இஜ்திஹாதின் பொருளை சிதைப்பதற்கான முயற்சிகள் இன்று நிறையவே நடக்கின்றன. மார்க்கத் தீர்ப்பளிக்கின்ற உரிமையை ஒரு சில அரச அங்கீகாரம் பெற்ற அறிஞர்களிடமும், நிலையங்களிடமும் மாத்திரம் சுருக்கி மக்களின் அறிவு தேடும் வழிகளை கட்டுப்படுத்துதல் மற்றும் அத்ல் (நீதி) ஆனது எல்லாம் அல்லாஹ்(சுபு)வின் அஹ்காம்களே (தீர்ப்புக்களே) என இறைச்சட்டங்களுக்கு மீள வரைவிலக்கணம் வழங்குதல் என்பன இந்த முயற்சியில் முக்கியமான கைங்கரியங்களாகும்.
இந்த தீய முனைப்பில் சில இயல்புகள் அடிக்கடி பளிச்சிடுகின்றன:
1. அறிவு தேடுதலை கட்டுப்படுத்தல். (பெரும்பாலும் அரசுகளால்) அங்கீகாரம் பெற்ற அறிஞர்கள் சிலரைக் கொண்டு அல்குர்ஆன், அஸ்ஸுன்ஆவை நேரடியாக அணுகுவது ஆபத்தானது என்ற மனப்பதிவை முஸ்லிம்களின் மனதில் ஏற்படுத்தல். இந்த அழுத்தம் எந்தளவிற்கு பிரயோகிக்கபடுகிறது என்றால் சில சமயங்களில் ஒரு மார்க்கத் தீர்ப்பு மிகத் தெளிவான இஸ்லாமிய ஆதாரங்களுடன் முரண்படுவதாகத் தெரிந்தாலும், முஸ்லிம்கள் அது சம்பந்தமாக மௌனம் காத்து அவ்விடயத்தை அறிஞர்களின் கைகளில் மாத்திரம் விட்டுவிட வேண்டும் என்ற சிந்தனை வளர்க்கப்படுகிறது. இந்நிலை முன்னைய யூத, கிருஸ்தவ சமூகங்கள் அறிவை மத அறிஞர்களின் ஏகபோக உரிமையாக சுருக்கிவிட்டதன் விளைவால், மார்க்க அறிஞர்கள் வழி பிறழ்ந்த மக்களினதும், ஆட்சியாளர்களினதும் மனோ இச்சையை திருப்திப்படுத்தும் வண்ணம் வேத வெளிப்பாடுகளுக்கு வியாக்கியானம் செய்ததையொத்த கவலைக்கிடமான நிலையாகும்.
2. இஜ்திஹாத், என்ற தூய வழிமுறை இன்று “மார்க்கம் மௌனம் காக்கின்ற” விடயங்களில் “மனிதன் இயற்றுகின்ற சட்டங்கள்” என்ற பொருளை எட்டியிருக்கிறது. சில விடயங்களில் மார்க்கம் மௌனம் சாதிக்கிறது என்ற மிகப்பிழையான எடுகோளின் படி, தவறாகப் பயன்படுத்தப்படும் இஜ்திஹாத் வழிமுறை இன்றைய உலகை ஆள்கின்ற மனிதச் சட்டவாக்க பொறிமுறையுடன் நன்றாகவே ஒத்துப் போகின்றது. “எங்கெல்லாம் நீதி(அத்ல்) நிலைத்திருக்கிறதோ அதுதான் அல்லாஹ்(சுபு)வின் சட்டமாகும்” என்ற ஒரு புதுமையான வரைவிலக்கணத்தை அண்மையில் ஒரு ஷரீஆ துறை அறிஞர் என்னிடம் சொன்னது இங்கே ஞாபகத்திற்கு வருகிறது. இஸ்லாமல்லாத குப்ர் தேசங்களில் மில்லியன் கணக்கான இஸ்லாமியச் சட்டங்கள் அமூல்படுத்தப்படுகின்றன என அவர் கூறிய பொழுது, அதிர்ச்சியோடு இல்லை…அவையெல்லாம் குப்ர் தேசங்களல்லவா… என்று நான் சுட்டிக்காட்ட, அவர் என்னை வியந்து பார்த்து “இத்தக்கில்லாஹ்” (அல்லாஹ்வுக்கு பயந்து கொள்ளுங்கள்) என்று எச்சரித்ததையும் இங்கே நினைவு கூறுகின்றேன்.
3. இஜ்திஹாத் என்பது “அத்தரூரா – இன்றியமையாத நிலை” மற்றும் “ஹஃபத் தரரைன் – தீயதில் சிறியது” என்ற இரு அடிப்படைகளை மாத்திரம் சுற்றிச் சுழலும் ஒரு பொறிமுறையாக மாற்றப்பட்டிருக்கிறது. நவீன கால பிரச்சனைகள் தொடர்பாக வெளிவந்து கொண்டிருக்கும் பத்வாக்களில் ஏறத்தாழ அனைத்துமே நலன்களையும் (மஸ்லஹா), தீங்குகளையும் ஆராய்வதை மையம் கொண்டு தீர்ப்பளிக்கப்பட்டிருப்பதைக் காணலாம். அத்தீர்ப்புகளுக்குள் ஒரு திருமறை வசனமோ அல்லது நபிமொழியோ சொல்லப்பட்டால் அது இந்த நலன் VS தீங்கு கணக்கை தீர்க்க முன்வைக்கப்படும் ஆதாரமாகவே பயன்படுத்தப்பட்டிருக்கும்.
இஸ்லாத்தை மறுபொதி பண்ண எடுக்கப்பட்ட முயற்சிக்கு நீண்ட வரலாறு உண்டு. பதினெட்டாம், பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் ஐரோப்பியர்கள் முஸ்லிம்களை இலகுவாக காலணித்துவம் செய்வதற்காக அவர்களை அமைதிப்படுத்தி, இயங்காது வைத்துக்கொள்ள கடுமையான பிரயத்தனம் எடுத்தனர். குலாம் அஹ்மத் போன்றோர்களை அறிமுகப்படுத்தி முஸ்லிம்களை அமைதிகாக்க கற்றுக்கொடுக்க முயற்சித்தனர். ஆனால் அதில் படு தோல்வியடைந்தனர். இதே நிகழ்ச்சி நிரலை “இஸ்மாயீலி” களைப் பயன்படுத்தி நிறைவேற்ற நினைத்தனர். அங்கேயும் மூக்குடைபட்டனர். காந்தியை பயன்படுத்தி அகிம்சையை போதித்த போது சில காலம் அது கைகூடினாலும் மேற்குலக மேலாதிக்கத்திற்கு எதிராக முஸ்லிம் உம்மத்தை இயங்காது வைத்திருப்பதற்கு, எதிர்வினையாற்றாது அமைதி காக்கச் செய்வதற்கு அதுவும் நீண்ட காலம் வெற்றியளிக்கவில்லை. மேலும் அவர்களின் நிகழ்ச்சி நிரலுக்கும், பொருள் கொள்ளலுக்கும் ஏற்ப அல்குர்ஆனை மொழியாக்கம் செய்து முஸ்லிம்களின் கைகளில் தவழவிட்டுப் பார்த்தனர். எனினும் மூல அரபு மொழி குர்ஆனுடன் உம்மத்திற்கு இருந்த தொடர்பால் அவர்களின் சூழ்ச்சி பழிக்கவில்லை. ஹதீத்களை இஸ்லாத்திலிருந்து தொடர்பறுத்து இஸ்லாத்தை நடைமுறை ரீதியாக அமூலாக்கம் செய்வதை தடுக்க முயன்றனர். ஹதீத் கலையின் ஏற்புடமை பற்றி மக்களின் மனதில் ஐயப்பாடுகளை விதைக்கும் வண்ணம் தமது பல்கலைக்கழகங்களில் பாடநெறிகளை ஏற்படுத்தி அதனைச் சாதிக்க நினைத்தனர். எனினும் ஒரு சிலரைத்தவிர ஏனையோரை அந்த முயற்சி வழிகெடுக்கவில்லை. இன்றும் பாகிஸ்தானிலே அல் கம்தி போன்ற தனிநபர்கள் இந்த நிகழ்ச்சி நிரலில் இயங்குவது குறிப்பிடத்தக்கது.
எனவே இந்தகைய ஆழமான முயற்சிகள் எல்லாம் பயனளிக்காத நிலையில் அவர்கள் பாவிக்கும் அண்மைக்கால யுக்திகளை இவ்வாறு சுருங்கக் கூறலாம்.
1) அறிவை குறித்த “அங்கீகாரம் பெற்ற அறிஞர்” களுக்கு மாத்திரம் மொத்தமாக குத்தகைக்கு வழங்குதல். அந்த அறிஞர்கள் கைமாறாக அரசாங்கங்களுக்கு கட்டுப்படும்படியும், தற்போதுள்ள (குஃப்ரான) வாழ்வொழுங்குடன் இரண்டரறக் கலந்து வாழும்படியும் மக்களுக்கு போதனை செய்தல்.
2) இஜ்திஹாத்தின் பொருளை “பலன்களையும், தீங்குகளையும் நிறுத்துப்பாக்கும் மனித மதிப்பீடு” என்பதாக மாற்றுதல்
3) “ஹுக்ம் ஷரீய்” இன் பொருளை அனைத்து “நீதி” ஆன சட்டங்களும் ஹுக்ம் ஷரீய்தான் என்பதாக மறுவிளக்கம் அளித்தல். அதன்படி மனிதன் இயற்றுகின்ற எத்தகைய நீதியான சட்டங்களும் அல்லாஹ்(சுபு)வின் அஹ்காம்கள்தான் என்ற நிலைப்பாட்டுக்கு வருதல்.
எனவே இன்றைய சூழலில் உலகில் எந்த எல்லையில் ஒருவர் அழைப்புப் பணியில் ஈடுபட்டாலும் அவர் இத்தகையதொரு ஆபத்தான திசை நோக்கி உம்மத்தை தள்ளுகின்ற முயற்சி இடம்பெற்று வருவதை கருத்தில் கொள்ள வேண்டும். உம்மத்தை சரியான சிந்தனை நோக்கி தொடர்ந்து விழிப்பூட்ட வேண்டும்.
இஸ்லாத்தைப் பொருத்தவரையில் கல்வி என்பது அனைவரும் பெற்றுக் கொள்ளக்கூடிய ஒன்றாக இருக்க வேண்டும். அது முன்னமே அங்கீகாரம் பெற்ற அறிஞர்களுக்கு மாத்திரம் தனியுரிமையாக வழங்கப்பட்டதல்ல. அதேபோல சத்தியத்தை உரைப்பதும், ஆட்சியாளர்களை தட்டிக்கேட்பதும் இஸ்லாத்தின் முக்கிய அங்கங்களாகும். அதன்படி குப்ர் சிந்தனைகள் அனைத்தையும், அதனை கட்டிப்பாதுகாக்கின்ற அரசுகள், முறைமைகள் அனைத்தையும் நாங்கள் கேள்விக்குட்படுத்த வேண்டும். மேலும் நாங்கள் எங்களை நோக்கி வருகின்ற அனைத்து பத்வாக்களையும் கண்மூடிப் பின்பற்றக்கூடாது. அவற்றிலிருக்கும் குறைகளை, தவறுகளை கண்டு மௌனம் காக்கக் கூடாது. குறிப்பாக இன்றைய உலகை வழிநடாத்துகின்ற குப்ர் முறைமைகளுக்குள் இரண்டரறக் கலந்துவிடுவதற்காக அரசியல் நோக்கங்களுடன் வெளிவருகின்ற பத்வாக்களை ஒன்றுக்கு பலமுறை அவதானமாக அணுக வேண்டும்.
அல்குர்ஆனும், அஸ்ஸுன்ஆவும் சொல்கின்ற மிக நெருக்கமான பொருள் அல்லது சட்டம் இதுவாகத்தான் இருக்க முடியும் என்பதை புரிந்து கொள்வதற்காக எடுக்கப்படும் அதிகூடிய முயற்சியே இஜ்திஹாத் ஆகும். மாறாக முதலாளித்துவ, சடவாத, தாராண்மைவாத சட்டவாக்கப் பொறிமுறையிலிருந்து எடுக்கப்பட்ட சில பரிதாபமான இலாப – நஷ்ட ஆராய்ச்சி அல்ல. இஜ்திஹாத்திலிருந்து எட்டப்படுகின்ற தீர்ப்புக்கள் அல்லாஹ்(சுபு)வின் தீர்ப்புக்கு மிக அண்மித்த தீர்ப்புகளாகும். மாறாக மனித மூளையை நீதிபதியாக்கி “நன்மை, தீமைகளை தர்க்க ரீதியாக அளந்து பார்த்து” எடுக்கப்படும் தீர்ப்புகளல்ல. இத்தீய முயற்சி இன்னொரு வடிவில் “மனோ இச்சையை” பின்பற்றுவது கூடும் என சொல்வதை ஒத்ததே.
அல்லாஹ்(சுபு)வின் தீர்ப்பு என்பது அல்லது சட்டம் என்பது குர்ஆன், ஸுன்ஆவிலிருந்து மாத்திரம் யாக்கப்படுவதாகும். அதுதவிர வேறு எங்கேனும் இருந்து எட்டப்படும் முடிவுகள் – அது அல்லாஹ்வின் முடிவுக்கு ஒத்ததாக தெரிந்தாலும் கூட ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. நபி(ஸல்) நவின்ற இந்த நபிமொழியை மாத்திரம் எடுத்துக் கொண்டாலும் கூட அது இதற்கு சான்று பகரப் போதுமானதாகும்.
“எமது கட்டளையில் இல்லாத ஒரு செயலை ஒருவர் செய்வாரானால் அது நிராகரிக்கப்பட்டதாகும்.”
எனவே உலகை நீதியின் நிழலில் வழிநடாத்த இருக்கின்ற உம்மத்தின் எழுச்சியில் தாமதத்தை ஏற்படுத்த ஏவப்படும் இத்தகைய தீய அம்புகளிலிருந்து அல்லாஹ்(சுபு) எம்மைப் பாதுகாப்பானாக. கருத்தை கருத்தால் எதிர்கொள்ள முடியாது, சித்தாந்தத்தை சித்தாந்தத்தால் முறியடிக்க முடியாது அற்பத்தனமான காரியங்களினூடாக உம்மத்தை குழப்பத்தில் ஆழ்த்த நினைக்கின்ற குப்பார்களினதும், முனாபிக்களினதும் முகத்தில் அவன் முன்புபோலவே இம்முறையும் கறியைப் பூசுவானாக!