முஃமீன்களின் குருதி அநியாயமாக சிந்தப்பட்ட இன்னுமொரு ரமதானை சற்று முன்னரே நாம் தாண்டியிருக்கிறோம். இஸ்தான்புல் விமானநிலையத் தாக்குதலாக இருக்கலாம், டாக்கா சிற்றுண்டிச் சாலைச் தாக்குதலாக இருக்கலாம், கராச்சியில் கவ்வாலின் படுகொலையாக இருக்கலாம், பக்தாத் சிடி சென்டர் குண்டு வெடிப்பாக இருக்கலாம், இன்று புனித்தளமான மதீனா அல் முனவ்வரா உட்பட அரேபிய தீபகற்பத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்புக்களாக இருக்கலாம் – அவை அனைத்தும் ரமதானின் புனிதத்தன்மையை மதியாத, உம்மத்தை கதிகலங்க வைத்த நிகழ்வுகளாக இடம்பெற்று இருக்கின்றன.
இவ்வாறு இந்த புனித மாதத்தில் பதைக்கத் துடிக்கக் கொல்லப்பட்ட எமது உறவுகளை அல்லாஹ்(சுபு) ஷ}ஹதாக்களாக ஏற்றுக்கொள்வானாக! இவற்றில் அகப்பட்டு காயமடைந்தவர்களுக்கு விரைவான சுகத்தையும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிறைவான பொறுமையும் வழங்குவானாக!
இவை இஸ்லாமிய குழுக்களில் கைவேலைகள் என்று சிலர் கூற, இன்னும் சிலர் அவை போன்ற குழுக்களின் நடவடிக்கைகளால் தூண்டப்பட்ட சில தனிநபர்களின் தன்னிச்கையான கருமங்கள் என நம்ப, இன்னும் சிலர் இவை வெளிநாட்டு நாசகார பாதுகாப்பு முகவர்களின் சதிவேலைகள் என வாதாடலாம்.
எனினும் எது நிச்சயமானது என்றால் இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் அனைவரும் சூழ்ச்சிகள் பலிக்காத அல்லாஹ்(சுபு)வின் நீதி மன்றத்தில் நிறுத்தப்படுவார்கள் என்பதே.
மேலும் எது நிச்சயமானது என்றால் சிந்தப்பட்ட இரத்தையும், உருவாகியிருக்கும் பீதியையும் தாண்டி இந்த நிகழ்வுகள் அனைத்தையும் இஸ்லாத்தின் எதிரிகளும், முஸ்லிம்களின் எதிரிகளும் கச்சிதமாகப் பயன்படுத்துவார்கள் என்பதுமே.
- முஸ்லிம் உலக அரசுகள் இந்த நிகழ்வுகளை விமர்சகர்களினதும், அரசியல் எதிராளிகளினதும் குரல்வலைகளை நசுக்குவதற்காக பயன்படுத்துவார்கள். அத்தகையவர்கள் வன்முறை நடவடிக்கைகளுடன் எவ்வித தொடர்பற்றிருந்தாலும் கூட. சவூதி மன்னர் சல்மான் தீவிரவாதத்தை இருப்புக்கரம் கொண்டு நசுக்கப்போவதாக நேன்று முன்தினம் தெரிவிருத்திருந்தமை இதற்கொரு நல்ல சமிக்ஞை.
- மேற்குலக அரசாங்கங்கள் தமது இஸ்லாத்துக்கும், முஸ்லிம்களுக்கும் எதிரான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் கொள்கைகளை நியாயப்படுத்துவதற்கு இந்தத் தாக்குதல்களை பயன்படுத்துவார்கள்.
- இஸ்லாத்தின் எதிரிகள் இந்தத் தாக்குதல்களை இஸ்லாத்தின் அரசியல் சிந்தனைகளை மலினப்படுத்துவதற்கும், இஸ்லாத்தை மதச்சார்பின்மையாக்க அழைப்பு விடுவதற்கும் பயன்படுத்துவார்கள்.
- இந்த நிகழ்வுகள் முஸ்லிம் உலகில் காணப்படும் இஸ்லாமிய மாற்றத்திற்கான அழைப்புக்களிலிருந்து மக்களை தூரப்படுத்துவதற்காக பயன்படுத்தப்படும். 70களின் எகிப்த்திலே பயன்படுத்தப்பட்டதைபோல…90களில் அல்ஜீரியாவிலே பயன்படுத்தப்பட்டதைப்போல…
- இத்தகைய நடவடிக்கைகளைக் பயன்படுத்தி இஸ்லாமே வன்முறைகளின் தோற்றுவாய் எனப் பரப்புரை செய்யப்படும் புனைவுகளால்; பஷாரினது அல்லது சீசியினது சடவாத அரசுகள் நிகழ்த்தும் வன்முறைகளும், காலணித்துவ அல்லது நவகாலணித்துவ அரசுகளான சவூதியும், குருங்குழுவாத பக்தாத் அரசும் புரியும் அயோக்கியங்களும்;, மேற்குலக சக்திகள் ஆளில்லா விமானங்களையும், நேரடி படையெடுப்புக்களையும்; பயன்படுத்தி மேற்கொள்ளும் அத்துமீறல்களும், பலஸ்தீனத்திலும், காஷ்மீரிலும் தசாப்த்தங்களாக தொடரும் ஆக்கிரமிப்புக்களும் மூடி மறைக்கப்படும். இஸ்லாமே அனைத்து பிரச்சனைகளுக்குமான சூத்திரதாரி என காட்டப்படும்.
ஆனால் உண்மை தலைகீழானது. இஸ்லாத்தின் அரசியல் பிரசன்னம் உலகில் இல்லாமையே அனைத்து பிரச்சனைகளுக்குமான மூலம் என்பதைதான் வரலாறு பகர்கிறது!
எமது உலகில் நிலைக்கும் இந்த அராஜகச் சூழல் 1924 ஆம் ஆண்டில் ஏற்பட்ட உத்மானிய கிலாஃபத்தின் வீழ்ச்சியிலிருந்தே வீரியமடைந்தது.
இன்று முஸ்லிம்களையும், முஸ்லிம் அல்லாதோர்களையும், குருங்குழுவாத வேறுபாடுகளாலும், சிந்தனைப்பள்ளி பிரிவுகளாலும் வேறுபட்டவர்களையும் ஓர் தேசத்தின் பிரஜைகளாக நீதமாக வழிநாடத்தும் கலீஃபா எம் மத்தியில் இல்லை. மாறாக இன்று எம்மீது வீற்றிருப்பது பிரித்தாளும் நரித்தனத்திற்கு இந்த வேறுபாடுகளை பயன்படுத்தும் கொடுங்கோல் ஆட்சியாளர்களே.
வெளிநாட்டுப் படையெடுப்புக்களில் இருந்து எம்மை பாதுகாப்பதற்கும், எமது நிலங்களை ஆக்கிரமிப்புக்களிலிருந்து மீட்டெடுப்பதற்கும் எமக்கொரு கேடயம் (இமாம்) இல்லை. எது சரி, எது பிழை என அதிகார பூர்வமாக வழிகாட்ட எமக்கொரு தலைமை இல்லை. எமது நிலங்களில் இன்றிருக்கும் உயர்தர ஆன்மீகத் தலைவர்களில் அனேகர் அவ்வவ்வரசுகளின் ஊதுகுழல்களாகவே தொழிற்படுகின்றனர்.
உலக வல்லாதிக்க சக்திகளின் கொடிய முதலாளித்துவ கொள்கைகளால் அல்லலுறும் முஸ்லிம்களையும், ஏனைய நலிவுற்ற மக்களையும் மீட்டெடுப்பதற்கு எமக்கொரு அமீருல் முஃமிமீன் இல்லை. மாறாக கொடிய முதலாளித்துவதற்கு இஸ்லாமியச் சான்றுதல் அளிப்பதற்கு எம்மில் பல தலைமைகள் தலையெடுத்திருக்கிறார்கள்.
எனவே முஃமீன்களின் உயிரழப்புக்களுக்காக கண்ணீர் வடிக்கும் நாம், இத்தகைய நாசகார நடவடிக்கைகளைக் கண்டு ஆத்திரமடையும் நாம் இந்த நிகழ்வுகள் எல்லாம் அரங்கேற்றப்படும் இன்றைய உலக சூழலை மறந்து அவற்றைப் பார்க்கக் கூடாது. இந்த நிகழ்வுகளின் கர்த்தாக்கள் யார்? அரங்கேற்றாளர்கள் யார்? பாத்திரங்கள் யார்? அதற்காக ஆடுவது யார்? பாடுவது யார் என்பதை ஆழமாக நோக்க வேண்டும். இந்த இழி நிலையை உலகு ஏன் அனுபவிக்கிறது? அதற்கான அடிப்படைக் காரணம் என்ன? அதற்கான தீர்வு என்ன என்பதை வஹியின் வெளிச்சத்தில் தேட வேண்டும்.
அவ்வாறு செய்தால்…
மனிதகுல அவலங்களின் தீர்வுக்கும், பீடித்திருக்கும் பீதிகளின் முடிவுக்கும், முழு உலக அமைதிக்கும் வல்ல இறைவன் எதனை தீர்வாக முன்வைக்கிறானோ அதன் பக்கம் எம் கவனம் குவியும். உலகம் அமைதிப் பூங்காவாக மலரும். தீர்வு திருமறையின் ஒரே வசனத்தில் இவ்வாறு அமைகிறது,
உங்களில் எவர் ஈமான் கொண்டு (ஸாலிஹான) – நற்செயல்கள் புரிகிறார்களோ அவர்களை, அவர்களுக்கு முன்னிருந்தோரை(ப் பூமிக்கு) ஆட்சியாளர்களாக்கியது போல், பூமிக்கு நிச்சயமாக ஆட்சியாளர்களாக்கி வைப்பதாகவும், இன்னும் அவன் அவர்களுக்காக பொருந்திக் கொண்ட மார்க்கத்தில் அவர்களை நிச்சயமாக நிலைப்படுத்துவதாகவும், அவர்களுடைய அச்சத்தைத் திட்டமாக அமைதியைக் கொண்டு மாற்றி விடுவதாகவும், அல்லாஹ் வாக்களித்திருக்கிறான்; “அவர்கள் என்னோடு (எதையும், எவரையும்) இணைவைக்காது, அவர்கள் என்னையே வணங்குவார்கள்;” இதன் பின்னர் (உங்களில்) எவர் மாறு செய்(து நிராகரிக்)கிறாரோ அவர்கள் பாவிகள்தாம். (அந்நூர்:55)