நவம்பர் 23, 2012 ஜெனீவாவில் அமெரிக்காவுக்கும் – ஈரானுக்கும் இடையில் ஒரு ஒப்பந்தம் நடக்கிறது. இரு நாடுகளும் தமது உறவுகளை சுமூகப்படுத்திக்கொள்கின்றனர். இந்த ஒப்பந்தம் இருதரப்புக்குமிடையான அனைத்து பிரச்சனைகளையும் உடனே தீர்க்கும் வண்ணம் அமையாவிட்டாலும் அதற்கான முதற்படியாக கருதப்பட்டது. £7 பில்லியன் பெறுமதியான பொருளாதாரத் தடைத்தளர்வு ஈரானுக்கு வழங்கப்படுகிறது. ஈரான் அணுச் செறிவூட்டும் நடவடிக்கைகளை அடுத்த 6 மாதங்களுக்கு முடக்கி வைக்கிறது. முன்னைநாள் பேச்சுக்களைப் போலல்லாது இம்முறை பேச்சுக்கள் வித்தியாசமான சூழலில் இடம்பெறுகிறது. முன்னைய காலங்களில் அமெரிக்கா ஈரானுடனான பேச்சுக்களை P5+1(அமெரிக்கா, ரஸ்யா, பிரித்தானியா, பிரான்ஸ், சீனா மற்றும் ஜேர்மனி) என்ற கூட்டணியின் கையில் விட்டுவைத்திருந்தது. ஆனால் இம்முறை 1979ஆம் ஆண்டுக்கு பின்னர் முதன் முதலாக அமெரிக்கா தனது அதியுச்ச அதிகாரிகளைக்கொண்டு நேரடியாகப் பேச்சுக்களில் குதித்தது. வழமைபோல் பேச்சுக்களை கைவிடும் மனோபாவத்துடன் அமெரிக்கா இப்பேச்சுக்களை அணுகாமல் உண்மையில் ஒரு தீர்வு எட்டப்பட வேண்டும் என்ற தன்னார்வத்துடன் செயற்பட்டது. இந்தப்பேச்சுக்களை தொடர்ந்து செப்டெம்பர் 2013இல் அப்போது புதிதாக பதவியேற்றிருந்த ஈரானிய ஜனாதிபதி ஹஸன் ரூஹானி தனது முதலாவது ஐக்கிய நாடுகள் பொதுச்சபை பங்கேற்புக்காக அமெரிக்காவுக்கு பயணமாகிறார். இரு நாடுகளுக்கிடையிலான தேன்நிலவுப் பயணத்திற்கு பாதை திறக்கப்படுகிறது.
இந்த நிகழ்வுகளின் நகர்வுகள் கொஞ்சம் வித்தியாசமாகவே தெரிந்தன. ஏன் அமெரிக்கா ஈரானின் தோலில் தட்டிவிட வேண்டும்? அண்மைக்காலம் வரையில் அமெரிக்காவை ஆகப்பெரிய சைத்தான் எனக்கூவிய ஈரான் ஏன் அமெரிக்காவுடன் ஊடல் கொள்ள வேண்டும்? இங்கேதான் முஸ்லிம்கள் என்ற அடிப்படையில் சர்வதேச நிகழ்வுகளின் முன்னேற்றங்களை மிக நுணுக்கமாக நோக்க வேண்டிய தேவை உணரப்படுகிறது. ஒரு கணம் நாம் கண்மூடிவிட்டால் அரசியல் அந்தபுறங்களில் காட்சிகள் மாறிவிடலாம். உலக வல்லாதிக்க சக்திகளின் நோக்கங்கள் என்ன? அவர்கள் எமது நிலங்களில் விரித்திருக்கும் அரசியல் சதிவலைகள் என்ன என்பதை நாம் உணராது போனால் எமது உம்மத்தை விடுதலை செய்யும் சரியான பாதையிலிருந்து நாம் திசை மாறி விடுவோம். இந்த உண்மையை மனதில் நிறுத்தி அமெரிக்க – ஈரானிய கூட்டுறவை அலசுவது எமது எதிர்காலத்தை பாதுகாக்க தவிர்க்க முடியாததாகும்.
ஈராக்கிய – சிரியப் புதிர்
இந்த பேச்சுக்களும், உடன்படிக்கைகளும் ஈராக்கிய யுத்தத்தின் பின்னர் இடம்பெறுகின்றன என்பது இங்கே கவனிக்கத்தக்கது. 2003 இல் அமெரிக்கா ஈராக்கை ஆக்கிரமித்தபோது, அது கையில் வைத்திருந்த இராணுவத் தேர்வுகள்; எதுவும், ஈராக்கில் தாம் நீண்ட நெடிய காலம் நிலைகொள்ளவேண்டிவரும் என்பதை எதிர்வு கூறவில்லை. தன்னிடம் ஈராக்கிய இராணுவம் ஆயுதங்கள் சகிதம் முழுமையாக சரணடைந்துவிடும், ஈராக்கிய மக்கள் சதாமிடமிருந்து தம்மை மீட்டதற்காக ரோஜா கொத்துக்;களுடன் வரவேற்பார்கள் என்றே அமெரிக்கா எதிர்பார்த்தது. எனினும் ஆக்கிரமிப்பு ஆரம்பித்து ஏறத்தாழ ஒரு மாதகாலத்துக்குள் ஈராக்கிய இராணுவம் துடைத்தெறியப்பட்டாலும், அமெரிக்கா எதிர்பார்த்த தடல்புடலான வரவேற்புகள் மாத்திரம் கிட்டாமல் போனது. கிளர்ச்சிப்போராட்டங்களே பதிலுக்கு வெடித்தன. நாளுக்கு நாள் இந்தப்போராட்டங்கள் திகிழையூட்டக்கூடியதாகவும், வீரியமாகவும் வளர்ந்தன. 2005ஆம் ஆண்டுக்குள் நுழைந்ததுதான் தாமதம்; கிளர்ச்சிப்படைகளின் தொடர் தாக்குதல்களை முகம்கொடுக்கமுடியாது அமெரிக்கா மூச்சுத்திணர தொடங்கியது. இந்தப்போரிலிருந்து மீட்சி பெறமுடியாது என்பதை நன்கு உணரத்தொடங்கிய அமெரிக்கா, தமது இயலாமையை மூடிமறைப்பதற்கு ஈராக்கை சுரண்டும் திட்டங்களை ஏதோவொரு வழியில் நிறுவிவிட்டு, ஈராக்கிலிருந்து மெதுவாக வெளியேறும் திட்டத்தை வகுக்க தலையைக்குடைந்து கொண்டது. அமெரிக்கா எதிர்பாராமல் சந்தித்;த இந்த அதிர்ச்சியை மூன்று விதமாக எதிர்கொண்டது.
முதலாவது, அது ஈராக்கை சுற்றியுள்ள தனது முகவர் நாடுகளை தன்னை மீட்கும்படி உதவிக்கு அழைத்தது. குறிப்பாக, துருக்கி, சிரியா மற்றும் ஈரானை கூப்பிட்டது. இரண்டாவது, அது கிளர்ச்சிக் குழுக்களிடையே இன மற்றும் குழு(ஷியா-சுன்னி) வாதங்களை தூண்டிவிட்டு மோதவிட்டது. மூன்றாவது, ஈராக்கில் இயங்கிய சந்தர்பவாதிகளையும், மோசடிக்குழுக்களையும் பயன்படுத்தி ஒரு அரசியல் கட்டமைப்பை உருவாக்கியது.
பிராந்தியத்தில் குறிப்பிடத்தக்க காலமாக தனது இராணுவப் பிரசன்னத்தை குறைத்து, தான் உருவாக்கிய அரசியல் கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும் என்பதே அமெரிக்காவின் உண்மையான விருப்பம். அதுதான் அதற்கு இலாபகரமானது என்பதால் அத்திசையிலேயே பயணிக்க அமெரிக்கா முயன்று வந்தது. எனினும் பிராந்தியத்தில் அரபுப் புரட்சிகள் ஏற்படுத்திய சூறாவளியும், குறிப்பாக சிரியப் புரட்சியின் கொந்தளிப்புகளும் அத்திசை நோக்கி வேகமாக முன்னேறி சில அடைவுகளை உடனடியாக அடையவேண்டிய நிர்ப்பந்தத்தை தோற்றுவித்தன. அரபுப்புரட்சிகள் மத்தியகிழக்கின் அமெரிக்க வியூகத்திற்கு பாரிய சவால் விட்டுள்ளதாக அது காண்கிறது. எனவே வேறு வழியில்லாமல் தாராண்மைவாத லிபரல் இஸ்லாமிய குழுக்களுடன் இணைந்து செயற்பட வேண்டிய நிலை அதற்கு ஏற்பட்டிருக்கிறது. எகிப்த்திலே அடிவருடி சீசியினை வைத்து புரட்சியின் விளைவை கட்டுப்படுத்த முடிந்த அமெரிக்காவுக்கு சிரியாவிலே போராடும் இஸ்லாமிய போராளிகளும், இயக்கங்களும் சிம்ம சொப்பனமாக மாறியுள்ளனர். அங்கே போராளிகளின் கரங்கள் பலப்பட்டு வருவதை அது துல்லியமாக உணரத்தொடங்கிவிட்டது. அதனால் தனது தி;ட்டம் முற்றாக தவிடுபொடியாகமுன், தனக்கு இசைவான ஒரு சூழல் மீண்டும் உருவாகும்வரை பஸார் அல் அஸதை பதவியில் பாதுகாக்க வேண்டிய தேவை அமெரிக்காவுக்கு ஏற்பட்டுள்ளது. இதன் வெளிப்பாடுதான் ஜெனிவா ஒன்று, இரண்டு, மூன்று பத்து என்று அமெரிக்கா தனது சாகாக்களுடனும்;, சில பொழுதுகளில் தனது எதிரிகளுடன் கூட பொது இலக்கிற்காக கூட்டுச்சேர்ந்துகொண்டு மாநாடு மாநாடுகளாக நடத்தி வருகிறது.
இந்த அரசியற் களத்தின் பின்னணியிலிருந்துதான் அமெரிக்க திட்டங்களின் அமூலாக்கத்திற்கு ஈரான் முக்கிய கருவியாக தொழிற்படுவதை நாம் புரிந்து கொள்ளவேண்டும். ஈரானுடைய உதவி மாத்திரம் அமெரிக்காவுக்கு கிட்டாமல் இருந்திருந்தால் பிராந்தியத்தில் அமெரிக்காவின் அரசியல் மேலாதிக்கம் சரிந்து சல்லடையாகிவிடும். மேலும் ஈரானின் உதவி கிட்டாதிருந்திருந்தால் பஸாரின் கதையும் என்றோ முடிந்திருக்கும். இந்த உண்மையை ஹிஸ்புல்லாஹ்க்களும் பல முறை தமது அறிக்கைகளில் ஒப்புக்கொண்டுள்ளனர். எனவே பிராந்திய இலக்குகளுக்காக ஈரானுடன் நல்லுறவை பேணுவதும், வளர்ப்பதும் அமெரிக்காவுக்கு தவிர்க்கப்படமுடியாதது என்பதால் அல்லும்பகலும் தமது உறவுகளை சுமூகமாக வைத்திருக்க அமெரிக்கா முயன்று வருகின்றது.
தெஹ்ரானின் பார்வையில் மத்திய கிழக்கு
ஈரான் தன்னை பிராந்திய வல்லரசாக வளர்த்தெடுக்க காய் நகர்த்திக்கொண்டிருகின்றது. இந்த உண்மை பல்வேறுபட்ட ஈரானிய அரசியல்வாதிகளில் கருத்துக்களில் தொனிப்பதை தெளிவாக அவதானிக்கலாம். உதாரணங்களாக சிலதை இங்கே குறிப்பிடலாம். 2009 இல் ஈரானிய வெளிவிவகார அமைச்சர் Manouchehr Mottaki சொன்னார், “சர்வதேச விவகாரங்களில் ஈரானின் பாத்திரத்தை அவதானித்தால் தெரியும் ஈரான் ஒரு பிராந்திய வல்லரசாக எழுந்து வருவது” அதேபோல் மஹ்மூத் அஹ்மதினெஜாத் ஒரு முறை இவ்வாறு கூறியிருந்தார், “நாங்கள் அதிவேகத்தில் வல்லரசாக மாறிவருகிறோம். எங்களது பலம் இராணுவ ஆயுதங்களிலிருந்தோ, பொருளாதார ஆளுமையிலிருந்தோ வரவில்லை. எங்களது பலம் மக்களின் உள்ளங்களையும், ஆன்மாக்களையும் செல்வாக்குச் செலுத்துவதில் எங்களுக்குள்ள ஆளுமையிலிருந்தே வருகின்றது. அது அவர்களை பீதிகொள்ளச் செய்கிறது.”
இவ்வாறு ஈரானின் வல்லரசுக்கனவை நனவாக்குவதற்கு, சர்வதேச ரீதியாக வாழ்கின்ற ஷிஆக்களின் அதிகாரபூர்வமான பிரதிநிதியாக தம்மை ஏற்றுக்கொள்ளச் செய்வது ஒரு முக்கிய மைற்கல்லாக அவர்கள் கருதுகின்றனர். உதாரணமாக ஷிஆ கிரசண்ட் (ஷிஆ வளர்பிறை) என்ற வியூகத்தை சாட்டாகக்கொண்டு ஷீஆக்கள் கணிசமானளவு வாழ்கின்ற வெளிநாடுகளில் அது தலையிடுவதைக் குறிப்பிடலாம். இது சவூதி அரேபியா போன்ற நாடுகளை எதிர்கொள்வதில் ஈரான் பயன்படுத்தும் முக்கிய மூலோபாயமாகும். சவூதி அரேபியாவின் கிழக்கு மாகாணங்களில் ஷிஆக்கள் செறிந்து வாழ்கின்றனர். மேலும் அப்பிராந்தியங்கள்தான் சவூதியின் முக்கிய எண்ணெய் வயல்கள் காணப்படும் பகுதிகளாகும். சவூதியை பலகீனப்படுத்துவதற்காக சவூதிக்குள் இடம்பெற்ற பல எழுச்சிப்போராட்டங்களுக்கு ஈரான் முழுமையான பங்களிப்பைச் செய்தது. மேலும் பெரும்பான்மை ஷிஆக்களை, சிறுபான்மை சுன்னி முஸ்லிம்கள் ஆண்டுவரும் பஹ்ரேனிலும் ஈரான் இதே கொள்கையைத்தான் கடைப்பிடித்தது. பஹ்ரைனிலே மக்கள் எழுச்சி ஆரம்பித்து வீரியமடைந்த போது சவூதி அரேபியா உடனடியாக தனது துருப்புக்களை பஹ்ரேனுக்குள் அனுப்பியதும், ஈரான் பஹ்ரேனில் நிலவும் நிலையற்ற அரசியல் சூழலைப்பயன்படுத்தி பஹ்ரேனின் ஆட்சிபீடத்தை ஆட்டங்காணச்செய்துவிடும் என்ற அச்சத்தில்தான்.
மேலும் பிராந்தியத்தில் ஒரு உறுதியான அலகாக இயங்குவதை நோக்கமாகக் கொண்டே ஈரான் சிரியாவின் தலைமையுடன் மிக நெருக்கமான உறவைக் கொண்டிருக்கிறது. இரு நாடுகளுக்குமிடையே மிக உறுதியான இராணுவ, பொருளாதார மற்றும் அரசியல் உறவுகள் பேணப்படுகின்றன. அஸாத்தின் அரசுக்கு முட்டுக்கொடுப்பதற்காக கணிசமானளவு இராணுவத்தாளபாடங்களை வழங்கியுள்ள ஈரான் எண்ணெய் மற்றும் நிலவாயுக்களை மிகக்குறைந்த விலைக்கு வழங்கி வருகிறது. சிரியாவில் தொடரும் மக்கள் புரட்சியினால் அஸாத்தின் அரசு சரிந்து வீழ்ந்துகொண்டிருப்பதை தடுத்து நிறுத்துவதற்காக பொருளாதார உதவிகள் தொடங்கி, இராணுவ ராஜதந்திர உதவிகள் வரை ஈரானின் முழுமையான ஒத்துழைப்பை நோக்கியால் இவர்களின் அரசியல் கூட்டுறவை புரிந்து கொள்ளலாம். ஈரானின் தலையீடோ அல்லது அதனது புரட்சிப் பாதுகாப்புப்படையின் நேரடிப்பங்களிப்போ கிடைக்காதிருந்திருத்தால் சிரிய அயோக்கிய அரசு என்றோ அழிந்து போயிருக்கும்.
ஈரான் பிராந்தியத்தில் சந்திக்கின்ற மிகப்பெரிய சவால்களின் ஒன்று இஸ்ரேலிடமிருந்தும், சவூதியிடமிருந்தும் வருகின்ற பிராந்திய ஆதிக்கப்போட்டியாகும். அவர்களும் பிராந்திய மேலாதிக்கத்திற்காக முயன்று வருபவர்கள் என்பதால் இந்த போட்டிநிலையை ஈரானால் தவிர்க்க முடியாது. அதேபோல ஈரான் அமெரிக்காவிடமிருந்தும் பெரும் சவாலை எதிர்நோக்கியுள்ளது. ஏனெனில் அமெரிக்கா இந்தப்பிராந்தியத்தை வேறுயாருடனும் பகிர்ந்து கொள்வதை முற்றிலும் மறுத்து வருகின்றது. எனவே இந்த சவால்களுக்கு மத்தியில் தமது பிராந்தியக்கனவை எந்நிலையிலும் விட்டுக்கொடுக்க மாட்டோம் என்பதை நிரூபிக்க ஈரான் சில அரசியல் வீம்புகளை இடைக்கிடையே செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளது.
தம் விடயத்தில் எச்சரிக்கையாக இரு என்பதை அமெரிக்காவுக்கு உணர்த்தும் வண்ணம் ஈரானின் கொள்கைகள் அமெரிக்காவை நம்பாதிருத்தலிலிருந்து அமெரிக்காவுடன் நெருங்கி இயங்குதல் என்ற நிலைக்கு அடிக்கடி மாறி வருவதை அவதானிக்கலாம். 2009 இல் ஈரானியப்புரட்சியின் முப்பதாவது நினைவாண்டை அடிப்படையாகக் கொண்டு பிபிசி தயாரித்த விபரணப்படத்திற்கு வழங்கிய நேர்காணலில் ஈரானில் 1997-2005 காலப்பகுதியில் ஜனாதிபதியாக இருந்த முஹம்மத் கதாமி கருத்துச் சொல்கையில், தனது நிர்வாகத்தில் அமெரிக்காவுடன் ஈரானின் உறவை சுமூகநிலைக்கு கொண்டுவருவதற்காக பல்வேறுபட்ட முயற்சிகள் இடம்பெற்றதாகவும் மேலும் ஆப்கானிஸ்தான் ஆக்கிரமிப்பின்போது அமெரிக்காவுக்கு தாம் ஆப்கானிஸ்தானிலுள்ள தாக்குதல் இலக்குகள் தொடர்பான வேவுத்தகவல்களை பகிர்ந்து கொண்டதாகவும் தெரிவித்தார். வட கூட்டமைப்பினர் (Norther Alliance) காபுலை கைப்பற்றுவதற்கு தாம் ஆற்றிய பாரிய பங்களிப்பு தொடர்பாகவும், காபுலிலே ஒரு அரசாங்கத்தை அமைப்பதற்கு அமெரிக்காவுக்கு எவ்வாறு தாம் உதவினோம் என்பது தொடர்பாகவும் கோடிட்டுக் காட்டினார். இதற்கு காரணம் தலிபான்களை அமெரிக்கா தாக்குவது என்பது ஈரானின் நலனையும் அடிப்படையாக்கொண்டதே என்றும் அவர் கூறினார். இதனைத்தொடர்ந்து அமெரிக்காவுடன் சுமூக உறவை ஏற்படுத்தும் முயற்சியில் ஈரான் இறங்கியது 2003 இல் அமெரிக்கா ஈராக்கை ஆக்கிரமித்தபோது. எனினும் அமெரிக்கா அதற்கு அப்போது சம்மதிக்கவில்லை.
இதே ஆவணப்படத்தில் தாம் ஈராக்கிய ஆக்கிரமிப்பின்போது அமெரிக்காவுடன் பங்காளியாகிக் கொள்ள முயன்ற விபரத்தை கதாமி பின்வருமாறு விபரிக்கிறார். “சதாம் ஹ}சைன் எமது எதிரி, அவர் அழிக்கப்படுவதை நாங்களும் விரும்பியிருந்தோம். எனவே ஆப்கானிய அனுபவத்தை ஈராக்கிலும் மீட்டுவோம். ஆறுடன் ஆறை சேர்த்துக்கொள்வோம் – ஈராக்குடன் எல்லையைக்கொண்ட ஆறு நாடுகளையும்;, அமெரிக்காவையும், (ஐ.நா) பாதுகாப்புச் சபை உறுப்பினர்களையும் எகிப்த்தையும் இணைத்து. ஈரானை பிரச்சனைகளை தீர்க்கக்கூடிய ஒரு சக்தியாகப் பாருங்கள், மாறாக அதனையே ஒரு பிரச்சனையாகப் பார்க்காதீர்கள்;.” இவ்வாறு சதாம் ஹ}சைனை வீழ்த்தும் முயற்சியில் முழுமையாக பங்குபற்றுவதற்கு ஈரான் விரும்பினாலும் அமெரிக்கா அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. இருந்தபோதிலும் ஈரான், 1982 இல் தெஹ்ரானில் உருவாக்கப்பட்ட Islamic Supreme Council of Iraq(ISCI) என்ற அமைப்பைப்பயன்படுத்தி ஈராக்கிலுள்ள ஷிஆத்தரப்புக்களை ஒன்றிணைத்து அமெரிக்கா உருவாக்கிய அரசியல் முறைமையில் உள்நுழைத்தது. இந்த நகர்வு தென் ஈராக்கிலுள்ள கிளர்ச்சிகளை முற்றுப்பெறச் செய்து அமெரிக்காவை மத்திய ஈராக்கில் உருவாகியிருந்த கிளர்ச்சிகளில் கவனத்தைக் குவிக்க உருதுணையாக இருந்தது. அரசாங்க உயர் பதவிகள், இலஞ்சங்கள், வெகுமதிகள் என்பவற்றின் ஊடாக ஈராக்கிய தீர்வுக்குள் ஈரான் சார்பு தரப்புக்களை அமெரிக்கா உள்வாங்கிக்கொண்டது. இவ்வாறு ஈரான் விரும்பியிருந்தால் ஈராக்கிலே, அமெரிக்காவை இரத்தப்பெருக்கெடுத்து அழிய விட்டிருக்கலாம். எனினும் அது பூரண விருப்பத்துடன் அதற்கு பிராணவாயுவை செலுத்திக்கொண்டிருந்தது.
வாசிங்டனின் பார்வையில் மத்திய கிழக்கு
தனது பிராந்தியம் தொடர்பாக ஈரான் கொண்டுள்ள இலட்சியத்தை எவ்வாறு கையாள்வது என்ற விடயம், அமெரிக்காவுக்கு ஒரு பிரதான சவாலாகவே இருந்து வந்திருக்கிறது. அந்தச் சவாலை எதிர்கொள்வதுற்கு அமெரிக்கா, ஈரானை கட்டுப்படுத்தல், அதனுடன் இணங்கி ஈடுபாடு காட்டுதல், யுத்த சமிஞ்ஞையை வெளிப்படுத்தும் விதமாக மிரட்டுதல் போன்ற கொள்கைகளை மாற்றி மாற்றி பயன்படுத்தி வந்தது. ஒரே பிராந்தியத்தில் அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் பிராந்தியத்தை மேலாதிக்கம் செய்தல் என்ற ஒரே இலட்சியம் இருப்பதே அமெரிக்கா ஈரான் தொடர்பாக தொடர்ந்து சந்திக்கும் பிரதான சவால். பல சந்தர்ப்பங்களில் ஈரானின் இந்த இலட்சியத்தையே பயன்படுத்தி பிராந்தியத்தில் தனது இலக்குகளை அமெரிக்கா அடைந்திருக்கிறது. எனினும் அமெரிக்க அரசியல் மட்டங்களில் ஈரானை முழுமையாக நம்ப முடியாது என்ற ஒரு ஆழமான சந்தேகக்கண் தொடர்ந்து இருந்து வருவதால் இரு நாடுகளுக்குமிடையே உறவை சுமூகப்படுத்துவது எப்போதும் முழுமையாக வெற்றியளிப்பதில்லை. எனினும் நிலைமை இன்று மாறியிருக்கிறது. ஈராக்கிலும், பின் ஆப்கானிலும் ஆழிச்சகதிக்குள் மாட்டிக்கொண்ட அமெரிக்காவை சிரியாவின் களநிலை முற்றாகப்புதைத்து விடமுன் ஈரானின் வாசஸ்தளத்தை அமெரிக்கா நேரடியாகத் தட்ட வேண்டிய சூழல் ஏற்பட்டது. முஸ்லிம் உம்மத்தின் தளராத போராட்டங்களினால் இராணுவ ரீதியாக முழுப்பிராந்தியத்திலும் அவமானத்தை சந்தித்த அமெரிக்கா தனது நிர்வாணத்தை மறைத்துக்கொள்ள அல்லது தனது மேலாதிக்கக்கனவை அடைகாக்க ஈரானுடன் கைகோர்க்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது. நவ-பழமைவாத (Neo-Conservative Administration) நிர்வாகத்தினால் ஏற்படக்கூடிய அரச மாற்றம் பற்றிய அச்சம் பொதுவான விடயங்களில் ஈரானுடன் இணங்கிச்செல்லல் என்ற ஒரு நிலைப்பாட்டை அமெரிக்க நிர்வாகம் அவசர அவசரமாக எடுக்க வேண்டிய சூழலை ஏற்படுத்தியது. எனினும் ஈரானின் மீது ஆளுமை செலுத்த அவர்களுடன் ஈடுபாடுகாட்டுவதா அல்லது அவர்களின் பிராந்தியக்கனவை களைக்கும் விதமாக இரும்புக்கரங்கொண்டு நசுக்குவதா என்ற விடயம் இன்றும் அமெரிக்க கொள்கை வகுப்பாளர்கள் மத்தியில் இருக்கின்ற பிரதான சிந்தனைக்குழப்பங்களில் ஒன்றுதான் என்பதையும் நாம் கவனத்திற்கொள்ள வேண்டும்.
இன்றுவரை அமெரிக்கா, மத்திய கிழக்கிலே தனது இலக்குகளை அடைந்து கொள்வதற்கு பிராந்தியத்திலுள்ள பல்வேறுபட்ட சக்திகளை ஒருவர் தோண்டிய குழிக்குள் மற்றவரை தள்ளிவிடுவதன் ஊடாக பலச்சமநிலையை பேணி அடைந்து வருகின்றது. பிராந்தியத்தில் இஸ்ரேலின் வியாபிப்பை கட்டுப்படுத்த ஈரானையும், ஈரானின் ஆதிக்கக் கனவை கட்டுப்படுத்த இஸ்ரேலையும் அது கையாள்கிறது. இவர்கள் இருவரையும் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்கு சவூதியை பயன்படுத்த, அது ஈரானுக்கும், இஸ்ரேலுக்கும் எதிராக இயங்கும் ஆயுதக்குழுக்களை போசித்து வளர்த்து ஆயுதங்களை விநியோகித்து தனது கைமாறைச் செய்து வருகின்றது. இதனூடாக நேரடி அமெரிக்க இராணுவத்தலையீடு தவிர்க்கப்படுகிறது. ஈரானின் அணுப்பரிசோதனை நிலைகளை அழிக்க இராணுவத்தாக்குல் நடத்தவேண்டும் என்ற அழுத்தத்தை இஸ்ரேல் அமெரிக்காவிடம் பலமுறை செய்திருந்தாலும் அதனால் இஸ்ரேல் பலம்பெற்று தான் பிராந்தியத்தில் பேணிவரும் பலச்சமநிலை குழம்பிவிடலாம் என்ற எச்சரிக்கை உணர்வுடன் அமெரிக்கா அதனை தொடர்ந்து எதிர்த்து வருவது இதற்கொரு உதாரணமாகக் கொள்ளலாம்.
ஈரான் தன்னைச் சூழ அமைந்திருக்கும் ஷியாக்களின் பரம்பல் அதிகமாகவுள்ள பிராந்தியங்களை அல்லது தேசங்களை பலப்படுத்தி நிலத்தொடர்புள்ள ஒரு பிறை வடிவிலான அகன்ற ஷியா கூட்டிணைவொன்றை உருவாக்கக் கனவு காண்கிறது. ஷியா கிரஸண்ட் என அறியப்படும் இந்த நிகழ்ச்சித்திட்டத்தையும் அமெரிக்கா தனக்குச் சாதகமாகக் கருதுகிறது. ஏனெனில் ஈரானின் இந்த நிகழ்ச்சித்திட்டம் முஸ்லிம் உலகை பௌதீக ரீதியாக கூறுபோடுவதுடன், இதனால் தீவிரமடையக்கூடிய ஷியா-சுன்னி குழுவாத மனோநிலை உம்மத்தை மேலும் பிளவுபடுத்தி பலகீனப்படுத்தும். எனவே பிராந்தியத்தில் தனது மேலாதிக்கத்தை தொடர்ந்து பேணலாம் என அது கருதுகிறது. எனினும் அதற்கான கெட்டபெயர் தனக்கு வரப்போவதில்லை. மாறாக ஷியா கிரஸண்ட் திட்டத்தை நடைமுறையில் அமூல்படுத்தும் ஈரானுக்கும், ஷியாக்களுக்குமே அதனால் கெட்டபெயர் வரப்போகிறது என்ற கபடத்தனத்தில் அதற்கு ஆதரவு கொடுத்து வருகிறது.
பிராந்தியத்திலுள்ள ஏனைய நாடுகளுக்கு ஈரானின் இலட்சியக்கனவை ஒரு அபாயக்குறியாக காட்டி மத்திய கிழக்கில் தனது இராணுவப்பிரசன்னத்தை நியாயப்படுத்திய அமெரிக்கா, இன்று அரபுப்புரட்சிகளில் சிக்கிய மத்திய கிழக்கில் தனது இலக்கு நோக்கிய ஒரு அரசியல் வியூகத்தை நிர்மாணிப்பதில் தடுமாற்றத்தை சந்திக்கிறது.
பொதுநலனுக்கான பந்தம்
அமெரிக்காவுடன் தனது உறவை சுமூகப்படுத்தியதன் ஊடாக பிராந்தியத்தில் தனது செல்வாக்கை உயர்த்த நினைத்த ஈரானுக்கு அதற்கான ஒரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளதுடன், அமெரிக்காவுக்கு ஈரானின் ஆசையை நிறைவேற்ற வழிவிடுவதன் ஊடாக சுன்னிகளுக்கு எதிராக ஷியாக்களை நிறுத்தி முஸ்லிம்கள் பலகீனப்படுத்தும் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. இந்த சுயநலனையும், பேராசையையும் அடிப்படையாகக்கொண்ட தீய உடன்பாட்டின் அடிப்படையிலேயே இரு தரப்புக்களும் காய்களை நகர்த்திக்கொண்டிருக்கின்றன. ஜெனிவாவிலே இரு தரப்புக்களும் சந்தித்து ஆராய்ந்ததும் இதனைத்தான். எனவே ஈரானின் ஒட்டுமொத்த நிகழ்ச்சி நிரலையும், இத்தகைய உடன்பாடுகளையும் ஆராய்ந்து பார்த்தால்; ஈரான் இஸ்லாத்தின்பாலோ அல்லது அதற்கென்ற ஒரு சி;த்தாந்தத்தின்பாலோ, குறைந்தபட்சம் அது பிரதிநிதித்துவப்படுத்துவதாகச் சொல்கின்ற ஷியாயிஸத்தின்பாலோ இயங்கவில்லை என்பதை தெளிவாகக் புரிந்துகொள்ளலாம். மாறாக ஈரானின் நிகழ்ச்சி நிரல்களெல்லாம் அதன் தேசிய மேலாதிக்கத்தை பிராந்தியத்தில் உயர்த்துவது என்ற குறுகிய தீவிர தேசியவாத எதிர்பார்ப்பின் அடிப்படையிலேயே நிர்மாணிக்கப்பட்டிருப்பதை அவதானிக்கலாம். எனவே ஈரான், இந்த குறுகிய இலக்கை அடைந்து கொள்வதை அளவுகோளாகக் கொண்டே தனது செயற்பாடுகளை எடைபோடுகிறது. அந்த இலக்கிற்கு சாதகமான எத்தகைய நடவடிக்கையிலும் ஈடுபடுத் துணிகிறது. எனவே ஷியா கிரஸண்ட் என்ற அதனது நிகழ்ச்சித்திட்டமும்கூட இந்த நோக்கத்தை இலக்காகக்கொண்டதேயல்லாமல் ஷியா கிரஸண்டின் ஊடாக ஷியாயிஸத்திற்கு சேவகம் செய்வதற்காகவல்ல. ஷியாக்கொள்கைதான் அதன் இலக்காக இருந்திருந்தால் அதன் நடவடிக்கைகள் அனைத்து ஷியாக்களையும் தழுவியதாக அமைந்திருக்கும். எனினும் ஈரான் உலகிலுள்ள அனைத்து ஷியாக்களையும்; பாரபட்சமின்றி அணுகுவதில்லை. மாறாக தனது பிராந்தியத்தில் தனது மேலாதிக்கத்தை ஏற்றுக்கொள்ளும் ஷியாக்களுக்கு மாத்திரம்தான் அது உதவி வருகிறது என்ற விடயத்தை ஆராய்ந்தால் இது இலகுவாகப்புலப்படும். உதாரணமாக அஜர்பைஜான் அல்லது தஜிகிஸ்தான் போன்ற நாடுகளில் வாழுகின்ற ஷியாக்கள் அதிகளவில் ஒடுக்கப்பட்டாலும் அவர்களுக்கு உதவுவது பற்றி ஈரான் எப்போதும் சிந்திப்பதில்லை. மாறாக தனது பிராந்தியக்கனவுக்கு அத்தியவசியமானது என்பதால் ஆப்கானிஸ்தானிலோ அல்லது சவூதியிலோ வாழும் ஷியாக்களின் பிரச்சனைகளை அது தனது பிரச்சனைகளாகக் கருதுகிறது.
முடிவுரை
அமெரிக்காவை பொருத்தமட்டில் அமெரிக்காவுக்கும் – ஈரானுக்குமிடையில் உருவாகியுள்ள இந்த சுமூக நிலையும், புரிந்துணர்வும் ஈரானை பிராந்தியத்தில் ஊக்கப்படுத்துவதன் ஊடாக உம்மத்தை ஷியா – சுன்னி என்ற அடிப்படையில் சிதைத்து, பிளவுபடுத்துவதற்கு ஈரானை ஒரு கருவியாகப் பயன்படுத்துவதற்காகும். மேலும் சிரியாவிலே அமெரிக்க நிகழ்ச்சி நிரலை பாதுகாப்பதற்கு ஈரானின் வகிபாகம் அமெரிக்காவுக்கு மிகவும் முக்கியமானது. ஈரானின் உதவியில்லாதிருந்திருந்தால் அஸாத்தின் கணக்கு என்றோ தீர்க்கப்பட்டு இஸ்லாமிய நிகழ்ச்சிநிரல் நடைமுறைக்கு வந்திருக்கும். அது அமெரிக்காவின் அராஜகத்திற்கு முற்றிபுள்ளி வைத்திருக்கும். அஸாத்தின் அழிவுக்கு பின்னால் சிரியாவில் உதயமாகக்கூடிய கிலாஃபத்தின் வருகை குறித்த இந்த அச்சமே அமெரிக்க கொள்கை வகுப்பாளர்கள் ஈரானை சுமூகமான ஒரு உறவுடன் அவசர அவசரமாக களத்துக்கு கொண்டுவருவதற்கு நிர்ப்பந்தப்படுத்தியது. மத்திய கிழக்கில் நீண்ட காலங்களாக தோல்வியைச் சந்தித்து வரும் அமெரிக்காவின் மானத்தை மறைப்பதற்கு எடுக்கப்படும் உச்சகட்ட முயற்சிகளில் ஒன்றே ஈரானுடனான ஊடலாகும் என்பதை நாம் மனதிற் கொள்ள வேண்டும். எனவே மத்திய கிழக்கிலே களத்தில் நிற்கின்ற சிந்தனையாளர்களும், அரசியல்வாதிகளும், செயற்பாட்டாளர்களும் அமெரிக்கா போஷிக்க நினைக்கும் ஷியா-சுன்னி குழுவாதத்தை அடிப்படையாகக்கொண்டு செயற்படாமல் ஒரு அரசியல் முறைமையின் ஊடாக முஸ்லிம்களின் வேறுபாடுகளைக் கையாண்டு அவர்களின் ஒற்றுமைக்காக உழைத்து எதிரி வளர்த்தெடுக்க நினைக்கும் இத்தகைய குழுவாதங்களுக்கு எதிராக களமிறங்க வேண்டும்.
மேலும் கட்டம் கட்டமாக வெளுத்து வரும் ஈரானின் சாயமும், அதனது குறுகிய தேசிய நலனைத்தவிர இஸ்லாமிய நிகழ்;ச்சி நிரலுக்கும் அதற்கும் எத்தகைய தொடர்பும் இல்லை என்ற உண்மையும, ஈரானின் நயவஞ்சகத்தனத்தை முஸ்லிம்கள் முன் தோலுரித்துக்காட்டியிருக்கிறது. அமெரிக்க-ஈரானிய அணுதிட்ட உடன்பாட்டின் பின்னால் உள்ள யதார்த்தத்தை இனங்கண்ட உம்மத், உம்மத்தை பிளவுபடுத்தும் தீய குழுக்களுக்கு பின்னால் இருக்கும் ஈரானின் மறைகரத்தையும், அஸாத் போன்ற அரக்கனை பாதுகாக்க அது காட்டும் பிரயத்தனத்தையும் தற்போது நேரடியாக சான்று பகர்கிறது. அந்த வகையில் மத்திய கிழக்கில் அமெரிக்காவின் நலனைப்பாதுகாப்பதில் சவூதியையும், இஸ்ரேலையம் விஞ்சிய நிலையில் ஈரான் களமிறங்கியிருக்கிறது என்பதை 79 இன் ஈரானியப்புரட்சியை இன்றும் அசைமீட்டிக் கொண்டிருப்பவர்களும், ஈரான் இஸ்ரேலின் எதிரி, அமெரிக்காவின் எதிரி என்று பிதற்றிக்கொண்டிருப்பவர்களும், ஈரானின் வளர்ச்சி இஸ்லாத்தின் வளர்ச்சி என மணற்கோட்டை கட்டுபவர்களும் எப்போது சிந்திப்பார்கள்?