அரபுலகில் கடந்த சில வருடங்களாக தம்மீது சுமத்தப்பட்டுள்ள ஆட்சிகளை தூக்கியெறிந்து விட்டு தாம் விரும்புகின்ற சிறந்ததொரு ஆட்சி முறையை ஏற்படுத்த உம்மத் முயன்றதும், முயன்று வருவதும் எமக்குத் தெரிந்ததே. எனினும் பல்லாயிரக்கணக்கான உயிர்ச் சேதங்களை சந்தித்து உருவாக்கிய ஆட்சி மாற்றங்கள் மக்கள் விரும்பிய மாற்றத்தை எங்கேயும் கொண்டு வரவில்;லை. ஆட்சி பீடங்களில் சில அலங்கார மாற்றங்கள் இடம்பெற்றன என்றாலும் மக்கள் எதிர்பார்த்த உண்மை மாற்றம் உருவாகவில்லை. எகிப்த்திலும், தியுசீனியாவிலும், லிபியாவிலும் வெடித்த புரட்சிகளின் முடிவு எவ்வாறு அமைந்தன என்பது எமக்குத் தெரியும். ஆட்சிக்கட்டிலில் அமர்ந்திருப்பவர்கள் மாறினாலும், அரசோ, அரசியலமைப்போ, ஆட்சிமுறைமையோ மாறவில்லை. அதனால் அடிப்படை மாற்றம் எங்கேயும் மலரவில்லை.
எனவே உண்மை மாற்றம் வெற்றிகரமாக எட்டப்படவேண்டுமானால் நாம் முஹம்மத்(ஸல்) சமூக மாற்றத்தை ஏற்படுத்திய வழிமுறையை அப்படியே பின்பற்ற வேண்டும். ஏனெனில் சமூக மாற்றத்தை தோற்றுவிப்பது உட்பட எமது வாழ்வின் அனைத்து விவகாரங்களிலும் அவரை முன்னுதாரணமாகக் கொண்டு செயற்பட வேண்டும் என அல்லாஹ்(சுபு) தனது திருமறையிலே கட்டளையிடுகிறான்.
மேலும், (நம்) தூதர் உங்களுக்கு எதைக் கொடுக்கின்றாரோ அதை எடுத்துக் கொள்ளுங்கள்; இன்னும், எதை விட்டும் உங்களை விலக்குகின்றாரோ அதை விட்டும் விலகிக் கொள்ளுங்கள்; மேலும், அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் வேதனை செய்வதில் மிகக் கடினமானவன். (59.7)
அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஆதரவு வைத்து, அல்லாஹ்வை அதிகம் தியானிப்போருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது. (33.21)
முஹம்மத்(ஸல்) அவர்களின் சீராவை எடுத்துப்பார்த்தால், அது மக்காவின் தலைமைகளை சவால் விடுத்ததிலிருந்து மதீனாவில் ஆட்சித்தலைவராக உருவானது வரைக்கும் ஒரு போராட்ட ஒழுங்கை காட்டி நிற்கிறது. அந்தப்பாதையில் அவர்கள் மிக முக்கிய சில செயற்பாடுகளில் ஈடுபடுகிறார்கள். 1. இஸ்லாமிய சித்தாந்தம் பிரதிபலிக்கின்ற ஆளுமைகளாக ஸஹாபாக்களை உருவாக்கி தனக்கென ஒரு குழுவை தயார்படுத்திக் கொள்கிறார்கள். 2. அந்தக் குழுவை சமூகத்திலுள்ள தவறான சிந்தனைகளுக்கு, முறைமைகளுக்கு சவால்விடுக்கின்ற ஒரு இயக்கமாக சமூகக்களத்தில் இயக்குகிறார்கள். 3. சமூகத்திலுள்ள செல்வாக்கு மிக்க தலைவர்களிடமிருந்து தனக்கும், தனது சித்தாந்தத்திற்கும் எவ்வித நிபந்தனையுமற்ற பாதுகாப்பபை நல்குமாறு ஆதரவைத் தேடுகிறார்கள். ஆகவே முஹம்மத்(ஸல்) மாத்திரம்தான் எமது முன்மாதிரியாக இருப்பதால் சமூக மாற்றத்தை எதிர்பார்த்து பயணிக்கின்ற எவரும் இந்த மூன்று கட்டங்களையும் கடைப்பிடிக்க வேண்டியது பர்ள் – கட்டாயக் கடமையாகும். இந்தக் கட்டுரையில் மூன்றாவது கட்டமாக நான் குறிப்பிட்ட நுஸ்ரா(உதவி) கோருவதின் ஊடாக எவ்வாறு குப்ர் தேசமாக இருந்த ஹிஜாஸை இஸ்லாமிய பூமியாக முஹம்மத்(ஸல்) மாற்றினார்கள் என்பது தொடர்பாக சுருக்கமாக விபரிக்கிறேன்.
நுஸ்ரா கோருதல் – ஓர் அல்லாஹ்(சுபு)வின் கட்டளை
முஹம்மத்(ஸல்) அவர்களின் மாமனார் அபு தாலிப் மரணித்த நுபுவத்தின் பத்தாவது வருடம் அளவில் முஹம்மத்(ஸல்) அவர்கள் மக்கா சமூகம் தொடர்பாக ஒரு தெளிந்த நிலைப்பாட்டுக்கு வருகிறார்கள். அதுதான் இதுவரை மேற்கொள்ளப்பட்ட இஸ்லாமிய அழைப்பு மக்கா சமூகத்தை பொருத்தவரையில் நேர்மறையாக தொழிற்படவில்லை, அந்த சமூகம் இஸ்லாமிய சிந்தனைகளையும், எண்ணக்கருக்களையும் தமது பொதுக்கருத்தாகக் கொள்வதற்கு தயார்நிலையில் இல்லை என்ற அரசியல் புரிதலாகும். இந்தக் காலகட்டத்தில்தான் அல்லாஹ்(சுபு) நுஸ்ரா வைக்கோருவது பற்றிய கட்டளையைப் பிறப்பிக்கிறான். நுஸ்ரா என்பது நல்லாதரவு என்று பொருள்படும். நஸ்ர் என்பது அநீதிக்குள்ளாக்கப்பட்டவர்களுக்கு உதவுவதைக்குறிக்கும், அன்ஸார்கள் என்போர் நல்லாதரவு நல்குவோரும், ஒடுக்கப்பட்டவர்களை விடுவிப்போருமாவார்கள். “தக்கீப் கோத்திரத்தவர்களிடமிருந்து நுஸ்ராவைக்கோருவதில் முஹம்மத்(ஸல்) அவர்களின் முனைப்பு” என்ற தலைப்பில் இப்னு ஹிஸாம் தனது வரலாற்று நூலில் ஒரு தலைப்பிட்டு விளக்குகிறார்கள். அபுதாலிப் இறந்ததன் பின்னால், குறைஷிகளின் துன்புறுத்தல் மிகவுமே அதிகரித்துவிட்டது. அந்தளவிற்கான துன்புறுத்தலை அவர் உயிருடன் இருக்கின்றபோது அவர்களுக்கு செய்யக்கூடியதாக இருக்கவில்லை. இவ்வாறு துன்புறுத்தல்கள் அதிகரித்ததன் பின்னால் “ முஹம்மத்(ஸல்) தமக்கு உதவியும், பாதுகாப்பும் தருமாறு கோருவதற்காகவும், தனக்கு அல்லாஹ்(சுபு)விடமிருந்து அருளப்பட்டதை ஏற்றுக்கொள்ளுமாறு கோருவதற்காகவும் தாயிப்பை நோக்கிச் சென்றார்கள். அவர் தாயிப்புக்கு தனியாகவே சென்றார்கள்.” என இப்னு இஷாக் குறிப்பிடுகிறார்.
இப்னு ஹஜரின் பத்ஹ}ல் பாரியில் இப்னு அப்பாஸ்(ரழி) அறிவிப்பிலும், ஹாக்கீமிலும், அபுநுஐமிலும், நல்ல அறிவிப்புடன் பைஹக்கியின் தலைலிலும் அலி(ரழி) கூறியதாக பின்வரும் செய்தி வருகின்றது.
“அரபுக்கோத்திரங்களை அணுகுமாறு முஹம்மத்(ஸல்) அவர்களுக்கு அல்லாஹ்(சுபு) கட்டளையிட்டபோது, நானும், அபுபக்ரும் (ரழி), முஹம்மத்(ஸல்) அவர்களுடன் மினாவில் அமைந்திருந்த அரபுக்கோத்தரங்களின் கூடாரங்களை அடையும் வரையில் இணைந்து சென்றோம்.” இந்த ஆதாரத்தின்படி அரபுக்கோத்திரத்தை அணுகி உதவி கோருங்கள் என்ற கட்டளையும், அந்த கட்டளை வந்த தருணமும் அல்லாஹ்(சுபு)வால் தீர்மானிக்கப்பட்டது என்பது புலனாகிறது.
முஹம்மத்(ஸல்) அவர்களுக்கிருந்த கடைசி அரணான அபுதாலிப்பின் அரவணைப்பும் இல்லாது போன தருணத்தில் அல்லாஹ்(சுபு)விடமிருந்து வந்த இந்தக் கட்டளை காலத்தின் தேவையாகத் தென்பட்டது. இனிமேல் முஹம்மத்(ஸல்) அவர்களின் உயிருக்கு எந்த உத்தரவாதமும் இல்லாத நிலை. அவர்களின் அழைப்புப்பணி ஸ்தம்பிக்க வேண்டிய நிலை. குறைஷிகள் இஸ்லாத்தின் அழைப்பு தொடர இனிமேல் முற்றாக சம்மதிக்க மாட்டார்கள் என்ற நிலை. மறுபக்கம் மக்கா சமூகமும், அதன் பொதுக்கருத்தும் இஸ்லாத்தின் அழைப்புக்கு எதிராக இருந்த காரணத்தினால் முஹம்மத்(ஸல்) அவர்களுக்கு அதிகாரத்தை பெற்றுத்தர மக்கள் உதவ மாட்டார்கள் என்ற நிலையில் இந்தக் கட்டளை வந்தது அதுவரை இருந்த அழைப்புப்பணியின் பாதையில் இன்னுமொரு முக்கிய திருப்பமாக அமைந்தது. நுஸ்ராவின் விளைவுதான், தஃவாவை உட்வேகப்படுத்தவும், இஸ்லாத்திற்கு பாதுகாப்பையும், அதிகாரத்தையும் வழங்கி அதனை முழுமையாக அமூல்படுத்தவும் உதவும் என்ற யதார்த்தத்தில் இறங்கிய அந்தக் கட்டளை முஹம்மத்(ஸல்) அவர்களின் இறுதி வெற்றிக்கு பாதையைத் திறந்தது.
முஹம்மத்(ஸல்) தாயீப்பின் தலைமைகளிடம் நுஸ்ராவைக் கோரினார்
நுஸ்ராவைக்கோரும் பணியின் முக்கிய முதற் கட்டமாக, அரேபிய தீபகற்பத்தின் குறைஷிகளுக்கு அடுத்தபடியான பலவாய்ந்த சக்திகளான தாயிபின் தலைமைகளிடம் நுஸ்ரா கோர முஹம்மத்(ஸல்) தீர்மானித்தார்கள். பலத்திலும், சமூக அந்தஸ்த்திலும் அவர்கள் குறைஷிகளின் போட்டி சக்திகளாக இருந்தார்கள். ஏறத்தாழ சமதரத்தில் இவர்கள் இருந்த காரணத்தினால்தான் அல்குர்ஆன் முஹம்மத்(ஸல்) அருளப்பட்டபோது, வலீத் பின் முகீரா ஏன் இந்த குர்ஆன் மக்கத்தது பெருந்தகைகளுக்கோ, தாயிப்பின் பிரமுகர்களுக்கோ இறக்கப்பட்டிருக்கக் கூடாது என்று கூறி அதனை நிராகரித்த சம்பவம் இந்த உண்மையையே உரைக்கிறது.
மேலும் அவர்கள் கூறுகிறார்கள்: இந்த குர்ஆன் இவ்விரண்டு ஊர்களிலுள்ள பெரிய மனிதர் மீது இறக்கப்பட்டிருக்கக் கூடாதா?” (43:31)
தாயிப்பின் பலம் எத்தகையது என்றால் இஸ்லாமிய அரசு மதீனாவில் நிறுவப்பட்ட பின்னர் கூட தாயிப்பை கைப்பற்றும் நடவடிக்கை பெரும் பலப்பரீட்ச்சையாகவே இருந்தது. இரு தரப்பிலும் பலத்த இழப்புகளுக்கு பின்னர்தான் அவர்களை ஒரு வழிக்கு கொண்டு வர முடிந்தது. தாயிப் நகரை முற்றாக முற்றுகையிட்டு அவர்களின் எதிர்ப்பை முறியடிக்க பீரேங்கிகள் கோண்டு தாக்குதல் நடாத்தியே அது முஸ்லிம்களின் ஆளுகைக்குள் வந்தது.
தாயிப்பின் தலைவர்களையும், பிரபுக்களையும் சந்திக்கும் நோக்கத்துடன் முஹம்மத்(ஸல்) தாயிப் நோக்கி பயணமானார்கள். அவர்களின் முக்கிய மூன்று நபர்களை அவர்கள் சந்தித்து இஸ்லாத்தை அறிமுகப்படுத்தி நுஸ்ரா பற்றியும் சம்பாஷித்தார்கள். எனினும் அவர்களின் முழுமையான நிராகரிப்பும், நுஸ்ரா தர மறுத்தமையும் முஹம்மத்(ஸல்) அவர்களின் மனதை ஆழமாகப் பாதித்தது. எனவே தாயிப்பிலிருந்து திரும்பியதைத் தொடர்ந்து ஹஜ் கிரிகைக்கான காலங்களில் பலம் வாய்ந்த அரபுக் கோத்திரத் தலைவர்களை முஹம்மத்(ஸல்) சந்திக்க ஆரம்பித்தார்கள். இந்த கோத்திரத்தலைவர்கள் இன்று நாம் அரபுலகில் காணும் இராணுவங்களின் தலைவர்கள் மற்றும் உயர் செல்வாக்குள்ள ஏனைய தலைவர்களுக்கு ஒப்பானவர்கள்.
இப்னு ஹிஷாமின் ஸீராவிலே, முஹம்மத்(ஸல்) கோத்திரங்களை அணுகுதல் என்ற தலைப்பின் கீழே இப்னு இஷ்ஷாக் சொல்கிறார்கள், “ முஹம்மத்(ஸல்) திரும்பி மக்காவுக்கு வந்தபோது இஸ்லாத்தை ஏற்றிருந்த ஒரு சிலரைத் தவிர ஏனைய குரைஷிகள் அனைவரும் முன்னிருந்ததைவிட கடுமையாக நடந்து கொண்டார்கள். முஹம்மத்(ஸல்) ஹஜ் காலங்களில் ஏனைய கோத்திரத்தவர்களை சந்தித்து அல்லாஹ்வின் பால் அழைத்தார்கள். தான் அல்லாஹ்வால் அனுப்பப்பட்டிருக்கின்ற தூதர் என்பதை ஏற்று அல்லாஹ்(சுபு) எதனைக்கொண்டு அனுப்பினானோ அதனை அவன் வெளிப்படுத்தும்(நிலைநாட்டும்) வரையில் தன்னைப் பாதுகாக்குமாறும் கோரினார்கள்.”
ஹஜ் காலங்களில் யாரெல்லாம் மக்கள் மத்தியில் செல்வாக்கும், பலமும் உடைய ஸ்தானத்தில் இருந்தார்களோ அவர்களையெல்லாம் முஹம்மத்(ஸல்) சந்தித்து வந்தார்கள் என்பதை அனைத்து ஸீரா நூற்களும் சுட்டிக்காட்டுகின்றன. இப்னு இஷ்ஹாக் மேலும் குறிப்பிடுகிறார்,” முஹம்மத்(ஸல்) இந்த விவகாரத்தை(நுஸ்ராகோருதலை) ஹஜ் காலங்களில் மக்கள் அவர்களை சந்தித்த வேளைகளிலெல்லாம் தொடர்ந்தேர்ச்சையாக செய்து வந்தார்கள். அவர்கள் கோத்திரங்களை அல்லாஹ்(சுபு)வின்பாலும், இஸ்லாத்தின்பாலும் அழைத்து தன்னையும், தனக்கு அல்லாஹ்(சுபு)விடமிருந்து வந்த வழிகாட்டலையும் அறிமுகப்படுத்தினார்கள். மக்காவுக்கு மக்களில் முக்கியத்துவமிக்க, கண்ணியமிக்க எவரேனும் வருகிறார்கள் என்று கேள்விப்படுமிடத்து அவர்களில் ஒருவரையேனும்; அல்லாஹ்(சுபு)வின்பாலும், தனது அழைப்பின்பாலும் அவர் அழைக்காமல் இருக்கவில்லை.”
முஹம்மத்(ஸல்) பனு கல்ப் எனும் கோத்திரத்தை அவர்களின் இடத்திற்கு சென்று சந்தித்தார்கள். எனினும் முஹம்மத்(ஸல்) அவர்களை அவர்கள் நிராகரித்து விட்டார்கள். அல் யமாமாஹ்வைச் சேர்ந்த பனீ ஹனீபாவை அவர்களின் இடத்தில் சந்தித்தபோது வேறெந்த கோத்திரத்தவர்களும் நடந்துகொள்ளாத அளவிற்கு மிகவும் கர்வத்துடன் முரட்டுத்தனமாக நடந்து கொண்டார்கள. முஹம்மத்(ஸல்) பனீ ஆமிர் இப்னு ஸாஃஸா ஐ சந்தித்தபோது அவர்கள் முஹம்மத்(ஸல்) அவர்களுக்கு பிறகு தமக்கு அதிகாரத்தை தந்தால்தான் தாம் ஆதரவு நல்குவோம் என நிபந்தனை விதித்தபோது அதனை முஹம்மத்(ஸல்) நிராகரித்து விட்டார்கள். பின்னர் யெமன் வரையில் சென்று முஹம்மத்(ஸல்) பனீ கிந்தாவை சந்தித்தபோது அவர்களும் முஹம்மத்(ஸல்) அவர்களுக்கு பிறகு அதிகாரத்தை தந்தால்தான் ஆதரிப்போம் என்றார்கள். எனவே அவர்களின் நுஸ்ராவையும் நபியவர்கள் நிராகரித்தார்கள். பக்ர் பின் வைல்லினரை அவர்களின் முகாம்களில் சென்று அழைத்தார்கள். எனினும் தாங்கள் பாரசீகர்களின் எல்லைக்குள் இருந்ததால் முஹம்மத்(ஸல்) அவர்களின் அழைப்பை ஏற்க முடியாத நிலையைக்கூறி மறுத்தார்கள். பனீ ரபீஆவின் முகாம்களுக்கு சென்றபோது அவர்கள் முஹம்மத்(ஸல்) அவர்களுக்கு எந்த பதிலையும் தெரிவிக்கவில்லை. பாரசீகர்களின் எல்லைக்கு அண்மித்து வாழ்ந்த பனீ சைபான்களை அவர்களின் முகாம்களில் சந்தித்தபோது அவர்கள் அரபுக்களுக்கு எதிராக உங்களைப் பாதுகாக்க நாங்கள் தயார், ஆனால் பாரசீகர்களுக்கு எதிராக அதனைச் செய்ய முடியாது என்று கூறினார்கள். அதற்கு முஹம்மத்(ஸல்) அவர்கள் பின்வருமாறு பதிலளித்தார்கள்.
உங்கள் உண்மையின் சொல்வன்மை ஏறத்தாழ அதன் (நுஸ்ராவின்) நிராகரிப்புக்கு கிட்டியதே. அல்லாஹ்(சுபு)வின் தீனை அனைத்துப் பக்கங்களாலும் பாதுகாக்காத நிலையில் அவனது தீனுக்காக நிற்க(உதவ) ஒருவராலும் முடியாது.” என்று கூறி அதனையும் மறுத்துவிட்டர்கள். அரபுக்களினால் தனக்கு ஏற்பட்ட வெறும் அச்சுறுத்தல்களுக்காகத்தான் முஹம்மத்(ஸல்) கோத்திரங்களைச் சந்தித்து உதவி தேடினார்கள் என சிலர் கூறும் வாதம் உண்மையென்றிருந்தால் இந்த கோத்திரத்தவர்கள் அரபுக்களுக்கு எதிராக உங்களைப் பாதுகாக்க நாங்கள் தயாராக இருக்கிறோம் எனக் கூறிய சமயத்தில் அதனை அவர்கள் ஏற்றுக்கொண்டிருப்பார்கள். மாறாக அவர்களின் நோக்கம் இஸ்லாத்திற்கு பூரணமான அதிகாரத்தை பெற்றுக்கொடுப்பதாகவே இருந்தது. அதற்காவே அவர்கள் நுஸ்ராவைக் கோரினார்கள். இஸ்லாத்தை முழு உலகிலும் நிலைநாட்டும் பாதையில் பாரசீகர்களுக்கு எதிராகவும் களத்தில் நிற்க வேண்டி ஏற்படும் என்பதை அவர்கள் நன்கு உணர்ந்திருந்தார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
முஹம்மத்(ஸல்) பல்வேறு கோத்திரத்தவர்களால் தொடர்ந்தேர்ச்சையாக நிராகரிக்கப்பட்ட நிலையிலும் நுஸ்ராவைக் கோருவதை தொடர்ந்து மேற்கொண்டு வந்தார்கள். அவர்கள் தடுமாறவில்லை, விரக்தியடையவில்லை, தனது இந்த முயற்சியை கைவிடாது, மாற்றாது தொடர்ந்து செய்து வந்தார்கள். அல் வாக்கிதியிடமிருந்து ஷஅத் அல் மஆத்தில் பின்வரும் தகவல் பதியப்பட்டிருக்கிறது. “முஹம்மத்(ஸல்) அணுகி, அழைந்த கோத்திரங்களாக நாங்கள் அறிந்தவையாவன, பனு ஆமிர் இப்னு ஸாஃஸா, முஹாரிப் இப்னு ஹப்ஸா, பஷாரா, கஷ்ஷான், முர்ரா, ஹனீபா, ஸ}லைம், அப்ஸ், பனு நதார், பனு பிகாஃ, கிந்தா, ஹாரித் இப்னு கஅப், உர்வா மற்றும் ஹத்ரமிஸ் என்பனவாகும். இவர்களில் ஒருவரேனும் நேர்மறையாக பதிலளிக்கவில்லை.”
முஹம்மத்(ஸல்) அவர்கள், அல்லாஹ்(சுபு) தனது தீனுக்கு சிறந்த நுஸ்ராவைக்கொண்டு ஆதரவளிக்கும் வரையில் நுஸ்ரா கோருதல் என்ற நடைமுறையை கைவிடாது தொடர்ந்து மேற்கொண்டு வந்தார்கள். இப்னு ஹிஷாமில் இப்னு இஷ்ஷாக் சொல்கிறார், “ அல்லாஹ்(சுபு) தனது தீனின் ஆதிக்கத்தை எப்போது நிலைநாட்ட விரும்பினானோ, தனது தூதரை கண்ணியப்படுத்தி அவனது வாக்குறுதியை பூர்த்திசெய்ய நாடினானோ அந்த சமயத்தில்தான் முஹம்மத்(ஸல்) ஒரு ஹஜ் காலப்பகுதியில் அன்ஸார்களைச் சந்தித்தார்கள். வழமையாக ஹஜ்ஜின் போது கோத்திரங்களுடன் தன்னை அறிமுகப்படுத்துவதைப்போன்று இம்முறையும் அரபுக்கோத்தித்தவர்களிடம் தன்னை அறிமுகப்படுத்தினார்கள். அந்தவகையில் அல் அகபாவிலே அவர் இருந்த சந்தர்ப்பத்தில் அல்லாஹ்(சுபு) அருள்பாலிக்க நினைத்திருந்த ஹஷ்ரஜ் என்ற கோத்திரவர்களை முஹம்மத்(ஸல்) சந்தித்தார்கள். ஹஷ்ரஜ் கோத்தரத்தவர்கள் முஹம்மத்(ஸல்) அவர்களின் அழைப்பை ஏற்றுக்கொண்டு அவ்ஷ் என்ற கோத்திரத்தவர்களுடன் தங்களுக்கிருந்த பிணக்கை தீர்த்துக் கொள்ள சென்றார்கள். அடுத்த வருடம் அவர்கள் பன்னிரண்டு நபர்களுடன் வந்து அல் அகபாவில் முஹம்மத்(ஸல்) அவர்களைச் சந்தித்தார்கள். இதுதான் முதலாவது அகபா உடன்படிக்கை. பின்னர் முஸ்ஆப் இப்னு உமைர்(ரழி) அவர்களினால் மதீனா சமூகம் (இஸ்லாத்திற்காக) தயார்ப்படுத்தப்பட்டது. பின்னர், மதீனா நகரின் பிரப்புகள்(தலைவர்கள்) முஹம்மத்(ஸல்) அவர்களைச் சந்தித்து அவர்களுக்கு பாதுகாப்பும், ஒத்துழைப்பும் வழங்குவதாக முன்மொழிந்தார்கள். அவர்கள் அல் அகபாவிலே முஹம்மத்(ஸல்) அவர்களை மீண்டும் சந்தித்து அவர்களுக்கு பைஆ(விசுவாச உறுதிமொழி) கொடுத்தார்கள். அந்த உடன்படிக்கை முஹம்மத்(ஸல்) அவர்களுடன் இணைந்து போரிடுவதற்கான உடன்படிக்கையாகும்.”
உலக வரலாற்றையே மாற்றியமைத்த இந்த பைஆவில் நபியவர்களுக்கும், அன்ஸார்களுக்கும் இடையே இடம்பெற்ற சம்பாஷணை மிகவும் தீர்க்கமான, “ நீங்கள் உங்களுடைய பெண்களையும், பிள்ளைகளையும் பாதுகாப்பதைப்போன்று என்னையும் பாதுகாப்பீர்கள் என்ற அடிப்படையில் இந்த பைஆவை நான் பெற்றுக்கொள்கிறேன்.” என்று நபிகளார் சொன்ன போது, அல் பராஃ இப்னு மன்ஸுர்(ரழி) அவர்கள் முஹம்மத்(ஸல்) அவர்களின் கையைப் பிடித்துக் கொண்டு பின்வருமாறு சொன்னார்கள், “நிச்சயமாக யார் உங்களை சத்தியத்துடன் தனது தூதராக அனுப்பினானோ அவன் மீது சத்தியமாக!, எங்களது பிள்ளைகளை பாதுகாப்பதைப்போன்று உங்களை நாங்கள் பாதுகாப்போம். எனவே எங்களது பைஆவைப் பெற்றுக்கொள்ளுங்கள் அல்லாஹ்(சுபு)வின் தூதரே! அல்லாஹ்(சுபு) மீது ஆணையாக! நாங்கள் போரின்; புதல்வர்கள், போராயுதங்கள் எங்களுக்கு விளையாட்டுப்பொருட்களை ஒத்தது, இதுதான் மூதாதையர்களின் காலத்திலிருந்து எமது பாரம்பரியமாகும்.” என்று சொன்ன இந்த வார்த்தையுடன் அல்லாஹ்(சுபு)வின் நாட்டத்தின்படி இஸ்லாமிய அரசிற்கான அடிப்படை ஒப்பந்தம் கைச்சாத்தானது. பின்னர் இஸ்லாமிய அரசு நிறுவப்பட்டது.
நுஸ்ரா: மாற்றத்தை ஏற்படுத்த ஒரே வழி!
நிச்சயமாக, எத்தகைய கஷ்டங்களுக்கும், துன்புறுத்தல்களுக்கும் முகம்கொடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டாலும், முஹம்மத்(ஸல்) அல்லாஹ்வின் கட்டளைக்கு இணங்க இடைவிடாது நுஸ்ராவைக்கோரி வந்ததிலிருந்து நுஸ்ராவைக் கோருதல் என்பது மாற்றத்திற்கான பாதையில் பர்த் ஆன கடமையாகும் என்பது தௌ;ளத் தெளிவாகத் தெரிகிறது. எனவே மீண்டும் இஸ்லாமிய அரசை – அதாவது கிலாஃபத்தை நிறுவுவதற்கும், இஸ்லாமிய வாழ்க்கை முறையை மீட்டெடுப்பதற்கும் இவ்வழிமுறையைப் பின்பற்றுவது கட்டாயமானதும் நபிவழியுமாகும். இவ்வழிமுறையிலிருந்து பிறழ்ந்து செல்வது நபிவழிக்கு மாற்றமானதாகும். முஹம்மத்(ஸல்), தாருள் குப்ரிலிருந்து தாருள் இஸ்லாத்தை தோற்றுவித்த அதே தலைகீழ் மாற்றத்தைத்தான் நாமும் முஸ்லிம் உலகில் எதிர்பார்க்கிறோம். எனவே அந்த மாற்றத்தை ஏற்படுத்துவற்கு நபிவழியில் பயணிக்கக்கூடிய, பலமும் செல்வாக்குமுள்ள மக்களிடமிருந்து (அஹ்லுல் ஹல்லி வல் அக்த்) நுஸ்ராவைப்பெற்று இஸ்லாமிய வாழ்வை மீட்டெடுக்கக்கூடிய ஒரு இஸ்லாமிய அரசியல் கட்சியால் மாத்திரமே அது சாத்தியப்படும். இன்றைய யதார்த்தத்தில் இத்தகைய நுஸ்ரா முஸ்லிம் உலகிலுள்ள இராணுவங்களின் தலைமைகளிடமிருந்தோ அல்லது பலமிக்க பெரிய கோத்திரங்களின் தலைவர்களிடமிருந்தோதான் பெறப்பட முடியும். எனவே முஹம்மத்(ஸல்) செய்தது போல அல்லாஹ்(சுபு) இறக்கியருளியதை முழுமையாக நடைமுறைப்படுத்தக்கூடிய இஸ்லாமிய கிலாஃபத்தை நிறுவுவதற்கு பலமும், செல்வாக்குமுள்ள தலைவர்களிடமிருந்து அந்த அரசியல் இயக்கம்; நுஸ்ராவைக் கோர வேண்டும். இவ்வாறாக, எப்போது முழுமையாக இஸ்லாத்தை நடைமுறைப்படுத்த பலமும், அதிகாரமுமிக்க தலைமைகள் தலை நிமிர்ந்து முன்வருகிறார்களோ அப்போது முஸ்லிம் உலகில் நாம் அனைவரும் எதிர்பார்க்கும் உண்மை மாற்றத்தைக் காணலாம்.
ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு உதவி செய்தால், அவன் உங்களுக்கு உதவி செய்து உங்கள் பாதங்களையும் உறுதியாக்கி வைப்பான். (47:7)