கலீஃபா
ஆட்சி, அதிகாரத்தில் உம்மத்தை பிரதிநிதித்துவப்படுத்தி ஷரிஆவை நிலைநாட்டும் பொறுப்புடையவரே கலீஃபா.
ஆட்சியும் அதிகாரமும் உம்மத்திற்கே உரியவை என இஸ்லாம் வழியுறுத்துகிறது. ஆகவே ஷரிஆவை நடைமுறைப்படுத்தும் பொறுப்பை அல்லாஹ்(சுபு) உம்மத்திற்கு கடமையாக்கியிருக்கிறான்.
கலீஃபா என்பவர் முஸ்லிம்களாலேயே நியமிக்கப்படுவதால் ஆட்சி, அதிகாரத்திலும், ஷரிஆவை நிலைநாட்டுவதிலும் அவர் முஸ்லிம்களைப் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும். இதனால் உம்மத்தின் சத்தியப்பிரமாணத்தை (பைஆவை) பெறும்வரை ஒருவர் கலீஃபாவாக – மாட்டார். பையத் வழங்கப்பட்டால் மட்டுமே கலீஃபாவாக ஒருவர் நியமிக்கப்படலாம். கலீஃபாவுக்கு பையத்தை வழங்கிய பின் அவருக்கு கட்டுப்படுவது உம்மத்திற்கு கடமையாகி விடுகிறது.
கலீஃபா நியமிக்கப்படுவதற்கு பையத் ஒரு நிபந்தனை என்பதால், அதை உம்மத் வழங்கும் வரை, முஸ்லிம்களை ஒருவர் ஆட்சி செய்தாலும்கூட அவரை கலீஃபா என அழைக்க முடியாது.
பதவிப்பெயர்
கலீஃபாவை கலீஃபா, இமாம், அமீருல் முஹ்மினீன் என ஸஹாபாக்கள் அழைத்ததற்கான ஆதாரங்களை ஹதீஸ்களிலும், இஜ்மா ஸஹாபாவிலும் காண முடிகிறது.
கீழ்வரும் ஹதீஸ்கள் அதற்கு சில உதாரணங்களாகும்.
“ நீங்கள் இரண்டு கலீஃபாக்களுக்கு பையத் செய்தால் இரண்டாமவரை கொலை செய்து விடுங்கள்” (முஸ்லிம்)
ரஸுல் (ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு அம்ரு இப்னு அல் ஆஸ் (ரழி) அறிவிக்கிறார்கள்.
“ எவரேனும் ஒருவர் தனது கைகளாலும், இதயத்தாலும் ஒரு இமாமுக்கு பையத் செய்திருந்தால் (அந்த இமாமுக்கு) அவரால் முடியுமான வரை கட்டுப்பட்டு நடக்கட்டும்…” (முஸ்லிம்)
ரஸுல் (ஸல்) அவர்கள் கூறியதாக அவ்ப் இப்னு மாலிக் (ரழி) அறிவிக்கிறார்கள்.
“ உங்களுடைய சிறந்த இமாம்கள் யாரெனில் நீங்கள் அவர்களை விரும்புவீர்கள், அவர்களும் உங்களை விரும்புவார்கள். அவர்கள் உங்களுக்காக பிரார்த்திப்பார்கள், நீங்களும் அவர்களுக்காகப் பிரார்த்திப்பீர்கள்…” (முஸ்லிம்)
ஆகவே ஹதீஸ்களிலிருந்து இஸ்லாத்தின் சட்டங்களை அமுல்படுத்தும் ஆட்சியாளருக்கு இமாம் அல்லது கலீஃபா என்ற தலைப்பே வழங்ப்பட்டுள்ளதை காண்கிறோம்.
அமீருல் முஹ்மினீன் என்ற தலைப்பைப் பொருத்தவரை அது உமர் இப்னு அப்துல் அஸீஸ் (ரஹ்) அவர்கள் அபா பக்ர் இப்னு சுலைமான் இப்னு ஹத்மா அவர்களிடம் அமீருல் முஹ்மினீன் என்ற பதம் எழுத்துகளில் முதலில் எப்போது பயன்படுத்தப்பட்டது என வினவியபோது தனது பாட்டியான அஸ்ஸஃப்பா (ரழி) அவர்கள் கூறியதாக அபா பக்ர் இப்னு சுலைமான் இப்னு ஹத்மா பின்வரும் தகவலை அறிவிக்கிறார்கள்.
“உமர் (ரழி) அவர்களின் ஆட்சிக்காலத்தில் ஈராக்கைப்பற்றியும், அதனது மக்களைப்பற்றியும் அறிவதற்காக இரண்டு உறுதியான நபர்களை தன்னிடம் அனுப்பும்படி ஈராக்கின் ஆளுநருக்கு கடிதமொன்றை உமர் (ரழி) அவர்கள் அனுப்பி வைத்தார்கள். அதன்படி லபீத் இப்னு ராபிஆ மற்றும் அதீ இப்னு ஹாத்திம் ஆகிய இருவரையும் ஆளுநர் அனுப்பி வைத்தார். மதீனாவை வந்தடைந்த இந்த இருவரும் பள்ளிவாசலில் அம்ரு இப்னு அல் ஆஸ்(ரழி) சந்தித்தார்கள். அப்போது அமீருல் முஹ்மினீனை சந்திப்பதற்கு தமக்கு அனுமதி பெற்றுத்தருமாறு கோரினார்கள். இதன்போது அம்ரு இப்னு அல் ஆஸ் (ரழி) அவர்கள், அல்லாஹ் மீது ஆணையாக, நீங்கள் அவரை மிகச்சரியான பெயரைக்கொண்டே அழைத்தீர்கள்; – அவர் அமீர், நாங்களோ விசுவாசிகள்(முஹ்மினீன்) என்றார்கள். பின்னர் அவர் உமர் (ரழி) அவர்களை சந்தித்து அஸ்ஸலாமு அலைக்கும் அமீருல் முஹ்மினீனே! எனச் சொன்னார்கள். அதற்கு உமர் (ரழி) அவர்கள் இந்த பெயர் குறித்து சிந்திக்க உங்களை எது தூண்டியது எனக்கேட்டார்கள். அதற்கு அல் ஆஸ் (ரழி) அவர்கள் சொன்னார்கள்: லபீத் இப்னு ராபிஆ மற்றும் அதீ இப்னு ஹாத்திம் ஆகிய இருவரும் வந்து அவர்களது ஒட்டகங்களை பள்ளிவாசல் வளாகத்திலே தரித்துவிட்டு என்னை வந்து சந்தித்து, அம்ரே அமீருல் முஹ்மினீனை சந்திப்பதற்கு எமக்கு அனுமதி பெற்றுத்தாருங்கள் என்றார்கள். உண்மையில் அவர்கள் உங்களுக்கு சரியான பெயரைத்தான் சூட்டியிருக்கிறார்கள். நாங்கள் முஹ்மீன்கள், நீங்களோ எமது அமீர் என்றார்கள். இந்த சம்பவத்திலிருந்து அமீருல் முஹ்மினீன் என்ற தலைப்பை எழுத்துகளில் பயன்படுத்த ஆரம்பித்தார்கள்.” என்றார்கள்.
அதன்பின்பு தொடர்ந்து வந்த குலஃபாக்களை ஸஹாபாக்களின் காலத்திலும் அவர்களுக்கு பின்வந்த காலத்திலும் அமீருல் முஹ்மினீன் என அழைத்து வந்தார்கள். ( அல் முஸ்தத்ரக், அத்தபரானி )
கலீஃபாவிற்குரிய நிபந்தனைகள்
ஒருவர் கலீஃபாவாக நியமிக்கப்படுவதற்கு அவர் ஏழு தகுதிகளைக் கொண்டிருக்க வேண்டும். அவற்றில் ஒன்றை அவரால் பூர்த்தி செய்ய முடியவில்லையென்றால் அந்நபர் கலீஃபாவாக நியமிக்கப்பட தகுதியற்றவர். அத்தகுதிகளாவன,
1. கலீஃபாவாக நியமிக்கப்படுபவர் ஒரு முஸ்லிமாக இருக்க வேண்டும். காபிர் ஒருவர் கலீஃபாவாக நியமிக்கப்படுவதும், அவரைப் பின்பற்றுவதும் ஹராமாகும்.
பின்வரும் குர்ஆன் வசனங்கள் அதனை வழியுறுத்துகின்றன.
“ அல்லாஹ் ஒரு போதும் முஸ்லிம்களின் மீதான ஒரு வழியை(அதிகாரத்தை) நிராகரிப்பாளர்களுக்கு வழங்கமாட்டான்” (4:141)
“ ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும், உங்களில்; அதிகாரத்தில் இருப்பவர்களுக்கும் கட்டுப்படுங்கள்” (4:59)
மேலுள்ள குர்ஆன் வசனத்தில் உலில் அம்ர் என்ற சொல் முஸ்லிம்களையே குறிக்கிறது. ஆகவே கலீஃபாவாக நியமிக்கப்படுபவர் முஸ்லிமாக இருக்க வேண்டும் என்பது உறுதியாகிறது.
2. கலீஃபாவாக நியமிக்கப்படுபவர் ஒரு ஆணாக இருக்க வேண்டும். பெண்களை கலீஃபாவாக நியமிப்பது தடைசெய்யப்பட்டள்ளது. இதனை கீழ்வரும் ஹதீஸ் உறுதிப்படுத்துகிறது.
பாரசீக மக்கள் கிஸ்ராவின் மகளை தலைவியாக்கியபோது, அதனை செவியுற்ற முஹம்மத்(ஸல்) அவர்கள்
“ பெண்களைத் தக்கள் ஆட்சியாளர்களாக ஆக்கியவர்கள் எப்பொழுதும் வெற்றி பெற மாட்டார்கள்.” என்று கூறியதாக புஹாரி (ரஹ்) அறிவிக்கிறார்கள்.
மேற்கூறிய ஹதீஸில் பெண்களை ஆட்சியாளர்களாக்கியவர்கள் வெற்றிபெறமாட்டார்கள் என்று முஹம்மத் (ஸல்) முன்னறிவிப்பு செய்தமையிலிருந்து கலீஃபாவாக மட்டுமல்லாது வேறு எந்த ஆட்சிப் பதவிகளிலும் பெண்களை நியமிப்பது தடைசெய்யப்பட்டிருப்பது தெளிவாகிறது. நீதித்துறை, ஆலோசனை சபை நிர்வாகம் போன்ற ஆட்சியியலுடன் சம்பந்தப்படாத பதவிகளில் பெண்களை நியமிப்பது இஸ்லாத்தில் ஆகுமானது.
3. கலீஃபாவாக நியமிக்கப்படுபவர் பருவ வயதை அடைந்தவராக இருக்க வேண்டும். பருவ வயதை எய்தாத ஒருவரை கலீஃபாவாக நியமிப்பது தடைசெய்யப்பட்டுள்ளது.
இதனை கீழ்வரும் ஹதீஸ்கள் உறுதிப்படுத்துகின்றன.
“மூன்று தரப்பினர் தங்களுடைய செயல்களுக்கு பதில் சொல்லக்கடமைப்படவில்லை. அவர்கள் யாரெனில் தூக்கத்திலிருப்பவர் விழிக்கும் வரை, ஒரு சிறுவன் பருவ வயதை அடையும்வரை, புத்தி சுயாதீனமற்றவர் புத்தி சுயாதீனம் அடையும் வரை” (அபு தாவூத்)
புஹாரியில் பதிவாகியுள்ள இன்னுமொரு ஹதீஸில் ஸெய்னப் பிந்த் ஹுமைர் (ரழி) அவர்கள் தமது மகனை பையத் செய்வதற்காக ரஸுல் (ஸல்) அவர்களிடம் அழைத்துச் சென்ற போது ரஸுல் (ஸல்) “இவர் இன்னும் சிறுவர்தானே” என்று கூறி அவரின் தோழைத்தட்டிவிட்டு அவருக்காக பிரார்த்தனை புரிந்தார்கள். ஆகவே சிறுவன் ஒருவனின் பையத்தே வலிதாக இல்லாத நிலையில் அவனை கலீஃபாவாக்குவது வலிதாக முடியாது. மேலும் சிறுவர்கள் தமது செயல்களுக்கு பதில் கூறக்கடமைப்பட்டவர்களில்லை. ஆகவே அவர்களால் முழு உம்மத்தினது செயல்களுக்கு நிச்சயமாக பதில் கூற முடியாது.
4. கலீஃபாவாக நியமிக்கப்படுபவர் புத்தி சுயாதீனமுடையவராக இருக்க வேண்டும். இதற்கான ஆதாரங்களை நாம் மேலே குறிப்பிட்ட அபுதாவூத்தில் இடம்பெற்ற ஹதீஸில் பார்த்தோம்.
5. கலீஃபாவாக நியமிக்கப்படுபவர் நீதமானவராக இருக்க வேண்டும். ஒரு ‘பாஸிக்’ கை கலீஃபாவாக நியமிக்க முடியாது.
அல்லாஹ்(சுபு) குர்ஆனிலே குறிப்பிடுகிறான்,
“ உங்களில் நீதமான இருவரை சாட்சியாளராக்கிக் கொள்ளுங்கள்” (65:2)
ஒரு கலீஃபா முழு உம்மத்திற்கே சாட்சியாளராக இருப்பதால் அவர் நீதமானவராக இருப்பது கடமையாகிறது.
6. கலீஃபாவாக நியமிக்கப்படுபவர் ஒரு அடிமையாக இருத்தலாகாது. ஏனெனில் ஒரு அடிமையால் அவரது விடயங்களையே சுயமான செய்ய முடியாத நிலையில் முழு உம்மத்தினதும் விடயங்களை அவர் கவனிப்பது சாத்தியமில்லை.
7. ஒரு கலீஃபா கிலாஃபத்திற்குரிய நடவடிக்கைகளை செய்வதற்கு ஆளுமையுள்ளவராக இருக்க வேண்டும். ஏனெனில் இது பைஆவில் உள்ளடக்கப்பட்டுள்ள ஒரு விடயமாகும். கிலாஃபத்தினுடைய நடவடிக்கைகளை குர்ஆன், ஸுன்னா அடிப்படையில் மேற்கொள்ள முடியாதவர் கலீஃபா என்ற நிலைக்கு வர தகுதியற்றவர்.
சில முன்னுரிமைத் தகுதிகள்
மேற்கூறிய ஏழு தகுதிகளையே இஸ்லாம் ஒரு கலீஃபாவிடமிருந்து எதிர்பார்த்தாலும் சில சிறப்பு அல்லது முன்னுரிமைத் தகுதிகளையும் சொல்லியிருக்கிறது. அவை கட்டாயமானவையல்ல. எனினும் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் ஏழு நிபந்தனைகளையும் பூர்த்தி செய்திருக்கும் பட்சத்தில் அவர்களில் ஒருவருக்கு முன்னுரிமை வழங்குவதற்காக அவை கருத்திற்கொள்ளப்படலாம். அவர் குறைஷிக் குலத்தை சேர்ந்தவராக இருத்தல், முஜ்தஹித்தாக இருத்தல், சிறந்த போர் வீரராக இருத்தல் போன்ற முன்னுரிமைகளே அவையாகும்.