கடந்த மார்ச் 8ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஐரோப்பிய ஒன்றியமானது, தான் துருக்கியுடன் ஓர் முக்கிய உடன்பாட்டிற்கு வந்ததாக அறிவித்தது. அந்த உடன்பாடு துருக்கியூடாக சிரிய அகதிகள் மற்றும் ஏனைய அகதிகள் ஐரோப்பாவிற்குள் நுழைவதை துருக்கி கட்;டுப்படுத்த வேண்டும் என்பது பற்றியது. அகதிகள் பிரச்சனை உச்சகட்டத்தை எட்டிய வேளையில் பிரஸல்ஸிலே இடம்பெற்ற மாநாட்டிலே துருக்கிய பிரதமர் அஹ்மத் தாவுதுக்லு, தாம், துருக்கியூடாக அகதிகள் ஐரோப்பாவுக்குள் நுழைவதை கட்டுபடுத்த வேண்டுமானால், அல்லது ஏற்கனவே துருக்கியை விட்டு கடலினூடாக கிரேக்கத்திற்கு வெளியேறிய அகதிகளை துருக்கிக்குள் மீள அனுமதிக்க வேண்டுமானால் தமக்கு 6 பில்லியன் யூரோக்கள் தரவேண்டும் என்றும், தமது பிரஜைகள் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்குள் விசாவின்றி பயணிப்பது அனுமதிக்கப்பட வேண்டும் என்றும், துருக்கியை ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைத்துக் கொள்ளும் பேச்சுக்கள் துரிதப்படுத்தப்பட வேண்டும் என்றும் நிபந்தனை விதித்திருந்தார். அதேநேரத்தில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் தமது நாட்டுக்குள் அகதிகள் நுழைவதைத் தடுப்பதற்காக தனது எல்லைகளை மென்மேலும் இறுக்கமாக மூடிவந்தன. சிரியா, ஆப்கான், ஈராக் மற்றும் ஏனைய சில முஸ்லிம் நாட்டிகளிலிருந்து யுத்தத்தின் கோரப்படியிலிருந்து தப்பிப்பதற்காக வெளியேறிய முஸ்லிம் ஆண்கள், பெண்கள், குழந்தைகள என சுமார் 14,000 அகதிகள் மூடப்பட்டிருக்கும் மஸடோனிய எல்லையில் கடுமையான குளிரிலும், மழையிலும் போதுமான உணவோ, மருத்துவ வசதியோ, சுகாதார வசதியோ இன்றி வாடுகின்றனர். “எல்லைகளற்ற வைத்தியர்கள்” என்ற தொண்டு நிறுவனம் ஐரோப்பிய தலைவர்களைப் பார்த்து அவர்கள் “யதார்த்த உலகில் இல்லை” என்று விமர்சித்துள்ளது.
சில பிரதிபலிப்புக்கள்:
தற்போது பிரஸல்ஸ், உலகிலுள்ள மிகவுமே பலகீனமான, நாதியற்ற மக்களின் உரிமைகளை வணிகம் செய்யும் ஒரு கேவலமான சந்தையாக மாறிவருகிறது. ஐரோப்பிய நாடுகள் தமது குறுகிய அரசியல் மற்றும் தேசிய நலன்களை பாதுகாத்துக்கொள்வதற்காக தாமே முன்னின்று உருவாக்கிய சர்வதேச மற்றும் ஐரோப்பிய பட்டயங்களை உதறித்தள்ளி வருகின்றனர். தாம் வளர்த்துவந்த மகோன்னத சட்டங்களாக பீற்றிக்கொள்ளும் தமது மனித உரிமைச் சட்டங்களிலேயே அவர்கள் தடக்கி விழுந்து வருகின்றனர்.
அகதி அந்தஸ்த்தை கோரும் மக்களை கூட்டாக மூன்றாவது நாட்டுக்கு பலவந்தமாக வெளியேற்றுவது சர்வதேச மற்றும் ஐரோப்பிய சட்டத்தின் படி தடைசெய்யப்பட்டதாகும். ஏனெனில் அது 1951ஆம் ஆண்டின் ஐக்கிய நாடுகள் சபை மாநாட்டினதும்;, மனித உரிமைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் மாநாட்டினதும், ஏனைய சர்வதேச ஒப்பந்தங்களின் தீர்மானங்களினதும் அத்துமீறலாகும். இவ்வாறு பலவந்தமாக வெளியேற்ற நினைப்பது பற்றி கருத்துத் தெரிவித்த ஐ. நா சபையின் அகதிகளுக்கான உயர் ஆளுநர், “சிரிய அகதிகளை நாடுகடத்துவது அவர்களின் பாதுகாப்பை கடுமையாக கேள்விக்குள்ளாக்குவதுடன், அவர்களை மீண்டும் யுத்த வலயத்திற்குள் தள்ளும் நிலையை உருவாக்கும்” என்பதாக எச்சரிக்கிறார். ஐரோப்பாவின் அதிகரித்து வரும் இந்த நிலைப்பாட்டை விமர்சிக்கின்ற “த காடியன்” பத்திரிகையின் ஒரு கட்டுரையாளர் “ ஐரோப்பா பணம் கொடுக்க தயாராக இருக்கிறது. ஆனால் ஒரு விடயத்திலேயே கண்ணும் கருத்துமாக இருக்கிறது. அதுதான் அகதிகளை தமது எல்iலைக்கு வெளியே வைத்திருப்பது” என எழுதுகிறார். ஆரம்பம் தொட்டே அகதிகளை தனது நாட்டுக்குள் பெருமளவில் வரவேற்ற ஜேர்மனிய ஆளுநர் அன்ஜெலா மேர்க்கலின் நிலைப்பாட்டால் உள்நாட்டுக்குள்ளும், ஐரோப்பிய ஒன்றியத்திற்குள்ளும் அவரது ஆதரவு பெருமளவில் சரிந்து வருவதை நாம் அவதானிக்கிறோம்.
இந்த சூழலில் சிரிய அகதிகள் பிரச்சனை தொட்பாக ஒரு முஸ்லிம் நாடான துருக்கி அடுத்தடுத்து எடுக்கின்ற நிலைப்பாடுகள் எம்மை வாந்தி எடுக்கச் செய்கின்றன. முதலாளித்துவ, தேசியவாத துருக்கிய அரசாங்கம் நிர்க்கதிக்குள்ளாகியுள்ள அகதிகளின் அவலத்தை ஐரோப்பாவில் தான் அடைய நினைக்கும் அரசியல் இலக்குகளுக்காக சூதாடும் சீட்டாகப் பயன்படுத்தும் கேவலத்தைச் கனகச்சிதமாகச் செய்து வருகிறது. கிரேக்கத்திலும், ஐரோப்பிய நாடுகளின் எல்லைகளிலும் பச்சிளம் பாலகர்களுடன், ஆண்களும், பெண்களும் தம்மை கடும் குளிரிலிருந்து காத்துக்கொள்ள எதுவுமின்றி உரைந்து போகும் காட்சிகளைக் கண்டபோதோ, காற்றிலும், மழையிலும் அடிபட்டு உண்ண உணவின்றியும், ஒதுங்க இடமின்றியும் நின்ற காட்சிகளை பார்த்தபோதோ அல்லது அந்த நாடுகளின் எல்லைப்பாதுகாப்பு படைகளினால் மனிதநேயமற்ற முறையில் அவர்கள் நடத்தப்பட்ட போதோ, அல்லது சுமார் நாலாயிரத்துக்கு மேற்பட்ட முஸ்லிம்கள் மத்தியதரைக்கடலிலே மூழ்கி மரணித்தபோதோ, அவர்களை தமது நாட்டுக்குள் வைத்திருப்போம், பாதுகாப்போம், வாழ்க்கை கொடுப்போம் என்று எண்ணாத துருக்கிய அரசு, இன்று இந்த அகதிகளை தமது நாட்டுக்குள் வைத்திருக்க ஐரோப்பிய ஒன்றியத்திடம் கெட்டித்தனமாக பிச்சை கேட்கும் காட்சி முஸ்லிம் உம்மத்திற்கே இழிவைப் பெற்றுத் தருகிறது. ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமின் சகோதரன் என்ற சகோதர வாஞ்சையுடன் அல்லது ஒடுக்குமுறையிலிருந்து தப்பிப்பிழைத்து வருகின்ற மக்களை அரவணைத்து அடைக்களம் கொடுப்பது மார்க்கக் கடமை என்ற சிந்தையுடன் ஒரு நொடிப்பொழுதும் சிந்திக்காது, இந்த முஸ்லிம்களின் அவலத்தை தமது அருவருப்பான அரசியல் அறுவடைக்காக பாவித்து வருவதின் ஊடாக, தானும் ஒரு சாதாரண கீழ்த்தர முதலாளித்துவ தேசமே என்பதை துருக்கி மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறது.
மேலும் இந்த சிரிய அகதிகள் பிரச்சனை, மேற்குலகும், துருக்கியும், ஏனைய பல முஸ்லிம் அரசுகளும் நடைமுறைப்படுத்தும் ஜனநாயகத்தினதும், மதஒதுக்கல் கொள்கையினதும், முதலாளித்துவத்தினதும், தேசியவாதத்தினதும் கோரமான முகத்தை உலகுக்கு தோலுரித்து காட்டியிருக்கிறது. அதேபோல இந்த முறைமையின் கீழ் மனித உரிமையை நிலைநாட்டப்போகிறோம் என்ற நியாயத்தைக் கூறி ஏனைய நாடுகளின் மீது குண்டு வீசி, ஆக்கிரமித்து, காலணித்துவம் செய்யும் அரசுகள், தமது வாக்கு வங்கிகளில் அரசியல் பிரபல்யத்தை வளர்த்துக் கொள்வதற்காக அடக்குமுறைக்குள்ளான பாதிக்கப்பட்ட மக்களின் உரிமைகளை பிடிங்கி எறிவதையும் நாம் அவதானிக்கிறோம். இந்த முறைமைகள் கொள்கையை விட ஜனரஞ்சகத்தை தூக்கிப்பிடிப்பதை காண்கிறோம். இந்த முறைமைகள் மனிதர்களிடமிருந்து மனிதத்தையும், மனிதாபிமானத்தையும், அகற்றி, மனித அவலங்களைக் கண்டு கசியாத கண்களையும், அழுகுரல்களைக் கேட்டு கலங்காத உள்ளத்தையும் விதைத்திருப்பதை கவலையுடன் நோக்குகிறோம்.
அகதிகளாக்கப்பட்டு பொருத்தமான அடைக்களத்தை பெற்றுக்கொள்ள முடியாது, ஒரு நாட்டிலிருந்து இன்னுமொரு நாட்டுக்கும், பின் மீண்டும் அந்த நாட்டிலிருந்து பிரிதொரு நாட்டுக்கும் விரட்டப்பட்டு, பல நாடுகளின் எல்லைகளில் வாரக்கணக்காக, மாதக்கணக்காக பல்லாயிரக்கணக்கான மக்களை பரிதவிக்க விடும் “தேசிய அரசுகள்” என்ற சிந்தனை நடைமுறைக்கு உதவாதது என்பதையும், அது நவீன காலப் பிரச்சனைகளை எதிர்கொள்ள சக்தியற்றது என்பதையும் இந்த அகதிகள் பிரச்சனை நிரூபித்துள்ளது. சொல்லொண்ணா துயரங்களை சந்தித்து வரும் இந்த அகதிகளை உலகம் கையாளும் விதம் இன்றைய உலக ஒழுங்கின் கேவலமான தராதரத்தை படம்பிடித்துக் காட்டுகிறது. மனித விழுமியங்களுக்கும், அவர்களின் கண்ணியத்திற்கும் ஒரு சதத்தின் பெறுமதியைக் கூட வழங்க நினைக்காத, சடவாத முதலாளித்துவ முறைமைகளால் ஆதிக்கம் பெற்ற இன்றைய உலக ஒழுங்கு இந்த அகதிகள் பிரச்சனையையோ அல்லது இதுபோன்ற உலகம் எதிர்நோக்குகின்ற பல்வேறு அரசியல், பொருளாதார, சமூகப் பிரச்சனைகளையோ தீர்ப்பதற்கு தகுதியற்றது என்பதை உலகம் தற்போது புரிந்து வருகிறது. எனவே ஒடுக்கபட்;ட, நாதியற்ற, பல்வேறு அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுயநலமும், போட்டியும் நிறைந்த இன்றைய உலக ஒழுங்கின் கீழ் கட்டுண்டிருக்கும் எந்தவொரு தேசமும் முறையாக உதவப்போவதில்லை.
எனவே உலகம் உடனடியாக இன்னுமொரு உலக ஒழுங்கை வேண்டி நிற்கிறது. அந்த உலக ஒழுங்கு மனித அவலங்களை, சடவாத பொருளியல் இலாபங்களை அடிப்படையாகக் கொண்டோ, குறுகிய தேசிய நலன்களைக் கொண்டோ கையாளாத, மனிதநேயத்தை அடிப்படையாகக் கொண்டு அதிலே எவ்விதத்திலும் சமரசம் செய்யாத ஒரு உலக ஒழுங்காக தோற்றம் பெற வேண்டும். அத்தகைய ஒரு உலக ஒழுங்கை நோக்கி உலகம் நகருவதற்கு, நீதியையும், மனித நேயத்தையும் எந்தகைய விலையைக் கொடுத்தாயினும் உலகில் நிலைநாட்டக்கூடிய நேர்வழிபெற்ற கிலாஃபா ஒன்றினால் மாத்திரமே வழிகாட்ட முடியும். அந்த கிலாஃபா அரசு, உலகிலுள்ள ஏனைய தேசங்களுக்கு மனிதர்களை மனிதர்களாக நோக்குகின்ற, அவர்களின் அவலங்களைக் கண்டு தூய்மையாக அக்கறை கொள்கின்ற, நவீன கால சவால்களை தீர்க்கமான அறிவுடனும், நேர்மையான அணுகுமுறையுடனும் எதிர்கொண்டு தீர்த்து வைக்கின்ற பாதையில் வழி காட்டும்.
பக்கச்சார்புக்கும், அநீதிக்கும் அப்பாற்பட்டவனான, முழு மனித குலத்தினதும் நலனை நன்கறிந்தவனான அல்லாஹ்(சுபு)வின் சட்டதிட்டங்களின் அடிப்படையில் ஆட்சி செய்யும் கிலாஃபா அரசால் மாத்திரமே மனிதகுலத்தை உய்விக்க முடியும். வரலாற்றில் மனிதநேயத்திற்கும், பெரும்தன்மைக்கும், உதவிக்கரம் நீட்டுவதற்கும் தனக்கென தனியான தடம்பதித்த, முஸ்லிம்கள், முஸ்லிம் அல்லாதவர்கள் என்ற பாகுபாடு இல்லாது, அல்லல்பட்ட, அவலப்பட்ட மக்களுக்காக தனது எல்லைகளைத் திறந்து அடைக்களம் கொடுத்த பெருமைக்குரிய வரலாற்றை உடைய கிலாஃபா அரசின் மீள் வருகையே இன்றைய உடனடித் தேவையாகும். அத்தகைய ஒரு அரசு உலகில் தோற்றம் பெறும் போது ஏன் இறைவன் அவனது இறுதித்தூதரை அகிலங்களுக்கெல்லாம் அருட்கொடை என்று அழைத்தான் என்பதை உலகம் வெகுவிரைவில் உணர்ந்து கொள்ளும்! இன்ஷா அல்லாஹ்!
(நபியே!) நாம் உம்மை அகிலத்தாருக்கு எல்லாம் ரஹ்மத்தாக – ஓர் அருட் கொடையாகவேயன்றி அனுப்பவில்லை. (அல் அன்பியா:107)