நிதிக்கம்பனிகளை விரட்டியடித்து விடலாம், ஆனால் சங்கிலிக்கதிரை விளையாட்டில் எவ்வாறு ஒருவர் தோற்பது நியதியோ அதேபோன்றுதான் எங்கோ ஒருவர் தூக்கில் தொங்குவதும் நஷ்ட்டமடைவதும், இல்லாத வட்டியை கேட்கும் இந்த பொருளாதர முறையின் நியதி. இதை எவ்வாறு தடைசெய்வீர்கள்?
நாளுக்குநாள் அதிகரிக்கும் விலைவாசியும், தொழில் வாய்ப்பற்ற தன்மையும், ஊழல் சுமைகளை வரியாக மக்கள் மீது கொப்பளிக்கும் அரசும் உள்ள போது நாளைய தூக்கு கைற்றுக்கான தலைமுறையை உருவாக்குவதை எவ்வாறு தடை செய்வீர்கள்?
பிரச்சினைக்கான தீர்வு என்பது குறிப்பிட்ட ஓர் பிரச்சினைக்கான மூல காரணங்களையும் அதன் யதார்த்த நிலையையும் சரிவரப்புரிந்து கொள்வதில் இருந்து தொடங்குகிறது. ஒரு சமூகம் பல்வேறுவகையான நம்பிக்கைக் கோட்பாட்டடிப்படையில் ஒழுங்கமைப்பட்டிருக்கலாம். எனினும் இந்த பிரபஞ்சத்தை ஒழுங்கமைத்த இறைவன் எவ்வாறு மனித சமூகமும் ஒழுங்கமைக்கப்படவேண்டும் என தீர்மானிக்கின்றானோ அந்த அடிப்படையில் ஒழுங்கமைப்பது மாத்திரம் தான் மிகச் சரியானதாக இருக்க முடியும்.
இவ்வாறான ஒழுங்கமைப்பில் இருந்து விலகிச் செல்லும் சமூகம் எவ்வாறெனில் உற்பத்திப் பொருளொன்றினை பயன்படுத்துவதில் உற்பத்தியாளன் கூறிய, அதனை பயன்படுத்தும் விதிகளை புறக்கணித்துவிட்டு, தான்தோன்றித்தனமாக, தான் நினைத்தவாறு பயன்படுத்துவதன் மூலம் எவ்வாறான எதிர்மறை விளைவுகளை பெற்றுக்கொள்வார்களோ அவ்வகை சமூகத்துக்கு ஒப்பானவர்கள்.
அந்த வகையில் இஸ்லாம் கூறிய விதத்தில் ஒழுங்கமைக்கப்பட்ட சமூகத்தில் இவ்வாறனதொரு நுண்கடன் பிரச்சினை உருவாக முடியாது என்று உறுதியாக கூறுவதற்கு இஸ்லாத்துக்கே உரித்தான தனித்துவமான பின்வரும் அம்சங்களை கூறலாம்.
தனிமனிதன்
ஒரு மனிதன் தனது பொருளீட்டல் விடயத்தில் எவ்வாறு ஆகுமான முறையில் பொருளீட்ட வேண்டுமோ, அதே போன்று தனது செலவீனங்களை பொருத்தவரையில் வீண்விரயமற்ற ஆடம்பரமற்ற முறையில் தனது வருமானத்துக்கேற்றால்போல் தனது வாழ்க்கையை அமைத்து கொள்வதனை இஸ்லாம் முன்மாதிரியாக ஆக்கியிருக்கிறது.
“…உண்ணுங்கள், பருகுங்கள் வீண் விரயம் செய்யாதீர்கள். ஏனெனில் அல்லாஹ் அளவு கடந்து (வீண்) விரயம் செய்பவர்களை நேசிப்பதில்லை”. (அல்குர்ஆன் – 7:31)
“உறவினர்களுக்கும், ஏழைகளுக்கும், வழிப்போக்கர்களுக்கும் அவரவர்களுடைய உரிமைகளைக் கொடுத்து வரவும். (செல்வத்தை) அளவு கடந்து வீண் செலவு செய்ய வேண்டாம். நிச்சயமாக வீண்விரயம் செய்பவர்கள் ஷைத்தான்களின் சகோதரர்களாவார்கள்….” (அல்குர்ஆன் – 17:26 – 27)
“குறைந்த செலவில் நடத்தப்படும் திருமணமே அதிகம் பரகத் நிறைந்ததாகும்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: அஹ்மத்)
இதற்கு ஒருபடி மேலாக பொறுப்பற்ற முறையில் கடன் வாங்குவது தொடர்பாக மிகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது, அதில் ஒன்றுதான் இஸ்லாத்தின் உயர்ந்த நிலையில் காணப்படும் ஷஹீதான அந்தஸ்த்தை அடைந்த ஒருவரின் நிலை,
“அல்லாஹ்வின் பாதையில் உயிர் தியாகம் செய்த ஷஹீதுக்கு கடனை தவிர எல்லாப் பாவங்களும் மன்னிக்கப் பட்டுவிடுகின்றன” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: முஸ்லிம்)
“எவன் மக்களின் பணத்தை (அல்லது பொருட்களைத்) திருப்பிச் செலுத்தும் எண்ணத்துடன் கடன் வாங்குகிறானோ அவன் சார்பாக அல்லாஹ்வே அதனைத் திருப்பிச் செலுத்துவான். எவன் திருப்பிச் செலுத்தும் எண்ணமின்றி அதை (ஏமாற்றி) அழித்து விடும் எண்ணத்துடன் கடன் வாங்குகிறானோ அல்லாஹ்வும் அவனை அழித்து விடுவான். (நூல்:புகாரி)
இந்த தனிநபர் பண்புகளை கடன் கொடுத்தவர், கடன் பெற்றவர் தொடர்பான இஸ்லாமிய கண்ணோட்டத்தில் நோக்குவோமேயானால் அது பின்வரும் வரையறைகளுடன் நெறிப்படுத்துகிறது
கடன் கொடுப்பவர்
இஸ்லாம் கடனை பின்வரும் வரையறைகளுடன் நெறிப்படுத்துகிறது.
இஸ்லாம் செல்வந்தர்களுக்கு கடன் வழங்குவதை ஊக்கமளிக்கிறது. ஆனால் கடன் கொடுப்பவர் தான் கொடுத்த கடனுக்காக ஒருபோதும் பொருளியல் இலாபத்தை எதிர்பார்க்கவே கூடாது. மாறாக இந்த ஊக்கத்துக்கான ஒரேயொரு நோக்கம் இறை திருப்தி என்பது மட்டுமே இருக்க வேண்டும்.
ஆனால் இன்றுள்ள யதார்த்தம் பொருளியல் இலாபத்திற்கு மேலாக பாலியல் பணிவிடைகளைக் கோரி கடன் வசூலிக்கும் சமூகமாக நாம் மாறியிருக்கிறோம். இமாம் அபூ ஹனீபா (ரஹ்) அவர்களது காலத்தில் நடந்த ஓர் முன்னுதாரண செயற்பாட்டில் இருந்து இதனை புரிந்து கொள்ளலாம்.
ஒருமுறை இமாம் அவர்கள் வெய்யில் நாள் ஒன்றில் ஒருவரின் ஜனாஸாவுக்கு விஜயம் செய்த வேளையில் வெயிலுக்கு ஒதுங்குவதற்கு ஒரேயொரு வீட்டின் நிழலை தவிர வேறெதுவும் இருக்கவில்லை, ஆனால் பலர் சொல்லியும் இமாம் அவர்கள் அந்த வீட்டின் நிழலில் ஒதுங்குவதற்கு மறுத்தார்கள். அதற்கான காரணம் என்னவென கேட்டபோது “இந்த வீட்டின் உரிமையாளர் என்னிடம் கடன் பட்டவர், இவரிடம் இருந்து அடைய எதிர்பார்க்கும் எந்த இலாபமும் தடை செய்யப்பட்டுள்ளது. காரணம் என்னெவென்றால் கடன் கொடுப்பதன் மூலமாக எதிர்பார்க்கபப்டும் எந்தவொரு இலாபமும் வட்டியாகும்” என்று இமாம் அவர்கள் பதிலளித்தார்கள்.
இலாபத்தையே அகீதாவாக கொண்ட இந்த முதலாளித்துவ பொருளாதார வாழ்வொழுங்கில் இறைதிருப்திக்கு எந்த பெருமானமும் இல்லை எனும்போது இநத சமூகத்தில் எவ்வகையில் இப்படி கடன் கொடுப்போரை எதிர்பார்க்க முடியும்.
கடன் பெறுபவர்
ஆயிஷா(ரலி) அறிவித்தார்கள்,
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தொழுகையில் பிரார்த்திக்கும்போது, ‘இறைவா! பாவத்திலிருந்தும், கடனிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்” என்று கூறுவார்கள். (இதைச் செவியுற்ற) ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம், ‘இறைத்தூதர் அவர்களே! தாங்கள் கடன்படுவதிலிருந்து இவ்வளவு அதிகமாகப் பாதுகாப்புத் தேடுவதற்குக் காரணம் என்ன?’ என்று கேட்டதற்கு நபி(ஸல) அவர்கள், ‘மனிதன் கடன்படும்போது பொய் பேசுகிறான்;, வாக்குறுதி தந்து (அதற்கு) மாறு செய்கிறான்’ என்று பதிலளித்தார்கள்.
இந்த ஹதீஸிலிருந்து ஒரு விடயத்தை தெளிவாக புரிந்து கொள்ளலாம். கடன் கொடுப்பவருக்கு ஊக்கமளிக்கும் இஸ்லாம் கடன் பெறுபவருக்கு அந்த ஊக்கத்தை அளிக்கவில்லை. மாறாக அது எச்சரிக்கையையே விடுக்கிறது. கடனோடு மரணித்த ஒருவருக்கு தொழுகை நடத்துவதை கூட இறைத் திருத்தூதர் அவர்கள் விரும்பவில்லை. எனவே ஆகுமான விடயத்தை தவிர பொடுபோக்காக செலவு செய்யும் நோக்கோடு வாங்கும் கடன்களை விட்டும் ஒரு முஸ்லிம் தவிர்த்திருக்க வேண்டும் என்று இஸ்லாம் வலியுறுத்துகிறது.
சமூகம்
இஸ்லாமிய உயிரோட்டமுள்ள சமூகம் பலகீனமானோர்களையும், தேவையுடையோர்களையும் ஆதரிப்பதை தனது கடமை கொண்டு கட்டமைக்கப்பட்ட சமூகம். இந்த சமூகத்தில் வசதி இல்லாத ஒருவரின் தேவையை வசதி படைத்த ஒருவர் மன உவப்போடு பூர்த்தி செய்வார்.
“தன் பக்கத்திலிருக்கும் அண்டை வீட்டார் பசித்திருக்க, தான் மட்டும் வயிறார உண்பவர் ஓர் இறைநம்பிக்கையாளராய் இருப்பதில்லை” (நூல் : மிஷ்காத்)
“அல்லாஹ்வுக்கு நீங்கள் அழகிய கடன் கொடுத்தால் அதனை அவன் உங்களுக்கு பன்மடங்கு அதிகமாக்கித் தருவான். மேலும் உங்கள் பாவங்களைப் புறக்கணித்து விடுவான்”. (அல்குர்ஆன் 64: 17)
“ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமுக்கு இரு தடவைகள் கடன் வழங்கினால் அவற்றுள் ஒரு தடவை அவர் சதகா என்கிற தர்மம் செய்தவரைப் போன்றவராவார்” (நூல் இப்னு மாஜா, இப்னு ஹிப்பான்)
“எவர் ஒரு முஸ்லிமுடைய உலகக் கஷ்டங்களில் ஒன்றை நீக்க உதவுகிறாரோ அவரின் மறுமை நாள் கஷ்டங்களில் ஒன்றை அல்லாஹ் நீக்கிவிடுவான். மேலும் எவர் கஷ்டத்தில் அவருக்கு (உதவி செய்து) வசதி ஏற்படுத்திக் கொடுக்கிறாரோ அவருக்கு அல்லாஹ் இவ்வுலகிலும் மறுமையிலும் அவருடைய (கஷ்டங்களை) இலகுவாக்கிக் கொடுப்பான்.” (முஸ்லிம்)
என்றெல்லாம் கூறுமளவுக்கு இந்த சுபாவத்தை இஸ்லாம் வழியுறுத்துகிறது,
அதேபோல இஸ்லாமிய சமூகத்தில் கடன்படுவதற்கான தேவையும், கடனை வழங்கி அதிலே குளிர்காய்வதற்கான வாய்ப்புக்களும் மிக அரிதாகவே காணப்படும். காரணம் அங்கு வட்டி என்பது முற்றாக தடை செய்யப்படுவதனாலும், சேமிப்பின் மீது ஸகாத் என்கின்ற வரி அறவிடப்படுவதானாலும் முதலீடு செய்யும் நாட்டம் மக்களிடத்தில் அதிகளவில் காணப்படும். சுருங்கக் கூறினால் இஸ்லாமிய சமூகம் என்பது வீழ்கின்றவர்களுக்கு கரம் கொடுப்பதை தனது கடமையாக கொண்டு செயற்படுகின்ற அதே வேளையில், அனைவரது உரிமை விடயத்தில் நீதியான பொறிமுறையை கையாளும் தன்மையுடன் இருக்கும்.
இஸ்லாமிய அரசு
“எவன் மக்களின் பணத்தை (அல்லது பொருட்களைத்) திருப்பிச் செலுத்தும் எண்ணத்துடன் கடன் வாங்குகிறானோ அவன் சார்பாக அல்லாஹ்வே அதனைத் திருப்பிச் செலுத்துவான்…” இதற்கு இமாம்கள் கூறும் கருத்து ஆகுமான காரியங்களுக்காக கடன் பெற்ற ஒருவரின் கடனை இஸ்லாமிய அரசு செலுத்தும். இன்றுள்ள முதலாளித்துவ அரசுகள் பாரிய காப்ரேட் கம்பனிகளை வங்குரோத்து நிலைகளில் இருந்து காப்பற்ற எவ்வாறு அரச கொள்கைகளை உருவாக்கி ஒத்துழைக்கிறதோ, இதற்கு எதிர்மாற்றமாக தனிநபர் கடன்களை முன்னிலைப்படுத்தி கடனில் சிக்கியவர்களை இஸ்லாமிய அரசு காப்பாற்றும்.
இதற்கு மேலதிகமாக வட்டியற்ற பொருளாதார முறைமையை அரச கொள்கைகளாக நடைமுறைப்படுத்தி;, கடனை வணிகமாக செய்ய முனையும் அத்தனை சுரண்டல் வர்த்தக வாய்ப்புகளையும் தடை செய்யும்.
சொத்துப்பங்கீடு, அரசவள ஒதுக்கீடு போன்ற விடயங்கள், முழு சமூகத்தின் நன்மைக்காக அருளப்பட்ட இறை சட்டங்களை கொண்டே நிறைவேற்றப்படும். இன்றுள்ள முதலாளித்துவ பொருளாதாரத்தில் உள்ளவாறான ஓரவஞ்சனை கொள்கையை ஒருபோதும் இஸ்லாமிய அரசு நிறைவேற்றாது. காரணம் இறைசட்டத்தில் கையடிப்புச் செய்யும் உரிமை எந்த வர்க்கத்திற்கும் அளிக்கப்படவில்லை.
ஓர் சாதாரண ஏழை விவசாயினை எதிர்காலத்திற்கு கூட இஸ்லாமிய அரசு உத்தரவாதமளிக்கும்.
எந்தவித பயன்பாடுமற்ற நிலையில் பாரியளவிலான தரிசு நிலங்கள் முதலாளித்துவ பொருளாதார முறையில் காணப்படுவது போன்று குறித்த சில தனி நபர்களின், குடும்பங்களின் நில உடமையாக அவை மாற மாட்டாது. யாரேனும் ஒருவர் மூன்று வருடத்திற்கு மேலாக விவசாய நிலங்களை பயன்படுத்தாமல் தரிசு நிலங்களாக வைத்திருப்பாரானால், அரசு அதனை தனது கையகப்படுத்தி நிலங்கள் இல்லாத விவசாயிகளுக்கு உரிமை மாற்றம் செய்வதை அரச கொள்கையாக கொண்டிருக்கும்.
தீர்வு என்ற போர்வையில் வகை வகையான ஒட்டுவேலைகளைத்தான் எமது சமூகம் சந்தித்து வருகின்றது. ஆனால் முழுமையாக கரைபடிந்த இந்த முதலாளித்துவ பொருளாதார முறையை மாற்றி ஒட்டுமொத்த மனித இனமும் சுபீட்சம் பெற மாற்றத்துக்கான விலையை நாம் கொடுக்காத வரை ஏழைகளின் வீட்டில் இவ்வாறான தூக்குக் கயிறுகள் தொங்கிக் கொண்டே இருக்கும்.