நடத்தையில் அல்குர்ஆனைப் பிரதிபலிபோம், அதனை விளங்கிக் கொள்வோம், அதை மனனமிடுவோம், ஓதுவோம்.
முஸ்லிம்களைப் பொறுத்தளவில் அல்குர்ஆன் ஆனது இஸ்லாமிய மார்க்கத்தின் அடித்தளமாகும் என்பது ஐயத்துக்கிடமற்றது. அதுவே அல்லாஹ் (சுப்) தன்னுடைய செய்திகளை மனிதனுக்கு அறிவிப்பதற்காகத் தேர்ந்தெடுத்துக் கொண்ட ஊடகமாகும். இவ்வேதமே நம் தலைவர் முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு ஒரு வழி காட்டியாகவும் சரியையும் பிழையையும் பிறித்தறிவிக்கும் அளவுகோலாகவும் இறக்கியருளப்பட்டு அதை முழு மனித சமுதாயத்துக்கும் எடுத்தியம்பி மனித குலத்தை இருளிலிருந்தும் விடுவித்து இஸ்லாத்தின் ஒளிக்குக் கொண்டு வருமாறும் பணிக்கப்பட்டது.
இதன் காரணமாகவே முஸ்லிம்கள் பல நூற்றாண்டுகளாக அல்லாஹ்வின் திருமறையை ஈருளக வாழ்வுக்கும் வழிகாட்டியாக அதியுயர் ஸ்தானத்தில் வைத்து மதித்து வந்துள்ளார்கள்.
அல்குர்ஆனானது 23 வருட காலப்பகுதியில் சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கேற்ப அருளப்பட்டமை ஸஹாபா சமூகம் அதன் கட்டளைகளைத் தம் வாழ்வில் செயல்முறையில் நடைமுறைப்படுத்தி அதனை அரேபிய சமூகத்துக்கு எத்தி வைக்கவும் ஏதுவாக இருந்தமை நன்கறியப்பட்ட விடயம். ஒவ்வொரு வருடத்தின் ரமழான் மாதத்திலும் றசூல் (ஸல்) அவர்கள் அதுவரை இறக்கப்பட்டிருந்த குர்ஆன் வசனங்களை ஜிப்ரீல் (அலை) முன்னிலையில் ஓதிக் காண்பிப்பார்கள். இவ்விதம் நபியவர்களின் மனனமும் குர்ஆனை மனனமிட்டிருந்த ஏனையவர்களின் மனனமும் சரிபார்த்துக் கொள்ளப்பட முடிந்தது.
றசூல் (ஸல்) அவர்கள் தம் வாழ்வின் கடைசி வருடத்தின் ரமழானில் திருக் குர்ஆனை இரண்டு முறை ஜிப்ரீல் (அலை) அவர்களுக்கு ஓதிக் காண்பித்தார்கள். நபியவர்கள் வபாத்தாகும் போது ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் அல்குர்ஆனை முழுவதுமாகவோ பகுதியாவோ மனனம் செய்திருந்ததுடன் அதனை எழுதிப் பாதுகாக்கவும் ஏற்பாடாகியிருந்தது. இவ்வாறே அல்குர்ஆனானது கவனமாகச் சேகரிக்கப்பட்டு அதன் உள்ளடக்கத்திலோ ஓதும் முறையிலோ எவ்வித மாற்றமுமின்றிப் பாதுகாக்கப் படும் பொருட்டுத் தலைமுறை தலைமுறையாகக் கைமாற்றப்பட்டு இறைவனின் வேத வெளிப்பாடு அதன் தூய வடிவில் பாதுகாக்கப்பட்டு வந்துள்ளது.
நபியவர்கள் கூறியதாக உஸ்மான் (றழி) அவர்கள் அறிவிப்பதாவது:
“உங்களில் சிறந்தவர் அல்குர்ஆனைக் கற்று அதனை அடுத்தவருக்கும் கற்பிப்பவரே”(புஹாரி)
இது போன்ற பல ஹதீஸ்களே அன்றும் இன்றும் முஸ்லிம்கள் அல்குர்ஆனைக் கற்றுக் கொள்ளவும் விளங்கிக் கொள்ளவும் மற்றவருக்குக் கற்பிக்கவும் பெரும் உந்து சக்தியாக இருந்துள்ளன.
குர்ஆன் வாசிக்கப் படுவது மட்டுமல்லாது அதை ஓதுதல் (திலாவத்) ஒரு வணக்கமாகவும் உள்ளதெனும் வகையில் குர்ஆன் மார்க்க நூல்களில் தனித்துவமானதாய்த் திகழ்கிறது. குர்ஆனை ஓதுவதன் சிறப்புகளையும் அதற்கான கூலிகளையும் விளக்கும் ஏராளமான ஹதீஸ்கள் காணப்படுகின்றன.
நபியவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு மஸ்ஹூத் (ரழி) அறிவிப்பதாவது: “எவரொருவர் அல்குர்ஆனின் ஒரு அட்சரத்தை ஓதுகிறாரோ அவருக்கு ஒரு ஹஸனாத் (நன்மை) வழங்கப்படுகிறது. ஒரு ஹஸனாத் ஆனது அதைப்போல் பத்து மடங்கு நற்கூலிக்குச் சமனானது. நான் அலிஃப் லாம் மீம் ஒரு அட்சரம் என்று சொல்ல வில்லை. மாறாக அலிஃப் ஒரு அட்சரம், லாம் ஒரு அட்சரம் மேலும் மீம் ஒரு அட்சரம்.” (திர்மிதி)
நியாயத் தீர்ப்பு நாளில் இத்திருமறை பரிந்துரை செய்யக் கூடியதாகும். றசூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள் “அல்குர்ஆன் ஒரு பரிந்துரையாளன். அது (அல்லாஹ்வின் அனுமதியுடன்) பரிந்துரை செய்யும். மேலும் அது ஒரு உண்மையான் எதிராலியுமாகும். யார் அதனைத் தன் வழி காட்டியாக ஆக்கிக் கொள்கிறாரோ அது அவரைச் சுவனத்துக்கு இட்டுச் செல்லும். யார் அதைப் புறந்தள்ளி விடுகிறாரோ அவரை அது நரகுக்கு இட்டுச் சென்று விடும்.” (பைஹகி)
இவ்விதம் அல்லாஹ்வின் திருப்தியைப் பெற்றுக் கொண்டு மறுமைக்காக வாழ முயற்சி செய்வதின் அடிப்படையிலேயே இஸ்லாமிய உம்மத் தன் வரலாற்றில் பல மேன்மக்களைக் கண்டு கொண்டது. அவர்கள் அல்குர்ஆனைத் தம் வாழ்வின் மையமாக ஆக்கிக் கொண்டு இத்திரு வேதத்தைக் கற்றுக் கொள்வதற்காகவும் அதன் தூதைத் தூய வடிவில் விளங்கிக் கொள்வதற்காகவும் அரபு மொழியிலும் ஏனைய குர்ஆனியக் கலைகளிலும் பாண்டித்தியம் பெற்றார்கள். இவர்களே அறிவின் வழியில் பயணித்து ஷரீ’ஆவின் அடிப்படையில் தம் ஆளுமைகளை வடிவமைத்துக் கொண்டு தீனுக்காக உண்மையாக் வாழ்ந்தவர்கள்.
அல்லாஹ் (சுப்) கூறுகின்றான்,
كِتَابٌ أَنزَلْنَاهُ إِلَيْكَ مُبَارَكٌ لِّيَدَّبَّرُوا آيَاتِهِ وَلِيَتَذَكَّرَ أُوْلُوا الْأَلْبَابِ
“(நபியே!) பாக்கியம் பெற்ற இவ்வேதத்தை உம்மீது அருளியுள்ளோம் – அவர்கள் இதன் வசனங்களைக் கவனித்து ஆய்வதற்காகவும், அறிவுடையோர் நல்லுணர்வு பெறுவதற்காகவும்” (38:29)
துரதிஷ்ட வசமாக இன்று நாம் குர்ஆனைத் திலாவத் செய்யக்கூடியவர்கள் பலர் இருந்தும் அதிலிருந்து வாழ்வின் வழிகாட்டுதலைத் தேடக்கூடிய, அதன் சட்டதிட்டங்களைத் தம் வாழ்வில் அமுல் நடத்தக்கூடிய வெகு சிலரே இருக்கக்கூடிய ஒரு காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அல்குர்ஆனின் கருத்துக்களையும் அதன் கட்டளைகளையும் ஆழ்ந்துணர்ந்து அதனைப் பிரதிபலிப்பதன் முக்கியத்துவத்தை உணரக் கடப்பட்டவர்களாய் நாம் இருப்பதோடு நம் உள்ளங்களை ஊடுறுவிச் சென்று நிரந்தரமான தடயங்களை விட்டுச் செல்லும் விதத்தில் அது ஓதப்படவும் வேண்டும். இவ்வாறான ஓதலின் விளைவாக ஆக்கத்திறனுள்ள இஸ்லாமிய ஆளுமைகள் உருவாதல் ஏதுவாகும். இவ்வாழுமையுள்ள முஸ்லிம்கள் இஸ்லாமிய அகீதாவை இருகப்பற்றி ஷரீ’ஆவைத் தம் வாழ்வின் விதிமுறையாக ஒழுகுவதுடன் இஸ்லாமிய வாழ்க்கை நெறியை இராசாங்க அளவில் மறுமலர்ச்சியடையச் செய்வதற்கான தஃவாவிலும் ஈடுபடுவார்கள்.
அல்குர்ஆனை ஆழ்ந்துணர்ந்து பிரதிபலிப்பது தொடர்பில் றசூல் (ஸல்) அவர்களின் கீழ்வரும் ஹதீஸ் காணப்படுகிறது.
“எனது உம்மத்திலிருந்து ஒரு கூட்டம் உருவாகுவார்கள், அவர்கள் குர்ஆனைப் பால் அருந்துவது போல் அருந்துவார்கள்.” (தபரானி)
இந்த ஹதீஸுக்கான விளக்கம் எழுதுகையில் அல்-முனாவி ஃபயத் அல் கதிர் நூலில் சொல்கின்றார்; “….அதாவது அவர்கள் தங்கள் நாவைக்கொண்டு குரலை உயர்த்துவார்கள். ஆனால் அதன் கருத்துகளைச் சிந்தித்துணர மாட்டார்கள். மாற்றமாக, பால் எவ்வாறு விரைவாக அவர்களின் நாவைக் கடந்து செல்லுமோ (குர்ஆனானது) அதுபோல் கடந்து செல்லும்”.
குர்ஆனை அதன் கருத்து விளங்காமல் ஓதினாலும் அதற்காக நன்மை உண்டென்பது உண்மையேயாயினும் இது எங்களை அதன் கருத்துகளை ஆய்ந்தறிந்து உணர்வு பெறுவதை விட்டும் பாராமுகமாக்கி விடக்கூடாது. இல்லையெனில் ஒரு சிலரே இத்திருமறையைக் கற்று அமல் செய்யக் கூடியவர்களாயிருக்க பெரும்பான்மையானவர்கள் இதனை விளங்குவதை விட்டுவிட்டு வெறுமனே ஓதுகின்ற இபாதாவில் மட்டுமே ஈடுபடக் கூடிய நிலையே தொடரும்.
அல்லாஹ் (சுப்) கூறுகின்றான்,
أَفَلَا يَتَدَبَّرُونَ الْقُرْآنَ أَمْ عَلَى قُلُوبٍ أَقْفَالُهَا
“மேலும் அவர்கள் இந்தக் குர்ஆனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? அல்லது அவர்கள் இருதயங்கள் (இருக்கின்றனவே) அவற்றின் மீது பூட்டுப் போடப்பட்டு விட்டனவா?” (47:24)
முனாஃபிக்குகளின் நிலை இவ்வாறே இருந்தது. அவர்கள் குர்ஆனை ஓதியும் அதை அல்லாஹ்வின் பேச்சு என்ற வகையில் உளச்சுத்தியுடன் விளங்கிக்கொள்ள முயலவில்லை.. இதன் காரணமாகவே தங்கள் தாய் மொழியில் குர்ஆனைப் பாராயணம் செய்யக் கூடியவர்களாயிருந்தும் அதிலிருந்து படிப்பினை பெறவோ அதன்படி ஒழுகவோ இல்லை.
ஆகவே, ஒருவர் குர்ஆனை ஓதுவதானது அதை ஆழமாக விளங்கிக்கொண்டு அதனைத் தங்கள் நடைமுறை வாழ்வில் செய்ல்படுத்தும் அவாவுடன் செய்யப்படல் வேண்டும். சரியாக விளங்கிப் பின்பற்றப் படும்போது இவ்வற்புதத் திருமறை தன்னை அமுல் படுத்துபவர்களுக்கு
ஒரு உயிரோட்டமுள்ள வழிகாட்டியாக ஆகிவிடுகிறது.
وَهَٰذَا كِتَابٌ أَنزَلْنَاهُ مُبَارَكٌ فَاتَّبِعُوهُ وَاتَّقُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ أَن تَقُولُوا إِنَّمَا أُنزِلَ الْكِتَابُ عَلَىٰ طَائِفَتَيْنِ مِن قَبْلِنَا وَإِن كُنَّا عَن دِرَاسَتِهِمْ لَغَافِلِينَ أَوْ تَقُولُوا لَوْ أَنَّا أُنزِلَ عَلَيْنَا الْكِتَابُ لَكُنَّا أَهْدَىٰ مِنْهُمْ ۚ فَقَدْ جَاءَكُم بَيِّنَةٌ مِّن رَّبِّكُمْ وَهُدًى وَرَحْمَةٌ ۚ فَمَنْ أَظْلَمُ مِمَّن كَذَّبَ بِآيَاتِ اللَّهِ وَصَدَفَ عَنْهَا ۗ سَنَجْزِي الَّذِينَ يَصْدِفُونَ عَنْ آيَاتِنَا سُوءَ الْعَذَابِ بِمَا كَانُوا يَصْدِفُونَ
“(மனிதர்களே!) இதுவும் வேதமாகும்; இதனை நாமே இறக்கிவைத்துள்ளோம் – (இது) மிக்க பாக்கியம் வாய்ந்தது ஆகவே இதனைப் பின்பற்றுங்கள் – இன்னும் (அவனை) அஞ்சி (பாவத்தை விட்டு விலகி)க் கொள்ளுங்கள். நீங்கள் (இறைவனால்) கிருபை செய்யப்படுவீர்கள். நமக்கு முன் இரு கூட்டத்தினர் மீது மட்டுமே வேதம் இறக்கப்பட்டது – ஆகவே நாங்கள் அதனைப் படிக்கவும் கேட்கவும் முடியாமல் பராமுகமாகி விட்டோம் என்று நீங்கள் கூறாதிருக்கவும்; அல்லது மெய்யாகவே எங்கள் மீது ஒரு வேதம் அருளப்பட்டிருந்தால், நிச்சயமாக நாங்கள் அவர்களைவிட மிக்க நேர்மையாக நடந்திருப்போம் என்று நீங்கள் கூறாதிருக்கும் பொருட்டும் (இவ்வேதத்தை அருளினோம்); ஆகவே உங்களுடைய இறைவனிடமிருந்தும் மிகத்தெளிவான வேதமும், நேர்வழியும், அருளும் வந்துவிட்டது – எவனொருவன் அல்லாஹ்வின் வசனங்களைப் புறக்கணித்து, அவற்றைவிட்டு விலகிவிடுகின்றானோ அவனைவிட அதிக அநியாயக்காரன் யார்? நம்முடைய வசனங்களை விட்டுவிலகிக் கொள்கிறவர்களுக்கு, அவர்கள் விலகிக் கொண்ட காரணத்தால் கொடிய வேதனையைக் கூலியாகக் கொடுப்போம். “(6:155-157)