கேள்வி:
முஸ்லிம் அல்லாத நாடுகளில் வாழும் முஸ்லிம்கள் அழுத்தக்குழுக்களை உருவாக்கி தமது அரசாங்களுக்கு அழுத்தம் கொடுக்க முடியுமா? அவ்வாறு அரசாங்கங்களுக்கோ, அல்லது அதன் நிறுவனங்களுக்கோ அந்த நாட்டின் சட்டங்களின் அடிப்படையில் அழுத்தம் கொடுப்பதற்காக நடாத்தப்படும் பேரணிகளில் பங்கேற்க முடியுமா? அந்த நாட்டிலே இஸ்லாம் அல்லாத சட்டங்களின் அடிப்படையில் மக்களுக்கு இருக்கின்ற ஒரு உரிமையை அவ்வுரிமை இஸ்லாத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாக இருக்கும்பட்சத்தில் அதற்காக இடம்பெருகின்ற பேரணிகளில் கலந்து கொள்ளலாமா?
பதில்: முஸ்லிம் அல்லாத நாடுகளில் வாழ்கின்ற முஸ்லிம்கள் அந்த நாட்டின் அரசாங்கத்திற்கோ, பாராளுமன்றம் போன்ற அதன் நிறுவனங்களுக்கோ அந்த நாட்டின் சட்டத்தின் அடிப்படையில் அழுத்தம் கொடுப்பதற்காக அழுத்தக்குழுக்களை உருவாக்கி இயங்குவதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை.
மேலும் அரசாங்கத்தின் கொள்கைகளில் அழுத்தத்தை ஏற்படுத்துவதற்காக அந்த நாட்டிலே இருக்கின்ற இஸ்லாம் அல்லாத சட்டங்கள், விழுமியங்கள் போன்றவற்றின் அடிப்படையில் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதை இஸ்லாம் முற்றாக தடைசெய்கிறது.
மேலும் அந்த நாட்டின் சட்டங்களின் அடிப்படையில் முஸ்லிம்களின் விவகாரங்களுடன் தொடர்புபட்ட உரிமைகளை வென்றெடுப்பதற்காக அல்லது சலுகைகளை பாதுகாப்பதற்காக அந்த நாட்டின் சட்டங்களை மேற்கோள்காட்டி அதன் அடிப்படையில் அந்த அரசாங்கம் அல்லது அதன் நிறுவனங்கள் செயற்பட வேண்டும் என்ற அழுத்தத்தை உருவாக்குவதற்காக நடாத்தப்படும் பேரணிகளில் கலந்து கொள்வதும் அனுமதிக்கப்பட்டதல்ல.
ஏனெனில் எந்த சட்டங்களை அல்லது விழுமியங்களை அடிப்படையாக வைத்து நாம் எமது கோரிக்கைகளை முன்வைக்கின்றோமோ, அல்லது அதற்காக அழுத்தங்களை பிரயோகிக்கின்றோமோ அந்தச் சட்டங்களும், விழுமியங்களும் இஸ்லாத்தின் அடிப்படையில் அமையாதவைகளாக இருப்பதனால் அவற்றின் அடிப்படையில் அழுத்தங்களை நாம் பிரயோகிக்க முடியாது.
அவ்வாறு செய்வதன் ஊடாக அந்தச் சட்டங்களையும், அதன் அடிப்படையில் அமைந்த நிறுவனங்களையும் நாம் ஏற்புடையதாக்கின்றோம். சில பொழுதுகளில் இஸ்லாம் அங்கீகரிக்கின்ற சில உரிமைகள், இஸ்லாம் அல்லாத சட்டங்களிலும் அங்கீகரிக்கப்பட்டிருக்கலாம். எனினும் அந்த சட்டங்களின் விளைவுகளிலிருந்து நாம் அதனை ஒப்பீடு செய்வது தவறாகும். மாறாக அந்த சட்டங்களின் அடிப்படை ஷரீஆவா அல்லது மனிதச் சட்டங்களா என்பதை ஆராய்வதன் மூலமாகவே அவற்றைத் தீர்மானிக்க வேண்டும்.
எனவே இத்தகைய அழுத்தக்குழுக்களை உருவாக்கிச் செயற்படுவதோ அல்லது அதற்கான போராட்டங்களில் இணைந்து கொள்வதோ தடுக்கப்பட்டதாகும். எனினும் முஸ்லிம் அல்லாத ஒரு நாட்டில் வாழ்கின்ற முஸ்லிம்கள் ஷரீஆவின் வரையறைக்குள் அல்லாஹ்(சுபு) வழங்கியிருக்கும் தமது உரிமைகளை தமது அரசாங்கங்களிடம் பொதுவாகக் கோருவதில் தவறில்லை.