மே 14 இல் ஆரம்பித்த வெள்ளப்பெருக்கு இலங்கையின் சில பகுதிகளை முற்றாக புரட்டிப்போட்டது. நாடு தழுவிய ரீதியில் இந்த அனர்த்தம் பாதிப்பை ஏற்படுத்தியது. கடந்த 25 வருடங்களாக இது போன்றதொரு வெள்ள அனர்த்தத்தை இலங்கை சந்தித்திருக்கவில்லை. வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் 90 பேருக்கு மேற்பட்;டவர்கள் அகால மரணமடைந்தனர். நூற்றுக்கு மேற்பட்டவர்கள் நிலச்சரிவில் அகப்பட்டு புதையுண்டு போயிருக்கலாம் எனக் கணிக்கபட்டது. நான்கு இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் குடிமனைகள் இன்றி அகதிகளாயினர். 125,000 க்கு மேற்பட்ட வீடுகளும், 300,000 சிறிய மற்றும் நடுத்தர தொழில் ஸ்தானங்களும் முற்றாகவோ அல்லது பகுதியளவிலோ பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இலங்கை அரசு இதனை பாரிய அனர்த்த நிலை என அறிவித்தது. ஜனாதிபதி அரச தொலைக்காட்சியில் தோன்றி விசேட உரையாற்றினார். ‘1919’ என்ற விசேட அழைப்பு இலக்கத்தை ஒதுக்கி நிவாரணம் கிட்டாத மக்கள் இந்த இலக்கத்தில் தன்னை நேரடியாக தொடர்பு கொண்டு முறையிடலாம் என்றார். வழமைபோல் முப்படைகளும் மீட்புப் பணிகளுக்காக களத்தில் விடப்பட்டிருந்தனர். உடனே அனர்த்த முகாமைத்துவ அமைச்சு இந்த அனர்த்த நிவாரணத்திற்காக விசேட வங்கிக் கணக்கொன்றை திறந்து உள்நாட்டிலிருந்தும், வெளிநாட்டிலிருந்தும் நிதி உதவிகளைக் கோரி நின்றது.
பொதுநலவாய நாடுகளுக்கான பொதுச் செயலாளர் பெற்றீசியா ஸ்கொட்லாண்ட் “நான் பொதுநலவாய குடும்பத்திடம் இந்த அனர்த்தத்திற்கான ஒத்துழைப்பினை ஒருங்கிணைக்கபட்ட முறையில் வழங்குமாறு வேண்டுகிறேன்” என ஓர் கோரிக்கையை முன்வைத்தார். முதலில் இந்தியா இரண்டு கப்பல்கள் நிரம்ப அவசர உதவிப் பொருட்களை அனுப்பியது. மேலதிகமாக சீ-17 க்லோப் மாஸ்டர் விமானங்களில் மருத்துவப் பொருட்களை அனுப்பி வைத்தது. இதனைத் தொடர்ந்து இன்னும் சில நாடுகளும் உதவ முன்வந்தன.
அனர்த்தம் ஏற்பட்டதைத் தொடர்நது அடுத்தடுத்து நிகழ்ந்த நிகழ்வுகளை மேலோட்டமாக பார்க்கும் ஒருவருக்கு இவையே கண்களுக்குத் தெரியும். எனினும் அனர்த்தத்திற்கு யார் உடனே எதிர்வினையாற்றினார்கள். எவர்கள் களத்தில் சென்று நின்றார்கள். அரசின் வாக்குறுதிகளுக்கும் நடைமுறைக்கும் இடையிலான இடைவெளி என்ன? போன்ற கேள்விகளுக்கு பதில் தேடும் ஒருவருக்கு நிலைமையின் மறுபக்கம் புலப்படும்.
அனர்த்தம் ஏற்பட்டு மக்கள் ஆபத்தில் சிக்கியிருந்த வேளையில் துரித கதியில் தனது முப்படைகளையும் பெரும் எண்ணிக்கையில் பாவித்து உடனடியாக மக்களை மீட்டெடுத்திருக்க வேண்டிய அரசு மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே படைகளை மீட்புப்பணியில் ஈடுபடுத்தியது. அதுவும் கட்டம் கட்டமாகவே அதனது செயற்பாடுகள் அதிகரித்தன. அரச நிர்வாகம் தொடக்கம் அதன் உள்ளுர் கட்டமைப்புகள் வரை மிகவும் மந்த கதியிலேயே இயங்கிக் கொண்டிருந்தன. மக்கள் பிரதிநிதிகளான அரசியல் தலைமைகள், பாராளுமன்ற உறுப்பினர்கள் உடனடி உதவிக்கு களத்திற்கு செல்லவில்லை. வெள்ளம் முழங்காலுக்கு கீழே அல்லது கரண்டைக்காலுக்கு கீழே வடிந்த பின்னர்தான்; படப்பிடிப்புக்காக அவர்கள் களத்திற்கு வந்தார்கள். அப்போது இவர்களிடம் நாக்கை பிடுங்கும் படி மக்கள் கேட்ட கேள்விகள் உங்களுக்கு ஞாபகமிருக்கலாம்.
ஆட்சியாளர்களும், அதிகார வர்க்கமும் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை தம்மைப்போன்ற சாதாரண பொதுமக்களுக்கு தாமே முதலுதவி என களத்தில் வந்து நின்றார்கள் பொதுமக்கள். மனிதம் இன்னும் சாகவில்லை என்பதை அவர்கள் தான் மீண்டும் நிரூபித்தார்கள். தொண்டு நிறுவனங்களும், சிவில் அமைப்புக்களும் உடனடியாக களப்பணியில் இறங்கினார்கள். குறிப்பாக இஸ்லாமிய அமைப்புக்கள், நிறுவனங்கள் என்பவற்றின் செயற்பாடுகள் மெச்சத்தக்கதாக இருந்தன. வெள்ளத்தில் சிக்குண்டு மேல்மாடிகளிலும், கூரைகளிலும் ஒதுங்கியிருந்த மக்களை தமது உயிரை துச்சமென மதித்து சாதாரண வள்ளங்களில் சென்று பாதுகாத்தார்கள். முதலுதவி வழங்கினார்கள். உண்ண உணவும், உடுத்த உடையும் அளித்தார்கள். பாதிப்புகளின் பாரதூரத்தை உலகிற்கு எடுத்துச் சொன்னார்கள். நிதி திரட்டினார்கள். நிவாரணம் சேர்த்தார்கள். அரச சம்பிரதாயங்களில் காலத்தை விரயமாக்கிக் கொண்டிருந்த அரசாங்கத்திற்கு மக்களை விஞ்சி இயங்க முடியவில்லை. மக்களின் அர்ப்பணிப்புகளுக்கு முன்னால் அவர்களால் ஈடு கொடுக்க முடியவில்லை.
எனவே நாடும், மக்களும் பாரிய அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டு தவித்த இந்தப் பொழுதுகளில் கூட அரசினதும், அதனது நிறுவனங்களினதும் செயற்பாடுகள் மந்த கதியில் இருந்திருக்கிறது என்றால் அல்லது மக்களின் பிரதிநிதிகள் என அழைத்து கொள்வோர் பிணத்தை புதைத்த பின்னர் துக்கம் கொண்டாட வரும் சில உறவுகளைப் போல கடைசி வரிசையில் வந்து நின்றால் நாம் வாழ்கின்ற நாட்டில், அதன் அடிப்படைகளில், அதன் முறைமைகளில், அதன் நடத்துனர்களில், அதன் அரசியலில், அதன் கலாசாரத்தில் ஓர் அடிப்படைத் தவறு இருக்கிறது என்று தானே அர்த்தம்? மக்கள் தமது உழைப்பை நாட்டுக்காக வரிப்பணமாக கொட்டித் தீர்க்க வேண்டும். நாட்டின் வளர்ச்சிக்காக எல்லா வழிகளிலும் பங்காற்ற வேண்டும். நாட்டின் பாதுகாப்பிற்காக, ஒருமைப்பாட்டுக்காக தமது உயிரையும் கொடுத்து போர்களில் மடிய வேண்டும். அங்கங்களை இழக்க வேண்டும். ஆனால் அந்த நாடு, மக்களுக்கு ஒர் கஷ்டம் என்று வருகின்ற போது போதிய கவனம் செலுத்த மறுக்கிறது என்றால் அந்த நாடு முறையாக வழிநடத்தப்படவில்லை என்று தானே அர்த்தம்?
2004 டிசெம்பரில் சுனாமி இலங்கையைத் தாக்கிய பொழுது அதனால் பாரியளவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், அவர்களின் புனர்வாழ்வுக்கும் நடந்த கதி எமக்குத் தெரியும். இடைத்தங்கல் முகாம்களில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்ட மக்கள் போதிய வசதியின்றி அங்கேயே நிரந்தமாக வாழ நிர்ப்பந்திக்கப்பட்டது தொடக்கம் அவர்களின் புனர்வாழ்வுக்காக கிடைத்த நிதிகளுக்கு இழைக்கப்பட்ட மோசடிகள் வரைக்கும் அழுகிய அரசியல் கலாசாரத்தின் நாற்றத்தை மக்கள் நுகர்ந்த வரலாறு எமக்குத் தெரியும். அதேபோலவே வட மாகாணத்திலிருந்து புலிகளால் பலவந்தமாக விரட்டப்பட்ட முஸ்லிம்களின் அகதி முகாம்களை 26 வருடங்கள் கடந்தும் இழுத்து மூடமுடியாத கையாளாகாத அரசாங்கங்களையே நாம் அனுபவித்து வருகின்றோம் என்பதும் எமக்குத் தெரியும். எனவே இத்தகைய வினைத்திறனற்ற, பொறுப்பில்லாத, மோசடியான அரசியல் கலாசாரம் இலங்கையில் மேலோங்கி இருப்பதால் தற்போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் எதிர்காலத்திற்கும் என்ன நடக்கும் என்பதை நாம் முன்கூட்டியே யூகிக்க முடிகிறது.
உண்மையில் கடமையுணர்வுள்ள ஓர் ஆட்சியாளனின், பொறுப்புள்ள ஓர் அரசின் அனர்த்த முகாமைத்துவமும், மக்கள் புனர்வாழ்வும் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கு இஸ்லாமிய வரலாற்றில் பல சான்றுகள் காணப்படுகின்றன.
கி.பி 640 இல் அரபு தீபகற்பம் மிகக் கொடிய வரட்சியை சந்தித்தது. தொடர்ச்சியான வரட்சி விளைச்சலை முற்றாக இல்லாது செய்து பட்டினிச் சாவை மக்கள் எதிர்கொண்டனர். மேய்ச்சல் நிலங்கள் இன்றி கால்நடைகளெல்லாம் பட்டினியால் வாடின. இதனால் பால் உற்பத்திப்பொருட்கள் முற்றாக இல்லாத நிலை. சந்தையில் தானியங்களையோ, தயிர், வெண்ணெய் பொருட்களையோ, இறைச்சி வகைகளையோ காண முடியாத நிலை. இந்த வரட்சி போதததற்கு கருமையான புழுதிப் புயலும் மக்களை தொடர்ச்சியாக தாக்கியதால் மக்கள் மிகுந்த மன உளைச்சலில் இருந்தனர். இத்தகைய பாரிய அனர்த்தத்தை துணிவுடன் சந்திக்க அப்போது ஆட்சியிலிருந்த இரண்டாம் கலீஃபா உமர்(ரழி) அவர்கள் களத்தில் இறங்கினார்கள். அரேபியாவிற்கு வெளியே தனது அதிகாரத்திற்கு கட்டுப்பட்ட ஏனைய விலாயாக்களின் (மாநிலங்கள்) ஆளுநர்களுக்கு உடனடியாக பெருமளவிலான உணவுப் பொருட்களை மதீனாவை நோக்கி அனுப்பி வைக்குமாறு கட்டளையிட்டார்கள். அதன்படி சிரியா, ஈராக், எகிப்த்து போன்ற விலாயாக்களிலிருந்து பெருந்தொகையான உணவுப்பொருட்கள் மதீனாவில் வந்து குவிந்தன. குடும்பம் குடும்பமாக மக்கள் தானியங்களைப் பெற்றுக்கொண்டார்கள். மதீனாவின் எல்லைக்குள் இருந்த அத்தனை மக்களுக்கும் வரட்சி அகழும் வரை அரசே முன்னின்று ஒவ்வொரு நாளும் உணவு சமைத்துக் கொடுத்தது. சுமார் 40000 பேர்கள் வரையில் இவ்வாறு உணவு வழங்கப்பட்டு வந்தார்கள் என வரலாறு சொல்கிறது. உமரின்(ரழி) சமூக அக்கறையும், பொறுப்புணர்வும் எந்த அளவிற்கு இருந்ததென்றால் அவர் நினைத்திருந்தால் தான் உட்கொள்வதற்காக வெண்ணெய்யும், கொழுப்பும், இறைச்சியும் பெற்று உண்ணக்கூடிய நிலை இருந்தாலும் கூட வரட்சி அகழும் வரை சாதாரண அரபிப் பொதுமகன் எதனைச் சாப்பிடுகிறானோ அதனையே தானும் சாப்பிடுவேன் என சபதம் எடுத்துக் கொண்டார்கள். இந்தக் காலப்பகுதியில் அவரும் தரம் அற்ற, போசாக்கற்ற உணவுகளை உட்கொண்டு வந்ததன் விளைவால் அவர்களின் நிறமே மாறிப்போனது. அவர்கள் வயிறு ஒட்டிப்போனார்கள். அதன் போது அவர்கள் ” ஏ வயிரே! நீ விரும்பியவாறு பொறுமிக்கொண்டிரு! ஆனால் இந்த பட்டினி நிலை மாறும் வரையில் உனக்கு நல்ல உணவு கிடையாது” எனச் சொல்லக் கூடியவர்களாக இருந்தார்கள். ஒருமுறை அவரது சேவகர் சந்தையிலிருந்து சிறிய துண்டு வெண்ணெயை கொண்டு வந்து கொடுத்த போது அதனை உட்கொள்ள மறுத்து விட்டார்கள். இன்னொரு நாள் அவரது மகன் இறைச்சிக் கறியொன்றை கொண்டு வந்தபோது அதனையும் மறுத்து விடுகிறார்கள்.
மேலும் பாதிக்கப்பட்;ட மக்களுக்காக முகாம்களை நிறுவி அவர்களின் நலன்பேண நிர்வாகிகளையும் முழு நேர ஊழியர்களாக கடமையில் அமர்த்தி அவர்களிடமிருந்து ஒவ்வொரு நாளும் அறிக்கை பெற்று வந்தார்கள். கூடவே தானும் இரவு பகலாக வீதியில் நின்று மக்களின் நிலைமைகளை அவதானித்து வந்தார்கள். இராப்பொழுதுகளில் வீதி வீதியாகச் சென்று மக்கள் அனைவரும் உண்ட நிலைதான் தூங்குகிறார்களா என விசாரித்து வந்தார்கள். இதன்போது எவரேனும் பசியோடு இருந்தால் தானே தனது தோலில் தூக்கிச் சென்று அவர்களுக்கு தானியங்களை வழங்கிய சம்பவங்களும் பல முறை இடம் பெற்றன.
இவ்வாறு தனது அதிகாரத்தை பயன்படுத்தி தான் ஆட்சி செய்த அனைத்து பிராந்தியத்தின் வளங்களையும் பயன்படுத்தி அனர்த்த முகாமைத்துவம் செய்தது தொடக்கம் தானே முன்னின்று நிவாரணப்பணிகளை செய்தது வரைக்கும் அல்லது மக்கள் அனுபவிக்கும் வேதனையை தான் ஒரு கணமும் மறந்து விடக்கூடாது என்பதற்காக தன்னையும் மக்களின் நிலையில் வைத்திருக்க அவர் காட்டிய கரிசனை வரைக்கும் ஒரு உயர்ந்த தலைமையின், நீதியான நிர்வாகத்தின் இலட்சணங்களை உமர்(ரழி) அவர்களின் ஆட்சியில் நாம் காண்கிறோம். மதீனாவை தலைமையகமாகக் கொண்டு ஆட்சி நடத்திக்கொண்டு பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் தனது அதிகாரத்தில் இருந்த ஈராக்கில் ஒரு கால்நடை தடுக்கி விழுந்தாலும், அந்த கால்நடைக்கு முறையான பாதையை செப்பனிட்டுக் கொடுக்கவில்லை என்பதற்காக தான் விசாரிக்கப்படுவேன் எனச் சிந்தித்த உமர்(ரழி) அவர்களிடமிருந்து வேறெந்த முன்மாதிரியை நாம் எதிர்பார்க்க முடியும்? இத்தகைய வரலாற்றின் ஒரு சிறு பகுதியை சீர்தூக்கிப்பார்த்தால் கூட எமது நாட்டில் நல்லாட்சி பற்றி பேசுபவர்களின் போலி முகம் பளிச்செனத் தெரியும்.
இஸ்லாமிய வரலாறு தனது கிலாஃபத்தின் எல்லைக்குள் நிகழ்ந்த அனர்த்தங்களுக்கு மாத்திரம் சிறப்பாக எதிர்வினையாற்றவில்லை. உலகில் அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டு யார் தவித்தாலும் அவர்களுக்கு மனிதநேயத்தோடு உதவிக் கரம் நீட்டிய வரலாறை நாம் காண்கிறோம். 1845 ஆம் ஆண்டில் அயர்லாந்து பாரிய பட்டினிச்சாவை சந்தித்த வேளையில் உத்மானிய கலீஃபா சுல்தான் அப்துல் மஜீத் 1 தான் பத்தாயிரம் ஸ்டேலிங் பவுண்ட்ஸ்களை அயர்லாந்து விவசாயிகளுக்கு நிவாரணமாக வழங்குவதற்கு தயாராக இருக்கிறேன் எனத் தெரிவித்தார். இதன்போது இங்கிலாந்து அரசி விக்டோரியா தானே இரண்டாயிரம் பவுண்ட்ஸ்களைத்தான் வழங்கியுள்ளேன் என்பதால் நீங்கள் ஆயிரம் பவுண்ட்ஸ்களை மாத்திரம் வழங்குங்கள் என்று கேட்கும் அளவுக்கு எமது கலீஃபாக்களின் மனித நேயம் இருந்தது. அதன்படி ஆயிரம் பவுண்ட்ஸ்களை வழங்கிய சுல்தான், இரகசியமாக முழுமையாக நிரம்பப்பட்ட மூன்று கப்பல்களில் அவர்களுக்கு உணவுப் பொருட்களை கொண்டு வந்து சேர்த்தார். இன்றுவரை அயர்லாந்தில் இந்த உதவி அரச மட்டம் வரைக்கும் நினைவு கூறப்படுவதை நாம் காண்கிறோம்.
இந்தத் தலைமைகளால் மாத்திரம் எவ்வாறு மாற்றமாக சிந்திக்க முடிந்தது? ஏன் இன்றைய முதலாளித்துவ உலகில் இவை போன்ற உதாரணங்களை காணமுடியாதுள்ளது? காரணம் என்னவெனில் தன்னலமற்ற தொண்டு ஆற்றக்கூடிய மக்களின் உண்மையான காவலர்களாக நிற்கக்கூடிய மனோநிலையை அவர்கள் ஏற்றிருந்த சித்தாந்தமான இஸ்லாம் அவர்களுக்கு வழங்கியது. அரசியலை, மக்களின் விவகாரங்களை பராமரிப்பதை அல்லாஹ்(சுபு) பதில் சொல்லவேண்டிய பாரிய பொறுப்பாக அவர்கள் பார்த்தார்கள். தம்மை வருத்தி மக்களுக்கு சேவகம் செய்வதை தமது தார்மீகக் கடமையாகக் கருதினார்கள். அவற்றில் விடப்படும் சிறிய தவறு கூட தம்மை நரகம் வரைக்கும் கொண்டு சேர்த்துவிடும் எனப் பயந்தார்கள். அதனால்தான் மக்கள் நலன்களை பேணுவதற்கான தரமான கட்டமைப்புக்களையும், நிர்வாகிகளையும் நியமித்திருந்தாலும் கூட தாமே முன்னின்று அதனை செய்ய வேண்டும் என்ற கடமையுணர்வும், உட்சாகவும் அவர்களிடம் இருந்து வந்தது.
அவர்கள் அரசியலை நாட்டின் வளங்களை சுரண்டி ஏப்பமிடும் ஒரு வித்தையாகப் பார்க்கவில்லை. ஐந்து வருடத்திற்கு ஒருமுறை மக்களை ஏமாற்றி முழு நாட்டையும் ஏலத்திற்கு வாங்க நினைக்கும் கொள்ளையாக அணுகவில்லை. அவர்கள் அரசியலை சுயநலமற்ற பொதுத்தொண்டாகப் பார்த்தார்கள். மார்க்கக் கடமையாக ஏற்றார்கள். அதனால்தான் அவர்களால் பட்டினிக் காலத்தில் கூட இராப்போசணம் உண்டு மக்கள் உறங்க வேண்டும் எனச் சிந்திக்க முடிந்தது. மாற்றமாக வெள்ளம் வற்றிய பின் மக்கள் இன்னும் இருக்கிறார்களா? இறந்து போனார்களா? என கமராக்களுடன் செல்லும் எமது அரசியல்வாதிகளைப் போல் அவர்களால் செயற்பட முடியவில்லை.
சரி, இலங்கையில் மாத்திரமா இந்த அவல நிலை எனப் பார்த்தால் இல்லை என்றே பதில் கிடைக்கிறது. உலக வல்லரசுகள் தொடக்கம் வறுமைப்பட்ட நாடுகள் வரை இலாப நோக்கம் இல்லாத தூய்மையான மக்கள் நலன் காக்கும் அரசுகளை எம்மால் காண முடியாதுள்ளது. 2010 இல் ஹெய்டியில் பூகம்பம் ஏற்பட்ட போது அமெரிக்கா செயற்பட்ட விதம் எமக்கு நினைவிருக்கலாம். மக்களை மீட்பதை முன்னிலைப்படுத்தாத அமெரிக்கா, ஹெய்டியின் ஆதிக்கத்தை தக்கவைப்பதில் காட்டிய அயோக்கியத்தனத்தை நாம் மறந்திருக்க மாட்டோம். ஹெய்டிய மக்களுக்காக உலக நாடுகளிலிருந்து நிவாரணங்களைச் சுமந்து வந்த விமானங்களை விமான நிலையத்தில் தரையிரக்க முடியாத அளவிற்கு அமெரிக்க இராணுவ விமானங்கள் அங்கே குவிக்கப்பட்டிருந்தமை அன்று பலராலும் விமர்சிக்கப்பட்டது. அதேபோல 2005இல் கரிகேன் கெட்ரினா (புயல்) தாக்கிய சமயத்தில் அமெரிக்காவின் மிகவும் வசதி குறைந்த மக்கள் வாழும் இப்பகுதியை மீட்பதற்கு அமெரிக்கா காட்டிய அக்கறை மிகவும் கேவலமாக இருந்தது. மக்களின் புனர்வாழ்வுக்கும், அப்பகுதியின் மீள் நிர்மாணத்திற்கும் அமெரிக்காவின் நேச நாடுகள் உடன்பட்ட 854 மில்லியன் அமெரிக்க டொலர்களில் வெறும் 40 மில்லியன் டொலர்கள் மாத்திரமே (அதாவது அதன் ஐந்து சதவீதம் மாத்திரம்) செலவிடப்பட்டதாக வொசிங்டன் போஸ்ட் அப்போது குற்றம் சாட்டியிருந்தமை மாத்திரம் போதும் அமெரிக்க முதலாளித்துவத்தின் இலட்சணத்தைக் காட்ட. பிரித்தானியாவின் சில பகுதிகள் வெள்ளப்பாதிப்புக்குட்பட்ட போதும் முதலில் சென்று உதவியது நல்லுள்ளம் கொண்ட சாதாரண மக்களும், தொண்டு நிறுவனங்களும் மாத்திரமே. அப்போது பிரித்தானிய அரசியல்வாதிகள் ஊடகங்களில் கதை சொல்வதிலேயே காலத்தை கழித்துக்கொண்டிருந்தார்கள். பாகிஸ்தானில் வெள்ளம் வந்தபோதும், பங்களாதேஷில் புயல் வீசிய போதும், இந்தியாவில் பூகம்பம் ஏற்பட்ட போதும் நடந்த நிகழ்வுகளை பார்த்தாலும் மனித நேயமற்ற இன்றைய உலகின் அசிங்கங்கள் தெரியும்.
எனவே உலகில் நாம் காணும் இந்த அரசியல் கலாசாரமும், அரசியல் முறைமைகளும் ஒரு அடிப்படை நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறது. அதுதான் அளவுகடந்த பேராசையும், இலாபநோக்குமாகும். எந்த விடயத்திலும் எனக்கு என்ன கிட்டும்? எவ்வளவு கிட்டும் என்ற சிந்தனையே எல்லோரிலும் மேலோங்கியிருக்கிறது. இந்த முதலாளித்துவ உலகில் ஜனாதிபதி தொடக்கம் சாதாரண அரச அதிகாரி வரைக்கும் இவ்வாறுதான் சிந்திக்கப் பழக்கப்பட்டுள்ளார்கள். அல்லது சிந்திக்க நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார்கள். ஏனெனில் இன்றைய உலகை ஆளும் முதலாளித்துவ சித்தாந்தத்தின் அளவுகோள் இலாபமீட்டுதலே ஒழிய ஜீவ காருண்யமல்ல. அதிலே மனித நேய செயற்பாடுகள் கூட சுரண்டல் வியூகத்துடன் இருப்பது தவிர்க்கப்பட முடியாதது. இந்த சிந்தனைப் போக்கிற்கு இலங்கையும் விதிவிலக்கானது அல்ல.
எனவே இலங்கையின் இனப்பிரச்சனை தீர்வாக இருக்கலாம், சுனாமி, வெள்ளப்பெருக்கு போன்ற அனர்த்தங்களை முகம்கொடுப்பதாக இருக்கலாம், வளர்ந்து வரும் பொருளாதார நெருக்கடியை கையாள்வதாக இருக்கலாம் இவை அனைத்தும் நேர்மையற்ற முறையில் அணுகப்படுவதற்கு இந்தச் சிந்தனைப்போக்கே அடிப்படைக் காரணம். இந்த அடிப்படைக் கோளாறு களையப்படாமல் முன்னெடுக்கப்படுகின்ற எத்தகைய முயற்சிகளும் இன்னும் பல கோளாறுகளைத் தோன்றுவிக்குமே ஒழிய பிரச்சனைகளைத் தீர்த்து வைக்காது. ஊழல், பாரபட்சம், சந்தர்ப்பவாதம், அரசியல் பழிவாங்கல், குறையான திட்டமிடல், வினைத்திறனற்ற செயற்பாடு, பிழையான முகாமைத்துவம் என இக்கோளாறுகள் அதிகரித்துக்கொண்டே செல்லும்போது எப்பிரச்சனையையும் முறையாகத் தீர்க்க முடியாத நிலை தோன்றிவிடும். பின்னர் எங்கு கையேந்தியாவது அரச இயந்திரத்தை இயக்குவதும், திருகுதாளங்கள் செய்து அரசாங்கத்தை தக்க வைத்துக் கொள்வதுமே தலைமைகளின் வேலையாக மாறிவிடும். அரசியற் தலைமைகளின் இந்த மனோநிலையும், எமது நாட்டில் தொடரும் ஸ்திரமற்ற நிலையும் உதவி என்ற பெயரில் வல்லாதிக்க நாடுகளும், உலக முதலாளித்துவ சக்திகளும் மூக்கை நுழைப்பதற்கு ஏதுவாக அமைந்து விடுகின்றன. கடனுதவி, நிவாரணம் என ஆரம்பிக்கும் இவர்களின் தலையீடு இறுதியில் நாட்டை தாரைவார்க்கும் நிலைக்கு கொண்டு வந்து நிறுத்தி விடுகின்றது. இறுதியில் மனித நேயம் எதும் அற்ற முதலாளித்துவ ஜம்பவான்களின் கைகளில் மக்களின் எதிர்காலம் அகப்பட்டு விடுகின்றது. மக்கள் வெறும் சூழ்நிலைக் கைதிகளாக மாறி விடுகின்றனர். இந்த அரசியற் சுழற்சியில் ஒரு மாற்றம் தோன்றாமல் இலங்கையில் பெரியதொரு மாற்றம் ஏற்படுவது சாத்தியமே இல்லை.
எனவே காலத்திற்கு காலம் முன்வைக்கப்படும் வாக்குறுதிகள், திட்டங்கள் என்ற மாயைகளைக் கடந்து தாம் எத்தகையதொரு சதிவலைக்குள் நிரந்தரமாக அகப்பட்டு இருக்கிறோம் என்ற உண்மையை மக்கள் உணர வேண்டும். தம்மீது சுமத்தப்பட்டுள்ள அரசியல் சாசனம் தொடக்கம், அரச இயந்திரம், அரசியற் கட்சிகள் வரைக்கும், எவையும் மக்களுக்காக இயங்கவில்லை, மாற்றமாக உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் உள்ள சிறியதொரு மேட்டுக்குடி வர்க்கத்தின் நலன்களைக் காக்கவே இயங்குகின்றன என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இன்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் புனர்வாழ்வுக்கு என்ன நடக்கப்போகிறது என்பதை சற்றுப் பொறுமையுடன் அவதானித்தாலே இந்த யதார்த்தத்தை தெளிவாக உணர்ந்து கொள்ளலாம். சமூகத்தில் நிகழ்கின்ற திடீர் அதிர்ச்சிகள் மக்களின் சிந்தனையில் பாரிய அதிர்வுகளை ஏற்படுத்தும் என்று சொல்வார்கள். அந்தவகையில் இலங்கையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு மக்கள் மத்தியில் ஒர் சிந்தனை அதிர்வை சரியான திசையில் செலுத்துமானால் அது இயற்கைச் சீற்றம் கொண்டுவந்த ஒரு நல்ல விளைவு என ஏற்றுக் கொள்ளலாம்.