பௌத்தத் தீவிரவாதிகளின் பாணியில் இன்று திருமலை சண்முகா இந்துக் கல்லூரியின் தமிழ் ஆசிரியர் குழாம் முஸ்லிம்களின் அடையாளத்திற்கு எதிராக வீதிக்கு இறங்கியிருக்கிறார்கள். அவர்களின் அடிப்படையற்ற அநீதியான போராட்டத்திற்கு ஆதரவாக தமிழ் பொதுச் சமூகத்தின் உணர்ச்சிகளும் கொப்பளிக்கப்பட்டுள்ளன. இந்த சர்ச்சையின் மூல காரணமே அவர்களா அல்லது குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கும் முயற்சியா என எம்மால் இன்றைய நிலையில் அடித்ததுக்கூற முடியாது விட்டாலும் தமிழ் இந்துத்துவா சார்பு அமைப்புகளான எள்ளாலன் அமைப்பு போன்ற குள்ளநரிகளும்; இரை தேடி இதற்குள் புகுந்திருக்கின்றன. இன்று திருமலைத் தமிழர்கள், குறிப்பாக இந்துகள் முஸ்லிம் ஆசிரியைகள் தமது பாடசாலையில் ஹபாயா அணிந்து வரக்கூடாது என்று கொடி தூக்கியதை போன்று, பொதுபல சேனா 2013இல், மஹிந்த ஆட்சிக்காலத்தில், ஹபாயா அணிவதை நாடெங்கும் தடை செய்யும் பிரச்சாரத்தை முடிக்கி விட்டதை நாம் மறந்திருக்க மாட்டோம். சம்பிக்க ரணவக்கயின் ஜாதிக ஹெல உறுமய கட்சியின் ஸ்தாபகத் தலைவர்களின் ஒருவரான அத்துரலிய ரத்ன தேரர் ஹபாயாவை நீளமான சாக்கு என்று கேவலமாகக் கூறித் திரிந்ததையும் நாம் மறந்திருக்க மாட்டோம்.
விடுதலைப்புலிகள் இருக்கின்ற காலகட்டத்திலும், பொதுபலசேனாவின் உருவாக்கத்திற்கு முன்னரும் கூட முஸ்லிம் சமூகத்தை சங்கடப்படுத்துவதற்கான இனவாத வற்புறுத்தல்களை தமிழர் தரப்பிலும், சிங்களவர்கள் தரப்பிலுமிருந்து நாம் அனுபவித்து வந்திருக்கின்றோம். சில்லரை விடயங்களிலெல்லாம் இனத்துவ அடிப்படையில் சிக்கல்கள் தோன்றியிருக்கின்றன. குறிப்பாக ஹிஜாப் அணிந்து பாடசாலைக்கு வரக்கூடாது என்பதும், சில பாடசாலைகளில் நீளக்காட்சட்டை அணிந்து வரும் எமது பிள்ளைகள் பாடசாலை பிரதான நுழைவாயில்களில் அதனை கழற்றி விட்டு பாடசாலைக்குள் சென்று வந்த வரலாறுகளையும் தாம் தாண்டித்தான் வந்திருக்கிறோம். எனினும் அன்றைய நெருக்குதல்களுக்கும், இன்றைய தாக்குதல்களுக்கும் இடையே நிகழ்ச்சி நிரல்களிலும், இலக்குகளிலும் பாரிய வேறுபாடுகள் உள்ளன என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அன்று இனங்களுக்கு இடையிலான பிளவும், நல்லிணக்கமின்மையும் ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வதில் பாதிப்புக்களை ஏற்படுத்தின. சில பொழுதுகளில் இனத்துவ இலக்குகளை அடைவதற்காக இந்த சர்ச்சைகள் கிளறிவிடப்பட்டிருக்கின்றன. எனினும் இன்று இது வெறும் இனம் சார்ந்த துவேசத்தன் வெளிப்பாடுகள் மாத்திரமல்ல. இந்தத்தாக்குதல்களின் அடிப்படை மதம் சார்ந்தது. மதம் தழுவிய அடையாளம் சார்ந்தது. இன்னும் குறிப்பாகச் சொல்லப்போனால் இஸ்லாமிய மார்க்கத்தை குறி வைத்து தொடுக்கப்பட்டது. இந்த உண்மையை இன்றைய பொழுதுகளில் முஸ்லிம் சமூகம் சரியாக இனம்கண்டு கொள்ளவில்லையானால் எமக்கெதிரான தாக்குதல்களுக்கு முகம் கொடுப்பதில் நாம் தவறிழைத்து விடுவோம்.
90களில் சோவியத் யூனியின் வீழ்ச்சிக்கு பின்னர் உலகளாவிய முதலாளித்துவம் இஸ்லாமிய சித்தாந்தத்தை தனது பூகோள எதிரியாகக் கருதி போராடி வருகின்றது. முஸ்லிம் உலகை நோக்கி அது குறி வைத்ததற்கான பிரதான இலக்கும் அதனது இந்த உலகப்பார்வையே. 2011 செம்டெம்பர் 11 தாக்குதல்களைத் தோடர்ந்து தீவிரவாதத்திற்கு எதிரான போர் என்ற ரீதியில் இஸ்லாத்திற்கு எதிரான போர் நேரடியாக தொடுக்கப்பட்டிருக்கும் நிலையில் கடந்த 17 வருடங்களாக அது உக்கிரமடைந்து வருகின்றது. இந்தப் போராட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான சிந்தனா ரீதியான போராட்டமும், காலாசாரத் தாக்குதல்களும் பாரிய பங்களிப்பபைச் செலுத்துகின்றன. முஸ்லிம்களின் அடிப்படை அடையாளம் இஸ்லாத்திலிருந்தே தோன்றுவதால் இஸ்லாத்திற்கு எதிரான தாக்குதல்கள் முஸ்லிம்களை நோக்கி ஏவப்படுகின்றன. அந்தத் தாக்குதல்கள் பூகோளமயமாக்கப்பட்டிருக்கின்றன. இலங்கையும் அந்தத் தொற்றால் கணிசமான அளவில் பாதிக்கப்பட்டே இருக்கின்றது. குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக அன்று ஜாதிக ஹெல உறுமயவும், பின்னர் பொதுபலசேனாவும், இன்று தமிழ் தரப்புக்களும் இதனை இலகுவாக கையில் எடுப்பதற்கு இந்த பூகோள மாற்றம் ஒரு பிரதான காரணியாகும்.
ஒரு பரந்த சமூகப்பொதுவெளியில் உலகளாவிய ரீதியில் முஸ்லிம்களை தனித்துவமான சமூகமாக பிரித்துக்காண்பிப்பதில் பொதுவிடத்திலே முஸ்லிம் பெண்கள் அணியும் ஆடை ஒரு பிரதானமான பங்கை வகிக்கின்றது. அது ஒரு செய்தியை உலகின் அனைத்து சமூகத்திற்கும் பகிரங்கமாகச் சொல்கின்றது. எமக்கென தனித்துவமான விழுமியங்கள் இருக்கின்றன. எமக்கென தனித்துவமான அடையாளங்கள் இருக்கின்றன. அந்த விழுமியங்களும், அடையாளங்களும் ஏக இறைவனான அந்த அல்லாஹ்(சுபு)வின் வாக்கினால் வரையறுக்கப்படுகின்றன. அவை இஸ்லாமிய சித்தாந்தத்தில் இருந்து பிறக்கின்றன. நாம் சடவாத சமூக அமைப்புக்குள் கரைந்து போய் முதலாளித்துவ கலாசார மைய நீரோட்டத்துடன் கலந்து போகக்கூடியவர்கள் அல்ல என்பதை எமது கண்ணியமான பெண்கள் அணியும் ஒரு துணித்துண்டு சொல்லி விடுகின்றது. அதனை இன்றைய முதலாளித்துவ உலகு பொறுக்கமாட்டாது. அதனை இன்றைய சடவாத வாழ்வமைப்பு பொறுக்க மாட்டாது. அதனை முஸ்லிம்கள் தவிர்ந்த உலகின் எந்த சமூகங்ளும் பொறுக்க மாட்டார்கள். அவர்களின் எதிர்ப்பை இன்றில்லாவிட்டால் நாளை, முஸ்லிம்கள் சந்தித்துத்தான் ஆகவேண்டும். ஹபாயாவுக்கெதிரான தடையும், போரும் ஐரோப்பாவில் நிகழ்ந்ததும், இன்று இலங்கையில் நிகழ்வதும் இந்த அடிப்படை உண்மையின் பிரதிபளிப்புக்களேயாகும்.
பெண்களுக்கெதிரான வன்முறை உலகின் உச்சியை தொட்டிருக்கின்றன. எனது தாய் ஓர் பெண் என்ற எண்ணம் மறந்து பச்சிளம் பாலகர்களையெல்லாம் கூட்டுப்பலாத்காரம் செய்யும் அளவிற்கு மனிதகுலம் அவமானச் சின்னமாய் மாறியிக்கிறது. இந்த வன்கொடுமைகளுக்கு பின்னால் முதலாளித்துவ உலகில் பெண்களின் தோலுக்கும், தசைக்கும் காணப்படும் கிராக்கியும், அதற்காக நிர்மாணிக்கப்பட்ட ஆடைக் கலாச்சாரமும் முக்கிய ஊக்கிகளாகும். பெண்களுக்கு எதிரான வன்முறைகளிலிருந்து தப்புவதற்கு முஸ்லிம்கள் மாத்திரமல்லாது மனட்சாட்சியுள்ள, நடுநிலையான மனிதர்கள் அனைவரும் ஒழுக்கமான ஆடைத் தெரிவை சிபாரிசு செய்கின்ற இக்கால கட்டத்தில் ஹபாயாவுக்கு எதிராகக் குரல் கொடுக்கும் ஒவ்வொரு ஆணும், பெண்ணும் கூனிக்குருக வேண்டும்.
எனவே இன்று இலங்கைக்குள் தீய அரசியல் நிகழ்ச்சி நிரல்களுடன் தமக்குள் போட்டிபோட்டுக் கொண்டிருக்கின்ற வெளிநாட்டுச் சக்திகளாக இருந்தாலும் சரி, உள்ளாட்டு சக்திகளாக இருந்தாலும் சரி எம்மை எப்பொழுதும் வம்புக்கு இழுத்துக் கொண்டுதான் இருப்பார்கள் என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். இதற்கு இன, மத வேறுபாடுகள் இல்லை. கட்சி, வர்க்க வேறுபாடுகள் இல்லை. முஸ்லிம்களும், இஸ்லாமும் என்று வருகின்ற போது மனட்சாட்சியின் சமன்பாடுகளும், நியாயங்களின் அடிப்படைகளும் மாற்றப் பெற்று விடும். அவர்கள் விருப்புகிறார்களோ, இல்லையோ இன்றைய உலக ஒழுங்கு இந்த உண்மையின் அடிப்படையிலேயே தொழிற்படுகின்றது. எனவே அவர்கள் எம்மை எதிர்ப்பது அவர்களால் தவிர்க்கப்பட முடியாதது.
இந்தத் தருணத்தில் நாம் சில விடயங்களில் தெளிவாக இருக்க வேண்டும்.
1) ஹபாயா (ஹிமாரும், ஜில்பாபும்) அல்லது ஃபர்தா அணிவது எமது பெண்களுக்கான பர்ளான கடமை. அதனை அணியாது பொது இடங்களுக்குச் செல்வது ஹராமாகும். எனவே அதனை அனைத்து சர்ந்தர்ப்பத்திலும் பாதுகாப்பதற்காக நாம் போராட வேண்டும். பிறர் எம்மீது தொடுக்கின்ற சிந்தனைத் தாக்குதல்களால் தடுமாறி எமது சுயத்தை நாமே சந்தேகம் கொள்ளும் நிலைக்கு நாம் தயாராகி விடக்கூடாது. ஹபாயாப் பிரச்சனை எமது தேர்வுக்குரிய ஒரு கலாசாரப் பிரச்சனையல்ல, ஹபாயாவைப் பாதுகாப்பது வெறும் மனித உரிமைப் பிரச்சனை அல்ல. மாறாக அது முற்று முழுதான ஒரு மார்க்கப் பிரச்சனை, அதிலே சமரசம் செய்வதற்கு எவருக்கும் அனுமதி கிடையாது என்பதில் நாம் ஒவ்வொருவரும் தெளிவாக இருக்க வேண்டும்.
2) ஹபாயாவுக்கெதிரான தாக்குதல் அந்த ஆடையின் நீளத்திற்கும், அகலத்திற்கும் எதிரானது அல்ல. அல்லது முகத்தை மூடுவதற்கோ, திறப்பற்கோ எதிரானது அல்ல. அல்லது களருக்கோ, கறுப்புக்கோ எதிரானது அல்ல. மாற்றமாக ஹபாயா என்ற அடையாளம் சடவாத சமூகத்தில் உருவாக்கும் கருத்துக்கு எதிரானது. அது பொதுவாழ்வில் இஸ்லாமிய சித்தாந்தத்தின் சின்னமாக நடமாடுவதற்கு எதிரானது என்பதை நாம் உணர வேண்டும். எனவே இஸ்லாத்திற்கு எதிரான இந்தத் வலிந்த தாக்குதல்களை நாம் ஹபாயாவுக்குள் மாத்திரம் மறைந்து நின்று எதிர்கொள்ள முடியாது. ஹபாயா மீதான தாக்குதலை இஸ்லாத்தின் அகீதா மீதான தாக்குதலாக, ஷரீஆ மீதான தாக்குதலாக நாம் காண வேண்டும். இஸ்லாத்திற்கு எதிரான இந்த சிந்தனா ரீதியான படையெடுப்பை நாம் பொதுவெளியில் எதிர்த்து நின்று முறியடிக்க வேண்டும்.
3) மேலும் இந்த தீய நிகழ்ச்சி நிரல்களை எதிர்வு கொள்கின்ற வேளை ஒருபோதுமே பிறரை திருப்திப்படுத்துவதற்காக இஸ்லாத்திற்கு புதிய விளக்கம் அளிக்கும் படலத்தை நாம் ஆரம்பித்து விடக்கூடாது. அந்த பலகீனம் எமக்குள் ஊடுருவும் போதெல்லாம் நரகப்படுகுழியை ஒரு கணம் மனக்கண் முன் கொண்டு வர வேண்டும். நவீன கால அறிஞர்கள் என்ற பெயரிலும், நடைமுறைக்கேற்ற தீர்ப்புகள் என்ற பெயரிலும் போலியான பத்வாக்களை இஜ்திஹாத்கள் என்ற பெயரிலே யாரேனும் இறக்குமதி செய்ய முற்பட்டால் அவர்களின் அறியாமை தூய இஸ்லாத்தைக் கொண்டு எதிர்கொள்ளப்பட வேண்டும்.
4) எம்மைப் படைத்தவனின் தீர்ப்புக்களை குறை காணத்துணியும் ஏனைய சமூகங்களையும், அதன் சிந்தனைகளையும், அதன் விளைவால் மனிதகுலத்திற்கு ஏற்பட்டுள்ள பாரதூரமான நஷ்டங்களையும் சுட்டிக்காட்டுவதற்கு இதுபோன்ற தருணங்களை ஒரு சந்தர்ப்பமாக நாம் பயன்படுத்த வேண்டும். சடவாத சிந்தனைகளாலும், தனிநபர் சுதந்திரம், விடுதலை போன்ற மேற்குலக கோட்பாடுகளினாலும் பெண்களின் கண்ணியத்திற்கு ஏற்பட்ட களங்கங்களும், அதனால் ஏற்பட்டுள்ள குடும்பச்சிதைவுகளும், சமூகச் சீரழிவுகளும், பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் எதிரான வன்முறைகளும் சமூக மட்டத்தில் பேசுபொருளாக்கப்பட வேண்டும்.
5) மேலும் இனத்துவ அரசியலை அடிப்படையாகக் கொண்டு அரசியல் நடத்தும் எமது அரசியல் தரகர்களும், ஏனைய சமூகங்களின் அரசியல் குள்ளநரிகளும், இத்தகைய சந்தர்ப்பங்களை தமது சந்தர்ப்பவாத அரசியலுக்காக பயன்படுத்துவதற்கு நாம் அனுமதித்து விடாது எமது சமூகத்தையும், ஏனைய சமூகங்களையும் நாம் விழிப்புடன் வைத்திருக்க இருக்க வேண்டும்.
6) எம்மை மனமுரண்டாக எதிர்க்கின்ற சக்திகளின் அறியாமைமையும், அடாவடித்தனங்களையும் தோலுரித்துக் காட்டுவதற்கும், அவர்களுக்கு சவால் விடுவதற்கும் இந்தச் சந்தர்ப்பத்தை நாம் பயன்படுத்த வேண்டும். அவர்களுக்கு எதிரான சிந்தனைப்படையெடுப்பையும், தாக்குதல்களையும் நாம் முடுக்கி விட்டு ஏனைய சமூகங்களுக்கு சான்று பகர்கின்ற அல்லாஹ்(சுபு)வின் கட்டளையை நிறைவேற்ற வேண்டும்.
7) நாட்டிலே சட்டத்தையும், ஒழுங்கையும் நிலைநாட்ட வேண்டிய அரசுகளுக்கு இந்த பிரச்சனைகளில் இருக்கின்ற பொறுப்புக்கூறலை நாம் சுட்டிக்காட்ட வேண்டும். அவர்களின் பித்தலாட்டத்தனங்களையும், நயவஞ்சக யுக்திகளையும் நாம் மக்கள் மன்றத்திலே கேள்விக்குட்படுத்த வேண்டும். இலங்கை போன்ற ஜனநாயக அரசுகள் மதச்சுதந்திரம், நம்பிக்கைச் சுதந்திரம் என்று கதையளந்தாலும் உண்மையில் அவற்றையெல்லாம் மக்களின் நலனுக்காக பயன்படுத்துவதில்லை. மாறாக மக்களுக்கிடையே காணப்படும் இன, மத, கலாச்சார, வேறுபாடுகளை பயன்படுத்தி பிரிவினையை உண்டுபண்ணி அதில் அரசியல் இலாபம் தேடும் அழுக்கு அரசியலையே அவை புரியும். குறிப்பாக முஸ்லிம்கள் என்று வருகின்ற போது இந்த சவால்கள் இரட்டிப்பாகி விடுகின்றன.
முடிவாக, இலங்கைக்குள் அரேபிய கலாசாரத்தை முஸ்லிம்கள் திணிக்கின்றார்கள் என்று பேரினவாத சக்திகள் குற்றம் சுமத்தி வருகின்ற இந்தத் தருவாயில் இன்று தமிழர்கள் தமது கலாசாரத்திற்கு பங்கம் விளைவிப்பதற்கு முஸ்லிம்கள் துடிக்கின்றனர் என்ற போலியான குற்றச்சாட்டை எம்மீது வீசியிருக்கின்றனர். இவ்வாறு இலங்கையில் சிங்களவர்களும், தமிழர்களும் முஸ்லிம்களிடமிருந்து தமது கலாசாரத்தை பாதுகாக்கப்போவதாக பறைசாட்டினாலும் கூட, உண்மையில் நாட்டில் நடப்பது என்னவோ மேற்கத்தைய கலாசார ஆக்கிரமிப்புக்குள் முழு நாடுமே விழுங்கப்பட்டு வருவதுதான். மேற்கிலிருந்து எது வந்தாலும் அதனை வரவேற்கும் மனோநிலையிலுள்ள இந்த சமூகங்கள் முதலில் மேற்கத்தைய கலாசாரத்தின் யதார்த்தம் பற்றியும், மேற்கு நாகரீகம் அதனால் சந்தித்துவரும் பின்விளைவுகள் பற்றியும் சிந்திக்க வேண்டும். ஆண்-பெண் கலப்புக்களும், ஆடைக்குறைப்புக்களும், கழியாட்டங்களும் இலங்கையில் மலிந்துவிட்ட நிலையில் அதற்கு முகம் கொடுக்கக்கூடிய திராணியோ, சித்தாந்தப் பின்னணியோ இல்லாத இந்த சமூகங்கள் முஸ்லிம் சமூகத்திடமிருந்தும், அதன் சிந்தாந்தமான இஸ்லாத்திடமிருந்தும் படிப்பினை பெற்றுக் கொள்வதே அவர்களை உய்விக்கம் வழியாக அமையும்.
மேலும் சண்முகா இந்துக் கல்லூரியில் தாம் ஹபாயா அணிந்து கல்வி போதிப்பதற்கு எதிராக வந்த சவால்களை எதிர்கொண்டு இதுவரை அதற்காக போராடிவரும் எமது மதிப்புக்குரிய ஆசிரியைகள் பாராட்டப்பட வேண்டியவர்கள். அவர்களும், அவர்களின் சரியான முடிவுகளும் பாதுகாக்கப்பட வேண்டியவை. அவர்களுக்காக சரியான திசையில் நின்று போராடும் அனைத்து மக்களும் போற்றப்பட வேண்டியவர்கள். இந்தப் போராட்டம் அல்லாஹ்(சுபு)வை திருப்த்திப்படுத்துவதற்காகவும், ஒரு முன்மாதிரிமிக்க முஸ்லிம் சமூகத்தை கட்டியெழுப்புவதற்காகவும் பயன்படுத்தப்பட வேண்டும். இதிலிருந்து இன்றைய தலைமுறைக்கும், எமது எதிர்காலத் தலைமுறைக்கும் ஒரு சிறந்த பாடத்தை நாம் கற்பிக்க வேண்டும். எமது அடையாளங்களையும், உரிமைகளையும் பாதுகாப்பதற்காக நாம் எடுக்கின்ற முன்னெடுப்புக்கள் அனைத்தும் இலங்கையில் வாழும் அனைத்து முஸ்லிம் சமூகத்தின் அரசியற் பாதையும், அரசியல் இருப்பையும், அதன் எதிர்காலத்தையும் தீர்மானிக்கக் கூடியவை. எனவே இது சண்முகா இந்துக் கல்லூரியின் பிரச்சனையோ, திருமலையின் பிரச்சனையோ அல்ல. மாறாக இது முழு முஸ்லிம் சமூகத்தினதும் பிரச்சனை. எனவே இந்த விடயத்தில் எமது சமூகத்தின் நகர்வுகள் இஸ்லாத்தையும், அரசியல் முதிர்ச்சியையும் பிரதிநிதித்துவப்படுவதாக அமைய வேண்டும். மேலும் இதுபோன்ற சவால் மிக்க எதிர்காலத்தை முகம்கொடுப்பதற்கு எமது சமூகம் உடனடியாக தயார்படுத்தப்பட வேண்டும்.