறு ஆணும், பெண்ணும் அவரவருக்குரிய கடமைகளை சிறப்பாக நிறைவேற்றுவதைக்கொண்டு குடும்பமும், அதன் தொகுப்பான சமூகமும் ஒத்திசைவாக முன்னேறுகிறது. அமைதியாகவும், முரண்பாடுகள் அற்றும் இயங்குகிறது.
எனவே இஸ்லாமிய சமூகத்தை பொருத்தமட்டில் ஆண், பெண் சமத்துவம் என்பது ஒரு விவாதப்பொருள் அல்ல. இஸ்லாமிய சமூக அமைப்பு இயல்பிலேயே அத்தகைய ஒரு விவாதத்தை தோற்றுவிப்பதில்லை. பெண் ஆணுக்கு சமமாக இருப்பது, ஆண் பெண்ணுக்கு சமமாக இருப்பது என்பது என்ற எதிர்பார்ப்பு அவர்களின் சமூக வாழ்க்கையில் செல்வாக்கு செலுத்துகின்ற ஒரு விடயமல்ல. ஆண், பெண் சமத்துவம் என இன்றைய பெண்ணியல்வாதிகள் தூக்கிப்பிடிக்கும் பால் சமத்துவ கோரிக்கை என்பது மேற்குலக நாகரீகத்தின் பலகீனத்தின் ஒரு வெளிப்பாடாகும். இஸ்லாம் பாலின வடிவில் பாரபட்சம் செய்யும் ஓர் சமூக அடிப்படையில் நின்று உருவான ஒன்றல்ல என்பதால் அங்கே பால் சமத்துவக்கோரிக்கைக்குரிய அடிப்படை கிடையாது.
இஸ்லாம் ஒரு பெண்ணின் கண்ணியத்தையும், பாதுகாப்பையும் இரண்டு வழிமுறைகளில் பாதுகாக்கிறது. ஒன்று இன்று உலகெங்கிலும் நடைமுறையிலுள்ள தாராளமய சுதந்திரங்களை அது முற்றாக நிராகரிக்கிறது. இரண்டு, ஒட்டுமொத்த சமூகத்தையும் தக்வாவை அடிப்படையாகக் கொண்டு கட்டியெழுப்பி அதனை மென்மேலும் ஊக்குவிக்கிறது. இதன் மூலம் ஆண்கள் பெண்களை பார்க்கும், நடத்தும் கோணத்திலும், நடத்தையிலும் பொறுப்புகூறலின் மனநிலையை வளர்க்கிறது. அல்லாஹ(சுபு)வின் பார்வையிலிருந்து தன்னால் தப்ப முடியாது என உணர்ந்த ஒரு சமூகத்தில் பெண்களை மோகப்பொருளாக்களும், அவர்களின் உடல்களை புறநிலைப்படுத்தல்களும் முற்றாக நிறுத்தப்படுகின்றன.
எனவே இஸ்லாமிய ஷரீஆவால் வழிநடாத்தப்பட்ட ஒரு இஸ்லாமிய சமுதாயத்தால் மாத்திரம்தான் முஸ்லிம் பெண்களை மாத்திரமல்ல, முஸ்லிம் அல்லாத பெண்களையும் கண்ணியமாகவும், சுயமரியாதையுடனும் வாழ வைக்க முடியும். மாறாக மேற்குலக கலாசாரத்தால் போதையுற்ற இன்றைய இலங்கையின் சமூக அமைப்பாலோ, சட்ட திட்டங்களாலோ எந்தப் பெண்களின் நல்வாழ்வையும் நிச்சயமாக உறுதிப்படுத்த முடியாது. எனவே முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்து தொடர்பான சட்டங்களில் மாற்றத்தை கொண்டுவருவதற்கு புரட்சி செய்ய துடிக்கின்ற அனைவரையும், முதலில் நாட்டிலுள்ள அனைத்துப்பெண்களையும் பாதிக்கின்ற பிரச்சனைகளின் பக்கம் கவனத்தை திருப்புமாறு களத்துக்கு அழைக்கிறோம்.
இறுதியாக, இன்று முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்து சட்டச் திருத்தம் தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சையை முஸ்லிம் சமூகம் எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பது பற்றி சில அடிப்படைக் கருத்துக்களைக் கூறி முடிக்கலாம் என்று நினைக்கிறோம்.
1. இஸ்லாமிய தனியார் சட்ட ஏற்பாட்டுக்குள் முஸ்லிம் அல்லாத பிறர் தலையீடு செய்வதையும், இஸ்லாமிய ஷரீஆ நிலைப்பாடுகளை ஷரீஆவுக்கு புறம்பான வேறு நியமங்களைக் கொண்டு மதிப்பீடு செய்து விமர்சனங்கள் தொடுப்பதையும் முஸ்லிம் சமூகம் முற்றாக நிராகரிக்க வேண்டும். சமகாலத்தில் இலங்கையில் முஸ்லிம் சமூகத்துக்குள் மாத்திரமல்லாமல் நாடு பூராகவும் பெண்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சனைக்கான உண்மையான காரணங்களை தோலுரித்துக்காட்டி விவாதத்தை சரியான திசை நோக்கி செலுத்த வேண்டும்.
2. இன்று இலங்கை கடைப்பிடித்து வரும் அல்லது முற்றுமுழுதாக தழுவ முற்பட்டுவரும் மேற்குலக வாழ்க்கை முறை பற்றியும், தாராண்மைவாதம் மற்றும் சுதந்திரம் போன்ற மேற்குலக எண்ணக்கருக்களால் எமது சமூகத்தில் அதிகரித்துவரும் விபரீதங்கள் பற்றியும் விழிப்புணர்வை ஏற்படுத்தி அதன் ஆபத்திலிருந்து முஸ்லிம் சமூகம் உட்பட முழு நாட்டையும் பாதுகாப்பதற்காக முயற்சிக்க வேண்டும்.
3. இஸ்லாமிய ஷரீஆ சட்டம் தொடர்பாக மிகத்தெளிவான தீர்க்கமான நிலைப்பாட்டை முஸ்லிம் சமூகம் ஒருமித்த குரலில் ஓங்கி ஒலிக்க வேண்டும். ஷரீஆ சட்டம் என்பது எம் எல்லோரையும் படைத்துப் பரிபாலிக்கின்ற ஏக இறைவனான அல்லாஹ்(சுபு)வின் சட்டம். மனித சமூகத்திற்கான சட்டங்களை வகுப்பதற்கு அவனுக்கு மாத்திரமே உரிமை இருக்கின்றது. எனவே அவனது சட்டங்களை மனிதனோ, மனிதச் சட்டங்களோ அல்லது மனிதனால் உருவாக்கப்பட்ட நீதிமன்றங்களோ மதீப்பீடு செய்வதற்கு தகுதி பெற மாட்டாது என்பதை எவராக இருந்தாலும் அவர்களுக்கு முதல் சந்தர்ப்பத்திலேயே மிகத்தெளிவாக முன்வைத்து விட வேண்டும்.
4. நவீன காலத்தில் விதம் விதமாக உருவாகி வருகின்ற பிரச்சனைகள் அனைத்துக்குமான தீர்வு இஸ்லாமிய ஷரீஆ சட்டங்களை முழுமையாக நடைமுறைப்படுத்துவதிலேயே இருக்கிறதேயொழிய அதிலிருந்து எம்மை விடுவித்துக் கொள்வதில் அல்ல என்பதை முஸ்லிம்கள் மிகத் தெளிவாக உணர்ந்து கொள்ளவதுடன், பிற சமூகங்களையும் அல்லாஹ்(சுபு) வழிகாட்டலின் பால் அழைப்பதற்கான சிறந்த சந்தர்ப்பங்களாக இச்சந்தர்ப்பங்களை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
5. இறுதியாக, முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்து சட்டத்தை சீர்திருத்துவது என்ற படலத்தை நடைமுறையில் பிறரை திருப்த்திப்படுத்துவதற்காகவோ, அவர்களின் நிர்ப்பந்தங்களுக்கு அனுசரித்துச் செல்வதற்காகவோ, அவர்கள் முன்வைக்கின்ற அர்த்தமற்ற குற்றச்சாட்டுக்களுக்கு முகம்கொடுக்க முடியாமல் ஓடி ஒழிவதற்காகவோ நாம் கையில் எடுக்கக்கூடாது. மாறாக இன்று இருக்கின்ற சட்ட ஏற்பாடுகளிலும், காதி நீதிமன்ற நடைமுறைகளிலும், பொறிமுறைகளிலும் உண்மையாகவே இருக்கின்ற குறைபாடுகளையும், சிக்கல்களையும் சீர்திருத்துவதற்கு முழு முஸ்லிம் சமூகமும் ஒற்றுமையாக இணைந்து முயற்சிக்க வேண்டும். இதன்போது சுதந்திரம், பெண்சமத்துவம் போன்ற மேற்குலக சிந்தனைகளால் பாதிப்புறாத, தோற்கடிக்கப்பட்ட மனோநிலையால் தாக்கப்படாத, தூய்மையான இஸ்லாமிய சட்ட அறிஞர்களின் வழிகாட்டல்கள் மாத்திரம் பெறப்பட வேண்டும். அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவோ, இன்று அதிகரித்து வருகின்ற மிதவாத இஸ்லாமிய முகாமைச் சேர்ந்த அறிஞர்களோ அல்லது வேறு எந்த சிவில் அமைப்புக்களைச் சேர்ந்தவர்களோ தத்தமது சிந்தனைப்பள்ளியின் நிலைப்பாடுகளை(மத்ஹப்கள்), கருத்துக்களை மாத்திரம் கவனத்தில் எடுக்காது தூய்மையான இஸ்லாமிய ஷரீஆவின் நிலைப்பாடுகளை இனம்காண்பதில் கவனத்தைச் செலுத்த வேண்டும். இதன்போது இந்தச் சீர்திருத்தத்தில் எவரும் ஏகபோக உரிமை கோராமல் ஷரீஆவின் வரையறைக்குற்பட்ட மாற்றுக்கருத்துக்களையும் உள்வாங்குவதற்கு துணிச்சலுடன் செயற்பட வேண்டும்.
அதன் விளைவாக எவ்வித அழுத்தங்களும் அற்ற நிலையில் முஸ்லிம் சமூகத்தால் நிதானமாக எடுக்கப்பட்ட முடிவுகளைக்கொண்டு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் வரை முஸ்லிம் அரசியல் வாதிகளும், ஏனைய நாட்டின் தலைவர்களும், அமைச்சுக்களும் இன்று நாடு எதிர்நோக்கியிருக்கும் பிரதான பிரச்சனைகளில் கவனத்தைக் குவிக்க முயற்சிக்குமாறு வேண்டி நிற்பதே சாலச் சிறந்ததாகும்.