செய்தி:
கடந்த மார்ச் 6ம் திகதி மத்திய கண்டி மாவட்டத்தில் சிறுபான்மை முஸ்லிம்களுக்கெதிரான பௌத்த காடையர்களால் மேற்கொள்ளப்பட்ட வன்முறையினைத் தொடர்ந்து இலங்கை அரசு நாடாளாவிய ரீதியில் அவசர கால சட்டத்தை அமுலுக்கு கொண்டு வந்தது. பெரும்பான்மை சிங்கள பௌத்தர்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான காடையர்கள் தடிகள், கற்கள், பெட்ரோல் குண்டுகளுடன் முஸ்லிம் பள்ளிவாயல்கள், வியாபார ஸ்தலங்கள், வீடுகளை சேதமாக்கியதுடன் தீயிட்டு கொளுத்தியும் உள்ளனர். அத்துடன் ஊடகங்களின் அறிக்கையின் படி தீப்பற்றிய வீட்டுக்குள் காணப்பட்ட ஒரு முஸ்லிம் இளைஞரும் கொல்லப்பட்டுள்ளார்.
இது பற்றி முஸ்லிம் களச்செயற்பாட்டாளர் ஒருவர் பின்வருமாறு கூறுகின்றார், “காடையர்கள் வீதிக்கிறங்கி முஸ்லிகளை குறிவைத்ததுடன், சிங்களப்பகுதியை ஊடறுத்து செல்லும் பேரூந்துகளில் உள்ள முஸ்லிம்களையும் இலக்கு வைத்துள்ளனர்” .
மேலும் தாக்குதல் நடாத்திய காடையர்களை கண்டு கொள்ளாத நிலையில் பொலிஸாரும் பக்கச்சார்பாக நடந்துள்ளனர் என்று ஊடக அறிக்கைகள் மூலம் மிகத்தெளிவாகத்தெரிகிறது.
கருத்து:
அண்மித்த சில வருடகாலமாக பௌத்த தேசியவாத குழுக்களின் எழுச்சி மற்றும் விஷம பிரச்சாரம் காரணமாக முஸ்லிம்களுக்கெதிரான இனவாதப்போக்கும், வன்முறையும் இலங்கைக்குள் அதிகரித்துள்ளதன.
2014ம் ஆண்டு காலப்பகுதியிலும் இலங்கையில் அளுத்கம , மற்றும் பேருவள பகுதியிலும் முஸ்லிம்களுக்கெதிரான வன்முறை பொது பல சேனா எனும் பௌத்த கடும்போக்கு அமைப்பின் தலைவர் ஞானசேகர தலைமயில் கட்டவிழ்த்து விடப்பட்டது. இந்த பாதக செயலுக்கு சில முஸ்லிம் விரோத அரசியல் கட்சிகளும் துணை போயிருந்தன. கடும்போக்கு அமைப்பான பொது பலசேனா முஸ்லிம்களை கொன்றொழிக்கும் மியன்மார் தீவிரவாத பௌத்தர்களுடன் நல்லுறவை பேணி வருவதோடு அவர்களது பாணியிலான தாக்குதலை முன்னெடுப்பதற்கான வழிகள் பற்றியும் சிந்திக்கின்றது. பொதுபல சேனா போன்றே இன்னும் பல பௌத்தத் தீவிரவாத அமைப்புக்களும் நாட்டில் இயங்கி வருகின்றமையும் நிலைமை மிக மோசமானது என்பதை உணர்த்துகிறது. இவ்வாறான ஒரு இக்கட்டான சூழலில் எந்நேரத்திலும் வன்முறை வெடிக்கலாம் என்ற பீதியுடன் இலங்கை முஸ்லிம்கள் வாழ்ந்து வருகின்றனர் .
முஸ்லிம் சிறுபான்மையினர் இலங்கையிலும் சரி, மேற்கிலும் சரி தங்களது பாதுகாப்பு, உரிமைகள், நலன்கள் யாவற்றையும் உறுதிப்படுத்துவதற்கான ஒரே வழியாக இன்னும் இந்த ஜனநாயக அரசியல் பங்கெடுப்பை நம்பிக் கொண்டிருக்கின்றனர். இதன் காரணமாக தாங்கள் முஸ்லிம் சார்பானவர் என்று நம்பும் அரசியல் வாதிகளின் பின்னாலும், இடது சாரி அரசியல் கட்சிகளின் பின்னாலும் படையெடுக்கின்றனர் .
2015ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் இலங்கை முஸ்லிம்கள் மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களித்து அவரை வெற்றி பெறவும் செய்தனர். இவர் பொது பல சேனாவுக்கு ஆதரவு நல்கிய மஹிந்த ராஜபக்ஷ அரசில் தூண்டப்பட்ட இனமுறுகல் நிலையை ஒழித்துக்கட்டி சமாதானம் நிலவும் இலங்கையை மீளவும் கட்டியெளுப்புவார் என்று முஸ்லிம்கள் நம்பினார்கள்.
“அதிக முஸ்லிம் வாக்குகளை பெற்றுக் கொண்ட நான் இனவாதத்தை ஒழித்துக்கட்டுவேன்” என்று முழங்கிய மைத்திரி பால சிறி சேனாவும் இனமுறுகலை தணிக்க எதுவித முன்னேற்றகரமான நடவடிக்கையும் எடுக்கத்தவறியது மட்டுமல்லாது, முஸ்லிம் வெறுப்பு பிரச்சாரத்தை மேற்கொண்ட இனவாதிகளையும் கட்டுப்படுத்த முடியாத கையாலாகதவராக இன்று இனவாத குழுக்களை பிரபல்ய நிலையை அடையச்செய்யவும் வழி வகுத்துள்ளார் .
கறைபடிந்த மத ஒதுக்கல் ஜனநாயக(Secular Democracy) ஒழுங்கினூடாக ஒருபோதுமே எங்களது பாதுகாப்பு மற்றும் நலன்களை உறுதிப்படுத்த முடியாது என்பதை முதலில் இலங்கை முஸ்லிம்கள் புரிந்து கொள்ளுதல் வேண்டும். ஆரம்பத்தில் அரசியல் வாதிகளும், அரசியல் கட்சிகளும் உலகையே மாற்றிக் காண்பிப்போம் என்றுதான் கூறுவார்கள். ஆனால் அது அவர்களால் முடியாத காரியமாகும். வழக்கம் போல் தங்களது வாக்குகளை நிறைவேற்ற தவறிவிட்டு அதிகார கதிரையை பாதுகாக்க மீண்டும் அதே உணர்ச்சிப்பசப்பு வார்த்தைகளைத்தான் அள்ளி வீசுவார்கள். இவர்களால் எதுவும் நடக்கப் போவதில்லை.
கடந்த வருடம் பள்ளிவாயல்களும், முஸ்லிம் வியாபர நிலையங்களும் தாக்கப்பட்ட போது இலங்கை முஸ்லிம் கவுன்சிலின் உப தலைவர் ஹில்மி அஹ்மத் பின்வருமாறு கூறினார்.
“நாங்கள் சேதமாக்கப்பட்டுள்ள பள்ளிவாயல்கள் தொடர்பாக இரண்டு தடவைகள் ஜனாதிபதியை சந்தித்து முறையிட்டோம். அவர் நடவடிக்கை எடுப்பதாக வாக்குத் தந்தும் அவரால் எதுவும் செய்ய முடியவில்லை “. மற்றும் பிரதமர் கூட அரசானது முஸ்லிம்கள் சார்பாக செயற்பட்டு பௌத்த பிக்குகளுக்கு எதிராக செயற்படுவது போன்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்த விரும்பவில்லை “ என்றும் குறிப்பிட்டார் .
இறைவனுக்குரிய சட்டமியற்றும் அதிகாரத்தை மனிதனுக்கு வழங்கும் அரசியல் முறைமைகளில் பங்கெடுப்புச் செய்வதை அல்லாஹ் (சுபு) முஸ்லிம்களுக்கு தடை செய்துள்ளான். ஆகவே மனிதன் சட்டமியற்றும் மத ஒதுக்கல் அரசியல் பங்கெடுப்பானது கெடுதியானது. பக்கச்சார்பற்ற நீதியான சட்டங்களை உருவாக்க சக்தியற்ற இந்தப் பாராளுமன்றத்தால் இவ்வுலகில் மட்டுமல்ல மறுமையிலும் நமக்கு கெடுதியே உண்டாகும்.
ثُمَّ جَعَلْنٰكَ عَلٰى شَرِيْعَةٍ مِّنَ الْاَمْرِ فَاتَّبِعْهَا وَلَا تَتَّبِعْ اَهْوَآءَ الَّذِيْنَ لَا يَعْلَمُوْنَ
இதன் பின்னர் உம்மை ஷரீஅத்தில் (மார்க்கத்தில்) ஒரு நேரான வழியில் நாம் ஆக்கியுள்ளோம். ஆகவே நீர் அதனையே பின்பற்றுவீராக; அன்றியும், அறியாமல் இருக்கின்றார்களே அவர்களின் விருப்பங்களை பின்பற்றாதீர்கள் ( அல் ஜாஸிலா45:18)
இலங்கையில் மட்டும் அல்ல உலகில் முஸ்லிம்கள் எங்கு வாழ்ந்தாலும் அவர்களது பாதுகாப்பையும், கண்ணியத்தையும் முஸ்லிம்களின் நலனை பேணுவதை தனது தலையாய கடமையாக கருதக்கூடிய கிலாஃபா அரசினால் மாத்திரமே உண்மையில் உறுதிப்படுத்த முடியும். இந்த அரசை மீளவும் நபி வழியில் முஸ்லிம் உலகில் நிறுவுவதுதான் முஸ்லிம்களின் பாதுகாப்புக்கான ஒரே தீர்வாகும். இந்த அரசின் இல்லாமைதான் இன்று விசுவாசிகளை அடைக்கலமற்றவர்களாக அலைவதற்கு வழிவகுத்துள்ளது. கண்டபடி முஸ்லிம்களின் மீது அத்து மீறல்களை புரிவதற்கு காபிர்களுக்கு துணிச்சலையும் வழங்கியுள்ளது .
சிரியா, மியன்மார், காஷ்மீர்முஸ்லிம்களின் துயர் நீக்க தங்களது விரலையும் நீட்டாத இன்றைய முஸ்லிம் தேசிய அரசுகளைப் போல் ஒருபோதுமே கிலாஃபா அரசு இருக்கப் போவதில்லை .
ஒரு முஸ்லிம் துன்புறுத்தப்படுவதைக் கூட கிலாஃபா அரசு அனுமதிக்காது. மாறாக முஸ்லிம்களை அச்சுறுத்தும் தீய சக்திகளின் உள்ளங்களை தனது வலிமையை பிரயோகித்து பீதிகொள்ளச் செய்துவிடும். மியன்மாரில் பலம் வாய்ந்த ராகின் பேரரசின் கீழ் முஸ்லிம்கள் மீதான பௌத்தர்களின் அத்துமீறல் தலை விரித்தாடியபோது இஸ்லாமிய ஆட்சியின் கீழ் காணப்பட்ட சுல்தான் அவ்ரங்க சிப் அந்த பேரரசை துவம்சம் செய்த வரலாற்றை இதற்கு சிறந்த உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம் .
ஆகவே இலங்கை முஸ்லிம்களாகிய நாங்கள் இத்துப்போன இந்த மத ஒதுக்கல் ஜனநாயக அரசியலை (Secular Democratic politics) தூக்கி எறிந்துவிட்டு, வேகமாக இவ்வுலகில் கிலாஃபாத்தை மீளக் கொண்டுவருவதற்கான அறிவார்ந்த அரசியல் போராட்டத்தின் பங்காளர்களாக மாறுவதே காலத்தின் உடனடித் தேவையாகும்.