சிறீ லங்கா தௌஹீத் ஜமாத்தின் பொதுச் செயலாளர் சகோதரர் அப்துல் ராஸிக் கைது செய்யப்பட்டு எதிர்வரும் 29ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை தொடர்பாக முஸ்லிம் சமூகத்திற்குள் எதிரும் புதிருமான கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருவதையும் நாம் காண்கிறோம். இந்நிலையில் சகோதரர் அப்துல் ராஸிக்கின் கைதை நாம் எவ்வாறு அணுக வேண்டும் என்பது பற்றியும், இலங்கையில் அடிக்கடி முஸ்லிம்களுக்கு எதிராக தூண்டப்படும் இன, மத வாத சர்ச்சைகளுக்கு யார் பொறுப்புச் சொல்ல வேணடும் என்பது தொடர்பான சில கருத்துக்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். அவை எதிர்காலத்திலும் இது போன்ற நிகழ்வுகளை நாம் நிதானமாய் அணுகுவதற்கு உறுதுணையாய் இருக்கும் என்று நம்புகிறோம்.
1) சகோதரர் அப்துல் ராஸிக்கின் கைது முஸ்லிம் சமூகம் எவ்வாறு நோக்க வேண்டும்?
⦁ முதலில் அப்துல் ராஸிக் என்பர் எமது உம்மத்தைச் சேர்ந்த ஓர் இஸ்லாமியச் சகோதரர் என்ற அடிப்படையில் அவரின் நலனும் எமது சமூகத்தின் நலனும் ஒன்றுதான் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அவர்; தனது அழைப்புப்பணியில் சதாரண ஒரு மனிதன் என்ற அடிப்படையில் சில தவறுகளை விட்டிருக்கலாம். நாம் அவருடனும், அவர் சார்ந்த இயக்கத்துடனும், அவர்களின் போராட்ட வழிமுறைகளுடனும் முரண்பாடுகளைக் கொண்டிருக்கலாம். எனினும் அந்த தவறுகளும், முரண்பாடுகளும் அந்நியர்களின் கைகளில் ஒரு முஸ்லிமை இலகுவாக தாரைவார்க்கின்ற மனோநிலைக்கு எம்மைத் தள்ளிவிடக்கூடாது. அது இஸ்லாம் கூறுகின்ற சகோதரத்துவ மனப்பாங்கிற்கு நேர் எதிரானதாகும். இன்று ஒரு சகோதரனை அல்லது ஒரு இயக்கத்தை காட்டிக்கொடுக்கின்ற, தனிமைப்படுத்துகின்ற அல்லது அந்தரத்தில் விடுகின்ற முன்மாதிரியை நாம் உருவாக்கி விடுகின்ற போது நாளை வேறொரு அரசியற் களத்தில் எமது சமூகத்தின் வேறு அங்கங்களுக்கும் இதுபோன்ற நிலை தோன்றும் போதும் எமது சமூகம் இத்தகைய முன்மாதிரியையே பின்பற்றும். அது பலம் வாய்ந்த ஒரு சமூகத்தை கட்டியெழுப்புதவற்கும், எமது சமூக இருப்பைப் பாதுகாத்துக் கொள்வதற்கும் ஆபத்தானதாகும். அந்த மனோநிலை எம்மை எதிரியின் முன் பலகீனப்பட்டு மண்டியிடச் செய்துவிடும்.
⦁ டான் பிரியசாத்தின் தீவிரவாத மதவாதக் கருத்துக்களையும், வன்முறையைக் கொப்பளிக்கும் வார்த்தைகளையும், அவனும் அவனது குழுவும் எதிர்காலத்தில் மேற்கொள்ள இருப்பாதகக் கூறிய திட்டங்களையும் சமூக வலைத்தளங்களின் ஊடாக அறிந்தவர்கள் அவனுக்கும், அப்துல் ராஸிக்கும் இடையில் இருக்கின்ற வேறுபாட்டை புரிந்து கொள்ள சிரமப்பட வேண்டியதில்லை.
⦁ பௌத்த சங்கத்தை சேர்ந்தவர் என்பதற்காகவும், காவியுடை அணிந்திருக்கிறார் என்பதற்காகவும் ஒருவரின் அளவுகடந்த அத்துமீறல்களை ஆரோக்கியமான எந்த சமூகமும் அனுமதிக்கக் கூடாது. அந்தவகையில் இஸ்லாத்திற்கும், முஸ்லிம்களுக்கும் எதிராக போலிப்பிரச்சாரங்களை பரப்பி, பௌத்த மக்கள் மத்தியில் வன்முறையைத் தூண்டி நாட்டின் சட்டத்தையும், பொது அமைதியையும் சீரழிக்கின்ற வகையில் தொடர்ந்து செயற்பட்டுவரும் ஞானசேர தேரர் போன்றவர்கள் பகிரங்கமாகவும் வன்மையாகவும் கண்டிக்கப்பட வேண்டியவர்களே.
⦁ எனினும் அந்தக் கண்டிப்பை கடிவாளமிட்டும், அரசியல் முதிர்ச்சியுடனும் வெளிப்படுத்தாது விட்டதே அப்துல் ராஸிக் விட்ட தவறு. எனவே அவர் நிதானம் தவறாமல் இருந்திருக்கலாம், சில வார்த்தைகளைத் தவிர்த்திருக்கலாம் என்ற விமர்சனத்தை அவர் மீதும், அவர் சார் இயக்கத்தின் மீதும் முன்வைப்பது நியாயமானதுதான். எனினும் இத்தகைய தவறுகளைக் காரணம் காட்டி அந்நியர்கள் செய்வதைப்போல் அப்துல் ராஸிக்கை நாட்டின் இன நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவிப்பவராகவும், கடும்போக்கு மதத்தீவிரவாதியாகவும் நாமும் சித்தரிக்க நினைப்பது நியாயமற்ற செயற்பாடாகும்.
⦁ மேலும் அப்துல் ராஸிக்கின் கைதை தௌஹீத் ஜமாத், தப்லீக் ஜமாத் முரண்பாட்டு கண்ணாடியினூடாகவோ, தௌஹீத் ஜமாத், தரீக்கா முரண்பாட்டுக் கண்ணாடியினூடாகவே பார்ப்பது மிகவும் தவறானதாகும். இத்தகைய குழுவாத மனோநிலைகள் நிலைமையை நியாயமாக அணுகுவதற்கு வழிவிடாது. அவை காழ்ப்புணர்வையும், காட்டிக்கொடுப்புக்களையுமே உருவாக்கும்.
⦁ அதேபோல எமது சமூகத்தில் இருக்கின்ற மிதவாத போக்குடைய இயக்கங்கள் மற்றும் வலையமைப்புக்கள் போன்றன, இது போன்ற நிகழ்வுகளை முஸ்லிம்களில் தீவிரவாத சிந்தனை கொண்ட தரப்புக்களாக தாங்கள் கருதுபவர்களை குற்றவாளிக்கூண்டில் நிறுத்துவதற்கான ஒரு சந்தர்ப்பமாக பயன்படுத்த நினைப்பதும் துரோகத்தனமானதாகும். இத்தகைய மனோநிலை முஸ்லிம் சமூகத்தினது ஒற்றுமையை கேள்விக்குறியாக்கி, எம்மை மென்மேலும் பலகீனப்படுத்தி எதிரிக்கு இரையாக்கவே வழிவகுக்கும்.
⦁ மேலும் முஸ்லிம் அரசியல் வாதிகள் தமது குறுகிய அரசியல் இலாபத்தை அடைந்து கொள்வதற்கும், தமது எதிராளிகளை கருவறுக்கவும் இத்தகைய சந்தர்ப்பங்களைப் பாவிப்பதற்கு முஸ்லிம் சமூகம் ஒருபோதும் அனுமதித்து விடக்கூடாது.
⦁ மேலும் இஸ்லாமிய அழைப்புப் பணியில் ஈடுபடும்போதும், சமூக உரிமைப் போராட்டங்களை முன்னெடுக்கும்போதும் எல்லாச் சந்தர்ப்பத்திலும் அனைவரையும் திருப்த்திப்படுத்தலாம் என நாம் நினைக்கலாகாது. சத்தியத்தையும், அசத்தியத்தையும் பிரித்துக் காட்டுகின்ற போதும், சில அநியாயங்களை பகிரங்கமாக தட்டிக்கேற்கின்றபோதும் எம்மை நோக்கி எதிர்ப்பலைகள் எழலாம். அந்நிய மக்களில் சிலர் எமது கருத்துக்களை தீவிரவாதக் கருத்துக்களாகவும், மத நிந்தனைக் கருத்துக்களாகவும் பார்க்கக்கூடிய ஆபத்துக்கள் தோன்றலாம். எனினும் அவை அனைத்தும் முழுக்க முழுக்க எமது பிழையான அணுகுமுறையின் விளைவுகள்தான் என்று நாம் கருத வேண்டியதில்லை. அதற்கு வேறுபல காரணங்கள் இருக்கலாம். எனவே குற்றம் வெளியே இருக்கின்றபோது தொடர்ந்து எம்மை நாமே குறை கண்டுகொண்டிருப்பது சாணக்கியமான நடவடிக்கையாக இருக்காது. செய்யாத குற்றத்திற்கெல்லாம் எம்மை திருத்திக் கொள்ள வேண்டும் எனச் சொல்கின்ற அக்கறை குற்றத்தை செய்பவர்களை தோலுரித்துக் காட்டுவதிலும், அவை மீண்டும் ஏற்படாமல் தடுப்பதிலும் வரவேண்டும். மறுபக்கத்தில் நாம் விடும் சில தவறுகளால் வம்புகளை விணாக விலைக்கு வாங்கிக் கொள்ளும் முட்டாள்தனத்தையும் நாம் செய்துவிடக்கூடாது என்பதை நாமும் மறுக்க வில்லை.
2) இன, மத கடும்போக்கு வாதம் பரவுவதற்கு யார் பொறுப்பேற்க வேண்டும்? நாம் என்ன செய்ய வேண்டும்?
⦁ நாம் முதலில் ஒரு விடயத்தை தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். அதாவது முஸ்லிம் தனியார் சட்டத் திருத்தம் தொடர்பாக எழுந்த சர்ச்சை தொடக்கம் இன்று அப்துல் ராஸிக் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது வரைக்கும் நிகழ்ந்த சம்பவங்களுக்கு இன்றைய நல்லாட்சி அரசாங்கமே முழுப்பொறுப்பையும் ஏற்க வேண்டும். ஏனெனில் முஸ்லிம் தனியார் சட்டத்திருத்த விடயம் தொடர்பாக முஸ்லிம்களுடன் முறையாக ஆலோசிக்காமல் அரசாங்கம் தன்னிச்சையாக செயற்பட நினைத்ததன் விளைவுதான் முஸ்லிம்கள் அதற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியது. சிறீ லங்கா தௌஹீத் ஜமாத் போன்ற அமைப்புக்களை வீதிக்கு இறக்கி ஆர்பாட்டத்தில் ஈடுபட நிர்ப்பந்தித்தது.
⦁ அதேபோலவே ஞானசார தேரர் போன்றவர்கள் நாட்டில் இனவாதத்தையும், மதத்தீவிரவாதத்தையும் விதைத்து வருகின்ற நிலையில் அவர்களை அரசு சுதந்திரமாக உலவ விட்டதன் விளைவுதான், தௌஹீத் ஜமாத்தின் ஆர்பாட்டத்தை பொலிஸ் தடுத்து நிறுத்தவில்லையானால் வன்முறையைக் கொண்டு அதனை நாங்களே நிறுத்திக் காட்டுவோம் என ஞானசார தேரர் அரசுக்கே சவால் விடும் துணிவைக் கொடுத்தது. அதற்கு பதிலடியாக அப்துல் ராஸிக் ஞானசார தேரரை வன்மையாகக் கண்டிக்க வேண்டிய நிலையைத் தோற்றுவித்தது.
⦁ மேலும் இன, மத முரண்பாடுகளைத் தோற்றுவிக்கக்கூடிய செயற்பாடுகளை சென்ற மஹிந்த அரசைப்போலவே இந்த அரசும் கண்டும் காணதது போல இருந்து வருவதன் விளைவுதான் டான் பிரியசாத் போன்ற தீவிரவாத விசக்கிருமிகள் பௌத்தத்தின் பெயரால் நாட்டின் அமைதிக்கு குந்தகம் விளைவிக்க நினைக்கிறார்கள்.
⦁ இறுதியில் அதே ஞானசார தேரர் விடுத்த காலங்கெடுவுக்கு பயந்து நியாயமற்ற முறையில் அப்துல் ராஸிக் விளக்க மறியலில் வைக்கப்பட்டிருக்கிறார். இவை அனைத்தும் இந்த நல்லாட்சி அரசின் முதுகெலும்பற்ற நிலையையும், சமூக நல்லிணக்கம் தொடர்பான அதன் அலட்சியப்போக்கையுமே எடுத்துக்காட்டுகிறது.
⦁ எனவே முஸ்லிம்கள் தமக்குள் ஒருவரை ஒருவர் குறைபேசித்திரிவதைத் தவிர்த்து தனது அதிகாரத்தை கொண்டு இனவாதத்தையும், மதவாதத்தையும் உடனடியாக தடுத்து நிறுத்தக்கூடிய வல்லமை கொண்ட இலங்கை அரசும், அதன் காவல்துறையும், நீதித்துறையும் கைகளைக் கட்டிக்கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததே பிரச்சனை அனைத்துக்குமான அடிப்படைக் காரணம் என்பதை நாம் அரசுக்கும், நாட்டு மக்களுக்கும் தெளிவுபடுத்த வேண்டும்.
⦁ மேலும் இன்று மதத்தீவிரவாதம் பேசினார், மதங்களை நிந்தனை செய்தார் என்ற குற்றச்சாட்டைச் சுமத்தி சகோதரர் அப்துல் ராஸிக்கையும், மறுபக்கத்தில் பௌத்த கடும்போக்குவாதத்தின் சூத்திரதாரிகளை கைது செய்யாமல் டான் பிரியசாத் போன்ற அடியாட்களையும் கைது செய்துவிட்டு நாம் ஆவன செய்து வருகிறோம் என அரசாங்கம் பாசாங்க செய்ய முடியாது. இவ்வாறான வேடதாரி நடவடிக்கைகளால் நாட்டில் பெருகிவிரும் பௌத்தத் தீவிரவாத்தை கட்டுப்படுத்த முடியாது என்பதையும் நாம் அரசுக்குக்கும், நாட்டு மக்களுக்கும் முன்வைக்க வேண்டும்.
⦁ எய்தவன் இருக்க அம்பை நோவானேன் என்று சொல்வதைப்போல் பௌத்த மதத் தீவிரவாதத்தையும், சிங்கள தேசியவாதத்தையும், வன்முறைக்கலாசாரத்தையும் அரசியலாக்கி அதற்கு தலைமை வகித்து வருகி;ன்ற ஞானசார தேரர் போன்றவர்களையும், அந்த ஞானசார தேரருக்கு பின்னே இருக்கின்ற உயர் மட்டத்திலான மறை கரங்களையும் அரசாங்கம் இன்று வரை பாதுகாத்து வருகின்றது என்ற குற்றச்சாட்டையும் நாம் அரசை நோக்கி முன் வைக்க வேண்டும்.
⦁ மேலும் கடந்த மஹிந்த அரசுதான் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத நடவடிக்கைகளை கட்டுக்கடங்காது வளர்த்து விட்டது என்ற அடிப்படையிலும், மீண்டும் இணைந்த எதிர்கட்சி என்ற பெயரில் குழப்பங்களை செய்து நாட்டின் அதிகாரத்திற்கு திரும்ப வர எத்தணிக்கின்ற மஹிந்த ராஜபக்ஷவின் தரப்புக்கும் இன்று உருவாகியுள்ள சூழலுக்கும் என்ன தொடர்பிருக்கிறது என்பது பற்றியும் முஸ்லிம்கள் ஆழமாகச் சிந்திக்க வேண்டும்.
⦁ மேலும் இஸ்லாத்திற்கும், முஸ்லிம்களுக்கும் எதிரான உலகளாவிய நச்சுப்பிரச்சாரம் இலங்கையில் பரப்பப்படுவதன் பின்னணியில் சர்வதேச சக்திகள் இருப்பதையும், அதனால் ஏற்படக்கூடிய எதிர் விளைவுகள் முழு நாட்டு மக்களுக்குமே ஆபத்தானது என்பதையும் நாம் அரசுக்கும், நாட்டு மக்களுக்கும் தெளிவுபடுத்த வேண்டும்.
⦁ மேலும் வாக்கு வங்கி அரசியலை அடிப்படையாக வைத்து செயற்படும் கட்சிகளும், அரசாங்கத்தை அரசியல் ஸ்திரமற்ற நிலைக்குள் தள்ள நினைக்கின்ற எதிர்கட்சிகளும், சில பொழுதுகளில் நாட்டு மக்களின் கவனத்தை நாட்டின் முக்கிய பிரச்சனைகளிலிருந்து திசை திருப்ப அரசாங்கங்களும் இதுபோன்ற இனவாத, மதவாத தீயை சில காலங்களுக்கு தூண்டி விடுவது வழங்கமாக மாறி வருகின்றது என்பது பற்றிய விழிப்புணர்வு எமக்கு இருக்க வேண்டும். குறிப்பாக தேர்தல் ஒன்றை நாடு எதிர் நோக்கியிருக்கின்ற காலங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் இடம்பெறுவது வழமையானவை என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். எனவே குறுகிய சுயநல அரசியல் இலாபங்களுக்காக தூண்டி விடப்படுகின்ற இந்த சிக்கல்களை சரியாகப் புரிந்து கொண்டு சமூகங்கள் தமக்குள் முரண்பட்டுக் கொள்வதையும், குறிப்பாக முஸ்லிம்கள் தமக்குள் தர்க்கித்து கொள்வதையும் தவிர்ந்து கொள்ள வேண்டும்.
⦁ இறுதியாக, இத்தகைய இக்கட்டான தருணங்களில் அல்லாஹ்(சுபு)வின் உதவி மாத்திரம்தான் எம்மை உய்விக்கும் என்ற அடிப்படையில் அவன் எம்மீது விதியாக்கியிருக்கின்ற கடமைகளை சரியாக நாம் செய்து விட்டு அவனிடத்திலேயே எமது பொருப்புக்கள் அனைத்தையும் பாரம் சாட்டி விட வேண்டும். அவன் எம்மீது விதித்திருக்கின்ற கடமை என்னவென்றால் நாம் எமது இஸ்லாமிய அடையாளத்தை எள்ளின் மூக்களவு, மூக்கின் முனையளவு கூட சிதைத்து விடாமல் பாதுகாத்து, யாருக்காகவும் ஹிம்மத் என்ற பெயரில் சத்தியத்தை சமரசம் செய்யாது, பிறரை திருப்த்திப்படுத்துவதற்காக ‘கூஜா தூக்கும் அரசியல்’ செய்யாது, எமது சமூகத்தில் சிலர் விடுகின்ற சிறிய தவறுகளுக்காக அவர்களை எதிரியிடம் காட்டிக்கொடுக்காது, அரசுக்கும், முழு நாட்டு மக்களுக்கும் தூய்மையான இஸ்லாத்தின் செய்தியை சான்று பகர்கின்ற நேர்மையான ஒரு சமூகமாக வாழ்வதேயாகும். அதற்கு வல்ல இறைவன் எமக்கு தைரியத்தைத் தருவானாக!