“ஒரு நாட்டை வெற்றி கொள்ளவும் அடிமை படுத்தவும் இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று வாளினால் மற்றையது கடன் வழங்குவதினால் ” என்றார் அமெரிக்காவின் மூத்த தலைவர்களில் ஒருவராக கருதப்படும் ஜான் ஆடம்ஸ். இன்று இந்த கூற்று இலங்கையிலும் உண்மை படுத்தப்பட்டுள்ள நிலையை காணலாம்.
இலங்கையினுடைய பொருளாதாரத்தின் தற்போதைய மோசமான நிலை பற்றி அறியாதவர்கள் யாரும் இருப்பார்களா என்பது ஓர் ஐயமான விடயம்தான். ஏனெனில் பொருளாதாரம் மக்களின் அன்றாட வாழக்கையோடு பின்னிப்பிணைந்தது, ஏனைய அரசியல் சமூக விடயங்களில் ஏற்படும் தாக்கங்களை எல்லோராலும் புரிந்துகொள்ளமுடியாவிட்டாலும் பொருளாதார விடயங்களில் ஏற்படும் தாக்கம் இலகுவாக எல்லோராலும் புரிந்துகொள்ளமுடியும்..
அதிகமாக கடன் வாங்கியவன் நிலை எவ்வாறிருக்கும் என்பதை நாம் அறிந்திருக்கிறோம் . கடனை முறைப்படி செலுத்த தவறுமிடத்து கடன் கொடுத்தவன் தன் பணத்தை மீள பெற தன்னால் முடிந்த பலத்தை பிரயோகிப்பான்.கடன் பெற்றவனிடம் திருப்பிச்செலுத்த பணம் இல்லையென்று அறிந்தால், அவனது சொத்துக்களை அபகரிக்கப்பான் .அவன் உழைப்பின் வருமானத்தை அப்படியே பிடுங்கிக்கொள்வான்.இறுதியில் கடன் பெற்றவன் எந்த வித சுய தேர்வுமின்றி கடன் கொடுத்தவனிடம் அடிமையாகிவிடுவான். இதே கண்ணோட்டத்தில் இலங்கையை நிலையை சற்று நோக்குங்கள். இலங்கை அதிகமா கடன் வாங்கிருக்கிறதா? தேசிய சொத்துக்கள் ஏதும் பறிக்கப்பட்டுள்ளதா ? நாட்டின் வருமானத்தின் பெரும்பகுதி கடனை அடைக்க செலவிடப்படுகின்றதா? நாடு தனது பொருளாதாரம் தொடர்பாக சுயமாக தீர்மானிக்கும் இறைமையை இழந்துள்ளதா?
கடந்த அரசின் நிலை
அதிவேக நெடுஞ்சாலைகள் , விமான நிலையங்கள் , துறைமுகங்கள் போன்ற பாரிய அபிவிருத்தி திட்டங்களாலும் கவர்ச்சிகரமான பொருளாதார சுட்டிகளாலும் தமது ஆட்சிக்கதிரையை அலங்கரித்துக்கொண்டிருந்த மகிந்த அரசு , தனது இறுதிக்காலத்தில் பொருளாதாரப் பிரச்சினைகளால் ஆட்டம் காணத்தொடங்கியது.
உலக வங்கி மற்றும் ஓக்ஸ்போர்ட் பல்கலைக்கழக ஆய்வின் படி நெடுஞ்சாலையொன்றின் ஒரு கிலோ மீட்டருக்கான சராசரியான செலவு 7.9 மில்லியன் டாலர்கள் ஆகும் . ஆனால் இலங்கையின் மகிந்த அரசு இதைவிட மூன்று மடங்கு செலவு செய்து ஊழலில் உலக சாதனை படைத்திருக்கிறது..
உதரணமாக – கொடகம-பெலியத்த ஒரு கிலோமீட்டருக்கு 26 மில்லியன் டாலர்.
கொழும்பு-கட்டுநாயக்க நெடுஞ்சாலை, ஒரு கிலோமீட்டருக்கு 26 மில்லியன் டாலர் .
மத்திய நெடுஞ்சாலைக்கு ஒரு கிலோமீட்டருக்கு 27 மில்லியன் டாலர் .
இந்த பகல் கொள்ளை காரணமாக வரிச்சுமை மெல்ல மெல்ல மக்கள் முதுகின் மேல் ஏறி கழுத்தை பற்றிக்கொள்ள ஆரம்பித்தது , நாட்டின் தேசிய கடன் 7,390 பில்லியன் ரூபாய்க்கள் என்ற சிகரத்தை தொட ஆரம்பித்திருந்தது(1).
இவற்றை மக்களின் பேசு பொருளில் இருந்து திசை திருப்ப அரசு இனவன்முறையை ஆங்காங்கே கட்டவிழ்த்து முஸ்லிம்களின் சொத்துக்களுக்கு பாரிய இழப்பையும் உருவாக் கியிருந்தது.இதனால் மக்கள் அதிருப்தியின் உச்சத்தில் இருந்தார்கள்.பொருளாதார நெருக்கடிகள் ஒருபக்கம் இனவன்முறைகள் மறுபக்கம் என மக்கள் மூச்சுவிட முடியா நெருக்கடிக்குள் ஆட்பட்டிருந்தனர்.புதிய ஆட்சி மாற்றமே இதற்கான தீர்வு என்று மக்கள் நம்பியிருந்த வேளையில் “நல்லாட்சி” எனும் பெயரில் புதிய அரசு பல வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்தது.
நல்லாட்சியின் வாக்குறுதிகளும் தோற்றமும்
மக்களின் மனோ நிலையை சரியாக நாடி பிடித்த புதிய அரசு மக்களை திருப்திப்படுத்தும் வண்ணம் பல வாக்குறுதிகளை அள்ளி வீசியது. அவற்றில் சில,
1.பாரிய ஊழல்களையும் மோசடிகளையும் ஒழித்து கடந்த ஆறு வருடத்தில் இடம்பெற்ற அபிவிருத்தியை விட பத்து மடங்கு அபிவிருத்தியை நான் எய்தியிருப்பேன்.
2.தேசத்தின் கடன் நிமித்தம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தேசத்தின் சொத்துக்களை வெளிநாட்டுக்கோ அல்லது சர்வதேச கம்பெனிகளுக்கோ கையளிக்கமாட்டேன்.
3.அரச ஊழியர்களுக்கான சமபளத்தை 10,000 ரூபாவால் அதிகரிப்பேன்.
இப்படி வாக்குறுதிகளையளித்து (2) ஆட்சிபீடம் ஏறிய அரசு, நாட்டின்நிலையை எந்தளவில் வைத்துள்ளது என்பதை எல்லோராலும் புரிந்துகொள்ளமுடியும்.கடந்த கால அரசினை போன்றே மக்கள் பணத்தை மோசடி செய்தமை , குறைவில்லா ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு பெயர் போனமை.அதில் ஒன்றுதான் இரவு பகலாய் கஷ்டப்பட்டு உழைத்து, வயோதிபம் வரும் காலத்தில் தங்கள் தேவைக்கு பயன்படுத்தலாம் எனும் நோக்கில் சேமித்த, ஊழியர்களின் பணத்திற்கு 2,100 கோடி ரூபாய்க்கும் அதிகமான நஷ்டத்தை, ஊழியர்களின் சேமிப்பை கொண்டு நடத்தும் ஊழியர் சேமலாப நிதியம் பெற்றுக்கொடுத்திருந்தது (3).
தற்போது தேசத்தின் படுகடன் நாட்டின் ஆண்டு வருமனத்தை விட ஐந்து மடங்குக்கும் அதிகமான நிலையில் உள்ளது . வட்டிக்கொடுப்பனவு, ஏழை மற்றும் வயோதிப நோயாளிகள் அதிகம் பயன்பெறும் சுகாதார மருத்துவத்திற்கான செலவினத்தை விடவும் மூன்று மடங்கு அதிக கமாகவுள்ளது.
அதேபோன்று சிறார்களின் சீருடை,பாடப்புத்தகம் போன்ற அவர்களின் கல்விக்கான செலவினத்தை விட மூன்று மடங்கு அதிகமாக செலவீனத்தை வட்டிக்கொடுப்பனவு மாத்திரம் ஏற்படுத்தியுள்ளது.
அந்த வகையில் 2017 ஆண்டில் வட்டிக்கொடுப்பனவாக செலவழித்த தொகை 735 பில்லியன்கள் ஆகும்.இது சுகாதாரத்திற்கான(204 பில்லியன்கள்) மற்றும் கல்விக்கான (201 பில்லியன்கள்) செலவின் ஒட்டு மொத்த கொடுப்பனவை விட அதிகமாகும் (4).
அன்றாட உணவுத்தேவைக்காக கடன் பெறும் மக்கள் வாழும் சமூகம் ,அதே போன்று கடனை திருப்பி செலுத்தமுடியாமல் தூக்குக் கயிற்றிடம் தஞ்சம் புகும் மக்கள் வாழும் சமூகம் , இங்கே வட்டிச் சுமைக்காக அறவிடப்படும் மேலதிக வரிகள் மிக மோசமான விளைவையே கொண்டுவரும்..
எனவேதான் இரண்டு அரசுமே ஒன்றன் பின் ஒன்றாக மக்களுக்கு அநீதியை இழைத்திருக்கின்றதே தவிர தீர்வை யாரும் பெற்று கொடுக்கவில்லை. இப்போது கேட்கப்படவேண்டிய கேள்வி , இலங்கை இந்த நிலைமைக்கு எவ்வாறு வந்து சேர்ந்தது.?
1.கடன்பொறி
இங்கைக்கு கடன் கொடுக்க முன்வந்த எந்த நாடுமோ நிறுவனமோ தங்களுகென்றொரு அரசியல் பொருளாதார நலனின்றி முன்வரவில்லை.இதை நாம் முதலில் நன்றாக மனதிலிறுத்திக் கொள்ளவேண்டும் .
1.1 சீனா
திருப்பி செலுத்த முடியாது என்று அறிந்தும் மேலும் கடன்களை வழங்கி இலங்கையை தனது பொறிக்குள் சிக்கவைத்திருக்கிறது . இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகம் மக்கள் பயன்பாட்டுக்கு வர முன்னரே வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் கடனுக்கு பகரமாக சீனாவிற்கு கையளித்திருப்பது இலங்கையின் வங்குரோத்தது நிலையை தெளிவாக காட்டுகிறது. இந்த பொறியை சாதகமாக பயன்படுத்திய சீனா, தனது பிராந்திய இருப்புக்கு சாதகமாக பட்டுபாதைக்கான கேந்திர மையமாக இலங்கையை சிக்கவைத்துள்ளது.ஏனைய ஆசிய நாடுகளிற்கு கடன் பொறிக்கு எச்சரிக்கையாக இலங்கையின் நிலை முன்னுதாரணமாக போதிக்கப்பட்டு வருகிறது (5).
1.2 சர்வதேச நாணய நிதியம்
இலங்கையின் ஆலோசராக அறிமுகமாகியிருக்கும் சர்வதேச நாணய நிதியம் , கடனிலிருந்து காப்பாற்ற வாஷிங்க்டன் கொள்கைகளை இலங்கையில் திணித்து,கட்டமைப்பு சீராக்கம், தனியார் மயப்படுத்தல் என்பவற்றை ஊக்குவித்து இலங்கையிடம் இருந்து அதன் பொருளாதார கொள்கைகளுக்கான சுயமாக தீர்மானம் எடுக்கும் இறைமையை பறித்திருக்கின்றது.
இதன் கொள்கைகள் எவ்வாறு இதற்கு முன்னர் கடன் கொடுத்த நாடுகளில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது என்பதே இலங்கையின் எதிர்கால போக்கிற்கான பாதையாக அமைய போகின்றது.கிரீஸ் நாட்டில் சர்வதேச நாணய நிதியத்தின் தலையீடு, எவ்வாறு இருந்த நிலைமையை எவ்வாறு மோசமடையச்செய்தது என்பதும், ஆர்ஜன்டினாவின் நிலையை இப்போது எவ்வாறு மோசமடையச்செய்து கொண்டிருக்கின்றது என்பதும் சிறந்த சான்றாகவுள்ளன. (6).
2. ஊழல்
பெரும்பாலானோர் நினைப்பது போன்று ஊழல் என்பது மஹிந்த அரசிடம் இருந்துதான் தோற்றம் பெற்றது அல்ல . உண்மையில் இவரது ஆட்சியில் பாரிய அளவில் ஊழல் இடம்பெற்றாலும் இலங்கையின் ஜனநாயக அரசியல் பிறந்த காலம் தொட்டு ஊழல் இருந்து கொண்டேதான் இருக்கிறது.
உதாரணமாக – (7)
1.ஜே.ஆர் ஜெயவர்த்தன காலப்பகுதியில் -நில சீர்திருத்த ஆணைக்குழுவின் ஊடாக இடம்பெற்ற காணி மோசடிகள்
2.சந்திரிக்கா குமாரதுங்கவின் காலப்பகுதியில் -பாராளுமன்ற உறுப்பினர்கள் மூலமாக வழங்கப்பட்ட மதுபான உரிமம் தொடர்பான மோசடி
அதேபோன்று அரசியல் வாதிகளினது எந்தவித நீண்டகால திட்டமிடல் அற்ற செயற்பாடுகள் மற்றும் அவர்களது தலையீடுகளை கொண்டு செய்யப்படும் நியமனங்கள் போன்றவை மிக மோசமான விளைவுகளை பெற்றுக்கொடுத்துள்ளன. அரசுக்கு சொந்தமான நிறுவனங்கள் அடைந்த நட்டங்கள் இதற்கு தெளிவான சாட்சியாகும்.
2016 ஆண்டின் படி
-
CEB அடைந்த நட்டம்- 9,630 மில்லியன்கள்
-
Srilanka Port Authority அடைந்த நட்டம் -3,463 மில்லியன்கள்
-
Srilanka Airlines அடைந்த நட்டம் -12,103 மில்லியன்கள்
3. ஜனநாயகத்தின் இயலாமை
ஜனநாயகம் முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லையென்பதால் தான் இத்தகைய நிலை காணப்படுகிறது என பலர் அறியாமையில் வாதிடுகின்றனர். ஆனால் உண்மை அதுவல்ல. ஜனநாயகம்தான் இவற்றுக்கான மூல காரணி. அரசியல் வாதிகளின் இத்தகைய செயற்பாட்டை அது எவ்வாறு ஊக்குவிக்கின்றது என்ற உண்மையை சற்று சிந்தித்தால் புலப்படும்.
மக்களுக்குகாக மக்களால் நடைபெறும் ஆட்சி மக்களாட்சி என்று தன் முகத்தை அழகாக அறிமுகப்படுத்தும் ஜனநாயகம் அதன் அசிங்கமான உடலை மக்களிடம் இருந்து பெரும்பாலும் மறைத்துக்கொண்டே செயற்படுகிறது.
சிறப்பான ஒரு அம்சமாக பார்க்கப்படும், காலத்திற்கு காலம் ஆட்சிக்கதிரியை பிடிக்கும் ஆட்சியளர்களின் மாற்றம் நீண்ட கால நன்மைகளை புறந்தள்ளி தங்களது ஆட்சிகதிரைகளை பற்றிக்கொள்ளத்தேவையான குறுங்கால அரச பொருளாதார கொள்கை உருவாக்கத்திற்கு வழி வகுக்கின்றது என்பதை எம்மில் பலர் புரிய மறுத்துள்ளோம்.
அபிவிருத்தி என்ற பெயரில் தற்போது நடப்பவையெல்லாம் நாட்டின் இயலுமைக்கப்பால் உள்ள விடயங்களை, வாக்காளர்களை திருப்திபடுத்தவேண்டும் என்கின்ற ஒரே நோக்கதிற்காக செய்யப்படுபவைகள் தான். அதை நிறைவேற்ற வெளிநாடுகளில் இருந்து கடும் நிபந்தனைகளில் கடனிற்கு மேல் கடனை பெற ஆரம்பித்து விடுகிறார்கள். இத்தகைய தொடர் செயற்பாடு நாட்டை கடன் பொறியாக இறுகப்பிடித்திருகின்றது.
நடந்து முடிந்த “புதிய பிரதமர்” நியமனத்தின் பின்னர் மஹிந்த ராஜபக்ச எடுத்த சில தீர்மானங்கள் மிகவும் வெளிப்படையான உதாரணங்களாகும். அதாவது ஏற்கனவே வரவு செலவுத் திட்ட பற்றாக்குறையால் தத்தளிக்கும் நாடாக பெயர்போன தேசத்தில் அவர் அள்ளி வழங்கிய வரிச்சலுகைகளும், மானியங்களும் வாக்காளர்களை திருப்திபடுத்தும் குறுங்கால நோக்குடைய அரசின் கொள்கைகளுக்கான மற்றுமொரு சிறந்த உதாரணங்களாகும்.
எனவேதான் இந்த முதலாளித்துவ ஒழுங்கில் இந்த பிரச்சினைகளுக்கு எந்த தீர்வுமே கிடையாது என்கின்ற யதார்த்ததை நன்றாக புரிந்து கொள்ளவேண்டும். இதற்கு வெளியில் ஏதும் மாற்றீடு உண்டா ? மக்கள் நலனை மையமாக கொண்ட ஸ்திரமான ஆட்சி முறை ஏதுமுண்டா? என்கின்ற கேள்விகளுக்கு விடை தேட முற்பட வேண்டும். அவ்வாறு முற்படும் போது இதற்கு இஸ்லாம் என்கின்றே ஒன்றே நிச்சயமான தீர்வாக இருக்க முடியும் .
ஏனெனில் பலகீனமான மனித சிந்தனையில் உருவான அரசியல் முறைமைகளில் நேர்த்தியான வெளியீடுகளை எதிர்பார்ப்பது யதார்த்திற்கு புறம்பானதல்லவா?.இதனால் தான் இஸ்லாம் ஆட்சி முறைமைகளை இறைவிதிகளால் வரைந்திருகின்றது. அது முழு பிரபஞ்சத்தையும் படைத்து நிர்வகித்துக்கொண்டிருக்கும் அந்த இறைவனின் சட்டதிட்டங்களால் நிரப்பப்பட்டிருக்கின்றது.
Reference
1. Economic Statistics of Sri Lanka 2018
2. http://www.asianmirror.lk/news/item/5782-full-text-of-maithripala-sirisena-s-election-manifesto
3. https://www.newsfirst.lk/2017/04/09/losses-incurred-epf-bond-scam/
4. Annual Report 2017 Ministry Of Finance Sri Lanka.
5. https://economictimes.indiatimes.com/news/international/world-news/new-chinese-loan-may-further-plunge-sri-lanka-into-debt-trap/articleshow/65659719.cms
7. http://www.ft.lk/columns/Roots-of-bribery-and-corruption/4-670582