ஒரு நூற்றாண்டு காலமாக முஸ்லிம்கள் அடுக்கடுக்கான பிரச்சனைகளை சந்தித்து வருவதால் அதற்கான தீர்வை நோக்கி இந்த உம்மா பயணித்து வருகின்றது.இதன் காரணமாக முஸ்லிம் உலகில் ஏற்பட்டுள்ள மாபெரும் எழுச்சி, இந்த உம்மா மீண்டூம் மறுமலர்ச்சி அடைய இருப்பதை இஸ்லாத்தின் எதிரிகளுக்கு உணர்த்தியுள்ளது. ஆயிரத்து முன்னூறு ஆண்டுகளாக முஸ்லிம்கள் ஒரே தலைமையின் கீழ் இருந்ததாலும், அதன் காரணமாக இஸ்லாம் தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தப்பட்டதாலும் இஸ்லாமிய அரசு வல்லரசாக விளங்கி வந்தது.மேற்கத்திய காலனி ஆதிக்க காஃபிர்களின் சூழ்ச்சியால் இந்த தலைமை அழிக்கப்பட்டு அவர்களின் ஏஜண்டுகள் முஸ்லிம் உலகின் ஆட்சியாளர்களாக அமர்த்தப்பட்டனர்.இந்த சர்வாதிகார ஆட்சியாளர்கள் மேற்கத்திய காலனியாதிக்க காஃபிர்களின் வழிகாட்டுதலின் அடிப்படையில் இஸ்லாத்தை புறக்கணித்து குஃப்ரை தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தி வருகின்றனர்.மேலும் இஸ்லாத்தை மீண்டும் நடைமுறையில் கொண்டு வருவதற்காக பாடுபடும் முஸ்லிம்களை தங்களின் எஜமானர்களின் உத்தரவின் பேரில் இந்த ஆட்சியாளர்கள் ஒடுக்கி வருகின்றனர்.இந்த சர்வாதிகார ஆட்சியாளர்களின் ஆதரவாளர்களும்,இஸ்லாமிய ஆட்சியமைப்பு குறித்து போதிய அறிவில்லாதவர்களும்,இஸ்லாத்தின் எதிரிகளால் திரித்து எழுதப்பட்ட வரலாற்றின் ஆதிக்கத்தில் சிக்கியவர்களும் இந்த உலகில் இஸ்லாம் தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தப்பட்டதா என்று வினா எழுப்பி வருகின்றனர்.
கிலாஃபா முப்பது ஆண்டுகள் மட்டும் தான் இருந்ததா?
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களால் மதீனாவில் நிறுவப்பட்ட இஸ்லாமிய அரசு முஸ்தபா கமால் அத்தா துர்க் எனும் நாசகாரனின் கரங்களால் 1924 ம் ஆண்டு மார்ச் 3ம் தேதி(1342 ஹிஜ்ரி,ரஜப் 28) வீழ்த்தப்பட்டது வரை நிலைத்திருந்தது. ராஷிதீன்(நேர்வழி) கலீஃபாக்களுக்கு பிறகும் இஸ்லாமிய அரசான கிலாஃபா தொடர்ச்சியாக இருந்ததை இஸ்லாமிய அறிஞர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.எனினும் தற்கால சலஃபி அறிஞர்கள் என்று அறியப்படுபவர்களில் சிலர் கிலாஃபா முப்பது ஆண்டுகள் மட்டுமே இருந்ததாகவும் அதன் பிறகு இந்த உலகில் மன்னராட்சி மட்டுமே இருந்ததாகவும், இஸ்லாம் நடைமுறயில் இருக்கவில்லை என்றும் கூறுகின்றனர்..இதன் மூலம் இன்றயை முஸ்லிம் உலகின் ஆட்சியாளர்களை(காலனியாதிக்க காஃபிர்களின் ஏஜண்டுகள்) முஸ்லிம் உம்மா அங்கீகரிக்க வேண்டுமென்று மறைமுக அழைப்பு விடுக்கின்றனர்.இவர்கள் தங்களின் வாதங்களுக்கு ஆதாரமாக பின்வரும் ஹதீஸை சுட்டிக்காட்டுகின்றனர்.
الخِلَافَةُ فِي أُمَّتِي ثَلَاثُونَ سَنَةً، ثُمَّ مُلْكٌ بَعْدَ ذَلِكَ
என்னுடைய உம்மத்தில் கிலாஃபா முப்பது ஆண்டுகள் இருக்கும்;பின்னர் அதன் பிறகு அரசாட்சி இருக்கும். (திர்மிதி,அபூதாவூது)
இஸ்லாமிய அறிஞர்கள் இந்த ஹதீஸை ஆதாரமாகக் கொண்டு கிலாஃபா முப்பது ஆண்டுகள் மட்டும் இருந்ததாக ஒருபோதும் கூறவில்லை;ஏனெனில் இந்த ஹதீஸிற்கு மாற்றமாக வேறு சில ஹதீஸ்களும் வந்துள்ளன.
إِنَّ هَذَا الْأَمْرَ لَا يَنْقَضِي حَتَّى يَمْضِيَ فِيهِمِ اثْنَا عَشَرَ خَلِيفَةً ، كُلُّهُمْ مِنْ قُرَيْشٍ
பன்னிரண்டு கலீஃபாக்கள் வரும் வரை இந்த ஆட்சியதிகாரம் அவர்களை விட்டும் முடிவு பெறாது.அவர்கள் அனைவரும் குறைஷியர்களில் உள்ளவர்கள் ஆவர். (முஸ்லிம்)
இந்த ஹதீஸ் கிலாஃபா முப்பது வருடங்கள்தான் இருந்தது என்ற கருத்திற்கு முரண்படுகிறது.இமாம் நவவி(ரஹ்) அவர்கள் இந்த ஹதீஸிற்கு பின்வரும் விளக்கத்தை சுட்டிக்காட்டியுள்ளார்கள்.
الخلافة بعدي ثلاثون سنة ثم تكون ملكا وهذا مخالف لحديث اثني عشر خليفة فإنه لم يكن في ثلاثين سنة إلا الخلفاء الراشدون الأربعة والأشهر التي بويع فيها الحسن بن علي قال والجواب عن هذا أن المراد في حديث الخلافة ثلاثون سنة خلافة النبوة
“என்னுடைய உம்மத்தில் கிலாஃபா முப்பது ஆண்டுகள் இருக்கும்;பின்னர் அதன் பிறகு அரசாட்சி இருக்கும்’ என்ற ஹதீஸ் ‘பன்னிரண்டு கலீஃபாக்கள் வரும் வரை இந்த ஆட்சியதிகாரம் அவர்களை விட்டும் முடிவு பெறாது’ என்ற ஹதீஸிற்கு முரண்படுகிறது…அதாவது நேர்வழி பெற்ற நாற்பெரும் கலீஃபாக்கள் மற்றும் ஹஸன்(ரலி) அவர்கள் அவர்களுக்கு சில மாதங்களுக்கு பைஆ கொடுக்கப்பட்டிருந்த முப்பது ஆண்டுகளில் பண்னிரண்டு கலீஃபாக்கள் என்பது முரணாகும்.எனவே கிலாஃபா முப்பது ஆண்டுகள் இருக்கும் என்பது, நுபுவ்வத்தின் வழிமுறையிலான கிலாஃபத்தை(கிலாஃபா ராஷிதா) குறிக்கும்.” (ஷரஹ் சஹீஹ் முஸ்லிம்)
ஃகாளி இயாள்(ரஹ்) அவர்கள் இதைப்பற்றி கூறும்போது:-
قال القاضي عياض: لعل المراد بالاثني عشر في هذه الأحاديث وما شابهها أنهم يكونون في مدة عزة الخلافة، وقوة الإسلام، واستقامة أموره، والاجتماع على من يقوم بالخلافة
இந்த ஹதீஸில் வந்துள்ள பன்னிரண்டு கலீஃபாக்கள் என்பது,புகழ்மிக்க நெடிய கிலாஃபத்தின் கலீஃபாக்களையும்,இஸ்லாத்தின் வலிமையையும்,நிலையான அதிகாரத்தையும், கிலாஃபத்தின் கீழ் மக்கள் ஒன்றிணைந்து இருப்பதையும் குறிக்கும்.
(தாரிஃகுல் குலஃபா – இமாம் சுயூத்தி)
இமாம் இப்னு ஹஜர் அஸ்கலானி(ரஹ்) அவர்கள் இதை சரிகண்டு கூறியிருப்பதை காணமுடிகிறது.”இதைப்பற்றி கூறியிருப்பவைகளில் ஃகாளி இயாள்(ரஹ்) அவர்கள் கூறியிருப்பது தான் மிகச்சிறந்ததாகும்; நான் இதை வலுவானதாக கருதுகிறேன் ஏனென்றால் நபி(ஸல்) அவர்களின் திட்டவட்டமான ஹதீஸ்கள் இதற்கு ஆதரவாக இருப்பதை ஆதாரமாக தருகிறார்”.(ஃபத்ஹுல் பாரி) மேலும் மக்கள் கிலாஃபா ராஷிதாவிற்கு பிறகு சில குறிப்பிட்ட கலீஃபாக்களின் கீழ் எவ்வாறு ஒன்று திரண்டனர் என்பதையும் அவர் உமர் இப்னு அப்துல் அஜீஸ்(ரஹ்) போன்றவர்களையும் சான்றாக குறிப்பிடுகிறார்; மேலும் அப்பாஸிய கலீஃபாக்களில் உள்ள சிலரையும் குறிப்பிடுகிறார்.
இமாம் ஜலாலுதீன் சுயூத்தி(ரஹ்) அவர்கள் தாரிஃகுல் குலஃபா (கலீஃபாக்களின் வரலாறு) என்ற நூலின் முகவுரையில் அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்க்ளின் காலம் முதல் நம்முடைய கால கட்டம் (900 ஆண்டுகள்) வரையுள்ள அமீருல் முஃமினீன்களான கலீஃபாக்களின் வரலாற்றை எழுதியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்கள்.இமாம் சுயூத்தி(ரஹ்) அவர்கள் காலத்தில் மரணித்த கலீஃபா முதவக்கில் அலல்லாஹ்(903 ஹிஜ்ரி) மற்றும் அவருடைய மகன் முஸ்தன்ஸிக் பில்லாஹ் கலீஃபாவாக நியமிக்கப்பட்டது வரை இந்நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அப்துல்லாஹ் இப்னு தீனார் அறிவிப்பதாவது,
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ، ” كَتَبَ إِلَى عَبْدِ المَلِكِ بْنِ مَرْوَانَ يُبَايِعُهُ: وَأُقِرُّ لَكَ بِذَلِكَ بِالسَّمْعِ وَالطَّاعَةِ عَلَى سُنَّةِ اللَّهِ وَسُنَّةِ رَسُولِهِ فِيمَا اسْتَطَعْتُ
அப்துல் மலிக் இப்னு மர்வானுக்கு பைஆ செய்யும்போது, அல்லாஹ்வின் வேதத்தின்படியும் அவனுடைய தூதர்(ஸல்) அவர்களின் சுன்னத்தின்படியும் செயல்படும்போது தாங்களுக்கு இயன்றவரை செவிமடுப்பதாகவும் கட்டுப்பட்டு நடப்பதாகவும் நான் ஒப்புக்கொள்கிறேன் என்று அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அவர்கள் எழுதிக்கொடுத்தார்கள். (புகாரி)
இமாம் அபூஹனீஃபா(ரஹ்), இமாம் மாலிக்(ரஹ்) போன்ற இமாம்கள் தங்கள் காலத்தில் நடைபெற்ற கிலாஃபத்தை ஒப்புக்கொண்டதோடு அப்பாஸிய கலீஃபா அபூமன்சூர் அவர்களின் தவறை தட்டிக்கேட்டுள்ளனர். இமாம் அபூயூசுஃப்(ரஹ்) அவர்கள் கலீஃபா ஹாரூன் ரஷீத் அவர்களின் கிலாஃபத்தில் தலைமை நீதிபதியாக பொறுப்பு வகித்தார்கள்.தார்த்தாரியர்கள் பக்தாதை நிர்மூலமாக்கி கலீஃபாவையும் கொன்ற பிறகு, கெய்ரோவில் முஸ்தன்ஸிர் பில்லாஹ் அவர்களுக்கு நடைபெற்ற பைஆவில் இஸ்ஸுதீன் இப்னு அப்துஸ்ஸலாம், அப்துல் ஹலீம் போன்ற இமாம்கள் பங்கெடுத்து பைஆ செய்தனர்.
இந்தியாவிலுள்ள இஸ்லாமிய அறிஞர்கள் உஸ்மானிய கிலாஃபத்துடன் கொண்டிருந்த நெருங்கிய தொடர்பு சான்றாக உள்ளது. ஷைகுல் ஹிந்த் மவுலானா மஹ்மூத் ஹஸன் தேவ்பந்தி (ரஹ்)அவர்கள் மால்டா சிறையில் சிறைவாசம் அனுபவித்துவிட்டு 1920 ம் ஆண்டு இந்தியா திரும்பிய காலகட்டத்தில் வெளியிட்ட ஃபத்வாவின் சில வரிகள் :-
இஸ்லாத்தின் கௌரவத்தையும் மரியாதையையும் சீர்குலைக்க எதிரிகள் சகல வழிகளையும் கையாண்டுவிட்டனர்.நபி (ஸல்)அவர்கள், ஸஹாபாக்கள் மற்றும் அதற்குப்பின் வந்தவர்களின் கடுமையான தியாகத்தின் விளைவாக வெற்றி கொள்ளப்பட்ட ஈராக், பலஸ்தீன், சிரியா போன்ற பிரதேசங்கள் மீண்டும் எதிரிகளின் இலக்காகியுள்ளன. கிலாஃபத்தின் மரியாதை தடுமாறிக் கொண்டிருக்கிறது. பூமியிலுள்ள முஸ்லிம் உம்மத்தை ஒன்றிணைக்க வேண்டிய, இஸ்லாமிய சட்டத்தை அமுல்படுத்த வேண்டிய, முஸ்லிம்களின் உரிமைகளையும் உடமைகளையும் பாதுகாக்க வேண்டிய அல்லாஹ்வின் வசனங்களை நிலைநாட்ட வேண்டிய கலீஃபா தற்போது எதிரிகளால் சூழப்பட்டு ஒன்றும் செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். இஸ்லாமிய கொடி கீழிறங்கி பறக்கிறது. ஹஸ்ரத் அபூ உபைதா(ரலி), சஅத் பின் அபிவக்காஸ்(ரலி), காலித் பின் வலீத்(ரலி), அபூ அய்யூப் அல் அன்சாரி(ரலி) போன்றோரின் ஆத்மாக்கள் இன்று அமைதியடையாமல் உள்ளன. முஸ்லிம்கள் தமது மதிப்பையும், கௌரவத்தையும், சுய மரியாதையும் இழந்தமையே இதற்கு காரணமாகும். வீரமும், மார்க்கப்பற்றுமே அவர்களது விருப்பமாகவும் செல்வமாகவும் இருந்தது. கவனயீனத்தாலும், இலட்சியமின்மையாலும் முஸ்லிம்கள் இதனை இழந்துவிட்டார்கள்… இஸ்லாத்தின் புதல்வர்களே! இஸ்லாமிய உலகை எரித்து கிலாஃபத்தை தீயிட்ட இடியும் நெருப்பும் அரபிகளிடமிருந்தும் இந்தியர்களிடமிருந்தும் தான் பெறப்பட்டது என்பதை என்னை விட நீங்கள் நன்கு அறிவீர்கள். முஸ்லிம் தேசங்களை கட்டுப்படுத்த கிறிஸ்தவர்கள் பயன்படுத்திய அதிகாரத்தையும் வளத்தையும் உங்களின் கடும் உழைப்பிலிருந்தே அவர்கள் பெற்றுக் கொண்டார்கள்.” மேற்கத்திய கிறிஸ்தவர்களுடன் ஒன்று சேர்ந்து செயற்படுவதன் விளைவுகளை அறியாத முட்டாள் முஸ்லீம்கள் யாரும் இருக்கிறார்களா?
(From Fatwa of Moulana Mahmood Hasan on 16th Safar 1339 Hijri, Corresponding to October 29th, 1920, Georgian year, The Prisoners of Malta, (Asira’h – e- malta), Moulana Syed Muhammed Mian, Jamiat ulama- e- hind, English edition, page 78-79.)
மேற்கண்ட விசயங்களிலிருந்து இஸ்லாமிய அறிஞர்கள் கிலாஃபா ராஷிதாவிற்கு பிறகும் இருந்த கிலாஃபத்தை அங்கீகரித்துள்ளதை தெளிவாக அறிந்து கொள்ளலாம்.
அபூஹாஸிம் அறிவித்து முஸ்லிமில் பதிவு செய்யப்பட்டுள்ள ஹதீஸில் கூறப்பட்டிருப்பதாவது:-
قَاعَدْتُ أَبَا هُرَيْرَةَ خَمْسَ سِنِينَ فَسَمِعْتُهُ يُحَدِّثُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «كَانَتْ بَنُو إِسْرَائِيلَ تَسُوسُهُمُ الْأَنْبِيَاءُ، كُلَّمَا هَلَكَ نَبِيٌّ خَلَفَهُ نَبِيٌّ، وَإِنَّهُ لَا نَبِيَّ بَعْدِي، وَسَتَكُونُ خُلَفَاءُ فَتَكْثُرُ»، قَالُوا: فَمَا تَأْمُرُنَا؟ قَالَ: «فُوا بِبَيْعَةِ الْأَوَّلِ، فَالْأَوَّلِ، وَأَعْطُوهُمْ حَقَّهُمْ، فَإِنَّ اللهَ سَائِلُهُمْ عَمَّا اسْتَرْعَاهُمْ
“நான் ஐந்து வருடங்கள் அபூஹுரைராவுடன் இருந்துள்ளேன். அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறியதாக அவர் அறிவித்துள்ளதை செவியுற்றிருக்கிறேன்:- பனூ இஸ்ராயீல் மக்களை நபிமார்கள் ஆட்சி செய்தார்கள். ஒரு நபி மரணித்ததும் மற்றொரு நபி அவரிடத்திற்கு அனுப்பப்பட்டார். நிச்சயமாக! எனக்குப் பிறகு நபிமார்கள் வரமாட்டார்கள்; ஆனால் கலீஃபாக்கள் வருவார்கள்.அவர்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பார்கள். (அதுகுறித்து) எங்களுக்கு என்ன கட்டளையிடுகிறீர்கள்? என்று(ஸஹாபாக்கள்) வினவினார்கள்.அவர்கள் அனைவருக்கும் ஒருவருக்குப்பின் ஒருவராக பைஆ கொடுங்கள்.அவர்களின் அதிகாரத்திற்கு கட்டுப்பட்டு நடந்துகொள்ளுங்கள். நிச்சயமாக! அவர்களிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்பு பற்றி அல்லாஹ் அவர்களிடம் விசாரிப்பான்.”
இந்த ஹதீஸிலுள்ள ” وَسَتَكُونُ خُلَفَاءُ فَتَكْثُرُ ..கலீஃபாக்கள் வருவார்கள்.அவர்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பார்கள்.”என்பதிலிருந்து கிலாஃபா முப்பது ஆண்டுகளோடு முடிவுறக்கூடியதல்ல என்பதை தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.
முஸ்னது அஹ்மதில் இடம்பெற்றுள்ள கீழ்க்கண்ட ஹதீஸிலிருந்து கிலாஃபத்தின் தொடர்ச்சியையும் அதன் கட்டங்களையும் விளங்கிக்கொள்ளலாம்.
تَكُونُ النُّبُوَّةُ فِيكُمْ مَا شَاءَ اللَّهُ أَنْ تَكُونَ، ثُمَّ يَرْفَعُهَا إِذَا شَاءَ أَنْ يَرْفَعَهَا، ثُمَّ تَكُونُ خِلَافَةٌ عَلَى مِنْهَاجِ النُّبُوَّةِ، فَتَكُونُ مَا شَاءَ اللَّهُ أَنْ تَكُونَ، ثُمَّ يَرْفَعُهَا إِذَا شَاءَ اللَّهُ أَنْ يَرْفَعَهَا، ثُمَّ تَكُونُ مُلْكًا عَاضًّا، فَيَكُونُ مَا شَاءَ اللَّهُ أَنْ يَكُونَ، ثُمَّ يَرْفَعُهَا إِذَا شَاءَ أَنْ يَرْفَعَهَا، ثُمَّ تَكُونُ مُلْكًا جَبْرِيَّةً، فَتَكُونُ مَا شَاءَ اللَّهُ أَنْ تَكُونَ، ثُمَّ يَرْفَعُهَا إِذَا شَاءَ أَنْ يَرْفَعَهَا، ثُمَّ تَكُونُ خِلَافَةً عَلَى مِنْهَاجِ نُبُوَّةٍ» ثُمَّ سَكَتَ
“அல்லாஹ் நாடியவரையிலும் உங்களிடையே நபித்துவம் இருக்கும், அதன்பின் அவன் நாடும்போது அதை நீக்கிவிடுவான்..பிறகு நபித்துவத்தின் வழியிலான கிலாஃபா அரசு அல்லாஹ் நாடியவரையிலும் இருக்கும். அதன் பிறகு அல்லாஹ் நாடும்போது அதை உயர்த்திவிடுவான் அதன்பின் வம்சாவழி ஆட்சி அல்லாஹ் நாடியவரை இருக்கும். அதன்பின் அவன் நாடும்போது அதை நீக்கிவிடுவான்.அதன்பின் அடக்குமுறை ஆட்சி அல்லாஹ் நாடியவரையிலும் இருக்கும்.அதன்பின் அவன் நாடும்போது அதை நீக்கிவிடுவான். அதன்பிறகு நபித்துவத்தின் வழியிலான கிலாஃபா தோன்றும் என்றுகூறி அமைதிகாத்தார்கள்.
முப்பது ஆண்டுகள் நடைபெற்ற நபித்துவத்தின் வழியிலான கிலாஃபா (مِنْهَاج النُّبُوَّة கிலாஃபா ரஷிதா) அதைத்தொடர்ந்து வம்சாவழியிலான(مُلْكًا عَاضًّا) உமைய்யா கிலாஃபா,அப்பாஸியா கிலாஃபா, உஸ்மானியா கிலாஃபா என்று தொடர்ச்சியாக ஆயிரத்து முன்னூறு ஆண்டுகளாக கலீஃபாக்கள் ஆட்சி செய்துள்ளனர்.தற்போது முஸ்லிம் உலகில் அடக்குமுறை ஆட்சி (مُلْكًا جَبْرِيَّةً) நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.மீண்டும் இன்ஷா அல்லாஹ் நபித்துவத்தின் வழியிலான கிலாஃபா(ثُمَّ تَكُونُ خِلَافَةً عَلَى مِنْهَاجِ نُبُوَّةٍ) வர இருக்கின்றது.
கலீஃபாக்கள் இஸ்லாத்தை நடைமுறைப்படுத்தினார்களா?
கிலாஃபத்தின் காலகட்டத்தில் ஏற்பட்ட சில பிரச்சனைகளையும், சில கலீஃபாக்கள் செய்த தவறுகளையும் சுட்டிக்காட்டி இஸ்லாம் நடைமுறைப்படுத்தப்பட்டதா என்ற கேள்வி சிலரால் எழுப்பப்படுகிறது.இஸ்லாத்தின்பால் குரோதம் கொண்டிருந்த கீழைத்தேய(Orientalists) எழுத்தாளர்கள் கலீஃபாக்களின் நல்லாட்சியைப்பற்றி கூறுவதைவிட அவர்களின் தவறுகளையே முன்னிலைப்படுத்தியுள்ளனர்.எனவே இஸ்லாம் நடைமுறைப்படுத்தப்பட்டதா என்பதை இதைவைத்து ஒருபோதும் மதிப்பிடக்கூடாது.ஆயிரத்து முன்னூறு ஆண்டுகளாக கிலாஃபத்தில் இஸ்லாமிய சட்டங்கள்தான் நடைமுறையில் இருந்தது. கிலாஃபத்தின் நெடிய வரலாற்றில் கலீஃபாக்கள் ஒருபோதும் குஃப்ர் சட்டங்களை அரசியல் சாசனத்தில் சேர்த்துக்கொண்டதில்லை. உஸ்மானிய கிலாஃபத்தின் இறுதியில் நடைபெற்ற தவறுகளை விடுத்துப் பார்த்தால் சில கலீஃபாக்கள் அடக்குமுறையாளர்களாக இருந்தபோதிலும் இஸ்லாத்தையே நடைமுறைப்படுத்தினர்.பிந்தைய காலத்தில் கலீஃபாக்கள் இஸ்லாத்தை நடைமுறைப்படுத்தியதில் அலட்சியம் காட்டினாலும் இஸ்லாத்தின் எதிரிகளோடு கடுமையாகவே நடந்துகொண்டனர். ஷூறாவின் அடிப்படையில் ஆட்சி புரிவது முஸ்லிம்களின் உரிமையாக இருந்தாலும் கிலாஃபா ராஷிதீனிற்கு பிந்தைய காலத்தில் அத்தகைய ஷூறா இல்லாமல் அல்லது அதை தவிர்த்து ஆட்சி புரிந்ததால் அதன் அமைப்பு மாறிவிட்டதாக ஆகிவிடாது; ஏனெனில் அது இல்லாமல் ஆட்சி புரிவதும் கூடும். வரலாற்றைப் பொறுத்தவரை இஸ்லாமிய அரசு நிலைபெற்றிருந்ததா இல்லையா என்பதை ஆய்வு செய்வதற்கு அப்போதிருந்த ஆட்சியமைப்பின் கட்டமைப்பை மனதில் கொள்ளுதல் அவசியமாகும். அப்போதிருந்த ஆட்சிமுறை எட்டு தூண்களை அடிப்படையாக கொண்டிருந்தது.
1.கலீஃபா(الخليفة)
2.கலீஃபாவின் அதிகார உதவியாளர்கள்(معاون التفويض)
3.கலீஃபாவின் நிர்வாக உதவியாளர்கள் (معاون التنفيذ)
4.ஜிஹாத் தலைவர்(أمير الجهاد)
5.கவர்னர்கள்(الولاة)
6.நீதிபதிகள் (القضاء)
7.அரசுத்துறைகள்(مصالح الدولة)
8.மஜ்லிஸுல்-உம்மா(مجلس الأمة)
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறியதாக ஹுதைஃபா(ரலி) அறிவிக்கிறார்கள்:-
يَكُونُ بَعْدِي أَئِمَّةٌ لَا يَهْتَدُونَ بِهُدَايَ، وَلَا يَسْتَنُّونَ بِسُنَّتِي، وَسَيَقُومُ فِيهِمْ رِجَالٌ قُلُوبُهُمْ قُلُوبُ الشَّيَاطِينِ فِي جُثْمَانِ إِنْسٍ» ، قَالَ: قُلْتُ: كَيْفَ أَصْنَعُ يَا رَسُولَ اللهِ، إِنْ أَدْرَكْتُ ذَلِكَ؟ قَالَ: «تَسْمَعُ وَتُطِيعُ لِلْأَمِيرِ، وَإِنْ ضُرِبَ ظَهْرُكَ، وَأُخِذَ مَالُكَ، فَاسْمَعْ وَأَطِعْ
“எனக்கு பின்னர் இமாம்கள் வருவார்கள்.அவர்களில்(சிலர்) என்னுடைய நேர்வழியைக் கொண்டு வழிகாட்டமாட்டார்கள்;என்னுடைய வழிமுறையைக்கொண்டு செயலாற்ற மாட்டார்கள்.ஷைத்தானின் இதயத்தோடும் மனிதனின் உடலோடும் சில மனிதர்கள் உங்கள் மத்தியில் தோன்றுவார்கள்.அல்லாஹ்வின் தூதர் அவர்களே அத்தகைய நிலை ஏற்பட்டால் நான் எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும் என்று வினவினேன்.உங்கள் முதுகில் அடித்தாலும்,இன்னும் உங்கள் செல்வத்தை பறித்துக்கொண்டாலும் அவர்களுக்கு செவிமடுத்து கட்டுப்பட்டு நடந்துகொள்ளுங்கள் என்று கூறினார்கள்.” (முஸ்லிம்)
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:-
خِيَارُ أَئِمَّتِكُمُ الَّذِينَ تُحِبُّونَهُمْ وَيُحِبُّونَكُمْ، وَيُصَلُّونَ عَلَيْكُمْ وَتُصَلُّونَ عَلَيْهِمْ، وَشِرَارُ أَئِمَّتِكُمُ الَّذِينَ تُبْغِضُونَهُمْ وَيُبْغِضُونَكُمْ، وَتَلْعَنُونَهُمْ وَيَلْعَنُونَكُمْ» ، قِيلَ: يَا رَسُولَ اللهِ، أَفَلَا نُنَابِذُهُمْ بِالسَّيْفِ؟ فَقَالَ: «لَا، مَا أَقَامُوا فِيكُمُ الصَّلَاةَ
“உங்கள் இமாம்களில் சிறந்தவர் யார் எனில் நீங்கள் அவர்களை நேசிப்பீர்கள்; அவர்களும் உங்களை நேசிப்பார்கள். நீங்கள் அவர்களுக்காக துஆ செய்வீர்கள். அவர்களும் உங்களுக்காக துஆ செய்வார்கள்.இன்னும் உங்கள் இமாம்களில் மோசமானவர் யார் எனில் அவர்கள் உங்களை வெறுப்பார்கள்.நீங்களும் அவர்களை வெறுப்பீர்கள்.அவர்கள் உங்களை சபிப்பார்கள்;நீங்களும் அவர்களை சபிப்பீர்கள். “அல்லாஹ்வின் தூதர் அவர்களே! நாங்கள் அவர்களுடன் போரிட வேண்டாமா? என்று நாங்கள் வினவினோம். “இல்லை! உங்கள் மத்தியில் அவர்கள் “ஸலா”( (صلاةவை நிலைநாட்டும் வரை (அவர்களுடன் போரிட வேண்டாம்) என்று கூறினார்கள். “(முஸ்லிம்)
இந்த ஹதீஸில் “ஸலா” (صلاة)வை நிலை நிறுத்துதல் என்பது ‘தீனை நிலை நிறுத்துதல்’ என்ற அர்த்தத்தில் கூறப்பட்டுள்ளது.கலீஃபாக்கள் கெட்டவர்களாக இருந்தாலும், கொடுமைக்காரர்களாக இருந்தாலும்,மக்களின் சொத்துக்களை பறிப்பவர்களாக இருந்தாலும் அவர்கள் தீனை நிலைநாட்டும் வரை அவர்களுக்கு கட்டுப்படவேண்டுமென்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்)அவர்கள் கூறியுள்ளார்கள். எனவே வரலாற்றில் சில கலீஃபாக்கள் இத்தகைய நடத்தை கொண்டவர்களாக இருந்ததை அடிப்படையாக வைத்து இஸ்லாம் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்று முடிவு செய்யக்கூடாது.
மூன்றரை ஆண்டுகள் கலீஃபா இல்லை
மூன்றரை ஆண்டுகள் கலீஃபா இல்லை என்றாலும் கிலாஃபா தொடர்ந்ததை மறுக்க முடியாது. ஏனெனில் தார்த்தாரியர்கள் லட்சக்கணக்கான முஸ்லிம்களை கொன்று குவித்து கிலாஃபத்தின் தலைநகரான பக்தாதை நிர்மூலமாக்கினர். தார்த்தாரியர்கள் என்று அறியப்படும் மங்கோலியர்கள், கலீஃபா முஸ்தஃஸிம் பில்லாஹ் அவர்களையும் கொண்றனர். என்வே கிலாஃபா மிகவும் பலவீனமான இருந்ததால் மூன்றரை ஆண்டுகள் கலீஃபா நியமிக்கப்படவில்லை.கலீஃபா கொல்லப்பட்டாலும் கிலாஃபத்தின் கட்டமைப்பு அப்படியே இருந்தது.கலீஃபாவால் நியமிக்கப்பட்டிருந்த மற்ற மாகாண ஆளுநர்களும் இதர துறையினரும் தங்கள் பணிகளை தொடர்ந்தனர். அய்ன் ஜாலூத் என்ற பகுதியில் வைத்து தார்த்தாரியர்கள் முறியடிக்கப்பட்ட பிற்கு கெய்ரோவில் உலமாக்கள் முயற்சியால் முஸ்தன்ஸிர் பில்லாஹ் அவர்களுக்கு பைஆ பெறப்பட்டு கலீஃபாவாக நியமிக்கப்பட்டார்.எனவே இஸ்லாமிய ஆட்சி தொடர்ச்சியாக நடைபெறவில்லை என்ற வாதம் தவறானதாகும்.
வம்சாவழி ஆட்சிமுறையும் பைஅத்தும்
உமைய்யாக்கள்,அப்பாஸியாக்கள்,உஸ்மானியாக்கள் தொடர்ச்சியாக வம்சாவழி அடிப்படையில் கிலாஃபா பொறுப்பிற்கான பைஅத்தை பெற்றுக்கொண்டதால் அது மன்னராட்சி என்றும் அதை ஒப்புக்கொள்ள முடியாது என்றும் சிலர் வாதிடுகின்றனர். மன்னராட்சி முறையில் அரசனுக்கு பிறகு அவனுடைய வாரிசு குடும்பத்தினரால் முடிசூட்டப்படுவார்.ஆனால் கிலாஃபத்தின் வரலாற்றில் பைஆ இல்லாமல் கலீஃபா நியமிக்கப்பட்டதில்லை.மன்னராட்சியில் தான் விரும்பியதை அரசன் சட்டமாக நடைமுறைக்கு கொண்டுவர முடியும்.ஆனால் ஆயிரத்து முன்னூறு ஆண்டுகளாக கிலாஃபத்தில் இஸ்லாத்தை புறக்கனித்து விட்டு எந்த குஃப்ர் சட்டமும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.ஷரியா சட்டங்கள் தான் சட்டமியற்றுதலில்(legislation) அடிப்படையாக கொள்ளப்பட்டது. ஒரு கலீஃபா இருக்கும்போது அடுத்த கலீஃபா யார் என்று வாரிசு அடிப்படையில் முடிவு செய்யப்பட்டு முதலில் பைஆ பெறப்பட்டாலும், அந்த கலீஃபா மரணித்த பின்னர் புதிய கலீஃபாவிற்கு கிலாஃபத்திற்கான ஒப்பந்த பைஅத்தை அஹ்லுல் ஹல்லி வல் அக்த் (செல்வாக்கு மிக்க மக்கள் பிரதிநிதிகள் أهل الحل والعقد) அல்லது ஷைகுல் இஸ்லாம் செய்த பிறகுதான் அவர்கள் கலீஃபா பொறுப்பை ஏற்றனர். முதலில் பெறப்பட்ட பைஆ ஷரியா அடிப்படையில் செல்லுபடியாகாது என்றாலும் இரண்டாம் முறையாக கிலாஃபத்திற்கான ஒப்பந்த பைஅத்தை மக்களின் பிரதிநிதிகளான செல்வாக்கு மிக்க நபர்கள் செய்துள்ளதால் சட்டபூர்வமாக அவர் கலீஃபா ஆவார். எனவே இஸ்லாமிய அரசான கிலாஃபத்தின் வரலாற்றில் இஸ்லாம் தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதை தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.
முஸ்லிம்களுக்கு தலைமை தாங்கிய அமீருல் முஃமினீன்களின் பட்டியல்
கிலாஃபா ராஷிதா (11-40 ஹிஜ்ரி;632-661 கி.பி)
632–634 அபுபக்கர் சித்தீக் (ரலி)
634-644 உமர் இப்னு கத்தாப் (ரலி)
644-656 உஸ்மான் இப்னு அஃப்ஃபான் (ரலி)
656-661 அலீ இப்னு அபீ தாலிப் (ரலி)
661-661 ஹஸன் இப்னு அபீ தாலிப் (ரலி)
உமைய்யா கலீஃபாக்கள் (41-132 ஹிஜ்ரி; 661-750 கி.பி)
661-680 முஆவியா இப்னு அபு சுஃப்யான் (ரலி)
680-683 யஜீத் இப்னு முஆவியா
683-683 முஆவியா இப்னு யஸீத்
683-692 அப்துல்லாஹ் இப்னு ஜுபைர் (ரலி)
683-692 மர்வான் இப்னு ஹகம்
692-705 அப்துல் மலிக் இப்னு மர்வான்
705-715 வலீது இப்னு அப்துல் மலிக்
715-717 சுலைமான் இப்னு அப்துல் மலிக்
717-720 உமர் இப்னு அப்துல் அஜீஸ்
720-724 யஜீத் இப்னு அப்துல் மலிக்
724-743 ஹிஷாம் இப்னு அப்துல் மலிக்
743-744 வலீத் இப்னு யஜீத் இப்னு அப்துல் மலிக்
744-744 யஜீத் III
744-744 இப்ராஹீம் இப்னு வலீத்
744-750 மர்வான் இப்னு முஹம்மது
அப்பாஸிய கலீஃபாக்கள் (132-923 ஹிஜ்ரி; 750-1517 கி.பி)
அப்பாஸியாக்கள் I பக்தாத் தலைநகரம்
750-754 அபுல் அப்பாஸ் ஸஃப்ஃபாஹ்
754-775 அபூஜஃபர் மன்சூர்
775-785 மஹ்தீ
785-786 ஹாதீ
786-809 ஹாரூன் ரஷீத்
809-813 அமீன் இப்னு ஹாரூன் ரஷீத்
813-833 மஃமூன் இப்னு ஹாரூன் ரஷீத்
833-842 முஃதஸிம் பில்லாஹ்
842-847 வாஸிக் பில்லாஹ்
847-861 முத்தவக்கில் அலல்லாஹ்
861-862 முன்தஸிர் பில்லாஹ்
862-866 முஸ்தயின் பில்லாஹ்
866-869 முஃதஸ் பில்லாஹ்
869-870 முஹ்த்ததீ பில்லாஹ்
870-892 முஃதமித் அலல்லாஹ்
892-902 முஃததித் பில்லாஹ்
902-908 முக்தஃபி பில்லாஹ்
908-932 முக்ததிர் பில்லாஹ்
932-934 காஹிர் பில்லாஹ்
934-940 ராதிபில்லாஹ்
940-944 முத்தகீ லில்லாஹ்
944-946 முஸ்தக்ஃபி பில்லாஹ்
946-974 முத்தீ லில்லாஹ்
974-991 தாயீ லில்லாஹ்
991-1031 காதிர் பில்லாஹ்
1031-1075 காயிம் பி அம்ரில்லாஹ்
1075-1094 முக்ததீ பி அம்ரில்லாஹ்
1094-1118 முஸ்தஷீர் பில்லாஹ்
1118-1135 முஸ்தர்ஷித் பில்லாஹ்
1135-1136 ராஷித் பில்லாஹ்
1136-1160 முக்தஃபி லி அம்ரில்லாஹ்
1160-1170 முஸ்தன்ஜித் பில்லாஹ்
1170-1180 முஸ்ததி பி அம்ரில்லாஹ்
1180-1225 நாஸிர் லி தீனில்லாஹ்
1225-1226 ஸாஹிர் பி அம்ரில்லாஹ்
1226-1242 முஸ்தன்ஸிர் பில்லாஹ்
1242-1258 முஸ்தஃஸிம் பில்லாஹ்
தார்த்தாரியர்களின் கோரத்தாக்குதலால் கிலாஃபத்தின் தலைநகரான பக்தாத் நிர்மூலமாக்கப்பட்டது.தார்த்தாரியர்கள் கலீஃபா முஸ்தஃஸிம் பில்லாஹ் அவர்களை கொண்றனர். கிலாஃபா மிகவும் பலவீனமான இருந்ததால் மூன்றரை ஆண்டுகள் கலீஃபா நியமிக்கப்படவில்லை.கலீஃபா கொல்லப்பட்டாலும் கிலாஃபத்தின் கட்டமைப்பு அப்படியே இருந்தது.கலீஃபாவால் நியமிக்கப்பட்டிருந்த மற்ற மாகாண ஆளுநர்களும் இதர துறையினரும் தங்கள் பணிகளை தொடர்ந்தனர். அய்ன் ஜாலூத் என்ற பகுதியில் வைத்து தார்த்தாரியர்கள் முறியடிக்கப்பட்ட பிற்கு கெய்ரோவில் உலமாக்கள் முயற்சியால் முஸ்தன்ஸிர் பில்லாஹ் அவர்களுக்கு பைஆ செய்யப்பட்டு கலீஃபாவாக நியமிக்கப்பட்டார்.
அப்பாஸியாக்கள் II கெய்ரோ தலைநகரம்
1261-1262 முஸ்தன்ஸிர் பில்லாஹ்
1262-1301 ஹாகிம் பி அம்ரில்லாஹ் I
1301-1339 முஸ்தக்ஃபி பில்லாஹ் I
1339-1341 வாஸிக் பில்லாஹ் I
1341-1352 ஹாகிம் பி அம்ரில்லாஹ் II
1352-1362 முஃததித் பில்லாஹ்
1362-1377 முத்தவக்கில் அலல்லாஹ் I (First Reign)
1377-1377 முஸ்தஃஸிம் பில்லாஹ் I (First Reign)
1377-1383 முத்தவக்கில் அலல்ல்லாஹ் I (Second Reign)
1383-1386 வாஸிக் பில்லாஹ் II
1386-1389 முஸ்தஃஸிம் பில்லாஹ் I (Second Reign)
1389-1406 முத்தவக்கில் அலல்ல்லாஹ் I (Third Reign)
1406-1430 முஸ்தயின் பில்லாஹ்
1430-1441 முஃததித் பில்லாஹ் II
1441-1450 முஸ்தக்ஃபி பில்லாஹ் II
1450-1459 காயிம் பி அம்ரில்லாஹ்
1459-1479 முஸ்தன்ஜித் பில்லாஹ்
1479-1497 முத்தவக்கில் அலல்ல்லாஹ் II
1497-1508 முஸ்தன்ஸிக் பில்லாஹ் (1st Reign)
1508-1516 முத்தவக்கில் அலல்ல்லாஹ் III (1st Reign)
1516-1517 முஸ்தன்ஸிக் பில்லாஹ் (2nd Reign)
1517-1517 முத்தவக்கில் அலல்ல்லாஹ் III (2nd Reign)
கலீஃபா முதவக்கில் அல்லாஹ் III அவர்களிடமிருந்து உஸ்மானிய சுல்தான் சலீம் I அவர்களுக்கு கிலாஃபா பொறுப்பு மாறியது.
உஸ்மானிய கலீஃபாக்கள் (923-1349ஹிஜ்ரி; 1517-1924கி.பி)
1517-1520 சலீம் I
1520-1566 சுலைமான் I
1566-1574 சலீம் II
1574-1595 முராத் III
1595-1603 முஹம்மது III
1603-1617 அஹ்மது I
1617-1618 முஸ்தஃபா I (1st Reign)
1618-1622 உஸ்மான் II
1622-1623 முஸ்தஃபா I (2nd Reign)
1623-1640 முராத் IV
1640-1648 இப்ராஹீம் I
1648-1687 முஹம்மது IV
1687-1691 சுலைமான் II
1691-1695 அஹ்மது II
1695-1703 முஸ்தஃபா II
1703-1730 அஹ்மது III
1730-1754 மஹ்மூது I
1754-1757 உஸ்மான் III
1757-1774 முஸ்தஃபா III
1774-1789 அப்துல் ஹமீது I
1789-1807 சலீம் III
1807-1808 முஸ்தஃபா IV
1808-1839 மஹ்மூது II
1839-1861 அப்துல் மஜீத் I
1861-1876 அப்துல் அஜீஸ்
1876-1876 முராத் V
1876-1909 அப்துல் ஹமீது II
1909-1918 முஹம்மது V
1918-1922 முஹம்மது VI (வஹீதுத்தீன்)
1922-1924 அப்துல் மஜீத் I