முஸ்லிம் பெண்களுக்கென விசேடமாக வடிவமைக்கப்பட்ட புர்கினி(இவ்வாடை ஷரீஆவின் வரையறைக்கு உட்பட்டதா இல்லையா என்பது பற்றி நாம் இங்கே ஆராய முன்வரவில்லை) என அழைக்கப்படும் நீச்சல் உடையை பிரான்சின் கடற்கரைகளில் அணிந்து குளிப்பதற்கு அங்குள்ள பல நகரங்களில் தடை விதிக்கப்பட்ட சர்ச்சை பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். ஏறத்தாழ ஒரு மாதத்திற்கு முன்பு Nice நகரில் நீளக்கை கொண்ட மேற்சட்டையை அணிந்திருநத சகோதரி ஒருவரை ஆயுதங்கள் தறித்த பிரான்ஸிய காவற்துறையினர் சுற்றி வளைத்து அதனை வற்புறுத்திக் கழற்ற வைக்கின்ற படங்கள் ஊடகங்களில் வலம் வந்ததையும் பார்த்திருப்பீர்கள். புர்கினிக்கு எதிரான போரை அறிவித்துள்ள மேற்கின் வீரர்கள் அதற்காகச் சொல்கின்ற நியாயங்கள் பல. புர்கினி பெண் ஒடுக்குமுறையின் அடையாளம், அதுவொரு சுகாதாரக் கேடு, அல்லது பிரான்ஸின் Cannes நகரின் மேயர் சொன்னது போல அந்த ஆடை தீவிரவாத குழுக்களுடன் தொடர்புபட்டது என்பதால் அதுவொரு தீவிரவாத அடையாளம் என்பன போன்ற பல வேடிக்கையான காரணங்கள் அந்தத் தடையை நியாயப்படுத்த முன்வைக்கப்பட்;டன.
கட்டுக்கடங்காத ஆழமான சமூக பொருளாதார பிரச்சனைகளால் திக்குமுக்காடும் பிரான்ஸிய சமூகத்தின் கவனத்தை ஒரு துண்டு துணியின் பக்கம் திசை திருப்பியிருக்கும் பிரான்ஸிய அதிகார வர்க்கம், மக்களை, பிரான்ஸின் மதஒதுக்கல் சிந்தனைக்கு(Secularism)ஆபத்து – அதனை இஸ்லாமிய தீவிரவாதம் ஆக்கிரமிக்க அனுமதிக்க கூடாது போன்ற அரசியல் சுலோகங்களுக்கு பின்னால் அணி திரட்டி வழமைபோல அரசியல் சுயலாபம் அடைய நினைக்கின்றது. அரங்கேற்றப்படுகின்ற இந்த நாடகங்களின் உடனடிக்காரணம் 2017 ஆம் ஆண்டில் பிரான்ஸிலே நடைபெறவுள்ள அதிபர் மற்றும் பாராளுமன்றத் தேர்தலுக்கான களத்தை தயார்படுத்துவதே என்பதை சற்று அரசியல் ஆய்வுடன் பார்த்தாலே புரிந்து கொள்ளலாம். அதேபோல இஸ்லாத்திற்கு எதிரான அவர்களின் தொடர்;ந்தேர்ச்சையான சிந்தனை மோதலுக்கும் இச்சம்பவங்கள் வலுச்சேர்த்திருக்கும் என்பதிலும் சந்தேகமில்லை.
புர்கினியின் தடையின் ஊடாக சமூகத்தில் ஐக்கியத்தையும், சமத்துவத்தையும் ஏற்படுத்துவதே எமது நோக்கம் என்று கதை அளக்கும் பிரான்ஸிய அதிகாரிகள் உண்மையில் முஸ்லிம்களை அடையாளமிக்கச் செய்வதற்கும் அல்லது அதிகாரத்தால் அச்சுறுத்தி அடக்கி வைப்பதற்குமே வழிகோலுகிறார்கள் என்பதை அறியாதோர் இருக்க மாட்டார்கள். இஸ்லாம் என்று வருகின்ற போது பிரான்ஸின் மதச் சுதந்திர கோட்பாடு குப்பைத் தொட்டிக்குள் போய்விடும் என்பதை புரிந்து கொள்ள பிரான்ஸிய அரசியலில் ஆழம் காண வேண்டிதில்லை. எனினும் பெரும் மமதையுடனும், வீராப்புடனும் அதை தடை செய்கிறோம், இதை தடுத்து நிறுத்துகிறோம் என எடுக்கப்படுகின்ற இத்தகைய கோழைத்தனமான நடவடிக்கைகள் அவர்கள் தமது அடிப்படையாக ஏற்றுக் கொண்டுள்ள மதச்சார்பற்ற சித்தாந்த்தின் பலகீனத்தையே திரும்பத்திரும்ப நிரூபிக்கின்றன.
அறிவெழுச்சி, விடுதலை பற்றியெல்லாம் பேசும் பிரான்ஸிய சமூகத்திற்கு சுயவிருப்பத்தின்படி அணியப்படும் ஓர் நீச்சல் உடை அச்சுறுத்தலாய் மாறியிருப்பது கேளிக்குரியது. பிரான்ஸில் மதுபானமும், விபச்சாரமும் ஏற்படுத்தாக சமூக அச்சுறுத்தலை உடலையும், தலைமயிரையும் மறைக்கும் ஓர் துணி ஏற்படுத்தி விடுகிறது என்ற வாதத்தை எந்தத்தரத்தில் நிறுத்துவது. மேற்குலகெங்கும் வளர்ந்து வரும் இந்த போக்கை நோக்கும் போது இஸ்லாத்தையும், இஸ்லாமிய ஆடை ஒழுங்கையும் இவர்களின் சடவாதச் சிந்தனைகளால் அறிவார்ந்த முறையில் எதிர்கொள்ள முடிவில்லை என்பதையும், பல்லினச் சமூகங்களை பராமரிப்பதில், குறிப்பாக முஸ்லிம் சனத்தொகையை கையாள்வதில் மேற்குலக மதச்சார்பற்ற விழுமியங்கள் மிகக் கேவலமான தோல்வியை அடைந்துள்ளன என்பதையும், தெளிவாக புரிந்து கொள்ளலாம்.
மக்களை பிழையாக திசைதிருப்புதல்
பாரிய பொருளாதார நெருக்கடி, வாழ்க்கைத் தர வீழ்ச்சி, அதிகரித்து வரும் சமூகச் சிதைவுகள், குற்றச்செயல்களின் அதிகரிப்பு, பிராந்திய செல்வாக்கின் சரிவு நிலை, ஊழல், அரசியல் மோசடி என எல்லாத் திசைகளாலும் மக்கள் சவால்களை எதிர்நோக்கும் போது அவற்றை முறையாக தீர்க்கக்கூடிய தீர்வுகளை முன்வைக்க முடியாத கையாளாகாத்தனத்தை மூடி மறைப்பதற்கும், அதனால் மக்களிடமிருந்து உருவாகக்கூடிய நியாயமான உணர்வெழுச்சிகளை வேறு திசைகளில் விரயமாக்குவதற்கும் இதுபோன்ற போலியான பிரச்சாரங்களும், பீதிகளும் தீய அதிகார வர்க்கத்தினால் தூண்டி விடப்படுகின்றன. இந்தக் கைங்கரியம் இலங்கை அரசியலிலும் புதிதான ஒன்றல்ல. இனவாதம், வகுப்புவாதம் என பலதை வைத்து அரசியல் செய்த இலங்கை அரசியல் தலைமைகள் மேற்குலக மாதிரிகளிலும் சிலதை பிரதி பண்ணி எடுத்துக் கொள்வார்கள் என்பதில் வியப்பேதுமில்லை.
இலங்கையில் இன்னும் புர்கினி பற்றிய சர்ச்சை தோன்றவில்லை. ஏனெனில் எமது கடற்கரைகளில் பரவலாக அணியப்படும் ஒரு ஆடையல்ல அது. எனினும் புர்கா (முகம் உட்பட முழு உடலையும் மறைக்கின்ற பெண்களின் ஆடை) பற்றிய சர்ச்சைகளும், நிகாப்(முகத்திரை) பற்றிய சர்ச்சைகளும் கடந்த சில வருடங்களாக சூடு தணியாத வாதப்பொருளாக இருந்து வருகின்றன. ஆரம்ப காலங்களில் முஸ்லிம் பாடசாலைகள் அல்லாத ஒரு சில பாடசாலைகளில் முஸ்லிம் மாணவிகள் அணிகின்ற சீருடை தொடர்பாக ஆங்காங்கே சில சர்ச்சைகள் பாடசாலை மட்டங்களில் ஏற்பட்டாலும் அது முஸ்லிம்களுக்கு எதிரான ஒரு அறிவார்ந்த தாக்குதலாக முன்னெடுக்கப்படவில்லை. சில இனவாத பாடசாலை நிர்வாகங்களால் மேற்கொள்ளப்பட்ட சேட்டைகள் என்ற தரத்திலேயே அவை நோக்கப்படக் கூடியவை. எனினும் அண்மைக்காலமாக முஸ்லிம் பெண்களின் ஆடை தொடர்பாக எழுந்து வரும் வாதங்களும், ஏற்படுத்தப்படும் நெருக்கடிகளும் இன்று உலகை ஆக்கிரமித்துள்ள இஸ்லாத்திற்கெதிரான பிரச்சாரத்தின் அல்லது இஸ்லாத்திற்கு எதிரான சிந்தனா ரீதியான தாக்குதலின் சாயலைக் கொண்டவை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். எனவே நாம் இது மிகவும் ஆபத்தானதும், முஸ்லிம்களின் அடையாளத்துடனும், அடிப்படைக் கொள்கையுடனும் மோதக்கூடியதுமாகும் என்ற தரத்தில் அதனை அணுக வேண்டும்.
இலங்கையில் இன்று புர்கா மற்றும் நிகாப் பற்றி எழுந்திருக்கும் சர்ச்சைகளும்;, ஏற்கனவே ஹலால் சான்றிதழ் தொடர்பாக எழுந்த பிரச்சனைகளும், தீவிரவாதத்துடன் முஸ்லிம்களை முடிச்சுப்போட எடுக்கப்படும் முயற்சிகளும் வேறொன்றை இலக்கு வைத்து முன்னெடுக்கப்படுகின்ற சாட்டுக்களே ஒழிய அவை உண்மையான நோக்கங்களல்ல. ஒரு வாதத்திற்கு இல்லை, அவை அனைத்தும் இஸ்லாம் பற்றிய புரிந்துணர்வின்மையினால் உள்ளுர் மட்டத்தில் இயல்பாக ஏற்பட்ட சர்ச்சைகள் தான் அல்லது மிகச்சிறிய எண்ணிக்கையான கடும்போக்கு பௌத்த மதத்தீவிரவாதிகளாலும், தேசியவாதிகளாலும் வாக்கு வங்கி அரசியலுக்காக தூண்டப்பட்ட பிரச்சனைகள்தான் என எவரேனும் வாதாடினால் கூட அவர்கள் ஒரு விடயம் குறித்து நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். அதாவது இஸ்லாத்திற்கும், முஸ்லிம்களுக்கும் எதிராக தோற்றம் பெறுகின்ற இந்த விசமப் பிரச்சாரங்கள் எதற்காக உற்பத்தியாகியிருந்தாலும் கூட அதன் வளர்ச்சிப்போக்கு சர்வதேச ரீதியாக இஸ்லாமிய சித்தாந்ததிற்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ள மோதலுக்கும், தாக்குதலுக்கும் அணி சேர்ப்பதாகவே அமையும். அமெரிக்கா போன்ற ஏகாதிபத்திய சக்திகளின் சந்தையாகவும், கசாப்புக்கடையாகவும் போறிப்போயிருக்கும் இன்றைய உலகில் இஸ்லாத்திற்கெதிரான போராட்டம் அவர்களின் ஜீவமரணப் போராட்டமாகும். அதிலும் குறிப்பாக இஸ்லாமிய சிந்தனை மற்றும் அடையாளத்திற்கு எதிரான அறிவார்ந்த தாக்குதல் அவர்களுக்கு பிராணவாயுவை ஒத்தது. இந்த சிந்தனைப்போர் சர்வதேச அமைப்புகளினூடாகவும், தேசிய அரசுகளினூடாகவும், சர்வதேச ஊடகங்களினுடாகவும், சமூகவளைத்தளங்களினூடாகவும் சர்வதேசமயப்படுத்தப்பட்டு விட்டது. எனவே அதன் தாக்கம் இலங்கையில் ஊடுருவுவதும், அதன் சாயல் இலங்கைக்குள் நடக்கும் கருத்தாடல்களை ஆக்கிரமிப்பதும் தவிர்க்க முடியாதவை.
இஸ்லாமோபோயியா இன்று மிக இலாபகரமான வியாபாரமாகவும், வாக்கு வங்கி அரசியலில் துருவச் சிந்தனைப் போக்குக் கொண்டோர்களை தம் பக்கம் இலகுவாக அணிதிரட்ட பயன்படுத்தப்படும் சிறந்த மூலோபாயமாகவும் மாறியிருக்கிறது. எனவே இலங்கையிலும் இரு பெரும் தேசிய கட்சிகளாகட்டும், கடும்போக்கு பௌத்த கோஷ்டிகளாகட்டும் அல்லது தமிழ் அரசியல் முகவர்களாகட்டும் இலாபம் கிட்டுமானால் எந்நேரத்திலும் அதனை கையில் எடுத்து தலையில் சூடிக்கொள்வார்கள் என்பதை நாம் மறந்து விடக்கூடாது. இச்செயலுக்கு சர்வதேச வல்லாதிக்கச் சக்திகளின் ஆசிர்வாதமும், வெகுமதிகளும் கிட்டும் என்பதையும் அவர்கள் அறியாதவர்களல்ல.
இந்தப்புரிதலை மனதில் நிறுத்தியவர்களாக இலங்கையில் அண்மையில் புர்காவை தடை செய்யவேண்டும் என்ற கோரிக்கை தேசிய பாதுகாப்பு பேரவை (National Security Council) மட்டத்தில் பரிந்துரைக்கப்பட்ட சம்பவத்தை நாம் ஆராய்ந்து பார்ப்போம். தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலானது, முஸ்லிம் சமூகம் தீவிரவாதச் சிந்தனைகளால் மூளைச்சலவை செய்யப்படுகிறது என்ற நியாயங்களை முன்வைத்து (கடந்த மாதம் இடம்பெற்ற உயர்) தேசிய பாதுகாப்பு பேரவை கூட்ட்த்தில், புர்கா இலங்கையில் தடை செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. மஹிந்த அரசின் உளவுப் பிரிவின் முக்கிய கிளையொன்றில் உயர் பதவி வகித்த அதிகாரி ஒருவரினூடாகவே இந்த முன்மொழிவு முன்வைக்கப்பட்டதாக கூறப்பட்டது. இலங்கையை பொருத்தவரையில் புர்காவை ஒரு தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தலாகக் கூறுமளவுக்கு ஒன்றும் நடந்ததாகத் தெரியவில்லை. இது வரை புர்கா அணிந்த எவரும் இலங்கைக்குள் தாக்குதல் நடத்த வில்லை. வன்முறைகளில் ஈடுபடவில்லை. இதுவரை சரியாக அடையாளம் வெளியிடப்படாத ஒருவர் புர்கா அணிந்து கொண்டு வங்கிக் கொள்ளை ஒன்றில் ஈடுபட முயற்சித்தார் என்ற செய்தி மாத்திரம் சில காலத்திற்கு முன்னர் வந்திருந்தது. அவ்வளவுதான். ஒருவர் செய்ய முயற்சித்து பிடிபட்ட ஒரு திருட்டுச் சம்பவத்தை தேசிய பாதுகாப்புப் பிரச்சனையாக கணிசமான காலத்திற்கு பின்னர் இதுபோன்ற உயர் பேரவையில் விவாதிக்கும் தேவை ஏன் உருவானது என்பதுதான் விசித்திரமானது. எனினும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்த யோசனையை சில சந்தர்ப்பவாத காரணங்களைக் கூறி புறம் தள்ளியுள்ளார். கடந்த தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணிக்கு முஸ்லிம்கள் அளித்த வாக்குகளே தாம் ஆட்சிக்கு வருவதற்கு அதிகம் உதவின. எனவே புர்காவை தடை செய்வதன் ஊடாக முஸ்லிம்களை எம்மை விட்டு தூரப்படுத்தி விடமுடியாது என்று அவர் வாக்கு வங்கி வாதத்தை முன்வைத்துள்ளார்.
அண்மிய வரலாற்றில் இந்த புர்கா மற்றும் நிகாபிற்கு எதிரான தடையை முதன்முதலாக பிரான்ஸ்தான் அமூலுக்கு கொண்டு வந்தது. 2004 இல் பாடசாலைகளில் மாத்திரம் பிரயோகிக்கப்பட்ட இந்தத்தடை 2011 ஆம் ஆண்டிலிருந்து நாடு தழுவிய தடையாக மாறியது. பிரான்ஸைத் தொடர்ந்து சுவிஸ், நெதர்லாந்து, ஜேர்மனி என மேற்குலக நாடுகள் பலவற்றில் சில ஏற்ற இறக்கங்களுடன் இந்த தடை அறிமுகமானது. நிதானமாகவும், நரித்தனமாகவும் காய்களை நகர்த்தும் பிரித்தானியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் இத்தடை குறித்து தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வந்தாலும் இன்று வரை அது முற்றாக தடை செய்யப்படவில்லை.
மேற்குலகில் முகத்திரைக்கு எதிரான இந்த நோய் பரவிக்கொண்டிருந்த காலகட்டத்தில்தான் பல நாசகார நோக்கங்களுடன் உருவாக்கப்பட்ட பொதுபலசேனா போன்ற அமைப்புக்கள் இஸ்லாத்திற்கு எதிரான விசமப் பிரச்சாரங்களை மஹிந்த அரசின் பூரண உத்துழைப்புடன் மேற்கொண்டு வந்தன. அது 2013 ஆம் ஆண்டில் புர்கா தடை விவகாரத்தை தனது கையில் எடுத்தது. அதற்கெதிராக ஊடகங்களில் பேசியது. பிரச்சாரம் செய்தது. புர்காவுக்கு எதிராக ஆன்லைன் மனுவொன்றையும் தாக்கல் செய்து அன்;று பாதுகாப்புச் செயலாளராக இருந்த கோத்தபாய ராஜபக்ஷவிடம் அனுப்பி வைத்தது. அதிலே பொதுபலசேனாவின் நிறைவேற்றுச் செயலாளர் திலந்த விதானகே,
“அரசாங்கம் புர்காவை தடை வேண்டும் என்று நாங்கள் கருதுகின்றோம். அது தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலானது. இன்றுவரை இந்த நாடு ஒரு உத்தியோகபூர்வ பௌத்த நாடாகவே இருந்து வருகிறது. எனவே அது ஏனைய சித்தாந்தங்களை திருப்த்திப்படுத்துவதில் அதிக தூரம் செல்லக்கூடாது. இந்த புர்கா ஒரு மதச் சின்னமல்ல. சில இஸ்லாமிய நாடுகளில் கூட இது தடைசெய்யப்பட்டுள்ளதால் இது பெண் அடக்குமுறையின் சின்னமாகவே பிற நாடுகளால் பார்க்கப்படுகிறது.” என்று வெளிப்படையாகவே எழுதியிருந்தார்.
முதலாளித்துவத்திற்கும், இஸ்லாத்திற்கும் இடையிலான அறிவார்ந்த போராட்டத்தின் விளைவால் எங்கேயோ தோன்றிய ஒன்றை உள்ளுரில் பீதி அரசியலை வைத்து மக்களை திசை திருப்பி ஆட்சியை தக்க வைக்க யாரோ பயன்படுத்த, அதற்கு வங்குரோத்து அரசியல் நிலையில் இருந்த யாரோ அடியாட்களாய் மாற இலங்கையிலே அது ஒரு பெரிய பிரச்சனைபோல அன்று விவாதிக்கப்பட்டது. இன்று அது மீண்டும் வாதப்பொருளாக மாறியிருக்கிறது. குறிப்பாக முஸ்லிம் சமூகத்தினுள். முஸ்லிம் தலைமைகளும், உலமாக்களும் பொதுவாழ்வில் முஸ்லிம் பெண்களின் ஆடை எவ்வாறு அமைய வேண்டும் என்ற தலைப்பில் தீவிரமான கருத்தாடல்களில் ஈடுபடுவதைக் காண முடிகிறது.
முஸ்லிம் தரப்புக்களால் முன்வைக்கப்படுகின்ற பிரதான கருத்துக்கள்
ஒரு பெண்ணின் முகம் உட்பட உடலின் அனைத்துப் பாகங்களும் மறைக்கப்பட வேண்டும்; (அவ்ரா) என்ற கருத்தை பாரம்பரியமாக கொண்டவர்கள் பொதுவாழ்வில் பெண்கள் முகத்தை மூடுவது கட்டாயமானது (வாஜிபானது). அதனை அகற்றச் சொல்வது பாவமானது என்ற கருத்தை சொல்லி வருகின்றனர். அண்மையில் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா கூட அதுதான் தனது உத்தியோகபூர்வ நிலைப்பாடு எனது அறிவித்திருந்தது. இத்தகையவர்களின் கருத்து ஷரீஆவில் பலமானதா? பலகீனமானதா? என்பதை ஆராய்வதல்ல இங்கே முக்கியமானது. மாறாக அந்தக் கருத்து ஷரீஆவின் வரையறைக்குட்பட்டதா? என்ற கேள்விக்கு விடையளிப்பதே முக்கியமானதாகும். அவ்வாறு ஆராய்கின்ற போது முகத்தையும் மூட வேண்டும் என்ற கருத்தும் ஓர் இஸ்லாமியக் கருத்தாக காலங்காலமாக இருந்து வந்துள்ளதும், அதனை சில புராதன உலமாக்கள் உட்பட நவீன உலமாக்களும் கூறி வந்திருக்கின்றனர் என்ற உண்மையும் எமக்குப் புலப்படுகின்றது. எனவே இரண்டு வேறுபட்ட ஷரீஆ நிலைப்பாடுகள் உருவாகின்ற சந்தர்ப்பங்களில் முறையான இஜ்திஹாத்தின் ஊடாக பெறப்பட்ட இரண்டு நிலைப்பாடுகளில் பலமானதாக நாம் கருதுகின்ற ஒன்றை தேர்வு செய்வது எவ்வளவு முக்கியமோ அதுபோலவே மற்றைய இஜ்திஹாத்தை பலமெனக்கருதி ஏற்றுக் கொள்கின்ற மக்களின் நிலைப்பாட்டை நாம் மதித்து நடக்க வேண்டும் என்பதும் முக்கியமானதாகும். இதுதான் இஸ்லாமிய பாரம்பரியமாகும். எனவே பெரும்பாலான அறிஞர்களின் நிலைப்பாட்டின்படி முகத்திரை அணிவது என்பது பலகீனமான கருத்து என்பதை முன்வைத்து முகத்திரையை அணியச்சொல்பவர்களை கொச்சைப்படுத்துவது இஸ்லாமிய அணுகுமுறை கிடையாது. மறுபக்கத்தில் முகத்திரையை அணிய வேண்டும் என்ற கருத்து பெரும்பாலான அறிஞர்களால் மிகப்பலகீனமான கருத்து என சொல்லப்பட்டுள்ளமை குறித்த எவ்வித பிரக்ஞையுமற்று அல்லது அந்த நிலைப்பாடுகளை மூடிமறைத்து தாம் பாரம்பரியமாக பின்பற்றிவரும் நிலைப்பாடுதான் சரியானதாக இருக்கும் என்ற ஊகத்தில் முகத்தை மறைக்கச் சொல்வது உண்மைக்கு புறம்பானதாகும். மேலும் முகத்தை மூடத்தேவையில்லை எனச் சொல்பவர்களை பலகீனர்களாக அல்லது, சமூக நிர்ப்பந்தத்திற்காக சோரம்போனவர்களாக சித்தரிப்பதும் தவறானதாகும்.
எமது சமூகத்தில் தம்மை முற்போக்குவாதிகள் எனக்கருதிக்கொள்ளும் இன்னும் சிலர் இருக்கின்றனர். பெண்ணீயத்தை, அல்லது பெண்ணியல் வாதத்தை பெண் விடுதலைக்கான ஓர் புரட்சிகர பாதை எனக் கருதும் அல்லது அந்தச் சிந்தனைகளால் பாதிப்புற்றிருக்கும் இவர்கள் பெண்களை முகத்திரை அணியச் சொல்வதையும் ஆணாதிக்க மனோநிலையையும் முடிச்சுப் போட முயற்சிக்கின்றனர். இவர்கள் முகத்திரை என்பது ஒரு ஓடுக்குமுறை அதனை இஸ்லாத்தின் பெயரால் சொல்வது, செய்வது அறியாமையும், அடக்குமுறையுமாகும் என வாதிடுகின்றனர். எமது ஆணாதிக்க பாரம்பரியத்தை விட்டுக் கொடுக்க மனமில்லாமல் ஒரு பலகீனமான கருத்தை தூக்கிப்பிடித்துக் கொண்டு பல்லின சமூகத்தின் முன்னிலையில் நாம் ஏன் பெண் ஒடுக்குமுறையாளர்களாய் நிற்க வேண்டும் என இவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
இந்தக் கேள்வியே முதலில் பிற்போக்கானது. ஏனெனில் முகத்திரைக்கு எதிராக கோஷம் எழுப்புவர்களின் உள்நோக்கம் பற்றிய எவ்வித பிரக்ஞையும் அற்று எம்மை பிறர் பெண் ஒடுக்குமுறையாளர்கள் என குற்றம் சுமத்திவிடக்கூடாது என அஞ்சியபடி எதிர்வினையாற்றுவது எவ்வாறு முற்போக்கானதாக அமையும். இஸ்லாத்தை ஒரு பக்கத்தில் வைத்துவிட்டு பார்த்தால் கூட, முகத்திரையை எதிர்க்கின்றவர்களின் அடிப்படைகளான தனி மனித சுதந்திரம் (Personal Freedom), மனித உரிமைகள்(Human Rights) போன்ற அளவுகோள்களால் அளந்தால் கூட ஒரு பெண் முகத்திரை அணிவதை தடுப்பதற்கு யாருக்கும் உரிமை கிடையாது என்றல்லவா அவை சொல்லும். மேலும் பிற சமூகக் கலாசாரங்களின் விளைவாலும், இஸ்லாம் பற்றிய சரியான புரிதல் இன்மையாலும் ஆணாதிக்க மனோநிலை எமது சமூகத்தையும் பாதித்திருக்கலாம் என்பதை நாம் மறுக்கவில்லை. எனினும் அந்த ஆணாதிக்க மனோநிலையை எதிர்ப்பதற்கு இஸ்லாத்தைப்பற்றிய சரியான புரிதலை சமூகத்தில் விதைப்பதே ஏற்புடுடையது. மாறாக தீய அரசியல் நோக்கங்களுக்காக வாதப்பொருளாக மாற்றப்பட்டிருக்கும் முகத்திரை பற்றிய சர்ச்சையை அரசியல் ரீதியாக சரியாக அணுகாமல், முகத்திரை அணிவது பலகீனமான கருத்து, அதனை இன்றும் நாம் சமூகத்தில் பாதுகாக்க நினைப்பது எமது ஆணாதிக்க மனோநிலையின் விளைவே என தவறான தளத்தில் நின்று வாதாடி ஒரு இஜ்திஹாத்திற்கு(அது பலகீனமாக இருந்தால்கூட) எதிராகப் பேசுவது மிகப்பெரிய குற்றமாகும்.
மனித உரிமை செயற்பாட்டாளர்கள் போராடுவதை ஒத்த ஆடைத்தேர்வு என்பது தனிமனித உரிமை, எனவே முகத்திரையை அணிவதும், அணியாதிருப்பதும் ஒரு பெண்ணின் தனி மனித உரிமை அல்லது மதச் சுதந்திரம் – எனவே அதிலே யாரும் தலையிடுவதற்கு அனுமதிக்க முடியாது என்ற வாதத்தை முன்வைப்பதும் அந்த அடிப்படையில் அந்த உரிமையை பாதுகாப்பதற்காக போராடுவதும்கூட ஆபத்தானதாகும். தாராண்மைவாதம் (Liberalism), சுதந்திரம் (Freedom), மனித உரிமை (Human Rights) போன்ற மேற்குலகப் பெறுமானங்களைக் கொண்டு முஸ்லிம்கள் தமது உரிமைகளுக்காக போராடினால் அது வேறுபல கோளாறுகளுக்கு ஏதுவாக அமைந்து விடும். உதாரணமாக தனிமனித சுதந்திரத்தை எமது அளவுகோளாக+ நாம் எடுத்துக்கொண்டால் அதன்படி புர்கினி (Burkinii) அணிவது எவ்வாறு தனிமனித சுதந்திரமோ அவ்வாறே பிக்கினி (Bikini) அணிவதும் தனிமனித சுதந்திரமே என்ற வாதத்தை நாம் ஏற்றுக்கொண்டவர்கள் ஆகிவிடுவோம். அந்த நிலைப்பாடு எவ்வளவு அபத்தமானது. மாறாக நாம் நிகாப் அணிவதும், அணியாதிருப்பதும் அல்லாஹ்(சுபு) பெண்களின் பொதுவாழ்விற்கான ஆடையாக எதனைத் தேர்வு செய்துள்ளான் என்பதை புரிந்து கொண்டு அதன்படி கருமமாற்றுவதற்காகவே ஒழிய அது எனது தேர்வுச் சுதந்திரம், மனித உரிமை என்ற அடிப்படைகளில் அல்ல. அவ்வாறு செய்வது அனுமதிக்கப்பட்டதுமல்ல.
மேலும் செல்வாக்குமிக்க பல தலைமைகளும், அறிஞர்களும் பின்வருமாறு பேசுகிறார்கள். இது பல்லின சமூகங்கள் வாழ்கின்ற நாடு, இந்த நாட்டில் முஸ்லிம்கள் வெறும் சிறுபான்மையினர் மாத்திரமே. எனவே இந்த நாட்டு சூழலைக் கருத்திற் கொண்டும், முஸ்லிம் சமூகத்திற்கு இருக்கின்ற நெருக்கடிகளைக் கருத்திற் கொண்டும் முகத்திரை விடயத்தில் நாம் விட்டுக்கொடுப்புடன் நடப்பது ஒட்டுமொத்த சமூகத்தின் நலனுக்கும் சாதகமானது, முகத்தை மூடாதிருப்பதுதானே வலுவான கருத்தாக முன்வைக்கப்படுகிறது. எனவே இஸ்லாமிய அழைப்பின் முக்கியத்துவத்தையும், ஒட்டு மொத்த சமூக நலனையும் கருத்திற் கொண்டு முகத்திரை அணிவது தொடர்பாக நாம் கொண்டுள்ள பாரம்பரிய கருத்தில் தளர்வை ஏற்படுத்துவது பற்றி சிந்திப்பது சிறந்தது என்ற வாதம் இவர்களால் முன்வைக்கப்படுகிறது.
இவர்கள் முன்வைக்கின்ற முழு வாதமும், சிறுபான்மை, பல்லின சமூகம், சகவாழ்வு, நல்லிணக்கம் போன்ற சமூக நீர்ப்பந்தங்களின் ஊடாக பிக்ஹை அணுக வேண்டும் என எம்மிடம் கோருகிறது. எனினும் பிக்ஹ் அவ்வாறு அணுகப்படக்கூடியதல்ல. மாறாக மனிதனின் ஒவ்வொரு செயல் தொடர்பாகவும் அல்லாஹ்(சுபு) தனது மிகத்துல்லியமான, தீர்க்கமான நிலைப்பாட்டை தனது வஹி மூலம் அறிவித்துள்ளான். எனவே அந்த வஹியில் குறித்த செயல் பற்றி அல்லாஹ்(சுபு) என்ன தீர்ப்பளித்துள்ளான் என்பதை எவ்வித நிர்பந்தமும் இல்லாமல் அறிந்து கொள்வதே பிக்ஹை நாம் யாப்பதின் நோக்கமாகும். அவ்வாறு சரியான இஜ்திஹாத்தினூடாக எடுக்கப்படுகின்ற பிக்ஹ்கள் எதுவாக இருந்தாலும் அதிலே எமக்கு எது பலமானதாக தெரிகிறதோ – அதாவது அந்த விடயத்தில் இதுதான் அல்லாஹ்(சுபு)வின் தீர்ப்புக்கு அண்மித்ததாக இருக்க முடியும் என நாம் எதனைக் கருதுகிறோமோ அதனை மனமுரண்பாடில்லாது பின்பற்றுவதே ஒவ்வொரு முஸ்லிமின் கடமையாகும். மாறாக சமூக நிர்ப்பந்தத்திற்காக ஒன்று அல்லாஹ்(சுபு)வின் கட்டளையாக இருக்க முடியாது என்று தெரிந்து கொண்டே கண்ணை மூடிக்கொண்டு பின்பற்றுவது எவ்விதத்திலும் ஷரீயத்தை பின்பற்றுவது ஆகாது. அதாவது முகத்திரை அணிவது கடமை என்பதே சரியான இஜ்திஹாத் என ஏற்றுக்கொள்பவர்கள் சமூக நிர்பந்தத்திற்காக(பலமான கருத்து என்பதற்காக அல்ல) இன்னுமொரு இஜ்திஹாத்திற்கு தாவி விடுவது மிகப்பிழையான பாதையாகும். அவ்வாறு செய்வது இறுதியில் மனோவிச்சையை பின்பற்றுவதாகவே அமையும்;. எனவே இத்தகைய தவறான வழிமுறை நோக்கி மக்களை வழிநடாத்தும் போக்கினை சமூகத்தலைமைகள் கைவிட வேண்டும்.
முஸ்லிம் பெண்: இஸ்லாமிய சித்தாந்தத்தின் பொது அடையாளம்
பிரான்ஸில் தோன்றிய புர்கினிக்கெதிரான தடையாக இருக்கலாம், இலங்கையில் தோன்றியிருக்கும் புர்காவுக்கு எதிரான தடை பற்றிய முன்மொழிவாக இருக்கலாம் அவை அடிப்படையில் ஒரு பெண் அணிகின்ற ஆடை குறித்து எழுந்துள்ள சர்ச்சைகள் கிடையாது. மாறாக இன்று உலகை ஆதிக்கம் செலுத்தி வரும் முதலாளித்துவ சித்தாந்தத்தினது சமூக ஒழுங்கை சவால் விடுகின்ற இஸ்லாமிய சித்தாந்தினது அடையாளங்களாகவே அவை பார்க்கப்படுகின்றன. டொனி பிளயர் பிரித்தானியாவின் பிரதமராய் இருந்தபோது நிகாப் என்பது “பிரிவினையின் அடையாளம்” எனத் தெரிவித்த கூற்று மேற்கின் இந்தப் பார்வையை தெளிவாகப் பிரதிபலித்தது. இவ்வாறு சமூக வாழ்வில் முஸ்லிம் பெண்ணுக்கு அல்லாஹ்(சுபு) விதித்திருக்கின்ற ஆடை ஒழுங்கு இஸ்லாத்தின் வெளிப்படையான அடையாளமாக, இஸ்லாமிய சித்தாந்தத்தின் நேரடி பிரதிநிதித்துவமாக இஸ்லாத்தின் எதிரிகள் கண்களுக்குத் தெரிகிறது. எனவே அத்தகைய அடையாளங்கள் மீதான தாக்குதல்களைத் தொடுப்பது சித்தாந்தங்களுக்கிடையிலான அறிவார்ந்த போரிலே (Intellectual War Between Ideologies) ஈடுபட்டுள்ள தரப்புக்களுக்கு தவிர்க்க முடியாதது. எனவே எதுவெல்லாம் வணக்க வழிபாடுகளுக்கும், தனிப்பட்ட வாழ்வுக்கும் வெளியே பொதுவாழ்வில் இஸ்லாத்தை பிரதிநிதித்துவப்படுத்துமோ அவற்றையெல்லாம் எதிர்ப்பதும், கொச்சைப்படுத்துவதும், கேள்விக்குட்படுத்துவதும் அவர்களின் போராட்ட வழிமுறையாகும். அதனால்தான் முஸ்லிம் பெண்கள் பொதுவாழ்வில் அணிகின்ற ஆடைகள் தொடங்கி, மஸ்ஜித்களின் மினராத்களை உயர்த்திக் கட்டுவது, ஒலிபெருக்கியில் அதான் சொல்வது, ஹலால் இலாஞ்சினைகள் பொரிப்பது வரைக்கும் அவர்களுக்கு பிரச்சனையான விடயங்களாகத் தெரிகின்றன. இந்த சிந்தனை யுத்தத்தின் பரந்த வடிவங்கள்தான் ஷரீஆவுக்கும், ஹுதூதுக்கும், ஜிஹாத்திற்கும் கிலாஃபத்திற்கும் எதிரான முன்வைக்கின்ற வாதங்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
நீங்கள் யார்? உங்களது உண்மை அடையானம் என்ன? நீங்கள் யாருக்கு அல்லது எதற்கு விசுவாசமாய் இருக்கிறீர்கள்? நாட்டின் பரந்த சமூதாயம் ஒரு பொது அடையாளத்திற்கு வருகின்றபோது நீங்கள் மட்டும் ஏன் விலகி நிற்கின்றீர்கள்? நாட்டிலே பொதுவாக நாங்கள் கட்டிப்பாதுகாக்க நினைக்கின்ற விழுமியங்களுக்கும், கலாசாரத்திற்கும் நீங்கள் மட்டும் ஏன் குறுக்கே நிற்கின்றீர்கள்? என்ற கடினமான கேள்விக்கணைகளைத் தொடுத்து எமது உண்மையான விழுமியங்களையும், அடையாளங்களையும் தீவிரமாகப் பற்றிப்பிடிப்பதன் ஊடாக நாம் தனிமைப்படுத்தப்பட்டு விடுவோம் என்ற மானசீகமான அழுத்தத்தை ஏற்படுத்தி முஸ்லிம்களே தம்மைதாம் தணிக்கை செய்கின்ற அல்லது தமது நிலைப்பாடுகளிலிந்து தளர்வை ஏற்படுத்துகின்ற நிர்பந்தத்தை உருவாக்குவது இவர்களின் அடிப்படைக் குறிக்கோளாகும். இந்த சிந்தனைப்போரிற்கு சமரசம் செய்யாது முகம்கொடுக்கக்கூடிய முஸ்லிம்களை கடும்போக்காளர்களாகவும், தீவிரவாதிகளாகவும் சித்தரித்து ஓரம்கட்டி வேரருக்கின்ற பணிகளில் ஈடுபடுவது இவர்களின் அடுத்த இலக்காகும். முன்பு தமது தீவிர மதஒதுக்கல் சிந்தனைக்குள் ஏனைய மதச் சமூகங்களை எவ்வாறு மூழ்கடித்தார்களோ அதேபோல இத்தகைய கடுமையான சமூக அழுத்தக்களை உருவாக்கி முஸ்லிம் உம்மாவையும் சடவாதிகளாக மாற்றும் முனைப்புடன் அவர்கள் இயங்குகிறார்கள்.
இந்த பலமான நிர்பந்நத்திற்கு மத்தியில் முக்கிய மூன்று பிரிவினர்கள் எமது சமூகத்தில் உருவாகுவார்கள். முதலாவது, உலகாயாத ரீதியில் மாத்திரம் சிந்தித்து, தமது சுயத்தை முற்றாக இழந்து, பரந்த சமூகத்தையும், அதிகார வர்க்கத்தையும் திருப்த்திப்படுத்தி முன்னேற நினைக்கின்ற தரப்பினர். இவர்களை நாம் விலைபோனவர்கள் என்று அழைக்கலாம். இரண்டாது பிரிவினர், தமது சுயத்தையும் பாதுகாக்க வேண்டும் என்ற ஆதங்கத்துடனும், அதேநேரத்தில் பரந்த சமூகமும், அதிகார வர்க்கமும் தம்மை தனிமைப்படுத்திவிடக்கூடாது என்ற பதட்டத்துடனும், தமது சுயத்தில் தளர்வை ஏற்படுத்தி பொது நீரோட்டத்துடன் சமாந்தரமாக பயணிக்க நினைக்கின்றவர்கள். இவர்கள் தம்மை யதார்த்தவாதிகள் அல்லது நடைமுறைவாதிகள் என எண்ணிக்கொள்கிறார்கள். எனினும் உண்மையில் அவர்கள்தான் தோல்வி மனோபாவத்தின் விளைவுகள். இந்தப்பிரிவினரைத்தான் எமது சமூகத்தின் தலைமைகள் தொடங்கி பொதுமக்கள் வரையும் அதிகளவில் காண்கிறோம். மூன்றாவது பிரிவினர், தமது சுயத்தை மிகத்தெளிவாக வரையறுத்து, அதனை பிறரின் எத்தகைய நிர்ப்பந்திற்காகவும் விட்டுக்கொடுக்காது, அதனால் உருவாகின்ற சிந்தனா ரீதியான போராட்டத்தின் ஊடாக தம்மீது அழுத்தம் செலுத்த நினைக்கின்றவர்;களுக்கு எதிராக, ஓர் சிந்தனைப்போரினை தொடுத்து, அவர்களின் சிந்தனையையே கேள்விக்குட்படுத்தி, மாற்றீடுகளை முன்வைக்கின்ற பிரிவினர். இவர்களை நாம் கொள்கைவாதிகள் அல்லது இலட்சியவாதிகள் என்று அழைக்கலாம். ஆனால் ஏனைய அனைவரும் இவர்களுக்கு தீவிரவாதப்பட்டம் இலகுவாகச் சூட்டி விடுவார்கள். இஸ்லாத்தை மாத்திரம் சத்தியத்தூதாகவும், ஏனைய அனைத்தையும் தாஹுத்திய சிந்தனையாகவும் கருதுகின்ற, இஸ்லாத்தை இந்த உலகத்திற்கு மாற்றீடாக முன்வைப்பதும், அதனை நிலைநாட்டுவதும் ஒவ்வொரு முஸ்லிம் சமுதாயத்தினதும் கடமை என்பதை ஏற்றுக்கொண்ட அனைவரும் இந்த மூன்றாவது பிரிவில் தான் இருக்க வேண்டும் என்பதே இஸ்லாத்தின் எதிர்பார்ப்பாகும். அது முஸ்லிம் உலகாய் இருந்தாலும் சரி, மேற்குலகாய் இருந்தாலும் சரி, எமது தேசமான இலங்கையாய் இருந்தாலும் சரியே.
எனவே இன்றைய முதலாளித்துவ உலக ஒழுங்கிற்கு எதிராகவும், மதச்சார்பற்ற தாராண்மைவாத கொள்கைக்கு எதிராகவும் தனித்து நின்று போராடி வருகின்ற இஸ்லாமிய சிந்தாந்தத்தை அதன் அகீதா மட்டத்திலிருந்து ஆட்டங்காணச் செய்கின்ற நுட்பமானதும், தீவிரமானதுமான ஒரு சிந்தனா ரீதியான போர் எம்மீது தொடுக்கப்பட்டுள்ளது என்பதை புரிந்து கொள்ளாது நாம் எதிர்நோக்கும் சவால்களை எதிர்கொள்ள முடியாது. மேலும் வீரியத்தில் வேறுபாடிருந்தாலும் அந்தச் சிந்தனைப்போரின் தாக்குதலுக்கு இலங்கை முஸ்லிம்கள் மாத்திரம் விதிவிலக்கானவர்களல்ல என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். இன்று இலங்கையில் இத்தகைய சிந்தனைப்போரின் பிரதிபலிப்பாக புர்காவுக்கும் நிகாபுக்கும் எதிராக எழுப்பப்பட்டிருக்கும் கேள்வியை ஒரு பிக்ஹ் பிரச்சனையாக மாத்திரம் அணுகும் போக்கு இந்த யதார்த்தத்தை உணராததன் அல்லது அலட்சியப்படுத்தியதன் விளைவாவே ஏற்படுகின்றது. வேதனையான விடயம் என்னவென்றால் எம்முள் சிறந்த சிந்தனையாளர்கள் என்று சமூகம் ஏற்றிருக்கின்ற தலைமைகளும், அறிஞர்களும் கூட அந்தப்பாதையையே தேர்ந்தெடுத்துள்ளதாகத் தெரிகின்றது.
இந்நிலையில் ஒரு மாற்றம் தோன்ற வேண்டும். நேற்று ஹாலால் உணவு, இன்று புர்கா நாளை வோறொன்று என இவற்றிற்கு பின்னால் அலைக்கழிந்து, அவற்றை பாதுகாப்பதை எமது முழுமுதல் போராட்டமாக மாற்றி எமது சக்திகளை விரயமாக்க நினைக்கின்ற எதிரிகளின் சூழ்ச்சிகளை புரிந்து கொண்டு நாம் சுதாகரித்துக் கொள்ள வேண்டும். இத்தகைய அழுத்தங்களால் நாம் ஏற்றுக்கொண்டுள்ள அறிவார்ந்த சித்தாந்தமான தீனுள் இஸ்லாத்தை பிறர் கேள்விக்குட்படுத்த நாம் அனுமதித்துவிடக்கூடாது. உண்மையில் பிரான்ஸின் புர்கினிக்கு எதிரான தாக்குதலோ, இலங்கையில் புர்காவுக்கு எதிரான தாக்குதலோ முஸ்லிம்களின் அடையாளத்திற்கு எதிரான தாக்குதல்களாகும், அவை அவர்களின் மதஒதுக்கல் சிந்தனைகளை எம்மீது பலவந்தமாக திணிக்கின்ற முயற்சிகளாகும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். எமது அடையாளத்திற்கு எதிரான தாக்குதல்கள் அனைத்தும் எது எமக்கு தனித்துவமான அடையாளத்தை தந்தததோ அந்த இஸ்லாமிய அகீதாவுக்கு எதிரான தாக்குதல்கள் என்பதை நாம் ஆழமாக உணர வேண்டும்.
இந்தப்புரிதலும், அரசியல் விழிப்புணர்வும் எம்மில் வளருமானால், எப்போதும் தோல்வி மனப்பான்மையுடனும், தற்பாதுகாப்பு உணர்வுடனும் மாத்திரம் நாம் வாழப்பழக மாட்டோம். அறிக்கைகள் விடமாட்டோம். மாறாக அசத்தியத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அவர்கள் எம்மீது சிந்தனை யுத்தத்தை தொடுப்பதற்கு முன்னால் சத்தியத்தின் பக்கம் நிற்கின்ற நாம் அவர்கள் மீது எமது சிந்தனைப்போரைத் தொடுப்போம். அதனூடாக அவர்களின் அகீதாவையும், அதன் விழுமியங்களையும் கேள்விக்குட்படுத்துவோம். மேலும் காலத்துக்கு காலம் அவர்கள் ஏற்படுத்துகின்ற இத்தகைய நெருக்கடிகளை சாதகமானதாக பயன்படுத்தி உண்மையில் அவர்களின் வழிகாட்டுதலா? அல்லது இஸ்லாத்தின் வழிகாட்டுதலா? மனிதகுலத்திற்கு ஏற்றது என்பதை சமூகவெளியில் ஒரு வாதப்பொருளாக மாற்றுவோம். அவர்களின் சிந்தாந்தங்களுக்குக்கூட அவர்கள் விசுவாசமானவர்கள் அல்ல என்பதையும், மதச்சுதந்திரம், மனித உரிமைகள் பற்றி பேசுகின்ற அவர்களின் இரண்டை வேடத்தையும் தோலுரித்துக் காட்டுவோம்.
மேலும் இத்தகைய தடைகளாலும், போலிப்பிரச்சாரங்களாலும் உலகமெங்கும் முஸ்லிம்கள் குறி வைக்கப்பட்டாலும் இஸ்லாமிய சித்தாந்தம் தனக்கு கீழே வாழ்கின்ற அனைத்து குடிமக்களது நம்பிக்கைகள், வழிபாடுகள், விழுமியங்கள் மற்றும் வணக்கத் தேவைகள் அனைத்தையும் முழுமையாகப் பாதுகாக்கும் என்பதையும், முஸ்லிம் அல்லதோர்களின் பாதுகாப்பு வஹி எனும் அரணினால் நிரந்தரமாக பாதுகாக்கபட்டுள்ளதால், அவற்றை சுய இலாபத்திற்காக ஆட்சியாளர்களோ, மனோவிச்சைப்படி பொதுமக்களோ புரட்டிப்போட முடியாது என்பதையும் விளக்கிச் சொல்லுவோம். அதனூடாக ஒரு நாட்டின் பூரண குடிமக்களாக அனைத்து சமூகங்களையும் அரவணைத்து ஆட்சி செய்யக்கூடிய ஆளுமை இஸ்லாமிய சித்தாந்தத்திற்கு மாத்திரமே உள்ளது என்பதையும் அதன் ஆளுகைகுள் மாத்திரமே எல்லா மனிதர்களுக்கும் நிம்மதி கிட்டும் என்பதையும் நாம் ஓங்கி முழங்குவோம். இத்தகையதொரு சிந்தனைப்போராட்டமே இன்றைய தஃவா களத்தின் வெற்றியை உறுதிப்படுத்தும்.