டொனால்ட் ட்ரம்ப், உலகின் கவனத்தை கடந்த சில வாரங்களாக தன் பக்கம் திருப்பியிருந்ததை அவதானித்திருப்பீர்கள். அதற்கு அவர் விசேடமாக எந்த உபாயத்தையும் பாவிக்கவில்லை. தான் தேர்தல் வாக்குறுதியாக முன்மொழிந்த அதே முட்டாள் கொள்கைகளை பதவியில் அமர்ந்ததன் பின்னாலும் மென்மேலும் முன்மொழிந்ததும், அவற்றையே சுடச்சுட அமூல்படுத்தியதுமே அத்தகைய ஊடகக் கவனயீர்ப்புக்கு காரணமாகும். மீதியை மேற்குலக ஊடகங்களும், லிபரல்(தாராளவாத) விமர்சகர்களும் தமது வழமையான பாணியிலே செய்து முடித்தனர். ட்ரம்பின் வடிவில் தமது நாகரீகத்திற்கும், அதன் வாழ்க்கை நெறிக்கும், விழுமியங்களுக்கும் பெரும் ஆபத்து வந்துவிட்டது என ஊதிப்பெருப்பித்து ஒரு போலிக்கருத்தாடலை அனுதினமும் வெளியிட்டுக் கெண்டிருந்தனர்.
நூற்றாண்டு காலமாக நாம் பல அர்ப்பணிப்புக்களைச் செய்து பாதுகாத்த சமத்துவம்(equality), பன்மைத்துவம்(pluralism) போன்ற உயரிய சிந்தனைகளை துச்சமென மதித்து தூக்கி வீசுகிறாரே! எமது அமெரிக்க மாண்புகளை பிரதிபளிக்காமல் ஒரு நாசிசக் காரனைப்போல செயற்படுகிறாரே! என்றெல்லாம் அவர்கள் கேள்விக்கணைகளை தொடுத்தனர். இந்த பாதிக்கப்பட்ட லிபரல் வாதிகளின் உணர்ச்சி ததும்பிய பேச்சுக்களுக்கும், அங்கலாய்ப்புக்களுக்கும் இடையே தீவிர வலதுசாரியான டொனால்ட் ட்ரம்ப் தனது தீர்மானங்களை எதன் அடிப்படையில் எடுக்கிறார் என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
கடுமையான விமர்சனங்களை சந்தித்துவரும் டொனால்ட் ட்ரம்ப்பின் வெளி விவகாரக் கொள்கையையும், எல்லைப் பாதுகாப்புக் கொள்கையையும் அவர் எதனை அடிப்படையாகக் கொண்டு தீர்மானித்திருக்கிறார் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். எவரை நாட்டுக்குள் விடுவது, எவருக்கு அனுமதி மறுப்பது என்பதை தீர்மானிப்பதற்கு அவர் பாவிக்கின்ற அளவுகோல் பற்றி நாம் ஆராய வேண்டும். இங்குள்ள பிரச்சனை சில முஸ்லிம் நாட்டவர்களை அவர் அமெரிக்காவுக்குள் அனுமதிக்க மறுக்கிறார் என்பதல்ல அல்லது ட்ரம்ப் நிறுவாகமும், ஊடகங்களும் சொல்வதைப்போல ‘இஸ்லாமிய பயங்கரவாதம்’ என்ற பூச்சாண்டியுமல்ல. மாறாக இங்குள்ள பிரச்சனை ஐக்கிய அமெரிக்கா உட்பட நவீன கால தேசிய அரசுகளின்(nation state) அடிப்படை யதார்த்தத்துடனும், இயல்புடனும் தொடர்புபட்டது. பிரச்சனை தேசியவாதத்துடனும், தேசிய அரசுக்கோட்பாட்டுடனும் சம்பந்தப்பட்டது என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அனைவருக்கும் மேலால், அனைத்துக்கும் மேலால் தனது தேசத்தை, தேசத்தின் பெருமையை, தேசத்தின் மேலாதிக்கத்தை நிறுவ முற்படும் ஒருவர் தனது நாட்டின் மீதான ஆபத்துக்களையும், அச்சங்களையும் தவிர்ப்பதற்காக தனது நாட்டின் இனத்தையும், கலாசாரத்தையும் சேராத, பிரதிபலிக்காத மக்கள் அனைவரையும் தவிர்க்கும் அல்லது தடுக்கும் காரியத்தையே நாம் ட்ரம்பின் நடவடிக்கையில் காண்கிறோம். இது முழுக்க முழுக்க தீவிர தேசியவாத சிந்தனையின் விளைவேயன்றி வேறல்ல.
இயல்பாக தேசியவாத அரசாங்கங்கள் தமது தேசங்களையும், மக்களையும் போட்டி மனோபாவத்தின் திசையிலும், முரண்பாடுகளின் திசையிலும் வழி நடாத்துகின்றன. தேசிய அரசுகள் பகைமையான சூழலையும், தேசங்களுக்கு இடையிலான முரண்பாடுகளையும், மேலாதிக்கச் சிந்தனையையும் ஸ்தாபனமயப்படுத்தி விடுகின்றன. எனினும் பலர் முன்மொழிவதைப்போல இந்த அடிப்படைச் சிக்கலுக்கான தீர்வு மதச்சார்பற்ற சிந்தனையை மேன்மேலும் கவனமாக அமூல்படுத்துவதோ அல்லது பன்மைத்துவம், சமத்துவம், அமெரிக்க உறைவிடம்(American melting pot) என்ற கற்பனை போன்றவற்றை கடைபிடிப்பதோ அல்ல. இன்று ட்ரம்ப் போன்றோர்கள் முன்வைக்கும் சித்தாந்தத்திற்கு அவை எதுவும் தீர்வாக அமையாது. ஏனெனில் இந்த சிந்தனைகள் யாவும் அமெரிக்காவை வரையறுக்கும் சிந்தனைகளாகக் கொள்ளப்பட்டாலும் கூட அவை தீவிர வலதுசாரிகளான ட்ரம்ப் போன்றோர்களின் வருகையை, வளர்ச்சியை ஒருபோதும் தடுக்கப் போதுமானவை அல்ல. மாறாக இந்தச் சிந்தனைகளை விட அமெரிக்க சமூகத்தில் ஆழப்படிந்துள்ள வலிமையும், வீரியமும் கொண்ட தேசியவாதம், தேசியநலன், தேசிய அரசுகள் பற்றிய சிந்தனைகள் பல ட்ரம்ப்களை சுகப் பிரசவம் செய்யும் வலிமை கொண்டவை. எனவேதான் அமெரிக்கா போன்ற மேற்குலக சமூகத்தில் எப்போது தேசியமும், தேசிய அடையாளமும் பாரிய ஆபத்தை சந்திக்கிறது என பரப்புரை செய்யப்படுகிறதோ அப்போதெல்லாம் ஹிட்லரும், சேர்ச்சிலும், ட்ரம்பும் பிரசவித்து விடுகின்றனர்.
எனவே உலக அரங்கில் ஹிட்லர், சேர்ச்சில், ட்ரம்ப் போன்றோர்களை தவிர்க்க வேண்டுமென்றால் அவர்களை கருக்கோள்ளும் கருவறையான தேசியவாதத்தை நாம் முற்றாக அகற்றிவிட வேண்டும். உலகம் தேசிய அரசுகள் என்ற அரச மாதிரியை கைவிட்டு, அனைத்து மக்களுக்கும், தேசங்களுக்கும் பொருந்தக்கூடிய ஒரு மாதிரியை இனம் காண வேண்டும். அத்தகைய அரச மாதிரி தேசிய எல்லைகளைக் கடந்து பூகோளமயமானதான இருக்கும். சுத்தமாக அறிவார்ந்த மற்றும் சட்டாதிக்கத்தின் அடிப்படையில் அமைந்த அரச மாதிரியாக இருக்கும். அவ்வாறு தோன்றுகின்ற அந்த அரசு முழு மனிதகுலத்தையும் தனது பிரஜைகளாக உள்வாங்கும் கொள்கை விசாலம் கொண்டது. அத்தகைய ஒரு அரசுக்குள் தாராளவாத மற்றும் சோசலிச அரச முறைமைகளின் குறைபாடுகளால் எதிர்வினையாகத் தோன்றிய பன்மைத்துவம், சமத்துவம் போன்ற மேற்குலகப் சிந்தனைகளுக்கு தேவையே இருக்காது. அந்த அரசில் இன, குல, மத பேதங்களைக் கடந்து நாட்டு மக்கள் யாவரும் பூரண உரித்துடைய சமமான பிரஜைகளாகக் கையாளப்படுவார்கள். அங்கே சம அந்தஸ்திலிருந்து அனைவரும் இயங்குவதால் பகைமை, போட்டி, மேலாதிக்க உணர்வு என்பற்றிற்கான முகாந்திரமே இருக்காது. அத்தகைய உன்னதமான அரசை இஸ்லாமிய கிலாஃபா அரசால் மாத்திரமே பிரதிபளிக்க முடியும். அந்த கிலாஃபா அரசால் மாத்திரமே உலகெங்கும் புரையோடிப்போயிருக்கும் தேசிய மற்றும் இன ரீதியான குரோதங்களிலிருந்து மனிதகுலத்தை பாதுகாத்து ஒன்றிணைக்க முடியும். இதுதான் உண்மையும், ஒவ்வொரு முஸ்லிமும் உறுதியாக ஏற்றுக்கொள்ள வேண்டிய நம்பிக்கையுமாகும்.
எனினும் கவலைக்கிடமான விடயம் என்னவென்றால் முஸ்லிம்களில் பலர் அதிலும் குறிப்பாக தாராளவாத, சடவாத மேற்குலகில் வாழுகின்ற முஸ்லிம்களில் பலர் ட்ரம்பினைச் சூழ்ந்து உருவான கருத்தாடல்களில் இஸ்லாத்தை அடிப்படையாகக் கொண்டு தமது வாதங்களைக் கட்டமைக்காமல் தாராளவாதிகளின் மிகைப்படுத்தல்களுடன் கைகோர்த்தே தமது வாதங்களை முன் வைக்கின்றனர். இதனால் கடுமையாக விவாத்திற்குட்படுத்தப்பட வேண்டிய தேசியவாதச் சிந்தனைகள் தப்பிப்பிழைத்து நயவஞ்சகத்தனமான தாராளவாத சிந்தனைகளில் கருத்தாடல்கள் திசை திருப்பி விடுகின்றன.
எனவே நாங்கள் உலகில் வியாபித்திருக்கின்ற தாராளவாதம் போன்ற சடவாத சிந்தனைகளின் அடிப்படையில் சிந்திப்பதிலிருந்து விலகாத வரையில், அல்லது உலகம் எதிர்நோக்குகின்ற அரசியல், பொருளாதார, சமூகப் பிரச்சனைகளுக்கு தூய இஸ்லாமிய சிந்தனையிலிருந்து தீர்வுகளை முன்வைக்காத வரையில் உலகம் எதிர்கொள்கின்ற பிரச்சனைகளின் ஓர் அங்கமாக நாமும் மாறி விடுவோம். சத்தியத்தைக் கொண்டு முழு மனிதகுலத்திற்கும் சான்று பகர வேண்டிய முஸ்லிம் உம்மத் குப்பார்களிடம் கையேந்தி எங்களுக்கும் அடைக்களம் தாருங்கள், எங்களையும் சமமாக நடத்துங்கள் என இரந்து நிற்பது நிச்சயம் உசிதமானது அல்ல.
தம்மைப்போன்ற சக மனிதர்களை இனத்தின், மதத்தின், தேசியத்தின் அடிப்படையில் பாகுபடுத்தி ஒருவரையொருவர் ஒடுக்கி வாழ நினைக்கும் இந்த உலகில் முழு மனித சமூகத்தையும் எவ்வாறு கட்டியாள்வது, எவ்வாறு வழிநடத்துவது என்பதற்கு நாம் தான் முன்மாதிரியாய் இருக்க வேண்டும். தூய்மையான குடியுரிமைக் கொள்கை எவ்வாறு அமைய வேண்டும்?, வேறுபட்ட இனக்குழுக்களும், வேறுபட்ட மதக்குழுக்களும் எவ்வாறு ஒரே தேசத்தின் அங்கங்களாக வாழ முடியும்? ஒரு நாட்டின் வெளிவிவகாரக் கொள்கையும், எல்லைப் பாதுகாப்புக் கொள்கையும் எதனடிப்படையில் தீர்மானிக்கப்பட வேண்டும்? குடிவரவுக் கொள்கைக்கும், வீசா நடைமுறைகளுக்கும் எவை நியமங்களாக இருக்க வேண்டும் என்பதை உலகுக்கு இனம் காட்டுகின்ற உம்மத்தாக நாம் மாற வேண்டும். எமது அரசியல் வழக்கங்கள் சர்வதேச தராதரங்களாகப் போற்றப்படும் அளவுக்கு நாம் மேன்மை பெற வேண்டும். இத்தகையோர் உன்னதமான நிலையை கிலாஃபா ராஷிதாவின் மீள்வருகையால் மாத்திரமே சாத்தியப்படுத்த முடியும்.
எத்தகையதொரு பாரிய அரசியல் மாற்றத்திற்கான முதற்படி, அதன் அறிவார்ந்த அடிப்படையை முழுமையாகத் தழுவுவதும், ஆதிக்கத்திலுள்ள அறிவார்ந்த அடிப்படைக்கு எதிராக அதனை வலிமையாகப் பிரயோகிப்பதாகும். கிலாஃபத் என்ற அரசியல் மாற்றத்தைப் பொருத்தமட்டில் தௌஹீத்தை அதன் அரசியல் பரிமாணத்துடன் தழுவுவதும், சடவாதத்தையும், தாராளவாதத்தையும் நிராகரிப்பதுமே அதன் பொருளாகும்.