அண்மையில் பெல்ஜியத்திற்கு விஜயத்தை மேற்கொண்டிருந்த பிரதமர் ரணில் விக்கரமசிங்க GSP+ வரிச்சலுகையை இலங்கை திரும்பவும் பெற்றுக்கொள்வது தொடர்பாக ஐரோப்பிய பாராளுமன்ற வெளிவிவகாரக் குழுவுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் இலங்கையின் முஸ்லிம் தனியார் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படுவதும் முக்கிய நிபந்தனையாக அவர்களால் முன்வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
அதற்கமைவாக தற்போது, அத்தகைய சட்டத்திருத்தத்தை எவ்வாறு மேற்கொள்வது என்பது பற்றி ஆராய நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ தலைமையில் அமைச்சரபை உப குழுவொன்றும் நியமிக்கப்பட்டிருக்கிறது.
இவ்வாறு அரசாங்கம் அவசர அவசரமாக செய்ய நினைக்கின்ற சட்டத்திருத்தத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் முஸ்லிம் சமூகத்தின் அனைத்து மட்டங்களிலிருந்தும், அனைத்து வடிவங்களிலும் முன்வைக்கப்பட்டு வருகின்றன. அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை, தேசிய சூரா சபை போன்றவற்றின் வினயமான கண்டனங்கள் தொடக்கம் சிறீ லங்கா தௌஹீத் ஜமாத்தின் ஆக்ரோசமான ஆர்பாட்டங்கள் வரை முஸ்லிம்களின் உணர்வுகள் அரசாங்கத்திற்கு மிகத் தெளிவாக முன்வைக்கப்;பட்டுள்ளன. எமது சமூகத்தின் மூத்த ஊடகவியலாளர்கள் தொடக்கம் இளைய சமூக ஆர்வலர்கள் வரைக்கும் பிரதான ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் இது குறித்து எழுதியும், பேசியும் வருகிறார்கள். இவற்றிற்கு மத்தியில் இந்த புதிய சவாலின் யதார்த்தம் என்ன? அதனை நாம் எவ்வாறு முகம் கொடுக்க வேண்டும் என்பது தொடர்பான சில கருத்துக்களை மிகச் சுருக்கமாக முன்வைப்பதே இந்த ஆக்கத்தின் நோக்கமாகும்.
ஹலால் உணவை உறுதிப்படுத்துவது, குர்பானிக்காக விலங்குகளை அறுப்பது, புர்கா அணிவது, மஸ்ஜித்களை விஸ்தரிப்பது என முஸ்லிம்களின் வணக்க வழிபாடுகள் மற்றும் உணவு, உடை போன்ற சர்வ சாதாரணமான விடங்களை இலங்கையிலே கடைப்பிடிக்கும்போது கூட அது ஒரு சர்ச்சைக்குரிய விடயமாக மாற்றப்படும் சூழலை நாம் நுணுக்கமாக உற்று நோக்க வேண்டும். இந்தப் போக்கின் பரிணாமத்தில் இன்று முஸ்லிம் தனியார் சட்டமும் சேர்க்கப்பட்டுள்ளது. முஸ்லிம் தனியார் சட்டம் என்பது பெரும்பாலும் முஸ்லிம்களின் தனிநபர் வாழ்க்கையுடன் சம்பந்தப்பட்ட விடயங்களை தமது மார்க்கத்தின்படி நிறைவேற்றிக் கொள்வதற்காவும், அதிலே ஏற்படக்கூடிய சிக்கல்களை மார்க்கத்தின் வழிகாட்டலின்படி தீர்த்துக் கொள்வதற்காகவும் வழங்கப்பட்டுள்ள ஒரு சட்ட ஏற்பாடாகும். இத்தகைய சட்ட ஏற்பாடுகள் முஸ்லிம்களுக்கு போலவே ஏனைய சமூகங்களுக்கும் பிரத்தியேகமாக வழங்கப்பட்டுள்ளன. இந்த ஏற்பாடுகள் இலங்கையின் ஏனைய சமூக, பொருளாதார, அரசியல் மற்றும் ஆட்சி தொடர்பான எந்த சட்ட எல்லைக்குள்ளும் செல்வாக்குச் செலுத்துவதில்லை. ஒரு சமூகம் தாம் ஏற்றுக்கொண்டுள்ள நம்பிக்கைகளுக்கு ஏற்ப தமது தனிப்பட்ட விவகாரங்களை தீர்த்துக் கொள்ளக்கூடிய மிகவும் சாதாரணமான இத்தகைய சட்டப்பாதுகாப்புக்குள் கூட தீய நோக்கங்களுடனும், அரசியல் இலக்குகளுடனும் வெளி சக்திகள்; தலையிட நினைக்கிறார்கள் என்றால் இலங்கையில் எமது மார்க்கத்தை இனி இலகுவாக பின்பற்ற முடியாத சூழல் வளர்ச்சி பெற்று வருகிறதென்றே நாம் பொருள் கொள்ள வேண்டும். இதுவொரு ஆச்சரியமான அல்லது அதிர்ச்சியான செய்தியல்ல. ஏனெனில் இன்றைய உலகின் அரசியற் காலநிலை அத்தகையது.
முதலாளித்துவ மேற்குலகு, சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்கு பின்னர், தமது மதச்சார்பற்ற(Secular), தாராண்மைவாத(Liberal), முதலாளித்துவ நாகரீகத்தை ஆட்டங்காணச் செய்கின்ற ஒரேயொரு சக்தியாக இஸ்லாத்தை காண்கிறது. அவர்களுக்கு சவால் விடுக்கக்கூடிய ஒரேயோரு சமூகமாக உலகளாவிய முஸ்லிம் உம்மத்தைக் காண்கிறது. அந்த சக்தியின் ஊற்றான இஸ்லாமிய சிந்தனையிலிருந்து முஸ்லிம்களை சிறிது சிறிதாக அப்புறப்படுத்தாது விட்டால் உம்மத் ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தை தம்மால் சமாளிக்க முடியாது போய்விடும் என்பதை அவர்கள் அறிவார்கள். அதேபோல விரும்பியோ, விரும்பாமலோ தமது விதிகளுக்கு கட்டுப்பட்ட ஒரு சமூகமாக முஸ்லிம் சமூகத்தை மாற்றுவதும் அவர்களுக்கு மிக முக்கியமானதாகும். எனவே உலகில் அவர்கள் நிர்ணயித்திருக்கின்ற நியமங்களுக்கும், ஒழுங்குகளுக்கும் அடிபணிந்து வாழக்கூடிய ஒரு மனோநிலைக்கு முஸ்லிம்களை கொண்டுவரவேண்டிய தேவை அவர்களைப் பொருத்தவரை ஜீவமரணப்போராட்டமாகும். உலகிலிருக்கின்ற ஏனைய கலாசாரங்களும், மதங்களும் ஏற்கனவே மதச்சார்பற்ற சிந்தனையால் விழுங்கப்பட்டு உள்ளதால் இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் மாத்திரம் குறிவைத்தே இத்தகைய அழுத்தங்கள் பெரும்பாலும் செய்யப்படுகின்றன.
இந்த GSP+ விவகாரத்தை பொருத்தமட்டிலும் அவர்கள் அதனைத்தான் அடைய நினைக்கின்றனர். இலங்கைக்கு மேற்குலகு ஏதேனும் ஒன்றில் உதவுகிறென்றால் அதைவிடப் பெரிதான கைமாறை எதிர்பார்த்தே அதைச் செய்கிறது என்று சுத்தமான இலாபநோக்கை மாத்திரம் மந்திரமாகக் கொண்ட முதலாளித்துவத்தின் யதார்த்தத்தை புரிந்தவர்களுக்கு நன்றாகத் தெரியும். வளர்முக நாடுகளை தமது வட்டிக்கடன்களைக் கொண்டும், நிவாரணங்களைக் கொண்டும் அடிமைப்படுத்தி வரும் மேற்குலகு தமது உலகளாவிய நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப அந்த நாடுகளை நடனமாடச் சொல்லும் என்பதில் சந்தேகமில்லை. அந்தவகையில் இஸ்லாத்திற்கு எதிரான தமது நிகழ்ச்சி நிரலுக்கு இலங்கையும் உதவ வேண்டும் என அவர்கள் நிபந்தனை வைத்தால் அதனை மறுப்பதற்கு இலங்கையால் முடியாது. உள்நாட்டில் முஸ்லிம்களின் வாக்குகளை இழந்து விடுவோமோ என்ற உளக்குமுறலைத்தவிர இலங்கையில் தோன்றக்கூடிய எத்தகைய அரசாங்கங்களும் அது குறித்து அதிகம் அலட்டிக்கொள்ளப்போவதில்லை.
சரி, இந்தப் பிரச்சனையை நாம் எவ்வாறு எதிர்கொள்வது?
மேற்கின் நிகழ்ச்சி நிரலுக்கும், அதற்கு சோரம்போயுள்ள இலங்கையின் நிலைப்பாட்டுக்கும் நாம் பலிக்கடாவாக்கப்படக்கூடாது. அதாவது முஸ்லிம்களை மதச்சார்பின்மையை நோக்கி படிப்படியாக அழைத்துச் சென்று மேற்குலகு விரும்புகின்ற ஒரு மைநீரோட்ட அடையாளத்திற்கும், கலாசாரத்திற்கும் அவர்களை பழக்கப்படுத்தி விட வேண்டும் என்ற எண்ணத்தை நாம் முளையிலேயே கிள்ளி எறிந்துவிட வேண்டும். இலங்கையில் வாழ்கின்ற முஸ்லிம்களைப் பொருத்தவரையில் உலகின் ஏனைய பெரும்பாலான முஸ்லிம்களைப்போன்றே அவர்களின் வாழ்க்கையின் அனைத்து கருமங்களும் (துரதிஷ்டவசமாக) ஏற்கனவே மதச்சார்பற்ற நியமங்களுக்கும், சட்டங்களுக்கும் ஏற்பவே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனினும் நிகாஹ், தலாக், சொத்துரிமை போன்ற ஒருசில தனிப்பட்ட விககாரங்களில் மாத்திரம் ஷரீஆ தழுவிய வழிகாட்டல்களைக் கொண்டு அவர்கள் தமது பிரச்சனைகளைத் தீர்த்து வருகிறார்கள். தமது தனித்துவமான அடையாளத்தை பாதுகாக்கும் காரணிகளில் ஒன்றாக அதனையும் காலங்காலமாக அவர்கள் பாதுகாத்து வருகிறார்கள். எனினும் அதிலேயும் பிறரின் விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப திருத்தங்களைச் செய்யச்சொல்லுவது முஸ்லிம்களின் தனித்துவத்தை சிதைக்கின்ற, அவர்களை ஷரீஆவிலிருந்து மென்மேலும் தூரம்படுத்துகின்ற நடவடிக்கை என்றே கருத வேண்டியுள்ளது. எனவே அதனை முஸ்லிம்கள் முழுமையாக எதிர்க்க வேண்டும்.
அதேபோல எமது கரத்தினால் சில தவறுகள் நடந்து விடக்கூடாது என்பதிலும் நாம் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும். உதாரணத்திற்கு நடைமுறையிலுள்ள முஸ்லிம் தனியார் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மணப்பெண்ணின் ஆகக் குறைந்த வயதெல்லையை 12 இலிருந்து 16 வயதாக உயர்த்த வேண்டும் என்ற ஐரோப்பிய ஒன்றியத்தின் கோரிக்கையை நாம் எவ்வாறு அணுகிவிடக்கூடாது என்பதை சற்று நோக்குவோம்.
இது தொடர்பாக இரு முக்கியமான குரல்கள் சமூகத்திற்குள்ளிருந்து வருவதைக் காண்கிறோம். ஒன்று எமது தனியார் சட்டத்தை வெளிநாட்டு நிர்பந்தங்களுக்காக நாம் மாற்ற முடியாது என்ற வாதம். இரண்டாவது அதற்காக ஒரு குழு ஏற்கனவே உயர் நீதிமன்ற நீதிபதி சலீம் மர்ஸுப்பின் தலைமையில் கடந்த ஏழு வருடங்களாக இயங்கி வருகின்ற போது அரசாங்கம்; புதியதொரு அமைச்சரவை உபகுழுவினூடாக இதனைச் அவசரமாக செய்யவேண்டிய தேவை ஏன் ஏற்பட்டுள்ளது என்ற கேள்வி.
ஆனால் நாம் இங்கே கவனிக்க வேண்டிய விடயம் என்னவென்றால் பிறரின் தலையீட்டை நாம் வன்மையாக எதிர்க்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை என்றாலும் அவர்கள் அடைய நினைக்கின்ற அடைவை நாம் எமது கரத்தாலேயே செய்து முடித்துவிடக்கூடாது என்பதே முக்கியமாகும். அதேபோல நீதிபதி சலீம் மர்பிஸுன் குழுவா அல்லது புதிய குழுவா அதனை செய்யவேண்டும் என்ற சர்ச்சையை விட இந்த பிரச்சனையை இரு குழுக்களும் எவ்வாறு அணுகப்போகின்றன என்பதே முக்கியமானதாகும்.
இஸ்லாத்தைப் பொருத்தவரையில் ஒரு பெண் திருமணம் முடிப்பதற்கான வயதெல்லையை அது திட்டவட்டமாகக் குறிப்பிடவில்லை. அது ஆகக்குறைந்த வயதெல்லையாக இருக்கட்டும், ஆகக்கூடிய வயதெல்லையாக இருக்கட்டும். அது அல்லாஹ்(சுபு)வினால் அந்தப்பெண்ணுக்கும், அவளின் பாதுகாவலர்களுக்கும் அல்லாஹ்(சுபு) வழங்கியிருக்கும் தனிப்பட்ட உரிமையாகும். அதிலே தலையிடுவதற்கு வேறு யாருக்கும் உரிமையில்லை.
சில சமூக நலன்களைக் கருத்திற்கொண்டு மஹர் தொகையின் உயர் பெறுமானத்தை நிர்ணயம் செய்ய நினைத்த கலீஃபா உமர்(ரழி) அவர்களைப் பார்த்து ” மஹர் அல்லாஹ்(சுபு) எங்களுக்கு வழங்கிய உரிமை – அதனை வரையறுக்க கலீஃபாவாலும் முடியாது ” என்று அந்த யோசனையை வெளிப்படையாக மறுத்த மூதாட்டியின் சம்பவத்தில் எமக்கொரு படிப்பினை இருக்கிறது. மஹரைப் போன்றதொரு நிலைதான் இந்த வயதெல்லையிலும் இருக்கிறது. எனவே இஸ்லாத்தின் பெயரால், இஸ்லாமிய ஷரீயத்தின் பெயரால் ஒரு பெண்ணின் திருமணத்திற்கான குறைந்த வயதெல்லையை பிரிதொருவர் தீர்மானிக்க நினைப்பது ஷரீயத்தின் நிலைப்பாட்டுக்கு பதிலாக மனித மூளையின் அளவுகோளுக்கு தலை வணங்குவதாகவே அமையும். இத்தகைய ஒரு நிலைப்பாட்டுக்கு ஐரோப்பாவின் வேண்டுதலுக்காகவோ, நீதிபதி சலீம் மர்பிஸுன் தலைமையிலான குழுவின் பரிந்துரைக்காகவோ அல்லது புதிதாக நியமிக்கப்பட்டுள்ள உப குழுவின் சிபாரிசுக்காகவோ முஸ்லிம் சமூகம் வருமானால் அது இறுதியில் (ஷரீயத்திலிருந்து முஸ்லிம்களை தூரப்படுத்த வேண்டும் என்ற) ஐரோப்பிய ஒன்றியத்தின் நிகழ்ச்சி நிரலின் நோக்கத்தை பூர்த்தி செய்வதாகவே அமையும். அது வயதை 12ஆகவே வைத்துக்கொண்டாலும் சரி, 15 என்று சொன்னாலும் சரி, அல்லது ஐரோப்பிய ஒன்றியம் கோரியதற்கு இணங்க 16 ஆக உயர்த்தினாலும் சரியே.
அல்லாஹ்(சுபு) எமக்கு வழங்கியிருக்கின்ற வேதம் மனித பலகீனங்களுக்கு அப்பாற்பட்டதாகும். அது மனிதனின் அனைத்து பிரச்சனைகளுக்கும் துல்லியமாக தீர்வளிக்கக்கூடியது. அல்லாஹ்(சுபு) அருளியுள்ள சட்டங்களின் ஞானம் எமக்கு புரிந்தாலும் சரி, புரியாது விட்டாலும் சரி அதனை மனம்முரண்படாது ஏற்று வாழ்வதே ஒரு முஸ்லிமின் ஈமான் உறுதியாக இருக்கிறது என்பதற்கான சான்றாகும். இலங்கையில் இளைய வயதில் திருமணம் முடித்த பெண்களின் சிலரின் வாழ்க்கை சவால் நிறைந்ததாய் மாறியிருக்கலாம். அதற்கு ஷரீயத்தின் நிலைப்பாட்டைக் குறை சொல்ல முடியாது. மாறாக அந்த பெண்ணின் குடும்பம் எடுத்த தீர்மானங்கள், அந்த பெண் வாழ்ந்த சமூகத்தின் யதார்த்தங்கள் போன்ற மற்றும் பல காரணிகள் அதற்கு காரணமாக இருக்குமேயொழிய அவை ஷரீயத்தின் நிலைப்பாட்டில் மாற்றங்களைக் கொண்டுவர காரணங்களாக அமையாது.
எமது தனிப்பட்ட வாழ்க்கையில் நாம் எதிர்நோக்குகின்ற பிரச்சனைகளையும், சமூகத்தில் நாம் சந்திக்கின்ற சவால்களையும் இஸ்லாமிய ஷரீயத்தின் தூய்மையான நிலைப்பாடுகளுடன் தேவையில்லாமல் முடிச்சுப்போட்டு அவற்றிலே மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று கோருவதை நாம் கைவிட வேண்டும். ஷரீஆவின் எல்லா நிலைப்பாடுகளும் நவீன கால பிரச்சனைகளை தீர்ப்பதற்கு ஏதுவானதல்ல, எனவே அவற்றிலே மாற்றங்களை கொண்டு வரவேண்டும் என்ற கோரிக்கை மேற்குலகால் முஸ்லிம் உம்மத்திடம் அனுதினமும் வெவ்வேறு வடிவங்களில் முன்வைக்கப்பட்டு வருவதைக் காண்கிறோம். அதனூடாக ஷரீஆவின் முழுமையான ஏற்புடமை தொடர்பான சந்தேகத்தை முஸ்லிம்களின் மனதில் விதைத்து வளர்க்கின்ற பணியை அவர்கள் இடைவிடாது செய்து வருகிறார்கள். அதன் ஆபத்தை நன்குணர்ந்து நாம் எம்மை சுதாகரித்துக் கொள்ளவில்லையானால் முஸ்லிம்கள் தமது தொழுகை, நோன்பு போன்ற ஒரு சில இபாதத்களுக்கு மாத்திரம் இஸ்லாத்தை தொட்டுப்பார்த்துவிட்டு உலகின் ஏனைய மதத்தவர்களைப்போல வாழ்வின் ஏனைய அனைத்து விடயங்களுக்கும் சடவாத உலக நியதிகளையும், மனித மூளையின் நிலைப்பாடுகளையும் பின்பற்றுகின்ற, குறைந்தது அனுசரித்துச்செல்கின்ற நிலைக்குத் தள்ளப்பட்டு விடுவார்கள். அந்நிலை தோன்றுமானால் அது ஒரு மதச்சார்பற்ற முஸ்லிம் சமூகத்தின் உற்பத்தியாகும். அதனைத்தான் இலங்கையில் மாத்திரமல்லாமல் உலகம் முழுவதும் மேற்குலக வல்லாதிக்க சக்திகள் உருவாக்க நினைக்கிறார்கள். இத்தகைய நிர்பந்தமான சூழலில் இஸ்லாத்தை உறுதியாக பற்றிப்பிடித்துக் கொண்டு சத்தியத்தை சான்று பகர வேண்டிய பொறுப்பிலுள்ள நாங்கள் எம்மீது நிர்பந்தத்தை ஏற்படுத்த நினைக்கின்ற குப்ரிய சக்திகளின் நாகரீகத்தையும், அதன் விழுமியங்களையும் கேள்விக்குட்படுத்துவதற்கு இதனை ஒரு சிறந்த சந்தர்ப்பமாக பாவிக்க வேண்டும். அதுதான் இக்காலத்தில் செய்யக்கூடிய மிகச்சிறந்த அழைப்புப்பணியாகும்.
இலங்கையிலுள்ள முஸ்லிம் யுவதிகளின் திருமண வயது பற்றியும், அவர்களின் நல்வாழ்வு பற்றியும், மனித உரிமை பற்றியும் நீலிக்கண்ணீர் வடிக்கின்ற மேற்கத்தையவர்கள் அவர்களின் நாடுகளில் எவ்வாறு பெண்களை நடாத்துகிறார்கள் என்று ஒரு கணம் பார்தாலே போதும் அவர்களின் வண்டவாளங்கள் தெரிந்துவிடும். தாயாகவும், சகோதரியாகவும், மனைவியாகவும், மகளாகவும் பார்க்க வேண்டிய பெண்களை ஃபோனோகிரஃபிக் படங்களிலும், விளம்பரங்களிலும், களியாட்ட விடுதிகளிலும் வெறும் பாலியல் பண்டமாக பாவித்து அதிலிருந்து வயிறு வளர்;கின்ற மேற்குலகுக்கு உலகின் ஏனைய சமூகங்களின் நிலை குறித்து கருத்துச் சொல்ல அல்லது நிபந்தனை விதிக்க என்ன அருகதையிருக்கிறது? சுதந்திரம், தாராண்மைவாதம் போன்ற பிழையானதும், ஆபத்தானதுமான விழுமியங்களை தமது அடிப்படை அளவுகோளாகக் கொண்டு தமது நாகரீகத்தை, கலாசாரத்தை உருவாக்கியிருக்கும் மேற்குலகில் பெண்களுக்கு எதிரான அனாச்சாரங்களும், வன்முறையும் கட்டுக்கடங்காது வளர்ந்து வருவதும், அதனால் அங்குள்ள குடும்பக்கட்டமைப்புக்கள் முழுமையாக சீரழிந்து வருவதும் தீர்க்கப்பட முடியாத பிரச்சனையாக மாறியிருக்கும் நிலையில் அவற்றை தீர்க்க முடியாத மேற்குலகுக்கு பெண்கள் தொடர்பான சர்வதேச நியமங்களைத் தீர்மானிக்க என்ன தகுதியிருக்கிறது?
பிரித்தானியாவின் 2007ஆம் ஆண்டுக்கான குற்றச்செயல் ஆய்வறிக்கை பிரித்தானியாவில் ஒரு நாளைக்கு 230 பெண்கள் பலாத்தகாரமாக கற்பழிக்கப்படுவதாகச் சொல்கிறது. 2004ஆம் ஆணடுக்கான ஆய்வறிக்கை பிரித்தானியாவிலுள்ள ஒவ்வொரு நான்கு பெண்களிலும் ஒரு பெண் அவளது 16 வயதிலிருந்து ஏதோவொரு வகையில் பாலியல் தொந்தரவுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக சொல்கிறது. அமெரிக்காவில் ஒவ்வொரு 2 நிமிடங்களுக்கும் ஒருமுறை பெண்கள் பாலியல் தாக்குதல்களை முகம் கொடுக்கிறார்கள் என நீதிக்கான அமெரிக்கத் திணைக்களம் குறிப்பிடுகிறது. இவை உண்மை நிலவரத்தின் சில துளிகள் மாத்திரமே. இந்த இலட்சணத்தில் பெண்களின் உரிமை பற்றி பேசுவதற்கு இவர்களுக்கு என்ன தகுதியிருக்கிறது?
இஸ்லாமிய உலகில் மாத்திரமல்லாது உலகின் பல்வேறு பகுதிகளிலும் அந்தந்த சமூகங்கள் கட்டிக்காத்த சில நல்ல பண்பாடுகளையும் தமது நாசக்கலாசாரத்தின் திணப்பின் ஊடாக களங்கப்படுத்தியுள்ள மேற்குலகை எமது நாடு ஒரு முன்மாதிரியாகக் கொள்ளக்கூடாது. மேற்குலக்கலாசாரத்தின் விளைவுதான் இலங்கையில் பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்கள் அதிகரிப்பதற்கு முக்கிய காரணமாகும். சொந்தத்தகப்பனே மகளை கற்பளிக்கும் நிலை, ஐந்தாறு வயது சிறுமிகளைக்கூட விட்டு வைக்காது கடத்திச் சென்று கற்பழித்து கொலை செய்யும் நிலை, கருக்களைப்பாலும், ஆண், பெண் உறைகளாலும் தம் மானத்தை மறைத்துக் கொள்ளும் நிலை என எமது நாட்டின் கலாசாரத்தையும் கேள்விக்குள்ளாக்கியிருக்கும் மேற்குலக கலாசாரத்தின் ஊடுருறுவலைத் தடுத்தாலேபோதும் எமது பெண்களின் உரிமைகள் பல பாதுகாக்கப்பட்டுவிடும்.
இஸ்லாம் இத்தகைய அசிங்கங்களுக்கு காரணமாக ‘சுதந்திரம்’, ‘தாராண்மைவாதம்’ போன்ற மேற்குலக விழுமியங்களை பாதுகாக்க நினைக்கவில்லை. மாறாக அது கற்பு, கண்ணியம், ஆண் பெண் இருபாலாருக்குமான பரஸ்பர மரியாதை, உறுதியான திருமண பந்தம், உடையாத குடும்ப அலகு என சமூகத்தின் ஆன்ம ஆரோக்கியத்தை பாதுகாக்கக்கூடிய விடங்களுக்கே அது முக்கியத்துவம் கொடுக்கிறது. இஸ்லாமிய சமூகமொன்றில் பெண் என்பவள் சந்தோசம் தருகின்ற ஒரு தசைப்பிண்டமாகப் பார்க்கபடுவதில்லை. மாறாக அவளது ஆன்மாவுக்கும், அறிவுக்குமே அங்கே மதிப்பளிப்படுகிறது. ஆணுக்கு நிகராக பெண் நிற்க வேண்டும் என்ற போராட்டம் அங்கே இயல்பாகவே தோன்றுவதில்லை. பெண் கேற்பதற்கு முன்பே அவளுக்கு அரசியல், பொருளாதார, சமூக உரிமைகள் அனைத்தும் வழங்கப்பட்டு விடுகின்றன. ஆண்களும், பெண்களும் அல்லாஹ்(சுபு)வின் முன் சமமான அடியார்கள் என்ற நிலையிலிருந்தே சமூகம் முழுமையும் நிர்மானிக்கப்படுகிறது.
எனவே மேற்குலக நாகரீகமும், உலகின் ஏனைய நாகரீகங்களும் தம்மை உய்விப்பதாக இருந்தால், தமது நாடுகளில் புரையோடிப்போயுள்ள சமூக நோய்களை சுகப்படுத்துவதாக இருந்தால் இஸ்லாத்தின், இஸ்லாமிய ஷரீயத்தின் அரவணைப்புக்குள் அடைக்களம் புகுவதே ஒரே வழியே ஒழிய இஸ்லாத்தையும், இஸ்லாமிய ஷரீயத்தையும் கொச்சப்படுத்த நினைப்பதல்ல. இந்த நிலை எமது நாடான இலங்கைக்கும் பொருந்தும். இலங்கையும் இஸ்லாத்திலிருந்து எவ்வளவோ பலன்பெற வேண்டியுள்ளது.
எனவே தற்போது முஸ்லிம் தனியார் சட்டத்திருத்தம் தொடர்பாக உருவாகியுள்ள கருத்தாடலில் கீழ்வரும் விடயங்கள் கவனத்திற் கொள்ள வேண்டும் என வலியுறுத்த விரும்புகிறோம்.
1) முதலில் எமது தனியார் சட்டத்தில் மூக்கை நுழைப்பதற்கு முஸ்லிம் அல்லாத, ஷரீயத் பற்றிய தெளிவில்லாத எவரையும் நாம் அனுமதிக்க கூடாது.
2) அரசியல் காரணங்களுக்காக வெளிநாட்டு சக்திகளும், (அரசு உட்பட) உள்நாட்டு சக்திகளும் இந்த விடயத்தைக் கையிலெடுத்தால் அதனை தோலுரித்துக் காட்டி முஸ்லிம் சமூகம் அதனை ஒற்றுமையாக எதிர்க்க வேண்டும்.
3) பிறரின் நிர்பந்தத்திற்காக ஷரீஆவை வளைத்து நெளித்து தீர்வை எட்ட நினைப்பதில் நாம் எல்லோரும் அல்லாஹ்(சுபு)வைப் பயப்பட வேண்டும். குறிப்பாக சமூகத்தலைமைகளும், உலமாக்களும் இதனை கவனத்தில் கொள்ள வேண்டும்.
4) உலகெங்கும் முஸ்லிம்களை மதச்சார்பற்றவர்களாக மாற்ற நினைக்கும் மேற்கின் சூழ்ச்சியின் ஒரு வடிவம்தான் இந்த சட்டத்திருத்த கோரிக்கை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
5) சுதந்திரம், தாராண்மைவாதம், மனித உரிமை, பெண்ணீயம், பால் சமத்துவம், பெண்ணுரிமை போன்ற மேற்குலக கோட்பாடுகளும், கோஷங்களும் மனிதகுல நல்வாழ்வுக்கான சர்வதேச நியமங்களைத் தீர்மானிக்க எத்தகைய தகுதியும் அற்றவை என்பதால் அவற்றை அடிப்படையாகக் கொண்ட முடிவுகளை நாம் உறுதியாக கேள்விக்குட்படுத்த வேண்டும்.
6) இன்று நடைமுறையிலுள்ள முஸ்லிம் தனியார் சட்டக்கோவை குறைபாடுகளுடன்தான் காணப்படுகிறது என்பதால் அதனை மென்மேலும் இஸ்லாமிய ஷரீயத்தின் வரையறைக்குள் கொண்டு வருவதற்கு ஆக்க பூர்வமான நடவடிக்கைகளில் முஸ்லிம் சமூகம் பிறரின் நிர்ப்பந்தங்கள் எதுவுமில்லாது சுதந்திரமாக ஈடுபட வேண்டும்.
7) இன்றைக்கு சர்ச்சையை தோற்றுவித்துள்ள பெண்களின் திருமண வயதெல்லை தொடர்பான பிரச்சனை தொடக்கம் உலகின் அனைத்து பிரச்சனைக்கும் நிரந்தரமானதும், நடைமுறையானதுமான தீர்வு ஷரீயத்தில் மாத்திரம்தான் உள்ளது என்பதை முஸ்லிம் சமூகத்திற்குள்ளும், பொது சமூக வெளியிலும் அறிவார்ந்த ரீதியில் தெளிவுபடுத்த வேண்டும்.
8) இறுதியாக, முழு முஸ்லிம் சமூகமும் தனக்காக அல்லாஹ்(சுபு) இறக்கியருளிய இறைச்சட்டங்களைக்கொண்டு தனது வாழ்வை முழுமையாக வழி நடாத்தினாலேயொழிய இதுபோன்ற சவால்களை இல்லாதொழிக்க முடியாது. முஸ்லிம் தனியார் சட்டம் மாத்திரமல்ல, எமது வாழ்வின் அனைத்துப் பரப்புக்ளும் ஷரீயத்தின் ஆளுகைக்குள்ளேயே நிர்வகிக்கப்பட வேண்டும். அந்த சூழலை நேர்வழிபெற்ற கிலாஃபத்தின் மீள் வருகை ஒன்றினாலேயே உறுதிப்படுத்த முடியும் என்பதால் முஸ்லிம் சமூகத்தின் ஒவ்வொரு அங்கத்தவரும் இத்தகைய சவால்களிலிருந்து படிப்பினை பெற்று அதற்காக பாடுபட முன்வர வேண்டும்.