உலகை உலுக்கிய பொருளாதார நெருக்கடி 2013 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் ஆறாம் ஆண்டை பூர்த்தி செய்து இப்போது ஏழாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. ஐரோப்பிய யூனியனைச் சார்ந்த அதிகாரிகள் ஐரோப்பிய கண்டத்தில் “recession” என்று சொல்லக்கூடிய பொருளாதார பின்னடைவு முடிவுக்கு வந்துவிட்டதாகவும், பொருளாதாரம் வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருக்கின்றது எனவும்,அதை உண்மைப்படுத்துவது போன்ற புள்ளியியல் விபரங்களையும் அறிவித்தனர். சீனா அதன் பொருளாதாரம் 2013 ஜூலையுடன் முடிந்த நடப்பாண்டில் 7% வளர்ந்ததாக அறிக்கை வெளியிட்டது. அமெரிக்கா அதன் பொருளாதாரம் 2013 ஆம் ஆண்டு 1% வளர்ச்சி பெற்றதாக பட்டியல் வெளியிட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா, சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார பங்களிப்பு, உலக பொருளாதரத்தில் 50 விழுக்காட்டிற்கும் மேலாகும். இந்த நாடுகளின் GDP எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தியை (Gross Domestic Product) வைத்தே கடந்த ஆறு ஆண்டுகளாக உலக பொருளாதார நெருக்கடி முடிவுக்கு வந்துவிட்டதாக சொல்லப்படுகின்றது.எனவே உண்மையாகவே உலக பொருளாதார நெருக்கடி முடிவுக்கு வந்துவிட்டதா என்பதை இங்கு ஆராய்வோம்.
முதலாவதாக, அமெரிக்காவின் ஆட்சியாளர்கள், 16 ட்ரில்லியன் டாலர் அளவிலான தங்கள் நாட்டின் பொருளாதாரம் மீண்டும் வளர்ச்சி பாதையை நோக்கிச் செல்லும் என்ற நம்பிக்கையில், “stimulus spending” என்று சொல்லக்கூடிய பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் சில “ஊக்க திட்டங்களை” அறிமுகப்படுத்தினர். இதன் விளைவாக ஒரு நிலையற்ற வளர்ச்சி ஏற்பட்டது.ஏனெனில் இந்த “ஊக்க திட்டங்கள்” தற்காலிகமான நடவடிக்கைகளாகும்.அதைக் கொண்டு நிலையான வளர்ச்சியை ஏற்படுத்த இயலாது. 2013 ஆம் ஆண்டு வளர்ச்சி பெற்றபோதிலும், சில அடிப்படை பொருளாதார விசயங்கள் அதற்கு மாற்றமான ஒன்றாக இருக்கிறது. 12 மில்லியன் அமெரிக்கர்கள் வேலையின்றி உள்ளனர். அமெரிக்காவின் வாகன உற்பத்தியின் சின்னமாகவும், மிகப்பெரிய பணக்கார நகரமாகவும் திகழ்ந்த டெட்ராய்ட் (Detroit) நகரம் ஜூலை 2013 ஆம் ஆண்டு திவாலாகியது. இதற்கு முன்னர் முப்பத்தியாறு சிறு நகரங்களும் திவாலாகி விட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தன.
அமெரிக்கா கூறிக்கொண்ட இந்த வளர்ச்சிக்கான முக்கிய கரணம்,பொருளாதார வளர்ச்சியை அளவிடும் முறையில் அமெரிக்கா சில மாற்றங்கள் செய்ததே ஆகும். முதன்முறையாக இசை தயாரிப்பு, மருந்து காப்புரிமை போன்ற அறிவுசார் சொத்துக்களும் வளர்ச்சியைக் கணக்கிடும்போது சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளது. இதன் காரணமாக பொருளாதாரத்தில் 560 பில்லியன் டாலர் அதிகரித்து 3.6% அளவுக்கு மாற்றம் ஏற்பட்டது. உண்மை என்னவெனில் அமெரிக்காவின் பொருளாதாரம் இன்றும் அவல நிலையிலேயே உள்ளது. மக்கள் போதிய வருமானமின்றி தங்கள் செலவினங்களை வெகுவாக குறைத்துக்கொண்டது இதற்கு சான்றாகும். ஆதலால் பொருளாதார நெருக்கடி முடிவுக்கு வந்துவிட்டதாக கூறுவது செயற்கையானதும், மிகைப்படுத்தப்பட்டதுமாகும் என்பது இப்போது வெட்ட வெளிச்சமாகிவிட்டது.
இரண்டாவதாக, ஐரோப்பிய யூனியன் அதிகாரிகள் வெளியிட்ட புள்ளி விவரங்கள் ஐரோப்பிய கண்டத்தின் ஒட்டுமொத்த நிலையை பிரதிபலிப்பதாக அமையவில்லை. இவர்கள் வெளியிட்ட புள்ளி விவரம் ஆரம்பகட்ட மதிப்பீடாகும். அதில், பாதிப்பில் உள்ள அயர்லாந்து மற்றும் கிரேக்க நாடுகளின் புள்ளி விவரங்கள் சேர்க்கப்படவில்லை.ஆரம்பகட்ட மதிப்பீடுகளை புள்ளி விவரங்களாக வெளியிட்ட ஐரோப்பாவின் புள்ளி விவர நிறுவனம் எனப்படும் – யூரோஸ்டட் (Eurostat), தேசிய புள்ளியியல் அலுவலகங்கள் (National statistical offices) கொடுத்த தகவல்களின் அடிப்படையில் அமைந்தாகும். ஒவ்வொரு நாட்டின் தேசிய புள்ளியியல் அலுவலகங்கள், வெவ்வேறு விதமான முறைகளில் புள்ளி விவரங்களை சேகரிக்கின்றன. இந்த மதிப்பீடுகள், கூடுதல் விவரங்கள் கிடைக்கப்படும் போதெல்லாம் திருத்தம் செய்து வெளியிடப்படுவது வாடிக்கையான ஒன்றாகும்.ஜெர்மனியின் புள்ளியல் அலுவலகம்(German statistical office ) ஒருமுறை வெளியிட்ட புள்ளிவிவரத்தை நான்கு ஆண்டுகள் வரை திருத்தம் செய்து வெளியிடும் வழமை கொண்டது குறிப்பிடத்தக்கது. இத்தகைய குறைபாடுகள் கொண்ட புள்ளியியல் மதிப்பீடுகளை வைத்து ஐரோப்பாவின் பொருளாதார நெருக்கடிநிலை சரியாகிவிட்டதாக கூறுவது மிகையானதாகும்.
மூன்றாவதாக, சீன புள்ளி விவரங்கள் எப்போதும்போல் பல்வேறு சந்தேகங்களையும் கேள்விகளையும் எழுப்பியுள்ளன. சீனா உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட பரந்து விரிந்த நாடாகும். சீனா வெளியிட்ட புள்ளிவிவரங்கள் துல்லியமான ஒன்று என்பதாக எடுத்துக்கொண்டாலும், அத்தகைய விவரங்களை சீனா சேகரிப்பது என்பது சாதாரணமான காரியமல்ல. சீனா ஒவ்வொரு ஆண்டும் அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி – Gross Domestic Product (GDP) விவரத்தை ஜனவரி மாதம் மூன்றாவது வாரத்தில் வெளியிடும். மூன்றே மூன்று வாரத்தில் சீன அரசால்,அதன் பொருளாதாரம் முந்திய ஆண்டு எவ்வாறு இருந்தது என்பதை கணக்கிட்டு கூறுவது இயலாத காரியமாகும். 2013 ஆம் ஆண்டு ஜூலை 31 அன்று சீனாவின் மக்கள் தொகையிலும் தொழிற்சாலை உற்பத்தியிலும் மிகப்பெரிய மாநிலமான குவாங்டோங்க் மாகாணத்தின் நிதி விவகார அலுவலகம் (Finance Affairs Office of Guangdong ) வெளியிட்ட சர்வே முடிவில், அதன் மின்பயன்பாடு 2013 ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்கள் வீழ்ச்சியடைந்து உள்ளதாக தெரிய வந்தது. இதே மாநிலம், முன்னர் சீன அரசால் அறிவித்ததைப்போல் 12.9% வளர்ச்சி பெற்று இருக்க முடியாது என்பதையே இந்த சர்வே முடிவு காட்டுகிறது. தேசிய அளவில் பார்க்கும் போது சீன நாட்டின் GDP இன் அளவு, அதன் மாநிலங்களின் GDP இன் அளவுகளின் கூட்டுத்தொகையைக்காட்டிலும் குறைவாக அறிவிக்கப்பட்டது விசித்திரமானதாகும்.
நான்காவதாக, GDP (மொத்த உள்நாட்டு உற்பத்தி – Gross Domestic Product) – ன் அளவுகோலை வைத்து பொருளாதார நடவடிக்கைகள் அளவிடப்பட்டாலும், இந்த அளவீடு பொருளாதார நடவடிக்கையில் நம்பகமற்ற துல்லியமில்லாத அளவீடாகும். ஏனெனில் GDP , நிதித்துறை சார்ந்த பொருளாதார செயல்பாடுகளை மட்டுமே கணக்கில் கொள்ளும். சம்பளமின்றி செய்யப்படும் வேலைகள் மற்றும் உதவிகள்(charity) ஆகியவை கணக்கில் வராது. 0.1% பொருளாதார வீழ்ச்சிக்கும் 0.2% GDP வளர்ச்சிக்கும் எந்த ஒரு வித்தியாசமும் இல்லை என்றே கூறலாம். ஒரு வருடத்திற்கும் அடுத்த வருடத்திற்கும் GDP – ல் உள்ள மாற்றங்களை வைத்து பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தையோ அல்லது வீழ்ச்சியையோ உறுதிபட கூறமுடியாது. பொருளாதரத்தின் பல முக்கிய அங்கங்களை இந்த கணக்கீட்டில் எடுத்துக் கொள்ளாததால் GDP எனப்படும் இந்த அளவீடு, பொருளாதாரத்தின் வளர்ச்சியையும் வீழ்ச்சியையும் ஆராய்வதற்கான நல்ல அளவீடு அல்ல என்பதே உண்மையாகும்.
இறுதியாக, ஆறாண்டுகள் ஆகியும் இந்த பொருளாதார வீழ்ச்சிக்கான தகுந்த தீர்வு காணப்படவில்லை. பொருளாதார வீழ்ச்சியின் வேகம் குறைந்து வந்தாலும், பொருளாதாரம் முன்னேற்றம் அடையவில்லை. ஊக்க திட்ட செலவீட்டு முறை(stimulus spending) மூலம் அமெரிக்கா தன் பொருளாதாரத்தை அழிவிலிருந்து காத்துக்கொண்டதாக கூறிக்கொண்டாலும், இது பணப்புழக்கத்தை அதிகப்படுத்தச்செய்யும் தற்காலிகமான நடவடிக்கையாகவே அமையும், ஏனெனில் குறைந்து கொண்டேவரும் அதன் பணமூலமும் அதற்கு அதிக நாட்கள் உதவாது. பொருளாதார நெருக்கடியால் ஐரோப்பிய அரசுகள் சிக்கண நடவடிக்கைகள் மூலம் செலவினங்களை வெகுவாக குறைத்துக் கொண்டதால், அதன் சமூக நலத்திட்டங்களை நிறுத்தியது. இதனால் இந்த அரசுகளின் உதவியுடன் வாழ்ந்து வந்த மக்களின் நிலைமை இன்னும் மோசமான நிலைக்கு சென்று விட்டது. புள்ளிவிவரங்களை எளிதாக தமக்கேற்றவாறு எளிதாக மாற்றியமைத்து கூறலாம். மேலும் GDP -யை வைத்து நிலைமை முன்னேறி வருவதாக பூசி மெழுகலாம். எனினும் வேலையின்மை, கடன் தேவைகள், செலவினங்கள் போன்றவைகளை வைத்து பார்த்தால், உலக பொருளாதாரம் இன்னும் தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்து கொண்டே செல்கிறது என்பதே உண்மையாகும்.
ஆக்கம் :- அத்னான் கான்