IS இயக்கத்துடன் இணைந்து அண்மையில் சிரியாவில் கொல்லப்பட்ட சப்ராஸ் நிலாம் முஹ்சினின் செய்தி இலங்கையில் உறுதிப்படுத்தப்பட்ட கனம் முதல் நாடெங்கும் ஒரு பரபரப்பு ஏற்படுத்தப்பட்டதை நாம் அறிவோம். பிரதான ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் கிலாஃபா, இஸ்லாமிக் ஸ்டேட், ஷரீயா, ஜிஹாத், டெரரிஸம் போன்ற பதங்கள் அதிகம் பந்தாடப்பட்டதையும் அறிவோம்.
அல்-கய்தா, தலிபான் போன்ற இயக்கங்கள் இலங்கையில் இயங்குவதற்கான எந்தவொரு சான்றுகளும் இல்லாத நிலையில் கூட அவற்றை இலங்கையில் தடைசெய்ய வேண்டும் என்ற கோரிக்கையை சில வருடங்களுக்கு முன்னர் பொதுபலசேனா போன்ற பௌத்த தீவிரவாத அமைப்புக்கள் முன்வைத்ததை நாம் மறந்திருக்க மாட்டோம். எவ்வாறேனும் உலகளாவிய முஸ்லிம் தீவிரவாதத்துடன் இலங்கை முஸ்லிம்களையும் தொடர்புபடுத்தி அதனை வைத்து அரசியல் செய்ய எதிர்பார்த்திருக்கும் சக்திகளுக்கு வாயில் அவள் கிடைத்ததைப்போல் முஹ்சினின் விவகாரம் மாறும் என்பது வியப்புக்குரிய விடயமல்ல.
இலங்கையில் மாத்திரமல்லாது அரபுலகில் கடந்த இரு தசாப்த காலமாக தீவிரமாக வளர்ந்து வந்த இஸ்லாமிய எழுச்சியின் விளைவு, செப்டெம்பர் 11 தாக்குதலுக்கு பின்னான கொந்தளிப்பான நிலை, ஆப்கான், ஈராக் ஆக்கிரமிப்பிற்கு எதிராக இடம்பெற்ற முஜாஹிதீன்களின் தொடர் போராட்டங்கள், இடையிடையே ‘இஸ்லாமிய அரசை’ எமது கட்டுப்பாட்டு பகுதிகளில் பிரகடனப்படுத்துகிறோம் என்ற அறிவிப்புக்கள், இவ்வியக்கங்கள் ஹூதூத் தண்டனைகளை ஆங்காங்கே வழங்கிய பரபரப்புக்கள் என அனைத்தும் ஒன்று சேர்ந்து ஷரீயா, இஸ்லாமிக் ஸ்டெட் போன்ற பதங்கள் உலகின் அனைத்து மட்டங்களிலும் அவதானத்தை ஈர்த்தன. இது தொடர்பாக எழுதுவதும், பேசுவதும் தமக்கு கிடைத்த மிகப்பெரும் ஊட்டச்சத்தாக கருதிய உலக ஊடக முதலைகள் அதனை ஊதிப்பெருப்பித்தன. மேலும் கிலாஃபா, இஸ்லாமிக் ஸ்டேட் போன்ற சொற்கள் மீது முஸ்லிம் உம்மத்திடம், குறிப்பாக முஸ்லிம் இளைஞர்களிடம் இருக்கும் ஈர்ப்பைப் புரிந்து கொள்ளும் எவரும் ஆளுக்கோர் தலைப்பாகையை கட்டிக்கொண்டு தம்மை அமீருல் முஃமீனீன்களாக, அல்லது கலீஃபாக அறிவிக்கும் போக்கும் எதிர்வுகூறப்பட்டதுதான்.
இத்தகைய ஒரு சூழலில் தான் திடீரென ஈராக்கிலும், சிரியாவிலும் கணிசமான பிராந்தியத்தை தமது ஆயுதப்பிடிக்குள் கொண்டுவந்த ISIS இயக்கம் தனது தலைவரான அபு பக்ர் அல் பக்தாதியை தன்னிச்சையாக கலீஃபாவாக அறிவித்தது. இந்த அறிவிப்பு கிலாஃபத்தை தமது கனவாகக்கொண்டு இயங்கிய பல துடிப்புள்ள முஸ்லிம் இளைஞர்களை அதன் பக்கம் கவர்ந்திழுத்தது. இந்த அறிவிப்பை வழமைபோல் தமது நவ காலனித்துவ நிகழ்ச்சி நிரலுக்கு சாதகமாக பயன்படுத்துவது எவ்வாறு என்ற தீவிர இலக்குடன் மேற்குலகு இயங்க ஆரம்பிக்க, மறுபுறம் தமது புலமையை காட்ட முண்டியடிக்கும் அவதானிகள் இந்த மாற்றம் குறித்து பல்வேறு ஆய்வுகளையும், ஊகங்களையும் எழுதிக்குவிக்கித்தனர். இஸ்லாமிய சிந்தனையாளர்களும், இயக்கங்களும் தம் மீதும் யாராவது தீவிரவாத சேறு பூசிவிடுவார்களோ என்ற விழிப்புடன் அதிகமாக இது குறித்து பேச ஆரப்பித்துள்ளனர். இவ்வாறு இன்று முஸ்லிம் உலகிலும், அதற்கு வெளியிலும் கிலாஃபா, கலீஃபா, இஸ்லாமிய அரசு பற்றிய எதிரும் புதிருமான தகவல்கள் மக்களை வந்தடைகின்றன. இவை கிலாஃபா பற்றிய ஒரு வாதத்தை ஏற்படுத்தி அது குறித்த ஒரு அலையை ஏற்படுத்தியிருந்தாலும், ‘கிலாஃபா’ என்ற கோட்பாடு பற்றிய புரிதலில் மிக அதிமான குழப்பத்தை ஏற்படுத்தி வருவது கவலையான விடயம்.
ஊடகங்களும், உலகளாவிய கருத்தாளர்களும் இந்த சந்தர்ப்பத்தை நன்றாகப் பயன்படுத்திக்கொண்டு ‘கிலாஃபா’ என்ற எண்ணக்கருவை ஒரு தீவிரவாத சிந்தனையாக பரப்புரை செய்ய முனைகின்றனர். முஸ்லிம்களே தமக்குள்ளால் இஸ்லாமிய ஆட்சி என்ற சிந்தனையையே கேள்விக்குட்படுத்தும் அல்லது முற்றாகவே மறுதளிக்கும் அளவிற்கு அவர்களின் மனோபாவத்தை கொண்டுவருவதற்கு மிகவும் அதிகளவான பிரயத்தனங்கள் மேற்கொள்ளப்படுவது வெளிப்படையாகத் தெரிகின்றன. இந்த சூழலில் உள்ளீடு எதும் இல்லாத, பெயரளவிலான, வெற்றுக் கிலாஃபா பிரகடனங்களை எதிர்ப்பதும், மறுப்பதும் எவ்வாறு முக்கியமோ, குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க நினைக்கும் குப்ரிய சக்திகளின் நிகழ்ச்சி நிரலை தோலுரிப்பது எவ்வாறு முக்கியமோ, அதனைவிடவும் ‘கிலாஃபா’ என்ற கோட்பாட்டையும் அது இஸ்லாத்தில் வகிக்கும் உயரிய வகிபாகத்தையும் முஸ்லிம்களின் மனதில் ஆழமாக நிலைகொள்ளச் செய்வது மிகவும் முக்கியமாகும். கிலாஃபா இஸ்லாத்தின் அடிப்படைக்கோட்பாட்டுடன் தொடர்பானது. அதனை புரக்கணிப்பதும், எதிர்த்து நிற்பதும் எக்காரணத்தைக் கொண்டும் தாண்டக்கூடாத விளிம்பு.
இவ்வுண்மை இஸ்லாமிய மூலாதாரங்களிலும், முஸ்லிம்களின் நெடிய வரலாற்றிலும் ஆழப்பதிந்துள்ளமை கண்கூடு. முஸ்தபா கமாலின் தீய கரங்களால் கிலாஃபாவிற்கு சமாதிகட்டப்பட்டது முதல் கிலாஃபா என்ற மந்திரச் சொல்லுக்கு உலகளாவிய முஸ்லிம்களிடம் இருக்கும் அரசியல், ஆன்மீக அந்தஸ்தத்தை தமக்கு சாதகமாகப் பயன்படுத்த எகிப்த்தின் மன்னர் பாரூக், மக்காவின் ஷெரீப் ஹூசைன், ஜோர்தானின் மன்னர் ஹூசைன் மேலும் ஈரானில், சூடானில் என பலர் இதற்கு முன்னரும் முனைந்ததை நாம் அறிவோம். தம்மை உய்விக்க ஏதேனும் வராதா என ஏங்கிக்கொண்டிருக்கும் முஸ்லிம்களுக்கு இவ்வறிவிப்புக்கள் ஆரம்பத்தில் ஒரு உத்வேகத்தைக் கொடுத்தாலும் அதன் சாயம் வெளுக்க வெளுக்க கிலாஃபத்தை எதிர்பார்த்து ஏமாறுவதே எமது வழக்காகிவிட்டது என முஸ்லிம்கள் மத்தியில் மனச்சோர்வையும், கிலாஃபா தொடர்பான ஆழமான சிந்தனைக் குழப்பத்தை இவை ஏற்படுத்தி விடுகின்றன.
உண்மையான கிலாஃபாவின் மீள்வருகையை எக்காரணத்தை கொண்டும் அனுமதிக்க முடியாது என தம் கண்களில் எண்ணெய் ஊற்றி காவல்காக்கும் உலக வல்லரசுகள் இத்தகைய போலி இஸ்லாமிய ஆட்சிகள் இடைக்கிடையே வந்து போவதை அனுமதிக்கும் சூட்சுமத்தை இதற்கு முன்னரும் செய்திருக்கிறார்கள். அதனூடாக இந்த இஸ்லாமிய ஆட்சிகளின் இயலாமையையும், அநீதிகளையும் முஸ்லிம்களின் மனதில் ஆழமாக வேறூண்றச் செய்வதினூடாக கிலாஃபா நோக்கிய பயணங்களும், வேலைத்திட்டங்கள் நடைமுறைக்குதவாத விடயங்களாக காட்டுவதில் ஓரளவுக்கு வெற்றியும் பெற்றுள்ளனர்.
எனவே இந்த நயவஞ்சக சதுரங்கத்தில் எமது சிந்தனைகள் பலியாக முன்னர் கிலாஃபா என்ற எண்ணக்கரு தொடர்பாக நாம் சில முக்கிய நிலைப்பாடுகளை எடுத்தாக வேண்டும்.
1. கிலாஃபா என்பது இஸ்லாத்தின் அதிமுக்கிய கடமைகளில் ஒன்று. அதற்கு தீவிரவாதச் சாயம் பூசும் முயற்சியை நாம் முற்றாக நிராகரிக்க வேண்டும்.
ஒருபுறம் கிலாஃபா என்பது ஒரு சில தரப்பினர் மாத்திரம் தூக்கிப்பிடிக்கும் கோட்பாடு, இஸ்லாம் என்ற ஒரு பெரிய பரப்பில் அது சிறு கூறு, இன்றைய களநிலவரத்திற்கு பொருந்தாத ஒரு பழைய வேலைத்திட்டம் என்ற ஒரு கருத்து பரவலாக முன்வைக்கப்படுகிறது. மறுபுறம் கிலாஃபா என்ற வேலைத்திட்டம் தீவிரவாத சிந்தனை கொண்டவர்கள் அடைக்களம் புகுந்திருக்கும் ஒரு சிந்தனை, கனவு அல்லது இலட்சியம் என்ற ஒரு கருத்து உலகெங்கும் பரப்புரை செய்யப்படுகிறது. இதில் இலங்கையும் விதிவிலக்கல்ல.
எனினும் இஸ்லாத்தை பொருத்தவரையில் கிலாஃபா என்பது எமது தீனை முழுமையாக அமுல்படுத்துவதற்கும் அதனை உலகெங்கும் காவிச்செல்வதற்கும் இஸ்லாம் வரையறுத்துள்ள நிறைவேற்று அலகு என்பதை நாம் சந்தேகமறப் புரிந்து கொள்ள வேண்டும். அந்த அலகு இல்லாத நிலையில் இஸ்லாம் எமது அரசியல், பொருளாதார, சமூக வாழ்வில் முற்றாக ஆளுமையிழந்து வெறும் ஆன்மீக கிரிகைகளுக்கும், ஒழுக்க வழிகாட்டலுக்குமான வெறும் போதனைகளின் தொகுப்பாக மாறிவிடும். கிலாஃபா என்ற இந்த அதிகார அலகுதான் இஸ்லாமிய பூமியின் எல்லைக்குள் வாழும் முஸ்லிம்களினதும், முஸ்லிம் அல்லாதோர்களினதும் அனைத்து விவகாரங்களையும் மேற்பார்வை செய்வதிலும், பாதுகாப்பு வழங்குவதிலும் பொறுப்பு வகிப்பதால் அதனை மீள நிறுவுவதை விட எமக்கு வேறு வழி கிடையாது.
நிச்சயமாக நாம் தாம் “தவ்ராத்”தை யும் இறக்கி வைத்தோம்; அதில் நேர்வழியும் பேரொளியும் இருந்தன. (அல்லாஹ்வுக்கு) முற்றிலும் வழிப்பட்ட நபிமார்கள், யூதர்களுக்கு அதனைக் கொண்டே (மார்க்கக்) கட்டளையிட்டு வந்தார்கள்; இறை பக்தி நிறைந்த மேதை (ரப்பனிய்யூன்)களும், அறிஞர் (அஹ்பார்)களும் – அவர்கள் அல்லாஹ்வின் வேதத்தைப் பாதுகாக்க கட்டளையிடப்பட்டவர்கள் என்பதனாலும், இன்னும் அவ்வேதத்திற்குச் சாட்சிகளாக அவர்கள் இருந்தமையாலும் அவர்கள் (அதனைக் கொண்டே தீர்ப்பளித்து வந்தார்கள்; முஃமின்களே!) நீங்கள் மனிதர்களுக்கு அஞ்சாதீர்கள்; எனக்கே அஞ்சுங்கள். என்னுடைய வசனங்களை அற்பக் கிரயத்திற்கு விற்று விடாதீர்கள்; எவர்கள் அல்லாஹ் இறக்கி வைத்ததைக் கொண்டு தீர்ப்பளிக்கவில்லையோ அவர்கள் நிச்சயமாக காஃபிர்கள்தாம். (அல் மாயிதா 5:44)
எனவே இஸ்லாமிய ஆட்சியியலில் கிலாஃபா என்ற கோட்பாடு தொன்றுதொட்டு வந்த அனைத்து (ஏற்றுக்கொள்ளப்பட்ட) சிந்தனை வட்டங்களாலும் அங்கீகரிக்கப்பட்ட ஒரு விடயமாகும். கிலாஃபா என்பது எத்தகைய சவால்களை முஸ்லிம் உம்மத் சந்தித்த போதிலும் தொடர்ந்தேர்ச்சையாக நடைமுறைப்படுத்தப்பட்டு பாதுகாக்கப்பட்டு வந்த ஒரு விடயம் என்பதற்கு எமது வரலாறு சான்று பகர்கிறது.
எனவே எம்மில் பலர் தற்போது நினைப்பதைப்போல் அது வெகு சாதாரணமான விடயம் கிடையாது. அதனால் தான் இமாம் அபு ஹனீபா (ரஹ்) கிலாஃபாவை உம்முல் பராயித் – கடமைகளுக்கெல்லாம் தாய் என அழைத்தார்கள். அதனால்தான் இமாம் ஷாபி அதனை – பர்ள் அஸாஸி – கடமைகளுக்கெல்லாம் அடிப்படைக்கடமை என சொன்னார்கள்.
எனவே கிலாஃபா நோக்கிய பணியை அல்லது சிந்தனையை யாரும் தீவிரவாதமாக சித்தரிக்க நினைத்தால் அதனை முற்றாக நாம் நிராகரிக்க வேண்டும். அத்தகைய தீய சிந்தனை எம்மையும் தொற்றிக்கொண்டால் அது ஒரு அபாயக்குறி என்பதில் நாம் விழிப்பாக இருக்க வேண்டும்.
2. முஸ்லிம்களை இன ரீதியாகவும், குழு ரீதியாகவும் பிளவுபடுத்துவதையும், அதன் பால் அழைப்பதையும் நாம் முற்றாக நிராகரிக்க வேண்டும்
இன்று இன ரீதியாகவும், குழு ரீதியாகவும் முஸ்லிம்களிடையே காணப்படும் முரண்பாடுகள் பாரிய வன்முறைகளாக வெடித்து விஷ்வரூபம் எடுத்துள்ளதைப்போல் முஸ்லிம்களின் நெடிய வரலாற்றில் எங்கும் நாம் காணமுடியாது. எமது வரலாற்றில் கருத்து முரண்பாடுகளும், வீரியமான அரசியல் முரண்பாடுகளும் நிலவிய காலங்களில் கூட இன்றைய சூழலைப்போல் அது தலைவிரித்தாட வில்லை. இந்நிலை மிக அண்மிய காலத்தில் தான் உருவாகியிருக்கிறது என்பது முஸ்லிம் அல்லாத ஆய்வாளர்களின் கருத்தும்கூட.
பேராசிரியர் பிரட் ஹாலிடே இது பற்றி பின்வருமாறு சொல்கிறார், “சுன்னிகளுக்கும், ஷியாக்களுக்கும் இடையிலான உண்மையான நேரடியான முரண்பாடுகள்(வன்முறைகள்) மிக அண்மித்த காலத்திலேயே குறிப்பிடத்தக்கவையாக மாறியுள்ளன.” எனவே இன்று எமக்கிடையே தோற்றுவிக்கப்பட்டிருக்கும் இந்த வன்முறைக்கலாசாரம் திட்டமிட்ட புறக்காரணிகளால் உருவானது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
கிலாஃபா என்பது இன, குழு வாதங்களை கடந்தது. அது குறித்த ஒரு மத்ஹப்புக்கு அல்லது சட்ட நிலைப்பாட்டுக்கு மாத்திரம் கட்டுப்பட்டதோ அல்லது சொந்தமானதோ அல்ல. மாறாக அது அனைத்து முஸ்லிம்களுக்கும் சொந்தமானது. எனினும் தற்காலத்தில் கருத்தாளர்களாலும், அரசியல்வாதிகளாலும் எம்மிடையே ஆழமான வெறுப்புணர்வும், பிளவும் வேறூண்றச்செய்யும் முயற்சி பல மட்டங்களில் மேற்கோள்ளப்படுவது குறித்து நாம் அவதானமாக இருக்க வேண்டும். எமக்கு மத்தியில் அகீதாவின் கிளைகளிலும், பிக்ஹ் நிலைப்பாடுகளிலும் காணப்படும் வேறுபாடுகள் இவர்கள் சொல்வதைப்போல் மிகத் தெளிவான பரிகோடுகள் கிடையாது. மாறாக அவை மிக நிதானமாகவும், ஆழமாகவும் கையாளப்பட வேண்டிய பல்பரிமாணங்கள் கொண்டவை என்பதை நாம் ஜீரணித்துக்கொள்ள வேண்டும்.
இந்த நிதானப்போக்கு எம்மிடைய அண்மைக்காலம் வரை இருந்தது என்பதற்கு அமெரிக்கா ஈராக்கை ஆக்கிரமித்த ஆரம்ப காலப்பகுதியில் இன, குழு ரீதியான வேறுபாடுகளை கடந்து இணைந்த ஜும்ஆக்களும், மாநாடுகளும், கூட்டுவேலைத்திட்டங்களும், ஆர்பாட்டங்களும் இயல்பாக இடம்பெற்றமை மிகச் சிறந்த சான்றாகும். இன்றும் ஓரிரு ஈராக்கிய குடும்பங்களுடன் பழகிப்பார்த்தால் அல்லது விசாரித்துப்பார்த்தால் இந்த இன மற்றும் குழுக்களிடையே காணப்படும் சாதாரண உறவுகளையும், இன்னும் சொல்லப்போனால் அதிகளவான திருமண பந்தங்கங்களைக்கூட புரிந்து கொள்ளலாம். பின்னர் பல காலனித்துவ சதிவேலைகளால் நிலைமை தலை கீழாக மாறிமை நாம் அறிந்ததே.
எனவே இஸ்லாத்திற்கு மாத்திரம்தான் அரபிகள், குர்திஷ்கள், துருக்கியர்கள், சுன்னிகள், ஷியாக்கள் என அனைவரையும் ஓர் அணியில் தலைமை தாங்கும் தகுதி இதுவரையில் இருந்திருக்கிறது. இனிமேலும் அதனால் மாத்திரம்தான் ஐக்கியம் சாத்தியப்படும் என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
3. ஒட்டுமொத்த உம்மத்தின் அவலங்களுக்கும், முழு மனித குல நாசத்திற்கு காரணமான மேற்குலக கொள்கைகளுக்கும் எதிராக நாம் உரத்துக்குரல் கொடுக்க வேண்டும்.
முஸ்லிம் நாடுகளை நேரடியாக ஆக்கிரமிப்புச் செய்வது தொடக்கம் அப்பாவிப் பொதுமக்கள் மீது Drones (ஆளில்லா விமானங்கள்) மூலம் தாக்குதல் நடத்துவது, இன, குழு ரீதியாக பதற்றத்தை தூண்டி விடுவது, முஸ்லிம்களின் அவலங்களுக்கு முக்கிய காரணமான கொடுங்கோல் கங்கானிகளை ஆட்சியில் அமர்த்தி ஆதரவளிப்பது, ஒரு முஸ்லிம் தரப்பிற்கு எதிராக இன்னுமொரு தரப்பிற்கு ஆயுதம் வழங்கி வன்முறைக்குள் தள்ளுவது என இவர்கள் எமக்கு செய்து வரும் அநியாயங்கள் சொல்லிடங்கா.
2003 இல் அமெரிக்க, பிரித்தானிய கூட்டுப்டையினர் ஈராக்கை ஆக்கிரமிப்புச் செய்த நாளிலிருந்து ஏற்கனவே பல நெருக்கடிகளை முகங்கொடுத்து வந்த மத்திய கிழக்கின் அழிவுப்பாதை மிகத்தீவிரமடைந்தது. மேற்குலகு பல போலிச்சாட்டுக்களை முன்வைத்த போதிலும் மேற்குலகின் தலையீடு எக்காலத்திலும் மத்திய கிழக்கின் அமைதிக்கும் சுபீட்சத்திற்கும் ஏதுவாய் அமைந்ததில்லை. மாறாக பாரிய அழிவுகளும், அவலங்களும், கொடுமைகளும், கொடூரங்களும் நாளுக்கு நாள் அதிகரிக்கும் விதத்தில் அந்தப் பிராந்தியத்தை எப்போதும் பதட்ட நிலையில் பேணுவதிலேயே இவர்கள் கண்ணும் கருத்துமாய் இருந்திருக்கிறார்கள். எனவே உலகளாவிய முஸ்லிம்கள் இது மத்திய கிழக்கில் தானே நடக்கிறது என வாழாவிருந்து விடாமல் எம்மால் முடிந்த அனைத்து வழிகளிலும் மத்திய கிழக்கில் மேற்குலக காலணித்துவ தலையீட்டுக்கு எதிராகவும், அவர்கள் அங்கு கடைப்பிடிக்கும் வெளிநாட்டுக்கொள்கை தொடர்பாகவும் தோலுரித்துக் காட்ட வேண்டும். அதனூடாக அவர்களின் அவலட்சண முகத்தை உலக அரங்கில் வெளிச்சத்துக்கு கொண்டு வர வேண்டும். மேலும் முடிந்த அனைத்து வழிகளிலும் உம்மத் மீண்டும் சரியான திசையில் எழுச்சி பெறுவதற்காக உதவ வேண்டும். குரல் கொடுக்க வேண்டும்.
முஃமினான ஆண்களும் முஃமினான பெண்களும் ஒருவருக்கொருவர் உற்ற துணைவர்களாக இருக்கின்றனர்; அவர்கள் நல்லதைச் செய்ய தூண்டுகிறார்கள்; தீயதை விட்டும் விலக்குகிறார்கள்; தொழுகையைக் கடைப்பிடிக்கிறார்கள்; (ஏழை வரியாகிய) ஜகாத்தை (முறையாகக்) கொடுத்துவருகிறார்கள்; அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் வழிப் படுகிறார்கள்; அவர்களுக்கு அல்லாஹ் சீக்கிரத்தில் கருணை புரிவான் – நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாகவும்இ ஞானமுடையவனாகவும் இருக்கின்றான். (9:71)
4. கிலாஃபத் முஸ்லிம் உலகின் குழப்பங்களுக்கு காரணமானதாக அமையாது அதன் ஸ்திரத்தன்மைக்கும், முழு உலகின் விமோசனத்திற்கும் காரணமாக அமையும் என புரிந்து கொண்டு முஸ்லிம்கள் கிலாஃபாத்திற்காக குரல் கொடுப்பவர்களாக மாற வேண்டும்.
இன்றைய ஊடகங்களின் சித்தரிப்புகளுக்கும், சிரியா, ஈராக் பிராந்தியத்திலிருந்து வெளிப்படும் அச்சுறுத்தலான காட்சிகளுக்கும் மாற்றமாக உண்மையான கிலாஃபத்தின் மீள் வருகை குறிப்பாக மத்திய கிழக்கின் அரசியல் ஸ்திரத்தன்மைக்கும் முஸ்லிம்களின் உண்மையான விமோசனத்திற்கும் அத்திவாரமாக அமையும் என்பதில் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை. அந்த பிராந்தியத்தில் காலங்காலமான மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள நம்பிக்கைகள், விழுமியங்கள், அவர்களின் விருப்பு வெறுப்புக்கள் அனைத்தையும் அது இயல்பாய் பிரதிபலிக்கக் கூடியதால் கிலாஃபத் அதனைச் சாதிப்பது ஒன்றும் வியப்புக்குரியதல்ல. கிலாஃபத் அந்த மக்களின் உணர்வுகளையும், அபிலாசைகளையும் துல்லியமாக புரிந்து கொண்டு அவர்களுடன் வாஞ்சையான கூட்டுறவுடன் இயங்கும் அரசியல் அலகாக நிச்சயம் செயற்படும். ஏனெனில் அரசியல் முதல் ஆன்மீக அம்சங்கள் வரை இம்மக்களுக்கிடையே நிலவும் பொதுவான நம்பிக்கைகளையும், உணர்ச்சிகளையும் ஒன்றுகுவிக்கும் காந்தமாக இஸ்லாம் எனும் தூய சிந்தாந்தமே இருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது.
கிலாஃபத் வீழ்த்தப்பட்ட நிகழ்வு இஸ்லாமிய உலகின் அதிகாரமும், தலைமைத்துவமும் முழுமையாக முஸ்லிம்களின் கைகளிலிருந்து பறிபோனதிற்கு ஒப்பானது. அது உருவாக்கிய வெற்றிடம் காலணித்துவத்துக்கும், சர்வாதிகாரங்களுக்கும் எதிராக எழுந்து நிற்கும் திராணியை உம்மத்திடமிருந்து பறித்தது. விளைவு, சுயநலமும், நயவஞ்சகமும் நிறைந்த கொடிய தலைமைத்துவங்களின் கைகளில் முஸ்லிம் உலகும், அவர்களின் விவகாரமும் மாட்டிக்கொண்டு அழிவுகளுக்கு மேல் அழிவு, பலகீனத்திற்கு மேல் பலகீனமென எமது நிலை மாறிப்போனது.
இன்று உலகு எதிர்நோக்கும் அரசியல், பொருளாதார, சமூக நெருக்கடிகளிலிருந்து உலகை மீட்டு உலகை ஆரோக்கியமானதோரு திசையில் வழிநடாத்துவதற்கு கிலாஃபாவால் மாத்திரம்தான் முடியும். ஏனெனில் நபி வழியில் உருவாகும் அந்த கிலாஃபத் மனித மூளைகளின் பலகீனங்களாலும், குறித்த நபர்களின் சுயநலன்களாலும் மக்களை வழிநடத்தாமல் வாழ்க்கையின் அனைத்து துறைகளிலும் இறைவனின் வழிகாட்டல்களாலும், சட்டங்களாலும் வழிநடாத்தும். மேலும் அல்லாஹ்(சுபு) அருளியுள்ள இறைத்தூது அனைத்து காலங்களுக்கும், அனைத்து சமூகப்பின்னணிகளுக்கும் தீர்வு சொல்லக்கூடிய ஆளுமையுடன் காணப்படுவதால் அதனால் மாத்திரம் தான் மனிதகுலத்தை நேர்மையாகவும், நீதியாகவும் வழிநடாத்த முடியும்.
இத்தகைய ஆட்சி தன்னிச்சையாக அறிவிக்கப்பட்டதாக அமையாது மக்களால் தேர்ந்தெடுக்கபட்டதாய் அமைவதுடன் கலந்தாலோசை ஊடாகவும், உறுதியான நீதித்துறையின் ஊடாகவும் கலீஃபா உட்பட அனைத்துத் தரப்புக்களையும் சட்டத்தின் முன் சமமாக நடாத்தும். அது இன, குல வாதங்களின் அடிப்படையில் ஒருவர் இன்னொருவர் மீது அத்துமீறாத பிரஜா உரிமை என்ற எண்ணக்கருவின் அடிப்படையில் யாவருக்கும் பொதுவாய் அமைந்த ஆட்சியாக விளங்கும்.
5. முஸ்லிம் உலகில் நேரடியாக மேற்கொள்ளப்படும் கிலாஃபத்திற்கான போராட்டத்திற்கு நாம் பூரண ஆதரவினை வழங்க வேண்டும். ஏனெனில் அது இஸ்லாத்தின் அதியுயர் கட்டளைகளில் ஒன்றாகும்.
“எனக்கு பிறகு ஒரு நபி வரமாட்டார். எனினும் குலபாஃக்கள் தோன்றுவார்கள். அவர்கள் பலராக இருப்பார்கள் என ரசூல்(ஸல்) சொல்ல…ஸஹாபாக்கள் அதன்போது நாங்கள் என்ன செய்ய வேண்டும் என வினவ, ரசூல்(ஸல்) சொன்னார்கள் “அவர்களுக்கு ஒன்றன் பின் ஒன்றாக பைஆவை நிறைவேற்றுங்கள். அவர்களுக்குரியதை அவர்களுக்கு வழங்குங்கள். அவர்களுக்கு அல்லாஹ்(சுபு) வழங்கியது பற்றி அவர்களை விசாரித்துக்கொள்வான்.” என பதிலளித்தார்கள்.
மேலும் “எவரொருவர் தனது கழுத்தில் பைஆ(ஒரு கலீஃபாவுக்கு) இல்லாத நிலையில் மரணிக்கிறாரோ அவரது மரணம் ஜாஹிலிய மரணமாகும் என்ற ரசூல்(ஸல்) நபிமொழி அந்த பைஆவை வழங்குவதற்கு தேவையான கலீஃபா இல்லாத நிலையில் அவரை மீண்டும் நிறுவுவதற்கு முயற்சிக்காமல் இருப்பதன் விபரீதத்தை மிகத் தெளிவாகச் சுட்டிக்காட்டுகிறது.
இவ்வாறான பல ஆதாரங்கள் கலீஃபா ஒருவரை ஏற்படுத்துவதற்கு நாம் ஏன் பாடுபட வேண்டும் என்பதை எமக்கு உணர்த்தி நிற்கின்றன. அதேபோன்று இப்பணியில் கிலாஃபா என்றால் என்ன என்பதை சரியாகப்புரிந்து கொண்டு கிலாஃபத்தின் பெயரால் சிந்தரிக்கப்படும் போலித் தோற்றங்களை உலகின் வெளிச்சத்திற்கு கொண்டுவருவதும் மிகவும் அவசியப்படுகிறது.
எனவே முஸ்லிம்கள் முஸ்லிம் உலகில் நிலவும் சர்வாதிகார, மேற்குலக முகவர் ஆட்சிகளை வீழ்த்தி கடப்பாடும், மக்களின் நம்பிக்கைகளையும், உணர்வுகளையும் பிரதிபளிக்கக்கூடிய உண்மையான இஸ்லாமிய ஆட்சியை ஏற்படுத்துவதற்காக இரவு பகலாக உழைக்க வேண்டும். இந்த கிலாஃபா என்ற அரசியல் மாற்றீடு மாத்திரமே முஸ்லிம் உலகை ஸ்திரத்தன்மையும், பலமுமிக்க ஒரு பிராந்தியமாக மாற்றும். மேலும் உலகின் ஏனைய பிராந்தியங்களில் வாழும் முஸ்லிம்களையும் அனைத்து மட்டங்களிலும் ஓரணியில் திரட்டி உலகை தலைமை தாங்கக்கூடிய ஹைரு உம்மத்தாக எம்மை மாற்றும் கருவியாகத் திகழும்.
எனவே குப்ரிய அரசுகளும், எமது தாஹூத்திய தலைமைகளும், உலகளாவிய ஊடகங்களும் கிலாஃபா என்ற சிந்தனைக்கு எதிராக ஓய்வின்றி சதி செய்தாலும், முஸ்லிம்கள் – அவர்கள் உலகில் எங்கு வாழ்தாலும் சரி கிலாஃபா – தமது அதிமுக்கிய மார்க்கக் கடமை என்பதையும், அதுதான் தமது மறுமலர்ச்சிக்கான ஒரே வழி என்பதையும் நன்குணர்ந்து கிலாஃபாவிற்கான போராட்டத்தில் முனைப்புடன் ஈடுபடவேண்டும்.